Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அருவங்காடு

அருவங்காடு – 1

ஜனவரி 20.. 2002

காலை ஒன்பது மணி பாலசுப்ரமணியர் பேருந்து,  தானிப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நீண்ட ஒலி எழுப்பிக் கிளம்பியது.



Advertisement

எப்படியோ உட்கார இடம் கிடைத்து விட்டது. பெட்ரோல் வாசம் நாசியில் நுழைந்தது. வழக்கமாக அதிகம் பிடித்த வாசனை.. இன்றோ லேசாக குமட்டத்துவங்கியதை போல் இருந்தது. 

‘மூன்றாவது மாதம் ஆரம்பித்த உடனே குமட்டத்துவங்கி விடுமா?’

Advertisement

Advertisement

மனதிற்குள் தோன்றும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லத்தான் யாருமில்லை. மெதுவாக வயிற்றை புடவையின் மீது தடவினாள் இந்த்ரா. 

அருகில் வந்து அமர்ந்த வயதான பாட்டியின் மீது கலவையான வாசம் எழுந்தது. வெற்றிலையும், மல்லாட்டையும் கலந்து, மண்வாசத்துக்கு கூடுதலாக சிவப்பு சாயம் பூசியது போல் மணத்தது. 

Advertisement

“ஒம்போது மணிக்கு டான்னு எடுத்துருவான்..ஆனா கொண்டு போய் வுடறதுக்கு மட்டும் லேட்டாக்குவான்.. பஸ் ரொம்பி கீழ வழிஞ்சா கூட இவனுங்களுக்கு மனசு நெறையாது..” பாட்டி முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி  அவளிடம் மெதுவாக தான் சொன்னார். ஆனால் பேருந்து முழுதும் அது கேட்டது. கண்டக்டர் திரும்பி பாட்டியை முறைத்தார்.

லேசாக சிரித்து தலையை ஆட்டி ஆமோதித்தாள் இந்த்ரா. 

அவளின் முகத்தை திரும்பி நன்றாக பார்த்து, கழுத்தை பார்த்தார் பாட்டி. 

“மாசமா இருக்கியா.. எத்தனாவுது.. மூணாவதா?” 

ஒரு நொடியில் எடைப்போட்டு, கண்களாலேயே அளவெடுத்து கச்சிதமாக உண்மையை சொன்ன பாட்டியை விழிவிரித்து ஆச்சர்யமாக பார்த்து,

“ஆமா பாட்டி..” 

“வாத்தியாரம்மாவா..புதுசா வநதுருக்கியா..? இதுக்கு முன்ன இந்த ரூட்ல பாத்தது இல்லையே.. திர்ணாமலையா?” 

“திருண்ணாமலை தான். ஆனா இப்போ தானிப்பாடில இருக்கேன்.நான் வாத்தியார் இல்ல.. சுய உதவிக் குழுவுக்கு கணக்கு எழுத வந்துருக்கேன் பாட்டி.” 

“ஆங்.‌‌.. அப்டி சொல்லு.. எங்க போற..?” 

“அருவங்காட்டுக்கு” 

அவள் சொன்னதும் பாட்டியின் புருவம் மேலே உயர்ந்தது. 

“எம்மா.. முன்ன பின்ன போயிருக்கியா.. அங்க யாரை தெரியும்..” 

“தெரியும் பாட்டி. சொல்லித்தான் அனுப்பிருக்காங்க. ஃபாரஸ்ட்காரர் வீடு தான் நான்..ஒன்னும் பயமில்ல” 

“பாரஸ்ட்கார் வூடா…. மணவாளன் சாருக்கு நீ இன்னா வேணும்..” 

“மருமக பாட்டி….” 

“அப்படியா.. புதுசா கல்யாணம் கட்டிக்கினு வந்துருக்கியா..பரவால்ல.. கட்சிக்கார் இல்ல..அதான் படிச்ச மருமகளா புடிச்சாந்துருக்கார்..” 

