Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 3.1

சென்னை மாநகரின் முக்கியமான நட்சத்திர ஹோட்டல் அது. இரவு ஆறு மணிக்கே மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்க அதனுள் நுழையும் மக்களையும் அவர்கள் வந்திறங்கும் வாகனங்களையும் பார்த்த இலக்கியாவிற்கு உள்ளே நுழையவே தயக்கமாக இருந்தது.

அவளோடு அவளுடன் வேலை பார்க்கும் எவருக்கும் அழைப்பு வராமல் இருக்க தனியாக வரவே பிடிக்கவில்லை, அதுவும் தன்னுடைய மனதினுள் ஒன்றாய் கலந்திருக்கும் அர்ஜுனின் நிச்சய நிகழ்விற்கு சந்தோசமாக வந்து நிற்க முடியவில்லை அவளால்.

அதே சமயம் மருத்துவமனையில் எவரையும் அழைக்காமல், தன்னை மட்டும் அவன் அழைத்திருக்க அர்ஜுன் அழைப்பை உதாசீனப்படுத்தவும் முடியவில்லை இலக்கியாவால்.

மூளையின் உந்துதலில் கால்கள் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கி நடக்க, உள்ளே நுழைந்ததுமே இலக்கியாவின் கண்கள் அதன் ப்ரமாண்டத்தில் விரிந்தது. ஆறு மாடி கட்டிடத்தின் ஆறு தளங்களும் கீழிருந்து பார்த்தாலே தெளிவாக தெரியும்.



Advertisement

அதிலும் அதன் அழகு அந்த மஞ்சள் நிற விளக்கின் ஒளியில் மின்ன, அதன் அழகை, பிரமாண்டத்தை விவரிக்க வார்த்தைகளற்று போனது. உயர்தர மேஜைகள், உலக தரம் கொண்ட டைல்ஸ் கர்க்களை பார்த்தவள் கால்கள் அதன் மேல் நடக்க கவனமாய் இருந்தது.

“வேர் கேன் ஐ டிரெக்ட் யூ மேம்” அவள் முன்பு வந்து கண்ணியமாக கேட்டான் கோட் சூட் அணிந்த ஒருவன்.

அவனுக்கு பதில் கூற முடியாமல் தான் கொண்டு வந்த அர்ஜுனின் நிச்சய பத்திரிகையை நீட்ட, அதை பார்த்தவன், லிப்ட் பக்கம் காட்டி, “அந்த லிப்ட்ல போனா தேர்ட் ப்லோர் மேம்” அவன் குறிப்பிட்ட திசையை நோக்கி அவள் நடக்க அவளோடு இன்னும் சிலரும் மின்தூக்கியினுள் நுழைந்தனர்.

Advertisement

“நான் அவங்க பிஸ்னஸ் பார்ட்னர் பொண்ணோட கல்யாணாம் நடக்கும்னு தானே நினைச்சேன்”

Advertisement

தன்னோடு வந்து நின்ற பெண்ணிடம் ஒரு பெண் பேச, “அந்த பேச்சு ரொம்ப வருஷம் முன்னாடியே அடிபட்டிச்சு பட் ஹி இஸ் அட்மென்ட். டாக்டர் பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பண்ணி சாதிச்சிட்டானே” என்றார் சிரிப்போடு.

“ம்ம் என்ன கேட்டா இந்த பொண்ணே அவங்க லெவல்க்கு ரொம்பவே கம்மி தான்”

“சொந்தமா பார்மா கம்பெனி வச்சிருக்காங்க, கூட்டி கழிச்சு பாத்தா ராமகிருஷ்ணன் வாரிசு லாபம் பாக்காம இந்த கல்யாணத்த நடத்த மாட்டான்” அவர்கள் பேசுவதை கேட்ட இலக்கியாவிற்கு தான் அந்நியமாய் தோன்றியது.

