Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 7

பூஜாவின் வீட்டிற்கு அவளது மாமியார் மாமனார் வந்திருந்தனர். அஸ்வத்தின் அம்மா விசாலினி பூஜாவின் மாமியார் கனகாவிடம் போனில் பேசும்போது கனகா அவருடைய சொந்தத்தில் அஸ்வத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பெண் இருப்பதாக பேச்சுவாக்கில் கூறியிருந்தார்.

விசாலினியும் ஆர்வமாக பெண்ணைப் பற்றியும், அவளது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டார்.  கேட்டறிந்த தகவல்கள் அவருக்கு முழு திருப்தியாக இருந்ததால், பெண்ணைப் நேரில் பார்க்கலாமா என்று ஆர்வமாக கனகாவிடம் கேட்டிருந்தார்.  அவரும் பெண் வீட்டாரிடம் கேட்டு சொல்வதாக கூறியிருந்தார்.

பெண் வீட்டாரின் ஒப்புதலின் பேரில், பூஜாவின் பெற்றோரும் அவளது மாமியார் மாமனாரும்  சென்னைக்கு வந்திருந்தனர்.  இன்று மாலை பெண் பார்க்க செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பூஜாவுக்குதான் மனது கிடந்து அடித்துகொண்டது.  இன்னும் இதுபற்றி அஸ்வத்துக்கு ஏதும் தெரியாது.  அவனுக்கு தெரியாமல்தான் விசாலினி பெண் பார்க்கும் ஏற்பாட்டை செய்திருந்தார்.



Advertisement

அஸ்வத்துக்கு தெரிந்தால் நிச்சயம் ஏதாவது சொல்லி தடங்கல் செய்து விடுவான்.  பெண்ணை நேரில் பார்த்து எல்லாம் தோதாக வந்தால் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என விசாலினி முடிவு செய்திருந்தார்.

அஸ்வத்தின் தந்தை பரணிகூட விசாலினியிடம் எடுத்துச் சொல்லி பார்த்து விட்டார்.  “அவனுக்கு சொல்லாம பண்ணாத விசாலி.  அவன் கோவப்பட போறான்.  ஏதா இருந்தாலும் அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்மா…” என.

“உங்க பிள்ளைதான.  சொன்னதுமே என்ன சொல்லுவான்னு தெரியாதா…?  ஈயடிச்சான் காப்பி மாதிரி அதே டயலாக்க திருப்பி திருப்பி சொல்லுவான்.  இப்ப கல்யாணம் வேணாம்.  கொஞ்ச நாள் போகட்டும்.  நானே சொல்லேறன்னு.   இத கேட்டு கேட்டு என் காது புளிச்சு போச்சு.  இந்த தடவை என்ன ஆனாலும் பரவாயில்ல.  நான் பொண்ண போய் பார்க்கதான் போறேன்.  நேர்ல பார்த்து பேசி நமக்க பிடிச்சிருந்ததுனா அவன் கிட்ட பேசிக்கறேன்.  எதுவும் தடங்கலா பேசாதீங்க” என கணவரின் வாயை அடைத்து விட்டார்.

Advertisement

விசாலினி சொல்வதுபோல் மகனுக்கு நல்லது நடந்தால் சரி என பரணியும் ஏதும் பேசவில்லை.  சில சமயங்களில் விசாலினி இப்படி ஏதாவது கிடுக்குப்பிடி போடும் போது அவனும் அன்னையைப் புரிந்து விட்டுக் கொடுத்துவிடுவான்.  ஆதலால் பரணியும் அமைதியாகிவிட்டார்.

Advertisement

ஆனால் பூஜாவுக்குதான் உள்ளுக்குள் உதைப்பு.  தாயிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் தம்பிக்காக.  “ம்மா… ப்ளீஸ் மா.  அவன் கிட்ட சொல்லிடலாம் ம்மா.  அவனுக்கு தெரிஞ்சது என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவான்”.

“உன் தம்பிய பத்தி தெரிஞ்சும் இப்படி பேசறியே பூஜா.   உனக்கு பொண்ணு பார்க்க போறோம் வாடான்னு சொன்னா முதல்ல வந்துட்டுதான் மறுவேலை பார்ப்பான்.  அதுக்கு ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிச்சுடுவான்”.

