Skip to content
Post Views: 4,853
அருந்ததி தோழிகளுடன் சேர்ந்து தங்கியிருக்கும் வீடு, தனி வீடு. மேலே கீழே என இரண்டு வீடுகள் கொண்டது. மேலே வீட்டின் உரிமையாளரும் கீழே இவர்களும் இருக்கிறார்கள்.
வீட்டின் உரிமையாளர் போன மாதம்தான் அமெரிக்காவில் இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றிருந்தார். மருமகளுக்கு தலைப் பிரசவம், ஆதலால் திரும்புவதற்கு ஆறு மாதமாவது ஆகும் என கூறியிருந்தார்.
மூன்று அறைகள் கொண்ட வீடு என்பதால் மூவருமே பிரைவசிக்காக தனி தனி அறைகளில் தங்கிக் கொண்டனர். அருந்ததி வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே காயத்திரியும், வனஜாவும் இங்கு தங்கியிருக்கிறார்கள்.
வீட்டின் உரிமையாளர் நல்ல மனிதர். எந்த தொந்தரவும் இல்லை. பாதுகாப்பான இடமும்கூட என்பதால்தான் ராஜேந்திரனும் மகளை அங்கு விட்டுவிட்டு சென்றிருந்தார்.
Advertisement
வீட்டின் உரிமையாளரிடம் பேசி இவர்களது பாதுகாப்பை பற்றி அலசி ஆராய்ந்து திருப்தியானதுக்கு அப்புறம்தான் ராஜேந்திரனுக்கு நிம்மதியானது. தனி வீடு என்றதும் அவருக்கும் பயமாக இருந்தது. “பிஜி மாதிரி ஏதாவது பார்த்து தங்கிக்கிறியா மா” என்றார் மகளிடம்.
“இல்லப்பா… பிரண்ட்ஸ் ஒரு வருஷத்துக்கு மேல இங்கதான் இருக்காங்க. எனக்கும் இவங்களோட இருந்தாதான் வசதிப்பா” என அவரை சமாதானப்படுத்தியிருந்தாள். அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டனர். முடியாத நாட்களில் வெளியிலிருந்தும் ஆர்டர் செய்து சாப்பிடுவதுண்டு.
அந்த தெரு முழுவதும் பெரும்பாலும் தனி வீடாகதான் இருந்தது. பக்கத்திலும் இவர்களைப் போலவே தனி வீடுதான். அங்கே இவள் வந்த புதிதில் வாடகைக்கு என ஒரு குடும்பம் இருந்தது. அருந்ததி வந்த சில நாட்களிலேயே, அவர்கள் காலி செய்து இருந்தார்கள்.
Advertisement
இரண்டு மாதத்திற்கு முன்புதான் நான்கு பேச்சிலர்ஸ் வாடகைக்கு குடி வந்திருந்தனர். அவர்கள் படிக்கிறார்களா… வேலை செய்கிறார்களா… என எதுவும் தெரியாது. பகலில் பெரும்பாலும் அவர்களை பார்க்க முடியாது. இரவு நேரத்தில்தான் அவர்கள் வருவது. அவர்கள் வீட்டில் இருக்கும் சமயம் பாட்டும் சத்தமுமாக இருக்கும் வீடு.
Advertisement
சில சமயங்களில் விடிய விடிய மூன்று நான்கு மணிவரைகூட பாட்டு சத்தமும், அவர்களது பேச்சு சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுவும் இப்போதெல்லாம் அடிக்கடி இரவு நேரங்களில் தொந்தரவு அதிகமாக இருந்தது.
ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் பேச்சிலர்ஸ் ஜாலியா இருக்காங்க என பொறுத்துப் போன பெண்களுக்கு நாளாக ஆக எரிச்சலைத் தந்தது.
பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு அலுத்து வந்து படுப்பவர்களுக்கு அந்த இரைச்சலும், சத்தமும் பொறுக்க முடியாமல் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.
