Skip to content
Post Views: 963
வினியின் நதி அத்தியாயம் 2
அன்று காலை 11 மணிக்கு கம்யூட்டர் லேப் வகுப்பு. தொடர்ந்து 2 மணி நேரம் வகுப்பு. லேப்பில் கணினி சரிபார்த்து கொண்டிருந்ததால் அனைவரும் வெளியே நின்றனர். அப்போது பக்கத்து ஆடிடோரியத்தில் பலத்த கரகோஷம் கேட்டது.
“என்னடி பயங்கர சத்தமா இருக்கு? என்னவாம் அங்க?” என்றாள் நதி தன் தோழி ராதாவிடம்.
”உனக்கு விஷயம் தெரியாதா? இன்னைக்கு செல்ஃப் பைனாஸ் டிபார்ட்மெண்ட்க்கு ஃப்ரசர்ஸ் டே டி” என்றாள் ராதா.
”அப்ப நமக்கு எதுவும் சொல்லலடி.. நாம மட்டும் கீரை தொக்கா? எப்ப பாத்தாலும் நம்மல எல்லாத்துலயும் விட்டுராங்க.. இதெல்லாம் அநியாயம்டி” என்றாள் நதி.
”அதயேன்டி கேக்க? நம்ம ஹெச்.ஓ.டி மேக்ஸ் கிளாஸ்ஸீக்கே பீரியட் பத்தல. இதுல செலிபிரேஷன் எதுக்குனு சொல்லிட்டாருடி” என்றாள் ராதா.
”அட பூசணிக்கா மண்டையா! உன் கிளாஸ்ல கஷ்டப்பட்டு உக்காந்து ஆமா சாமி போட்டா நீ இப்டியா சொல்லிருக்க.. இருக்குயா உனக்கு” என்றாள் நதி.
”என்னடி பண்ணப்போற?” என்றாள் ராதா.
”அத அப்புறம் சொல்றேன்.. இப்ப இந்த செலிபிரேஷன்ன சைக்கிள் கேப்-ல பாத்துட்டு வந்துரலாம் வாடி..” என்றாள் நதி.
”அய்யோ நான் வரலடி.. இப்ப அந்த ராட்சசி பீரியட். இப்ப போனா அவ்ளோ தான்” என்றாள் ராதா.
”நாமலே கால் நோவ மணி கணக்க நிக்கோம். நமக்கு ஒரு கிலுகிலுப்பு வேணாமா? அவங்க கூப்புறதுக்குள்ள வந்துரலாம் டி. வாடி என் செல்லாக்குட்டிடிடி…” என ராதாவை தரதரவென இழுத்துச் சென்றாள் நதி.
”உன் கூட சேந்து என்ன டிசி வாங்க வைக்காம விட மாட்ட போலயே நீ?” என புலம்பிக் கொண்டே உடன் சென்றாள் ராதா.
”உன்ன மன்னிச்சு விடுறதுக்கு நான் பாட்ஷா இல்லடா ஆண்டனி” என நடிகர் ரகுவரன் குரலிலும்,
”கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா தான் வரும்” என நடிகர் ரஜினி குரலிலும்,
”துளசி கூட வாசம் மாறும் ஆனா இந்த தவசி வார்த்த மாறாதுடா” என நடிகர் விஜயகாந்த் குரலிலும் மாறி மாறி மிமிக்ரி செய்து ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு அரங்கமே கத்தி கரகோஷம் எழுப்பிக் கொண்டிருந்தது. கூட்டம் அதிகம் இருந்ததால் மேடையின் பின்புறம் தான் நிற்க முடிந்தது.
கடைசியா உங்க எல்லாருக்கும் பிடிச்ச நம்ம இளைய தளபதி விஜய் குரலில் உங்களுக்கு பிடிச்ச வசனம் பேசி இந்த நிகழ்ச்சியை முடிக்கிறேன் என்ற குரலைக் கேட்டதும் நதிக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
அதே குரல். பரவால்லண்ணா நீங்களே வச்சுக்கோங்க என சொன்ன அதே குரலுக்கு சொந்தக்காரன். அட நம்ம சீனியர் கிரஷ் என நதி நினைத்துக் கொண்டு அந்த இளைஞரைப் பார்க்க முந்திக் கொண்டு மேடையின் முன்னே சென்றாள்.
”ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன். அபி தேக்கோ” என்ற வசனத்துடன் அந்த இளைஞர் பேசி மைக்கைக் குடுத்ததும்,
நிகழ்ச்சி தொகுப்பாளர் வந்து நமக்கு பிடிச்ச நடிகர்கள் பலரின் குரலில் பேசி நம் அனைவரையும் அவரின் திறமையால் கவர்ந்த முதலாம் ஆண்டு இளங்கலை கணினி மாணவர் திரு.வினோதன் அவர்களுக்கு பாராட்டுக்கள் எனவும் இங்கே நதியின் இதயத்தில் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன் என்ற ரீதியில் பெரிய சைஸ் குண்டு பல்பு ஒன்று டஃப் என்று வெடிக்கும் சத்தம். மனசுக்குள் பேக்கிரவுண்டில் ‘என்னடி சொல்ற? நீ என்ன சொல்ற?’ என எக்ஸ்ட்ரா டயலாக் வேறு.
அடுத்து நடன நிகழ்ச்சி என நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருக்க இங்கே நேரமாவதால் ராதா நதியை லேப்பிற்கு கூட்டிச்சென்றாள்.
”என்னடி ஏதோ யோசனையா இருக்க?” என்றாள் ராதா.
”இல்லடி நாம ஒன்னு நினைக்க சாமி ஒன்னு நினைக்கு” என்றாள் நதி.
”என்னடி உலர்ற?” என ராதா கூறவும் ”ஒன்னுமில்லடி ஏதோ நினைப்பு” என்றாள் நதி.
இன்னும் அவர்கள் வகுப்பு மாணவர்கள் வெளியே தான் நின்று கொண்டிருந்தனர்.
ராதா அவள் வகுப்பு தோழியிடம் ”ஹே செல்ஃப் பைனான்ஸ் டான்ஸ், மிமிக்ரினு செமயா பன்றாங்கடி நம்மளும் நம்ம ஹெ.ஓ.டிட்ட கேட்டு செமயா கலக்கனும்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போது தடக் என கண்ணாடி உடையும் சத்தம். எல்லோரும் திரும்பி பார்த்தனர். லேப் வாசலின் அருகே உள்ள கண்ணாடி சுக்கு சுக்காக சிதறி கிடந்தது.
நதியின் வகுப்பு மாணவர்கள் அவர்களுக்குள் காரசாரமாக பேசிக்கொண்டனர்.
லேப் உள்ளே இருந்து அவர்கள் வகுப்பு ஆசிரியை கோபமாக வெளியே வந்தார்.
”யார் இந்த வேலையைப் பார்த்தது?” என அனைவரிடமும் கேட்டார்.
ஒருவரும் வாய்திறக்கவில்லை. ”பசங்களா மரியாதையா சொல்லிருங்க யார் இப்டி பண்ணா?” என மறுபடியும் கேட்டார்.
யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை எனவும் ஆசிரியை ”எல்லாரும் கிளாஸ்க்கு போங்க.. நான் வந்து பேசிக்கிறேன்” என ஆசிரியை கூறவும் அனைவரும் வகுப்பிற்கு சென்றனர்.
”எல்லாம் இவனால இவனால” என பசங்களுக்குள் மாறி மாறி பேசிக்கொண்டே வகுப்பிற்குள் ஒவ்வொருவராக நுழைந்தனர்.
மாணவர்கள் அனைவரும் உள்ளே சென்றதும் மாணவியர்கள் உள்ளே நுழையும் போது சரியாக நதி வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்கையில் டமால் என ஏதோ உடையும் சத்தம்.
யோசித்துக் கொண்டே இருந்த நதி திடீர் சத்தத்தால் நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவர்கள் வகுப்பில் உள்ள மாணவர்களான ராமும், கோபியும் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் சண்டையில் வகுப்பறையில் உள்ள கரும்பலகை இரண்டாக உடைந்து இருந்தது.
”அடேய் என்னடா பண்றீங்க? ஏற்கனவே இப்பத்தான் அங்க லேப்ல கண்ணாடி உடஞ்சுச்சு. அதுவே இன்னும் யாருனு தெரியல. அதுக்குள்ள அடுத்ததா? உங்களோட… ” என மாணவர்கள் அவர்களை அமைதிப்படுத்தினர்.