“தோணிதொலங்கி அவனுக்குன்னு ஒரு நல்ல விஷயம் ஆரம்பிக்கும்போது தடங்கல் சொல்லாதடா.  அப்படியேவா,  அவன் சம்மதம் இல்லாமையா கட்டி வச்சிடப் போறோம்.  பொண்ணுதான பார்க்க போறோம்.  பார்த்து நமக்கு பிடிச்சிருந்ததுனா அவன்கிட்ட சொல்லிக்கலாம்.  இப்ப எதுவும் அவன்கிட்ட வாயவிடாத”.

Advertisement

“கட்டிக்கப் போறவனே அவன்தான்.  அவன் பார்க்க வேணாமா?  பொண்ணு வீட்ல மாப்பிள்ளைய கேட்க மாட்டாங்களா…?  நாம மட்டும் பார்த்தா போறுமா…?”

“அஸ்வத்துக்கு தெரிஞ்சது நிச்சயம்  இதுக்கு ஒத்துக்கமாட்டான்மா.  அவன்கிட்ட சொல்லிட்டு பொண்ணு பார்க்க போறதே பெட்டர்”.

“நான் பார்த்துக்கறேன்.  அவன் உன்கிட்ட எதுகேட்டாலும் அம்மாதான்டா கூட்டிட்டு போனாங்கன்னு என்னை சொல்லு.  நான் பேசிக்கறேன் அவன்கிட்ட”.

“இப்ப பேசினேன்னா ஏதாவது அத இத சொல்லி முட்டுக்கட்டை போட்டுடுவான்.  பொண்ணோட போட்டோ வாங்கிட்டு வந்து அவன்கிட்ட காட்டி பேசுவாம்.  ஓகே சொல்லிடுவான்.  அவனுக்கும் வயசு ஏறிகிட்டே போகுதுல்லடா” என சமாதானப் படுத்தியிருந்தார் மகளை.

அன்று மாலை ஐந்து மணிக்கு மேல் எல்லோரும் பெண் பார்ப்பதற்காக கிளம்பினர். பூஜாவின் மாமியார் மாமனார், அவளுடைய பெற்றோர், அவள், சைந்தவி என எல்லோரும் பெண் வீட்டிற்கு வந்திருந்தனர்.

பெண் வீட்டார் பூஜாவின் மாமியாருக்கு தூரத்து உறவினர் என்பதால்   இயல்பாகவே அவர்களுக்குள் பேச்சு வார்த்தை துவங்கியிருந்தது.    பெண்ணைப்பற்றி இவர்கள் விசாரித்து தெரிந்து கொண்டதைப் போல் அவர்களும் மாப்பிள்ளையைப் பற்றின தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.  இரு குடும்பத்தாரும் பரஸ்பரம் தகவல்களை பறிமாறிக்கொண்டு பேசியதற்கு பிறகு, பெண்ணை அழைத்து வந்து உட்கார வைத்தனர்.

விசாலினிக்கு பெண்ணை பார்த்த உடனே பிடித்துவிட்டது.  கோதுமை நிறத்தில், ஒல்லியும் இல்லாத குண்டும் இல்லாத அளவான உடல்வாகுடன்,  சரியான உயரத்தில் பார்க்க அர்ச்சனா நன்றாகவே இருந்தாள்.

தலைமுடியை கழுத்துவரை வெட்டி விட்டிருந்தவள், இருபக்கமும் எடுத்து கிளிப் போட்டிருந்தாள்.  அதிகப்படியான எந்த ஒப்பனையும் இல்லாமல், அவள் போட்டிருந்த டிசைனர் சுடிதாருக்கு ஏற்ற வகையில் கழுத்திலும் காதிலும்கூட அளவான தங்க நகைகளை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தாள்.

விசாலினி அர்ச்சனாவை தனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டவர், அவளிடம்  பேச்சு கொடுத்து ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்.  அர்ச்சனாவும் எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே பேசினாள் அவரிடம்.

பூஜாவுக்கும் அர்ச்சனாவை பிடித்திருந்தது.  இங்கு வரும்வரை மனதில் அஸ்வத்தைப் பற்றின பயத்துடன் இருந்தவளுக்கு, அர்ச்சனாவைப் பார்த்ததும் மனதில் இருந்த சஞ்சலம் மறைந்திருந்தது போல.  அவளும் அரச்சனாவிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசினாள்.

இரு வீட்டாரும் தங்களுக்குள் பேசி ஜாதகத்தையும் பறிமாறிக் கொண்டதும், மாப்பிள்ளை வீட்டினர் புறப்பட்டு விட்டனர்.

