குளியலறையிலிருந்து வெளிவந்தவளை இமைக்காது பார்த்தான் சுதன். கணவனின் பார்வையில் புருவத்தை உயர்த்தி ‘என்ன…: என்பதை போல் பார்த்தாள்.
Advertisement
சட்டென பார்வையை மாற்றிக் கொண்டவன் “ஒன்றுமில்லை…” என்று தலையாட்டிவிட்டு கணினியின் புறம் திரும்பிக் கொள்ள, மெல்லிய புன்னகை பாவையிடத்த்தில்.
அதே புன்னகையுடன் முகத்தைத் துடைத்து விட்டு மிதமான ஒப்பனையுடன் அறையிலிருந்து வெளிவந்தாள்.
Advertisement
Advertisement
அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் சமையலறையிலிருந்து வெளியில் எட்டி பார்த்தார் காமாட்சி. மிதமான அலங்காரத்தில் பார்க்க அழகாய் தெரிந்தாள் அவரது மருமகள். ஆனால் அப்போதைய கோபம் அவரது கண்களை மறைக்க
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” சத்தமாக முனகி கொள்ள, அது வெளியில் வந்தவளுக்கும் கேட்டது.
Advertisement
அதனை கண்டுகொள்ளாமல் அவரின் முன் சென்று நின்றவள் “சாரி அத்தை, ரொம்ப தலைவலி எப்படி தூங்கினேன்னு தெரியல…” என்றாள் தயங்கிய குரலில்.
மாயோளின் குரலில் திரும்பியவரின் கண்களில் விழுந்தாள் அவரது மருமகள். முகம் முழுக்க சிவந்து பார்க்கவே ஒரு போல இருந்தாள். சற்று தூரத்திலிருந்து பார்க்கும் போது மாயோளின் சிவந்த முகம் தெரியவில்லை இப்போது நன்றாகவே தெரிந்தது. மங்கையின் தோய்ந்த முகத்தை பார்த்தப்படி
“ம்ம்…டீ போடவா?” எனக் கேட்க
அவரின் குரலில் இருந்த பேதம் என்னவென்று துளியும் விளங்கவில்லை அவளுக்கு.. அது அன்பா? அக்கறையா? இல்லை கோபமா? என பிரித்து பார்க்க தெரியவில்லை அதனாலயே “இல்லை அத்தை, அதெல்லாம் வேண்டாம்…” என்றாள் மெல்லிய குரலில்.
“கொஞ்சமா இஞ்சி டீ குடி, தலைவலி பரவாயில்லையா இருக்கும்…” என அழுத்தமாக கூறியதும் மறுக்காமல் சரியென்று தலையாட்டினாள். நிமிடத்தில் மங்கையின் கையில் இஞ்சி டீயை கொடுத்தவர் அடுத்த வேலையில் மூழ்கி போனார்.
இதயாவோ டீயை பருகிக் கொண்டே அந்த சமையலறையை பார்த்தாள் அத்தனை சுத்தமாக இருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இந்தளவிற்கு தன்னால் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியுமா என்று தான் தோன்றியது.
அந்த எண்ணத்தை முகத்தில் தேக்கியப்படி மாமியாரை பார்த்தாள். மும்மரமாக காலை உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
அவரோ மருமகளையும் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தார். அவரின் பார்வை சென்ற திசையை தான் இவளும் பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஒன்பது மணியென்று பல்லைக் காட்டி சிரித்தது.
அவஸ்தையாக மாமியாரை பார்த்தவள் “இனிமே நேரமா எழுந்து உங்களோடவே சமையல் செய்யறேன் அத்தை…” என்றதும் சிரிப்பு தான் வந்தது பெரியவளுக்கு…
இவரின் பாசையில் நேரமா என்பது அதிகாலை ஐந்து மணியை குறிக்கும். இவளுக்கு அந்த நேரமா என்பது எதுவோ என நினைத்தவர் அதனை கேட்கவும் செய்தார். அதற்கு அவரின் மருமகள் கூறிய பதில் தான் இடது பக்கத்தில் இருக்கும் இதயம் வலது பக்கத்திற்கு இடம் பெயர்வது போல் இருந்தது.
