Skip to content
Post Views: 4,498
அஸ்வத் தமக்கையுடன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்த கோவிலுக்கு வருவதுண்டு. கபாலீஸ்வரரை தரிசித்தாலே மனது நிர்மலமானது போலிருக்கும் அவனுக்கு. அதற்காகவே அடிக்கடி கோவிலுக்கு வருவான். பூஜாவின் கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால், அக்காவையும் சைந்தவியையும் அழைத்துகொண்டு கோவிலுக்கு வந்திருந்தான்.
அருந்ததியின் நினைவலைகளில் இருந்து தப்புவதற்கு வழி தேடி கோவிலுக்கு வந்தவனுக்கு, வந்த இடத்திலும் அவளைப் பார்க்க நேர்ந்தது.
அம்பாளை பிரார்த்தித்து, அங்கிருந்து வெளியே வந்து கபாலீஸ்வரரையும் வணங்கிவிட்டு வெளியே வந்தனர். அருந்ததி தோழிகளுடன் வருவதை தூர இருந்து பார்த்த பூஜா, தானாகவே அருந்ததியை நெருங்கி வந்து பேச ஆரம்பித்தாள்.
அருந்ததி பேசிவிட்டு வரட்டும் என அவளது தோழிகள் அவர்களுக்கு தனிமை கொடுத்து தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தனர். அருந்ததியும் பூஜாவும் மட்டும் பேசுவதைப் பார்த்த அஸ்வத் சைந்தவியை அழைத்துகொண்டு பூஜாவின் பக்கத்தில் வந்து நின்றான்.
Advertisement
சைந்தவியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அருந்ததியிடத்தில்தான் இருந்தது அஸ்வத்துக்கு.
பூஜா, “எப்படியிருக்கீங்க…?”
“நல்லாயிருக்கேங்க. கோவிலுக்கா…?”
Advertisement
“ம்ம்… என் தம்பிக்கு லீவுன்னு கோவிலுக்கு கூப்பிட்டான். அதான் வந்தோம். ஏதாவது விசேஷமா…?” என்றாள் அருந்ததி பட்டுப்புடவையில் இருப்பதைப் பார்த்து. அஸ்வத்துக்கும் அந்த கேள்வியிருந்தது மனதில். அதனால் அருந்ததி என்ன சொல்லப் போகிறாள் என அவளையே பார்த்திருந்தான் ஆர்வமாக.
Advertisement
அருந்ததி சிரித்துக்கொண்டே, “என் கூட படிச்ச பிரண்ட் ஒருத்திக்கு, இங்க கோவில்ல கல்யாணம், இன்னைக்கு. அதான் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வந்தோம்” என்றாள்.
“நீங்க இந்த ஏரியாதானா…? உங்க வீடு இங்கயா இருக்கு…?”
“இல்லல்ல. நான் அங்க ஸ்கூலுக்கு பக்கத்துலதான் வீடெடுத்து தங்கியிருக்கேன்”.
Advertisement
“ஓஹ்… அப்ப நீங்க இந்த ஊர் இல்லையா….? தனியாவா தங்கியிருக்கீங்க…?”
இந்த ஊர் இல்லை என தலையசைத்தவள், “என்னோட நேட்டிவ் மதுரை. அம்மா அப்பாலாம் அங்கதான் இருக்காங்க. வேலைக்காக பிரண்ட்சோட சேர்ந்து தங்கியிருக்கேன்” என்றாள்.
“பிரண்ட் கல்யாணம் முடிஞ்சுடுத்தா…?”
“ம்ம்… முடிஞ்சுடுச்சு. சாமி கும்பிடலாம்னு வந்தோம்”.
“அப்ப வாங்க மிஸ். எங்களோட ஒரு காபி சாப்பிட்டு போகலாம்”.
ஆஹா… அக்கான்னா அக்காதான்… என அஸ்வத்துக்கு மனதில் குதூகலம் எழுந்தது. அவனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் அருந்ததியுடன் இருக்க முடியுமே என்ற சந்தோஷம் உள்ளுக்குள்.
“இருக்கட்டுங்க. இன்னொரு நாள் பார்க்கலாம். என் பிரண்ட்ஸ் வெயிட் பண்றாங்க…” என தலையசைத்துவிட்டு, சைந்தவிக்கு பாய் என கையசைத்து காண்பித்துவிட்டு, அஸ்வத்தையும் பார்த்து புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று நண்பர்களுடன் சேர்ந்துகொண்டாள்.