‘ஹ்ம்ம்..பிடித்து தான் வந்திருக்கிறார்கள். இந்த திருமணம்..அதுவும் இருபத்தோரு வயதில்.. அதற்குள் வயிற்றில் குழந்தை.’

‘குயிலே போ.. போ.. இனி நான்தானே..’ 

 பேருந்தில் பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. கண்களை மூடி  பின்னால் சாய்ந்தமர்நதாள்.

ஆறு மாதத்திற்கு முந்தைய நாள் நினைவில் ஆடியது..

ஜூலை 13. 2001

வழக்கம்போல் கணினி படிப்பிற்காக அன்று காலையிலேயே கிளம்பி இருந்தாள் இந்த்ரா. 

அப்பாவுக்கு காலை மருந்தும், மதியம் மருந்தும் எடுத்து வைத்து விட்டு  வந்திருந்தாள். 

முன்பென்றால் அப்பாவே வண்டியில் அழைத்துச் சென்று, கூட்டி வந்து விடுவார். இரண்டு வருடங்களுக்கு முன் அவளின் அம்மா  திடீரென்று மாரடைப்பால் இறந்ததும் அவள் அப்பாவிற்கு அந்த  அதிர்ச்சியில் மூளையில் ரத்தம் உறைந்தது. மின்சார வாரியத்தில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு, அதற்கான சிகிச்சையில் இருப்பதால் இருசக்கர வாகனம் ஓட்டுவதில்லை. 

இரண்டு கிலோ மீட்டர் தினமும் நடைப்பயணம் தான். 

அன்று என்னவோ அவள் மனம் படபடவென்று தான் இருந்தது. விரும்பத்தகாதது ஏதோ நிகழ்வதை போல் இதயம் தடதடத்தது.

சிறிது நேரத்திலேயே அவள் நினைத்தது போல், அவளை வரவேற்பறையில்  அழைப்பதாக தகவல் வர, யோசனையுடன் கணினி ஆசிரியரிடம்  அனுமதிப் பெற்று வந்தாள். 

நான்கைந்து கரை வேட்டிகள் அங்கு நின்றிருந்தனர். 

பதட்டம் அதிகமாகியது. அதில் தெரிந்த ஒரே முகம் மணவாளன் மட்டுமே. 

கையில் அன்றைய தினசரி பத்திரிக்கை. அவரது பெரிய மீசையை முறுக்கி விட்டு, சிவந்த கண்களுடன் அவளை நோக்கி வந்தார். 

“ஆனந்தன் பாண்டிச்சேரி ஜிப்மர்ல சாவப் பிழைக்க கிடக்கிறான் மா.. நேத்து நைட் விஷம் குடிச்சிட்டு இருக்கான்… லெட்டர் வேற எழுதி வச்சிருக்கான்..நீ கிடைக்கலன்னு தான் சாகறதா எழுதிருக்கான்.. போலீஸ் கேஸ் ஆகி பேப்பர்லயே வந்துருச்சு. உங்கப்பா பேர் கூட இதுல இருக்கு..” 

தூக்கி வாரிப்போட்டது. கைகால் நடுங்கியது. அப்பா, ராஜப்பாண்டியன்  பெயர் திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில்,  ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இலவசமாக அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் தந்ததற்காக கடவுள் என்று போற்றப்படும் பெயர். 

அவர் பெயர் தினசரியில் வந்து, தன்னால் கெட்டுப்போக போகிறது என்றதும் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 

அவர்களோ, ஆனந்தனுக்காக தான் அவள் கண்ணீர் வடிக்கிறாள் என்று நினைத்தனர். 

அவள் நினைவோ அப்பா, அப்பா என்று தான் துடித்தது. அந்த வயதில் தினசரியை வாங்கி அதில் என்ன போட்டிருக்கிறது என்று விசாரிக்க கூட தோன்றவில்லை.

