Skip to content
Post Views: 4,195
கீழே வரவேற்பறையில் ஐயர் ஹோமம் வளர்த்துக்கொண்டிருக்க, அங்கிருந்த அறையினுள் அமர்ந்திருந்த இலக்கியாவின் கண்கள் அந்த வரவேற்பறையில் மட்டுமே நிலைத்திருந்தது. எளிதான அலங்காரம். வீட்டினுள் வேலையாட்கள் கூட இல்லை.
அவன் வீட்டினர் மட்டும் தான். அதுவும் பத்து பேர் கூட இல்லை. அவள் பக்கமிருந்து அவளும் அவள் தந்தையும் தான். அது அவன் ஆணை தான் என பெரியவர் மூலம் தெரிந்துகொண்டாள் நேற்று.
அந்த நாளுக்கு பிறகு ராமகிருஷ்ணன் அவளை மருத்துவமனை சில நாட்கள் வர வேண்டாம் என கூறியிருக்க அவர் முகம் பார்க்கவே கூசிய பெண்ணுக்கு அவர் வார்த்தையை கட்டளையாய் செய்தாள்.
நேற்று அவள் வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணன் தம்பதி, வரதராஜன் தம்பதி மற்றும் பரிமளா தம்பதி அவள் தந்தையிடம் பேசி அவளுக்கு புடவை நகை அனைத்தும் கொடுத்து வந்தனர்.
Advertisement
மறுநாள் அலங்கார கலைஞர் ஒருவரை அனுப்பி வைத்து, அவள் தயாரானதும் தங்கள் வாகனத்தில் வரவழைத்திருந்தார் ராமகிருஷ்ணன்.
அவள் தந்தையிடம் இலக்கியாவும் இருவரும் காதலிப்பதாக கூறியிருக்க பெரிய இடம் என்ற பயத்தை தவிர அவருக்கு வேறு பயம் இல்லை.
மகள் மேல் நம்பிக்கை அதிகம் இருந்தது, இப்பொழுது கூட வரதராஜன் அவரோடு பேச முற்பட மலையளவு தயக்கம், கூச்சம் அவருக்கு.
Advertisement
பொது அறிவு கூட அதிகம் இல்லாதவர் பெரிய படிப்பு படித்த மருத்துவரிடம் என்ன பேசுவதென தெரியாமல் தவிக்க அவரை பார்த்த இலக்கியாவிற்கு மனம் நெருடியது. வரதராஜனுக்கு அந்த கவலை இல்லை.
Advertisement
வீட்டினரை பற்றி, வீடு கட்டியது பற்றி மிகவும் எளிமையான பேச்சை எடுத்து அவரை தன்னை விட்டு நகரவே விடவில்லை. கை கட்டி தன்னிடம் பேசியவர் கையை எடுத்துவிட்டு சாதாரணமாக, சம்மந்தியாக நிற்க வைத்தார்.
“நகை எல்லாம் போடலாம்ல?” அவள் வந்த பொழுது தன்னிடம் கொடுத்த நகைப்பெட்டியை கையில் கொண்டு வந்தார் பானு, உடன் பரிமளாவும்.
நேற்றே புடவையோடு பெரிய செட் நகை ஒன்றை கொடுத்து வந்தார். ஆனால் அதனை அணியாமல் அவள் தந்தை தனக்காக சேமித்து வைத்திருந்த மூன்று பவுன் சிறிய டாலர் செயின் ஒன்றை மட்டுமே அணிந்திருந்தாள்.
Advertisement
“இல்ல மேடம் வேணாம். எனக்கு இதுவே போதும்” தடுத்தாள் தயக்கமாக.
“என்னது மேடம் ஆஹ்? அத்தை சொல்லு” ஆணையிட்டார் பானு, “ம்ம் என்னையும் சித்தி சொல்லணும்” இந்த செல்ல கட்டளை பரிமளாவிடமிருந்து.
