Skip to content
Post Views: 4,448
ஏதோ ஒரு உந்துதலில் தலையை நிமிர்த்தி பார்த்த இலக்கியா உறைநிலைக்கு சென்றுவிட்டாள். மூன்று வாரங்கள். முழுதாக மூன்று வாரங்கள் அவனை பார்க்காமல் இருந்தது இதுவே முதல் முறை இந்த மூன்று வருடங்களில்.
கண்களில் நீர் நிரம்பி, கண்ணீருக்கு இடம் போதாமல் சில துளி நீரை வெளியேற்ற சட்டென தலை தாழ்த்திக்கொண்டாள். இந்த மனதை அவனுக்கு காட்ட கூடாதென்று தானே அவனிடமிருந்து தள்ளி நின்றது, இப்படி உயிரையே படிக்கும் பார்வையில் பார்த்தால் உணர்வுகள் கரைபுரண்டோடாமல் என்ன தான் செய்யும்?
அசௌகரியமாக உணர்ந்தவள் திரட்டிய தெம்பை வைத்து விறுவிறுவென உள்ளே நடக்க, அர்ஜுனும் பின்னே சென்றான். கடந்த அரை மணிநேரமாக இருந்த கோவம் எங்கு சென்றதென தெரியவில்லை. என்ன பார்வை இது? அதிலும் அந்த கண்ணீர்?
எதற்காக தன்னை பார்த்த அடுத்த நொடி முகம் பிரகாசிக்க, இதழ் துடிக்க கண்ணீர் சிந்தினாள்? தவிப்பா, ஆசையா, பரிதவிப்பா, இல்லை… அர்ஜூனால் அதனை யோசிக்க கூட முடியவில்லை.
Advertisement
எப்படி கவனிக்க தவறினேன், அதிலும் தன்னோடு தான் இரண்டு மாதங்கள் ஒரே வீட்டில் இருக்கிறாள். தன்னை சுற்றியே வட்டமிடும் அந்த பார்வையை எப்படி இத்தனை நாட்கள்… ஐயோ கடவுளே…
சீரற்ற மூச்சு உருவாக நெஞ்சினை நீவிக்கொண்டான். நிச்சயம் சூழலை காரணம் காட்டி நடந்த திருமணமாக தெரியவில்லை அவனுக்கு. தன்னுடைய மனைவி சில ரகசியங்களை மனதில் வைத்தே தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.
மின்தூக்கியை அடைந்தவள் பின்னே வந்தவன் மௌனம் அவளை இன்னும் நெருடியது. கைகளை மார்போடு கட்டி நின்றவன் அவள் பக்கமே திரும்பவில்லை.
Advertisement
மின்தூக்கியினுள் இருந்த அமைதியில் இருவருக்கும் பயம், தன்னுடைய இதய துடிப்பினை மற்றவர் கேட்டுவிடுவாரோ என்ற பயம். கதவு திறந்ததும், முன்னேறிய அர்ஜுன் வீட்டினை திறந்து தன்னறை சென்றவன் அவளுக்கான தனிமை நேரத்தை கொடுத்தான்.
Advertisement
இலக்கியாவிற்கு பதட்டமாக இருந்தது.
நிச்சயம் தன்னை தேடி தான் வந்துள்ளான் என்பதை உணர்த்த, ஆய்வகத்திலிருந்து அழைப்பு வேறு வந்தது, “சாரி இலக்கியா, வேற லேப் டேக்னிஷியன் அர்ஜுன் சார் பேர் இருக்கவும் அவர்கிட்ட ரிப்போர்ட்டை குடுத்துட்டான்” அவ்வளவு தான், சோர்ந்து போனாள்.
இதற்காக தான் வந்துள்ளான் என அறிந்து கண்களை ஒட்டி நின்ற தூக்கம் கூட ஓடியது. எத்தனை சூடு சொற்களை தாங்க வேண்டுமோ என்ற பயத்தில் குளித்து அவனுக்காக காத்திருக்க வந்தான் அரை மணி நேரத்தில்.
