Skip to content
Post Views: 1,890
அத்தியாயம் 4
அடுத்தடுத்த நிமிடங்களில் திருமண சடங்குகள் ஒருபுறம் நடக்க வாசு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.
ஒவ்வொன்றுக்கும் அதற்கான ஆட்களை நியமித்திருந்தாலும் அவற்றை மேற்பார்வை பார்த்து கொண்டது அனைத்தும் வாசுதேவனும், ஹரியின் தங்கை கணவரும் தான்.
Advertisement
ஜானகி, சுந்தரத்தின் சொந்த பந்தங்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். முக்கியமாக ஜானகியின் தாய், தந்தையையும் அழைத்து இருந்தார் சுந்தரம். இப்படியாவது ஜானகியையும், வாசுவையும் அவர்கள் ஏற்று கொள்ளட்டுமே என்று நினைத்தனர். நினைப்பது அனைத்தும் நடந்து விட்டால் தெய்வம் என்பது எதற்கு?
Advertisement
பல வருடங்களுக்கு பிறகு சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒரு சேர பார்த்ததால் சிறு பிள்ளை போல் சுற்றி கொண்டிருந்தார் ஜானகி.
Advertisement
இங்கு வாசுவும், தாயை தன் பார்வை வட்டத்திற்குள் வைத்தபடி வேலைகளை கவனித்து கொண்டிருந்தான்.
Advertisement
அக்கணம் “ஏக்கண்ணு, நீ ஜானகி மவனா?…” என்ற குரலில் திரும்பினான்.
அவன் திரும்பியதுமே அந்த கேள்விக்கு விடை கிடைத்தது போல அவனை நோக்கி வேகமாக வந்தார் அவர். தன்னை நோக்கி வருபவரை மேலிருந்து கீழாக ஒரு பார்த்தான் வாசுதேவன்.
கிட்டதட்ட அறுபது, அறுபத்தைந்து வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு. மஞ்சள் பூசிய சுருங்கிய முகமும், நெற்றி நிறைய குங்குமமும், காதை ஒட்டிய பெரிய தோடும், மூக்கின் இரண்டு பக்கமும் மின்னி கொண்டிருந்த பெரிய பெரிய மூக்குத்தியும், வெற்றிலையால் சிவந்திருந்த இதழ்களும், கழுத்தை ஒட்டிய பதக்க சங்கலியும், பின்னால் கொசுவம் வைத்து ஏற்றி கட்டிய நூல் புடவையும், பெரிய கொண்டையும், அவரை கிராமத்து பெண்மணி என்று படம் பிடித்து காட்டியது. அவரின் கண்களில் தெரிந்த ஏக்கம் அவனை யோசிக்க வைக்க அவரை கேள்வியாக பார்த்தான்.
அவனது கேள்வி நிறைந்த பார்வையை கண்டுக்கொள்ளாமல் அவனை நெருங்கியவர் “எப்படி இருக்கிறஞ்சாமி…” எனக் கேட்டார்.
அதற்கு வாசு பதில் கூறும் முன்பே “அம்மிணி…” என்ற குரல் கேட்டது. அவசரமாக குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவர் சட்டென வாசுவின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு குரல் வந்த திசையை நோக்கி வேகமாக நடந்தார்.
தன்னைத் தாண்டி செல்லும் பெரியவளை ஒரு பார்வை பார்த்தவன் கண்களால் தாயை தேடினான். அவனது தேடலை ஜானகியும் உணர்ந்தாரோ என்னவோ அவனது அலைபேசிக்கு அழைத்தார்.
அன்னை அழைத்ததும் கண்களால் அவரைத் தேடியப்படி அழைப்பை ஏற்று காதில் வைத்தான். “சொல்லுங்க ம்மா…” என்றான்.
“வாசு…” என்றவர் தான் இருக்கும் இடத்தை கூறி அவனை வருமாறு பணித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
நெற்றியை பெருவிரலால் கீறிக் கொண்டே அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்று வேலையாட்களிடம் கூறிவிட்டு அந்த மண்டபத்தின் கார்டன் ஏரியாவிற்குள் நுழைந்தான்.