“ஏழு, ஏழரையா…” மனம் தனம் அதிர்ச்சியாய் கத்தியது
அதே கணம் மருமகளின் ஆடம்பரமான வாழ்க்கை நினைவில் வர “அங்க நீ எப்ப எழுந்தாலும் மடிமேல சோறு இருக்கும். இங்க அப்படியா?…” என்றார் ஒரு போல முகத்தை சுருக்கி.
“என்னதான் மடிமேல சோறு வந்தாலும் அதட்டி உருட்டி சாப்பிட வைக்க அம்மா கூடவே இருந்தா தான் சாப்பிட கூட தோணும் அத்தை. சின்ன வயசுல இருந்தே எனக்கு அந்த பாக்கியம் இல்லை…”
“பணமும், புகழும் இருந்து என்ன பிரயோஜனம்? என்னை வாசு தானே பார்த்துகிட்டான். குறிப்பிட்ட வயசு வரைக்கும் என் அம்மா, அப்பா பாசம் எனக்கு கிடைக்கல.. அவங்க பாசம் எனக்கு கிடைக்கும் போது அதை முழுசா கூட அனுபவிக்க முடியல…” எனக் கூறியவளுக்கு அவளையும் அறியாமல் நீண்ட நெடிய பெருமூச்சு வந்தது.
பின் அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் கையில் வைத்திருந்த தம்பளரோடு சேர்த்து சிங்கிலிருந்த பாத்திரங்களையும் கழுவ ஆரம்பித்தாள்.
காரிகை அப்படி கூறியது இவருக்கு தான் ஏதோ போலானது. அந்த நிமிடம் இவருக்கு தோன்றியது ஒன்றே ஒன்று ‘தான் நினைத்ததை விட இவள் அத்தனை மோசம் இல்லை’யென்று. அந்த எண்ணமே அவருக்கிருந்த பயத்தை சற்றே விலக்கி வைத்தது.
ஆம் பயம் தான்… எங்கே வீட்டிற்கு வந்த பணக்கார மருமகள் தன் பிள்ளையை பிரித்து சென்று விடுவாளோ என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு இருந்தது.
தற்பொழுது மருமகளின் பேச்சில் அந்த பயம் விலகி நின்றது. இத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசு என்ற பகட்டு துளியும் இல்லாமல் அவள் பேசிய விதம் இவருக்கு பிடித்து இருந்தது.
அதே கணம் ஆரம்பத்திலிருந்தே இவளுடன் நன்றாக பேசி இருந்தால் தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்று காலம் கடந்து யோசித்தார்.
ஆனால் இனி அதை செய்தால் மாமியார் என்ற கெத்து என்னாவது? என எண்ணியவர் இனியும் அவளிடம் கறாராக தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
அந்த நேரம் பாத்திரம் உருட்டும் சத்தத்தில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவர் மருமகளை பார்த்தார். முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் நின்றிருந்தாள்.
இதயாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மதியத்திற்கு செய்ய வேண்டியதை பார்க்க ஆரம்பித்தார்.
சிங்கிலிருந்த பாத்திரங்கள் முழுவதையும் கழுவி வைத்தவளுக்கு சற்று முன்னிருந்த மனநிலை மாறியிருந்தது. பூனை நடையிட்டு பெரியவளிடம் சென்றவள் அவர் அரைக்கீரையுடன் போராடுவதை பார்த்தபடி “ஆப்ட்டர்நூன் லஞ்சுக்கு ரெடி பண்றீங்களா? நான் இன்னைக்கு லஞ்ச் செய்யவா அத்தை?” என கீரையைப் பார்த்தபடி கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும் நிமிடம் விழிகளை உருட்டி மருமகளை பார்த்தார். மாமியாரின் பார்வை இவளுக்கு சிரிப்பை கொடுத்தது “என்ன அத்தை ஏன் இப்டி பார்க்குறீங்க…” என மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.
“சமைக்க தெரியுமா?”
“ம்ம் சமைப்பேன் அத்தை…” என்றாள் அவரின் கையிலிருந்த கீரையை வாங்கிக் கொண்டு.
“நல்லதா போச்சு, எங்க சமையல் பக்கமே வந்தது இல்லைன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்…” சிடுசிடுப்பாக கூற முயற்சி செய்தார்.
