அம்மையப்பன் 26
அம்மையப்பன் 26
திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவரும் கலையரசியின் பேச்சில் மீண்டும் குழம்பி போயினர்.. இப்பொழுது திருச்செல்வம் பவளத்திடம் சொல்லலாமா வேண்டாமா என மனதினுள் யோசித்து கொண்டிருக்க..
Advertisement
திரு சொந்த பந்தம் எல்லாம் போகட்டும்.. ஒரு பத்து நாள் செண்டு கண்டிப்பா எல்லாருக்கும் உண்மையை சொல்லிடலாம்.. என திருநாவுக்கரசும் கூறினார்..
திருச்செல்வத்தின் மனம் அதில் சமாதானம் அடைய மறுத்தது..
Advertisement
Advertisement
நம்ம பவளத்த பத்தி யோசிக்கணும் திரு.. அவ சின்ன பொண்ணு.. நீ சொல்றத சரியா புரிஞ்சுக்கலைன்னா ரொம்ப கஷ்டம்.. நீங்க ரெண்டு பேரும் மொதல்ல உங்க வாழ்க்கைய ஆரம்பிங்க.. ஒரு பத்து பதினஞ்சு நாள் போகட்டும்.. அப்புறம் பொறுமையா அவ கிட்ட சொல்லு.. என தம்பியின் மனம் புரிந்து ஆலோசனை சொல்ல.. திருச்செல்வம் அமைதியாக தலையசைத்தார்..
ஆனால் அவருக்கு இப்பொழுது மட்டுமல்ல அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் தன் மனைவியிடம் உண்மையை சொல்ல முடியாது என அவருக்கு தெரியவில்லை..
Advertisement
திருச்செல்வத்தின் அறையில் அவர் அனைத்தையும் மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில்.. அறையின் கதவு திறக்கப்பட்டது..
பட்டுச்சேலையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து.. கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் பால் சொம்பை ஏந்தியவாறு.. பவளம் நின்றார்..
பவளத்தின் கன்னங்கள் கைகளில் வைத்திருந்த மருதானியின் சிவப்பிற்கு போட்டி போடும் வகையில் சிவந்திருந்தது.. மெல்லிய விரல்கள் நடுக்கத்துடன் பால் சொம்பை பிடித்திருந்தனர்..
இது வரை கடல் அலைகள் போல் ஆர்ப்பரித்து கொண்டிருந்த திருச்செல்வத்தின் மனது அவரை பார்த்தவுடன் அமைதியாகியது..
பவளம் மெல்ல அவரை நெருங்க.. திருச்செல்வம் காதலுடன் அவரின் கரத்தை பற்றி கொண்டார்..
அதில் பவளத்தின் நடுக்கம் அதிகமாக.. மெல்ல அவளை அணைத்து.. ஏய் என்கிட்ட என்னடி பயம்.. என அவர் காதில் கிசுகிசுக்க.. பவளத்தின் உடல் சிலிர்த்தது..
அந்த அமைதியான நேரத்தில் அவர் பேசிய ரகசிய பேச்சுக்கள் எல்லாம் பவளத்தினை ஏதேதோ செய்தது.. அந்த உணர்வுகளை அவரால் தாங்க முடியவில்லை..
திருச்செல்வம் அவளை இறுக்கி அணைக்க.. உடல் வலித்தாலும் அதனை விரும்பியே ஏற்று கொண்டார் பவளம்..
அமைதியான ரம்மியமான இரவு பொழுதில், அடுத்தடுத்து அங்கு அரங்கேறிய அனைத்தும் மன்மதனின் காதல் சாம்ராஜியத்தின் ரஸவாதமாகும்..
**********************************
புதுமண தம்பதிகளுக்கு அடுத்தடுத்த நாட்களின் பகல் பொழுதுகளில் சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்வதற்கும், இரவு பொழுதுகள் இளமையின் விருந்திற்க்கு செல்வதற்கும் என சரியாக இருந்தது..
