Skip to content
Post Views: 9,498
மனைவியின் தோளில் கைவைத்து தன் முகம் பார்க்க திருப்பினான் தேவநாதன். அவளது கண்கள் எல்லாம் கலங்கி இருந்தது. கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்துகொண்டு, அடுத்த நொடி அழுதுவிடுபவள்போல முகமெல்லாம் தவிப்புடன் நின்றிருந்தாள்.
“ம்ப்ச்.. சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல அழுவாங்களா…? கண்ணை துடை” என அதட்டினான்.
“அப்பா.. ப்பாவோட…” என அதற்கு மேல் ஏதும் சொல்ல முடியாமல் அவன் நெஞ்சிலேயே சாய்ந்திருந்தாள் கண்ணீருடன் தேம்பலாக.
“அனு….. என்ன மா……? இங்க பாருடா. நாம வெளியில நின்னிருக்கோம். யாராவது பார்க்க போறாங்க…..மா. வா வீட்டுக்கு போலாம்…” என கைப்பிடித்து அழைத்து செல்ல முயன்றான்.
Advertisement
டக்கென்று அவனது கைகளை உதறியவள், “இப்பகூட எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போரேன்னு உங்க வாயில இருந்து வரல இல்ல. அப்படி என்ன பிடிவாதமோ….. உங்களுக்கு? உங்களுக்கும் அப்பாவுக்கும் நடுவுல மாட்டிட்டு நான்தான் முழிக்கறேன். என்னை யாரும் பார்க்க மாட்டேன்றீங்க…” என எரிச்சலடைந்தாள்.
அவளது தவிப்பு அவனுக்கும் புரிந்தது. திருமணமான தினத்தில் இருந்து அவனும் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறானே. அவளது தந்தையின் மீது அவளுக்கு இருக்கும் பாசத்தை.
“போலாம் ம்மா…. இப்பதான் உங்கப்பா அவரோட பிடிவாதத்தை விட்டு கொஞ்சம் இறங்கிவர ஆரம்பிச்சிருக்காரு. கொஞ்ச நாள் போகட்டும். கண்டிப்பா போலாம். உனக்குதான் நான் ஏற்கனவே சொல்லி புரியவச்சேன்ல…”
Advertisement
“ம்ப்ச் போங்க…..” என அவனை விட்டு வேகமாக வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
Advertisement
நீண்ட நாளுக்குப் பிறகு, அவளது குடும்பத்தினரை பார்த்தது, தந்தையின் பிரிவு, அவரின் தவிப்பு, தடுமாற்றம் என எல்லாம் சேர்ந்து அவளை உணர்ச்சிவசப்பட வைத்திருந்ததுபோல. எல்லோரும் சேர்ந்து தன்னை படுத்துவதுபோல உள்ளுக்குள் வருத்தம் பெண்ணுக்கு.
கணவன்கூட தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என அழுகையும் ஆத்திரமும் ஒரு சேர வெடித்திருந்தாள் உரியவனிடத்தில். கோவம் ஆதங்கம் எல்லாம் சேர்ந்து அவளை எரிச்சலடைய செய்திருந்ததுபோல.
அன்னையும், அப்பத்தாவும் இணக்கமாக பேசுவது போல் இன்னும் தந்தை தன்னிடம் சரியாக பேசவில்லையே என்ற அழுத்தம், அவளுக்குள் இத்தனை நாள் அழுத்திக்கொண்டிருக்க தான் செய்தது.
Advertisement
இன்று தந்தையை நேரில் பார்த்ததும் வெடித்திருந்ததுபோல கணவனிடத்தில். யாராவது ஒருத்தராவது விட்டுக் கொடுக்கலாமே என்பது அவளது எண்ணம்.
காரில் சென்றுகொண்டிருந்த வேல்முருகனின் நிலைமையும் கிட்டதட்ட இப்படிதான் இருந்தது. என்னவோ மகளை இன்றுதான் புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு, பிரிந்து செல்வதுபோல மனமெங்கும் துயரம் பிடித்தாட்டியது. வெளியில் சொல்ல முடியாமல், கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டார் தளர்வாக.