சரி என தலை ஆட்டி அவர் அணிவிக்க வந்த நகையை தடுத்தாள், “இல்ல எனக்கு இதுவே போதும்” என்று.
“ரொம்ப சிம்பிளா இருக்கும் ம்மா” வலுக்கட்டாயமாக அணிவித்து விட அதன் பிறகு தான் அவள் அணிந்திருந்த பச்சை வண்ண பட்டிற்கும், அடர் வாடாமல்லி நிற ரவிக்கைக்கு எடுப்பாக இருந்தது.
அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களோடு இரண்டு கைகளிலும் மூன்று மூன்று தங்க வளையல்களை அணிவித்து விட்டார் பரிமளா.
அங்கு வந்த ப்ரியாவும் தன் பங்கிற்கு அவள் வாங்கி வந்த வைர மோதிரத்தம் போட்டுவிட இரண்டே நிமிடத்தில் தங்கமும் வைரமும் நிரம்பி ஜொலித்தாள் கயல்விழியாள்.
ஆரம்பத்தில் வீட்டினர் எவருக்கும் இலக்கியாவை அதிகம் பிடிக்கவில்லை, அதுவும் தங்கள் வீட்டு பிள்ளை மேல் பலி போடுபவளை பிடிக்கவில்லை.
நேற்று அவளை வேண்டா வெறுப்பாக பார்க்க சென்ற பொழுது முகம் சுருங்கி கண்ணீரோடு தங்களை பார்த்து கை கூப்பி அர்ஜுன் மேல் உள்ள காதலால் தான் இவ்வாறு செய்ய வேண்டிய சூழல் என பொய்யையே உண்மையாய் கூற, அவள் குணம் அறிந்து மகன் வாழ்க்கை என அனைத்தையும் யோசித்து நடப்பவற்றை முழு மனதாக ஏற்க துணிந்துவிட்டனர்.
அஞ்சுஸ்ரீ தந்தையின் நடத்தையும், அஞ்சுஸ்ரீ சொற்களும் அவர்களை முழுதாய் இலக்கியா பக்கம் தள்ளியது மறக்க முடியாத உண்மை.
அவளோடு சிறிய சிறிய பேச்சை வளர்த்து பிரியா இருக்க, அதற்கு ஏதுவாக இளைஞர்கள் அனைவரும் அங்கே சங்கமித்துவிட்டனர்.
திருமண சடங்குகள் இனிதாக நடைப்பெற மணமக்கள் ஹோம குண்டத்தின் முன்பே அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் மலர்ச்சி சிறிதும் இல்லை. அர்ஜுனுக்கோ கோவம் கோவம் கோவம் மட்டுமே.
அதுவும் அவள் மீது மட்டும். இலக்கியாவிற்கோ பயம், படபடப்பு, தவிப்பு என கலவையான உணர்வுகள். அதனுள் ஒரே நிம்மதி தன்னுடைய மனம் மொத்தமும் நிறைந்திருந்தவன் தான் தன்னுடைய கணவன் என்பது மட்டுமே.
ஆனால் அந்த காதல் கூட இனி அவனுக்கு போலியானதாக மட்டுமே தெரியும் என்ற எண்ணம் உதிக்கும் பொழுது தன்னுடைய முடிவு தவறோ என பெண்ணை நினைக்க வைத்தது.
கலங்கிய கண்களோடு தலை தாழ்த்தி அமர்த்திருந்தவள் நெஞ்சத்தினில் பொன் தாலி கணம் தெரியவும் தான் அர்ஜுனுக்கு மனைவியானது புரிந்தது.
மொத்த குடும்பமும் அர்சதை, பூக்கள் தூவி தங்கள் ஆசீர்வாதத்தை வழங்க இளையவர்கள் விசிலடித்து அவ்விடத்தை மேலும் ஆரவாரமாக்கினர்.
கண்களை மூடி தங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும், அவன் நலம் என வேண்டி இலக்கியா கை கூப்பி அமர்ந்திருந்தாள். அர்ஜுனுக்கு திருமணமான ஒரு உணர்வே இல்லை.