ஐந்தாயிரம் சதுரடி கொண்ட கார்டன் ஏரியா அது. ஒரு பக்கம் பபே முறையில் உணவு பரிமாறிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. பபே முறையில் உணவு பரிமாறிக் கொண்டிருந்த இடத்தில் தான் ஜானகி நின்றிருந்தார், கூடவே அவளும்…
கார்டன் ஏரியாவிற்குள் நுழைந்ததும் தாய் நின்ற இடத்தை கண்களால் தேடினான். நிமிட தேடலுக்குப் பிறகு தாய் நின்ற இடத்தை கண்டு கொண்டவன் நேராக அவரை நோக்கி நடந்தான்.
ஜானகியை நெருங்க நெருங்க தான் அவரின் அருகில் நின்ற பெண்ணை கவனித்தான். “இவளா…” என்று மனம் அதிர, முகமோ மனதின் அதிர்ச்சியை அப்பட்டமாய் வெளிக்காட்டியது. நொடி பொழுதில் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை மறைத்தவன், அடர்ந்த கேசத்தை கோதிக் கொண்டே தாயின் அருகில் சென்று நின்றான்.
சற்று முன் நவியை கண்டதும் வாசுவின் முகத்தில் தோன்றிய அதே பாவனை தான் தற்போது வாசுவைக் கண்டதும் நவியின் முகத்தில் மின்னி மறைந்தது…
இங்கு ஜானகியோ தன் அருகில் நின்ற மகனிடம் வாய் நிறைய சிரிப்போடு “வா தம்பி, இவங்க என் அத்தை பொண்ணு பானுமதி, இவரு பானுவோட ஹஸ்பெண்ட் ஆறுமுகம் அண்ணே அண்ட் இவங்க பானுவோட பொண்ணு நவீனா…”என்று முறையாக வாசுவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜானகி.
அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்து வைத்தவன் தாயைப் பார்த்தான். “குட்டிமா கூட நம்ம ஆபீஸ்ல தான் வொர்க் பண்றாளாம் வாசு… நீ பார்த்து இருக்கியா?” என்றவரின் பார்வை நவியிடம் நிலைத்தது.
தாயின் பார்வையை குறுகுறுவென பார்த்தவன் அவருக்கு பதில் கூறாது எதிரில் நின்ற நவியை அழுத்தமாக பார்த்தான். அவளோ இவனை துளியும் கண்டுகொள்ளாமல் ஜானகியை பார்த்தப்படி நின்றிருந்தாள்.
வாசுவின் அமைதியில் என்ன நினைத்தாரோ ஜானகியும் மகனிடம் திரும்பி “ம்ம், நீ பார்த்திருக்க மாட்டேன்னு தான் நினைக்கிறேன். ரொம்ப அமைதியா, பார்க்க பாவமா இருக்கா, இவ எங்க வெளியெல்லாம் வந்திருக்க போறா…” என்றார். அவரின் பேச்சில் வெறும் வாயில் புரையேறியது வாசுவிற்கும், அவளை பெற்ற தெய்வத்திற்கும்.
“அச்சோ கண்ணா, என்னடா ஆச்சு…” என பதறிய ஜானகி வாசுவின் தலையை தட்ட,
அவனை நேரடியாகவே முறைத்தவள் “கண்ணாவாம் கண்ணா… டுபாக்கூர் கண்ணா… சிடு மூஞ்சி, டைனசர்…” என வாயிற்குள் முனகி கொண்டே எதிரில் இன்னும் இருமிக் கொண்டிருந்த தாயை முறைத்தாள்.
மகளின் முறைப்பில் பாவமாக முகத்தை வைத்தப்படி கணவனை பார்த்த பானு “நிஜமாவே புரையேறிடுச்சுங்க…”எனக் கூற, மனைவியின் பேச்சிலும் முக பாவத்திலும் சிரிப்பு வந்தது ஆறுமுகத்திற்கு.
தற்போது சிரித்து வைத்தால் மகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என எண்ணியவர் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியப்படி “சரிங்க…” என்று மனைவியின் தலையில் தட்டினார்.
தாயை முறைத்துக் கொண்டே தந்தையை பார்த்தாள். அவரோ
சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருப்பது புரிந்தது. “சிரிச்சுடுங்க டாடி… ஏன் சிரிப்பை கன்ட்ரோல் பண்றீங்க…” என முகத்தை தூக்கி வைத்தபடி மெல்லிய குரலில் கூறினாள்.