Advertisement
இதென்ன பெரிய நியூசன்ஸா இருக்கு. உழைச்சிட்டு வந்து நிம்மதியா படுக்க முடியல என புலம்ப ஆரம்பித்திருந்தனர் இவர்களுக்குள்ளேயே. ஹவுஸ் ஓனர் இருந்தால் அவரிடம் முறையிடலாம். அவரும் அமெரிக்கா சென்றிருப்பதால் பொறுமையாக நாட்களை தள்ளினார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் கொட்டம் இன்னும் அதிகமானதே ஒழிய குறையவில்லை. வேண்டுமென்றே வம்பிழுப்பது போலவும் இருந்தது பெண்களுக்கு.
இராத்திரியில் குடித்துவிட்டு பாட்டு, ஆட்டம் என சத்தம் போடுவது மட்டுமில்லாமல், குடித்த காலியான பாட்டில்களை இவர்கள் காம்பௌண்டிற்குள் எறிய ஆரம்பித்திருந்தனர்.
பெண்களுக்கு இதை வெளியில் சொல்ல முடியாத நிலை. அருந்ததிக்கு சுத்தம். எங்கே தந்தைக்கு தெரிந்தால் வேலையே வேண்டாம் என தன்னை அழைத்து சென்றுவிடுவாரோ என பயந்தாள்.
அருந்ததி எம்.எஸ்.சி முடித்ததும், மதுரையிலேயே ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்திருந்தது. இவளுடன் படித்த மற்ற தோழிகள் எல்லாம் ஐடியில் வேலைக்கு சேர, இவளுக்கு அங்கு வேலைக்கு செல்லும் எண்ணமில்லை..
அருந்ததி தனக்கு டீச்சிங் லைனில்தான் இன்ட்ரஸ்ட் இருக்கிறதென தந்தையிடம் பிடிவாதம் செய்து மதுரையில் உள்ள பள்ளியிலேயே வேலைக்கு போக ஆரம்பித்தாள்.
அங்கேயே ஒரு வருடத்திற்கு மேல் வேலை பார்த்தவள், சென்னையில் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் நல்ல சம்பளத்தில வேலை கிடைக்கவும் தந்தையை கன்வின்ஸ் செய்து சென்னைக்கு வந்திருந்தாள்.
சென்னையில் வேலை பார்ப்பதற்கு ராஜேந்திரன் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. மதுரையிலேயே வேலை பார் இல்லையென்றால் வீட்டில் இரு என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்.
படிப்பு முடிந்ததுமே திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம் என்றவரை “இரண்டு மூனு வருஷம் வேலைக்கு போறேன் ப்பா… அப்புறம் நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என பேசி சம்மதம் வாங்கி மதுரையிலேயே ஒரு பள்ளியில் வேலைக்கு சென்றிருந்தாள்.
மகள் வேலைக்காக சென்னைக்கு செல்வதில் ராஜேந்திரனுக்கு விருப்பமில்லை. “மதுரையில் இல்லாத வேலையா…? இங்கயே பார். இல்லனா கல்யாணத்த முடிச்சுடறேன்” என்றார்.
“இது சென்னையிலேயே பெஸ்ட் ஸ்கூல் ப்பா. இங்க வேலை கிடைக்கறதுலாம் சாதாரணம் இல்ல. ப்யூச்சர்ல கல்யாணம் பண்ணி வேற எங்கயாவது போனாகூட இந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு ஹெல்புல்லா இருக்கும். ப்ளீஸ் ப்பா..” என பேசியே அவரை கரைத்திருந்தாள்.
இவளுடன் ஒன்றாக எம்.எஸ்.சி படித்த காயத்திரியும் வனஜாவும் சென்னையில்தான் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறேன் என சொன்னதால் ஒரளவு அவரது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்திருந்தார்.
அருந்ததி வேலையில் சேர சென்னைக்கு வரும்போதுகூட அவரும், புவனாவும் வந்திருந்து, இவள் வேலைக்கு சேரப் போகும் பள்ளியிலிருந்து தங்கும் இடம் வரை எல்லாம் நேரில் பார்த்து. பாதுகாப்பாக இருக்கிறதா என அவர் ஆராய்ந்து திருப்தியானதற்கு அப்புறமே மகளை இங்குவிட்டு சென்றிருந்தார்.
பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஆசிரியை பணி மீது ஒரு மோகம் அருந்ததிக்கு. கல்லூரி படிப்பு முடித்து தோழிகள் எல்லாரும் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவளுக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லை.