Advertisement

அவர்கள் பேச்சில் தான் தன்னுடைய ஆசை எவ்வளவு பொருத்தமற்றது என புரிந்தது. அவன் எங்கே, தான் எங்கே? அவன் தகுதி எங்கே, தன்னுடைய தகுதி அவன் கால்களுக்கருகில் கூட வராதே…

எந்த எண்ணத்தோடு அவன் மேல் ஆசை வைத்தது என் மனது, சூரியனை அள்ளி கைகளுக்குள் வைத்தால் அதனால் காயம் தனக்கு தான் ஏற்பட்டுள்ளது என்பதை இப்பொழுது தான் புரிந்துகொண்டாள்.

மின்தூக்கி அலுங்காமல் குலுங்காமல் மூன்றாவது தளத்தில் வந்து நிற்க தனக்கு முன்னே சென்ற பெண்களை தொடர்ந்து சென்றாள் இலக்கியா. சற்று தொலைவில் இருந்த பார்ட்டி ஹாலை பார்த்த பொழுதே அங்கு நின்ற பெண்களை பார்த்து இலக்கியாவின் கால்கள் சில நொடிகள் தடுமாறியது.

உடை, நடை, அணிகலன் என அவர்கள் அருகில் செல்ல கூட பயமாக இருந்தது, தன்னை ஒரு ஏளன பார்வை எவரேனும் பார்த்துவிட்டால் என்ன செய்வேன் நான் என மனம் பதைபதைத்தது பெண்ணுக்கு.

தன்னிடம் இருப்பதில் விலையுயர்ந்த ஹேசல் வுட் நிற பட்டுடுத்தி எளிமையான ஒரு மெல்லிய வெள்ளி சங்கிலி மட்டுமே அணிந்து, காதில் சிறிய தங்க ஜிமிக்கி, இடையை தாண்டி வளர்ந்திருந்த அவள் கூந்தலை மெல்லிதாக பின்னலிட்டு அழகாய் வந்தாள்.

எந்த விதமான கவனத்தையும் ஈர்க்காமல் எளிமையாக இருந்தது அவள் தோற்றம், ஆனால் அங்கிருந்த மக்கள் யாவரும் டைமண்ட், பல ஆயிரம் கொட்டி வாங்கிய புடவை, பளபளக்கும் மேனி என அவர்கள் தன்னம்பிக்கை அவர்கள் முகத்திலே தெரிந்தது.

வர கூடாத இடத்திற்கு வந்தது போல் வாசலை தாண்டாமல் பதட்டத்தோடு இலக்கியா நிற்க, “எக்ஸ்க்யூஸ் மீ” என பின்னால் கேட்ட குரலில் தானாக அவள் கால்கள் முன்னேறி உள்ளே சென்று வழிவிட, இதற்கும் மேல் பின்வாங்க முடியாதென உள்ளே நடந்தவள் அந்த நீண்ட ஹாலின் பிரமாண்டத்தை கூட கவனிக்க தவறி ஒரு ஓரத்தை தேடி அமர்ந்துகொண்டாள்.

மனதில் பெரிய பாரம் ஏறி குடிகொண்டது. இங்கு வந்திருக்கவே கூடாதென்று அந்த நொடி உணர்ந்தாள்.

அவன் வீட்டின் ஆட்கள் அனைவரும் மிகவும் பிஸியாக அங்கும் இங்கும் வந்தவர்களை வரவேற்பதில் மும்முரமாய் இருக்க இவளை அங்கு யாருக்கும் தெரியாமல் போனது.

அமைதியாக அமர்ந்திருந்தவள் மனம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது, அதை இன்னும் வேதனைப்படுத்த சிரித்த முகத்தோடு மேடை ஏறினான் அர்ஜுன்.

அடர்ந்த நீல நிற சூட் அணைந்து அத்தனை வசீகரிக்கும் சிரிப்போடு அவன் வந்து நிற்க, அவனுடைய உறவு முறை ஒருவர் வந்த மாலையிட, கைகள் எடுத்து வணங்கி சந்தோசமாக ஏற்றுக்கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் இளமஞ்சள் நிற பட்டுடுத்தி மொத்தமும் தங்க ஆபரணம் அணிந்து அர்ஜுனுக்கு சலிக்காத அழகோடு அவன் அருகில் வந்து நின்ற அஞ்சுஸ்ரீ முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து உடனே கண்கள் கலங்கியது இலக்கியாவிற்கு.

