Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஅவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 12

அத்தியாயம் 12:

ஒரு மாதம் ஓடிவிட்டது. துணிக்கடை சந்திப்பிற்கு பிறகு  சந்தியா ஆதியிடம் பேசும் சந்தர்ப்பம் வரவில்லை. வழியில் எதிரில் சந்தியா அவனை பார்த்தாலும், ஆதி சந்தியாவை கண்டு கொள்ளவில்லை.

அவன் வீட்டுக்கு சென்ற போதும், அவள் அவனை பார்க்க வருவதற்குள் அவன் வீட்டை விட்டு சென்று விடுவான். இது தற்செயலாக நடக்கிறதா இல்லை வேண்டுமென்றே அவளை தவிர்க்கிறானா என்று சந்தியா யோசித்து கொண்டிருந்தாள்.

இப்படி சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் காலையில் ஆதி வயலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு செல்லாமல் நேராக தோட்டத்திற்கு, கிணற்றில் குளிக்கலாம் என்று சென்றான். 



Advertisement

எப்பொழுதாவது இவ்வாறு கிணற்றில் குளிக்க செல்வது அவனது வழக்கம்தான். அன்று செல்லும்போது தோட்ட வீட்டுக்கு பின்புறம் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, மல்லிகாவின் அத்தை மகன் சதீஷ் வீட்டை நோக்கி வருவதை பார்த்தான்.

சதீசும் இவனை பார்த்துவிட்டு திருதிருவென்று முழித்தவன், “எங்க வீட்டு ஆட்டு குட்டி ஒன்னு காணலிங்ண்ணா. அத தேடிதானுங் இங்க வந்தனுங்” என்று பம்மியவனை பார்த்து தாடையை தடவியவன் “வேற ஒண்ணுமில்லையா” என்றான் ஆதி.

“அதெல்லாம் இல்லீங்ண்ணா . நா பக்கத்தால இருக்க தோட்டத்துல ஆட்டு குட்டி இருக்கான்னு பாத்துட்டு போறனுங்ண்ணா” என்று விட்டு வேகமாக ஓடிவிட்டான்.

Advertisement

அவன் செல்வதை யோசனையாக பார்த்துவிட்டு வீட்டின் முன்வாசலுக்கு வந்தவனுக்கு, வீட்டின் திண்ணையில் யாரோ இருப்பது போல் இருந்தது. அப்பகுதி எல்லா பக்கங்களும் சுவரால் மறைத்திருந்தாலும் வாசல் பகுதியில் கதவிருக்காது.

Advertisement

வாசலில் திண்ணையின் இடதுபக்கத்திலிருந்து தண்ணீரும் வழிந்து ஓடி வந்து கொண்டிருந்ததை பார்த்தான் ஆதி. கண்டிப்பாக யாரோ இருக்கிறார்கள், இந்த சதீஷின் கூட்டாளிதான் எவனோ வந்து ஒளிந்திருக்கிறான் என்று நினைத்த ஆதி, மெதுவாக சத்தமில்லாமல் வாசலுக்கு அருகில் சென்றவன், உள்ளே திரும்பி வேகமாக பாய்ந்து, உள்ளே நின்றவனின் மேலே சாய்ந்து அவன் கழுத்தை இறுக்கி பிடித்தான்.

இதெல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்ததும் பிரமித்து போனான் ஆதி. ஏனென்றால் அவன் அமுக்கி பிடித்து கொண்டிருந்தது, குளித்துவிட்டு ஈர பாவாடையுடன் நின்றிருந்த சந்தியாவை. 

அவளும் அதிர்ந்து போய், அவன் வாயை மூடியிருந்ததால் கத்தகூட முடியாமல் முழித்து கொண்டிருந்தாள். 

