Skip to content
Post Views: 3,802
“சொல்லுங்க.. அவன் மனதில் யார் இது அர்ச்சனா? என் நம்பர் எப்படி கிடைச்சுது?” என்ற யோசனை.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”.
“ம்ம்….”
“இ…ல்ல, போன்ல இல்ல. நேர்ல பேசனும்”.
Advertisement
யார் இது என குழம்பியவன், “இல்ல பரவாயில்ல. எதுவாயிருந்தாலும் போன்லயே சொல்லுங்க…” என்றான்.
“இதை போன்ல பேச முடியாது. நேர்ல மீட் பண்ணிதான், பேச முடியும். ப்ளீஸ்… ஜஸ்ட் ஒரு ஹாஃப்னவர் தான்…” என்றாள் இறைஞ்சுதலாக.
நெற்றியை கைவிரல்களால் தடவியவாறு யார் இது என எண்ணியவன், சரி என்னவோ போன்ல சொல்ல முடியாத முக்கியமான விஷயம் போல. என்னோட பர்சனல் நம்பர் கிடைச்சிருக்குன்னா என்னோட க்ளோஸ் சர்க்கில்ல இருந்துதான் கிடைச்சிருக்கும்.
Advertisement
போன்ல சொல்ல தயங்கறாங்க போல என அவனாகவே நினைத்தவன், “ஓகே. எங்க, எப்ப, மீட் பண்ணலாம்னு, சொல்லுங்க”என்றான் அவளிடமே. “யாரோ, என்னவோ தன்னிடம் உதவி கேட்பதற்காக பேச நினைக்கிறார்கள்” என நினைத்துக் கொண்டான்.
Advertisement
அர்ச்சனா அவளது காலேஜ் பக்கத்தில் உள்ள ஒரு தெருவின் பெயரைச் சொல்லி, அதில் உள்ள ஒரு பேமஸ் கேக் ஷாப்பின் பெயரைச் சொல்லி அங்கு வர முடியுமா என கேட்டு, அவன் சரி என்று சொன்னதும், இருவரும் சந்திக்கும் நேரத்தையும் உறுதி செய்து கொண்டனர்.
சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தாள், அர்ச்சனா கேக் ஷாப்பிற்கு. அஸ்வத்திடம் போனில் பேசிவிட்டாலும், மனதில் பதட்டமும் பயமும் இருந்தது. என்ன பேசுவது… என்ற தடுமாற்றமும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. காலையில் இருந்து இதே சிந்தனையுடன் இருந்தவளுக்கு கல்லூரியில் உட்கார முடியவில்லை. ஆதலால் முன்னமே இங்கு வந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவனிடம் என்ன கேட்க வேண்டும்? எப்படி பேச வேண்டும் என பல தடவை மனதில் ஒத்திகை நடத்தி விட்டாள். இருந்தும் டென்ஷனுடன் நகத்தை கடித்து கொண்டு, வாசல் கதவையே பார்த்து கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.
Advertisement
இவள் வந்து சிறிது நேரம் சென்றே அஸ்வத் வந்தான். கேக் ஷாப்பின் உள்ளே வந்தவன், யார் அர்ச்சனா என சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான்.
அஸ்வத் உள்ளே வரும் போதே, அர்ச்சனா அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அது போல் அவனும் தன்னை போட்டோவில் பார்த்திருப்பான். அடையாளம் தெரிந்து கொள்வான் என உட்கார்ந்து இருந்தாள்.
அந்தோ பரிதாபம், இவன் எங்கே போட்டோவைப் பார்த்தான், பார்த்திருந்தால் போனில் பேசும்போதே அர்ச்சனாவை கண்டு கொண்டிருப்பானே. அதுதான் தேடினான். பெயர் கூட அவனுக்கு தெரியாதே.
இவன் தேடுவதை பார்த்த அர்ச்சனா எழுந்து நின்று அவனைப் பார்த்து கையசைத்தாள். இவளைப் பார்த்தவன் அருகில் வந்து, அவளின் எதிர்ப்புறம் உள்ள சேரில் உட்கார்ந்தான்.