இங்கு வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகிறது. பிரைமரி செக்ஷனில்தான் வேலை செய்கிறாள். பிள்ளைகளுடன் பிள்ளையாக நான்கு மாதம் சென்றதே தெரியவில்லை அவளுக்கு.
இது அவளுக்கு ஒரு புது உலகமாக இருந்தது. மாணவர்களின் அன்பும், பணிவும், பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் மரியாதையும் என புது உலகமாகவே உணர்ந்தாள்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையில், குட்டையான அளவில் ஒரே மதில் சுவர்தான். அந்த பக்கத்திலிருந்து ஒரே எக்கில் எகிறி, இந்த பக்கம் குதித்துவிடலாம். அந்த அளவு சிறியதாக இருந்தது.
அதேபோல் பெண்கள் தங்கியிருக்கும் படுக்கையறையின் ஜன்னல்களை திறந்தால், பேச்சிலர்ஸ் தங்கியிருந்த வீட்டின் ஹால் முழுவதுமாக தெரியும்.
அவர்களது ஜன்னல் கதவு எப்போதும் திறந்தேதான் இருக்கும், மூடவே மாட்டார்கள். அதற்கு பயந்தே இவர்கள் எப்போதும் அடைத்தே வைத்திருப்பார்கள்.
இங்கு சத்தமாக பேசினால்கூட அங்கு கேட்கும். அங்கு சத்தமாக பேசினால் இங்கு கேட்கும். அந்த அளவு இருவீடும் நெருக்கமாகதான் இருந்தது. அதிக இடைவெளியும் இல்லை இரண்டு வீட்டிற்கும். அந்த காலத்து பாணியில் கட்டியிருந்த பழமையான வீடுகள் இரண்டும். அதை அப்படியே மராமத்து செய்து வாடகைக்கு விட்டிருந்தனர் வாங்கியவர்கள்.
பேச்சிலர்ஸ் வீட்டின் ஜன்னல் கதவை அடைத்தாலாவது இவர்களுக்கு கொஞ்சம் சத்தம் குறைவாக கேட்கும். அதுவும் எப்பவும் திறந்தே இருந்ததால், அவர்களது அராத்தல் எல்லாம் இவர்களுக்கு பேரிரைச்சலாக இருந்தது.
ஒரு காலகட்டத்தில் பொறுக்க முடியாமல் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து சொல்லியிருந்தனர், பேச்சிலர்சின் அட்டகாசத்தை, அட்டூழியத்தை எல்லாம்.
அவரும் பக்கத்து வீட்டின் உரிமையாளரிடம் பேசுவதாக இவர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தார். அவர் பேசினதுபோல இவர்களுக்கு தெரியவில்லை. பேசாம நாமளே நேர்ல போய் ஏன்டா இப்படி அட்டகாசம் பண்றீங்கன்னு கேட்டுட்டு வந்துடுவமா… என ஆத்திரப்பட்டார்கள் பெண்கள்.
இதுவரை பெரிதாக அக்கம் பக்கத்தில் எந்த தொடர்பும் அவர்களுக்கு இல்லை. ஆதலால் துணிந்து எதையும் செய்ய முடியாத பயத்தில் இருந்தனர் மூவரும்.
“இவன்களோட பெரிய இம்சையா போச்சுடி. நைட்டெல்லாம் தூங்கவே விடமாட்டேன்றாங்க. தலையில இடி விழுந்த மாதிரி அவ்வளவு சத்தமா மியூசிக்க ஆன் பண்ணிடறான்க. இராத்திரி முழுக்க தூங்காததுல தலைய வேற வலிக்குது”.
“வேணா… ஹவுஸ் ஓனர்க்கு இன்னொரு தடவை கால் பண்ணி பார்க்கலாமா….?” என்றாள் வனஜா.
“ம்ம்… பேசிதான் ஆகனும். அவங்க இங்க இருந்தா… பிரச்சினையில்ல. இப்ப நமக்குதான் தொந்தரவாயிருக்கு” என்றாள் காயத்திரியும்.
அருந்ததி, “நாமளே அவன்ககிட்ட போய் பேசி பார்த்தா என்னடி…?”
“என்னன்னு பேசுவ….? நேராவா சொல்ல முடியும், இப்படி குடிச்சுட்டு சத்தம் போடாதீங்கன்னு…..? எதுக்கு நமக்கு தேவையில்லாத பிரச்சினை“ என்றாள் வனஜா.