Advertisement

 நொடிகளில் சுதாரித்த ஆதி, சந்தியாவின் மேலிருந்து விலகி திரும்பி நின்றான். சந்தியா கூட முதலில் அதிர்ந்தாலும் பிறகு பெரிதாக பயப்படவில்லை ஆதி தானே என்று. ஆனால் ஆதி நடந்து முடிந்த நிகழ்வினால் நடுங்கி  கொண்டிருந்தான். முதல் பெண் ஸ்பரிசம். அதுவும் சந்தியா. கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்த ஆதி “இங்க என்ன பண்ணிட்ருக்க” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் எக்கு தப்பாக மேலே விழுந்ததால் வலித்த சில இடங்களை தடவி கொண்டிருந்த சந்தியா “ம் சமையல் பண்ணிட்ருக்கேன்” என்று நக்கலடித்தாள்.

“ஏய். இந்தகோலத்துல நின்னுகிட்டு உனக்கு என்ன நக்கல் வேண்டிக்கிடக்கு. குளிக்க வந்தா குளிச்சிட்டு போக வேண்டியதுதான, இங்க ஏன் நின்னுக்கிட்ருக்க. அதும் தனியா?” 

“ம் வேண்டுதல். என்ன பாஸ் நீங்க. நானே கடுப்புல இருக்கேன். இன்னைக்கு காலைலயே என் வீட்டுக்கு வந்த மல்லிகா, வாங்க. ஆதி மச்சான் தோட்டத்துக்கு குளிக்க போகலாம்ன்னு ஒரே பிடிவாதம். கௌரிக்கு வேற பீரியட் டைம் . இன்னொரு நாள் போகலாம்ன்னு இந்த மல்லிகாட்ட எவ்வளவோ சொன்னேன். கேக்காம பிடிவாதமா வாங்கன்னு கெஞ்சி கூப்பிட்டா. அவ வீட்டுக்கே வந்து கெஞ்சிறத பாத்து, சரி போயிட்டு வான்னு எங்கம்மாவும் சொன்னதால நானும் கிளம்பி வந்தேன். குளிச்சிட்ருக்கும்போதே, இந்த மல்லிகா,  சோப் எடுத்துட்டு வரேன்னு இங்க வீட்டு பக்கம் வந்தவ, ரொம்ப நேரமா ஆளையே காணும். சரின்னு அவளை தேடி வந்து பாத்தா அவளையும் காணும், என் ட்ரெஸ்ஸையும் காணும். நா மொபைலும் எடுத்துட்டு வரல. இப்படி பண்ணிருக்காளே வீட்டுக்கு எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு நின்னுட்டிருந்தா, நீங்க வந்து இப்படி மேல விழுந்து வைக்கிறீங்க. ஆனாலும் இந்த மல்லிகா என் மேல உள்ள கடுப்புல என்ன பழி வாங்குறதுக்காக திட்டம் போட்றேன்னு, என் ட்ரெஸ்ஸ தூக்கிட்டு போய் காமடி பண்ணிருக்கா பாருங்களேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் சந்தியா.

ஆதி வெளியில் சென்று, கிணற்றடியில் போட்டிருந்த அவன் டவலை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். திரும்பவும் வெளியில் வந்து கௌரிக்கு கால் செய்து சந்தியாவிற்கு ஆடை எடுத்து வருமாறு சொல்லி வைத்தவன், யோசனையில் இருந்தான்.

மல்லிகா ட்ரெஸ் மட்டும் எடுத்து சென்றாளா, இல்லை அவள் அத்தை மகனோடு சேர்ந்து ஏதும் திட்டம் போட்டிருந்தாளா என்று யோசித்து கொதித்து கொண்டிருந்தான்.

வீட்டுக்கு அருகே வாசலில் நின்று கொண்டு சநதியாவிடம் “அவ உன்ன பழி வாங்கணும்ன்னு நினைக்கிற அளவுக்கு நீ என்ன பண்ண” என்றான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த சந்தியா “அது…” என்று இழுத்தவள் “பெருசா ஒண்ணுமில்ல. நா ஆதி மாமாவத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன்” என்றாள்.

வேகமாக வீட்டுக்குள் சென்றவன் அவளை முறைத்து பார்த்து “உனக்கு அறிவே கிடையாதா. எல்லாத்துலையும் விளையாட்டுதான். உன் இஷ்டத்துக்கு பொய் சொல்ல போய் அவ என்ன பண்ணி வச்சிருக்கா பாரு” என்று திட்டிவிட்டு திரும்பி கொண்டான்.