கீழேயிருந்து இவள் மட்டும் தனியாக வருவதைப் பார்த்த செல்வதுரை “தேவா எங்கேம்மா…..?” என்றார்.
“வருவாங்க….. மாமா” என அறைக்குள் சென்றுவிட்டாள்.
இரவு எல்லோரும் சாப்பிடும் வரைகூட தேவா வீட்டிற்கு வரவில்லை. அவனது போனும் வீட்டிலேயேதான் இருந்தது. கீழே இறங்கி சென்றும் பாரத்துவிட்டு வந்துவிட்டாள். அவன் அங்கு இல்லை. பயம் வந்தது. அய்யோ… நாம கோவப்பட்டதால…, கோச்சுகிட்டாங்களோ…..? எங்க போனாங்க…. என மனதிலேயே குழப்பிக் கொண்டிருந்தாள்.
மீனாகூட கேட்டுப் பார்த்தார். “இரண்டு பேரும் ஒன்னாதான கீழே போனாங்க. அது என்ன….? அவனை காணோம்……? எங்க…ன்னு கேட்டா…. தெரியாதுன்றா….” என முணுமுணுத்தார்.
அஞ்சனாவுக்கு அழுகையே வந்தது. ஆளாளுக்கு தன்னை வதைப்பது போல ஆத்திரமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்து ஆண்கள் எல்லாம் ஒரு அறையிலும், பெண்கள் ஒரு அறையிலும் படுத்திருந்தனர். அது கோடை காலமென்பதால்… ஏசியில்லாமல் படுக்க முடியாது என அறையில் ஏசியைப் போட்டுவிட்டு முடங்கிவிட்டனர் எல்லோரும். அஞ்சனா மட்டும் தேவாவுக்காக ஹாலிலேயே உட்கார்ந்திருந்தாள்.
தேவாவோ இங்கு கடற்கரை மணலில் படுத்திருந்தான். இரவின் அமைதியில், ஆளரவமில்லா இருட்டில், மல்லாந்து படுத்திருந்தான்.
எந்த உணர்வும் இல்லாமல், தலைக்கு பின்னே கைகளை மடித்து வைத்துகொண்டு, அண்ணாந்து படுத்திருந்தான். கால்கள் இரண்டையும் தளர்வாக நீட்டிக்கொண்டு, வெட்டவெளியை வெறித்துகொண்டிருந்தான்.
காற்று வேகமாக சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. இரவின் நிசப்தத்தில் அலையோசையின் இரைச்சல் அதிகமாகவே கேட்டது. மேகமூட்டத்தின் இடையே மறைவதும் தெரிவதுமாய், பால் நிலவு பவனி வந்து கொண்டிருந்து. ஆனால் இது எதுவுமே அவன் சிந்தையை கலைக்கவில்லை. அவன் எண்ணம் முழுவதும் மனைவியிடத்தில்தான் இருந்தது.
மனதெல்லாம் பாரமாக இருந்தது அவனுக்கு. காலையிலிருந்து சந்தோஷமாக இருந்தவனது மனதில், இப்போது மனைவியை நினைத்து கவலையானது.
அஞ்சனா அவனது கையை உதறி வேகமாக உள்ளே சென்றதும்.., அப்படியே அவளைப் பாரத்து கொண்டு நின்றிருந்தவனுக்கு, உண்மையிலே அவளை கஷ்டப்படுத்தறமோ…? என வேதனை வந்தது.
அவள் சொன்னதுபோல் அவள் அப்பாவுடன் சேர்ந்து நானும் அவளை புரிந்துகொள்ளாமல் கஷ்டப்படுத்துகிறேனோ… என வருத்தமாக இருந்தது. அதை நினைத்து கொண்டு அப்படியே கால் போன போக்கில் நடந்தவனுக்கு சற்று நேரம் சென்று பார்த்தால், எங்கு இருக்கிறோம் எனகூட தெரியவில்லை. திரும்ப வீட்டிற்கு போகவும் மனமில்லை. ஒரு ஆட்டோ பிடித்து இங்கு வந்துவிட்டான்.
கிட்டதட்ட கடற்கரையில் யாருமே இல்லை. தூரத்தில் சில வாலிபர்கள் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி எங்கும் பேரமைதிதான்.