காயத்திரி, “வேணாம்டி. நாம ஹவுஸ் ஓனர்கே போன் பண்ணிடுவோம்”.
“இந்த தெருவுல யாரையும் நமக்கு பழக்கம்கூட இல்ல. யாருகிட்டயும் சொல்லி ஹெல்பும் கேட்க முடியாது. பேசாம அவங்க ஹவுஸ் ஓனர் நம்பர் வாங்கி நாமளே அவங்ககிட்ட பேசினா என்ன…?” என்றாள் அருந்ததி.
காயத்திரி, “சரி இந்த ஒரு தடவை ஹவுஸ் ஓனருக்கே பேசி பார்ப்போம். என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு டிசைட் பண்ணுவோம்”.
“ஏய் அவர்கிட்ட இவன்க தொந்தரவு அதிகமாயிருக்குன்னு சொல்லுடி. அவர் பாட்டுக்கு நாம ஏதோ சாதாரணமா சொல்றதா எடுத்துக்க போறாரு. இல்லாட்டினா அவன்க ஹவுஸ் ஓனர் நம்பரையாவது கேட்டு வாங்கு” என்றாள் வனஜா.
“ஆமா அவள் சொல்றதுதான் கரெக்ட்” என ஆமோதித்தாள் அருந்ததியும்.
“சரிடி பேசறேன். முதல்ல அவர் போன எடுக்கனும் இருங்க ட்ரை பண்றேன்”. நல்லவேளை ஹவுஸ் ஓனர் இரண்டு ரிங்கிலேயே போனை எடுத்திருந்தார்.
காயத்திரி இங்கு நடப்பவற்றையெல்லாம் அவருக்கு விலாவரியாக எடுத்துச் சொன்னாள்.
“புரியுதுமா, நீ சொல்றது எல்லாம் எனக்கும் புரியுது. நான் அங்க இருந்தனா பிரச்சினையில்ல. எப்படி என்னன்னு தெரியாம, நீங்க அவன்ககிட்ட நேர்ல போய் எதுவும் பேச்சு வச்சுக்காதீங்கமா”.
“போன தடவை நீ போன் பண்ணும்போதே அவன்க ஹவுஸ் ஓனர்கிட்ட பேசியிருந்தேன். திரும்பவும் இப்ப கூட்டு பேசி அவன்கள கண்டிக்க சொல்றேன். நான் போன் பண்றேன்மா… அவருக்கு… நீங்க பயப்படாதீங்க” என ஆறுதல் சொல்லி வைத்துவிட்டார்.
அந்த வார விடுமுறையுடன் சேர்ந்து திங்கள் கிழமையும் அரசாங்க விடுமுறையாக இருந்ததால் அருந்ததி மதுரைக்கு வந்திருந்தாள். நேற்று மாலையில் கிளம்பி விடியற்காலை மூன்று மணி போல வந்து சேர்ந்திருந்தாள் வீட்டிற்கு.
புவனா, “அருந்ததி எழுந்துரு. டைமாகுது. குளிச்சுட்டு வந்து சாப்பிடு” என்றார் அவள் முகத்தை மூடி போர்த்திருந்த போர்வையை விலக்கி.
“ம்மா… காலையிலதான வந்தேன். ஏன் தூங்கவிடாம தொண தொணன்னு நச்சரிக்கறே. நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா…? அங்கதான் வேலைக்கு போகனும். காலையில எழுந்துக்கனும் அந்த டென்ஷன் எல்லாம். இங்க வந்தாவது நிம்மதியா தூங்க விடறியா…?”
“உங்கப்பா இப்ப வந்திடுவாரு. உன் அப்பத்தா வேற இன்னுமா தூங்கறா…? எழுந்துக்கலையான்னு கேட்டுட்டே இருக்காங்க. எழுந்து சாப்பிடுமா. காலை சாப்பாடு லேட்டா சாப்பிட்டா… அப்புறம் மதியம் சாப்பிட மாட்ட”.
தலையைத் தூக்கி தாயின் மடியில் வைத்துகொண்டு, அவரது இடுப்பை சுற்றி கையைப் போட்டு இறுக்கிக் கொண்டாள்.