அஸ்வத், “சாரி வந்து ரொம்ப நேரமாச்சா…?” என்றான் உட்கார்ந்துகொண்டே.
அவன் நடந்து வந்து எதிரில் இருந்த நாற்காலியில் உட்காரும் வரை அவனையே பார்த்திருந்தவள், இல்லை என தலையசைத்தாள்.
அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றவள், “தேங்க்ஸ். நான் கூப்பிட்டேன்னு வந்ததுக்கு. பார்க்கவே டையர்டாயிருக்கீங்க. ஸாரி, கஷ்டப்படுத்திட்டனா…? எதாவது சாப்பிடறீங்களா…?” என்றாள்.
அஸ்வத்தும் பார்க்க அப்படிதான் இருந்தான். காலையிலிருந்து ஒரு கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தான். இன்னும் மதிய உணவுகூட எடுத்திருக்கவில்லை அவன். அதுதான் பார்ப்பதற்கு களைத்துப்போய் இருந்தான்.
“என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என மெனு கார்டை அவன் முன் தள்ளி வைத்தாள். அவனும் நல்ல பசியில் இருந்ததால் மறுக்காமல் அவனுக்கானதை ஆர்டர் செய்து விட்டு. அவளிடம் மெனுவை நகர்த்தினான்.
அவளும் ஆர்டர் கொடுத்து விட்டு, நிமிர்ந்து அமர்ந்தாள். வந்து உட்கார்ந்ததிலிருந்து அர்ச்சனாவைதான், அஸ்வத் கவனித்துக் கொண்டிருந்தான்.
பார்க்க சின்ன பொண்ணா இருக்கா. கையில புக்ஸ் பேக் மாதிரி இருக்கு. யார் இவள்…? என்ன எதுக்கு மீட் பண்ணனும்னு, வர சொன்னா…? என்ற யோசனைதான் மனதில்.
அஸ்வத், “சொல்லுங்க. என்னவோ நேர்ல பேசனும்னு சொன்னீங்களே…?” என்றான் நேரிடையாகவே.
அர்ச்சனா, “என்னை தெரியலையா உங்களுக்கு?”
நெற்றியை சுருக்கி கேள்வியாக அவளைப் பார்த்தவன், இல்லை என தலையசைத்தான் மறுப்பாக.
“என் பேர் சொல்லிகூட உங்களுக்கு ஞாபகம் வரலையா…?” என்றாள் ஏமாற்றமாக அஸ்வத்தைப் பார்த்து.
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க வீட்லருந்து என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க”. என்றதுமே அஸ்வத் நிமிர்ந்து அமர்ந்தான் அவளைப் பார்த்து.
“அது… உங்க வீட்லயிருந்து போன் பண்ணி ஜாதகம் பொருந்தி வரலைன்னு சொல்லிட்டாங்க…”.
“எப்படி சொல்றதுன்னு தெரியலை. நான் காலேஜ் பைனல் இயர்தான் படிக்கிறேன். படிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னவளை, எங்க வீட்ல இது நல்ல சம்மந்தம். மாப்பிள்ளை நல்லாருக்காரு. நல்ல வேலைல இருக்காரு. நல்ல குடும்பம் அப்பிடின்னு, என்னை கன்வின்ஸ் பண்ணிதான், சம்மதிக்க வைச்சாங்க இந்த கல்யாண ஏற்பாட்டுக்கு.
அதே மாதிரி, தானா நல்ல வரன் தேடி வருது. இதை தட்ட வேணாம்னு சொல்லிதான், பொண்ணு பார்க்க உங்க வீட்ல இருந்த வரதுக்கே, எங்க வீட்ல ஒத்துகிட்டாங்க. அன்னைக்கே உங்க பேமிலியோட நீங்களும் வருவீங்கன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். பட் நீங்க வரல.
பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு, உங்க பேமிலில எல்லாருமே நல்லாதான் பேசினாங்க. அவங்க பேசினதிலயே, என்னை அவங்களுக்கு பிடிச்சிருந்ததை என்னால் உணர முடிந்தது.
