Skip to content
Post Views: 4,108
இரவு மணி பத்தை கடந்திருந்தது. குளிர் காற்று அவ்விடமெங்கும் பரவி நடுக்கத்தை விதைக்க, மருந்துகளை அடுக்கி வைக்கும் அந்த சேமிப்பு அறையினை நெருங்கியதும் மனதில் ஆயிரம் தைரியம் கூறிக்கொண்டாள்.
தைரியத்தை திரட்டி செல்லும் அளவிற்கு அவ்விடம் பயம் தருபவை அல்ல, ஆனால் அங்கிருந்த மனிதர்களை நினைத்து தான் சற்று பதட்டம்.
திடப்படுத்தி அங்கே நடந்தவள் சுற்றி இருந்த மனிதர்களை முதலில் ஆராய்ந்தாள். சந்தேகப்படும்படி எவரும் இல்லை.
ஆனால் அங்கு பாதுகாப்பிற்காக எப்பொழுதும் இருப்பதை போல் இருவர் இல்லாமல் அதிசயமாக ஒருவன் மட்டுமே இருந்தான். அஞ்சுவின் தந்தை சற்று நேரத்திற்கு முன்பு தான் வெளியே சென்றிருந்தார். அதை கவனித்தே தைரியமாக வந்தது.
Advertisement
“என்ன சிஸ்டர் வேணும்?” காவலுக்கு நின்றவன் கேட்க அங்கு கண்களில் தெரிந்த சில பல மருந்துகளை காட்டினாள்.
“இது நேத்து காலைல தானே ரிபில் பண்ணேன், அதுக்குள்ள தீந்துடுச்சா?”
வியப்போடு அவள் கேட்டத்தை எடுக்கும் வேலையில் இறங்க, அவன் மேல் ஒரு கண்ணும், அங்கிருந்த மருந்துகளை அறிவதில் மறு கண்ணையும் பதித்திருந்தவளுக்கு, மூடப்பட்டிருந்த பின் பக்கத்தின் கதவு கவனத்தை ஈர்த்தது.
Advertisement
அவளுக்கு தெரிந்து அதை பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை. எப்பொழுதும் இருக்கும் பூட்டு கூட இன்று இல்லை.
Advertisement
நிச்சயம் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவள் வேறு சில பொருட்களையும் அறுவை சிகிச்சை அறைக்கு தேவை என கூறி மேலும் சில நொடிகளை நீடித்து அவ்விடத்தை நெருங்கி பார்க்க சில பல காகிதங்களை தவிர எதுவுமில்லை.
அதனை ஒட்டி இருந்த குப்பை தொட்டியில் பார்க்க எதன் மீதும் சந்தேகம் வரவில்லை, ஒரு குப்பையை தவிர. அதுவும் குப்பை தொட்டிக்கு வெளியில் கிடந்தது.
சாதாரண குப்பை போல் அல்லாமல் அதனை சுற்றி இருந்தது அன்று அவள் பார்த்த அதே மருந்து காகிதங்கள் தான். உடனே அதனை எடுத்து தன்னுடைய புடவையினுள் மறைத்தவள் எதுவும் நடவாதது போல் மருந்துகளை வாங்கி சென்றுவிட்டாள்.
Advertisement
மனம் படபட என அடித்துக்கொண்டது. தவறே செய்யாமல் இப்படியா தான் பயம்கொள்ள வேண்டும் என்று. ஆனாலும் வேறு வழியில்லையே, தவறு செய்பவர்களை சிறு தூசி நெருங்கினால் கூட சுதாரித்துவிடுவார்களே.
சரியோ தவறோ, உண்மையோ பொய்யோ அது தன்னோட போகட்டும். என்று தன்னுடைய கையில் அழுத்தமான ஆதாரம் வருகிறதோ, அன்று அர்ஜுன் வீட்டினரிடம் கொடுக்க முடிவெடுத்திருந்தாள்.