“எழுந்திருடா…”
“ம்ம்… பைவ் மினட்ஸ்… ம்மா…”
“எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்தாலும், இந்த சோம்பேறிதனம் மட்டும் போக மாட்டேனுது. காலையில எழுந்துக்கறதுன்னா அவ்வளவு கஷ்டமாயிருக்கு உனக்கு” என்றார் கிண்டலாக.
கண்ணை இன்னும் திறக்காமலே புவனா கேலி செய்ததற்கு சிரித்து கொண்டு படுத்திருந்தாள்.
அவள் தலையை வருடியவாறே “வாராவாரம் ஒழுங்கா எண்ணெய் தேய்ச்சு தலைக்கு குளிக்கிறியா…?” என்றார் புவனா.
“ம்ம்…”
“எழுந்துருடா. பிரஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு. தலையில எண்ணெய் வச்சு விடறேன். தலைக்கு குளிச்சுடு”.
“ம்ம்….”
“எழுந்திருடா…”
“மதியானம் என்ன சாப்பாடு ம்மா. எனக்கு பிடிச்ச மாதிரிதான் சமைக்கனும்”.
“ஏற்கனவே எல்லாம் உனக்கு பிடிச்ச ஐட்டமாதான் செஞ்சிருக்கேன். சத்த நேரத்துல அப்பா வந்துருவாங்க. எனக்கு வேலையிருக்கு. எழுந்து வா…” என அவள் தலையை எடுத்து தலையணையில் வைத்துவிட்டு புவனா பாதியில் விட்டு வந்த சமையலை கவனிக்க எழுந்து சென்றுவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் எழுந்து பாத்ரூம் சென்று வந்த அருந்ததி சாப்பிட்டு முடித்து, புவனாவின் கையால் எண்ணெய் தேய்த்துவிட சொல்லி தலைக்கு குளித்து வந்திருந்தாள்.
மகள் தலையில் சுற்றியிருந்த துண்டை கழற்றி தலைமுடியை ஈரம் போக அழுந்த துடைத்து விட்டார் புவனா.
“என்ன சொல்லு. நீ எண்ணெய் வச்சு மசாஜ் பண்ணாதான்மா எண்ணெய் தேய்ச்சு குளிச்ச மாதிரியே இருக்கு”.
“டைமாகுதுடா. சாப்பிட வா. அப்பா உனக்காக உட்கார்ந்திருக்காங்க”
அருந்ததி முடியைக் கிளிப் போட்டு கொண்டு வந்து தந்தையுடன் சாப்பிட உட்கார்ந்தாள்.
“எத்தனை நாள்மா லீவு…?”
“மூனு நாள் ப்பா….”
“அம்மா சொன்னாளா…?”
“என்னதுப்பா…?” என தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் “அவர் எதுவும் கூறாததில், “எதுவும் சொல்லலையே ப்பா…” என்றாள்.
“உனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்மா. ஒரு நல்ல நாள் பார்த்து உன் ஜாதகத்த ஜோசியர்கிட்ட கொண்டு போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நம்ம சமூகத்த சேர்ந்தவங்க சங்கத்துலயும் உன் ஜாதகத்த பதிஞ்சு வைக்கலாம்னு இருக்கேன்”.
“கொஞ்ச நாளாகட்டுமே ப்பா. இப்ப என்ன அவசரம். இப்பதான் வேலையில சேர்ந்திருக்கேன். இன்னும் ஒரு வருஷம்கூட ஆகல. அதுக்குள்ள கல்யாணம்னா… இரண்டு வருஷமாவது ஆகட்டுமே ப்பா”.
“எல்லாம் நாம நினைக்கற மாதிரி பட்பட்னு முடிஞ்சிருமா மா. எல்லாருக்கும் ஜாதகத்தை எடுத்த உடனேவா கல்யாணம் கூடிடுது. அததுக்கு நேரம் வர வேணாமா? பார்க்க ஆரம்பிப்போம். அப்புறம் என்னன்றத பார்ப்போம். அதுவரைக்கும் நீ பாட்டுக்கும் வேலைக்கு போ” என சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டார் ராஜேந்திரன்.
“என்னமா அப்பா இப்படி சொல்றாரு… நீயாவது பேசக்கூடாதா… அவர்கிட்ட.”
