Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 10

அருந்ததி அவள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருந்த வினாயகர் கோவிலில் தன்னுடைய வெஸ்பாவுக்கு பூஜை போட்டுக் கொண்டிருந்தாள்.  என்னவோ அவளுக்கு வெஸ்பா வண்டியின் மீது சொல்லொண்ணா மோகம்.   அதுவும் அந்த யெல்லோ கலர், அதுதான் எடுத்திருந்தாள்.

அவளது தந்தை ராஜேந்திரன்கூட, “ஏன்மா ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கே.  அதை எடுத்துக்கோயேன்மா.  கிட்டதட்ட அதுவும்  நீ எடுக்கிற பிரைஸ்கு மேட்ச் ஆகும்.  ஹையரென்ட் மாடல் பார்த்து எடுத்துக்கோமா” என்றார் மகளிடம்.

இவளும் வெஸ்பாவில் ஹையரென்ட் மாடல்தான் எடுத்திருந்தாள்.  கிட்டதட்ட இலட்சத்துக்குமேல் இருந்தது விலை.  தந்தையின்  ஆலோசனைக்கு மறுப்பு தெரிவித்து விட்டாள்.  காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வெஸ்பாவின் மீது அலாதி பிரியம் அவளுக்கு.

அவளது தோழிகள் கூட புது மாடல் வண்டிகளை சஜ்ஜஸ்ட் செய்தனர்.  இருந்தும் வெஸ்பா மோகம் அவளை விடவில்லை.  குடியிருந்த வீட்டையும் மாத்தி விட்டனர் தோழிகள் மூவரும்.  ஆம்,  திரும்ப எதற்கு வீணான பிரச்சினை என்று வீடு மாற்றியிருந்தனர்.



Advertisement

இப்பொழுது குடி வந்திருப்பது, லக்ஸரி அப்பார்ட்மென்ட் கொண்ட குடியிருப்பு.  தனி தனி பிளாக்குகளாக, கிட்டதட்ட அறநூறு எழுநூறு ப்ளாட்களை உள்ளடக்கியது.

அங்கேயே அனைத்து  நவீன வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது.  இன்னும் அந்த குடியிருப்புக்குள்ளேயே இருந்த மீதியிடத்தில், புதிதாக குடியிருப்புகள் கட்டுவதற்கான கன்ஸ்ட்ரக்‌ஷன் வொர்க்கும் நடந்து கொண்டிருந்தது.

பக்கா சேஃப்டியான இடம்.  குடியிருப்பவர்களின் அனுமதியில்லாமல் வெளிவாசல் உள்ளேயே நுழைய முடியாது.    வாடகை அங்கு கொடுத்ததை விட இங்கு இரு மடங்கு அதிகம்தான்.

Advertisement

வேறு வழியிருக்கவில்லை.  காயத்திரியின் அண்ணன் ராகவன் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டான்.  இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்.  பெண் பிள்ளைகள் சேஃப்டி முக்கியம் என இவர்களிடம் உறுதியாக கூறியிருந்தான்.  இவர்களுக்கும் இந்த அட்மாஸ்ஃபியர், வீடு எல்லாம் பிடித்திருந்ததால் சரியென்று விட்டனர்.

Advertisement

குடியிருப்புக்குள்ளேயே பார்க் இருக்கிறது.  ஜிம் இருக்கிறது.  நீச்சல் குளம் இருந்தது.  இன்டோர் கேம் விளையாட என தனியிடம் இருந்தது. டென்னிஸ், பேஸ்கட் பால் விளையாடவும் தனியாக இடம் இருந்தது.

பழைய வீட்டில் இருந்த மாதிரி எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்க வேண்டியதில்லை.  ஓய்வு நேரங்களில் வெளியில் வந்து சுற்றிப் பார்க்கலாம்.

ஏதாவது விளையாடலாம்.  மாலையில் அங்கேயே வாக்கிங் போகலாம்.  போரடித்தால் அட்லீஸ்ட் பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கையாவது பார்க்கலாம்.  ஆதலால் இந்த இடம் பெண்களுக்கும் பிடித்துவிட்டது.