டவலை மேலே போர்த்தி கொண்ட சந்தியா “என்ன பெருசா பண்ணிட்டா. ட்ரெஸ்ஸ தூக்கிட்டு ஓடிருக்கா. சரியான காமடி பீசு” என்றாள்.

“போதும். கொஞ்சமாவது வாழ்க்கையில சீரியஸா இரு. அவ ட்ரெஸ் மட்டும் தூக்கிட்டு போகல. பின்னாடியே அவ அத்தை மகன் சதீஷ அனுப்பிருக்கா. அவன் யாரு தெரியுமா. சரியான பொறுக்கி. நீ இப்ப நின்னுட்டிருந்த கோலத்துல அவன் வந்திருந்தான்னா…” என்று சொல்லிவிட்டு பல்லை கடித்தான் ஆதி.

சந்தியாவும் திடுக்கிட்டாள். சதீஷை அவளுக்கும் தெரியும். சந்தியாவும்  கௌரியும் காலேஜ் செல்லும் போது அங்கங்கே நின்று சந்தியாவை வெறிப்பான். இருந்தாலும் ஆதியிடம் “எனக்கு கராத்தே தெரியும்”  என்று மெதுவான குரலில் சொன்னாள்.

“போதும் அறிவு கெட்ட தனமா பேசாத. எல்லாத்துலயும், எல்லார்க்கிட்டயும் விளையாடிட்டு இருக்க கூடாது. இனிமேயாவது பொய் சொல்றத நிறுத்து” என்றதும் கடுப்பான சந்தியா, அவனின் எதிரே வந்து நின்று “மல்லிகாட்ட நா சொன்னது வேணுன்னா, அவள சீண்டி விட்றதுக்காக சொல்லிருக்கலாம். ஆனா நா சொன்ன விஷயம் பொய் கிடையாது, விளையாட்டு கிடையாது” என்றாள்.

அவளை இடுங்கிய கண்களால் பார்த்த ஆதி “என்ன சொல்ற” என்றான்.

சந்தியா அவன் அருகில் சென்றவள் அவன் கண்களை பார்த்து  “எனக்கு ஆதி மாமாவ ரொம்ப பிடிக்கும். நா அவர கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு “ஐ லவ் யூ மாமா” என்றாள்.

அவள் கண்களை பார்த்து ஸ்தம்பித்து நின்றான் ஆதி. சந்தியா சொன்ன ஐ லவ் யூவை விட அவள் சொன்ன மாமாவில் உறைந்து நின்றான்.

அவ்வளவு ஆத்மார்த்தமாக உருகி போய் அந்த மாமாவை சொன்னாள் சந்தியா.

எவ்வளவு நேரம் அப்படி நின்றார்களோ தெரியவில்லை. அருகில் கேட்ட ஸ்கூட்டியின் ஒலியில் கலைந்தார்கள்.

ஆதி வேகமாக வீட்டை விட்டு வெளியில் தூரமாக தள்ளி சென்றான்.

கௌரிதான் வண்டி பாதையின் வழியாக ஸ்கூட்டியில் வந்தாள். ஆதியின் அருகில் வந்து வண்டியை நிறுத்தியவள் “என்னாச்சுங்ண்ணா. சந்தியா எங்கங்க” என்றதற்கு வீட்டை நோக்கி கையை காட்டினான்.

சந்தியா கௌரியிடமிருந்து உடையை வாங்கி அணிந்தவள், வெளியில் வந்து ஆதி எங்கே என்று தேடினாள்.

கிணற்றின் அருகில் போய் கைகட்டி கிணற்றை பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி.

கௌரியை வண்டியின் அருகேயே நிற்க சொன்னவள், அவன் அருகில் போய் “தேங்க் யூ பாஸ்”  என்று சொல்லி டவலை கொடுத்தாள்.

