சிறகில்லாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்த கருமேகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று திரண்டு அந்த மதிய வேளையை மாலை பொழுது போல காட்டிக் கொண்டிருந்தது…
Advertisement
அதே நேரத்தில் வாசுவும், ஜானகியும் ஈரோட்டை அடைந்திருந்தனர்…
மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தவனது முகமே கூறியது இன்றைய ஈரோடு பயணத்தை எதிர்பார்க்கவில்லை என்று.
Advertisement
Advertisement
ஏன் ஜானகி கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். ஜானகியின் தாயான அய்யமாளுக்கு உடல் நிலை சீராக இல்லை என்று பானுமதி அழைத்து கூறியதுமே மகனை அழைத்து கொண்டு வந்துவிட்டார்.
இத்தனை வருடங்களாக அவர்களின் பக்கம் கூட செல்லாமல் இருந்தவர் தான் இன்று முதல் ஆளாக கிளம்பியிருக்கிறார்.
Advertisement
தாய், தந்தையின் மீது கோபமெல்லாம் இல்லை என்றாலும் அவர்களை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் அவரிடமில்லை. அதுக் கூட அவர்களை காணும் வரை மட்டுமே நீடித்தது…
அதுவும் இதயாவின் திருமணத்தில் “கண்ணு…” என்று தந்தையின் பார்வையும் மீறி தன்னை நோக்கி நடந்த தாயின் முகம் கண்களுக்குள் நின்றது.
‘நீங்க அவரை பத்தி தப்பா புரிஞ்சு வைச்சு இருக்கீங்க, அவர் ரொம்ப நல்லவர்… என் காதலை பிரிக்க நீங்க இப்படியெல்லாம் சொல்றீங்க. நான் அவர் கூடயே போயிடறேன்… என்னை நிம்மதியா வாழ விடுங்க…” என கூறிவிட்டு வந்த நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் மனதை குத்தியது.
அன்றைய நாட்களின் தாக்கம் இன்றும் நினைவில் இருக்கிறது அவருக்கு…
ஜானகி பெயருக்கு ஏற்ப அத்தனை அழகானவர். பெற்றவர்களின் பேச்சை மீறி தான் காதலித்தவனை மணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காதலனுடன் திகட்ட திகட்ட காதல் வாழ்க்கை வாழ்ந்தவர். யாரின் கண் பட்டதோ ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் மூன்று மாத கர்ப்பிணியை தனியே தவிக்க விட்டு சென்று விட்டான் காதலித்தவன்…
கணவன் வருவான் என்று காதல் மனம் ஒருபுறம் கூற, மற்றொரு மனமோ தாய், தந்தையின் பேச்சை கேட்டிருந்தால் இந்நிலை வந்திருக்குமா எனக் கைத்தட்டி சிரித்தது. ஒருமனம் எச்சரிக்க, மற்றொரு அவனுக்காக காத்திரு என்று கட்டளையிட்டது…
இரு மனங்களின் போராட்டத்தில் கடைசியில் காதல் மனமே வென்றது. அதன்படி தாய், தந்தையிடம் செல்லாமல். பாதியில் விட்டு சென்ற கணவனை நினைத்து கொண்டே காலத்தை நெட்டி தள்ளினார். ஜானகியை பொறுத்தவரையில் தன் கணவன் உத்தமன். விட்டு சென்ற கோபம் ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம் காதலும் நிறைந்து இருந்தது. நிச்சியம் அவர் விட்டு சென்றதற்கான காரணம் இருக்கும் என்று நம்பினார்.
நாட்கள் உருண்டோடியது. வாசு பிறந்து மூன்று வருடங்கள் கடந்திருந்தன. அப்படியான ஒரு நாளில் தான் கோவிலில் சுந்தரத்தையும், மீனாட்சியையும் பார்த்தாள். சாதரணமாக சென்ற பேச்சு கடைசியில் அவர்களோடு இருவரையும் அழைத்து செல்லும் அளவிற்கு கொண்டு வந்தது.