Advertisement

காயத்திரி வனஜா இருவருக்கும் வேலைக்கு சென்றுவர இங்கிருந்து பஸ் வசதி இருந்தது.  அருந்ததிக்குதான் தூரமாக இருந்தது.  அவள் வேலைக்கு சென்றுவர இரண்டு பஸ் பிடித்து சென்றுவர வேண்டியிருந்தது.

சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போக முடியவில்லை என வண்டி வாங்க முடிவு செய்து வெஸ்பா வாங்கியிருந்தாள்.

வீடு மாறுவது பற்றி அவளது தந்தை ராஜேந்திரனிடம் கூறியதற்கு கேள்வி கணைகளால் மகளை துருவியெடுத்து விட்டார்.

ஏன் வீடு மாறுகிறாய்?  ஏதாவது பிரச்சினையா என பல கேள்விகள் அவரிடமிருந்து.  சமானியத்தில் அவர் சமாதானமாகவில்லை. அருந்ததிதான் பொறுமையாக அவருக்கு எடுத்து கூறும்படி ஆனது.

“ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிட்டார் ப்பா…”

“ஏன் காலி பண்ண சொல்றார்.  நீங்க ஏதாவது பண்ணீங்களா…?”  நான் நேர்ல வரட்டுமா…?  அவர்கிட்ட வந்து பேசவா…?  இல்லை போன் நம்பர் குடு.  நான் போன்ல கூட்டு பேசறேன்”.

“அச்சோ… அப்பா அப்படியெல்லாம் எதுவுமில்ல.  அவருக்கு ஏதோ அர்ஜென்ட் போல.  யாரோ அவருடைய சொந்தகாரங்க இந்த வீட்டுக்கு குடி வராங்கபோல.  வீடு வேணும்னு கேட்கறார்”.

“அதான் சரின்னு ஓத்துக்கிட்டோம்.  அதுமட்டுமில்ல என் ஃபிரன்ட்ஸ்கு, இப்ப பார்த்திருக்கற வீடு வேலைக்கு போறதுக்கு பக்கமா இருக்கறதால, அவங்களும் ஓகேன்னு சொல்லிட்டாங்க”.

“என்னை மாதிரி அவங்க சீக்கிரம் வேலையை விட்டு வர முடியாதுல்ல ப்பா.  சம் டைம்ஸ் லேட் நைட்கூட ஆகுது, அவங்க வீடு வர.  வீடு பக்கமா இருந்தால், ஈசியா இருக்கும்னு பார்க்கிறாங்க”.

அதுவும் உண்மை.  காயத்திரி வனஜா இருவரும் பழைய வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதை விட, இங்கிருந்து வேலைக்கு செல்வது பக்கமாக இருந்தது.

அவர்களது வேலையில் கால நேரமெல்லாம் கிடையாதே.  சில சமயம் வேலை முடித்து வருவதற்கு இரவு நேரமாகி விடும்.

முதலில் ஹவுஸ் ஓனரிடம் காலி செய்கிறோம் என சொன்னதும் ஒத்துக் கொள்ளவில்லை அவர்.  நான் இந்தியா திரும்பி வரும் வரைக்குமாவது இருங்கள் என பேசிப் பார்த்தார்.  ஆனால் இவர்கள் நடந்த பிரச்சினை எல்லாம் சொல்லி, இனி இங்கிருந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மறுத்து விட்டனர்.

அவரும் இவர்கள் சொன்னதை கேட்டு பயந்து விட்டார்.  இவ்வளவு நடந்திருக்கிறதா?  நான் இல்லாத நேரத்தில், வேறு ஏதாவது அசம்பாவிதம் வந்தால் என்ன செய்வது என இவர்கள் காலி செய்ய உடனேயே ஒப்புக் கொண்டார்.

அவரது நண்பர் ஒருவர், இவர்கள் காலி செய்வதற்கு முன் வந்து வீட்டினை சரிபார்த்து சாவியை பெற்றுக் கொண்டார்.  ஹவுஸ் ஓனரும் வீட்டிற்கான அட்வான்ஸ் பணத்தை, அன்றே இவர்களது பேங்க் அக்கவுண்டில் ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டார்.