அய்யோ… இந்த அம்மாவ…. என பல்லைக் கடித்தான்.
“பிடிச்சதாலதான் உங்க மொபைல் நம்பரை என்கிட்ட கொடுத்து, என் போட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னாங்க உங்கம்மா”.
அச்சோ இந்தம்மாதான் நம்பர் கொடுத்ததா… என மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டான்.
அதற்குள் ஆர்டர் செய்த கேக் வந்தது.
அவளுக்கானதை அவளை நோக்கி நகர்த்தி வைத்தவன், சாப்பிடு என தலையசைத்தான்.
“ஏன் திடீர்னு போன் பண்ணி ஜாதகம் ஒத்து வரலைன்னு சொல்லிட்டீங்க. நான் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கலையா…?” என்றாள் அவனிடம்.
“எங்க வீட்ல கூட ஜாதகம் பார்த்தாங்களே. பொருத்தம் சரியாயிருக்குன்னு தான் சொல்லி சந்தோஷப்பட்டாங்க. ஜாதகம் பொருந்தியிருக்கன்ன உடனே அடுத்தது கல்யாணம் வரைக்கும் பேச ஆரம்பிச்சுட்டாங்க எங்க வீட்ல”.
“நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் பார்த்து எனக்கு என்ன நினைக்க தோணும்” என்று நிறுத்தியவள், “நானும் சின்ன பொண்ணுதான, அடுத்து” என சொல்ல வந்தவள் கூச்சத்தில் சொல்ல முடியாமல் தலையை குனிந்து கேக் சாப்பிடுவது போல், கேக்கை ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தாள்.
அவளும் பெண் தானே, என்ன தான் பிடிச்சிருந்தாலும், முதன் முதலில் பார்க்கும் ஆணிடம் எப்படி இன்னும் வெளிப்படையாக பேச முடியும்.
அஸ்வத் ஏதும் பேசவில்லை. அவளே பேசட்டும் என அமைதியாக இருந்தான். அவள் மனதில் இருப்பது எல்லாம் வெளிவரட்டும் என அமைதி காத்தான்போல.
அவனுக்கும் பாவமாக இருந்தது அர்ச்சனாவை பார்த்து. என்ன செய்வது? வீட்டிலிருந்த பெரியவர்கள் செய்த குளறுபடி இது எல்லாம். அவனுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் இதை தடுத்திருப்பான்.
“அ..து போட்டோல பார்த்தவுடனே, உ..ங்களை எ..னக்..கு பிடி..ச்சி..டுச்சி. வீட்லயும் உங்களோட என்னை சேர்த்து வச்சு கல்யாணம் அப்படின்னு பேச ஆரம்பிக்கவும், என் மனசில நான் ஆசைய வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்”.
இதைக் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டு அவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான்.
“நானும் என மனசுல, அடுத்து என்ன நம்ம கல்யாணம்தான, அப்படின்ற நினைப்புல சந்தோஷமா இருந்தேன். திடீர்னு உங்க வீட்ல இருந்து ஜாதகம் பொருந்தி வரலைன்னு போன் பண்ணி சொல்லி, வேணாம்னுட்டாங்க. அதகேட்டதும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு”..
இதை அஸ்வத்திடம் சொல்லி முடிப்பதற்குள் அர்ச்சனாவுக்கு கண்ணெல்லாம் கலங்கியிருந்தது. என்ன முயன்றும் அவளால் ஏமாற்றத்தை காட்டாமல் இருக்க முடியவில்லை. அவள் பேசும்போதே குரலும் நலிந்துதான் வந்தது
அவனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு, அவனது பார்வையின் வீரியத்தில், தன்னை சமாளிக்க முடியாமல், தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் வைக்க போராடிக் கொண்டிருந்தாள் உள்ளுக்குள்.