தன்னை விட்டு சற்று தள்ளி நின்ற அஞ்சுஸ்ரீயை பார்த்த அர்ஜுன் மெதுவாக அவளை ஒட்டி சென்று நிற்க, உடனே தன்னுடைய இமைகளை தாழ்த்தி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டாள்.

அவன் வேறு பெண்ணுடன் சந்தோசமாக நிற்பான் என்று மனதை திடப்படுத்தி தான் வந்தாள், அதே திடமான மனம் மனதில் சித்தரித்ததை வைத்திருந்ததை நேரில் இரு விழி கொண்டு பார்த்த பொழுது ஊசியை வைத்து குத்தியது போல் வலித்தது.

திடீரென இளைஞர்களின் ஆரவாரமும், கை தட்டலும் கேட்டு தலையை உயர்த்த, மேடையில் இருவரும் மோதிரம் மாற்றும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

அவள் கையில் மோதிரம் மாட்டி அவன் கையை எடுக்க, சுற்றி நின்ற அவன் வீட்டின் இளசுகள் அவனை ஏதோ நச்சரித்தனர். தூரத்தில் அமர்ந்திருந்த இலக்கியாவிற்கு அவர்கள் என்ன பேசினார்கள் என கேட்காமல் போக விழி அகலாமல் கூச்சத்தோடு நெற்றியை தேய்த்தவனின் சிரித்த முகத்திலிருந்து பார்வையை மாற்ற முடியாமல் இருந்தாள் பெண்.

“கிஸ் பண்ணு அர்ஜுன்”

“கிஸ் ஹெர்” என அவன் வீட்டு இளசுகள் அர்ஜுனை நச்சரிக்க, “டேய் விடுங்களேன்டா” என்றான் கெஞ்சலாய்.

அஞ்சு முரண் பிடித்து நின்ற அவர்களின் வாக்கியத்தை தடுக்காமல் அமைதியாக சின்ன சிரிப்போடு நிற்க, அவள் பின்னால் நின்ற அவள் தந்தை கணேஷ், “கோ அஹெட்” என்றார் மெல்ல சிரித்து.

அர்ஜுன் ஒன்றும் அவருடைய அனுமதிக்காக காத்திருக்கவில்லை, ஏதோ அவனை முன்னேற தடுத்தது. அதை வெட்கம் என்னும் பெயர் வைத்து நிறுத்தினான், “கல்யாணம் ஆகட்டும் டா, விடுங்க” என்றான் சற்று கோபமாக.

“அதெல்லாம் முடியாது இப்போவே குடுக்கணும்” வருண் தீவிரமாக கூறினான்.

இவர்கள் விடப்போவதில்லை என உணர்ந்து அவள் கையை முகத்தினருகே கொண்டு சென்று கையில் பட்டும் படாமலும் முத்தம் ஒன்று வைக்க, அவர்கள் செய்த ஆரவாரத்தில் அந்த அறையே குலுங்கி சிரித்தது.

அதெற்கெல்லாம் நேர் மாறாக அவன் அஞ்சுக்கு கொடுத்த முத்தம், இலக்கியாவின் காயத்தின் மேல் நெருப்பை வைத்து தேய்த்தது போல் எரிய கண்களிலிருந்து விழுந்த கண்ணீரை உடனே சுற்றம் கருதி துடைத்துக்கொண்டாள்.

“என் பையனுக்கு வெட்கமா?” பானு மகனை கேலி செய்ய, அவனுக்கோ அனைவரின் ஆரவாரம், தன்னை கேலி செய்வது என சினம் தான் ஏறியது.

“மாம் தட்ஸ் இட்”

தன்னுடைய சினத்தை காட்டி அன்னையை சிலகணங்கள் பார்க்க அவனை புரிந்தவர் இளைய பட்டாளத்தை விரட்டிக்கொண்டு மேடையை விட்டு இறங்கி மற்ற விருந்தினர்களை கவனிக்கலானார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்தவர்களை கவனிப்பதில் மும்முரமாய் இருக்க கீழே அமர்ந்திருந்த இலக்கியாவின் கண்கள் வேதனையோடு அர்ஜுனின் சிரித்த முகத்தை மட்டுமே கவனித்தது.