Advertisement
“அந்த ரிப்போர்ட் கொஞ்சம்…”
“சாப்பிட்டியா?” இடையிட்டு கேட்டான் அவளை.
ஆமாம் என இலக்கியா தலையை ஆட்ட அவள் முகம் பார்த்தே உண்மையறிந்தவன் எழுந்து அவளுக்கான உணவை எடுத்து வந்து கையில் கொடுத்தான். அர்ஜுன் செய்வது நிறைவாய் இருந்தாலும் பயமும் உடன் போட்டிபோட்டு நின்றது.
“எனக்கு வேணாம்” என்றாள் தலை கவிழ்த்து.
“ஏன்?” மெலிந்து காணப்படும் அவள் உடலை பார்த்தே தன்னையே மறந்து அவளுக்கென அர்ஜுன் உணவினை தட்டில் எடுத்து வந்தது.
இலக்கியா, “பசிக்கல”
அர்ஜுன், “பரவால்ல சாப்பிடு”
அவள் தயங்கினாள், கையை நீட்டி கூட வாங்காமல் மௌனமாய் இருக்க, அவளுக்கு எதிரே ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான் தட்டை சற்று தாழ்த்தி.
“என்ன யோசிக்கிற?” தலை சாய்த்து தாழ்த்திருந்த அவள் முகம் பார்க்க முனைந்தான்.
அவனது நெருக்கம் இலக்கியாவின் இதயத்தை கூறுப்போட்டது. பெருகிய அளுகையை கட்டுப்படுத்த முடியாமல் வாயை பொத்தி அழுத்தவள் உடல் குலுங்க அவனை பார்த்தாள், “ப்ளீஸ் என்கிட்ட நீங்க வராதீங்க, அதுவும் இப்டி அக்கறையா உரிமையா வரவே வராதீங்க”
அவள் பேச்சின் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு. புருவம் சுருக்கினான், “பயமா இருக்கு, ஒரு நிமிஷம் இப்டி சிரிக்க வச்சீங்கனா அடுத்த நிமிஷம் வார்த்தையால மனச ஒடைச்சு போடுறீங்க.
நான் சொல்றதையும் நம்ம மாட்டிக்கிறீங்க, என்னையும் புரிஞ்சுக்காம இப்டி ஒவ்வொரு நிமிஷமும் நாக்குல விஷத்தை தடவி பேச தான் இங்க கூட்டிட்டு வந்திங்களா? தப்பே பண்ணாம நான் ஏன் சார் இவ்வளவு வேதனையை அனுபவிக்கனும்?
நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண பத்தி தப்பா சொல்லி எனக்கென்ன ஆக போகுது… இல்ல அன்னைக்கு நான் தான் உங்கள நெருங்கி வந்து நின்னு பேசுனேனா?”
கண்ணீரை வேகமாக துடைத்தாள், “சரி என்ன தான நம்ப மாட்டீங்க, இன்னைக்கு உங்களுக்கு வந்த டெஸ்ட் எடுத்து பாருங்க, அதுல உண்மை இருக்கும்” அவள் பேசுவதை மெதுவாக அவதானித்தவன் அவள் கையிலே அந்த காகிதத்தை வைத்தான்.
எடுத்து பார்த்தவள் அதிர்ந்து அவனை பார்க்க, “என்ன சொல்ல போற இதுக்கு?” என்றான்.
அவள் ஆய்விற்கு கொடுத்திருந்த மருந்து வலி நிவாரணி என்றும், அதில் தேவை அதிகமாக எந்த விதமான போதை வஸ்துவும் இல்லை என்பது தெளிவாக இருந்தது. சத்தியமாக இந்த முடிவினை இலக்கியாவால் நம்ப முடியவில்லை.
நிச்சயம் இது பொய்யானதென்றும் அவளால் உறுதியாக கூற முடியும். ரிகிரியேஷனல் ஹைட்றோகிளோராய்ட் கிராக். அடுக்கடுக்காக அத்தனை பெட்டிகளில் இருந்த அந்த மருந்தினை அர்ஜுனை அழைத்து வந்து காட்டும் பொழுது எங்கே போனது?