அதில் பதறியவராக “அச்சோ அழகுமா… நான் சிரிக்கல பாரு…” என்று முகத்தை சோகமாக வைத்தபடி கூறிட, தந்தையை இடுப்பில் கைவைத்து முறைத்தவள் உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு இவர்களின் புறம் திரும்பினாள்.
அவளுமே அப்போது தான் கவனித்தால் நிமிடம் கடந்து வாசு இருமிக் கொண்டிருந்ததை… ‘கொய்யாலை…என்னமா நடிக்கிறான்…’ என நினைத்தவள் கண்களால் அவனை பொசுக்கி கொண்டே மேசையின் மீதிருந்த தண்ணீர் குவளையை ஜானகியிடம் நீட்டினாள்.
“தேங்க்ஸ் மா…” என்றவர் மகனுக்கு நீரை புகட்டிவிட்டார். ‘நானே குடுச்சுக்கிறேன்’ என்பதைப் போல் தலையாட்டி ஜானகியிடமிருந்து நீரை வாங்கி குடித்தவனின் பார்வை நவியின் மீது பட்டு தெறித்தது.
ஆடவனின் பார்வையில் அசால்டாக வந்து ஒட்டிக் கொண்டது ஓர் அலட்சிய பாவம்.அவனை கண்டும் காணாதவள் போல இடைவரை நீண்டிருந்த கூந்தலை இறுக்கி பிடித்தும் விடுவித்துக் கொண்டும் வேடிக்கை பார்த்தப்படி நின்றிருந்தாள்.
அவள் தன்னை தவிர்ப்பது தெளிவாக புரிந்தது வாசுவிற்கு. அது ஒருவித சுவாரஸ்யத்தை கொடுக்கவும் நாவால் கன்னத்தை வருடிக் கொண்டே அவளைப் பார்த்தான். அவளோ அவனைத் துளியும் கண்டுகொள்ளாமல் பார்வையை சுழல விட்டாள்.
அக்கணம் அவளை வம்பிழுக்க தோன்றியதோ அவனுக்கும். ஜானகி கொடுத்த நீரை நிதானமாக குடித்து விட்டு தண்ணீர் குவளையை ஜானகியிடம் கொடுக்காது நவியிடம் நீட்டினான்.
தன் முன் நீண்ட வாசுவின் கரத்தை பார்த்ததும் சட்டென நிமிர்ந்து வாசுவை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்தான். அந்நொடி இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டைப் பிடித்து கொண்டது.
‘ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்..’
அலைபேசியின் சத்தத்தில் தன் உணர்விற்கு வந்தவன் பட்டென தன் பார்வையை பாவையிடமிருந்து மாற்றிக் கொண்டு, அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“வாசு எங்க இருக்க?..” இதயாவின் கேள்விக்கு தான் இருக்குமிடத்தை கூறினான்.
அதற்கு எதிர்ப்புறம் என்ன பதில் வந்ததோ “பியூ மினிட்ஸ்ல வந்துடறேன்மா…” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.
“ம்மா, இதயா ஸ்டேஜ்க்கு வர சொல்றா போகலாமா?..” என்றவன் மூவரிடமும் திரும்பி “நீங்களும் வாங்களேன்…” என அழைத்தான்.
“இல்லை தம்பி நீங்க போயிட்டு வாங்க. நாங்க கிளம்பறோம்…” என பானுமதி கூறவும் வேறு என்ன பேச என்பது போல் சரியென்று தலையாட்டினான்.
ஆனால் ஜானகி விடவில்லை பல வருடங்களுக்கு பிறகு பார்த்த தோழி என்பதால் பிடித்துக் கொண்டார். வேறு வழியில்லாமல் ஜானகி, வாசுவோடு நவினாவின் குடும்பமும் சென்றது.
மணமேடையே நோக்கி செல்ல செல்லவே “உங்க பெயர் என்ன தம்பி…” என குரலில் தேன் சொட்ட சொட்ட கேட்டார் பானுமதி.