ஏற்கனவே அவனது கூரான பார்வையில் தொண்டை குழியிலிருந்து குரல் எழும்பாமல், நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும் போலிருந்தது. இதில் தனக்குள்ளே அலைபாயும் உணர்வுகளை அடக்கும் வழி தெரியாமல் தத்தளித்தாள்
கண்கள் இரண்டும் கலங்கி, கண்ணீர் எப்பொழுது கீழே இறங்கும் என்ற நிலையில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அவளை நினைத்து, அவளுக்கு வெட்கமாக இருந்தது. முன்ன பின்ன பார்த்திராத ஒருவனிடம், தன்னைப் பற்றியோ, தன் உணர்வுகளைப் பற்றியோ பகிர வேண்டிய அவசியமென்ன. அப்படி என்ன நான் தாழ்ந்து விட்டேன்? என்று அவளை நினைத்தே அவளுக்கு கழிவிரக்கமானது.
முதல்ல நான் இங்க வந்திருக்கவே கூடாது. அப்படியென்ன எனக்கு ஆசை? இதனால அப்பா அம்மாக்கு எவ்வளவு தலைகுனிவு? அவங்களுக்கு மட்டும், நான் இங்க இவரேட பேசிட்டு இருக்கறது தெரிஞ்சா…, என்ன ஆகும்…?
என்னை பெத்தவங்களுக்கு தலைகுனிவு மாதிரிதான. இதுவரைக்கும் என்னை செல்லமா, அன்பா வளர்த்தவங்களுக்கு இதுதான் நான் செய்யற மரியாதையா…? என உணர்வுக் கொந்தளிப்பில் தவித்துகொண்டிருந்தாள், அவளுக்குள்ளே.
அவளது முகத்தைப் பார்த்தே, அவளைப் புரிந்து கொண்டான் அஸ்வத். அவனுக்கும் தர்மசங்கடமான நிலைதான். என்ன சொல்லுவது என தெரியவில்லை அவனுக்கும்.
இந்த அம்மா யோசிக்காம அவசரப்பட்டு பண்ண வேலை, எங்க வந்து நின்னிருக்கு. அம்மாவுக்கும் எனக்கும் நடந்த கம்யூனிகேஷன் கேப்ல, பாவம் இந்த பொண்ணு கஷ்டப்படற மாதிரி ஆயிடுச்சு என அவனுக்குள்ளே வருந்தினான், அர்ச்சனாவை பார்த்து.
சின்ன பொண்ணு மனசில தேவையில்லாம கல் விட்டு எறிஞ்ச மாதிரி ஆயிடுச்சு. சின்னதானாலும், பெரிசானாலும் தப்பு தப்புதானே. தேவையில்லாம படிக்கிற பொண்ணு கலைச்சுவிட்ட மாதிரி ஆயிடுச்சே.
எல்லாம் இந்த அம்மாவால. இவங்கள யாரு என்னை கேட்காம இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது என விசாலினியை மனதில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.
எப்படி இவள் மனசு நோகாம என்னை சொல்லி புரிய வைக்க போறேன் என தலையில் கை வைக்காத குறையாக உட்கார்ந்திருந்தான்.
அஸ்வத், “ஸாரி….”
அர்ச்சனா முகத்தில் வேதனையுடன் சிரித்தாள் அவனைப் பார்த்து. ஈசியா ஸாரி சொல்லி முடிச்சிட்டான் என்று.
“உங்க கஷ்டம் புரியுது. எனக்கு ஸாரி சொல்றதை தவிர, என்ன சொல்றதுன்னு தெரியலை” என்றான் அவனும் தர்மசங்கடமாக
அர்ச்சனாவுக்கு அவனை பார்த்தால் ஏதும் மறைத்து பேசுபவன் போல தெரியவில்லை. இவளுக்காக வருந்துவது போலவும் இருந்தது. அது அவளது நோக்கம் இல்லையே. இவன் ஸாரி கேட்கறதுக்கா நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன் என சிந்தித்தாள்.
“உங்களை வருத்தப்பட வைக்கனும்றது என்னோட தாட் இல்ல”.
புரியுது என தலையசைத்தான்.