எப்படியோ அருந்ததி அவள் அப்பாவை சரிகட்டி வீட்டை மாற்றியது மட்டுமில்லாமல், வேலைக்கு போகும் தூரத்தை சொல்லி வண்டியெடுக்கவும் ஒப்புதல் வாங்கியிருந்தாள்.

அதற்கும் அவர் நான் வந்து எடுத்து தருகிறேன் என்றிருந்தார்.  அதையும் பேசியே சரிகட்டியிருந்தாள்.  “நீங்க வந்தாலும், நான் இந்த வண்டியைத்தான் எடுப்பேன் ப்பா.  எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு”.

“வேறெதுவும் எனக்கு வேண்டாம்.  நீங்க அங்கயே ஷோரூம்ல விலையை விசாரிச்சு சொல்லுங்க.  நானும் இங்க விசாரிக்கிறேன்” என கூறிவிட்டாள். ராஜேந்திரனும் மதுரையிலிருந்த ஷோரூமில் இவள் அனுப்பியிருந்த மாடலை காண்பித்து விலையை விசாரித்து, கொட்டேஷன் வாங்கி வாட்ஸ்சப் செய்திருந்தார் மகளுக்கு.

இவளும் சென்னையில் உள்ள ஷோரூமிலிருந்து கொட்டேஷன் வாங்கி அவருக்கு அனுப்பியிருந்தாள்.  ஆஃப்பர்ஸ் ஒன்றுபோலதான் இருந்தது இரண்டு இடங்களிலும்.  விலையில் சில ஆயிரங்கள் வித்தியாசம் இருந்தது.  மதுரையை விட சென்னையில் சற்று குறைவாக இருந்தது.

ராஜேந்திரன், “நான் நேரில் வரட்டுமா?” என்றதற்கு “வருவதானால்  வாருங்கள்.  உங்களுக்கு தான் வீண் அலைச்சல்” என்று விட்டாள்.  “சரி லோன் வேண்டாம்.  முழு பணத்தையும் கட்டி எடுத்து விடு.  பணத்தை உன் அக்கௌண்டிற்கு அனுப்புகிறேன்” என சொல்லிப் பார்த்தார்.  அதற்கும் அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

“என்கிட்ட பணம் இருக்குப்பா.  நான் வாங்கற சேலரி அப்படியேதான, என் அக்கௌண்ட்ல இருக்கு.  அதுல வாங்கிக்கறேன்.  பாதி கேஷ் கொடுத்து பாதி லோன்ல வாங்கிக்கறேன்.  சீக்கிரம் அடைக்கற மாதிரி பார்த்து லோன் போட்டுக்கறேன்” என்று விட்டாள்.  அவரை எதற்கும் விடவில்லை.

புவனாவும் ராஜேந்திரனிடம், “விடுங்க.  முதன்முதலா அவள் சம்பாதிச்ச பணத்திலருந்து வண்டி வாங்கனும்னு நினைக்கறாள் போல.  அதை ஏன்? நாம கெடுப்பானேன்” என்று கூறியிருந்தார்,  அதனால் மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டார் ராஜேந்திரன்.

இதோ அருந்ததி ஒரு வழியாக தந்தையை சமாளித்து வெஸ்பாவையும் எடுத்து வெற்றிகரமாக பூஜை போட்டு, வண்டியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை புவனா, ராஜேந்திரனுக்கு அனுப்பிவிட்டு, வண்டியையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் போது, ஏதோ குதிரை மீது ஏறி சவாரி செய்வது போல அவ்வளவு உற்சாகமாக இருந்தது அவளுக்கு.

வண்டியில் வரும்போது எதிர்காற்றில் அலைபாய்ந்த முன்முடியை, சரி செய்துகொண்டே சந்தோஷமாக வந்தவளுக்கு, ஏதோ காற்றில் மிதந்து பறந்து வருவது போல குஷி மனதில்.

போங்க தம்பி.  நாங்களும் வண்டி வாங்குவோமில்ல.  இப்படி  ஜாலியா ஓட்டுவோமில்லன்னு கௌண்டர் வேறு மனதில்.

போடி பெரிசா ஃபிளைட் ஓட்டற மாதிரி பீலா வேற என்று அவள் மனசாட்சி அவளை கிண்டல் செய்த்து.