வந்தவர்களிடம் சிறு புன்னகையோடு கை குலுக்கி தன்னுடைய வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தி வைக்க, சில சமயம் அவள் இடையோடு எந்த தயக்கமும் இல்லாமல் கை போட்டு அவளையும் பேச வைத்தவன் முகத்தில் இருந்த பெருமிதம் இலக்கியாவின் தவறை மறக்காமல் சுட்டி காட்டியது.

அவன் துறையிலிருந்து அவன் விருப்பத்தின்படி மனைவியை தேர்ந்தெடுத்த பெருமிதம் அர்ஜுன் கண்ணில்.

“நீ அர்ஜுன் டிபார்ட்மென்ட் நர்ஸ் தானே ம்மா?” திடீரென தன்னருகில் கேட்ட ராமகிருஷ்ணன் குரலில் முகத்தை கைக்குட்டை கொண்டு வேகமாக சரி செய்து திரும்பினாலும் சிவந்து நின்ற அவள் நாசி, கண்கள் என அவள் அழுகையை காட்டிக்கொடுத்தது பெரியவருக்கு.

“ஆமா சார்” என்றவள் குரல் கூட அழுத்துள்ளாள் என காட்டியது.

“அர்ஜுன் இன்வைட் பன்னானா ம்மா?” தலையை ஆட்டினாள், “ம்ம்ம் சாப்பிட்டியா ம்மா?”

“இல்ல சார்”

“சரி வெயிட் பண்ணு இப்போ வந்துர்றேன்” ஆர்வமாக அவர் பேசி விலக வேகமாக மேலும் தனையே சரி செய்து நின்ற நேரம் சரியாக தன்னுடைய மனைவியோடு வந்து நின்றார் ராமகிருஷ்ணன்.

நரைத்த முடியோடு, மங்கலமாய் சிரித்த முகமாய் வந்து நின்ற ராதாவை பார்த்த இலக்கியாவிற்கு தானாக அவர் கால்களை தொட்டு வணங்க தோன்ற யோசிக்காமல் அவர் காலில் விழுந்தாள்.

பெண்ணின் திடீர் செயலில் அதிர்ச்சியுற்றவர், “சந்தோசமா இரு ம்மா” என்றார் மனமார வாழ்த்தி.

ஏனோ ராதாவுக்கும் அவளை பார்த்த உடனே பிடித்து போனது. தன்னுடைய பேரன் வாழ்க்கையில் வர போகும் பெண் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென ஆசைக்கொண்டாரோ அத்தனை தகுதியும் அவளிடம் இருப்பதாய் தோன்றியது.

பெரியவர்களுக்கு மரியாதை, முகத்தில் கனிவு, உடையில் நளினம், எளிமையான தோற்றம் என சக்ரவர்த்தி குடும்பத்திற்கேற்ற இளவரசியாக இந்த பெண் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் தான் அவருக்கு.

மனைவியின் என்ன ஓட்டத்தை புரிந்த ராமகிருஷ்ணன், “உன் டீயை அடிச்சுக்க ஆள் இருக்குன்னு சொன்னேன்ல ம்மா, அது இந்த பொண்ணு தான்”

இந்த தகவல் கூடுதல் பிரியத்தை வைத்தது அவள் மேல், “உன்ன பத்தி தான் ம்மா இவங்க ஒரு வாரம் பேசுனாங்க, உன் சமையலை ருசி பாக்க கூட ஆசை இவருக்கு”

இதுவரை ராதாவின் பெயரை மட்டுமே கேட்டிருந்த இலக்கியாவிற்கு இத்தனை உயரத்தில் இருக்கும் பெண்மணி தன்னிடம் இவ்வளவு இலகுவாக பேசுவார் என்று நம்பவே முடியவில்லை.

அதிர்ச்சி விலகாமல், “இல்ல.. இல்ல மேம், நான் சுமாரா தான் சமைப்பேன்” திணறியவளின் கையை மென்மையாக பற்றினார்.