பத்து நாட்கள் இறக்கை கட்டியது போல் ஓட.. மாளிகையில் வீட்டு மனிதர்கள் மட்டும் இருந்தனர்.. திருச்செல்வம் இன்று பவளத்திடம் தன் மகளை பற்றி கூறிவிட முடிவெடுத்தார்..
அதனை திருநாவுக்கரசுவிடமும் சொல்ல, அவரும் சரியென்றார்..
அய்யா.. உங்களுக்கு சென்னையில இருந்து போனு வந்துருக்குங்க என ஒரு வேலையாள் சொல்ல.. திருநாவுக்கரசுவும் திருசெல்வமும் பதட்டத்துடன் கீழே சென்றனர்..
திருச்செல்வம் மேட்டுப்பாளையத்திற்கு வரும் முன், மணிமேகலையிடம் தங்கள் வீட்டின் போன் நம்பரை கொடுத்திருந்தார்.. ஏதேனும் அவசரம் என்றால் எந்நேரம் ஆனாலும் போன் செய்யுமாறு கூறி இருந்தார்.. இப்பொழுது பத்து நாட்கள் கழித்து போன் வரவும் தன் மகளுக்கு தான் ஏதேனும் ஆகிவிட்டதோ என பதட்டமும் தவிப்புமாக போனை எடுத்தார்..
அவரின் பதட்டத்தை மேலும் கூட்டுவது போல் தான் போனில் செய்தி வந்தது.. அவர் அன்றே சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை.. ஆனால் அதற்கு குடும்பத்தினர்கள் யாரும் அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை..
பத்து நாள் முன்னாடித்தான உனக்கு கண்ணாலம் ஆகியிருக்கு.. இன்னும் பவளத்துக்கு தாலி பிரிச்சு கோக்கல.. இன்னும் நிறைய சொந்தகாரங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும்… ஆனா நீ இன்னைக்கே சென்னைக்கு போகணும்னு நிக்குற.. என்றா நினைச்சுகிட்டு இருக்க நீ.. எல்லாம் உன் இஷ்டம் தானா.. என நாகநாதன் சத்தம் போட்டார்..
உன்னை வேலைய விட சொன்னேன்ல திரு.. ஏன் இன்னும் விடாம இருக்க என கோபமாக கேட்டார் மரகதம்..
அம்மா நாம நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வேலைய விட முடியாதுங் ம்மா.. இன்னும் ஆறுமாசம் அங்கத்தான் இருக்கனும்.. வேற வழியில்லை.. அங்க என்ன நம்பி நிறைய பொறுப்பை கொடுத்துருக்காங்க.. அதுக்கு நான் உண்மையா இருக்கனும்.. இப்போ என்னை போக விடுங்க என ஏதேதோ சொல்லி அன்னையை சமாளித்தவர்.. விழி கலங்க நின்ற பவளத்தை தனியாக அழைத்து சென்று அவரையும் சமாளித்து விட்டு சென்னைக்கு சென்றார்..
**********************************
அதிகாலை பொழுது தான் சென்னை வந்தடைய முடிந்தது.. திருச்செல்வம் வேகமாக கதவை தட்ட.. ஒரு நொடியிலேயே யாரென பார்த்து கதவை திறந்தார் மணிமேகலை..
அவர் கரத்தினுள் குழந்தை முழிப்பும் உறக்கமுமாக இருந்தது..
என்னாச்சு..? என கேட்டவாறு குழந்தையை வாங்க முற்பட.. மணிமேகலை தர மறுத்தார்..
ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க.. ரொம்ப தூரம் பயணம் பண்ணிக்கிட்டு வந்துருக்கீங்க.. மொதல்ல போய் குளிச்சிட்டு வாங்க என மெல்லிய குரலில் சொல்லவும், அவர் வேகமாக குளியலறைக்குள் சென்றார்..
இரண்டு நிமிடத்தில் அவர் திரும்பி வரவும், குழந்தையை அவர் கரத்தில் கொடுத்தார்..
மது குட்டி என்று அவர் சொன்னதும் தான் தாமதம், வேகமாக விழிகளை திறந்த அதி இதழ் பிதுக்கி தன் தந்தையை பார்த்து அழ ஆரம்பித்தாள்..