“அப்பா சொல்றதும் கரெக்ட்தானேடா… சங்கத்துல ரெஜிஸ்டர்தானே பண்றாங்க. முதல் முதல் நல்ல விஷயம் ஆரம்பிக்கும்போது தடங்கல் சொல்லாதடா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும், உன் மனசுல என்ன இருக்குன்னு அப்பாகிட்ட ஓபனா சொல்லு”.
“உனக்கு பிடிச்சமாதிரி, நீ ஆசைப்படற மாதிரி மாப்பிள்ளய பார்க்கட்டும்”.
“உன் புருஷனாவது ஜாதகம்தான் பார்க்கப் போறேன்னார். நீ விட்டா இப்பவே என்னை கல்யாணம் பண்ணி துரத்திடுவ போல”
“உன் வயசுல எனக்கு கல்யாணமாகி கையில ஒன்னு, இடுப்புல ஒன்னுன்னு இருந்தேன் நான்…” என்றார் பாரிஜாதம்.
அச்சோ இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம எதையாவது சொல்லிட்டிருக்கும் என பேசாமல் சாப்பிடுவதில் கவனமானாள். அடுத்தடுத்து இருந்த நாட்களில்கூட அதைப்பற்றி ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டாள். தந்தையின் குணம் அவளுக்கு தெரிந்ததே.
இதுவரை அவர் பொறுத்திருந்ததே பெரிய விஷயம். அவர் சொல்லுவதுபோல் எல்லாம் உடனேயேவா நடந்திடப்போகுது. அப்பத்தா எப்போதும் சொல்லுவதுபோல அததுக்கு காலம் நேரம் வரவேண்டாமா… என யோசித்தவள் தந்தையின் போக்கிலேயே விட்டுவிட்டாள்.
ஆயிற்று சென்னைக்கு வந்து இரண்டு வாரம் முடிந்திருந்தது. இன்று அவளுடன் கல்லூரியில் படித்த தோழி ஒருத்திக்கு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருமணம். அதற்காக தோழிகள் மூவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ஞாயிறு வேறு ஆதலால் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமில்லை. முகூர்த்தமும் 9 மணிக்கு மேல் இருந்ததால் நிதானமாகவே கிளம்பினர்.
அருந்ததி மயில் கழுத்து நிற பச்சையில் பட்டுச்சேலை கட்டியிருந்தாள். அதற்கு தகுந்தாற்போல அணிகலன்களையும் அணிந்திருந்தாள்.
முடியை தளரபின்னி இருபக்கமும் கழுத்துக்கு கீழ் தொங்குமாறு குண்டுமல்லியை சூடியிருந்தாள். கண்களை உறுத்தாத அணிமணிகளுடன், அளவான ஒப்பனையில் பார்ப்பதற்கு அழகோவியமாக காட்சி தந்தாள்.
தோழிகளும் புடவையில் அழகாக ரெடியாகி வந்தவுடன் கேப் புக் செய்து கோவிலுக்கு புறப்பட்டனர்.
அருந்ததி, “பசி வேற வயித்தை கிள்ளுதுடி. அப்பவே சாப்பிட்டு கிளம்பலாம்னு சொன்னேன். கேட்டீங்களா…?”
வனஜா, “எழுந்து, கிளம்பவே இவ்வளவு நேரமாயிடுச்சு. இதுல டிபன் செஞ்சு சாப்பிட்டு கிளம்பியிருந்தோம்னா, கல்யாணமே முடிஞ்சு வீட்டுக்கே கிளம்பிடுவாங்க. பரவாயில்லையா…?”
மற்ற இருவரும் வனஜா சொன்னதைக் கேட்டு நகைத்தனர். “நீ சொல்றதும் கரெக்ட்தான். ஆனால் காலையில சீக்கிரம் சாப்பிட்டு பழகிட்டதால பசிக்குதுடி” என்றாள் காயத்திரியும்.
“அப்ப ஒன்னு பண்ணுவோம். இறங்கினதும் கோவிலுக்கு வெளியில ஏதாவது ஜூஸ் கடை இருக்கானு பார்த்து, ஜூஸ் குடிச்சிட்டு போவோம்” என்றாள் வனஜா.
