Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Part II – Chapter 01

விக்ரம் அந்த வாளைக் கையில் உயர்த்திப் பிடித்திருந்தான். குளிர்பிரதேசத்தில் எப்போதாவது அடிக்கும் வெயிலில் நனைவதைப் போன்ற ஒரு உணர்வை உடலெங்கும் உணர்ந்தான்.

 

சற்று நேரம் அந்த வேறுபட்ட ஆனால் சுகமான உணர்வில் திளைத்தவன் அனிச்சையாய் அதை உறையில் போட எத்தனித்து தன் இடதுபக்கம் இடுப்பிற்கு அருகே இறக்கினான், செழியன் (பட்டி!) புன்னகைத்தபடியே உடலாக மாறியிருந்த கற்சிலையிலிருந்து வாளுக்கான உறையை எடுத்து விக்ரமிடம் கொடுத்தார்.

 



Advertisement

விக்ரம் அந்த உறையைக் கையில் வாங்கி வாளை அதற்குள் இட்ட அடுத்த நொடி அந்த இடம் மீண்டும் தன் பழைய தோற்றத்திற்கு, இடிபாடுகள் குவிந்துகிடக்கும் இன்றைய வாராங்கல் கோட்டையாய், மாறியது!

 

“ஆஹா!”

Advertisement

 

Advertisement

தேவி ஒரு உற்சாகத் துள்ளலுடன் விக்ரமின் அருகில் வந்து அவன் கையைத் தொட்டாள். ஆனால், அடுத்த நொடியே அவளது முகத்தில் இருந்த உற்சாகம் வடிந்தது.

 

அவளது பார்வை சென்ற இடத்தைக் கண்ட விக்ரமும் செழியனும் அவர்கள் வந்த அந்தத் தோரணவாயிலைத் தாண்டி நின்றுகொண்டிருந்த அந்தச் சகர் படையைக் கவனித்தனர்.

Advertisement

 

பத்துப் பத்துப் பேராய் இருபது வரிசையில் அவர்கள் ஒரு நீள்சதுர அணிவகுப்பில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தனர்.

 

தேவி தன் கைகளில் இருந்த ஈட்டியையும் வாளையும் இறுக்கிப் பிடித்தாள்.

 

விக்ரம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனது முகத்தின் வசீகரம் மேலும் கூடியதைப் போலத் தோன்றியது அவளுக்கு!

 

“இவங்களை நான் பார்த்துக்குறேன், நீங்கள்லாம் இங்கயே இருக்க…”

 

என்றபடி அவன் மெல்ல வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

 

விக்ரம் முன்னே நடந்தபடியே மீண்டும் வாளை உறையிலிருந்து உருவினான். வாளோடு சேர்ந்து அவனது உடலைச் சுற்றியும் ஒரு ஒளி எழுந்தது. மெல்லிய தங்கப் புகை போல விக்ரமின் மார்பையும், கைகளையும், கால்களையும் சூழ்ந்திருந்தது அந்த ஒளிக்கவசம்.

 

[the_ad id=”6605″]

 

தேவி விக்ரமைத் தொடர்ந்து செல்ல எத்தனிக்க, செழியன் அவளைக் கைகாட்டித் தடுத்தார்.

 

”அங்க ஒரு படையே நிக்குது செழியன், விக்ரம் தனியாப் போறான்!”

 

தேவி ஆயாசத்துடன் முறையிட்டாள்.

 

”விக்ரம் இல்ல தேவி, அவர் விக்ரமாதித்யர்! இந்தப் படைலாம் அவருக்குத் தூசி!

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பாரேன்…”

 

செழியன் பெருமிதம் கலந்த புன்னகையோடு சொன்னார்.

 

இவர்கள் மூவரும் ஆளுக்கொருவித உணர்வுடன் பார்த்துக்கொண்டிருக்க விக்ரம் மெள்ளத் தோரண வாயிலை நெருங்கினான்.

 

அவனது கை அனிச்சையாக வாளை மெள்ளச் சுழற்றத் தொடங்கியது. பிறந்தபோதே வாளுடன் பிறந்தவனைப் போல மிக இலாவகமாகவும் கச்சிதமாகவும் இருந்தது அவனது வாள் சுழற்றல்!

 

விக்ரம் வெளி வருவதைக் கண்ட சகர் படை மெள்ள நகரத் தொடங்கி முன்னேறியது.