அச்சோ இல்லம்மா இல்லம்மா.. என்னாச்சு.. என்ற குட்டியம்மணிக்கு.. என அவர் கொஞ்சவும் தன் கரத்தில் கிடைத்த அவர் முடியை பிடித்து இழுத்தாள் அதி.. அதோடு கிள்ளவும் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.. திருச்செல்வம் தன் கொஞ்சலை நிறுத்தாது சமாதானம் செய்து கொண்டிருந்தார்.. ஒரு வழியாக தன் அழுகையை நிறுத்திய அதி அவரை பார்த்து சிரிக்க.. திருச்செல்வத்தின் முகம் மலர்ந்தது..
என்னாச்சுங்க குழந்தைக்கு எப்படி ஜுரம் வந்துச்சு.. என கேட்ட திருச்செல்வம்..
கணகா போன் பண்ணி மதுவ ஆஸ்பத்திரியில வச்சிருக்காங்கனு சொன்னதும் எனக்கு உயிரே போயிடுச்சுங்க.. என அயர்ந்த குரலில் சொன்னார்..
உங்க கையிலே இருந்து பழகிட்டா இல்ல, அதான் நீங்க இல்லன்னு ரொம்ப அழுகை.. எவ்வளவு சமாதானம் செய்தாலும் அழுதுகிட்டே இருந்தா.. அப்பொறம் கொஞ்சம் சரியான மாதிரி இருந்தா.. ஜுரம் வந்ததும் மறுபடியும் உங்களை தேட ஆரம்பிச்சுட்டா.. அதான் உங்களுக்கு போன் செய்ய வேண்டியதா போயிடுச்சு மன்னிச்சுடுங்க.. என மெல்லிய குரலில் மணிமேகலை சொல்லவும்.. திருச்செல்வம் வேகமாய் மறுத்தார்..
அதெல்லாம் இல்லங்க.. நீங்க எனக்கு போன் செஞ்சது நல்லதுதான்.. என்ற திருச்செல்வம் தன் மகளில் மூழ்க.. மணிமேகலை தன் அறைக்கு சென்று விட்டார்..
**********************************
மூன்று மாதத்திலேயே குழந்தையின் கழுத்து நன்றாக நின்றுவிட்டது.. தரையில் விட்டால் போதும் எந்நேரமும் கை கால்களை அசைத்து கொண்டே இருப்பாள்..
அழுகையும் சிணுங்களும் ஒன்றாக வர.. திருச்செல்வத்திற்கு அதனை பார்க்க கோடி கண்கள் தேவைப்பட்டன.. தன் மகளின் சிறு சிறு செயல்களையும் பொக்கிஷமாக சேமிக்க ஆரம்பித்தார்.. போட்டோவும் வீடியோவுமாக எடுத்து தள்ளினார்..
மூன்று மாத குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என சொல்வார்கள்.. ஆனால் குட்டி அதி தாயை விட தந்தையிடம் அதிகம் ஒண்டினாள்.. திருச்செல்வத்தின் குரல் கேட்டாலே போதும் விதவிதமாக சத்தம் எழுப்பி அவரை கவனிக்க செய்வாள்.. குட்டி அதி..
ஆஆ.. உஉ.. என சத்தம் எழுப்பி கை காலை வேகமாக அசைத்து.. எச்சில் ஒழுக சிரிக்கும் பிள்ளையை கண்டால் திருச்செல்வம் அனைத்தும் மறந்து தன் மகளின் அருகே அமர்ந்து கொஞ்ச ஆரம்பித்து விடுவார்..
குழந்தைக்கு நான்கு மாதம் இருக்கும் பொழுது.. இரு நாட்கள் மட்டும் மேட்டுப்பாளையத்திற்கு சென்று வந்தார்..
குழந்தைக்கு ஆறுமாதம் இருக்கும் பொழுது.. மணிமேகலையை அவரின் அத்தை மகன் கிருஷ்ண குமாருக்கு திருமணம் செய்து வைத்தார்.. அவர்கள் மூவறும் மும்பை சென்று விட்டனர்..