உடனே ராம் ”அதுக்கு நாங்க காரணம் இல்ல. இப்ப இவன சும்மா இருக்க சொல்லுடா. எனக்கு வெறியாகுது.” என்றான்.
கோபியோ ”நான் சொன்னது தான் நடக்கும் பாரு” என கூறிக் கொண்டிருந்தான்.
”அப்டி என்னதான்டா பிரச்சனை” என இன்னொரு மாணவன் கேட்டான்.
ராமோ, ”அடுத்து வரப்போற எங்க தளபதியோட கத்தி படம் கண்டிப்பா பிளாஃப்னு சொல்றான்டா இவன்” என்றான்.
கோபியோ, ‘’இவன் மட்டும் எங்க தல வீரம் படம் பிளாஃப்னு கிண்டல் பண்றான்டா” எனக்கூறினான்.
”அட விளக்குமாறுங்களா.. இப்ப அந்த பான்பிராக் வாயன் ஹெச்.ஓ.டி வந்தா யாருடா பதில் சொல்ல? இதுல தலயா? தளபதியானு? எங்கள ஏன்டா இழுத்து விட்டிங்க? இப்ப இந்த பிரச்சனையை எப்டி சமாளிக்கனு யோசிங்க எல்லாரும்..” என ஒரு மாணவன் அவர்களை அமைதிப்படுத்தினான்.
ஏற்கனவே லேப் கண்ணாடி உடைந்த விஷயம் கேள்விப்பட்டு நதியின் வகுப்பிற்கு வந்த ஹெச்.ஓ.டி கரும்பலகை உடைந்ததைப் பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்தார்.
’’யார் உடச்சதுன்னு சொல்லுங்க இல்லேனா எல்லோருக்கும் பணிஷ்மென்ட்”என்றார் ஹெச்.ஓ.டி.
எவரும் எதுவும் பேசாததால் “எல்லாரும் இன்னைக்கு ஃபுல்லா நின்னுட்டு தான் இருக்கனும்.. இன்னைக்கு மட்டுமில்ல யாரு தப்பு செஞ்சதுன்னு சொல்ற வரைக்கும் யாரும் கிளாஸ்ல உக்காரக்கூடாது. நான் சிசிடிவி கேமரா பாத்துட்டு வந்து உங்களையெல்லாம் கவனிச்சுக்குறேன்” என சொல்லி விட்டு சென்றுவிட்டார்.
’ஒரு நாள்ல ஒரு மனுஷிக்கு ஒரு அதிர்ச்சி பத்தாதா? எவ்வளோ அதிர்ச்சியத் தான் தாங்க?’ என நதி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
மதிய உணவு நேரம் ஆனதும் அனைவரும் சாப்பிடச் சென்றனர்.
அப்போது ”ஏன்டி நதி செல்ஃப் பைனாஸ்ல லுங்கி டான்ஸ் பாட்டுக்கு லுங்கி கட்டிட்டு ஆடுனாங்களாம்ல. நம்மளும் புதுப்பேட்டை ‘வரியா’ பாட்டுக்கு நையிட்டி போட்டுட்டு ஆடலாமா?”என அவள் வகுப்பு தோழி வெண்ணிலா கேட்டாள்.
”ஏன்டி இன்னும் பெர்மிஸனே வாங்கல.. அதுக்குள்ள பாட்டு செலக்சனுக்கு போய்ட்ட.. எனக்கென்னமோ இன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு அப்புறம் இனி நம்ம ஒதுக்கப்பட்டத் தனி தீவு தான் போல” என்றாள் இன்னொரு தோழி மரியா.
அதற்கு வெண்ணிலாவோ ”அதான் நதி பெர்மிஸன் வாங்குறேனு சொல்லிட்டால்ள அதான் இப்பவே எல்லாம் பிரிபேர்ரா இருக்குறேன். அப்புறம் அந்த டைம் எல்லாம் செய்ய டைம் இருக்கனும்ல” என்றாள்.
”அடியே வெண்ணிலா பிரச்சனை இல்லாதப்ப நதி சொன்னது சரி. இப்ப இவ்ளோ நடந்தும் அவர் பெர்மிஷன் தருவாருனு நினைக்க? நெவர்” என்றாள் ராதா.