 

முதலில் தங்கள் நீள்சதுர அணிவகுப்பு சிதையாமல் நடந்தவர்கள் மெள்ள ஓடத் தொடங்கினர்.

 

சற்று அருகில் வந்ததும் முன்வரிசையில் இருந்தவர்கள் விரைவாய் ஓடி வரத் தொடங்க அப்படையின் நீள்சதுர அணிவகுப்பு மெள்ள அம்புமுனை வடிவிற்கு மாறியது.

 

அந்த அணிவகுப்பு ‘அம்பின்’ முனையில் இருந்த வீரன் மேலும் வேகமாய் ஓடி வந்தான்.

 

விக்ரம் தோரண வாயிலைவிட்டு வெளி வந்த சில நொடிகளில் அந்த அம்புமுனை வீரன் இவனை நெருங்க, விக்ரம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வாளைச் சுழற்றிய போக்கிலேயே ஒரு வீசு வீசினான்.

 

அவ்வீரன் சரிய அவனது தலை உடலைவிட்டுத் தனியே உருண்டது!

 

இதற்குள் பின்னால் வந்த முன்வரிசை வீரர்களும் விக்ரமை நெருங்கிவிட்டிருந்தனர்.

 

அருகில் வரவர அவர்கள் விக்ரமைச் சூழ்ந்தபடிப் பரவிச் செல்ல, அவர்களது அம்புமுனை அணிவகுப்பு மாறிப் பிறைச்சந்திர வடிவாய் ஆனது.

 

விக்ரம் எதற்கும் அசராமல் அந்தப் பிறைச்சந்திர வடிவின் குவியப்புள்ளியில் புன்னகையுடன் நின்றான்.

 

இடது காலை முன்வைத்து, வலது காலை சற்றே மடக்கியபடி உறுதியாக நின்றுகொண்டு முகத்தில் ஒரு எள்ளலான புன்னகை தவழ இடது கையை முதுகில் வைத்துக்கொண்டு வலது கையில் இருந்த வாளைக் காற்றைக் கீறுபவன் போல மெள்ளச் சுழற்றியபடி நின்றான் விக்ரம்.

 

சக வீரர்கள் தங்கள் பிறைச்சந்திர வடிவின் அளவைக் குறைத்தபடி கவனமாக விக்ரமை நோக்கி முன்னேறினர்.

 

ஈட்டி உரசும் அருகாமையில் வந்ததும் ஒரு சில அவசரகுடுக்கை வீரர்கள் சட்டென முன்னால் நகர விக்ரம் நின்ற இடத்திலிருந்து நகராமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.

 

வீழ்ந்தவர்களின் உடலை ஏறிமிதித்தபடி அடுத்தவர்கள் வர, விக்ரம் அசராமல் அவர்களையும் எதிர்கொண்டான்.

 

அவன் வெட்ட வெட்ட அடுத்தடுத்து சக வீரர்கள் வந்து கொண்டே இருந்தனர். விக்ரம் இப்போது வலமும் இடமும், நின்றும் திரும்பியும், முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்தும் வாள் வீச வேண்டியிருந்தது.

 

விக்ரம் சற்றும் சளைக்காமல் சோராமல் வாள் வீச்சின் துல்லியம் மாறாமல் அந்தப் படையோடு போராடினான்.

 

வெட்டப்பட்ட வீரர்களின் உடல்கள் சில நொடிகளில் புகைப்படலமாய்க் கரைய அங்கு அவ்வப்போது வெட்டப்பட்ட வீரர்களின் உடல்கள் மட்டும் கிடந்தன.

 

அது பின்னால் வந்த வீரர்கள் விக்ரமை நெருங்கித் தாக்க ஏதுவாய் அமைந்தது.

 

அணிவகுத்து நிற்கையில் சிறிய படையாகத் தோன்றியவர்கள் வரிசை வரிசையாய் வந்து தாக்குகையில் வந்துகொண்டே இருப்பதைப் போலத் தோன்றினர்.

 

[the_ad id=”6605″]

 

விக்ரமின் வாள் இப்போது வேகம் பிடிக்கத் தொடங்கியது. ஆனால், சக வீரர்களின் அலைகளும் வந்தபடியே இருந்தன.