அவனும் அவள் முகத்தை பார்க்காமல் வாங்கி கொண்டான். சிறிது நேரத்தில் கௌரியும் சந்தியாவும் கிளம்பி சென்றதும் வசந்துக்கு போன் செய்து நடந்ததை சொன்னான் ஆதி.

அதற்கு கொதித்து போன வசந்த் “இந்த மல்லிகா புள்ளைக்கு  என்ன தைரியத்தை பாரேன் மச்சான். நா இப்பவே போயி என்ற சித்தப்பன்ட்ட சொல்லி அவள வெளுக்க சொல்றேன்” என்று கிளம்பியவனிடம் “அமைதியா இரு வசந்த். இத பத்தி முதல்ல அந்த சதீஷ்ட்ட விசாரிக்கணும். நீ என்ன செய்ற. முரளியையும் கூப்ட்டுக்க. அந்த சதீச எங்க இருந்தாலும் புடிச்சு இங்க தோட்ட வீட்டுக்கு கொண்டுட்டு வா” என்றான்.

“சரி” என்று போனை வைத்த வசந்தும், ஒரு மணி நேரத்தில் சதீஸோடு வந்தான். அவனை தப்பிக்க விடாமல் பைக்கில் பின்புறம் முரளி அமர்ந்து வந்தான்.

வண்டியை வசந்த் நிறுத்தியதும் முரளி சதீஷை கையோடு இறக்கி அவனின் தோள் மேல் கை போட்டு கிட்டத்தட்ட இழுத்து வந்தான்.

கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த ஆதியிடம் வந்ததும் சதீஷ் “எனக்கு ஒன்னும் தெரியாதுங்ண்ணா. மல்லிதேன் நீ போய் அந்த வீட்ல இரு. ஆதி மச்சான் வந்து பாத்தாங்ன்னா அந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக்க மாட்டார்ன்னு கண்ண கசக்குச்சு. மாமன் புள்ளையாச்சே. அதுக்கு ஒரு உதவியா இருக்கட்டுமேன்னுதேன் வந்தனுங்ண்ணா. மத்தபடி வேற ஒன்னும் தப்பான எண்ணம் இல்லீங்ண்ணா ” என்றவனின் வாயிலேயே  ஓங்கி ஒரு குத்து விட்டான் ஆதி.

“எப்புடி, உங்களுக்கு தப்பான எண்ணம் இல்லீங்ளா. வசந்த், காலைல கரெக்டா எட்டரைக்கு, சாய்ங்காலம் அஞ்சரைக்கு சாரு கரெக்ட்டா மேக்கப்போட சந்தியாவ பாக்க வந்துடுவார். அதுமட்டுமில்ல மச்சான், அன்னைக்கு கௌரிக்கு டிரஸ் எடுக்க போனோமே, அன்னைக்கு பாக்கறேன், கடைல சந்தியா பின்னாடி அலைஞ்சுட்ருக்கான். அதும் நா இருக்கும்போதே.  நா பாக்கலைன்னு நெனச்சுச்சியாடா. எவ்ளோ தூரத்துக்கு போவன்னு பாத்தா, இன்னைக்கு இவ்ளோ தூரம் துணிஞ்சிட்ட. அதும் யாருகிட்ட” என்று கேட்டு  எட்டி எட்டி மிதித்தான்.

“இனி சந்தியா பக்கம் உன் கண்ணு போச்சு, அப்புறம் கண்ணு இருக்கும், பார்வை இருக்காதுடா சதீஷா”  என்றான்.

வசந்த்தான் “இன்னொரு கையையும் உடைச்சிவிடு மச்சான்” என்றதற்கு “இல்ல மச்சான், சந்தியா பேரு வெளில வரும்” என்றவன் கஷ்டப்பட்டு எழுந்து நின்ற சதீஷிடம் “டேய், உங்க வீட்ல கேட்டா கூட பைக்ல இருந்து விழுந்து அடிபட்டுச்சுன்னுதான் சொல்லோணும். சந்தியா பக்கம் உன் நினைப்பு போனாக்கூட, செங்கல் சூளைல வச்சு உன்ன எரிச்சி போட்டு, பக்கத்து ஊர் பொண்ணுகூட ஊரைவிட்டே ஓடி போய்ட்டேன்னு சொல்லி போடுவேன். பாத்துக்க” என்றான்.