தற்போது மாமியாரின் சிடுசிடு முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒவ்வொரு இலையாக பிய்த்து பாத்திரத்தில் போட ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவர் “என்ன இப்படி செஞ்சிட்டு இருக்க, குடு நானே பண்றேன். நீ பண்ற வரைக்கும் வெயிட் பண்ணா மதியம் முடிஞ்சு சாயங்காலம் வந்துரும்…” எனத் திட்டிக் கொண்டே கையை நீட்டினார்.
அவரின் கையை பார்த்து
“நீங்களும் என்கூடயே வந்து பண்ணுங்க அத்தை… ” என்றவள் தன் வேலையை தொடர, முறைத்தபடியே கையை கிழிறக்கியவர் மருமகளுடன் கீரையை எடுக்க ஆரம்பித்தார்.
நிமிடங்கள் கடந்தும் மாமியாரின் முகம் மாறாமல் இருப்பதை பார்த்தவள் அதற்கு மேல் முடிய மாட்டாமல் சத்தமாக சிரித்தாள்.
இங்கு காமாட்சிக்கோ அவள் எதற்கு சிரிக்கிறாள் என்றே புரியவில்லை. கண்களை உருட்டியப்படி மருமகளை பார்த்தார். அவரின் பார்வையில் இன்னும் சிரிப்பு வர இதழ்களை கடித்து அந்த சிரிப்பை அடக்க முயற்சித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?” இதனையும் கோபமாக தான் கேட்க முயன்றார் ஆனால் அது கோபமாக வந்ததா என்று தான் தெரியவில்லை…
“இல்லை அத்தை, சும்மா தான்…” என்றவள் குனிந்து மீண்டும் சிரிக்க
“சொல்லிட்டு சிரி மா பொண்ணே…” கனமான குரலில் கூறினார். அவர் குரலில் தெரிந்த மாற்றத்தில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். அவரின் தீவிர முகத்தை பார்க்க பார்க்க பொத்துக் கொண்டு வந்தது அந்த பொல்லாத சிரிப்பு…
“சாரி சாரி அத்தை…சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல…” என்றவள், அதற்கு மேல் சிரித்தாள் உண்மையாகவே மாமியாருக்கு கோபம் வந்து விடும் என நினைத்து குனிந்து கொண்டாள்.
“சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு…” என கொஞ்சம் கடினமாகவே கேட்க முயற்சித்தார். இப்பொழுதும் முயன்றார் அவ்வளவே.
“இல்ல அத்தை, நீங்க அப்ப இருந்து இப்பவரைக்கும் கோபப்பட ட்ரை பண்றீங்க பட் அது உங்களுக்கு வரல…உங்க ஃபேஸ் கோபமா பார்க்க சிரிப்பா இருக்கு…” எனக் கூற கூறவே சத்தமாக சிரித்தாள்.
இதயாவின் சிரிப்பு சத்தம் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்த சுதனுக்கும் கேட்டது. “இவ என்ன இப்படி சிரிக்குறா? அதுகுள்ள காமாட்சி பழைய ஃபார்முக்கு வந்துருச்சா?..” என முனகி கொண்டே எழுந்து நடந்தான்.
அறையிலிருந்து வெளிவந்ததும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மனைவியின் சிரித்த முகத்தை தான் முதலில் பார்த்தான். மங்கையின் சிரிப்பு இவனின் இதழ்களையும் மலர செய்தது..
“என்னாச்சு மா, எதுக்கு இப்படி சிரிக்கிறா உங்க மருமகள்…” எனக் கேட்டபடி தாயின் தோளில் கைப் போட்டான்.
மருமகளை முறைத்து கொண்டே மகனை அன்னார்ந்து பார்த்தவர் “எனக்கு சரியா கோபப்பட தெரியலன்னு சிரிக்கறாடா உன் பொண்டாட்டி…” முகத்தை தூக்கி வைத்தபடி கூறினார்.
“நிலவே, உனக்கு அம்மாவோட கோபத்தை பத்தி தெரியல அவங்க கோபப்பட்டா…” என சுதன் ஆரம்பிக்க “அன்னைக்கு நம்ம நல்ல சோறு சாப்பிடலாம்…” என்று முடித்து வைத்தார் அப்போதே உள்ளே வந்த ஈஸ்வர்.
கணவரின் பேச்சில் காமாட்சி முறைத்தார் என்றால் சுதனும், இதயாவும் சத்தமாக சிரித்தனர்.