அர்ச்சனா சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் எம்.ஏ.[ஆங்கிலம்] படித்து கொண்டிருக்கிறாள்.  படிப்பு முடிந்துதான் திருமணம் என இருந்த பெண் வீட்டாரை பூஜாவின் மாமியார் கனகாதான் அஸ்வத்தைப் பற்றியும் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.

அர்ச்சனா வீட்டாருக்கும் கனகா பேசியதைக் கேட்டு மனதில் ஆர்வம் வந்திருந்தது.  தானாகவே வரும் நல்ல சம்மந்தத்தை ஏன் விடவேண்டும் என ஒத்துக் கொண்டனர்.

அர்ச்சனாவின் பெற்றோருக்கு ஒரு ஆண், ஒரு பெண்.  அளவான குடும்பம்.  வசதியிலும் குறைவில்லை.  பெண்ணும் பார்க்க அழகாக இருக்கிறாள்.  தங்களது தகுதிக்கு ஏற்ற இடம் என விசாலினிக்கு இந்த சம்மந்தத்தை பிடித்துவிட்டது.

கனகா பெண்ணைப் பற்றி சொன்னதும் அஸ்வத்திடம் முதலில் பேசதான் நினைத்தார் விசாலினி.  ஆனால் மனதில் தயக்கம் இருந்தது.  நிச்சயம் மகன் தடங்கல் செய்வான் என நம்பினார்.  ஆதலால் பெண் பார்த்து ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்தால், பிறகு மகனிடம் பேசி சம்மதிக்க வைத்து விடலாம் என முடிவெடுத்துக்கொண்டார் அவராகவே.

அதற்கேற்றாற்போல அஸ்வத்தும் ஊரில் இல்லை.  அவனது வேலையாக வெளியூர் சென்றிருந்தான்.  அது விசாலினிக்கு வசதியாக போனது.

ஆனால் பூஜாவின் மாமியார் கனகாவுக்கு அஸ்வத்துக்கு இவர்கள் பெண் பார்க்க வந்ததுபற்றி தெரியாது என எதுவும் தெரியாது.  அவர் அவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறான் என நினைத்திருந்தார்.  அதே காரணத்தைதான் பெண் வீட்டிலும் சொல்லியிருந்தனர்.  அவர்களும் சரி என்று விட்டனர்.

விசாலினி பெண் பார்த்த அன்றே அர்ச்சனாவுக்கு வாட்சப்பில் அஸ்வத்தின் போட்டோவை அனுப்பியிருந்தார்.  அவளிடமே அஸ்வத்தின் நம்பரையும் கொடுத்து அவளின் போட்டோவையும் அவனுக்கு வாட்சப் செய்ய சொல்லியிருந்தார் அப்போதே.

கனகா விசாலினியிடம், ஜாதகம் பார்த்துட்டு சொல்லுங்க.  உங்களுக்கு ஓகேன்னா… நீங்க திரும்ப வரனும்னுகூட இல்லை.  அஸ்வத் பூஜாவ அழைச்சிட்டுகூட பொண்ணை நேர்ல போய் பார்த்துட்டு வரட்டும் என்றிருந்தார்.

இப்படி தங்களுக்குள் பேசி முடித்துகொண்டு விசாலினி திருநெல்வேலிக்கு கிளம்பியிருந்தார்.  பூஜாவின் மாமியார் மாமனார் கொஞ்ச நாட்கள் அங்கு இருந்து செல்வதாக தங்கிவிட்டனர் மகனின் வீட்டில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ராஜேந்திரன் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்திருந்தார்.  தினமும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வருபவர் உண்டு முடித்து சிறிது நேரம் இளைப்பாறி விட்டுதான் கடைக்கு கிளம்புவார்.  இன்றும் அதுபோல் உண்டு முடித்தவர் சென்று படுத்துவிட்டார்.

புவனா எப்பொழுதும்போல் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை ஒதுக்கி வைத்தவர், சற்று நேரம் உறங்க எண்ணி அறைக்குள் நுழைந்தார்.  அங்கு ராஜேந்திரன் உறங்காமல் கண்களைத் திறந்தவாறு படுத்திருந்தார்.

புவனா கணவரைப் பார்த்துகொண்டே கட்டிலில் வந்து உட்கார்ந்தவர், “தூங்கலையா” என்றார்.