“மேம் ஏன்ம்மா சொல்ற? பாட்டின்னு சொல்லு. வா ஒக்காரு” அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் அமர வைத்து தானும் அருகில் இருந்த ஒரு நாற்காலியை அவள் அருகில் போட்டு அமர்ந்தார்.

“உனக்கு ஒன்னு தெரியுமா ம்மா? யாரையும் பாராட்டாத என் பேரன் கூட உன் டீயை பத்தி நல்லா இருக்குன்னு சொன்னான்” என்றவுடன் தன்னிச்சையாக இலக்கியாவின் கண்கள் மணமேடையில் வேதனையோடு விழுந்தது.

“உன் அப்பா அம்மா என்ன பண்றங்க ம்மா?”

ஆர்வமாய் அவர் கேட்பதை பார்த்து தயங்கியது அவள் வார்த்தைகள், “அப்… அப்பா வாட்ச்மேன் வேலை பாக்குறாங்க மேம்”

பற்றியிருந்த இலக்கியாவின் கரத்தை அழுதியவர், “பெத்தவங்கள பத்தி வெளிய சொல்றதுல என்னைக்குமே கர்வப்படணுமே தவற, கூச்சப்பட கூடாது ம்மா” என்றார் கனிவான குரலில்.

சோர்ந்திருந்த அவளின் முகத்தை பார்த்து மேலும் கேள்வி எழுப்ப தோன்றாமல், “சரி வா நீ போட்டோ எடுக்கல தான?”

“இல்ல மேம் இருக்கட்டும், நான் கிளம்புறேன்” எழுந்தவளை வம்படியாக இழுத்து சென்று மேடையில் தள்ளிவிட்டார்.

தன்னுடைய பாட்டியை பார்த்ததும் சிரித்தவன் அவருக்கு பின்னால் தயக்கமாக மேடை ஏறி வந்த இலக்கியாவை பார்த்து சம்ரதாயத்திற்காக சிரித்தான். அவனின் அந்த சிரிப்பில் இங்கு வந்ததே தவறாக தோன்றியது.

“கங்கிராட்ஸ் சார்” என்றவள் பார்வை அவனை தொடாமல் அவனுக்கு அருகில் நின்றவளிடம் சென்றது, “கங்கிராட்ஸ் மேம்”

“ஸ்ரீ இது என் டிபார்ட்மென்ட் நர்ஸ்” இதுவரை அவன் அறிமுகப்படுத்தியவர்களிடம் கை குலுக்கியவள் இலக்கியாவிடம் கை குலுக்காமல் பாதி வந்த சிரிப்போடு தலையை மட்டும் ஆட்டினாள்.

“போட்டோ எடுத்துக்கோ ம்மா” கீழிருந்து ராதா நினைவு படுத்த அர்ஜுன் வாய் வார்த்தையாய் கூட அவளை அழைக்கவில்லை, கையை மட்டும் காட்டி நிற்க கூற, அசிங்கப்படுத்தியது போல் இருந்தது இலக்கியாவிற்கு.

அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து கீழே நின்ற ராதாவிடம், “இருக்கட்டும் மேம்” என புன்னகையோடு கீழே இறங்கி சென்றவளை எப்பொழுதும் போல் அர்ஜுன் கண்டுகொள்ளவே இல்லை.

“நான் கிளம்புறேன் மேம்” கிளம்புவதிலே குறியாத இருந்தவளை எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு மிடறு தண்ணீர் கூட அங்கு குடிக்காமல் கிளம்பி சென்றாள் மொத்தமாய் மனம் உடைந்து.

‘உன்ன சும்மா கூப்பிடனும்னு வர சொல்லிருக்கார், அத பெருசா எடுத்துட்டு வந்து இந்த அசிங்கம் உனக்கு தேவ தான்’ தன்னையே வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் திட்டிக்கொண்டே சென்றாள்.

வீட்டிற்கு சென்றும் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவள் கண்கள் தன்னுடைய அனுமதியே இல்லாமல் கண்ணீரை வடித்துகொண்டே இருந்தது. விடிய விடிய அழுதவள் இரவு இரண்டை தாண்டி தான் உறங்கவே செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!