விவரம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தாள் என்று தான் அவளின் பெரியப்பா மகன் அவளை அந்த கணினி பயிற்சியில் சேர்த்து விட்டது. மூன்று வருடப்பயிற்சி அது. முடிய இன்னும் ஆறு மாதம் தான். வீட்டில் இருந்தே ஏற்கனவே பிபிஏ தபால் வழியில் முடித்து விட்டாள்… இப்போது எம்பிஏவும் தபால் வழியில் படித்துக் கொண்டே கணினி படிப்பும் படிக்கிறாள்.

ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி வாங்கி விடுவாள், அப்போது  அதிக பரபரப்பை உண்டாக்கிய தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பில் சேர்ந்துவிடுவாள் என்று தான் அவள் வீட்டில் படிக்க வைக்கிறார்கள்.. 

“என்னம்மா அழுதுட்டே நிக்கற.. நீ உடனே எங்களோட கிளம்பு.. நீ வந்து சொன்னா தான் போலீஸ் கேஸ் க்ளோஸ் பண்ணுவாங்க.. நம்ம தோழர் அபிலாஷ் எல்லாத்தையும் பாத்துப்பார்..” அருகில் நின்ற கருப்புக் கோட்டை காண்பித்தார். 

மருண்ட பார்வையுடன் சரியென்று கிளம்பினாள். அதுதான் அவளின் முதல் தப்பு.. அறியாத பிழை இல்லை. அறிந்தே அவள் தலையெழுத்தை அவளே அழித்து புதிதாக எழுதிக் கொண்ட விதிப்பிழை. 

அவர்களுடன் சென்று காவல்துறைக்கு பதில் அளித்து விட்டு உடனே வந்து விடலாம் என்று தான் நினைத்தாள். பாண்டிக்கு மூன்று மணிநேரம் ஆகும் என்று அவளுக்கு தெரியாது. சிறு வயதில் போயிருக்கிறாள்.. ஆனால் இப்போது எதுவும் நினைவில் இல்லை.

உடனே காவல்துறையில் சொல்லி அப்பாவின் பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..அது மட்டுமே மனதில் ஓடியது.

‘ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் கதையில் வருமே.. தலைப்பு செய்தி..அதுபோல், இன்னார் மகளால் ஒருவன் விஷம் அருந்தியிருக்கிறான் என்று வந்திருக்குமோ.. இல்லை.. ராஜப்பாண்டியன் மகள் இந்த்ரா தற்கொலைக்கு தூண்டியதால் ஆனந்தன் கவலைக்கிடம்.. 

அய்யோ கடவுளே..’ பயம் நாக்கை உலர்த்தியது.. 

அம்பாஸிடர் காரில் தான் அழைத்து சென்றார்கள். ஓட்டுநரின் அருகில் இருக்கும் சீட்டில் அவள். பின்னால் நான்கு பேர். 

‘எந்த தைரியத்தில் யாரோ சிலருடன் கிளம்பி இருக்கிறோம்.?’ பாதி வழியில் தான் உரைத்தது. இப்போது யோசித்து என்ன பிரயோஜனம்? 

கையை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் அவர்கள் ரகசியமாக பேசிக் கொள்வது தெரிந்தது. துப்பட்டாவின் முனை அவள் மனம் போல் அவள் கையில் பாடுப்பட்டது. 

சாலை கண்ணுக்கு தெரியாத தூரம் நீண்டுக்கிடந்தது. குண்டும் குழியுமாக தட்டுதடுமாறி திண்டிவனம் வந்து இருந்தார்கள். அதற்கே மணி பனிரெண்டரை ஆகியிருந்தது. ‘அப்பா ஒன்றரைக்கு சாப்பிட வேண்டுமே..’ மீண்டும் சுற்றி சுழன்றியது அப்பாவின் நினைவுகள்.

“மாமா.. எவ்ளோ நேரம் ஆகும். அப்பாட்ட சொல்லல. சாப்பாடு வேற போய் போடனும்..” 

“இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில போய்டலாம்..” 

அவர்  மீண்டும் ரகசிய ஆலோசனையில் பரபரப்பானார். 

ஒருவழியாக பாண்டிக்கு ஒன்றரைக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள்.‌

ஆனந்தன் கிழிந்த நார் போல் படுத்திருந்தான். இந்த்ராவை விட ஐந்து வயது பெரியவன். ஒருகையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. 

“பாரும்மா.. பைத்தியம் மாதிரி பண்ணி வச்சிருக்கான். எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே உங்கப்பாக்கிட்ட பேசிருப்பேனே.. உங்கப்பா வீட்டுப் பக்கம் இனி வரக்கூடாதுன்னு சொன்னதால தான் இப்படி அவசரப்பட்டுட்டான்.” 

“ம்ம்..” பெருமூச்சுடன் சொன்னாள்.

தன்னை பார்த்து ஆனந்தன் சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்ததை அவளின் அப்பா பார்த்து விட்டார். 

‘அவன் என்ன ஒரு மாதிரி சிரிக்கிறான்.. இனி இந்த பக்கம் வர வேணாம்னு சொல்லு’ என்று தான் சொன்னார்..அதை ரேவதியிடம் சொல்லியது தான் தப்பு. ஆனந்தனை அண்ணன் என்று அழைப்பவள், அந்த பாசத்தில்  அவசரப்பட்டு சொல்லி விட்டாள்.

“அபிலாஷ் தோழர்.. இப்போ என்ன பண்ணலாம்.?” மணவாளன் கேட்டார். 

“போலீஸ் வருவாங்க.. நீ எங்க வீட்ல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதான் அவசரப்பட்டு இவர் இப்படி செஞ்சிட்டார்னு சொல்லிடும்மா..மிச்சத்தை நான் பாத்துக்கறேன்” 

“எங்க வீட்ல அப்படில்லாம் சொல்லல.. அப்பாக்கு இன்னும் எங்க விஷயமே தெரியாது.” இந்த்ரா பயத்துடன் சொன்னாள். 

“இதோ பாரும்மா. அப்படி சொன்னாதான் போலீஸ் கேஸ் க்ளோஸ் பண்ணுவாங்க. நீ சொல்லு.. அப்புறம் பாத்துக்கலாம்” 

மிரண்டு விழித்தாள் இந்த்ரா. காவலர் வந்ததும் வழக்கறிஞர் சொல்லியதைப் போல் சொன்னாள். அவர் ஏதோ எழுதிக் கொண்டார். இவளை பார்த்து தலையை ஆட்டினார். 

“வக்கீல் சார்.. நீங்க சொல்றதால தான் இத்தோட முடியுது. சீக்கிரம் ஆவுற வேலையை பாருங்க..” 

“இன்னிக்கு கல்யாணம் முடிச்சி ரெஜிஸ்டர் பண்ணிருவோம். நீங்க கேஸை முடிச்சுருங்க..” 

வெளிப்படையாகவே அதிர்ந்தாள் இந்த்ரா. வேகவேகமாக தலையை இல்லையென்று ஆட்டினாள். ஆனால் அதை யாரும் கவனித்தும் கவனிக்காதது போலவே இருந்துக் கொண்டனர். 

“மாமா‌‌.. கல்யாணம்லாம் வேணாம். என்னை அப்பாட்ட கூட்டிட்டு போய் விட்டிருங்க.” 

“அட அதெல்லாம் ஒன்னும் பயப்படாத. நாம இந்த ப்ரொஸீஜர்க்காக ரெஜிஸ்டர் மட்டும் தான் பண்ணப் போறோம்..அப்புறம் நீ வீட்டுக்கு போய்டலாம். உங்கப்பா வீட்டு பக்கம் திருநெல்வேலி ஆளுங்க இல்ல. எதாவது நாளைக்கு பிரச்சினைன்னு வந்து நின்னா 

ரெஜிஸ்டர் சர்ட்டிப்பிக்கேட் அவங்ககிட்ட காமிச்சுக்கலாம்.. அதுக்குத்தான்..கவலைப்படாத” 

பெயர் தான் நெல்லை ஆட்கள்.. ஆனால் ராஜப்பாண்டியன் திருவண்ணாமலை வந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது. 