சரியாக அந்த நேரம் இவர்களைத் தேடி திருமண பெண்ணின் தம்பி வந்திருந்தான். “அக்கா எல்லாரும் வாங்க. சாப்பிட போலாம்…” என அவர்களை கையோட அழைத்து சென்றான்.
அருந்ததியையே பார்த்து நின்ற அஸ்வத்தை தோளில் தட்டி “என்னடா…?” என்றாள் பூஜா.
“ஒன்னும் இல்லை வா போலாம்”. அருந்ததியின் நினைவிலேயே பூஜாவின் கூர்மையான பார்வையை கவனிக்காமல் திரும்பி நடக்க முயன்றவனைப் பார்த்து, “டேய் உன் பார்வையே சரியில்லையே, என்ன விஷயம்?” என்றாள் விடாமல்.
“என்ன…?” என தமக்கையை முறைத்து பார்த்தான்.
“சும்மா முறைக்காத. நீ அவங்களை பார்த்தத நான் பார்த்தேன்…? இல்லன்னு பொய் சொல்லாத. உண்மைய ஒத்துக்கோடா”.
“ஏன் பார்க்க கூடாதா….? அழகாயிருக்காங்க, பார்த்தேன். இது ஒரு குத்தமா…?”
பூஜா அவனது வெளிப்படையான பேச்சில் ஆச்சரியமாகி ஆவ்… என வாய் திறந்து பார்த்தாள் தம்பியை.
“என்ன…? எதுக்கு இப்ப இந்த லுக்கு” என்றான் கடுப்பாகி. தன்னை பூஜா கண்டுகொண்டாளே என உள்ளுக்குள் கலவரம் அவனுக்கு. அந்த பயம் எரிச்சலாகி வார்த்தையில் வந்திருந்தது.
“நீ இந்த மாதிரி யாரையும் பார்த்து நான் பார்த்ததில்லையே. அதான் கேட்டேன். அதுக்கு ஏன்டா எரிஞ்சு விழற…?” என்றாள் அவளும் கடுப்பாகி.
“ம்ப்ச்…. பிடிச்சது பார்த்தேன். அதையே பேசிட்டிருக்க…” என திரும்பவும் முறைத்தான்.
“அய்யா சாமி தெரியாம கேட்டுட்டேன். நீ உடனே சீரியசாகிடாதடா” என்றாள் தம்பியை சமாதானப்படுத்த. அவன் ஏதோ சாதாரணமாகதான் பார்த்திருக்கான் போல. நான்தான் தப்பா நினைச்சி அவனை டென்ஷன் பண்ணிட்டேன் என பூஜா நினைத்துக் கொண்டாள்.
அஸ்வத்துக்கோ, தனது குட்டு வெளிப்படாததில் சந்தோஷித்து, உன் தம்பி மேல எவ்வளவு நம்பிக்கை க்கா… உனக்கு என முறுவலித்து கொண்டவன், தன் முகத்தை அவளுக்கு காட்டாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
நித்யா திரும்பி படுக்க முயன்றாள். நீண்ட நேரமாக ஒரே பக்கமாக படுத்திருந்ததால் கால் வலிப்பது போலிருந்தது அவளுக்கு. வசீகரனின் கரம் அவளை அவனோடு சேர்த்து இறுக்கி பிடித்திருந்தது. அவளது முகம் அவனது வெற்று மார்பில் அழுந்திய வாக்கில் படுத்திருந்தாள்.
எவ்வளவு நேரம் இப்படியே படுத்திருந்தாள் என அவளுக்கு தெரியாது. கால் வலியால் தூக்கம் கலைந்து முழிப்பு வந்திருந்தது. மெல்ல தலையை அண்ணாந்து வசீகரனின் முகத்தைப் பார்த்தாள். ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். சுவாசம் சீராக இருந்தது.
அடர்ந்த புருவம், அகலமான நெற்றி, கூர்மையான நாசி, தடித்த உதடுகள், முரட்டுத்தனமான மீசை, கைகளுக்கு அடங்காத சிகை என அவன் முகத்தை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.
தூங்கும்போதுகூட முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான். வார்த்தைகளும் அளவோடுதான் வரும் அவனிடமிருந்து. ஆறடிக்கும் குறைவில்லாத ஆண்மகன்.