இருக்கட்டுமே.  எனக்கு இது பிளைட் மாதிரிதான்.  இதை வாங்கறதுக்குள்ளயே ராஜேந்திரன்கிட்ட நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்.   இந்த வண்டிக்கே என்னை ஒரு வழி பண்ணிட்டார்.  இதுக்கே இங்க எனக்கு நாக்கு தள்ளுது… இதுல பிளைட் வேறயா என சிரித்துக் கொண்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@

அஸ்வத் லாக்கப்பிலிருந்து வந்து தன்னுடைய கேபினில் வந்து உட்கார்ந்தான்.  அவன் பின்னாடியே வந்த செல்வாவிடம் “ஒரு டீ சொல்லுங்க செல்வா” என்றான்.

“சரிங்க ஸார்”, என வெளியில் போய் சொல்லிவிட்டு வந்தவர், ஏதோ கேட்பதற்காக தயங்கி நின்றார் அஸ்வத்தின் எதிரில்.

அதைப் புரிந்தவன் போல “என்ன செல்வா…?” என்றான் நிமிராமலே கையிலிருந்த பைலில் கவனமாக.

“ஸார் அவன்களை….” என்று இழுத்தார் செல்வா.

அருந்ததியின் பக்கத்து வீட்டிலிருந்து பிரச்சினை செய்தவர்களை பிடித்து லாக்கப்பில் வைத்திருந்தனர்.  அஸ்வத் அவர்களை அடி பின்னியெடுத்து விட்டு தான் வந்து உட்கார்ந்தான் இப்பொழுது.  இரண்டு      நாட்களாகிறது அவர்களை அரஸ்ட் செய்து ஸடேஷனுக்கு கொண்டு வந்து.

அன்றே திரும்ப வண்டியில் வரும்போது அஸ்வத் செல்வாவிடம் அவர்களை பிடிப்பதற்கான வழிவகைகளை சொல்லி, கட்டளைகளை பிறப்பித்து இருந்தான்.

அதன் படியே அங்கேயே மஃப்டியில் இரண்டு பேர்  இராப் பகலாக காவல் காத்து அவர்களை தூக்கியிருந்தனர்.  அதற்குள் அவர்களைப் பற்றின தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்நிதிருந்தனர்.

ஏற்கனவே அவர்கள் குடியிருந்த ஏரியாவிலும், இதுபோல் குடித்து, கும்மாளமடித்து, வயசுப் பெண்களிடம் தகராறு செய்திருந்தனர் என தெரிய வந்திருந்தது, அவர்களைப் பற்றி விசாரித்ததில்.

முன்பு அவர்கள் குடியிருந்த பகுதி, கீழ்தட்டு மக்கள் வசிக்கும் ஏரியாவைச் சேர்ந்ததாக இருந்தது.

அந்த ஏரியா பெண்களிடம் இவர்கள் ரவுடித்தனம் பண்ணுவது, ரவுசு பண்ணுவது என இருந்திருக்கின்றனர்.  இவர்களில் ஒருத்தன் அந்த ஏரியாவைச் சேர்ந்தவன் என்பதால், முதலில் யாரும் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  போக போக இவர்களது ராவடித்தனம் எல்லை மீறியிருக்கிறது.

சின்ன பெண்களை மட்டும் அல்லாது,  வயதான பெண்மணிகளையும் விட்டு வைக்கவில்லை.  அதில் கடுப்பான அந்த ஏரியாவினர், இவன்களை நியாயம் கேட்டு புத்திமதி சொல்லப்போக,  இவன்களோ அடங்காது வார்த்தையை விட,  அவர்களால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், இவன்களை அடித்து உதைத்து இந்த ஏரியா பக்கமே வர கூடாது, வந்தால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டி துரத்தி விட்டிருந்தனர்.

அவ்வளவு அடிபட்டு இங்கு வந்தும் திருந்தாமல், இங்கேயும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கியிருந்தனர்.

இங்கு ஸ்டேஷனிற்கு கூட்டி வந்ததற்கு அப்புறமும், ஏன் இப்படி செய்தீர்கள் என பொறுமையாக விசாரணை நடத்திய போதும், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.  கேட்கும் கேள்விகளுக்கு தெனாவெட்டான பதிலும், திமிரான பார்வையுமே அவன்களிடமிருந்து கிடைத்ததால், அடி வெளுத்து வாங்கியிருந்தான் அஸ்வத் அவர்களை.