தவறில்லை எனில் எதற்கு அஞ்சு தன்னை அதனை நெருங்கி செல்லவே தடுக்க வேண்டும்? இப்பொழுது அது வலி நிவாரணி என கூறவும் ஏற்கவும் முடியவில்லை. அவள் முன்னே கிடந்த அந்த மருந்தை கண்கொட்டாமல் பார்த்தாள்.
“அன்னைக்கு நீ சொன்னது இதே மெடிசின் தானா?” ஆம் என தலையை ஆட்டினாள்.
“அஞ்சு அப்பா இந்த ஹாஸ்பிடல்க்கு மட்டும் மெடிசின் சப்ளை பண்றவர் இல்ல. இதே போல இன்னும் எத்தனையோ ஹாஸ்பிடல்ஸ்க்கு சப்ளை பன்றார்.
ஸ்டாக் வைக்க அவசரத்துக்கு இங்க கொஞ்ச நேரம் வச்சிருக்க வாய்ப்பிருக்கு. அதை கூட உன்னால புரிஞ்சுக்க முடியல, ஏதேதோ காரணம் சொல்லி மொத்தமா நீ மாத்திவிட்டுட்ட.
நடந்தது நடந்து போச்சு, இது தான் என்னோட விதின்னும் ஆகிடுச்சு. இனி இத அப்டியே விட்டுடு. தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம தப்பால இன்னொருத்தர் பாதிக்க பட கூடாது. இது அவரோட பிசினஸ்க்கும் தான் பாதிப்பை தரும். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் இட்”
பொறுமையாக கூறி அர்ஜுன் தன் அறையை நோக்கி நடக்க மீண்டும் நின்றான் அவளை பார்த்து, “நாளைக்கு நீ மார்னிங் டியூட்டில ஜாயின் பண்ற. பண்ணனும்” அழுத்தமாக கூறி சென்றவனை வெறுமையாக பார்த்தாள் இலக்கியா.
உதடு ஒரு ஓரமாக சுளித்தது, என் பேச்சை நீ கேட்க தயாராக இல்லை எனும் பொழுது நான் எதற்கு உன் பேச்சை கேட்க வேண்டும் என்கிற திமிர். அவனோடு இருந்து அவளுக்கும் அந்த திமிறி ஒட்டிக்கொண்டதோ?!
அடுத்து வந்த நாட்கள் அவன் கூறியதற்கு நேர் மாறாக தான் அவள் செயலும் இருந்தது. இரவு பணியை மீண்டும் தொடர்ந்தாள். இப்பொழுது அடிக்கடி இலக்கியாவின் கால்கள் சேமிப்பு கிடங்கை நோக்கி நகன்றது.
அஞ்சுஸ்ரீ குடும்பம் ஏதோ செய்கிறது ஏதோ செய்கிறது என உள் மனம் எச்சரிக்கை முயற்சியை விடவில்லை.
வரதராஜனிடம் தான் சில காலங்கள் மெடிக்கல் பிரிவில் இருப்பதாக வேண்டுகோள் வைக்க, மருமகள் கேட்டு அவரால் மறுக்க முடியவில்லை. மகனோடு மருமகளின் நெருக்கம் என்று தான் நிகழுமோ என்ற வருத்தத்தோடு அவள் கேட்டத்தை செய்தும் இருந்தார்.
சந்தர்ப்பம் அமைய மீனை தேடும் கொக்காய் காத்திருந்தவளுக்கு சில நொடிகள் தனிமை கிடைக்க மொத்த இடத்தையும் அலசி ஆராய்ந்துவிட்டாள்.
சிறு துரும்பு கூட கிட்டாது போக, அங்கு பணிபுரிபவர் அமரும் கணினி மேஜையில் சோர்வாக அமர்ந்த நேரம் கண்ணில் பட்டது அந்த மருந்து. உடனே யோசிக்காமல் அதை எடுத்து வைத்துக்கொண்டவள் அடுத்த நாள் காலை வீட்டிற்கு சென்றதும் அந்த மாத்திரைகளை தனக்கு முன்னாள் வைத்து பார்த்தாள் சில நிமிடங்களாக.