முதலில் படித்த படிப்பிற்கு வேலை கொடுத்தார்கள்… அந்த வேலை செய்து கொண்டே மேற்படிப்பை தொடர்ந்தாள். இதற்கிடையில் வேறு திருமணம் செய்து கொள் என்று மீனாட்சியும், சுந்தரமும் கூறியிருக்கிறார்கள். காதல் கணவனை மனதில் நினைத்து மறுத்துவிட்டாள்.
அவளது காத்திருப்பு பல நாட்கள் தொடங்கி பல வருடங்களில் முடிந்திருந்தது. அப்போது வாசுவிற்கு பதினைந்து வயது. அப்பொழுது தான் மீண்டும் அவன் வந்திருந்தான் இனி எல்லாம் வசந்தமே என நினைத்த நேரத்தில் அவரின் நம்பிக்கை மீண்டும் அடிவாங்கியது.
ஆம், இரண்டே நாட்களில் வீட்டிலிருந்த அனைத்து நகைகளையும் எடுத்து கொண்டு சென்று விட்டான் ஜானகியின் காதல் கணவன். அத்தோடு நில்லாமல் மூன்றாம் முறை அவனை நம்பி பெரும் தவறை செய்தார் ஜானகி.
அம்முறை அவனை வீட்டினுள் அனுமதிக்காது இருந்திருந்தால் இதயாவிற்கு அக்கொடுமை நடந்திருக்காதோ என்னவோ… அந்நிகழ்விற்கு பிறகு அவன் கொடூரமான முறையில் வாசுவின் கையாலேயே இறந்திருந்தாலும் இப்போது வரை இதயாவின் முகத்தை கூட பார்க்க தயங்கி கொண்டிருக்கிறார் ஜானகி.
ஒரு உண்மையான காதல் ஒருவனை கிறுக்கனாக்கி, பைத்தியமாக்கி, முட்டாளாக்கி பார்க்கும் என்பது எத்தனை பெரிய உண்மை.
இந்த காதல் சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்,ஜானகியின் வாழ்க்கையில் அது சாபமாக அமைந்தது என்பது தான் கசப்பான உண்மை… ஒரு காதலியாக தோற்றாலும் ஒரு தாயாக வெற்றி பெற்று இருக்கிறார் என்ற எண்ணம் தான் அவரை இப்போது வரை நடமாட வைத்திருக்கிறது… ஆனால் அவரே எதிர்பாராத ஒன்று காதலியாக தோற்றவர் அதே காதலனிடம் ஒரு தாயாகவும் தோற்று விட்டார் என்று.. அதை அவர் அறிந்தால்?
வாகனத்தின் சிறு அதிர்வில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவர்
முகத்தை அழுத்தி துடித்துக் கொண்டு மகனை பார்த்தார். அவனோ ஒரு கையில் ஸ்டிரீங் வீலை பிடித்தபடி மற்றொரு கையில் அலைபேசியுடன் அல்லாடிக் கொண்டிருந்தான்.
ஏதாவது முக்கியமான விசயமாக இருக்கும் என நினைத்தவர் பார்வையை ஜன்னலின் புறம் திரும்பிக் கொண்டார்.
இங்கு வாசுவோ தன் அலைபேசிக்கு விடாமல் வந்த குறுஞ்செய்தியை தான் வாசித்துக் கொண்டிருந்தான்.
பேல்பூரி… காளான் பூரி…
மசாலா பூரி…
நானே உன் காதல்காரி…
என்ற வரிகளை படித்ததும் அவ்வரிகளுக்கு சொந்தக்காரி யாரென்று தெளிவாக புரிந்தது…
“இவளை…” என பல்லைக் கடித்தவன் அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாது பாக்கெட்டில் அலைபேசியை போட்டான்.