பெரும்பாலும் வேட்டி சட்டைதான் அவன் அணிவது. அதுதான் அவனது தொழிலுக்கு ஏதுவாக இருக்கும் என்பது அவனது அபிமானம். எங்காவது வெளியில் செல்லும் தருணங்களில் மட்டும் பேன்ட் சட்டை அணிந்து செல்வான்.
வசீகரன் மதுரை மார்கெட்டில் பூக்கடை வைத்திருக்கிறான். இவனது வியாபாரம் எல்லாம் ஹோல்சேல்தான். மொத்தமாக பூக்களை வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பதுதான் இவனது தொழில்.
மதுரையை சுற்றியிருந்த கிராமங்களில் இருக்கும் பூந்தோட்டங்களை நேரிடையாகவே சென்று பார்த்து, தரம் அறிந்து கொள்முதல் செய்துவிடுவான். இங்கு கிடைக்காத ரகங்களை வெளியூரில் இருந்தும் வாங்குவதுண்டு.
சிறு வயதிலிருந்தே இந்த வியாபாரத்தில் இருப்பதால் அதன் நுணுக்கங்களை, நெளிவு சுளிவுகளை அறிந்து இடத்திற்கேற்ப வணிகம் செய்வதில் வல்லவன்.
மார்கெட்டில் அவனுக்கென்று தனி மதிப்புண்டு. தொழில் விஷயமாக இருந்தாலும், தனி விஷயமாக இருந்தாலும் அவனை யாரும் சட்டென்று அத்துணை எளிதில் நெருங்கிவிட முடியாது. அவனது பார்வையும் பேச்சும் எதிராளியை எட்டியே நிறுத்திவிடும்.
சக வியாபாரிகளாக இருந்தாலும், வேலை செய்பவர்களாக இருந்தாலும்கூட எளிதில் யாரையும் நம்பிவிட மாட்டான். அப்படி ஒருவரை நம்பிவிட்டான் என்றால் உயிரைத் தரவும் தயங்கமாட்டான்.
அவனுக்கு மார்கெட்டில் சில பட்டப்பெயர்களும் உண்டு. காட்டான், பிடிவாதக்காரன், முரடன், அழுத்தக்காரன் என. அவனைப் பொறுத்தவரை அவன் உண்டு அவன் வேலையுண்டு. யாரையும் கருத்தில் கொள்ளமாட்டான்
அப்படிப்பட்டவன் இதோ இங்கு நித்யாவின் அணைப்பில் மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். இன்றுவரை அவனுக்கே புரியாத ஒன்று இது. தொழிலை காரணமாக வைத்து ஆரம்பித்த இருவரது உறவும், அவர்களே எண்ணிப்பார்க்காத வகையில் இருவரையும் பிணைத்திருந்தது.
ஆரம்ப காலத்தில் சாதாரணமாகதான் அவர்களிடையே பழக்கம் உண்டானது. நித்யாவுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் அளவில் நிலம் இருந்தது
முதலில் அவளுடைய அம்மா இருக்கும் காலத்தில் அந்த நிலத்தில் காய்கறிகளைதான் பயிரிட்டுக்கொண்டிருந்தனர். சுற்றியுள்ள ஊர்களில் எல்லாம் மல்லி, கனகாம்பரம் என பூக்களை பயிரிட்டு வந்தனர். அதில் லாபமும் அதிகமாக இருந்தது.
நித்யாவுடைய நிலம் முப்போகமும் விளையக்கூடியது. பம்ப்செட் மோட்டார் சர்வீசோடு இருந்ததால் தண்ணீருக்கு எந்த குறையும் இல்லை. எனவே பக்கத்திலுள்ள விவசாயிகளின் ஆலோசனைப்படி இவர்களும் பூக்களை பயிர் வைக்க ஆரம்பித்தார்கள்.
தோட்டங்களுக்கு வந்து விவசாயிகளைப் பார்த்து நேரிடையாக கொள்முதல் செய்வதன் மூலம் வசீகரன் நித்யாவிற்கு பழக்கமாகியிருந்தான். முதல் இரண்டு வருடம் இவர்களிடையே பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வியாபாரம் மட்டுமே இருவருக்கும் இடையில் இருந்தது.
நித்யாவின் அம்மா சுந்தரி உடல்நலம் சரியில்லாமல் இருந்து, சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார், அப்பொழுதிலிருந்து நித்யாவுக்கு தனிமைதான் வாழ்க்கை என்றானது. உறவுகள் இருந்தாலும் உதவ மனமில்லாமல் எட்டியே இருந்தனர்.