இந்த திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது நடந்துகொண்டே இருக்கிறது. முதலில் பெண்ணே தரமாட்டேன் என வேல்முருகன் மறுத்திருந்தார்.
அதன்பின்பு அவர்களே இவர்களை அழைத்து பெண்தர சம்மதித்திருந்தனர். நிச்சயத்திற்கு பிறகு இவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது. மீனாவின் பேச்சால் திருமணம் அப்படியே நின்றது.
திரும்ப இவர்கள் பேசி சமாதானமாகி… திருமணம் நடந்து முடிந்தது. இருந்தும் இன்றளவும் யார் மனதிலும் சந்தோஷம் இல்லை. எதற்காக இந்த திருமணம்…? இப்படி எல்லோரையும் கஷ்டப்படுத்தி…, எதற்கு இந்த திருமணம்…? என அவனுக்கே மனம் விட்டுப்போனது.
மனைவியின் கண்ணில் கண்ணீரைப் பார்த்ததும், நம்பிக்கை இழந்திருந்தான்போல. அந்த துக்கம் தாளாமல் விட்டேத்தியாக, கால் போன போக்கில் இங்கு வந்தவன், விரக்தியுடன் படுத்துவிட்டான்.
இவனது வீட்டிலும் இன்னும் இவனது அம்மா அப்பா பேசாமல் முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேல்முருகனும் இன்னும் கோவத்தில் இருக்கிறார்.
திருமணமான இத்தனை நாட்களில் அஞ்சனாவின் முகத்தில் கண்ணீரை பார்த்ததில்லை அவன். இன்று அவள் முகம் கசங்கி அழுது நின்றது அவனுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருந்தது. தன்னால்தானோ… தான் அவளை பார்த்து பேசாமல் இருந்திருந்தால்…. அவளாவது நன்றாக இருந்திருப்பாளோ என குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான் நிம்மதியிழந்து.
எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ…? அவனுக்கே தெரியாது. லேசாக மழை தூரல் மேலே பட ஆரம்பிக்கவும், சுயம் பெற்று, சுற்றம் உணர்ந்தவன், திரும்பி பார்த்தான். அயோ யாருமே இல்லையே என பதறியவன், நேரம் என்ன என கையில் இருந்த கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான்.
இரவு மணி 11. அச்சோ, இவ்வளவு நேரமா…வா… இங்க இருக்கோம். வீட்ல சொல்லிட்டு கூட வரலையே. பயப்படப் போறாங்க. போன் பண்ணியாவது சொல்வோம் என பாக்கெட்டிலிருந்து போனை எடுக்க முயன்றான்.
பாக்கெட் காலியாக இருந்தது. அச்சோ போனை வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன்போல… என வேகமாக எழுந்து நின்றான். பேன்ட் சட்டையிலிருந்த மண்ணை எல்லாம் தட்டிவிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான் சாலையை நோக்கி.
இரவு நேரம் 11.45. காலிங்பெல் சத்தத்தில் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். கதவைத் திறந்ததும் அஞ்சனாவின் முகத்தைதான் முதலில் பார்த்தான். அழுதழுது விழிகள் இரண்டும் தடித்து கண்கள் இரத்தமென சிவந்திருந்தது.
அய்யோ என தலையிலேயே தன்னை தட்டிக்கொண்டவன். “ஸாரி மா….” என ஏதோ பேச வருகையிலேயே நகர்ந்து வழிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அஞ்சனா.
சத்தமிடாமல் கதவைத் தாழ்போட்டவன், அறைக்கு சென்று துணி மாற்றி…, தன்னை சுத்தம் செய்கொண்டு வந்தான்.
இவன் வந்த அரவத்தில் முழித்து எழுந்த செல்வதுரை… “எங்கேப்பா போனே…” என்றார்……?
“அ…து… கொஞ்சம் வேலைப்பா. அதா..ன் அப்படியே வெளியில போயிட்டேன்…”
அவனையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவர், “போனைகூட எடுக்காம அப்படி என்ன வேலை…..? சொல்லிட்டு கூட போக மாட்டியா….? என்ன பழக்கம் இது…? ம்ம்…. அந்த பிள்ளை பாவம்…. இவ்வளவு நேரம் உன்னைக் காணாம தவிச்சு போய் உட்கார்ந்திருக்கு…..?”