 

அவன் வெட்ட வெட்ட அவர்கள் நெருங்க நெருங்க, சில மணித்துளிகளில் விக்ரமை அவர்கள் முழுவதும் சூழ்ந்திருந்தனர்.

 

விக்ரம் தோரண வாயிலின் விளிம்பில் நின்றிருந்தான். அவ்வாயிலைக் கடந்து செல்ல இயலாத சகவீரர்கள் அவனை அரைவட்ட வடிவில் சூழ்ந்திருந்தனர்.

 

மூன்று திசைகளிலிருந்தும் சகப் படையினர் விக்ரமைத் தாக்கினர். விக்ரமும் அசராமல் அவர்கள் தாக்குதலைத் தடுத்துக்கொண்டும் அவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டும் இருந்தான்.

 

சகப் படையின் அரைவட்டத்தின் வெளிப்புற விளிம்பில் அப்படையின் வில்லாளிகள் நின்றுகொண்டு விக்ரமின் மீது அம்புகளை எய்துகொண்டிருந்தனர். ஆனால், அந்த அம்புகள் விக்ரமின் உடலைச் சூழ்ந்திருந்த அந்த பொன்னிற ஒளிக்கவசத்தில் பட்டுத் தெறித்துப் பயனற்று வீழ்ந்து மறைந்தன.

 

விக்ரமைச் சகப்படையினர் சூழ்ந்ததைப் பார்த்து இனியும் பொறுக்கக் கூடாது என்று தேவி மீண்டும் வாயிலை நோக்கி நகர எத்தனித்தாள். செழியன் அவளை மீண்டும் தடுத்தார்,

 

“என்னை விடுங்க சார்!”

 

தேவி கோவமாய்ச் சொன்னாள்.

 

“பொறு தேவி, விக்ரம்கு ஒன்னும் ஆகாது! அவன் அந்த வாளைச் சுழற்றச் சுழற்ற மேலும் மேலும் விக்ரமாதித்யராவே மாறிட்டு வரான்! இந்தப் படைலாம் ஒன்னுமே இல்ல!”

 

செழியன் புன்னகையுடன் சொல்ல, தேவி அவரை முறைத்தாள்.

 

விக்ரம் இந்தப் படையோடு விளையாடியது போதும் என்ற முடிவிற்கு வந்தான்.

 

சுழற்றிச் சுழற்றி வாளை வீசிக்கொண்டிருந்தவன் அதே இலாவகத்தில் வாளைத் தன் வலப்புறம் ஒரு சுழற்றுச் சுழற்றி, இடப்புறம் ஒரு சுழற்றுச் சுழற்றித் தன் தலைக்கு மேல் கொண்டு சென்று சுழற்றி முதுகுபுறத்திலிருந்து இடது தோளின் மேற்புறமாய் முன்னால் கொண்டு வந்து தனக்கெதிரில் குறுக்குவாட்டில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான்.

 

ஒரே சீரான அசைவில் விக்ரம் அவ்வாறு வாளை வெட்ட, நீரில் நனைந்த குச்சியை உதறினால் அதிலிருந்து நீர் தெளிப்பதைப் போல அவ்வாளில் கசிந்த ஒளி ஒரு அரைவட்ட வடிவ ஒளிக்கீற்றாய் வெளிப்பட்டது.

 

விக்ரமைச் சுற்றி இருந்த சகப்படைக்குச் சமமாய் அரைவட்ட வடிவில் வெளிப்பட்ட அந்த ஒளிக்கீற்று அப்படையை வெட்டியபடி ஊடுருவிச் சென்றது.

 

விக்ரம் வாளைச் சுழற்றியதும், வாளிலிருந்து ஒளிக்கீற்று வெளிப்பட்டதும், அந்த ஒளிக்கீற்று எதிரிலிருந்த சகப்படையை வெட்டிக்கொண்டு சென்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தன!

 

தேவியும் சத்தீசும் பார்த்தெல்லாம் விக்ரமின் எதிரிலிருந்த சகப்படை சட்டென ஒட்டுமொத்தமாய்த் துண்டாகி விழுவதைத்தான்!

 

அடுத்த சில நொடிகளில் அவர்களது உடல்கள் காற்றில் கரைய, அங்கு எதுவுமே நடக்காததைப் போன்ற அமைதி உண்டானது.