எப்படியும் இவர்கள் எல்லாம் பெரியாட்கள் யாரிடமாவது கைத்தடிகளாக பணியில் இருப்பர்.  இல்லை எந்த அரசியல்வாதியிடமாவது அடிமட்ட தொண்டன் என்ற பெயரில் கூலியாட்களாக இருப்பார்கள்.

இல்லை இவ்வளவு தைரியம் இவன்களுக்கு எங்கிருந்து வரும் என சரியாக கணித்திருந்தான் அஸ்வத்.  அந்த தைரயத்தில்தான் அவர்களும் இருந்தனர்.

ஆதலால் யாராவது வந்து,  இவர்களை சிபாரிசின் பெயரில்  அழைத்து செல்வதற்குமுன் அவர்களுக்கான தண்டனையை பெற்றுத் தந்திட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தான்.

ஆனால் அதற்குள் இவர்களை கண்களை மட்டும் விட்டு தோலை உரிப்பது என்பார்களே, அப்படியென்றால் என்ன என்று காண்பித்திருந்தான் அவர்களுக்கு.

அதில் அஸ்வத்தை கண்டாலே, அவர்கள் நடுங்க ஆரம்பித்திருந்தனர்.

செல்வா, “ஸார் அவன்களை…” என இழுத்தார்.

அஸ்வத், “அவன்க இருக்கட்டும் செல்வா.  நான் பார்த்துக்கறேன்.  இவன்க மேல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தாரே ராகவன், அவரை வர சொல்லி இருந்தேனே.  போன் பண்ணிட்டீங்களா… அவருக்கு?”.

செல்வா, “சொல்லிட்டேன் ஸார், இப்ப வந்திருவாரு….”

“சரி நீங்க போங்க.  அவர் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க…” என அடுத்தடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் காயத்திரியின் அண்ணன் ராகவன் வந்திருந்தான் ஸ்டேஷனுக்கு.  அவனை செல்வா அஸ்வத்திடம் அழைத்து வந்தார்.

ராகவன், “ஸார்…”

அஸ்வத், “வாங்க ராகவன்.  உட்கார்ங்க.  அவன்களை அரஸ்ட் பண்ணிட்டோம்”.  செல்வா சொன்னாரா…?”

ராகவன், “செல்வா ஸார் போன்ல எல்லாம் சொன்னார் ஸார்.  நானே உங்களை பார்க்க வரனும்னு இருந்தேன்.  நாங்க அங்கிருந்து வீட்டை காலி பண்ணிட்டோம் ஸார்”.

அஸ்வத், “ஏன் ராகவன்…? என்னாச்சு…?”

“இதுக்கு மேல் அங்க இருக்க விருப்பம் இல்லை ஸார்.  மேல மேல பிரச்சனை வேண்டாம்னுதான் வெக்கேட் பண்ணிட்டோம்.  எல்லாம் கல்யாணம் ஆகாத பொம்பளை பிள்ளைங்க”.

“தினமும் என்னாகுமோன்னு பயந்துட்டே இருக்க முடியாதுல்ல.  சமயத்துல யாராவது வீட்ல, தனியா கூட இருப்பாங்க.  பாதுகாப்பு வேணும் இல்ல ஸார்.  நானும் வேலையை விட்டுட்டு எத்தனை நாள் இவங்க பின்னாடியே அலைய முடியும்.  அதான் பேசி, அங்கிருந்து காலி பண்ணிட்டேன்”.

அஸ்வத், “ம்ம்… அப்ப இவன்களை என்ன பண்றது…?” என்றான்.

ராகவன், “நீங்க என்ன சொல்லறீங்களோ, அப்படியே பண்ணிடறேன் ஸார்.  ரொம்ப தேங்க்ஸ் ஸார், ஆக்‌ஷன் எடுத்ததுக்கு”.

“இவனுங்க மாதிரி ஆளுங்களால தான் பொம்பளை பசங்களை இன்னும் பொத்தி பொத்தி வைக்க வேண்டியதாயிருக்கு.  செய்யற தப்பையும் செஞ்சிட்டு, அதைப் போய் கேட்டா, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு, திமிரா வேற பேசறான்னுங்க.  வந்த ஆத்திரத்துக்கு அங்கயே நாலு வச்சி சாத்தலாம்னு, அவ்வளவு ஆத்திரம் எனக்கு அன்னைக்கு”.