மணிமேகலை செல்லும் பொழுது திருச்செல்வத்திடம் நன்றி கூறி, ஒரு விஷயத்தை மட்டும் தான் திருச்செல்வத்திடம் கேட்டார்..
உங்க குடும்பத்து ஆளுங்க முன்னாடித்தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு.. நீங்க நினைச்சிருந்தா ஊருக்கு தெரியாம என்கூடயும் வாழ்ந்திருக்கலாம்.. ஆனா நீங்க உங்க காதலிக்கு மனதாலும் உடலாலும் உண்மையா இருக்க எவ்வளவு செஞ்சிருக்கீங்க.. என்னோட உணர்வுகளையும் காப்பாத்தி கொடுத்திருக்கீங்க.. பணத்துக்காக வந்தவ தான்னு ஒரு நாளும் என்னை இளப்பமா நினைச்சதும் கிடையாது.. ஒரு பார்வை என்னை இதுவரை நீங்க பார்த்ததில்ல.. உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றிகடன் பட்டிருக்கேன் சார்.. எப்படியோ மாற வேண்டிய என் வாழ்க்கையை சரிப்படுத்தி கொடுத்துருக்கீங்க.. உங்க கிட்ட கடைசியா ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன்..
ஒருவேளை குழந்தைய உங்களால வளர்க்க முடியாத சூழ்நிலை வந்தா, தயவு செஞ்சு என்கிட்ட கொடுத்துருங்க.. என கரம் குவித்து விழிகளில் கண்ணீர் மல்க மன்றாடி சென்றார் மணிமேகலை..
ஒன்னறை வருடத்தில் இப்பொழுது தான் மணிமேகலையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார் திருச்செல்வம்..
நான் எதுவும் பண்ணலமா.. எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சது நீங்கதானே.. உடலாளையும் மனதாளையும் உங்களுக்கு தான் ரொம்ப கஷ்டம்.. சொல்லப்போனால் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.. நான் என் பவளத்துக்கு உண்மையா இருக்கேனா அதுக்கு நீங்களும் ஒரு காரணம் தான்.. என மணிமேகலையை சமாதானம் செய்தவர்.. குழந்தையைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை..
எந்த நிலையிலும் குழந்தை தன்னை விட்டுப் பிரியாது என உறுதியாக நம்பினார்.. அதனால் அவர் அதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்..
ஆனால் அவருக்கு தெரியவில்லை.. தாமே குழந்தையை மணிமேகலையிடம் அழைத்து சென்று.. மகள் கதற கதற அவள் கரத்தை உதறிவிட்டு செல்வோம் என அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்..
மணிமேகலை தன் குடும்பத்துடன் மும்பை சென்ற மறுநாள்.. கணகாவையும் அவர் மகனையும் அழைத்து கொண்டு தன் மகளோடு மேட்டுபாளையத்திற்கு வந்து விட்டார் திருச்செல்வம்..
*******************************
அதியை தூக்கிக் கொண்டு திருச்செல்வம் உள்ளே செல்ல பெரியவர்கள் மற்றும் பவளம் யாரும் இல்லை.. அமிர்தவல்லி திருநாவுக்கரசு கலையரசி மட்டுமே இருந்தனர்..
என்னாச்சு ண்ணே.. எல்லாரும் எங்க போயிருக்காங்க.. என கேட்டார்.. திருச்செல்வம்..
அவரது கரத்தில் இருந்த அதி.. தன் மொச்சை கொட்டை கண்களை உருட்டி சுற்றி முற்றியும், பார்த்து கொண்டிருந்தது..
கொழுக்மொழுக்கென பால் சதையுடன் இருந்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்த அமிர்தவல்லிக்கு அவளை அள்ளி எடுத்து கொஞ்ச ஆசையாக இருந்தது.. மெல்ல அவர் முன்னேற முயல கலையரசி தடுத்தார்..