நிச்சயம் போதை வஸ்து தான் அது என அடித்து கூற முடியும். இல்லையெனில் எதற்கு அந்த மனிதர் தன்னுடைய அலமாரியில் அதனை ஒளித்து வைத்திருக்க வேண்டும்?
என்ன செய்யலாம், ஏதாவது செய்தே தீர வேண்டுமென யோசிக்க, திடீரென விபரீதமான எண்ணம் ஒன்று தோன்ற, உடனே அதிலிருந்து இரண்டு மாத்திரையை எடுத்து வாயில் போட்டு கையேடு ஒரு தூக்க மாத்திரையையும் விழுங்கி போர்வையை தலை வரை போர்த்தி படுத்துகொண்டாள்.
‘ஐயோ போதை பொருளை உண்டுவிட்டேன். போச்சு ஏதேதோ உலர போறேன், கடவுளே தூக்கம் குடு தூக்கம் குடு. நான் எதுவும் லூசு மாதிரி செஞ்சிட கூடாது. முக்கியமா நைட் எட்டு மணிக்கு என்ன எப்படியாச்சும் எழுப்பி விட்டுடு… கடவுளே கடவுளே’
இறைவனை வேண்டி படுத்திருந்த பெண்ணுக்கு உறக்கம் கண்களை சொருக தன்னையும் மீறி உறங்கிவிட்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்தது.
இனிய அழகு கனவு வந்து பெண்ணை சிரிக்க வைக்க, புன்முறுவல் இதழ்களில் அழகாய் பூத்தது.
ஒரு அவசர அறுவை சிகிச்சையை செய்ய இரவே மருத்துவமனை வந்திருந்த அர்ஜுன் அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்து காலை அவன் பாட்டி ராதாவை சென்று பார்த்து அப்பொழுது தான் இல்லம் திரும்பினான்.
சுகமாய் சிரித்த முகத்தோடு உறங்கிக்கொண்டிருந்த இலக்கியாவை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டது அவன் நொடிகள்.
‘மனுஷனோட தூக்கத்தை கெடுத்துட்டு நிம்மதியா தூங்குறத பாரு… நிம்மதியாவே விட மாட்டிக்கிறடி என்ன’ முறைத்துவிட்டு தன்னறைக்குள் சென்றவன் ஷவரின் அடியில் அப்படியே நின்றுவிட்டான்.
கண்களை மூடினால் அனுமதியின்றி வந்து அமர்ந்துகொள்கிறாள். கோவமாக வந்தது, தடயமில்லாமல் வாழ்க்கையில் இருந்தவள் அப்படியே சென்றிருக்கலாமே எதற்காக மௌனமாய் மெதுவாக ஒவ்வொரு அணுவாய் உடலை குடைந்து அதில் நிம்மதி பெருமூச்செறிகிறாள்?
முடிவை எடுக்க விடவில்லை அவள் கண்களில் அன்று தெரிந்த பாஷைகள்.
‘போ’ என அனுப்பவும் முடியவில்லை, ‘நான் செல்கிறேன், உன் பாடை நீ பாரு’ என தானும் விலக முடியவில்லை.
அன்று அவ்வளவு கூறியும் இப்பொழுதும் மருந்தகத்தில் வேலையை மாற்றி சென்றிருக்கும் மனைவியை என்ன கூறி மாற்றுவது?
தலையில் குளிர்ச்சியாக சிந்தும் நீரில் மெல்ல மெல்ல பாரம் குறைய வெளியேற மனமில்லாமல் நின்றிருந்தவனை ஏதோ நொறுங்கும் சத்தம் விழிக்கச் செய்தது.
மெல்ல மெல்ல ஏதோ சத்தம் வர அவசரமாக உடை அணிந்து அர்ஜுன் கீழே வந்து பார்க்கும் பொழுது இலக்கியா தரையில் வயிற்றை பிடித்து துடித்துக்கிடந்தாள். வேகமாக வந்து அவளை பார்க்க, முகமெல்லாம் கருத்து கண்கள் சிவந்து, வியர்த்து அழுதுகொண்டிருந்தாள்.