“குடிச்சிட்டு நிதானமில்லாதவங்க கிட்ட என்ன பேசறதுன்னு, என்னையே கன்ட்ரோல் பண்ணிட்டு வந்துட்டேன்.  அதுக்கப்புறம் தான் இங்க கம்ப்ளெய்ன்ட் பண்ண வந்தேன்” என்றான்.

அஸ்வத், “அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க ராகவன்.  அவன்கள  வெளுத்து வாங்கிருக்கேன்.  கொஞ்ச நாள் இந்த அடிக்கு பயந்து வால அடக்கிட்டிருப்பானுங்க”.

“ஆனால் இவன்கள எல்லாம் திருத்த முடியும்னு நினைக்கிறீங்களா… நீங்க?  கஷ்டம் ராகவன்.  இவன்களுக்கு கிடைக்கற சப்போர்ட் அப்படி.  அது நின்னாதான இவன்க அடங்குவானுங்க.  அந்த சப்போர்ட் இருக்க தைரியத்துல, மறுபடியும் அவனுங்க வேலையை தொடரதான் செய்வானுங்க”.

“இதுலயும் ஒரு சில பேர் திருந்தி வாழனும்னு நினைக்கறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. அது எல்லாம் ரொம்ப ரேர்.  சரி நான் என்ன பண்ணலாம்னு டிஸைட் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்.  இப்ப நீங்க கிளம்புங்க”.

ராகவன் சரியென தலையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

அருந்ததி தோழிகளோடு டின்னர்க்கு வெளியே வந்திருந்தாள்.  காயத்திரியும் வனஜாவும் அவளிடம் வெஸ்பா வாங்கியதிற்கு ட்ரீட் கேட்டிருந்தனர்.  அதன் பொருட்டே இந்த டின்னர் வந்தது தோழிகள்.  அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து தூரமாகதான் வந்திருந்தனர்.

இது சென்னையிலேயே ஒரு புகழ் பெற்ற உணவகம்.  சென்னை வந்ததிலிருந்து இங்கே வர வேண்டும் என்பது தோழிகளுக்கு எண்ணம்.  அது இன்று அருந்ததியின் புண்ணியத்தால் வர முடிந்தது.

சாதாரண நாட்களிலேயே கூட்டம் அதிகமாகயிருக்கும்.  இன்று வீக் என்ட்.  விடுமுறை தினம் என்பதால் கூட்டமாக இருந்தது.  அங்கு ரிசப்ஷனில் பெயர் சொல்லி பதிந்து விட்டு டேபிளுக்காக காத்திருந்தனர்.

காயத்திரி, “எனக்கு ஒரு டவுட்” என்றாள் தோழிகளிடம்.  மற்ற இருவரும் என்ன என்று பார்த்தனர்.  “இல்ல.  இவங்க எல்லாம் வீட்டில சமைக்கவே மாட்டாங்களா?” என்றாள் அதிமுக்கிய கேள்வியாக.  அட அறிவே என்று பார்த்தனர் மற்ற இருவரும்.

வனஜா தலையிலே அடித்துக்கொண்டு, “எப்படிடீ உனக்கு மட்டும், இப்படி எல்லாம் தோணுது.  உன்னை மாதிரி தான அவங்களும் வந்திருப்பாங்க” என்றாள் கேலியாக.

காயத்திரி, ஹி… ஹி… அதுக்கில்லடி.  நாமதான் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க.  இவங்க எல்லாரையும் பாரு.  குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க.  இப்பல்லாம் ஸ்வ்கியும், ஸோமாட்டாவும் தான அதிகமாகுது.  அதான் கேட்டேன்” என்று அசடு வழிந்துகொண்டே.

அதற்குள் அவர்களை வந்து அழைக்கவும் டேபிள் பார்த்து அமர்ந்தனர்.  பேரர் வரவும் அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, சந்தோஷமாக பேசிக் கொண்டே உண்ண ஆரம்பித்தனர்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!