உடன் வேலை பார்த்த மீனாவை பார்த்ததும் ராஜப்பாண்டியனுக்கு பிடித்ததால் அவரது வீட்டினரை வற்புறுத்தி திருமணம் செய்து   திருவண்ணாமலையிலேயே செட்டில் ஆகிவிட்டார். 

பெரிய மீசை.. அகன்ற முகம், அதிர்ந்த பேச்சு.. எதற்கெடுத்தாலும் அரிவாள் வெட்டு என்று நெல்லை ஆட்கள் மீது ஒரு பிம்பத்தை பதித்து விட்டது திரைப்படத்துறை. அதுவும் பாண்டியன் போன்ற துணைப் பெயர்கள் அவர்களை வன்முறையாளர்களாகவே சித்தரித்து வைத்து இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் நேர் எதிர், ராஜப்பாண்டியன். அதிர்ந்துக் கூட பேசாதவர். ஆஜானுபாகுவான ஆள் என்றாலும் பார்த்ததுமே பயத்திற்கு பதில் மரியாதை வரும். 

அவரை காரணம் காட்டி ஒரு  அவசர கல்யாணம் செய்கிறார்கள். முட்டாள்தனமாக இங்கு வந்து மாட்டிக் கொண்ட அறியாமை அவளின் இதயத்தில் அறைந்தது. இப்போது போல் அலைபேசி வசதிகள் இருந்திருந்தால் தகவல் தந்திருக்கலாம். ‘எங்கு போய் தொலைப்பேசியை தேடுவது..?’ 

சுற்றுமுற்றும் பார்த்தாள். 

அவள் தேடுவதின் காரணத்தை அவர்கள் அறிந்தார்கள்.‌ உடனே,

“சரி சரி ஆனந்தா.. கிளம்பு. நம்ம நேரா ரெஜிஸ்டர் ஆபிஸ் போறோம்.” மணவாளன் சொல்லி துரிதகதியில் அத்தனை பேரும் கிளம்பினார்கள்.. 

ஆனந்தனை பார்த்தாள். அத்தனைக்கும் காரணமானவன் அவளை பார்ப்பதை கவனமாக தவிர்த்தான். எதுவும் பேசாமல் இன்னொரு காரில் அவர்கள் இருவரும் மணவாளனோடு திருவண்ணாமலை நோக்கி பயணமானார்கள். ஆனந்தனை திரும்பி திரும்பி பார்த்தாள். அவன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

இருவருக்கும் அப்படி ஒன்றும் உருகி வழியும் காதலில்லை. சிறு வயதில் இருவரும் எதிரெதிர் வீடு. அவர்கள் பட்டுப்புடவை தறி வைத்து, வீட்டிலேயே திருமண புடவையும் விற்று வந்தார்கள். ஆனந்தனின் அம்மாவுக்கு ஏற்பட்ட தீராத வியாதி அத்தனை சொத்தையும் மெல்ல கரைத்தது. ஆனந்தனின் அம்மாவின் தந்தை ஓய்வுப்பெற்ற காட்டிலாகா அதிகாரி.. அவர் பெயரில் இருந்த சொத்துக்களை மகளுக்காக விட்டுக் கொடுத்தார். ஐந்து பிள்ளைகளை பெற்ற மகராசி அற்ப ஆயுளில் போய் சேர்ந்தார்.. அந்த கவலையிலேயே ஆனந்தனின் தாத்தா போய் விட்டார்.