அவனுடைய உணர்வை எல்லாம் சேர்த்து மொத்தமாக உணர்ந்துகொண்டிருந்தாள் இலக்கியா.
அவனுக்கும் சேர்த்து இறைவனை வேண்டினாள், அவனுக்கும் சேர்த்து தங்கள் வாழ்க்கையின் பயணத்தை தன்னுடைய முயற்சியில் சரி செய்வதாக உறுதிகொண்டாள்.
அவன் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாய் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, அவன், அவன் சார்ந்த நலன் மட்டுமே இனி தன்னுடைய நலன் என்பதை உள்ள பூர்வமாக உணர்ந்து உயிர்த்தெழுந்தாள்.
அவன் கோவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் அவன் மீது கடலளவு நம்பிக்கை இருந்தது அவளுக்கு.
“வலது பக்கமா கைய கொண்டு வந்து வச்சு விடு அர்ஜுன்”
அவன் அன்னை, மகனை அதட்டி அவன் கரத்தை அவள் தலையோடு சுற்றி வந்து குங்குமத்தை நெற்றியில் வைக்க கூற அவளை நெருங்கி வருவது மட்டும் அர்ஜுனுக்கு வழியாக பட்டது.
மனைவியானவளை ஒரு முறை கூட நன்றாக பாராமல் முகத்தை தூக்கி வைத்தே அமர்ந்திருந்த அர்ஜுன் இந்த நொடி அவளை அருகில் பார்க்க நேர்ந்தது.
மிக மிக எளிமையான ஒப்பனை தான் அவளுக்கு தேவைப்பட்டது போலும் அவள் நிறத்திற்கு. கண்களில் போலியான கண் இமைகள் கூட பொருந்தாமல் அந்த கண்கள் அத்தனை அழகாய் தெரிந்தன, அந்த இதழ்களில் கூட மெல்லிய சாயம் தான்.
அவன் கை அவளை நெருங்க நெருங்க அவன் உடலையும் அவளை நோக்கி நகர்ந்து அவளுக்கான வாசனையை முகர்ந்தது. கஸ்தூரி மஞ்சள் மனம் மட்டுமே அவளிடம்.
இத்தனை இயற்கையான வாசனையை அவன் இதுவரை இயற்கையை தவிர வேறு எங்கும் அனுபவித்தது இல்லை.
அவன் அன்னை நெற்றிச்சுட்டியை ஒதுக்கிவிட தன்னுடைய மூச்சி காற்றின் வீரியத்தினால் சிவந்து போன கன்னத்தை பார்வையிட்டு நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு உடனே இடைவேளை உருவாக்கினான்.
அத்தனை வெறுப்பை வைத்திருந்த அர்ஜுனுக்கே அவர்கள் முதல் நெருக்கம் பாதிப்பை உண்டாக்க, அவன் பார்வையும் வார்த்தையும் மட்டுமே தந்த தாக்கத்தை தாண்டி அவன் நெருக்கம், சூடான மூச்சு காற்று, தன் முகத்தை அங்குலம் அங்குலமாய் சில நொடிகளில் அளவிட்ட அவன் பார்வை என பெண்ணுக்கு போதையை உண்டாக்கியது.
கண்களை இறுக்கமாக மூடியவள், சில கணங்கள் அமைதியாக அதனை தன்னுடைய மன பெட்டகத்தினுள் சேமித்தாள் பொக்கிஷமாக.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனைவிக்கு கோவமாக மெட்டி அணிவித்து, பால் பழம் உண்டு என இருவருக்கும் சடங்குகள் அனைத்தையும் முடித்து வீட்டினர் அனைவரும் மூச்சு விட்டு அமரவே காலை பத்து மணியை தாண்டியிருந்தது.
அதன் பிறகு காலை உணவை முடிக்க தான் அங்கு இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் அவள் தந்தை மணிகண்டனுக்கு.