விறுவிறுவென கையில் இருந்த பொருட்களை கூட கருத்தில்கொள்ளாமல் மருத்துவமனை ஆய்வகத்திற்கு சென்றவள் அர்ஜுன் பெயரை கூறி அந்த மருந்தினை எதற்கு பயன்படுத்துகிறோம், அதில் போதை பொருளின் அளவு என்ன என்பதை தெளிவாக விளக்க வேண்டுமென கேட்டிருந்தாள்.
அதன் முடிவை தானே நேரில் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்க அங்கிருந்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் இலக்கியாவை நன்கு தெரிந்திருந்த காரணத்தால் தானே அவள் கைகளில் வந்து ஒப்படைக்கிறேன் எனவும் கூறியிருந்தாள்.
வந்த வேலை முடிந்த நிம்மதியில் இலக்கியா சற்று சுறுசுறுப்பாக தன்னுடைய வேலைகளை தொடரலானாள்.
அர்ஜுன் அன்று இலக்கியாவை பேசிய பிறகு அடுத்த நாளே தன்னுடைய வேலை நேரத்தை இரவுக்கு மாற்றிக்கொண்டாள்.
அவனை சுத்தமாக தவிர்த்து அவன் கண்ணிலே படாமல் ஓடி ஒளிந்தாள். அவனை பார்க்க பார்க்க தன்னுடைய தவறும், அதில் அவன் அனுபவிக்கும் வேதனையும் அவளை மேலும் குறுக செய்ய, தன்னால் பறிபோன நிம்மதியை தானே மீட்டெடுத்தாள் தன்னுடைய இருப்பு இல்லாமல்.
அவன் கோவத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியவில்லை, தன்னுடைய மனதிற்கு பிடித்தவனை வேறொரு பெண்ணுக்கு கொடுக்க முடியாமல் அவள் தவித்தது போல் தானே, தன் மனம் நாடும் தகுதியில் இல்லாத பெண்ணை மனைவியாய் ஏற்று வாழ அவனுக்கு கசக்கும்?
அதனால் தான் இந்த ஒதுக்கம்.
மூன்று வாரங்களாகியது அவனை பார்த்து. மறைந்தாவது அவனை பார்த்துவிடேன் என இறைஞ்சும் இதயத்தை கட்டிப்போட்டு இயந்திரமாக வேலையை செய்தாள்.
அவன் இல்லாத நேரம் வீட்டிற்கு செல்வதும், அவன் இருக்கும் நேரம் இல்லாத வேலையை பிடித்து வைத்து செய்வதும் அவளுக்கு அத்தனை கடினமாக இருக்கும். அவனும் ஒரு நாளும் அவளை தேடி வந்ததில்லை.
‘உன்னை அவன் தேடி வர இருவருக்குள்ளும் என்ன இருக்கிறது?’ என்று கேட்கும் மனசாட்சியின் கேள்வியும் நியாயமாக தான் பட்டது.
உறக்கம் கூட அரிதாகி தான் போனது. அதிகபட்சம் நான்கு மணி நேர உறக்கம் தான். எல்லாம் பழகிவிட்டது இலக்கியாவிற்கு. காலை எட்டு மணிக்கெல்லாம் முடிந்துவிடும் பணி நேரமானது அவளுக்கு மட்டும் பத்து மணி வரை நீண்டது.
காரணம், அந்நேரம் தான் அர்ஜுன் வீட்டை விட்டு கிளம்பியிருப்பான். கசந்தாலும், அந்த வாழ்க்கையும் பழகிப்போய்விட்டது அவளுக்கு. நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மூளை வற்புறுத்தினாலும் மனம் அடித்துக்கொண்டது.
‘ஒருமுறை முயற்சி செய்யேன், இன்னொரு முறை, மற்றொரு முறை’ அடுக்கிக்கொண்டே சென்றது முடிவில்லாமல்.
மருத்துவமனை வந்த அர்ஜுன் நேராக சென்றது மருத்துவமனையில் இருக்கும் அவர்களது மேல் தளத்திற்கு தான்.