 

ஆனந்தன் உடன் பிறந்த இரண்டு பெண்கள் அவர் இருக்கும்போதே திருமணம் ஆகி சென்றிருந்தார்கள். மீதி சொத்து எப்படி கரைந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மணவாளன் அதன்பின் அரசியலில் சேர்ந்துக் கொண்டார். ஆண்கள் இருவரும் அவருடன் இருக்க, கடைக்குட்டி அமரா, விடுதியில் தங்கி படித்தாள். அவர்களும் திருவண்ணாமலையில் இருந்து தானிப்பாடி குடிப்பெயர்ந்தார்கள். 

நீண்ட நாட்களுக்கு பின் இவள் அம்மா இறப்பிற்கு வந்திருந்தான் ஆனந்தன். அப்போது ஏற்பட்ட பழக்கம். இவளும் அம்மாவை இழந்திருந்ததால் அவன் மேல் வந்த கழிவிரக்கம். அவனுக்கு இந்த்ராவை, அவளின் இலகுவான மனத்தை கரைக்க பெரிய கம்ப சூத்திரம் தேவைப்படவில்லை. 

மீனா இறந்ததும் அவள் அக்காவின் திருமணத்திற்கு அனைத்து வேலைகளையும் அவனே செய்ய, அவள் அப்பாவை வேலூர் சிஎம்சிக்கு அழைத்து செல்ல என, இந்த்ரா அக்காவின் உதவியாளனாகவே அவன் மாறிப்போனான். 

இந்த்ராவின் அக்கா திருமணம் ஆகி சென்றதும், இவளும் ராஜப்பாண்டியனும் மட்டும் வீட்டில் இருக்க, ஆனந்தனுக்கு வசதியாக போயிற்று. 

ராஜப்பாண்டியனும் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்தார். பாலை பூனை மட்டுமா அருந்தும்..? பாம்பும் அருந்தும் என்று தெரியாமல் அவனை வீட்டில் விட்டார். சில மாதங்களில் கையில் ஒரு வாழ்த்து அட்டையுடன் கணினி பயிற்சி சென்று வரும் வழியில் அவளை மடக்கி அழுதான் ஆனந்தன். 

“அம்மா இல்லாம அப்பா கட்சி, குடின்னு வீட்டை கவனிக்கிறது இல்ல.. அமரா பாவம்.. நாலு வயசிலேயே அம்மாவை இழந்துட்டு இப்ப ஹாஸ்டல்ல இருக்கா.. வர்ற வருமானம் யாருக்கும் பத்தல..அதனால் என்னாலயும் படிக்க முடியல.. கிடைச்ச வேலைல போய்க்கிட்டு இருக்கேன்.. எனக்குன்னு எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாத நிலை தான். எனக்குலாம் கல்யாணம் ஆகாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. உன்னை திரும்ப பாக்கற வரை.. உன்னை சின்ன வயசில் இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும்..இப்ப நீயில்லாம நான் வாழ முடியாத நிலை. உன்னை லவ் பண்றேன்.. ஏத்துப்பியா?” 

இந்த்ராவால் எதுவும் சொல்ல முடியவில்லை.

இது காதலா.. இல்லை அனுதாபமா.. வயதினால் வரும் இனக்கவர்ச்சியா.. இருபது வயதில் ஒன்றும் புரியவில்லை. பிடித்திருக்கிறதா.. பிடிக்கவில்லையா என்றோ, நாளை வேலை கிடைத்தால் தான் எந்த அளவு உயர்ந்த நிலைக்கு போவோம் என்றெல்லாம் அவளுக்கு யோசிக்க தோன்றவில்லை. அவன் மேலிருந்த பரிதாப உணர்ச்சியில் மையமாக அவன் காதலை ஏற்றுக் கொண்டாள். ஆனால் நெருக்கமான பழக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.. 