தான் ஏதாவது சடங்கு செய்ய வேண்டுமா என தயக்கமாக ராமகிருஷ்ணனிடம் அவர் கேட்க அனைத்தையும் தாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என பெரிய மனதோடு ஓய்வெடுக்க வைத்தனர்.
மணிகண்டனுக்கு பெரிதாக சண்டங்குகள் பற்றி தெரியாது, ஆனாலும் மகளின் வாழ்க்கை அல்லவா, தந்தையாக உரிமையோடு கேட்டார்.
நேரம் வேகமாக ஓட மணமக்களை தன் வீட்டிற்கு அழைப்பதற்கு சங்கடப்பட்டு மதிய சாப்பாடோடு அனைவரிடம் விடைபெற்று மகளுக்கு தந்தையாக சில அறிவுரைகளை கொடுத்து சென்றார்.
அர்ஜுன் அவரிடம் சிறு தலை அசைபை மட்டுமே கொடுக்க இலக்கியாவிற்கு வேதனை கூடியது. தன்னுடைய ஒரே உறவு, அதுவும் தன்னுடைய தந்தை.
அவரிடம் ஒரு வார்த்தை பொய்யாக கூட பேச மாட்டானா என்ற வருத்தம் அவளுக்கு. அதை அவனிடம் காட்டிவிட தான் முடியுமா அவளால்?
இலக்கியாவின் தந்தை சென்றதும் அவன் அறைக்குள் சென்று மறைந்தவன் தான். மாலை ஆறு மணிக்கு வேறு இலகுவான உடை அணிந்து தந்தையிடம், “நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான்.
அவன் பேசுவது இலக்கியாவுக்கு சுத்தமாக புரியவில்லை. வீட்டில் தானே இருக்கிறோம் என்ற சிந்தனை. அவன் தனி வீட்டில் இருப்பான் என அவளுக்கு தெரியாது.
“வீட்டுக்கு போய் என்ன அர்ஜுன் பண்ண போற? ரெண்டு நாள் இரு இங்க” என்றார் அவன் தந்தை வரதராஜன்.
“நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் டாட்” – அர்ஜுன்
“கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட வீட்டுல இல்லாம அப்டி என்ன அங்க வேலை உனக்கு?” – பானு
“மாம் இது என்ன பொறுத்தவரை கல்யாணமே இல்லை. அதுக்கு எதுக்கு நான் இவ்ளோ முக்கியத்துவம் தரணும்?”
குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தவளை பார்த்தே கூற, அவளுக்கு மனம் வலித்தது. கண்களை மூடி வேதனையை உள் இழுத்துக்கொண்டாள் இலக்கியா.
“ரொம்ப தப்பு அர்ஜுன்” பெரியவர் ராமகிருஷ்ணன் கண்டித்தார்.
“சரி, நான் கிளம்ப போறேன் அத சொல்ல தான் வந்தேன்” என்றவன் படி ஏற,
“என்ன பானு நினைச்சிட்டு இருக்கான் உன் மகன்? அந்த பொண்ண பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறானா பாரு? இவனுக்கு கல்யாணம் பண்ணி இந்த பொண்ணோட வாழ்க்கையை தான் நாம அழிச்சிருக்கோம்” மனைவியை திட்டி தன்னுடைய ஆதங்கத்தை காட்டினார் வரதராஜன்.
தந்தை பேசியதை பற்களை கடித்து நிற்காமல் மேல் ஏறியவன் காதில் அவன் பாட்டியின் வார்த்தை கேட்டு அமைதியாக நடந்தான்.
“விடு வரதா, அவன் என்னைக்கு கிளம்ப போறேன்னு வந்து சொல்லிருக்கான்? இலக்கியாவை அனுப்பி வைக்கிறதா இருந்தா வேகமா அனுப்பி வைங்கனு சொல்லாம சொல்லிட்டு போறான்.