“இல்லீங்ண்ணா. சந்தியா புள்ள இனிமேட்டு என்ர தங்கச்சி” என்று சதீஷ் சொன்னதும் அவனை இழுத்துக்கொண்டு போன முரளி “ஏனுங்ண்ணா, என்ர அண்ணி உங்க தங்கச்சிங்களா. உங்க மூஞ்சி எப்படி இருக்கு, என்ர அண்ணி எப்புடி இருக்காங்க தேவதையாட்டம்” என்று சொல்லிக்கொண்டே போனான்.

“இவன் யாரைடா அண்ணின்னு சொல்லிட்டு போறான்” என்று ஆதி கேட்டதும் வசந்த் நமட்டு சிரிப்புடன் “என்ர சந்தியா தங்கச்சியதேன்” என்றான். வசந்தை முறைத்து பார்த்தவனிடம் “என்ன என்னத்துக்குடா முறைக்கிறவன். நீ நடந்துக்கிட்டத வச்சி சின்ன பையன் அவனே புரிஞ்சிக்கிட்டான்”

“என்னடா நடந்துக்கிட்டேன். இதுக்கு முன்னாடியும்தான் அவன் கைய உடைச்சிருக்கேன்”

“அது எனக்கு என்னப்பா தெரியும்” என்று வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முரளி வந்தான். வேளாண் கல்லூரியில் பீ.எஸ்சி அக்ரி இரண்டாமாண்டு படிக்கிறான். ஆதிதான் படிக்க வைக்கிறான். அவன் அப்பாவும் அம்மாவும் வயல் வேலை செய்பவர்கள். முரளிக்கும் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு. கல்லூரி நேரம் போக மீதி நேரம் ஆதியின் வயலில், ஆதி மற்றும் வசந்த்தோடு இருப்பான்.

இப்பொழுது சதீஷை அனுப்பிவிட்டு வந்த முரளியிடம் வசந்த் “யாரைடா அண்ணின்னு சொன்ன” என்றான்.

“என்ன வசந்த்ண்ணா இப்படி கேட்டு போட்டிங்க. உங்களுக்கு தெரியாதா நம்ம சந்தியா அண்ணியதேன்”

“யார்டா உன்ன இப்படி கூப்பிட சொன்னது”

“அண்ணியே சொன்னாங்ண்ணா. அன்னைக்கு வண்டி குடுக்க அவங் வீட்டுக்கு போனேனா. என்ன வீட்டுக்குள்ள கூப்பிட்டு டிபன் காஃபில்லாம் குடுத்தாங்களா. நன்றிக்கான்னு சொல்லிட்டு கிளம்பினேன். அதுக்கு அவங்க அண்ணின்னு சொல்லுடான்னு சொன்னாங்க. நா கூட சந்தேகமாத்தான் இருந்தனுங்ண்ணா. ஆனா இன்னைக்கு நம்ம அண்ணா  நடந்துகிட்டத பாத்ததும் அண்ணியேதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டனுங்ண்ணோவ்” என்று சீரியஸாக விளக்கம் கூறிக்கொண்டிருந்தவனை பார்த்து ஆதி 

“டேய் இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லியா” என்று அதட்டினான்.

“இன்னைக்கு ஞாயிற்று கிழமைங்ண்ணா”

“அதனால என்ன. போய் வயல்ல வேற வேல இருந்தா பாருடா” என்றவனை பார்த்து என்னமோ முணுமுணுத்து கொண்டே போனான்  முரளி.  

“என்ரா அங்க முணுமுணுப்பு”

“அது… அண்ணி இருக்க அழகுக்கும், கலருக்கும், சிரிச்ச முகத்துக்கும் உங்களபோய் எப்டி புடிச்சிதுன்னு  யோசிச்சனுங்ண்ணோவ்” 

“அடிங்கொய்யால” என்று அவனை அடிக்க எழுந்தான் ஆதி. ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் முரளி.