“இந்த ஓரு வாரமா, உங்க வீட்ல வேணாம்னு சொன்னதுல இருந்து, எனக்குள்ளவே எத்தனை கேள்வி தெரியுமா…? ஏன் வேணாம்னு சொல்லிட்டாங்க? நம்ம வீட்ல ஜாதகம் பார்த்து பொருத்தம் இருக்குன்னு சொன்னாங்களே. வந்தன்னைக்கு அவங்க வீட்டு ஆளுங்க எல்லாம் நல்லாதான பேசினாங்க. அப்ப அவங்களுக்கு பிடிச்சிதான இருந்துச்சு. ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோ…? அதான் வேணாம்னு சொல்லிட்டாங்களோ…? நான் அழகாயில்லையோ…? நான் உங்களுக்கு மேட்ச் இல்லையோன்னு…? இப்படி எனக்குள்ளயே எத்தனை கேள்வி தெரியுமா…?
“பைத்தியம் மாதிரி, எத்தனை தடவை கண்ணாடி முன்னாடி நின்னு, நான் நல்லாயில்லையா, அழகாயில்லையான்னு எனக்கு நானே பார்த்து மனச போட்டு கன்ஃபூஸ் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?”
“நீங்க ஈசியா… ஒரு வார்த்தையில ஸாரி சொல்லி என்னோட பீலிங்ஸ்லாம் ஒன்னுமேயில்லன்னு சொல்லாம சொல்லிட்டீங்க…” என்றாள், கலங்கிய கரகரப்பான குரலில்.
“ஸாரி… நான் அப்படி… அந்த மீனிங்ல சொல்லல…” என்றான் தயங்கியபடி.
“ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு, நேர்ல உங்களை மீட் பண்ணி கேட்கனும்னுதான் வந்தேன்”.
“ஆனால், இங்க நீங்க வரும் போதுதான் கவனிச்சேன். நீங்க என்னை போட்டோல கூட பார்க்கலன்னு. என்னை அடையாளமே தெரியாம தேடனது வச்சுதான் சொல்றேன்”.
“அம்மாடியோவ்… இந்த பொண்ணு செம ஷார்ப். கரெக்டா நோட் பண்ணியிருக்கு. பொண்ணுங்க எல்லாம் உஷார் தான் போல”
இடையில் பேரர் வந்து நின்று, “ஏதாவது வேணுமா?” என கேட்டார்.
அஸ்வத் அர்ச்சனாவைப் பார்த்தான். அவள் எதுவுமே சொல்ல வில்லை. அமைதியாக இருந்தாள். அவனாகவே முடிவு செய்து, இரண்டு ஜூஸ் ஆர்டர் செய்தான். அவளுக்குமே தொண்டையெல்லாம் வறண்டு இருந்தது. ஜில்லென்று ஏதாவது குடித்தால் தேவலையாக இருக்கும் என தான் தோன்றியது.
இப்பவும் மனதின் ஓரத்தில் சிறு நம்பிக்கையோடு இருந்தாள், அவனுக்கு தன்னை பிடித்துவிடும் என்று.
அர்ச்சனா “ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?” என்றாள் பளிச்சென்று பூசி மெழுகாமல்.
அஸ்வத்துக்கு முழிபிதுங்கிய நிலை. அவனுக்கு இதுவரை பெண்களிடம் இதுமாதிரி பேசியே பழக்கம் இல்லை. இதில் அர்ச்சனாவுக்கு என்ன பதில் சொல்வான். பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பார்களே அது மாதிரி. பாவம் அவன் அம்மா செய்த வேலைக்கு இவன் மாட்டிக் கொண்டிருந்தான். நியாயமான கேள்விதானே அவள் கேட்பதும்.
இந்த அம்மாவை என்ன செஞ்சா தகும். என்ன மாதிரியான ஒரு இக்கட்டுல, என்னை உட்கார வச்சிருக்காங்க என தவித்துக் கொண்டிருந்தான் மனதில்.