கல்யாணம் பண்ணி வச்சாச்சு இனி அவங்க பாடு. அவங்களே சாமாளிச்சுக்கட்டும், சந்தோசமா அனுப்பி வச்சிடலாம்” என்றார் பேரன் மனம் படித்து.
இலக்கியா ஏற்கனவே தன்னுடைய பையை திறக்காமலே வைத்திருக்க அவளை அவனோடு கிளப்புவதில் அவர்களுக்கு சிரமமாக இருக்கவில்லை.
“ஒரு வாரம் லீவு அப்ளை பண்ண மாதிரி சொல்லி வச்சிடு இலக்கியா, அவன் ஆபீஸ் போனாலும் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்றம் ஹாஸ்பிடல் வா. முக்கியமா வாரம் ஒருமுறை வீட்டுக்கு இங்க வரணும். உன் வீட்டுக்காரன் கண்டிப்பா வருவான். இனிமேல் ரொம்ப லேட்டா நைட் எல்லாம் வேலைக்கு போக வேணாம்” – பானு
“ஏன் வேலைக்கே கூட போக வேணாம்” – பரிமளா.
“ம்ம்ம் அண்ணி சொல்றதும் சரி தான். உனக்கு விருப்பம் இல்லனா போக வேணாம்” என்றார் அவள் மாமியார்.
சிரித்தாள், “சரி அத்தை, சரி சித்தி” என்று.
“அப்றம் அவன் முரடன் தான், ஆனா ஈஸியா சமாளிக்கலாம்னு அத்தை சொல்லுவாங்க. அது அவங்களுக்கு தான் ஈஸியான விஷயம். என்கிட்ட இதுவரை அவன் அடங்குனதே இல்லை. கொஞ்சம் பாத்து இரு ம்மா சரியா?” என்றார் பானு அக்கறையாக.
“அண்ணி நீங்களே அவளை பயமுறுத்தாதீங்க. இலக்கியா ஆம்பளைங்க நம்ம பக்கம் சாயிர வர தான் கஷ்டம். அப்றம் ஈஸியா உன் பக்கம் எல்லாம் உன் கண்ண பாத்தே வருவாங்க” என்றார் பரிமளா எல்லாம் அறிந்த வித்தகர் போல்.
பானுவும் சிரித்துவிட்டார், “ஆமா மருமகளே, சக்கரவர்த்தி வீட்டு வாரிசு எல்லாரும் மத்தவங்களுக்கு தான் அய்யனார். நமக்கு எப்பவும் மன்மதன் தான். பாரு அங்க என் மாமாவை” ராமகிருஷ்ணனை காட்டினார்.
ராதா ஏதோ கூற தலையை தலையை ஆட் டினார் தவிர வேறு பேசவில்லை, “அப்றம் உன் மாமா… விறைப்பா சுத்துனார் கல்யாணம் ஆன புதுசுல. இப்ப பானுமா தவற வேற வார்த்தை வராது” என்றவருக்கு அத்தனை பெருமை தன் கணவரை நினைத்து.
அரை மணி நேரத்தில் அர்ஜுன் தான் கொண்டு வந்த சிறிய பையோடு கீழே வர இலக்கியா இன்னும் அதே ஒப்பனை, புடவையோடு தான் அவனுக்காக காத்திருந்தாள்.
அவளை கண்டுகொள்ளாமல் வாகனத்தினுள் ஏற அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று கணவனோடு பயணித்தாள். இருவருக்குமான முதல் பயணம் அமைதி மட்டுமே நிறைந்திருக்க அந்த அமைதி கூட அவனுடைய வாசனையோடு பயணித்த பொழுது தேனாய் தித்தித்தது.
ஒரு மணி நேர நீண்ட பயணத்திற்கு பிறகு நாற்பது மாடி கட்டிடம் ஒன்றை இருவரும் அடைந்திருக்க அதனை பார்த்த இலக்கியாவிற்கு, அந்த கட்டிடத்தின் அழகு வெளியிலேயே தெரிந்தது.