“சிரிச்சு மாட்டி விடாதீங்க பசங்களா…” என்றவர் மனைவியிடம் சென்று “என்ன சோறு ம்மா…” என சமையலறையை எட்டி பார்த்து கேட்டார். அவரின் செய்கையில் இன்னும் இன்னும் சிரிப்பு வந்தது இளையவர்களுக்கு.
மூவரையும் முறைத்து கொண்டே “யாருக்கு எதுவும் இல்லை.போயி நல்ல சோறு சாப்பிடுங்க….” என்றவர் கீரையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர,
“ஐயோ அப்படி இல்லை மா, அமிர்தம் மாதிரி இருக்கற உன் சாப்பாட்டை விட்டுட்டு நல்ல சோறு தான் சாப்பிடுவோம்னு சொன்னேன். வேற ஒன்னுமில்லை…”என்று மனைவியின் பின்னாலேயே சென்றார் ஈஸ்வரும்.
பெரியவர்களின் செல்ல சண்டையை பார்த்த இதயாவிற்கு முகம் முழுக்க சிரிப்பு தான். அதே சிரிப்போடு கணவனின் புறம் திரும்பினாள். மெல்லிய புன்னகையுடன் நின்றிருந்த கணவனை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவளுக்கு.
அடர்ந்த கேசம், பறந்த நெற்றி, அடர்த்தியான புருவங்கள், கூர்ந்து கவனிக்கும் கண்கள், கூர்நாசி, மேல் இதழ்களை முழுவதுமாக மூடியிருந்த கற்றை மீசை, சிவந்த கீழ் இதழ்கள்… குழுவிழுந்த கன்னத்தை மறைக்கும் குறுந்தாடி, திண்ணிய மார்பு என்று பார்க்கவே அப்படி இருந்தான். கண்கள் அவனை விட்டு விலகி நிற்பேனா என்றது.
இங்கு அவனோ, ஒருத்தி தன்னை அணுவணுவாக ரசிப்பது கூட அறியாமல் தாய், தந்தையின் சண்டையை ரசித்தபடி நின்றிருந்தான்.
அவள் ரசிப்பதை அவன் கவனித்து இருந்தால் பிரிவு என்ற ஒன்றை சந்தித்து இருக்க மாட்டானோ என்னவோ? எல்லாம் விதி
*******
இங்கு காரில் பயணித்து கொண்டிருந்த நவியின் மனம் அடித்துக் கொண்டது அவள் செய்த காரியத்தில். ஆடவனின் இதழோடு இதழணைக்கும் போது கூட இத்தனை பதற்றம் இல்லை. அவன் அவளைத் தூக்கி சென்று மிரட்டிய போது கூட இத்தனை படபடப்பு இல்லை.ஆனால் இப்பொழுது அதெல்லாம் நினைத்து பார்க்கும் போது ஒருவித அவஸ்தை அவளுள்.
அந்த அவஸ்தை நவிக்கு படப்படப்பையும்,பதற்றத்தையும் கொடுத்தது. ஆடவனின் இதழ்களின் ஈரம் இன்னும் இன்னும் மாயோளின் இதழ்களில் உணர்வது போல் ஓர் மாயை. கண்களை இறுக மூடிக் கொண்டு அலைபேசியை நெற்றியில் தட்டியப்படி சிரித்தாள்.
“ஏங்க… பக்கத்துல கருப்பசாமி கோவிலிருந்த கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க…” தாயின் பதட்டமான குரலில் சட்டென கண்களை திறந்தவள் பக்கவாட்டில் அமர்ந்திருந்த தாயை கேள்வியாக பார்த்தாள்.
“ஏன் மா என்னாச்சு…” நவியின் பார்வையில் தெரிந்த கேள்வியை ஆறுமுகம் வாய் வார்த்தையாக கேட்டார்.
“இல்லைங்க…வண்டியில ஏறுனதுல இருந்து இப்ப வரைக்கும் என்னமோ மாதிரி வராங்க உங்க மவ. தன்னால சிரிக்கிறா? அவளுக்கு அவளே பேசிட்டு வரா?.எனக்கு என்னவோ பயமா இருக்குங்க… காத்து கருப்பா இருக்க வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் கருப்பசாமி கோவிலா பார்த்து வண்டியை நிறுத்துங்க… ” என்று பானு கூறியதும் நவி தன் தாயை அதிர்ச்சியாக பார்த்தாள் என்றால் ஆறுமுகமோ சத்தமாக சிரித்தார். கணவனின் சிரிப்பில் சிரிக்க துடித்த இதழ்களை அழுத்தி கடித்தபடி மகளை பாவமாக பார்த்தார் பானுமதி.