சில நொடிகள் யோசித்து பார்த்தவன், அர்ச்சனாவிடம் உண்மையை சொல்லிவிடுவது என முடிவுக்கு வந்தான்.
“ஆக்சுவலா உண்மையை சொல்லனும்னா…, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். இது இன்னும் வீட்டுக்கு தெரியாது, யார் கிட்டயும் இன்னும் சொல்லல” என உண்மையை சொல்லிவிட்டான் அர்ச்சனாவிடம்.
“இது தெரியாம வீட்ல பொண்ணு பார்க்க வந்திருக்காங்க…”
அர்ச்சனா, “அப்ப என்னை பொண்ணு பார்க்க வந்தது உங்களுக்கு தெரியாதா?”
அச்சோ பெரிய பெரிய கேஸ்லாம்கூட அசால்ட்டா டீல் பண்ணிடலாம் போல. இந்த பொண்ணுக்கு பதில் சொல்றதுக்குள்ள… என மண்டை காய்ந்தான் அர்ச்சனாவின் கேள்வியில்.
இதுவரை அவனிடம் இதுமாதிரி யாரும் துணிவாக எதிரில் சரிசமமாக உட்கார்ந்து இப்படி பேசியதில்லை. அதுவும் பெண்கள், சுத்தம்.
அஸ்வத் என்னவென சொல்லுவான். என் வீட்ல எனக்கு தெரியாமதான் வந்தார்கள் என சொல்லி அவர்களை விட்டு கொடுக்கவும் முடியவில்லை அவனால். அர்ச்சனாவை வருத்தப்படுத்தவும் விரும்பவில்லை.
ஆதலால் அவளுக்கு சமாதானமாக, “அவங்களுக்கு என் லவ் மேட்டர் தெரியாததால, நான் ஒத்துப்பேன்னு என் மேல உள்ள நம்பிக்கையில வந்திருக்காங்க…” என்றான்.
“ஏன் நீங்க உங்க லவ் பத்தி இன்னும் வீட்டுல சொல்லலையா…?”
“நான் லவ் பண்ற பொண்ணுகிட்டயே இன்னும் சொல்லல”.
அர்ச்சனாக்கு ஆச்சரியம். “என்னது?”
“என்ன அப்படி பார்க்கற?” நிஜமாதான் சொல்றேன் என்றான் முறுவலாக. “அவள் கிட்ட பேசி அவளோட சம்மதத்தோட வீட்ல பேசனும்னு வெயிட் பண்றேன்”.
அர்ச்சனாவுக்கு என்னடா இது என விசித்திரமாக இருந்தது. ஆளு பார்த்தா தைரியமானவர் மாதிரி நல்லா ஸ்மார்ட்டாயிருக்காரு. ஒரு பொண்ணுகிட்ட போய் லவ் சொல்ல இவ்வளவு யோசிக்கிறாரு. பொண்ணு நானே எவ்வளவு தைரியமா வந்து இவர்கிட்ட பேசிட்டிருக்கேன். இவர் என்னடான்னா…. என அவனையே குறுகுறு என பார்த்திருந்தாள் விழியெடுக்காமல்.
இதான் விதின்றது போல. யாருக்கு யாருன்னு இறைவன் முடிவு பண்ணனும்போல. நான் இவர் கிடைக்கமாட்டாரா ஏங்கி இங்க வந்து பேசிட்டிருக்கேன். இவர் என்னடான்னா… அவர் மனசுல இருக்கற பொண்ணுகிட்ட லவ் சொல்லவே தயங்கிட்டு இருக்காரு. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் லவ் வந்துட்டா… அவ்வளவு தான் போல.
“உன் பேர் என்ன சொன்ன அர்ச்சனா தான…?”
“ம்ம்….”
“அர்ச்சனா நீ உன் மனசை போட்டு குழப்பி பீல் பண்ற அளவுக்கு எல்லாம் ஒன்னுமேயில்ல. சின்ன பொண்ணு. படிக்கற வயசு. நீயே சொன்ன மாதிரி ஃபர்ஸ்ட் டைம் கல்யாணத்துக்குன்னு பேசி, என் போட்டோவைப் பார்த்ததும், என் மேல ஜஸ்ட் ஒரு கிரஷ் வந்திருக்கு. அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல”.