ராஜேந்திரன் ஏதும் பதில் சொல்லாமல் மௌனமாக மனைவியைத் திரும்பி பார்த்தார்.  ராஜேந்திரனுக்கு பக்கத்தில் இருந்த தலையணையில் தலையை வைத்து, அவரைப் பார்த்த வாக்கில் படுத்த புவனா “என்னங்க…?  என்ன யோசனை…?” என்றார்.

“அருந்ததிக்கு ஒரு வரன் வந்திருக்கு புவனா.  நம்ம தரகர் ராமு இருக்காருல்ல…”

“ம்ம்…”

“அவர்தான் சொன்னாரு.  பையனும் இதே ஊருதான்.  நல்ல இடம்.  தெரிஞ்சவங்களும்.  அதான் யோசிட்டிருக்கேன்”.

“தெரிஞ்சவங்களா…?  யாருங்க…?”

“உனக்குத் தெரியாது புவனா.  எனக்கு பூ மார்கெட்ல பழக்கம்.  என்னை மாதிரியே பூ வியாபாரம்தான் பண்றான்.  நல்ல பையன்.  எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லை”.

“ஒரே பையனா…?”

“ஒரு தங்கச்சியிருக்கு.  கட்டிகுடுத்துட்டாங்க.  பையனுக்கு அப்பா இல்லை.  அம்மா இருக்காங்க.  ஆனால் படிப்புதான் கம்மி.  அதான் யோசனையாயிருக்கு…”

“கம்மியா…, என்ன படிச்சிருக்காரு…?”

“பன்னண்டாவதுதான்…”

“பன்னண்டாவதுதா…, என்னங்க சொல்றீங்க…?  எப்படி சரியா வரும்”.

“பையன், நல்ல பையன் புவனா.  ஒரே பையன்.  எந்த பிக்கலும் இல்லை.  இதே ஊர்.  அத பாரு நீ.  இங்கயே இருந்தா நமக்கும் தோதாயிருக்குமில்ல.  வயசான காலத்துல நமக்கும் யாரிருக்கா எடுக்க பிடிக்கன்னு.  வெளியில குடுத்துட்டு ஒன்னொத்துக்கும் அலைஞ்சிட்டிருக்க முடியுமா…?  நாலையும் யோசிக்க வேணாமா…?”

“ஆளும் பார்க்க டிப்டாப்பா நல்லாயிருப்பான்.  அவன் காலேஜ் போய் படிக்கலன்னு சொன்னா யாரும் நம்பகூட மாட்டாங்க.  அவ்வளவு ஸ்டைலா இருப்பான்”.

“நீயே அவனை நேர்ல பார்த்தேனா.. அசந்துருவ.  அவ்வளவு டீசன்டாயிருப்பான்.  மரியாதையான பையனும்கூட”.

“எனக்கென்னவோ இது சரியா வரும்னு தோணலங்க.  அருந்ததி பிஜி முடிச்சுட்டு வேலைக்கு போறா…  அவளும் அப்படிதான எதிர்பார்ப்பா…?”

“நானும் அதைதான் யோசிட்டிருக்கேன்.  தரகர் காலையில கடை பக்கம் வந்திருந்தாரு.  அவர்தான் இந்த தகவல் சொன்னது.  யார் கிட்டயோ போய் கைகட்டி சம்பளதுக்கு வேலை பார்க்கறவனை விட தொழில் செய்ற மாப்பிள்ளை ஓகேன்னுதான் நான் சொல்வேன்”.

“அதுவும் அவன் பண்ற மொத்த வியாபாரத்துல, நல்ல வருமானம்.  மார்க்கெட்ல அவனுக்குன்னு நல்லபேரும் இருக்கு.  இது எல்லாத்துக்கும் மேல உள்ளூர்லயே கட்டி கொடுத்தா, அடிக்கடி போய் பிள்ளைய பார்த்துக்கலாம்”.

“நமக்கும் வேற யாரு இருக்கா.  அவள் மட்டும்தான.  இப்ப ஓகே உடம்புல தெம்பிருக்கு.  பின்னாடி வயசானதுக்கு அப்புறம், நினைச்சுப் பாரேன்.  இங்கயே பக்கமாயிருந்தா வயசான காலத்துல எனக்கும் தொழில்ல உதவியா இருக்குமில்ல.  இந்த வரனைப் பத்தின தகவலைக் கேட்டதுல இருந்து மனசு கண்டதையும் யோசிக்க செய்யுது.  என்ன பண்ண…?”