 

விக்ரம் மட்டும் வாளைக் கையில் பிடித்தபடி புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான்!

 

செழியன் விலகிக்கொள்ள, தேவி ஓடி வந்து விக்ரமின் அருகில் நின்றாள்.

 

“விக்ரம்… உனக்கு ஒன்னும் ஆகலையே?”

 

படபடப்புடன் கேட்டாள்.

 

“உஜ்ஜைனி மாகாளியின் அருள் பெற்ற விக்ரமாதித்யருக்கு உஜ்ஜைனிலயே என்ன ஆகிடப் போகுது? இங்க இவரோட கால்தூசியைக் கூட யாராலும் ஒன்னும் செய்ய முடியாது!”

 

செழியன் சொல்லியபடியே அவர்கள் அருகில் வந்தார். சத்தீசும் விக்ரமை வியப்புடன் பார்த்தபடி வந்தான்.

 

“பட்டி… விஷாலிக்கு என்ன ஆச்சுனு பார்க்கனும் முதல்ல! கிளம்புவோம்!”

 

விக்ரம் வாளை உறையில் போட்டபடியே செழியனைப் பார்த்துச் சொன்னான்.

 

“ஆமா, சத்தீஷ், நீங்க போய் காரை எடுத்துட்டு வாங்க, நான் அருணுக்கு மறுபடி போன் பண்றேன்!”

 

தேவி கையிலிருந்த வாளையும் ஈட்டியையும் சத்தீசிடம் கொடுக்க அவர் அதை வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்து வரச் சென்றார்.

 

தேவி தன் கைப்பேசியை உயிர்ப்பித்து அருணை அழைத்தாள்.

 

“ஆங்… அருண், எங்க இருக்க இப்ப?… ம்ம்ம்… விஷி?… ம்ம்ம்… சரி… அங்கயே இருங்க, நாங்க சாயங்காலத்துக்குள்ள வந்துடுறோம்… ம்ம்ம்… அவன்கிட்ட நானே பேசிக்குறேன்… சரி… பதட்டப்படாம இரு… ம்ம்ம்… இரு தரேன்…”

 

தேவி கைப்பேசியை விக்ரமிடம் நீட்டினாள்.

 

விக்ரம் புன்னகை மாறாமல் அதை வாங்கிக் காதில் வைத்தான்.

 

“அருண்… ம்ம்ம்… கவலைப்படாத டா… சொல்றதக் கேளு அருண்… இதுல உன் தப்பு ஏதுமில்ல… விஷாலிக்கு ஒன்னும் ஆகாது… கவலப் படாம இரு, நாங்க சீக்கிரம் வந்துடுறோம்…”

 

என்று மேலும் சில ஆறுதல் சொற்களைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

“எங்க இருக்கான்?”

 

செழியன் பரிவுடன் கேட்டார்.

 

“அவன் இப்ப நெல்லூர்ல இருக்கான். அங்கதான் விஷாலி காணாமப் போயிருக்கா! வராங்கல்ல நாம இறங்கினப்புறம் நம்ம திட்டப்படி அவங்க மஞ்சிரியலால இறங்கி அங்கேர்ந்து கார்ல சென்னைக்குப் போனாங்கல்ல…”

 

தேவி செழியனுக்குப் பதில் சொல்லும்போதே விக்ரமிற்கும் அவர்கள் போட்டிருந்த திட்டத்தை விளக்க எண்ணி விரிவாகச் சொன்னாள்.

 

செழியன் ‘ம்’ கொட்டினார்.

 

“நெல்லூர்கிட்டப் போறப்ப, சாப்பிடலாம்னு ஒரு ஹோட்டலுக்குப் போயிருக்காங்க, அங்கதான் விஷாலி காணாமப் போயிட்டா! கைகழுவ போனவ திரும்பி வரலயாம்! தேவராஜ் ஆந்திரா போலிசுக்குத் தகவல் கொடுத்திருக்கார். அருண்தான் பாவம் ரொம்ப கலங்கிப் போயிருக்கான்!”

 

தேவி கவலையுடன் சொன்னாள்.

 

“இது என் தப்புதான் அண்ணா! நான் அந்தப் ’பட்டி’யைக் கொஞ்சம் குறைவா எடை போட்டுட்டேன்! அது தவிர…”

 

செழியன் வருத்தம் கலந்த குரலில் விக்ரமின் முகத்தை நேராகப் பார்க்காமல் சொன்னார்.