“எப்பவுமே ஒரே விஷயத்தை மனசுல போட்டு குழப்பிட்டே இருந்தோம்னா, அதேதான ஞாபகத்துல இருக்கும். அதுமாதிரிதான் இதுவும். சொல்லப்போனா என்னை நீ நேர்லகூட பார்த்தது இல்ல. ஜஸ்ட் போட்டோல பார்த்ததுதான், இல்லையா…?”
“ம்ம்…”
“ஏதோ பெரியவங்க பேசினத வச்சு, நீயாவே உன் மனசுல இமாஜின் பண்ணி கண்டதையும் நினைச்சு குழப்பிக்கறே. நாலு நாள் இதைப் பத்தி திங் பண்ணாம இருந்து பாரு, அப்புறம் நீயே என்னை யாருன்னு கேட்ப” என்றான் புன்னகையுடனே.
“எல்லாருக்கும் முதல்ல பார்க்கற மாப்பிள்ளையே முடிஞ்சிடுதா என்ன? அடுத்தடுத்துன்னு அவங்களுக்கு பிடிக்கறமாதிரி அமையற வரைக்கும், பொறுமையா பார்த்து தான முடிக்கிறாங்க. எத்தனை சம்மந்தம் நிச்சயம் வரைக்கும் வந்து நின்னிருக்கு. ஏன் நிச்சயம் முடிஞ்சி கல்யாண மேடை வரை வந்து கூட நின்ன கல்யாணம் நிறைய இருக்கு. அவங்க எல்லாம் திரும்ப கல்யாணம் பண்ணிக்கறதில்லையா…?”
“நீ பீல் பண்ணி கஷ்டப்படற அளவுக்கு எல்லாம் ஒன்னுமே இல்லை. யாருக்கும் உன்னைப் பார்த்தா நிச்சயம் பிடிக்கும். என்னை பொறுத்தவரைக்கும் இது சாதாரண விஷயம். இதுக்கு நீ இவ்வளவு ஃபீல் பண்ணி ரியாக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை. நல்லா ப்ரிலியன்டா இருக்க”.
“படிக்கவும் செய்யற. அழகாவும் இருக்க. உன்கிட்ட எல்லாமே இருக்கு. இன்னும் படிப்பையே முடிக்கலை நீ. உனக்கு இன்னும் வயசிருக்கு, உன்னையே விரும்பற, உனக்கே உனக்குன்னு ஒருத்தர் நிச்சயம் வருவார். அது நான் இல்லைன்றது தான் என்னோட பதில். அதுக்கான காரணமும் சொல்லிட்டேன்”.
“உன்னை போட்டு வீணா குழப்பி டென்ஷனாகாம ஃபிரீயா இரு. ம்ம்…”
அர்ச்சனா “நானும் அப்படி நினைச்சி தான் உங்களை நினைக்காம இருக்கனும்னு ட்ரை பண்ணேன். திரும்ப திரும்ப உங்க ஞாபகம் என்னை டிஸ்டர்ப் பண்ணவேதான், உங்களை பார்த்து நேர்ல பேசினா, நீங்க சம்மதிக்க மாட்டீங்களான்னு ஒரு நப்பாசை…” என்றுவிட்டாள் நேராகவே.
நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கைகளை கட்டிகொண்டிருந்தவன், “அதுக்கு முதல்ல என் போட்டோவ உன போனில் இருந்து டெலீட் பண்ணனும்….” என்றான் சிரித்துக் கொண்டே. “இன்னும் டெலீட் பண்ணாம பார்த்திட்டு தான இருக்க?” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.
நேர்ல பார்த்தது போல சொல்றாரு என நினைத்தவள், பார்வையை தாழ்த்திக் கொண்டாள், அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல்.
அவள் பதிலே பேசாமல் அமர்ந்திருந்தைப் பார்த்தவன் தலையை அசைத்து “சரிதான” என்றான்.