“ஏன் இப்படி பேசறீங்க…?  தூரமா கட்டிக் குடுத்தா மட்டும் ஆதரவில்லாம போயிடுமா.  நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க?  கடைசி வரைக்கும் நாம திடமா ஆரோக்கியமா இருப்போம்னு நம்புங்க.  தேவையில்லாதத எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க”.

“எதுக்கும் அருந்ததிகிட்ட இந்த சம்மந்தத்தபத்தி ஒரு வார்த்தை பேசி பார்க்கட்டுமா…?”

“ம்ப்ச்… என்ன பேசறீங்க.. நீங்க?  நாமளே நம்ம மாப்பிள்ளை படிச்சவராயிருக்கனும்னுதான நினைப்போம்.  விடுங்க.  முதல்ல ஒரு நல்ல நாள் பார்த்து அருந்ததி ஜாதகத்த கோவிலுக்கு எடுத்துட்டுப்போய் மீனாட்சி பாதத்துல வச்சு பூஜை பண்ணிட்டு, ஜோசியர்கிட்ட காட்டுவோம்”.

“அவளுக்கு குருபலன் இருக்கா, கல்யாணத்துக்கு பார்க்கலாமான்னு ஜோசியர்கிட்ட கேட்டுட்டு அப்புறம் எதாயிருந்தாலும் முடிவு பண்ணுவோம்.  இப்பவே உங்களை போட்டு வருத்திக்காதீங்க…” என்றுவிட்டார் புவனா.

ராஜேந்திரனுக்கும் மனைவி சொல்வதே சரியெனப்பட்டது.  முதலில் அவரது தங்கை சித்ராவின் மகனை மகளுக்கு முடிப்போமா, என்ற எண்ணம் இருந்தது.  அப்படி நடந்தால் அவனே தங்களுக்கு மகனாகவும் இருப்பான் என ஆசைப்பட்டார்.

இரண்டு மூன்று முறை சூசகமாக தங்கை வீட்டாரிடம் பேசியும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.  சரி அவர்களுக்கு ஆர்வமில்லைபோல என அதற்குமேல் எதுவும் கேளாமல் விட்டுவி்ட்டார்.

அவருக்கு மனதில், பிள்ளை வீட்டார்தானே பெண் கேட்கவேண்டும்,  கூடப் பிறந்த தங்கையாக இருந்தாலும், தானே முன்சென்று என் பெண்ணை உன் மகனுக்கு கட்டுகிறாயா என கேட்க தயக்கமாக இருந்தது.

பாரிஜாதம்கூட சித்ரா இங்கு வரும் சமயங்களில் “என்ன உன் பையனுக்கு பொண்ணு பார்க்கிறியா…?” என கேட்கும் தருணங்களில் “பொண்ண வச்சிட்டு பையனுக்கு என்னமா அவசரம்?  முதல்ல என் பொண்ண கட்டிக்குடுத்திட்டுதான் பையனுக்கு” என முடித்துவிடுவார் சித்ரா.  அருந்ததியைப் பற்றி எந்த பேச்சும் வராது அவர் வாயில் இருந்து.  அதனால் ராஜேந்திரனுக்கு அதற்குமேல் உடைத்துபேச விருப்பமில்லை.  அந்த ஆசையை அதோடு மறந்திருந்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அஸ்வத் தனது போனில் இருந்த அருந்ததியின் போட்டோவைப் பார்த்துக் கொண்டே, அவளது முகவடிவை தனது ஆட்காட்டி விரலால் அளந்து கொண்டிருந்தான்.

இது அன்று கோவிலில் அவளைப் பார்க்கும்போது பூஜா சைந்தவியுடன் சேர்த்து எடுத்த போட்டோ.  பூஜாவின் விருப்பத்தின் பேரில் அருந்ததி அன்று அவர்களுடன் சேர்ந்து நின்றிருந்தாள்.

அடியே நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல, இப்படி ஒரு பொண்ணை நினைச்சு புலம்புவேன்னு.  காலை தூக்கத்தில் முழித்து எழுந்ததிலிருந்து அவள் ஞாபகம் தான் அவனுக்கு.