சரி என தலையசைத்தனர் மற்ற இருவரும்.
கோவிலில் இறங்கியதும் எதிரில் இருந்த ஜூஸ் கடையில் பிரஷ் ஜூஸ் குடித்துவிட்டு கோவிலுக்குள் சென்றனர்.
அன்று விடுமுறை என்பதாலோ அல்லது மூகூர்த்த நாள் என்பதாலோ கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் மெல்ல தோழிக்கு திருமணம் நடக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து சேர்ந்தனர்.
இவர்களைப் பார்த்ததும் மணப்பெண்ணுக்கு நிரம்ப சந்தோஷம். கோயிலில் கல்யாணம் என்பதாலோ, கூட படித்தவர்களில் சில பேருக்கு திருமணம் முடிந்திருந்ததாலோ தோழிகள் யாரும் பெரிதாக வந்திருக்கவில்லை திருமணத்திற்கு. யாரையும் காணாமல் ஏமாந்து இருந்தவளுக்கு இவர்களைப் பார்த்ததும் முகத்தில் சந்தோஷம் மின்னியது.
மணப்பெண் சைகையாலே இவர்களை தனக்கு அருகில் வரும்படி அழைத்தாள். அங்கே உறவினர்கள் நிற்க இடமில்லாமல் கூட்டமாக இருந்ததால், இங்கயே நிற்கிறோம், பிறகு வருவதாக இவர்களும் சைகை காமித்தனர் அவளுக்கு.
அடுத்த சில நிமிடங்களில் திருமண சடங்குகள் ஆரம்பமானது. சடங்குகள் முடிந்து மாங்கல்யம் பூட்டும்வரை ஓரமாக நின்று பார்த்தவர்கள், திருமணம் முடிந்ததும், மணமகளுக்கு பக்கத்தில் சென்று அவளை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து தாங்கள் வாங்கி வந்திருந்த பரிசினை வழங்கினார்கள்.
மணமகனிடமும் ஒரு சில வார்த்தைகளை பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பும் தருணத்தில் இன்னும் சில நண்பர்களும் வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்து புது மணமக்களுடன் போட்டோ வீடியோ எடுத்துகொண்டு விடைபெற்றனர்.
அதற்குள் மணமகள் தனது தம்பியை அழைத்து எல்லோரையும் சாப்பிட அழைத்து செல்லுமாறு கூறினாள். சரி என தலையசைத்தவன், “ இங்கயே வெயிட் பண்ணுங்க க்கா… கொஞ்ச நேரம் ஆகும். நான் வந்து கூட்டிட்டு போறேன். பக்கத்துலதான ஹோட்டல், போயிடாதீங்க…” என்றான்.
சரி. நாங்க அதுக்குள்ள சாமிய கும்பிட்டு வரோம் என கூறி கருவறையை நோக்கி நடந்தனர்.
வனஜா, “ஹேய் நீ இதுதான பர்ஸ்ட் டைம் இந்த கோவிலுக்கு வரது. நாங்க ஏற்கனவே இந்த கோவிலுக்கு வந்திருக்கோம். கற்பகாம்பாளை பார்த்ததில்லயே நீ. அப்படியே நம்மள பார்த்து நேர்ல பேசற மாதிரியிருக்கும். சிரிச்ச முகமா பார்க்கவே அவ்வளவு அழகாயிருக்கும். அவசரப்படாம நின்னு பாரு சாமிய. அந்தம்மாவ பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கும்”.
“காஞ்சி மகா பெரியவர் சொன்னதா சொல்லி இவங்கள பத்தி ஒரு புக்ல படிச்சிருக்கேன். தேவலோகத்துல கேட்டது எல்லாம் கொடுக்கற கற்பக விருட்சம் இருக்குமாம். அதுபோல இந்த கற்பகாம்பாளும் கருணையோட பக்தர்களுக்கு கேட்கறத கொடுக்கறவ அப்படின்னு படிச்சிருக்கேன். உள்ள கூட்டமாதான் இருக்கும். நல்லா சாமிய பாருடி”.
அருந்ததி சரி எனத் தலையசைத்து கொண்டாள். வனஜா சொல்லியதுபோல் கற்பகாம்காள் சன்னிதானத்தில் கூட்டம் அதிமாகதான் இருந்தது.