“ம்ம்….” என்றாள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து அசடு வழிந்து கொண்டே.
“இது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன். என் போட்டோவை பார்க்காம இருந்தா தானா சரியாகிடும்” என கை நீட்டினான். அவளைப் பார்த்து.
முதலில் புரியாமல் பார்த்தவள், அவன் பார்வை அவள் போனின் மீது படியவும், மறுக்க முடியாமல் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவன் பாஸ்வேர்ட் என அவளிடம் கொடுத்தான். அச்சோ விடாக்கண்டனா இருக்காரே என நினைத்து அவள் போனில் பாஸ்வேர்டை போட்டுக் கொடுத்தாள்.
அதை வாங்கியவன் கேலரி சென்று அவன் போட்டோவை டெலீட் செய்து, வாட்சப்பிலும் செக் செய்து அவளிடம் போனை திரும்ப கொடுத்தான்.
“இனிமே எல்லாம் சரியாப் போயிடும். இப்ப போலாமா” என தலையசைத்தான்.
“ரொம்ப அழகாயிருப்பாங்களா…?”
புரியாமல் புருவத்தை சுருக்கினான். அருந்ததியை கேட்கிறாள் என தெரிந்ததும், அவன் முகத்தில் புன்னகை தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது.
பார்றா… அழகாயிருப்பாங்களான்னு கேட்டதுக்கே இவர் மொகம் பல்பு போட்ட மாதிரி பளிச்சுன்னு ஆயிடுச்சு என சந்தோஷமாக அவனைப் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளுக்கே அவள் மனப்போக்கை குறித்து விந்தையாக இருந்தது. நாம வரும் போது இருந்த மைன்ட்செட் என்ன? அப்படியே மாத்திட்டாரே. ஏதோ குழந்தைக்கு கதை சொல்றமாதிரி. ஏதோ இருக்கு இவர் கிட்ட என்று பெருமூச்சு விட்டாள்.
அர்ச்சனா, “வெரி லக்கி அவங்க…” என்றாள் தானாகவே.
சிரித்துக் கொண்டே தலையசைப்புடன் எழுந்து விட்டான்.
அவளும் அவனுடனே எழுந்தவாறே, “ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருக்கு நமக்குள்ள…” என்றாள்.
அஸ்வத், இன்னும் என்ன என்று பார்த்து நின்றான்.
அர்ச்சனா, “அது நம்ம இரண்டு பேர் வீட்டுக்கும். நாம இப்ப மீட் பண்ணது தெரிய வேணாம்” என்றாள் கோரிக்கையாக.
“இல்ல. நான் சொல்ல மாட்டேன். நீயும் இதையெல்லாம் விட்டுட்டு உன் படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. ஓகேவா”
“ம்ம்…”
“வரேன்” என தலையசைத்து கிளம்பி விட்டான்.
அர்ச்சனா, ம்ம்….நல்ல மனுஷன்….நமக்கு குடுத்து வைக்கலை என அவளும் கிளம்பி விட்டாள்.
அஸ்வத் வண்டியில் செல்லும்போது அவன் மனதில், ம்ம்… நல்லவேளை இந்த பொண்ணு லவ்னு எதுவும் சொல்லி நம்மளை தர்மசங்கடப்படுத்தல. அந்த வரைக்கும் தப்பிச்சோம்.
இந்த அம்மாவை… என பல்லைக் கடித்தவன், என்ன வேலை பார்த்து வச்சிருக்காங்க. வீட்டுக்கு போய் பேசிக்கறேன் அவங்கள.
யார், யாரோ நம்மளை பார்க்கிறாங்க. பார்க்க வேண்டியவ ஓரு லுக். ம்கூம்… என சலித்து கொண்டான் மனதில். இதுக்கு மேல தாங்காதுடா சாமி, சீக்கிரம் அவள்கிட்ட பேசிடனும் என முடிவு செய்து கொண்டான் மனதில்.
தொடரும்.
error: Content is protected !!