என்னவோ இந்த ஒரு வாரமாகவே அவள் எண்ணம் அவனை படுத்தி எடுத்தது.  அருந்ததியிடம் நேரில் சென்று பேசவும் தயக்கமாக இருந்தது.

எப்படி தன் எண்ணத்தை அவளிடம் சொல்லுவது.  அப்படி சொன்னால், தன் விருப்பம் தெரிந்தால், ஒத்துக் கொள்வாளா என குழப்பம்தான் அவன் மனதில்.

இதற்கு நடுவில் அவளைப் பார்ப்பதற்காக ஒரு முறை அவள் ஸ்கூல் வரை சென்று, அவளைப் பார்க்காமலே திரும்பி வந்து விட்டான்.

அவனுக்கு அவனை நினைத்தே தயக்கம், என்னடா பண்ற?..சின்ன பையன் மாதிரி.  அதுவும் பொறுப்பான வேலையில இருந்துட்டு, ஏதோ சின்ன பையன் ரேஞ்சுக்கு…., நீயே இப்படி பண்ணாலாமா என்று அவனுக்கு அவனே கிண்டல் செய்துகொண்டு அவளைப் பார்க்க ஸ்கூல் வரை சென்றவன், பார்க்காமலே திரும்பியிருந்தான்.

வேலையில் முழ்கும்போது தெரியாத அவள் நினைவு, வீட்டிற்கு வந்தால் அவனை இம்சிக்க ஆரம்பித்திருந்தது.

படுத்தறடீ என்னை என புலம்பித் தள்ளியவன், சுத்தமா முடியல.  ஒரு தடவை இன்னிக்கு தூரமா இருந்தாவது உன் முகத்தைப் பார்க்கனும், வரேன். என நினைத்தவனாக எழுந்து ஜாகிங் செய்ய தயாரானான்.

ஜாகிங் முடித்து வந்தவன்,  அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

அவனுக்கென்று அரசாங்கம் கொடுத்த குவார்ட்டஸில்தான் தங்கியிருந்தான்.  சாப்பாடு எல்லாம் வெளியில்தான்.  வீட்டில் எப்போதாவது காபி டீ போடுவது மட்டுமே.  மற்றபடி சமையல் எதுவும் இல்லை.

வீட்டு வேலைக்கு என ஒருவர் இருந்தார்.  அவர் இவன் இருக்கும் சமயம் அறிந்து வந்து செய்வார்.  இன்றும் காலையிலேயே வந்திருந்தார்.

அவர் உள்ளே நுழைவதைப் பார்த்த அஸ்வத், “அக்கா சீக்கிரம் முடிங்க, நான் கொஞ்சம் சீக்கிரம் வெளியே கிளம்புறேன்”.

“சரிங்க ஸார்” என உள்ளே சென்றார் வேலை பார்க்க.

அருந்தியை தூரத்தில் இருந்தாவது பார்த்து வரலாம் என முடிவு செய்திருந்தான்.  அதற்காக அவள் வேலை செய்யும் பள்ளிக்கு கிளம்ப முடிவு செய்திருந்தான் மனதில்.

பூஜா வீட்டிற்கு சென்று அப்படியே சைந்தவியையும் அழைத்துச் செல்ல முடிவு செய்து, பூஜா வீட்டிற்கு முதலில் சென்றான்.

பூஜாவின் கணவன் ராஜேஷ் இன்று வீட்டில் இருந்தான்.  இவனைப் பார்த்ததும், “ஹேய் அஸ்வத் வா வா.  உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு?  மச்சான் ரொம்ப பிஸியோ…?” என்றான் சிரித்துக்கொண்டே வரவேற்பாக.

“மாமா, நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்விய என்னைப் பார்த்து கேட்கறீங்களே?” என்றான் சிரித்துக் கொண்டே அஸ்வத்.

“நான் அக்காவையும், சந்துவையும்  அப்பப்ப வந்து பார்த்துட்டுதான் போறேன்.  நீங்கதான் படு பிஸி.  உங்களைதான் பார்க்க முடியல”.

ஆமாம் என தலையசைத்த ராஜேஷ் “ஆபிஸ்ல வொர்க் லோட் ஜாஸ்தி மச்சான்.  என்ன பண்றது?  டெய்லியும் வீட்டுக்கு வரவே லேட் நைட் ஆகுது” என்றான்.