 

“தவிர?”

 

தேவி கேட்க,

 

“அருண் கூட இருக்கானேனு நான் அஜாக்கிரதையா இருந்துட்டேன்! உங்களுக்கும் விஷாலிக்கும் பழைய உணர்வு வந்தா மாதிரி அருணுக்கும் வந்துடும்னு நான் ரொம்ப நம்பினேன்… அதுதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு!”

 

செழியன் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

 

“அருணுக்கும்னா? அருணுக்கு என்ன பழைய உணர்வு? அருணும் இதுல தொடர்புடையவன்தானா? அருண் யாரு?”

 

தேவி படபடவெனக் கேள்விகளை அடுக்கினாள்.

 

“அமைதி அமைதி… எல்லாத்தையும் சொல்றோம்… இப்ப கிளம்புவோம்…”

 

விக்ரம் சொல்லியபடி கைகாட்ட சத்தீசு வண்டியை அவர்களுக்கு அருகில் கொண்டு வந்திருந்தார்.

 

மூவரும் வண்டியில் ஏறிக்கொள்ள வண்டி நெல்லூரை நோக்கி விரைந்தது.

 

அவர்கள் நெல்லூரை அடைந்தபோது மாலை இருட்டத் தொடங்கியிருந்தது.

 

அருண் ஒரு விடுதியில் அறை எடுத்திருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

இவர்கள் வந்ததும் சிற்றுண்டியும் பானங்களும் வரவழைத்துக்கொண்டு அறையிலேயே சாப்பிட்டபடி நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் விரிவாக விவரித்துக்கொண்டனர்.

 

”விஷாலிய எங்கனு போய்த் தேடுவோம் இப்ப?”

 

அருணின் குரல் தழுதழுத்தது.

 

விக்ரம் அவனருகில் அமர்ந்திருந்தான், அவன் தோளில் ஆறுதலாய்க் கைவைத்தான்.

 

“விஷாலிக்கு ஒன்னும் ஆகாது அருண்! தைரியமா இரு…”

 

“ஆமா அருண், சகர்களுக்கு விஷாலி தேவை, அவளோட சக்தி தேவை, அதனால அவளை ஒன்னும் பண்ணமாட்டாங்க! விக்ரம் வாளை எடுத்தவுடனே அதைப் பறிச்சுக்கனும்ன்ற திட்டத்துலதான் அந்தப் போலிப் பட்டி தன்னைப் பட்டினு சொல்லிக்கிட்டு உங்க கூட இருந்தான், நாம அவனை ஏமாத்தி வாளை எடுத்துட்டோம், இப்ப நம்ம அடுத்த நடவடிக்கையைத் தடுக்கத்தான் விஷாலியக் கடத்தியிருக்காங்க…”

 

செழியன் விளக்கமாய்ச் சொன்னார்.

 

“ஆமா, நீங்கதான் பட்டினா, பட்டினு சொல்லிக்கிட்டு எங்களோட இருந்தவன் யாரு?”

 

அருண் இப்போதுதான் சற்றுத் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

 

அவன் கேட்டதும் தேவியும் கூட விடையைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் செழியனைப் பார்த்தாள்.

 

செழியன் இவர்களுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்திப்பவரைப் போல இருந்தார்.

 

அவர் விக்ரமைப் பார்க்க விக்ரம் ‘சொல்லு’ என்று அனுமதி வழங்குவதைப் போலத் தலையசைத்தான்.

 

“பட்டினு உங்க கூட இருந்தவன்தான் சகர்களின் அரசன்!”

 

“என்னது?”

 

அருணும் தேவியும் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

 

“ஆமா, அவன்தான் சக அரசன் திக்ரசூதன்! விக்ரம் கூடவே இருந்து வாளை எடுத்ததும் விக்ரமைக் கொல்லத் திட்டம் போட்டுத்தான் பட்டியா உங்ககிட்ட வந்தான்!”

 

செழியன் சொல்வதை நம்பமுடியாமல் தேவியும் அருணும் திகைத்தனர்.

 

இதெல்லாம் எனக்கு முன்பே தெரியும் என்பதைப் போல விக்ரம் எந்த அதிர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான்.