அதற்கு பின்னான நிமிடங்கள் குறுஞ்செய்தியின் ஓசைக் கேட்டாலும் அதனை திறந்து பார்க்கவில்லை. அவனது கவனம் முழுவதும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருந்தது. நிமிடங்கள் கடந்து மகனை பார்த்த ஜானகியோ “எங்கப்பா இருக்கோம்…” என்றார் கரகரத்தை குரலை சரிசெய்தப்படி…
திரும்பி தாயை பார்த்தவன் “ஈரோடு பள்ளிபாளையம் மா…” என்றான்.
மகனின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தபடி “ஒரெட்டு போயிட்டு வரலாம் தம்பி. புள்ளை முகம் கண்ணுக்குள்ளையே நிக்குது…” என்றார்.
அவனுக்குமே அப்படி தான் இருந்தது. ஏனோ அவளின் முகம் கண்களுக்குள்ளையே நின்றது. இருந்தும் கிழவியின் நிலை தற்போது என்னவென்று தெரியாமல் இதயாவை சென்று பார்ப்பது சரியாகப் படவில்லை. அதனலாயே “பாட்டியை பார்த்துட்டு வந்து பார்த்துக்கலாம் ம்மா…” என்றான்.
“இல்லை தம்பி, நம்ம பாட்டி வீடு ஈரோடு மெயின்ல இல்லை. அது இன்னும் இன்டரியரா போகணும். எப்படியும் டூ ஹார்ஸ் ஆகும். மறுபடியும் நம்ம வர நாள் ஆகலாம் நினைக்கிறேன். ஓரெட்டு இதயாவை பார்த்திட்டு போயிடலாம் ஒரு கால் மணி நேரம் தான் ஆகும்…” என்றதும் சரியென்றவன் ஹரியின் வீட்டிற்கு வாகனத்தை கிளப்பினான்.
****
அதே சமயம் இங்கு சுதனின் இல்லத்தில்…
தனது அறையில் அமர்ந்திருந்த சுதனின் கண்கள் இரண்டும் மடிக்கணினியில் இருக்க, ஒரு கை கேசத்தை அழுத்திக் கோதிக் கொடுத்தபடி இருக்க, மற்றொரு கையோ யாருக்கோ அலைபேசியில் அழைப்பை விடுத்துக் கொண்டிருந்தது.
இரண்டு, மூன்று ரிங்க்கில் எதிர்ப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்
“சார், உங்களுக்கு ஃபைனல் டிராயிங் அனுப்பி இருக்கேன். ஏதாவது கரெக்சன் இருந்தா சொல்லுங்க…”என்றவனது குரலில் வேலையை முடித்து விட்ட நிம்மதி தெரிந்தது. பின்னே நான்கு நாட்களாக அவனது நேரத்தை முழுவதுமாக வாங்கி கொண்டது அல்லவா…
அவனது கேள்விக்கு எதிர்ப்புறம் என்ன பதில் வந்ததோ “கண்டிப்பா சார்… வெயிட் நானே கூகுள் மீட் கனெக்ட் பண்றேன்…” என்றவன் அழைப்பை துண்டித்து மடிக்கணினியில் வீடியோ காலை இணைத்தான்.
காணொளியில் தெரிந்த இருவரையும் பார்த்தவன் புன்னகைத்தப்படி “ஹாய் மேம், ஹலோ சார்…” என்றான் கையசைத்து.
அடுத்து அவனே “எப்படி இருக்கீங்க மேம்…” எனக் கேட்டான்.
“ஃபைன் சார்…நீங்க எப்படி இருக்கீங்க?…” அளவான புன்னகையோடு கேட்டாள் அழைப்பில் இருந்த பெண்.
“குட் மேம்…” என்றவன் அடுத்த நிமிடம் தனது கணினியின் பக்கத்தில் வரைப்படத்தை இணைத்தான். அவன் காட்டிய வரைப்ப்படத்தை பார்த்துக் கொண்டே “சார்… எஸ்.டி.பி. ஒரியன்டேஷன் மாத்திப் பார்க்கலாமா?…” என அவள் ஆரம்பிக்க அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் வேலை வேலை மட்டுமே.