அன்னை இளஞ்சிவப்பு நிறத்தில் தங்க சரிகையிட்ட பச்சை நிற பார்டர் கொண்ட சேலையில் கருணையே வடிவாக நின்றிருந்தாள்.
பார்ப்பவர்களுக்கு கனிவு ததும்பும் முகத்துடன், இதழ் மலர்ந்து, கருணை மழை பொழிபவளாக காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அருந்ததி, வனஜா, காயத்திரி மூவரும் வலது புறமாக இருந்த வரிசையில் நின்று அன்னையை வணங்கினர்.
இவர்களுக்கு நேரெதிர் அஸ்வத் அவனது தமக்கையுடன் நின்றிருந்தான். அருந்ததி அவனை கவனிக்கவில்லை. உள்ளே நுழைந்ததிலிருந்து அவளது கவனம் முழுவதும் கற்பகாம்பாளின் மீதுதான் இருந்தது.
முன்னமே தோழிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள். இதுதான் முதல்முறை என்பதால் மெய்மறந்து அம்பிகையை பார்த்திருந்தாள்.
இயற்கையிலேயே தெய்வ பக்தி அதிகம் அருந்ததிக்கு. அது ராஜேந்திரனால் என்றுகூட சொல்லாம். அவர்தான் மூச்சுக்கு முந்நூறு தடவை மீனாட்சி, சொக்கா என்பார். அதுபோலவே மகளுக்கும். மீனாட்சி என்றால் கொள்ளை பிரியம். அத்துணை பக்தி மீனாட்சியின் மேல்.
ஆதலால்தானோ என்னவோ… கற்பகாம்பாளை விட்டு விழியசைக்க முடியவில்லை அவளால். தன்னையே மறந்து உருகி நின்றாள்.
தாய் தந்தையுடன் மீனாட்சி கோவிலுக்கு சென்றால்கூட சில நிமிடங்கள் நின்று கண்ணார தாய் மீனாட்சியை தரிசிக்கும் பாக்கியமுண்டு அருந்ததிக்கு.
அவளது தந்தை அங்கேயே பூக்கடை வைத்திருப்பதால் கோயில் நிர்வாகிகளுடனும், அர்ச்சகர்களுடனும் நன்கு பழக்கமுண்டு. அந்த சலுகையில் சிறப்பு தரிசனம் கிட்டும் இவர்களுக்கு.
கண் மூடி அன்னையை பிரார்தித்து, அர்ச்சகர் காட்டிய தீபாராதனையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டவள் குங்கமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு, அர்ச்சகர் கொடுத்த பூவை தலையில் வைத்துக்கொண்டே தலையை நிமிர்ந்து எதிரில் பார்த்தவளுக்கு கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
பூஜாவும் இவளைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள். இவளும் பதிலுக்கு முறுவலித்தாள். இவள் உள்ளே நுழைந்ததிலிருந்து அஸ்வத்தின் பார்வை முழுதும் அருந்ததி மீதுதான் இருந்தது.
உள்ளுக்குள் இனம் புரியா மகிழ்ச்சி அவனுக்கு. சில நாட்களாகவே அவனை இம்சை செய்து கொண்டிருந்தாள் உள்ளுக்குள். இன்று எதிர்பாராமல் இங்கு பார்த்ததில் உள்ளத்தில் இன்ப மொட்டுக்கள் அரும்பு விட்டது. அவள் அவனைப் பார்த்து சிநேகமாக சிரிக்கும் போது முகத்தில் ஒரு புன்முறுவல் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவன் சிந்தையில் அவளைப் பற்றிய எண்ணங்களும் தாக்கங்களும் இடையறாது இருந்தது. முதலிலெல்லாம் சாதாரணமாக அதைக் கடந்தவனால், சில நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை.
இன்னும் புரிந்தும் புரியாத நிலைதான் அவனுக்கு. அவள்மேல் வந்துள்ளது பிடித்தமா… ஈர்ப்பா…என கணிக்க முடியவில்லை. எண்ணத்தை நிறைப்பவளின் நினைவுகளில் இருந்து விலகவும் இயலவில்லை. சுகமான இம்சையில் தடுமாறிக் கொண்டிருந்தான்.
தொடரும்.
error: Content is protected !!