நித்யா சிறு வயதாக இருக்கும்போதே தந்தையும் தவறியிருந்தார். வசதி என்று பெரிதாக ஏதும் இல்லை. இருக்கும் வீடும், இந்த நிலமும்தான் அவர்களது சொத்து. நிலத்தை பயிரிடுவதிலிருந்து கிடைக்கும் லாபம்தான் அவர்களுக்கான வருவாய்.
இவளை வளரத்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது எல்லாம் சுந்தரிதான். ஒற்றை உழைப்பாளி, பெண்ணை கரை சேர்த்திருந்தார். தன்னால் முடிந்ததை எல்லாம் குறைவில்லாமல் அவளுக்கு சீராக செய்து திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
ஆனால் தாலி ஏறிய இரண்டே வாரத்தில் வாழ்கையை இழந்து, இளம் விதவையாக திரும்பி வந்திருந்தாள். மாப்பிள்ளை இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரை விட்டிருந்தான்.
சுந்தரிக்குதான் பேரிடியாக இருந்தது. ஆண் துணையில்லாத பெண்கள். ஆதரவு என்று யாரும் இல்லை. போதாதற்கு பெண்ணின் வாழ்வும் இப்படியானதில் நிலைகுலைந்து படுக்கையில் விழுந்து விட்டார்.
ஊருக்குள் முகமூடி அணிந்து திரியும் வெறிநாய்களின் கண்களிலிருந்து இத்தனை நாள் தங்களை பாதுகாத்ததே அவருக்கு பெரும் போராட்டமாக இருந்தது.
இதில் இன்னும் இருக்கும் மீதி காலத்தை நினைத்தே வேதனையில் மனதை விட்டுவிட்டார்.
இவர்களின் அநாதரவான நிலைமையை பயன்படுத்தி வீழ்த்திவிட துடிக்கும் குள்ளநரிகளுக்கு இடையில் இத்தனை நாள் மானத்தை காத்து வாழ்ந்ததே பெரும்பாடுதான். இனி என்ன ஆகுமோ…? என உள்ளுக்குள் பயத்தில், மொத்தமாக தைரியத்தை இழந்திருந்தார்.
சுந்தரியும் தன்னுடைய இளமை பிராயத்தில் கணவரை இழந்ததற்குப் பிறகு, பல சோதனைகளை அனுபவித்திருக்கிறார் ஒரு சில ஆண் மக்களிடமிருந்து. நேரிடையாகவே அவரை படுக்கைக்கு அழைத்த ஆண்கள் எல்லாம் அந்த ஊரில் உண்டு.
எப்படியோ தாயும் மகளும் வசதியில்லையென்றாலும், இதுவரை மானத்தோடு, கௌரவத்தை விடாமல் காக்க அரும்பாடு பட்டிருந்தனர். ஆனால் அது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலானதாக உணர்ந்தார் இப்போது.
தன் வாழ்க்கைதான் இப்படியானது என்றால் மகளாவது நன்றாக வாழ வேண்டும் என விருப்பப்பட்டுதான் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணத்தை முடித்திருந்தார்.
நித்யா நன்றாகப் படிக்கும்பெண். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல விரும்பினாள். ஆனால் சுந்தரிக்கு அவளை அதற்கு மேல் படிக்க வைக்க விருப்பமில்லை. ஆனாலும் தாயிடம் போராடி கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
முதல் வருடம் படிப்பு முடியும் தருவாயில் அவர்களது தூரத்து உறவில் இருந்து நித்யாவை பெண் கேட்டு வந்திருந்தார்கள். நல்ல வரனாக அமைந்ததால் படிப்பை நிறுத்தி மகளை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்திவிட்டார்.
அப்பொழுதும் நித்யா சுந்தரியிடம் போராடினாள். “அம்மா… நான் படிக்கிறேன் ம்மா. படிச்சு முடிச்சு வேலைக்கு போய், நான் உன்னை காப்பாத்தறேன் ம்மா. நம்மோட கஷ்டமெல்லாம் தீர்ந்திடும் ம்மா…” என கெஞ்சிப் பார்த்தாள். சுந்தரி பிடிவாதமாக இருந்துவிட்டார்.