அதை பார்த்து சிரித்து கொண்டிருந்த வசந்தை பார்த்து “உன் அருமை தங்கச்சிய  பாத்தியா. மல்லிகாட்ட, முரளிட்டன்னு இத மாதிரி சொல்லி வச்சிருக்கா. இன்னும் யாருகிட்டல்லாம் இப்டி சொல்லிட்டு திரியிறான்னு தெரியல. அவள ஒழுங்கா கண்டிச்சி வை. சொல்லிட்டேன்”

“என்னடா அவ தப்பா சொல்லிட்டா. ஏன் உனக்கு அவள புடிக்கலியா?”

“புடிச்சிருக்கா, புடிக்கலையாங்கிறதெல்லாம் அப்புறம். நா யாரையும் இனிமே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்ல” என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான் ஆதி.

சந்தியாவின் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள் கௌரியும் சந்தியாவும்.

“இந்த மல்லிக்கு எவ்ளோ தைரியம் பாத்தியா டி. என்ன வேலை செஞ்சிருக்கா பாரேன். ஆதி அண்ணாவ பத்தி தெரிஞ்சும் இந்த சதீசு ஆகாவளி பய இதுக்கு துணிஞ்சிருக்கானே. ஏற்கனவே அவன் கைய உடைச்சிட்டாங் ஆதி அண்ணா. இன்னும் அடங்கல பாரேன் அவன்”

“ஏன் அவன் கைய உடைச்சாங்க உங்க அண்ணா”

“ஊர்ல ஒரு பொண்ணையும் விட்றதில்லை. ஸ்கூல் போற சின்ன புள்ளைங்ககிட்டல்லாம் லவ் பண்ணுன்னு சொல்லி பயமுறுத்துவான். அதான் கைய உடைச்சி விட்டாங்க. ஏன் இந்த மல்லிகாட்டயே அவ்ளோ வம்பு பண்ணுவான் இவன். எப்படி ரெண்டும் கூட்டு சேந்துச்சுன்னு தெரியல. ஆனாலும் சந்தியா. ஏன் உன் மேல மல்லிக்கு இவ்ளோ காண்டுன்னு ஆதி அண்ணா கேக்கலையா?”

“ம் கேட்டாங்க”

“அச்சோ என்ன சொன்ன”

“உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதுக்குத்தான் மல்லி காண்டாயிட்டான்னு சொன்னேன்”

“அதுக்கு என்ன சொன்னாங்”

“உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டுதானான்னு திட்டுனாங்க”

“ம் பிறவு”

“நா ஒன்னும் விளையாடல. உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உண்மையைத்தான் சொன்னேன். எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்”

“ம்… என்ன” என்று வாயை பிளந்தாள் கௌரி.

அவள் வாயை கையால் மூடினாள் சந்தியா. அவள் கையை தட்டிவிட்ட கௌரி “எனக்கு அப்பவே சந்தேகம் டி. அரவிந்த் அண்ணா கடைல நடந்ததுக்கே நா சந்தேகப்பட்டேன். இத்தன நாள் என்னட்ட மறைச்சி போட்டில்ல” என்று முகத்தை தூக்கினாள்.

“அட எவடி இவ. உங்கண்ணன எப்படி சரிக்கட்றதுன்னே எனக்கு தெரியல. இதுல இவ வேற மூஞ்ச தூக்குறா”

“நீ சொன்னதுக்கு அண்ணன் என்ன பதில் சொன்னாங்க”

“அதுக்குள்ள நீ வந்துட்ட கௌ. நா ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா உடனே உங்கண்ணன் பதில் சொல்லணும்ன்னு எதிர்பாக்கல டி. அவர் அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கவும் போறதில்ல”

“அண்ணனுக்கும் உன்ர மேல ஒரு இது இருக்க மாதிரிதேன் தெரியுது டி. ஆனாலும் எவ்வளோ சந்தோசமான விஷயம். நீ எங்களுக்கு அண்ணியா வர்றது” என்று குதூகல பட்டாள் கௌரி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!