தன் தாயின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள் பட்டென அன்னையை திரும்பி பார்த்தாள். அவளின் பார்வையே ‘நீயாமா இப்படி பேசிட்டிருக்க…’ என்ற கேள்வியை கேட்டது.
மகளின் பார்வையில் தெரிந்த நக்கலும், கேள்வியும் பானுமதிக்கு தெளிவாக புரிந்தது. எவரும் கவனிக்காத வகையில் அவளை கண்களாலயே மிரட்டினார்.
தாயின் மிரட்டலை தூசி போல் உதறிவிட்டு எப்போதும் போல வாசுவை ரகசியமாக ரசிக்கும் வேலையை தொடர… ‘த்து…’ என மானசீகமாக துப்பியது மங்கையின் மனம். அதையும் துடைத்து விட்டு தான் வாசுவை பார்க்க காதல் மனம் உந்தியது. இருந்தும் நவியினுள் ஒளிந்திருக்கும் ரோசக்கார மனம் அதனை செய்யவிடவில்லை..
காதலை கூறியதற்கெல்லாம் எவனாவது அடிப்பானா? இவன் அடித்தானே! “அரக்கன்…” என இதழ்கள் கோபமாய் முணுமுணுக்க, விழிகள் மட்டும் இவளது கோபத்தை பொருட்படுத்தாமல் அவனை காதலாய் நோக்கியது.
மங்கையின் விழியில் தெரிந்த காதலைப் பார்த்த ரோசக்கார மனமும் ‘த்து த்து த்து’ என பலமுறை துப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது. தற்போது எவ்வித மன தடங்கலும் இல்லாமல் வாசுவை ரசித்தாள் நவினா.
இதை எதையும் கவனிக்காத வாசுவோ பானுவிடம் திரும்பி
“வாசுதேவன் ஆன்டி…” என்றான் தனது அக்மார்க் சிரிப்பை உதிர்த்து.
அதற்கு பின் மண்டபத்திலிருந்த கூட்டத்தை கடந்து மணமக்கள் இருக்குமிடத்திற்கு செல்லவே போதும் போதுமென இருந்தது அவர்களுக்கு.
“ஹேய் நவி…” என ஆர்ப்பாட்டத்துடன் அழைத்து நவியை கட்டிக் கொண்டாள் இதயா.
“இனிய திருமண வாழ்த்துகள் நிலவே…” என வாழ்த்தியவள் பார்வை சுதனிடம் சென்றது. அவள் நினைத்தது போலவே ‘ நிலவே…’ என்ற நவியின் விளிப்பில் கடுப்பாகி தான் போனான் இதயாவின் சுதன்.
அவனது கோபமான முகத்தைப் பார்த்து, உதட்டை சுழித்து அழகு காட்டியவள் இதயாவிடம் தன் தாய், தந்தையை முறையாக அறிமுகம் செய்தாள்.
சில பல சம்பிரதாய பேச்சுகளோடு மூவரும் விடைப் பெற, அவர்களை வழியனுப்ப ஜானகியும் அவர்களோடு கீழ் இறங்கினார்.
“சரி ஜானகி, நாங்க வரோம், இடையில ஒருநாள் பார்க்கலாம்” என்றவர் ஜானகியின் அருகில் வந்து நின்ற வாசுவிடம் சிறு தலையசைதப்போடு விடைபெற
நவியோ ஜானகியை அணைத்தப்படி “போயிட்டு வரேன் அத்தை” என்றாள் முகம் முழுக்க புன்னகையோடு.
பாவையின் அத்தை என்ற விளிப்பில் ஜானகியின் முகம் புன்னகை பூத்தது என்றால் வாசுவின் முகம் கடுகடுவென்றானது. அவனது முகத்தை கண்டும் காணாதவள் போல அங்கிருந்து நகர்ந்தாள்.
செல்லும் பெண்ணை ஒரு பார்வை பார்த்தவன் “இதயா போட்டோ எடுக்க கூப்பிடறா மா…” என்றபடி அவரை மீண்டும் மேடைக்கு அழைத்து சென்றான்.
****
அதற்கு பின்னான நேரங்கள் முழுவதும் பாறையில் விழுந்த மழை துளிப் போல் உருண்டோட மணமகள் மாப்பிள்ளையின் வீட்டிற்கு செல்லும் நேரமும் வந்தது.