அவனுக்காக அவன் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் காத்திருந்தனர். அன்னை அழைத்ததிலே ஒரு யூகத்திற்கு வந்தவன் இங்கு அனைவரையும் பார்த்ததும் உறுதியே படுத்திவிட்டான்.
“இந்த திமிரு தான்டா உன் வாழ்க்கையை கெடுக்க போகுது” நிதானமாக வந்து நாற்காலியில் அமர்ந்தவனை பார்த்தவுடனே வரதராஜனுக்கு கோவம் தான் வந்தது.
“வராதா இரு” மகனை அமைதிப்படுத்தி பேரனிடம் வந்தார், “என்ன அர்ஜுன் நீ யோசிக்கிற?”
“இதுல யோசிக்க என்ன தாத்தா இருக்கு, எனக்கு தோணுறத நான் செய்றேன்” அலட்சியமாக பதில் வந்தது அவனிடமிருந்து.
“யோசிக்கிறதெல்லாம் செஞ்சு முடிகிற உன்னோட வேகத்தை குறைக்க தான் கல்யாணாம். சரியோ தப்போ அதோட விளைவுகளை உன்ன சார்ந்தே இருக்குற அந்த பொண்ணும் இனிமேல் அனுபவிக்கும்”
ராமகிருஷ்ணனின் பேச்சை கேட்டு இளக்கார சிரிப்பு அவனிடம், “அவ பண்ணதோட விளைவுகளை நான் அனுபவிக்கிறப்போ, அவளும் அனுபவிக்கட்டும். அப்போ தான என்னோட கஷ்டம் அவளுக்கு தெரியும்?”
“வாழ்க்கைன்னா உனக்கு விளையாட்டா போச்சா அர்ஜுன்? பழி வாங்க இப்டி துடிக்கிற” மகனின் போக்கை சுத்தமாக வெறுத்த பானு இடையில் வந்தார்.
“ம்மா, பழி வாங்குற அளவு நான் இங்க எதுவும் பண்ணல. என் பாதைல நான் ஸ்மூத்தா போய்ட்டு இருக்கேன். அதுக்கு தான் என்ன இப்டி நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க”
“பல்ல கடிக்காத அர்ஜுன். ஆளுக்கு ஒரு பாதைல போகிறதா கல்யாணம்?” என்றார் பரிமளா, அவன் அத்தை.
“மனசுக்கு பிடிச்சவங்களோட வாழுறதும் தான் கல்யாணம், என் மனசுக்கு பிடிச்சா இது நடந்துச்சு?”
வரதராஜன், “அந்த பொண்ணுகிட்ட அப்டி என்ன பிடிக்காததை நீ கண்டுட்ட?”
அர்ஜுன், “அழகு இல்ல, அறிவு இல்ல”
ராமகிருஷ்ணன், “குணம் இருக்கே”
அர்ஜுன், “குணம் மட்டும் இருந்தா போதுமா, அழகு இறுக்கத்தால் தான பாட்டியா நீங்க கல்யாணம் பண்ணீங்க”
வரதராஜன், “டேய் என்ன தாத்தாவை பாத்து குரலை ஏத்துற… குணம், அறிவு, அழகு எதுலயும் அந்த பொண்ணு குறைஞ்சது இல்ல. ஏன், நாங்க பாத்த அஞ்சுஸ்ரீயை விட நூறு மடங்கு இலக்கியா நல்ல பொண்ணு தான். பிடிச்சாலும் சரி பிடிக்கலானாலும் சரி, அவளை புரிஞ்சு அவளோட வாழ பழகு” என்றார் அதிகப்படியான கோவத்தோடு.
“மாப்பிள்ளை பொறுமையா பேசுங்க, அவன் கோவமும் நியாயம் தான். அதே போல நம்ம பக்கம் இருக்க நியாயத்தை அவனுக்கு எடுத்து புரிய வைங்க. ஆளாளுக்கு கோவப்பட்டா, வீணா விதண்டவாதம் தான் வளரும்”
சூடாக மாறிய சூழலை சற்று நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தார் சுந்தராஜன், பரிமளாவின் கணவர் அர்ஜுன் அருகே அமர்ந்தார்.