தாயின் கண்கள் அவரது கேலியை படம் பிடித்து காட்டிவிட இருவரையும் ஒரு சேர முறைத்தவள் “போங்க… வீடு வர வரைக்கும் நான் உங்களோட பேச மாட்டேன்…” என்றாள். அதில் பெரியவர்கள் இருவரும் சத்தமாக சிரிக்க “க்கும்…” உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு பானுவின் தோளில் சாய்ந்தப்படி அலைபேசியை ஆன் செய்தாள்.
ஜானகியின் அலைபேசியிலிருந்து வாசுவின் எண்ணை குறித்து கொண்டது நினைவு வந்தது. உடனே அவனது இலக்கத்தை தனது அலைபேசியில் சேமித்து வைத்தவள் உடனே புலனத்தில் அவனது சுயவிவர படத்தைப் பார்த்தாள்.
வெண்ணிலவு வெளிச்சத்தில் பின்னால் திரும்பி நின்றிருந்தான் வாசு… கட்டை விரல் கொண்டு அவனது உருவத்தை வருடினாள்.
“ம்ச்…” என்ற சத்தத்தோடு அவனுக்கு அவள் அளித்த முத்தம் நினைவு வந்தது… அச்சோ என்றிருந்தது நவிக்கு.
மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை அவளால் ‘சரியான இம்சை டா நீ. ஒரே ஒரு கிஸ் கொடுத்துட்டு வந்து நான் பாடுற பாடு இருக்கே…இனி உன் பக்கமே வர மாட்டேன் சாமி…’ மனதால் புலம்ப தான் முடிந்தது நவியால்…
அந்த புலம்பலோடு அடுத்தடுத்த நாட்களும் நகர்ந்தது. மனதில் புலம்பிக் கொண்டாலே தவிர வெளியில் பேசக் கூட இல்லை.
வாசுவின் அலைபேசி எண் அவளிடம் இருந்தாலும் அவனுக்கு அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை… அது கூட வாசு சுயவிவரப் படத்தை மாற்றும் வரை மட்டுமே நீடித்தது…
இங்கு வாசுவிற்கோ கடந்த நான்கு நாட்களும் மின்னல் போல் மின்னி மறைந்தன… இந்த நான்கு நாட்களும் அவனது ஸ்டடி ரூமே கதியென்று கிடக்கிறான். படிக்கிறான் என்று நினைத்தால் அதுதான் இல்லை கிட்டதட்ட மறந்து விட்டேன் என நினைத்த ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறான். மூன்று நான்கு, வருடங்களுக்கு பிறகு அவன் வரைகிறான்.
கிட்டத்தட்ட நான்கு நாட்களாக ரசித்து ரசித்து வரைந்த ஓவியம் இன்று முழுமையடைந்து இருக்கிறது. சோம்பல் முறித்தப்படி எழுந்தவன் அவன் வரைந்த ஓவியத்தை பார்த்தான்.
வரையும் போது கூட தோன்றாத உணர்வு அதனைப் பார்க்கும் போது தோன்றியது. மெல்லியதாக சிலிர்த்து அடங்கியது ஆடவனின் தேகம். மெல்லிய புன்னகையோடு ஓவியத்தை வருடியவன் அதனை தனது அறையில் பத்திரப்படுத்தி விட்டு நிமிர்ந்த நேரம் ஜானகி அழைத்தார்.
“சொல்லுங்கம்மா…” என்றவன் புருவங்கள் எதிர்ப்புறம் ஜானகி கூறிய செய்தியில் சுருங்கி விரிந்தது..
“அம்மா…நீங்க ஃபீல் பண்ணாதீங்க நான் கிளம்பி வரேன். இப்பவே உங்கம்மாவை பார்க்க போலாம்…” என்றவன் அடுத்த சில நிமிடங்களில் ஜானகியை அழைத்துக் கொண்டு ஈரோட்டை நோக்கி பயணப்பட்டான்.