அத்தனை நேர்த்தியாக, சுத்தமாக பலத்த பாதுகாப்போடு அமைத்திருந்தது அந்த அபார்ட்மெண்ட். பெரிய பெரிய ஆட்கள் மட்டுமே வசிக்கும் இல்லம் போல் காட்சி தந்தாலும் அவன் அழைத்து வந்த அவனுடைய இல்லம் மிகவும் எளிமையாக சுத்தமாக இருந்தது.
கதவினை திறக்க சாவி இல்லை, அவன் கை ரேகை வைத்து பயோமெட்ரிக் லாக் பொருத்தியிருந்தான். அதோடு எண்களை அலுத்துவதற்கான வசதியும் இருந்தது.
அர்ஜுன் கடினமின்றி கதவை தன் விரலை வைத்து நொடியில் திறந்திட, அதை பார்த்ததும் தான் இனி சென்று வர அந்த கடவு எண்ணாவது வேண்டுமே என யோசித்து அவனை தொடர்ந்து வீட்டினுள் வர, அவனோ அமைதியாக தன்னுடைய அறைக்கு மேல் ஏறி சென்றுவிட்டான்.
இல்லம் பார்க்க மிகவும் விசாலமாக இருந்தது. பெரிய வரவேற்பறை, சமையலறை, ஒரு ஆபீஸ் ரூம் இருக்க அதன் ஒரு பக்கம் மூலையில் தனியாக அலுவலக அறை மற்றும் பாத்ரூம் ஒன்றும் இருக்கும். வரவேற்பறையினுள் ஓரத்திலே மாடி ஏறி செல்வது போல் வளைந்த படிக்கட்டுகள்.
அதன் மேல் ஒரே ஒரு நல்ல விசாலமான அறை. அவனுக்காக.
அந்த அறையினுள்ளே பால்கனி, ஜிம் உபகரணங்கள் எல்லாம் ஒரு ஓரத்தில் இருக்கும். மொத்த வீட்டினையும் வளைத்து அந்த ஒரு அறையே இருக்க தனியாக இருந்த அர்ஜுனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
அவன் வருவான் வருவான் என காத்திருந்த இலக்கியாவிற்கு நேரம் சென்றதே தவிர என்ன செய்வதென்றே வழி தெரியவில்லை.
உடையை மாற்றாமல் சோபாவில் அமர்த்திருந்தவள் கண்கள் இதோடு இருபதாவது முறையாக அந்த வீட்டை அளந்தது, அமைதியும் சோர்வும் உறக்கத்தையும் ஒரு பக்கம் கொடுக்க முயன்று கண்களை விழித்து வைத்திருந்தாள்.
இரவு ஒன்பது மணிக்கு படிகளில் இருந்து மெதுவாக வந்தவன், கண் அகற்றாமல் பெண்ணவளின் ஒவ்வொரு அணுவையும் பார்ப்பது போல் அத்தனை நுனியமாக கவனித்தான்.
இறுதி இரண்டு படிகளில் வந்தவன் அப்படியே நின்று அதன் மாடிப்படி கம்பியில் கை வைத்து அவள் உடை, அணிகலன், கை, கழுத்து, காது பார்த்து சன்னமான சிரிப்போடு புருவத்தை தூக்கி இகழ்ச்சியாக சிரிக்க இலக்கியாவிற்கு இதயம் நொறுங்கிவிட்டது.
‘பணத்திற்காக தானே வந்தாய்? நீ நினைத்ததை முதல் நாளிலே அடைந்துவிட்டாயே’ என்ற இளக்காரமாக அவன் பார்வை, பெண்ணவளை அடித்து சாய்த்திருந்தது.
காதலின் முதல் அடியை இலக்கியாவிற்கு வார்த்தை இல்லாமல் பார்வையாலே கொடுத்திருந்தான் அவளது மருத்துவன்.
error: Content is protected !!