அவரது மனதில் ஆண் துணை இல்லாமல் எவ்வளவு நாள் வயசுப் பொண்ணை வேட்டை நாய்களிடமிருந்து பொத்தி பொத்தி பாதுகாப்பது என்ற அச்சம் இருந்தது. ஆதலால் மகளது கெஞ்சல் எல்லாம் அவரின் காதில் ஏறவில்லை. கௌரவமாக மகளை கல்யாணம் செய்துகொடுத்திட வேண்டும் என்பதிலேயே முழுமூச்சாக இருந்தார்.
அதுவும் நிலைக்கவில்லை. மகளை எண்ணியே அரற்றிக் கொண்டிருந்தார். என பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி படிக்கவாவது வச்சிருக்கலாம். அதையும் கெடுத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அவள் வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டேன் என்ற குற்றவுணர்வில் உயிரையே விட்டிருந்தார்.
அவர் இருக்கும் போதே அவர்களை நெருங்கத் துடித்த கழுகு கூட்டங்களுக்கு இன்னும் கொண்டாட்டமாக போனது இப்போது.
இந்த சமயத்தில்தான் வசீகரனின் அரவணைப்பு அவளை பாதுகாத்திருந்தது. தொழிலில் ஆரம்பித்த அவர்களுக்கு இடையேயான பழக்கம் எங்கு எப்போது இடம் மாறி, தடம் மாறியது என்றே தெரியவில்லை. இருவரும் அதை உணரவும் இல்லை. அறியவும் விரும்பவில்லை.
இருவருக்கும் அவரவர் நிலை நன்கு புரிந்திருந்தது. இந்த வாழ்வு நிலையற்றது என இருவருக்கும் தெரியும். இருந்தும் விலக முடியவில்லை. அதைப்பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசவும் இல்லை விரும்பவில்லை.
இதற்கு பேர் என்ன…? நேசமா…? காதலா…? அன்பா…? காமமா…? இருவருக்கும் தெரியாது. அறியவும் முற்படவில்லை. இப்படியே போகும்வரை போகட்டும் என்ற எண்ணம்தான் பிரதானமாக இருந்தது இருவருக்கும் இடையே. வருவதை நினைத்து இருப்பதை இழக்க மனமில்லை அவர்களுக்கு.
இருவரும் ஒருவராக வாழ ஆரம்பித்து சில மாதங்கள் ஆகியிருந்தன. வசிகரன் எப்பொழுது இங்கு வருவான், எப்பொழுது கிளம்புவான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. நினைக்கும் சமயம் வந்துவிடுவான்.
தினமுமா என்றால் அதுவும் இருக்காது. பெரும் பாலும் அவன் வருவது இரவுகளில்தான் இருக்கும். விடியும் தருவாயில் கிளம்பிவிடுவான். எவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகவா என்றால் அப்படியும் கிடையாது. வரவேண்டும் என தோன்றிவிட்டால் பகலிலும் வருவான். யாரும் அவனை கட்டுப்படுத்த முடியாது.
நெடு நேரமாக அண்ணாந்து அவனையே ரசித்து பார்த்திருந்தவளுக்கு, கவனம் முழுவதும் அவனது மீசையில் வந்து நின்றது. எப்போதும் அவனது முரட்டு மீசையின் மீது நித்யாவுக்கு மோகம் அதிகம். அவன் தூங்கும் நேரங்களில் அவன் அறியாமல் அதை வருடிவிடுவதிலும், இழுத்து பார்ப்பதிலும் அலாதி சுகம் அவளுக்கு.
இப்போதும் அதன் மேல் கொண்ட ஆசையில் தனது விரல்களால் மெல்ல அவன் மீசையை நீவி, வருடிவிட்டு இழுத்துப் பார்த்தாள் விளையாட்டாக.
வசீகரன், “ம்ப்ச்… என்னடி விளையாட்டு இது தூங்கறவனை சில்மிஷம் பண்ணிட்டு…” என கண் முழித்தவன் அவளை தன் முகத்துக்கு நேராக இழுத்து முகத்தோடு முகம் வைத்து இறுக்கிக்கொண்டான்.
“மீசையை இம்புட்டு பெரிசா வளர்த்து வச்சிருக்கீங்களே. எப்படிதான் இதை மெயின்டெய்ன் பண்றீங்களோ…? இதுக்குன்னு தனியா எதுவும் பண்ணுவீங்களோ…?”
“ம்ம்…. தினமும் பருத்தியும் புண்ணாக்கும் கலந்து போடறேன். அதான்…” என்றான் கேலியாக சிரித்துக்கொண்டே.