 

“இதையேன் சார் நீங்க முன்னாடியே எங்ககிட்டச் சொல்லல? சொல்லியிருந்தா நான் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்திருப்பேன்ல?”

 

அருண் கோவமும் எரிச்சலும் கலந்து வெடித்தான்.

 

“அமைதி அருண்… பட்டி மேலக் கோவப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல! அமைதி!”

 

விக்ரம் அருணைச் சமாதானப்படுத்தினான்.

 

“தப்புதான் அருண்… நான் என்னோட தலைக்கனத்தால கொஞ்சம் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்! நான் என்னோட தந்திர புத்திய ரொம்ப நம்பிட்டேன்!”

 

செழியனின் குரலில் வருத்தம் இருந்தது.

 

“சரி, இப்ப விஷாலிய எப்படித் தேடுறது? அதைச் சொல்லுங்க!”

 

தேவி எரிச்சலுடன் கேட்டாள்.

 

“விஷா-”

 

செழியன் சொல்லத் தொடங்க அவரை இடைவெட்டியது ஒரு குரல்.

 

”அதற்கு முன் நீங்கள் தேடிக் கண்டடைய வேண்டிய ஆள் வேறொருவன் இருக்கிறான்!”

 

குரலைக் கேட்டு அவர்கள் திரும்பிப் பார்க்க அங்கே வராகமிகிரர் புன்னகையுடன் நின்றிருந்தார்.

 

செழியனும் விக்ரமும் சட்டென எழுந்து நின்று அவரை வணங்கினர்.

 

“ஜெய விஜயீ பவ! உஜ்ஜைனி மாகாளி எப்போதும் உங்களுக்குத் துணையிருப்பாள்!”

 

அவர் கையை உயர்த்தி இவர்களை ஆசீர்வதித்தார்.

 

“தாங்கள் யாரைத் தேடச் சொல்கிறீர்கள் சுவாமி?”

 

செழியன் பணிவுடன் கேட்டார்.

 

[the_ad id=”6605″]

 

“உன் நண்பனைத்தான் பட்டி! உங்களின் அடுத்தடுத்த செயல்களுக்கு அவன்தான் முக்கிய தேவை!”

 

வராகமிகிரர் சொன்னவுடன் செழியனுக்கு அது யாரென்று புரிந்துபோக அவரது முகத்தில் இலேசான பொறாமையும் பகையும் தெரிந்தன.

 

அதைக் கவனித்து விக்ரமும் வராகமிகிரரும் சிரித்தனர்.

 

“நண்பன்னு சொன்னதும் பட்டிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுது!”

 

விக்ரம் கிண்டலாகச் சொன்னான்.

 

“விக்ரமாதித்யரின் நவரத்தினங்களில் அவனும் ஒருவன்… விக்ரமனுக்கு மாகாளி அளித்த வரப்பிரசாதம் அவன்… ஆனாலும் அவன் விக்ரமாதித்யனின் ஏவலாள்தான் பட்டி, நீ உடன்பிறந்த தம்பி… அவனைக் கண்டு நீ பொறாமைப்படுதல் சரியல்ல!”

 

வராகமிகிரர் அமைதியாகச் செழியனைப் பார்த்துச் சொன்னார்.

 

“பொறாமையா? அதெல்லாம் ஒன்றுமில்லை சுவாமி! அவனது போக்கு எனக்கு அவ்வப்போது பிடிக்காது அவ்வளவுதான்!”

 

செழியன் சமாளித்தார்.

 

“ரெண்டாயிரம் வருஷமாகியும் உங்க முரண்பாடு தீராது போலவே!”

 

விக்ரம் சிரித்தான்.

 

“ஆம், இன்னும் நீங்கள் அவனைச் சந்திக்கவே இல்லை, அதற்குள் அவனைப் பற்றி முடிவுக்கு வரவேண்டாம்! முதலில் அவனைக் கண்டுபிடியுங்கள்…”

 

வராகமிகிரரும் புன்னகையுடன் சொன்னார்.

 

[the_ad id=”6605″]

 

“யார?”

 

தேவி நானும் இங்கதான் இருக்கேன் என்று உணர்த்த விரும்பியவளைப் போல எரிச்சலுடன் கேட்டாள்.

 

செழியன் அந்தப் பெயரை மெள்ள அழுத்தமாய் உச்சரித்தார்,

 

“வேதாளப் பட்டன்!”

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!