இத்தனை நேரம் இனிமையாய் கடந்த நிமிடங்கள் கனத்தது இதயாவிற்கு. தொண்டையில் ஏதோ அடைத்த உணர்வு. அது ஒருவித வலியை கொடுத்தது. அந்த வலியுடனே தாய், தந்தை, அத்தை என்று அனைவரையும் கட்டியணைத்து விடுவித்தவள் வாசுவின் அருகில் சென்று நின்றாள். அழக் கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால் அவனைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மளமளவென மங்கையின் கன்னத்தை தொட்டது…
“ஸ்… இதயா என்ன இது சின்ன பொண்ணு மாதிரி அழுதுட்டு இருக்க. கண்ணை துடை” மெல்லிய குரலில் கூறியவன் பாவையின் கண்ணீரை துடைக்க, அதற்கு மேல் முடியாமல் வாசுவை கட்டியணைத்து
கதறியே விட்டாள் இதயா.
அவளது அழுகை மற்றவர்களின் கண்களிலும் கண்ணீரை கொடுத்தது, ஒருவரை தவிர. ஆம் காமாட்சிக்கு தான் இதயா அழுக அழுக அத்தனை கோபம் வந்தது. அதை வெளிப்படையாக மகளிடம் கூறவும் செய்தார்.
“நீயும் தானே கல்யாணம் பண்ணிட்டு போன இப்படியா அழுத, ஏதோ கண்காணாத இடத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி அழறா. கல்யாணம் பண்ணிட்டு வர அன்னைக்கு இப்படியெல்லாம் அழுதுட்டு வரவே கூடாது…” என காமாட்சி மகளின் காதில் கூறினார்.
சட்டென திரும்பி அன்னையை பார்த்தவள் “நீ எப்பமா சீரியல் வில்லிக்கனக்கா பேச ஆரம்பிச்ச? வரபர டிபிகல் மாமியார் ஆயிட்டிருக்க கன்ட்ரோல் பண்ணு…” என்றதும் பல்லைக் கடித்தார் காமாட்சி.
“பல்லைக் கடிக்காத உண்மையை தான் சொல்றேன். நீ பேசறது அப்படி தான் இருக்கு…” எனக் கூறியவள் கணவனின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள்.
“உண்மையை சொன்னா சீரியல் வில்லியா…” என முனகி கொண்டே கணவரைப் பார்த்தவர் “ஏங்க, அந்த பிள்ளையை அழ வேண்டாம்னு சொல்லுங்க, நம்ம குடும்பத்துக்கு தான் ஆகாது…” என்றார்.
மனைவியின் பேச்சில் சட்டென திரும்பிப் பார்த்த ஈஸ்வர் “ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி என் அப்பாவை விட்டுட்டு வர மாட்டேன்னு யாரோ அழுதாங்க ஞாபகம் இருக்கா? அழுதது மட்டுமல்லாமல் என் அப்பாவும் என்கூட தான் வரணும்னு நம்ம கூடவே உங்கப்பாவை கார்ல கூட்டிட்டு வந்தியே மறந்து போச்சா?…” என்றதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார் செவன்டிஸ்ஸ்_ டாடி லிட்டில் பிரின்ஸஷான காமாட்சி. இனி இதை பற்றி பேசுவரா என்ன?
அதே நேரம் இங்கு… தன்னை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் இதயாவிடம் “இதயாமா அழக் கூடாது…” கரகரத்த குரலை சரிசெய்தபடி கூறினான்.
அவனது கரகரத்த குரலில் இன்னுமின்னும் அழுகை வந்தது இதயாவிற்கு. பாவையின் அழுகையில் லேசாக துளிர்விட்ட கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது வாசுவிற்கு.
தோள்பட்டையில் கன்னத்தை அழுத்தி தேய்த்து கொண்டே “இதயா மா, இங்க பாரு டா அழக் கூடாது. எப்பவும் நான் உங்கூடயே இருப்பேன். நீ எப்ப கூப்பிட்டாலும் உடனே நான் வந்துடுவேன். பயப்பட கூடாது தைரியமா இருக்கணும்…” என ஆரம்பித்து பல சமாதானங்களை கூறி தான் இதயாவை அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான்…
error: Content is protected !!