“கிண்டல்தான் உங்களுக்கு. பொம்பளைங்க நாங்களே தலையில முடி வளர்க்க அம்புட்டு கஷ்டப்படறோம். ப்பாஹ்… காடு மாதிரி எம்புட்டு அடர்த்தியா இருக்கு” என மீண்டும் மீசையை நீவி விட்டாள்.
“தூக்கத்துல உசுப்பேத்தாம கம்னு படுடி” என்றான் அவள் தலையை நெஞ்சில் அழுத்தி.
“ம்ப்ச் கால் வலிக்குது மாமா. ஒரே பக்கமா படுத்ததுல. விடுங்க” என அவன் கைகளை விலக்கி எழுந்தமர்தாள்
“மணி என்னாகுது”.
“மூனு மூனரை இருக்கும் இன்னும் சேவல் கூவல”.
நித்யா எழுந்தமர்ந்து கலைந்திருந்த தலைமுடியை கோதி கொண்டையிட்டுக் கொண்டு, சொம்பில் இருந்த தண்ணியை எடுத்து குடித்துவிட்டு அவனுக்கும் கொடுத்தாள்.
எழுந்து உட்கார்ந்து தண்ணீரை வாங்கிக் குடித்தவன், “கிளம்பவா” என்றான் அவளைப் பார்த்து.
“இன்னும் விடிய நேரமிருக்கு. செத்த படுத்து எழுந்து போங்களேன்”.
“நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி விட்டுட்டு மறுபடியும் படுத்து தூங்குன்றியா…” என்றான் திரும்ப படுக்கையில் படுத்தவாறே.
“நான் எங்க எழுப்பனேன். ஒரே பக்கமா படுத்ததுல கால் வலியில இழுத்த மாதிரி இருக்குதேன்னு, திரும்பி படுக்கலாம்னா… இரும்பு பிடி மாதிரி உங்க கை இறுக்கிட்டிருக்கு. உங்க தூக்கத்த கெடுக்க வேணாமேன்னு அப்படியே படுத்திருந்ததுல முழிப்பு வந்துடுச்சு”.
“தூக்கத்த கெடுக்க கூடாதுன்னு நினைச்சவ எதுக்குடி மீசைய பிடிச்சு இழுத்த?”
“எப்பவும் உங்க மீசைன்னா எனக்கு அம்புட்டு பிடிக்கும். அதான் எப்பவும்போல இன்னைக்கும் அதை தொட்டுப் பார்த்துட்டிருந்தேன்”.
“என் மீசைய வச்சி ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தியா…?”
“ஆமாம். பேச்சை பாரு. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்றதே எனக்கு ஆச்சரியம்தான். பூ வாங்க வரும்போதெல்லாம் நறுக்கு தெரிச்சாப்போல இருக்கும் உங்க பேச்சு. இப்ப என்னன்னா…”
“ஹா…. ஹா… ஏன் நிறுத்திட்ட…? ம் சொல்லு. இப்ப என்னன்னா…” என எடுத்து கொடுத்தான்.
“ம்ப்ச்… போங்க மாமா. எனக்கு கூச்சமாயிருக்கு. எப்படிதான் கொஞ்சங்கூட வெக்கமில்லாம பேசறீங்களோ…” என முகத்தை மூடிக்கொண்டாள்.
முகத்தை மூடியிருந்த அவளது கையைப் பிடித்து இழுத்தவன் மொத்தமாக அவளை அவன் மேல் சாய்த்திருந்தான். “சொல்ல வேண்டியதுதான நான் என்னன்ன சொன்னேன்னு. ம்ம்…” என்றான் அவன் முகத்தை விரல்களால் அளந்துகொண்டே.
“அச்சோ ஆளைப் பாரு. இது ஒரு பேச்சுன்னு பேசுவீங்களா நீங்க என சிணுங்களாக அவன் மேலேயே கவிழ்ந்து படுத்துவிட்டாள் வெட்கத்தில்.
பலமான சிரிப்புடன் நித்யாவை அப்படியே தழுவிக்கொண்டவன், அவளது நயனங்களில் இதழ் பதித்து, மெல்ல அவளது காதுகளில் இதழசைத்தான் இரகசியமாக. அவனது பாஷையில் உண்டான நாணத்தில் இன்னுமின்னும் அவனுக்குள் ஒடுங்க ஆரம்பித்தாள் நெளிந்துகொண்டே.
தொடரும்.
error: Content is protected !!