அந்த முகத்தை பார்த்தாலே வேதனையின் அளவு தெரிந்துவிடும், அவளுக்கருகில் அமர்ந்தவன், “என்ன பண்ணுது, ஏன் இப்டி அழுகுற?”
ஆறுதலுக்கு ஒரு வார்த்தை கிடைத்ததும் கட்டுப்படுத்திய அழுகையெல்லாம் உடைப்பெடுக்க தலையை சோபாவில் சாய்த்து கண்களை மூடி வாய் விட்டு அழத் துவங்கினாள்.
மேலும் பயம்கொண்டவன் வயிற்றை இறுக பற்றியிருந்த அவள் கைகளையும் புடவை தலைப்பையும் விளக்கி அவள் வயிற்றில் கரம் பதித்து பார்க்க சூடாக எல்லாம் இல்லை.
ஆங்காங்கு அழுத்தி பார்த்தவன், “இங்க வலிக்கிதா… இங்க… இங்க” என கேட்க அனைத்து இடத்திலும் வலிப்பதாக தலையை ஆட்டினாள்.
“என்ன சாப்பிட்ட?” என்றான் வேகமாக. பயத்தில் இதயம் படபடக்க, மூச்சுக்கு சிரமப்பட துவங்கினாள்.
“ஹே என்னடி பண்ணுது?” அவளது இதய துடிப்பை பார்த்தவன் நொடி தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளி அருகில் இருந்த தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சேர்த்துவிட்டான் முதலுதவிக்காக.
செல்லும் வழியெங்கும் அவள் பட்ட வேதனையை பார்த்த மருத்துவனுக்கே தாளவில்லை. அவளை விட அவன் மனம் அதிகம் துடித்தது.
முதலுதவி செய்த பிறகு, “டிரீட்மென்ட் ஒடனே பண்ணா நல்லது அர்ஜுன். யோசிச்சுக்கோங்க. அவங்க பிளட் பிரஷர் லோ ஆகிடுச்சு, ஆக்சிஜன் லெவலும் கம்மியா தான் இருக்கு. இந்த நேரத்துல அஸ் எ டாக்டர் நீங்க ஒருத்தர இன்னும் அரைமணி நேரம் ட்ராவல் பண்ண அலோவ் பண்ணுவீங்கன்னா தாராளமா கூட்டிட்டு போங்க” என்றிட,
மருத்துவனை தாண்டி அர்ஜூனாய் யோசித்து மேலும் சிகிச்சையை துவங்க கூறினான்.
ஒரு மணி நேர பரிசோதனைக்கு பிறகு அர்ஜுனை தனியே அழைத்து சென்றவர், “ட்ரக்ஸ் எடுக்குற பழக்கம் இருக்கா அவங்களுக்கு?”
பயந்துவிட்டான் அர்ஜுன், “இல்ல” என்றான் வேகமாக.
“பட் ஷி இஸ் ஆன் ட்ரக்ஸ். மேபி இது பர்ஸ்ட் டைமா கூட இருக்கலாம். வெறும் வயித்துல சாப்ட்ருக்காங்க. அல்சர் ஏற்கனவே இருக்கு, அதுவும் டோஸேஜ் அதிகம் எடுத்ததால ப்பைய்ன் அதிகமாகிடுச்சு.
பல்ஸ் லோ ஆனது, ஆக்சிஜன் லெவல் கம்மியானதுனு எல்லாமே அந்த ட்ரக்ஸ் தான் காரணம். இல்ல அவங்க சூசைட் பண்ண எதுவும்…”
சந்தேகத்தை அவர் வைக்கும் முன்பே, “வாய்ப்பே இல்ல. அவ அப்டி பண்ண மாட்டா. ப்ளீஸ் இத பத்தி வெளிய சொல்லாதீங்க. முக்கியமா தாத்தாக்கு தெரிய வேணாம்”
அவரும் ஆமோதிப்பாய் தலை அசைத்துவிட இலக்கியா இருந்த அறைக்குள் சென்றவன் ஓய்ந்து அமர்ந்துவிட்டான்.
error: Content is protected !!