அவர்கள் கூறிய சில மாற்றங்களை குறித்து கொண்டவன் “ஓகே மேம்.நான் மெயில் பண்ணிடறேன்…” என்றவன் இணைப்பை துண்டிக்கும் நேரம் “ஸ்டெஞ்சர் சார். அத்தை உங்களை தான் வர சொல்றாங்க…” என்றபடி வந்தாள் இதயா.
அவன் மீட்டிங்கில் இருப்பதை பார்த்து
“அச்சோ..” என நாக்கை கடித்து “சாரி, நான் அப்பறம் வரேன்…” என்றபடி நகர போகவும் “நிலா ஒன் செக்…” என்றவன் அவளை ‘வா..’என்பதை போல் தலையசைத்தான். கொஞ்சம் தயங்கினாலும் அவனருகில் வந்தமர்ந்தாள் இதயா…
தொடுதிரையில் தெரிந்த பெண்ணை கண்டதும் “ஹேவன்லி பியூட்டி…” என்றாள் எதிர்பக்கம் இருந்தவள்.
அவளது பேச்சில் மெல்ல சிரித்தவள் கணவனை பார்க்க, அவனின் பார்வை முழுக்க மனைவியின் மேல் தான்… அந்த பெண்ணின் வார்த்தைகளை அவனது கண்கள் பிரதிபலித்து கொண்டிருந்தன…
“க்கும்… சார் நாங்க இன்னும் இங்க தான் இருக்கோம்…” கேலியாக மற்றொருவர் கூறவும் சட்டென பார்வையை மாற்றிக் கொண்டவன் காணொளியை அசடு வழிய பார்க்க, மீட்டிங்கில் இருந்தவர்கள் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்…
நெற்றியை பெருவிரலால் கீறிக் கொண்டே “நிலா இவங்க…” என்றவன் முறையாக அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
நொடிகள் சில விசாரிப்புகளோடு கரைய, பின் சுதனே “ஓகே மேம் நீங்க சொன்னதையெல்லாம் சேஞ்ச் பண்ணிட்டு உங்களுக்கு மெயில் பண்ணிடறேன்…” என்றபடி அழைப்பை துண்டித்து மனைவியை பார்த்தான்.
அவளோ மடிக்கணினியை பார்த்தபடி
“அவங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்காங்கல்ல…பேர் என்ன?…” எனக் கேட்க
“ஆரியா. ஆனா அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரியுமா…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
அப்பொழுது தான் அவளுக்குமே நினைவு வந்தது. “மறந்தே போயிட்டேன். அத்தை தான் உங்களை வர சொன்னாங்க…”எனக் கூறியதும் எதுக்கு என்பதை போல் பார்த்தான் சுதன்.
அவனது பார்வை புரிந்தது போல
“நாலு நாளா லேப்டாப்பையே கட்டிட்டு அழுதுட்டு இருக்கீங்களாம். வெளியவே வரலையாம். சோ கொஞ்ச நேரம் வெளிய வந்து உட்காரதாம்.” என்றாள் கேலியாக…
“ம்ம் என்ன பண்றது… இந்த ஜென்மத்தில லேப்டாப்பை தான் கட்டிட்டு அழனும் போல…” என்றான் மடிக்கணினியை கையிலெடுத்தபடி
“நீங்களா இப்படி நினைச்சுகிட்ட அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா? அப்பறம் உங்களை யாரு அதை மட்டுமே கட்டிக்க சொன்னது..” எனக் கேட்டவளின் முகம் முழுக்க வெட்க புன்னகை.. அதை அவனிடம் காட்டாது அறையிலிருந்து வெளியேறினாள்.
அதே நேரம் அவனது கையிலிருந்த மடிக்கணினி விழப் பார்க்க, அதன் மீது முழு கவனமும் வைத்திருந்தவன் பாவை கூறிவிட்டு சென்றதை கவனிக்க தவறித்தான் போனான்.
*ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது…
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே*
என்ற பாடல் காற்றில் கலந்து அவர்களது அறையையும் இதமாக தீண்டி சென்றது…