“சரி உன் வழிக்கே வர்றோம், என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” கோவத்தில் முகத்தை திருப்பி அமர்ந்தவன் சுவற்றை பார்த்து சிகையை கோதினான் முடிவெடுக்க முடியாமல்.
அவனுக்கே இது புதிது, நொடியில் முடிவெடுப்பவன், அவள் விசயத்தில் மட்டும் தடுமாறுவது தான் ஏனோ?
“வாழ்ந்து பாத்தா தானே, அந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா இல்லையானு சொல்ல முடியும் அர்ஜுன்”
“மாமா, என்னால முடியல. இந்த கல்யாணத்தை, அவளை ஏத்துக்க முடியல” என்றான் குரலை தழைத்து.
“சரி அப்போ டிவோர்ஸ் பண்ணிக்கிறியா?” பெரியவர்கள் அனைவரும் பதறி சுந்தராஜனை பார்க்க, அர்ஜுன் மொத்தமாய் முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டான்.
உணர்வுகளினால் நெஞ்சமே அடைத்தது அவளை விட்டு மீண்டு வரவும் முடியாமல் அவளோடு ஒட்டி நின்று உறவாடவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பு, என்னவோ செய்தது மனம். மூன்று வாரங்கள் அவளை பார்க்காததே பெருத்த குற்றஉணர்ச்சியாய் இருந்தது.
“டிவோர்ஸ் பண்ண முடியாதாமே ஒரு வருசத்துல” சபப்பைக்கட்டு கட்டினான்.
“சரி” என்றார் சுந்தர்ராஜன் சிரிப்பை வெளிக்காட்டாமல்.
“ஆனாலும் அவ பொய் ரொம்ப பேசுறா மாமா, நடக்காதது வாய்ப்பே இல்லாதது எல்லாம் பேசுறா. கோவம் தானே வரும் அப்போ?”
“ஒரு வேலை அந்த பொண்ணு பொய் சொல்லலைனா?”
விழித்தான் அர்ஜுன், “மாமா” என்று.
“ம்… அந்த பொண்ணு சொல்ற பொய் தான் உனக்கு பிரச்சனைனா, அந்த பொய் பொய்யாவே இல்லாம, உண்மையா இருந்தா என்ன அர்ஜுன் பண்ணுவ?”
அவனும் இதனை பலமுறை யோசித்திருந்தான், பல வருடங்கள் தெரிந்திருந்தாலும் அஞ்சுவும் அவனுக்கு பெரிதல்ல, இலக்கியாவும் பெரிதல்ல. எவர் பக்கமும் சாய்ந்து நியாயம் இதுவென காட்டும் எந்த ஒரு நிகழ்வும் நிகழவும் இல்லை.
“ஏன் என்ன கொழப்புறீங்க, அவளும் உயிரை வாங்குறா நீங்களும் மாத்தி மாத்தி கேள்வி கேட்டே கொல்லுறிங்க. எமோஷன்ல எந்த முடிவும் எடுக்க கூடாதுன்னு யோசிக்கிறவன் நான். சோ என்ன ப்ரியா விடுங்க”
வெளியேறியவனை குழப்பம் சூழ்ந்த விழிகளோடு அனைவரும் பார்க்க, “இன்னும் ஆறே மாசத்துல இலக்கியா பின்னாடி இவன் சுத்தலைனா என்ன என்னனு கேளுங்க” சுந்தர்ராஜன் அவனை ஒரே நிமிடத்தில் புரிந்துகொண்டார்.
ராமகிருஷ்ணனும் பேரனின் தவிப்பை உணர்ந்து தான் இருந்தார், “அவனை பத்தி ரொம்ப யோசிக்காத ம்மா, அவன் சரியாகிடுவான்” பானுவுக்கு ஆறுதல் கூறினார்.