அம்மா இருந்தவரை பெற்றோர் தான் அவள் உலகம். அவளின் பெரியப்பா மகன்கள் இருவரும் அவளுக்கு பிடித்தமானவர்கள். மற்றபடி எந்த உறவிடமும் அவள் ஒட்டி உறவாடவில்லை. அதனாலேயே அவளின் அம்மா இறந்த பிறகு யாரும் அவள் மேல் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் சகோதரர்களும் வேலை என்று வெளி மாநிலம் செல்ல, யாரிடமும் அவள் எந்த அறிவுரையும் கேட்கவில்லை. 

நெருங்கிய தோழி ரேவதி மட்டுமே. அவளுக்கு மட்டும் உலகம் தெரிந்ததா.. அதுவும் அந்த சிற்றூரில். இப்போதுதான் திருவண்ணாமலை பெரிய ஊராக அறியப்பட்டு கூட்டம் பௌர்ணமியில் அங்கு குவிகிறது. ரேவதியும் ஆனந்தனின் பாசமழையில் அவனின் உடன்பிறவா தங்கை ஆகிவிட்டாள்.

அதனால் அவர்களின் காதலுக்கு அவள் எப்போதும் விசுவாச காற்றை விசிறும் காத்தாடியானாள். 

அப்படியே போய்க்கொண்டிருந்த போதுதான் இந்த நாளும் வந்து சேர்ந்து இருக்கிறது.

திருவண்ணாமலை வர நாலரை ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் அலுவலகம் முடியும் நேரம். அப்போது திருமணப்பதிவு, நிலப்பத்திர பதிவு எல்லாமே ஒரே இடத்தில் சிறிய அலுவலகத்தில், தாலுகா அலுவலகத்தினுள் இருந்தது. கூட்டம் நிரம்பி வழிய, இவளை அழைத்து வந்த மணவாளன், ரெஜிஸ்டரரிடம் பேசிவிட்டு அரை மணி நேரத்தில் இவர்களின் பதிவு திருமணத்தை முடித்து விட்டார். தாலி மட்டும் கட்டவில்லை. கையெழுத்திட்டு சட்டப்படி தம்பதியாயினர்..

அதற்கான ஆவணத்தை அவர்கள் முன்னரே ஏற்பாடு செய்திருந்தது கூட அவள் அறிந்திருக்கவில்லை.

மனமேயில்லாமல் வெளியில் வந்தாள். சமீபமாக வந்த அலைபாயுதே படம் ஞாபகம் வந்தது. திருமணம் முடிந்ததும் வீட்டில் சொல்லாமல் இருப்பவர்களின் விஷயம் தெரிந்ததும் வரும் பிரச்சினைகள் கண்முன் வந்தது. பெருமூச்சுடன்  பயம் வந்தது. அண்ணன்களின் முகமும், அப்பாவின் முகமும் ஞாபகம் வந்தது. இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது தனக்கு..? தன்னை நொந்துக்கொண்டாள்.

‘சரி வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம்.. அப்பாவிடம் என்ன காரணம் சொல்வது? மதியம் வரவில்லையென்றதும் கணினி மையத்திற்கு கேட்டிருப்பார்களோ..’ பயத்தில் உதறியது அவளுக்கு..

“மாமா.. வீட்டுக்கு போகவா?” 

“அது வந்து மா.. அப்பாவுக்கு தகவல் தெரிஞ்சிடுச்சு போல.. பேப்பர்ல யாரோ பாத்துட்டு சொல்லிட்டாங்களாம். நெட் சென்டருக்கு போய் கேட்டாங்க போல.. அங்கேயும் நீ என்னோட வந்ததை சொல்லிட்டாங்களாம்.. இப்போ உங்க அக்கா, தாய்மாமாங்க, சித்தப்பா பெரியப்பாலாம் உங்க ரெண்டு பேரையும் தேடி வராங்க. அவங்கள்ட்ட இப்போ கல்யாணம் ஆனதை சொன்னா பெரிய பிரச்சினை ஆயிடும். அதனால் நீ இங்க இருக்க வேணாம்….  தானிப்பாடி போயிட்டு பொறுமையா நாளைக்கு காலைல நாங்களாம் போய் உங்க வீட்டில் பேசி சமாதானப்படுத்தறோம்..அப்பாவை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு..”