அமிர்தத்தை தடுத்த கலையரசிக்கு திருநாவுக்கரசுவை தடுக்க முடியாது அல்லவா.. அவர் அதியை தூக்கி இரு கன்னத்தில் அழுத்த முத்தம் வைக்க.. இரு நொடி அமைதியாக இருந்த அதி, மீண்டும் தன் தந்தையை நோக்கி தாவ ஆரம்பித்தாள்..
என்ன ஆச்சுண்ணே.. வீட்டுல உள்ளவங்க எல்லாரும் எங்க.. என திருச்செல்வம் மறுபடியும் கேட்க..
கலையரசி அதற்க்கு பதில் கூறினார்.. என்னன்னு சொல்றது ண்ணே.. நீ வந்து சொல்றதுக்கு முன்னால பவளத்து கிட்ட நாங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையா ஏதாவது சொல்லலாம்னு இருந்தோம்.. சும்மா நம்ம அண்ணே ஜாதகத்துல ரெண்டு தாரம் இருக்குன்னு விஷயத்தை லேசு பாசா சொன்னேன்.. என கலையரசி இழுக்க.. திருச்செல்வம் அதிர்ந்து போனார்..
என்ன சொல்ற கலை.. உனக்கு எதுக்கு இந்த வேலை.. இப்போ பவளம் எங்க.. என கோபமாக கேட்டார்..
ஹ்ம்ம் நம்ம அம்மன் கோவில்ல இருக்கா ண்ணே.. ஒரு மாசம் கிட்ட விரதம் இருக்கா.. அதிகாலையே எழுந்திருச்சு கோவிலுக்கு போயி மதியம் பத்திய சாப்பாடு மட்டும் சாப்புட்டுகிட்ட கிடக்கா.. அக்னி சட்டி எடுக்கிறதா வேண்டிதல் வேறு வச்சுருக்கா.. என கலையரசி கவலையாக சொல்ல.. திருச்செல்வம் உறைந்து போய் நின்றார்..
இன்னைக்குத்தா ண்ணே அக்னி சட்டி எடுக்குறா அதான் எல்லாரும் கோயிலுக்கு போயிருக்காங்.. என கலையரசி மெதுவாக சொல்ல.. திருச்செல்வம் உடனே பிள்ளையை கணகாவிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு செல்ல போக.. திருநாவுக்கரசும் அவரை பின் தொடர்ந்தார்..
இப்பொழுது அங்கு அமிர்தம் கலையரசி கணகா அவரின் மகன் மற்றும் அதி மட்டுமே தனித்து இருந்தனர்..
திருச்செல்வம் வேகமாக கோவிலினுள் சென்றவர் அங்கு தான் கண்ட காட்சியில் உறைந்து போனார்..
பவளம் ஈரத்துடன் மஞ்சள் சேலை உடுத்தி.. கரத்தினுள் அக்னி சட்டியை ஏந்தியவாறு தள்ளாடி சென்று கொண்டிருக்க.. திருச்செல்வம் துடிதுடித்து போனார்..
அதுவும் அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க.. பவளம் வேப்பில்லை கூட இல்லாது அக்னி சட்டியை வெறும் கரத்தில் பிடித்திருந்தார்..
பத்து சுற்று முடிந்து அவர் அக்னி சட்டியை கொடுக்கும் பொழுது மயங்கிவிட.. திருச்செல்வம் பதறியடித்து அவரை பிடிக்க வந்தார்..
பவளம்.. பவளம் என அவர் முகத்தில் தண்ணீரை தெளிக்க.. மெல்ல விழி திறந்த பவளம்.. தன்னை தாங்கிக்கொண்டு இருந்த கணவனை கண்டு அவளுக்கு மகிழ்ச்சியும் அழுகையும் ஒருங்கே வந்தது..
மாமா.. மாமா.. வந்துட்டீங்களா.. என தவிப்பும் மகிழ்ச்சியுமாக மெல்லிய குரலில் கேட்க.. திருச்செல்வம் அவளை தூக்கிக் கொண்டு சற்று அமைதியான இடம் நோக்கி சென்றார்.. பெரியவர்களும் திருநாவுக்கரசும் அவர்களை சற்று தனிமையில் விட்டனர்..