“முடியல மாமா, இவன் ஒரு பக்கம் காலைல எல்லாம் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல்னு இருக்கான், இலக்கியா நைட் ஹாஸ்பிடல்ல இருக்கா. இவங்க பாத்து பேசி எனக்கு தெரிஞ்சு குறைஞ்சது ரெண்டு வாரம் இருக்கும். அந்த பொண்ண நீங்க பாருங்க, வாடி இளைச்சு போய்ட்டா. அப்டி என்ன இவனுக்கு பிடிவாதம்?”
பரிமளா, “பானு குழப்பத்துல இருக்கான் அவன். அந்த பொண்ண புடிச்சிருக்கு, ஆனா அவ பண்ணது ஏதோ அவனை அவ பக்கம் போக விட மாட்டிக்கிது. அவங்களே பேசி பிரச்சனைய தீத்துக்கட்டும்”
பானு, “இல்ல அண்ணி…”
“பானு” கணவனும் குரல் கொடுக்க அடுத்து அவரால் பேச முடியவில்லை.
சடசடெவென அடித்து வாங்கும் மழையில் நனைந்து தப்பித்தது போல் அறைக்குள் வந்த அர்ஜுனின் சிந்தனையில் அவ்வேளையிலும் ஆக்ரமித்திருந்தவள் மேல் அளவுகடந்த கோவம்.
ஒரு முடிவை எடுக்க விடாமல் அவளை சுற்றியே தன்னுடைய சிந்தனையை பறக்கவிட்டிருந்தாள், எல்லாம் மயக்கும் மாயவலை தான், எங்கிருந்து தான் ஒன்றும் தெரியாதது போல் வைத்துக்கொள்ளும் முகத்தை செதுக்கினாளோ.
“கூடையே இருந்தாலும் சாவடிக்கிறா, தள்ளி நின்னாலும் சாவடிக்கிறா. ப்ச்…” எரிச்சலோடு வேலையில் இருந்தவனிடம் ஒருவன் ஒரு கவரை ஒப்படைத்தான்.
ஆய்வகத்திலிருந்து வந்தது என பார்த்தவுடன் யூகித்தவன் வெளியேறவிருந்தவனை நிறுத்தினான், “இது நான் அனுப்பல, யார் கேட்டாங்கனு நல்லா செக் பண்ணு” என்றான்.
“இல்ல சார், இலக்கியா தான் வந்து குடுத்தாங்க, உங்க பேர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க”
அவனை அனுப்பி வைத்து யோசனையோடு அதை பிரித்து பார்க்க, அதில் இருந்த ஆய்வறிக்கையை வாசித்தவன் கோவம் கரை புரண்டோடியது.
நொடிகள் கூட வீணடிக்கவில்லை, மருத்துவமனையில் தன்னுடைய வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து வீட்டிற்கு விரைந்தான். அந்த படிவத்தை பிரித்து பார்த்தவன் கோவம் இன்னும் குறைந்தபாடில்லை, ஒரு வகை இறுக்கத்தோடு வந்தவனுக்கு அந்த வாகனத்தில் இருந்த குளிர் காற்று கூட எந்த வகையிலும் வெப்பத்தை தனிக்கவில்லை.
வீட்டினை நெருங்கிய சமயம் தனக்கு எதிரில் சோர்வாக நடந்து வரும் இலக்கியாவை கடந்தவன் நேரத்தை பார்த்தான். பதினொன்றை தாண்டி இருந்தது.
மருத்துவமனையிலிருந்து பத்து மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தாலும் பேருந்து பயணம் நிச்சயம் ஒரு மணி நேரம் பிடிக்குமென்பதும் தெரியும். சோர்ந்து, நடக்கவே சிரமப்படுகிறாள் என்பதை அறிந்தவன் வாகனத்தை அடுக்குமாடி கட்டிடத்தின் வெளியிலே நிறுத்தி கீழே இறங்கினான்.
error: Content is protected !!