தலை சுற்றி மயக்கமாக வந்தது இந்த்ராவுக்கு. தடுமாறப்போனவளை தாங்கிப் பிடித்தான் ஆனந்தன். 

வீட்டிற்கு போக உபாயம் தேடினாள் இந்த்ரா. சுற்றிலும் ஆட்கள் இருப்பதை பார்த்தாள்.   கத்தி சத்தம் போட்டு  அழப்போனவளை அழுத்தி பிடித்து காரில் அமர வைத்தான் ஆனந்தன். சுற்றிலும் கட்சிக்காரர்களை பார்த்ததும் அரசு அலுவலகத்தில் கூட அவளிடம் வந்து என்னவென யாரும் கேட்கவில்லை. உதவிக்கும் யாருமில்லை. வலையை தேடிவந்து விழுந்த மீனானாள் இந்த்ரா..

அப்படியே அவளை உடனே காரில் ஏற்றி விட்டு, பத்து பேர் அவர்களின் பின்னால் கார்களில் வர அவளால் அதை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இரவு நெருங்க அவர்கள் தானிப்பாடியை அடைந்தார்கள். 

ஆனால் அதுவரை ராஜப்பாண்டியன் எங்கெங்கோ ஆட்களை அனுப்பி இந்த்ராவை தேடியிருந்தார். அவருக்கு விஷயம் தெரியவில்லை.

ராஜப்பாண்டியனிடம் இந்த்ராவின் திருமண விஷயம் தாலுகா அலுவலகத்தில் பத்திரம் எழுதுபவரால் வேண்டுமென்றே இரவுதான் சொல்லப்பட்டது. 

தனியாக இருந்த அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார். இந்த்ராவின் தாய் மாமன்களுக்கு வீட்டின் அருகில் இருப்பவர்களால் தகவல் அனுப்பப்பட அவர்கள் வந்து இருந்தனர். காரில் தஞ்சையில் இருந்து இந்த்ராவின் அக்கா வந்துக் கொண்டிருக்க, இடி விழுந்தது போல் துடித்த ராஜப்பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது எதுவும் தெரியாமல் எப்படியும் தகவல் தெரிந்தால் அப்பா தன்னை தேடி வருவார் என்று நம்பிக்கையில் இருந்தாள் அவள். எப்படியும் உண்மையை சொன்னால் அவளை மன்னித்து விடுவார் என்று நினைத்து அவரை எதிர்ப்பார்த்தாள். 

மணவாளன் அதற்குள் மாங்கல்யம் வாங்கி வர சொல்லி அவரின் நண்பர் வீட்டில் இரவு பத்து மணிக்கு தெரிந்தவர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அமரா பத்தாவது படித்துக் கொண்டு இருந்தாள். 

அவள் விடுதியில் இருந்து வந்திருந்தாள். 

அவள் இந்த்ராவை அழைத்துக் கொண்டு மணவாளன் நண்பர் வீட்டுக்கு வந்தாள்.‌ திருமணம் பற்றி தெரியாதவள் அப்பாவின் நினைவிலேயே நடந்தாள்‌.

அவர்களின் வீட்டிற்கு முன் இருந்த பெரிய பள்ளத்தில் இந்த்ரா கால் வழுக்கி கீழே விழுந்தாள். கால் முழுதும் சிராய்த்து ரத்தம் வந்தது. அவளின் தலைவிதியை ஏதோ ஒரு ஆபத்தாக முன்பே உணர்த்தியது பிரபஞ்சம். அவளுக்கு தான் அது ஒன்றும் பிடிபடவில்லை. எப்படியும் அப்பா, அக்கா வந்து தன்னை அழைத்து சென்று விடுவார்கள் என்று நம்பி அந்த வீட்டில் நுழைந்தாள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!