”அதுக்கு ஒரு ஐடியா இருக்குடி. அத நாளைக்கு செயல்படுத்தலாம்” என்றாள் நதி.
”அவர் ஒத்துக்குவாறா?” என்றனர் ராதாவும், மரியாவும்.
”கண்டிப்பா ஒத்துக்குவார்டி” என்றாள் நதி.
” எப்டி இவ்ளோ உறுதியா சொல்ற?” என்றாள் ராதா.
”சிசிடிவி வேற பாத்தா நம்ம கிளாஸ் மானம் போகும்டி.. இந்த பசங்களால இது ஒரு பிரச்சனை.. அப்புறம் எப்டி டி” என்றாள் மரியா.
“பிகாஸ் நம்ம கிளாஸ் உள்ள தான் சிசிடிவி இல்லயே. வெளிய இருக்குற கேமரால எல்லாரும் உள்ள போறது தான் தெரியும். லேப் வெளிய சிசிடிவியே இல்ல லேப் உள்ள தான் இருக்கு. சோ சிம்பிள்” என்றாள் நதி.
“அட ஆமால” என்றனர் ராதாவும், மரியாவும்.
மதிய வகுப்பு ஆரம்பமானதும் அனைவரும் வகுப்பிற்குச் சென்றனர். வகுப்பிற்கு இடையில் வந்த ஹெச்.ஓ.டி நதி கூறியது போலவே ”பசங்க தான் முதல்ல கிளாஸ்க்கு வந்து இருக்கிங்க.. சிசிடிவி ல எல்லாம் இருக்கு. இப்ப கூட ஒன்னும் இல்ல. உண்மைய ஒத்துக்கோங்க. எனக்கு எல்லாம் தெரியும்” என்றார்.
“அது எங்களுக்கே தெரியாதேயா. நீ வேற ஏன்யா?” என வெண்ணிலா மெல்லிய குரலில் கூறவும், எல்லாரும் தலையை குனிந்து அவருக்கு தெரியாமல் சிரித்தனர்.
”பசங்களுக்கு பொண்ணுங்க சப்போர்ட் பண்ணாதிங்க. யாராச்சு தெரிஞ்சா தனியா கூட வந்து சொல்லுங்கமா” என்று மாணவியர் பக்கம் பார்த்து கூறினார்.
யாரும் எதுவும் கூறாததால் ஹெச்.ஓ.டி ”உங்க ஒற்றுமை எனக்கு வியப்பா தான் இருக்கு. இந்த காலத்துல கூட பிறந்தவங்க கூட காட்டிக் கொடுக்கத்தான் பாப்பாங்க.. நீங்க உங்க கூட படிக்குற பசங்கள விட்டுக் கொடுக்காம எல்லாரும் சேர்ந்து தண்டனை அனுபவிக்குறது ஆச்சர்யம் தான். எவ்ளோ நாள் இப்படியே நிப்பிங்க நீங்க? எனக்கும் மனிதாபிமானம் இருக்கு. அதனால உங்களோட ஒற்றுமைக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்போறேன்” என்றார்.
”செமஸ்டர் பீஸ் கூட இந்த வருஷம் எல்லாரும் 2500 ரூபாய் ஃபைன் சேர்ந்து கட்டிருங்க” என்று அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை போட்டுவிட்டு ”நாளைல இருந்து எல்லாரும் உக்காரலாம்” என்று ஹெச்.ஓ.டி சென்று விட்டார்.
”அய்யய்யோ 2500 ஓவாய்யா?” என வெண்ணிலா அலறவும் கல்லூரி முடிந்ததற்கான மணி அடிக்கவும் சரியாய் இருந்தது.
வகுப்பறை அதிர்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கு. ஏன்னா இவங்க ஒரு வருஷ பீஸ்ஸே 1000 ரூபாய் தான்.
’இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சோம். எல்லாம் கெட்டதா நடக்கே.. என நதி யோசித்துப் பார்த்தால், அவள் கண்ணாடியில் தான் இன்று அவள் விடியல். சுத்தம் நம்ம மூஞ்சியா இப்டி’ என மனதிற்குள் இன்றைய நாளை திட்டிக் கொண்டே வீட்டிற்குச் சென்றாள்.
error: Content is protected !!