“பையில போன் இருக்க ஞாபகத்துல…, அப்படியே போயிட்டேன் ப்பா….. பாதி வழில போனதுக்கு அப்புறம்தான் போன் இல்லன்றதே பார்த்தேன். சரி வந்த வேலைய முடிச்சுட்டு போயிடுவோம்னு, போயிட்டேன்…..” என சமாளித்தான்.
“சாப்பிட்டியா…….?”
“இன்னும் இல்ல ப்பா…..?”
“போய் சாப்பிடு. அந்த பொண்ணும் உனக்காக சாப்பிடாம காத்திருக்கு…..” என திரும்ப படுத்துக்கொண்டார்.
அறைக் கதவை மூடிவிட்டு வெளியே வந்தான். அஞ்சனா கிட்சனில் நின்று தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.
இவன் கிட்சனுக்குள் நுழைவதைப் பார்த்ததும், தட்டெடுத்து தோசையை வைத்து, சட்னி சாம்பார் வைத்து கொடுத்தாள் அமைதியாக.
எதுவும் பேசாமல் வாங்கியவன், தோசையை பிட்டு சாம்பார் தொட்டு அவளுக்கு ஊட்டுவதற்காக, அவளது வாயருகே கொண்டு சென்றான்.
இவனை திரும்பிகூட பார்க்காமல், வாயையும் திறக்காமல் இறுக மூடிக் கொண்டிருந்தாள் வாயை. தட்டை வைத்துவிட்டு அவள் அருகே நெருங்கியவன், அவளது தாடையை பிடித்து, அவனை நோக்கி திருப்பி அவளது வாயில் வைத்து திணித்து விட்டான் தோசையை வலுக்கட்டாயமாக.
வாயில் வாங்கியதை மென்றுகொண்டே அவனை முறைத்தாள். அவளை பார்த்து சிரித்தவன், “நீ சாப்பிட வேண்டியதுதான……? ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கே……..?” என்றான்.
“ரொம்ப அக்கறை…..” என முணுமுணுத்தாள்.
மறுபடியும் அவளுக்கு ஊட்ட முயன்றான்.
“நீங்க சாப்பிடுங்க. நான் சாப்பிட்டுப்பேன்…”
“ம்ப்ச்…. வாயைத் திற….டி”
“நினைச்சது நடக்கனும். எல்லாத்துக்கும் பிடிவாதம்….” என வாயைத் திறந்து வாங்கி கொண்டாள்.
அவளுக்கும் ஊட்டிகொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான். கணவன் வரும்வரை, அவனை நினைத்து பயத்தில்… அழுகையில் வெம்பிக் கொண்டிருந்தவளுக்கு, அவனைப் பார்த்ததும்தான் ஆசுவாசமானது. ஆனால் அது எல்லாம் சில நொடிகள்தான். அத்தனை நேரம் அவனைக் காணாமல் தவித்த தவிப்பெல்லாம் சேர்ந்து, அவளை கோவத்துக்குள் தள்ளியிருந்தது.
இப்பொழுது கணவன் நெருங்கி நின்று கொஞ்சி கெஞ்சி அவளுக்கு ஊட்டி விட்டதில் கொஞ்சம் தணிந்தாள்போல பெண்.
வேலையை முடித்து வந்தவள், ஹால்லயே தேவநாதன் பாயை விரித்து படுத்திருப்பதைப் பார்த்து, அவனருகில் வந்து உட்கார்ந்தாள்.
“என்ன இங்க படுத்திட்டீங்க….? உள்ள போய் படுக்கல….?”
எழுந்து விடி விளக்கை போட்டுவிட்டு, விளக்கை அணைத்து வந்தவன், அண்ணன்களுக்கே அங்க இடம் பத்தல. இங்கேயே படுத்துக்கறேன்.
அப்ப நானும் இங்கேயே படுத்துக்கறேன் என ஒரு போர்வையை எடுத்துவந்து விரித்து அவன் பக்கத்திலேயே படுத்துவிட்டாள்.
error: Content is protected !!