சைந்தவி மாமனைப் பார்த்ததும் ஓடி வந்து, “ஐ… மாமா வந்தாச்சு” என கத்திக்கொண்டே அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

பூஜாவும் வந்து அஸ்வத்தை வரவேற்றவள், அவனுக்காக காபி எடுத்து வந்து கொடுத்தாள்.

“நான் இன்னைக்கு மாமா கூட தான் ஸ்கூலுக்கு போவேன். ஸ்கூல் வேன்ல போகமாட்டேன்”.

“அதானே அவனைப் பார்த்தாலே வேனைக் கட் அடிச்சிடறே.  முதல்ல எழுந்து குளிச்சிட்டு கிளம்பு” என்றாள் பூஜா.

“மாமா நான் குளிக்க போனதும் நீ போய்ட கூடாது,  நான் குளிச்சிட்டு வரவரைக்கும் வெயிட் பண்ணனும், சரியா” என்றாள் சைந்தவி அஸ்வத்தின் தாடையைப் பிடித்து கொஞ்சலாக.

“இல்லடா குட்டி, நீ குளிச்சிட்டு வா, நான் வெயிட் பண்றேன்”.

பூஜா, “அவன் யூனிபார்மோட வந்திருக்கான், வேலையிருக்கும், இன்னொரு நாள் கூட்டிட்டு போவான்.  இன்னிக்கு வேன்ல போ” என்றாள்.

சைந்தவி, “ம்கூம்… முடியாது…, நான் ஸ்கூலுக்கே போகல போ….” என உதட்டைப்பிதுக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

பூஜா, “அப்படியே ஒன்னு வச்சேன்னா….தெரியும், தானா ஸ்கூலுக்கு கிளம்புவ…” என்றாள் சத்தமாக.

அஸ்வத், “விடு க்கா… நான் கூட்டிட்டு போறேன். அவளை அழ விடாத, நீ போய் குளிச்சிட்டு கிளம்புடா, லேட் பண்ணக்கூடாது, சீக்கிரம் கிளம்பனும்” என்றான் சமாதானமாக.  அவன் வந்ததே அதற்காகத் தானே, அவன் வேலையை சைந்தவி எளிதாக்கியிருந்தாள்.

சைந்தவி உடனே அழுகையை நிறுத்தி, சிரித்துக் கொண்டே தலையை அசைத்துவிட்டு, அவன் மடியில் இருந்து இறங்கி குளிப்பதற்காக ஓடி விட்டாள்.  பூஜாவும் சைந்தவியை விரைவாக குளிக்க வைத்து, ஸ்கூல் யூனிபார்ம் போட்டு, சாப்பிட அழைத்து வந்தாள்.

அஸ்வத், “நீ போய் அவளுக்கு லன்ச் எடுத்து வைக்கா”.  நான் ஊட்டி விடறேன், என்று தோசையை பிய்த்து சைந்தவிக்கு ஊட்டி விட்டான்.

அப்படியே அவனுக்கும் தட்டில் தோசை வைத்து கொண்டு வந்து கொடுத்தாள் சாப்பிடச்சொல்லி. அவனும் சாப்பிட்டு முடித்து,  சைந்தவியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

ஸ்கூலில் சைந்தவியை இறக்கி விட்டவன், ஓரமாக நிழலில் நின்றவாறே அருந்ததிக்காக காத்திருந்தான். வெகு நேரம் ஆகியும் அவள் வரவில்லை. ஸ்கூல் முதல் பெல் அடித்து, அடுத்து இரண்டாம் பெல்லும் அடித்து விட்டார்கள்.  அவளைக் காணவில்லை.

எல்லோரும் உள்ளே சென்றிருந்தனர். பிள்ளைகளை விட வந்து கடைசியாக நின்றிருந்த ஒன்றிரண்டு பேர் கூட நகர ஆரம்பித்திருந்தனர்.

வாட்ச்மேன் கேட்டை இழுத்து மூட ஆரம்பித்தான். அதுவரை அங்கு காத்திருந்து பார்த்த அஸ்வத், என்னாச்சு இன்னைக்கு லீவ் போட்டிருக்காளா.  இல்லை லேட்டா வருவாளோ.. என யோசித்து கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.  இத்தனை நாள் அவளை பார்க்க நேரிட்டது எல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தது.  இன்று தான் அவனாக அவளை பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டு வந்தது.  வந்தும் அவளை காண முடிய வில்லையே என ஏமாற்றமாக திரும்பினான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!