Skip to content
Post Views: 4,325
என் பேர் தவற வேற எதுவும் தெரியாது அவருக்கு. என்கிட்டனு இல்ல எல்லோர்கிட்டையும் அப்டி தான். அனாவசியமா ஒரு வார்த்தை வராது.
பேஷண்ட்ஸ்கிட்ட அவங்க வலி புரிஞ்சு பேசுற விதமாகட்டும், அவங்க பினான்சியல் சிச்சுவேஷன் பாத்து அவசரத்துக்கு டைம் குடுத்து ஆபரேஷன் பண்ணிட்டு பணம் வாங்குறதாகட்டும் எல்லாமே அவர் செய்றதுல மனிதாபிமானம் தெரிஞ்சது.
இப்டி ஒன்னு ஒன்னா புடிக்க ஆரமிச்சு இப்போ அவரை பத்தி எல்லாமே புடிக்கும், ஏன் அந்த கோவம் கூட”
அர்ஜுனை பற்றிய பேச்சு துவங்கியதும் தன்னாலே கைகள் வீட்டினருக்கு தேநீர் தயாரிக்க துவங்கி இப்பொழுது முடித்தும் விட்டாள் சுற்றத்தை மறந்து. அனைவருக்குமான கப்பை எடுக்க திரும்ப, ப்ரியா, தர்ஷன், வருண் மூவரும் வாயை பிளக்காத குறையாக இவளை பார்த்தனர்.
Advertisement
அவர்களது முகத்தை பார்த்த பிறகே ஸ்வாரஸ்யத்தில் அனைத்தையும் ஒப்பித்துவிட்டோமோ என கண்களை இறுக்கமாக மூடி திறந்து பார்க்க மீண்டும் அவர்கள் முகத்தில் கேலி சிரிப்பு தான்.
“வருண் இனிமேல் இலக்கியாவை பேச வச்சு பாக்கணும்னா அர்ஜுன்னு சொல்லி பார் வண்டி நிக்காம ஓடும்”
“அக்கா….” இலக்கியா ப்ரியாவை துணைக்கு அழைத்தால், அவளும் சகோதரன் தர்ஷனோடு சேர்ந்து கிண்டல் செய்தாள்,
Advertisement
“அர்ஜுன் கூட தேவையில்லை தர்ஷா எ-னு மட்டும் சொல்லு” தெளிவாக இவர்களிடம் தான் சிக்கியது புரிய வேகமாக தேநீரை எடுத்து வெளியே ஓடாத குறையாக பெரியவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டாள்.
Advertisement
சுட சுட மசாலா டீ ஒரு பக்கம், வீட்டின் உறவுகள், பழைய கதைகள் மறுபக்கம் சுடசுட அந்த மாலை ருசிகரமான சென்றது.
இரவு உணவிற்கு என்ன செய்வதென கணக்கெடுப்பு நடைபெற துவங்க, “நான் வித் பண்ணீர் மக்கானி” என்கிற குரல் வாயிலில் இருந்து மெல்ல நெருங்கியது.
வீட்டினருக்கு அந்த பண்ணீர் என்னும் வார்த்தையே அர்ஜுனின் வரவை கூறிவிட்டது. அவன் அதிகம் விரும்பி உண்ணும் உணவு இது.
Advertisement
மகனை பார்த்த வரதராஜன் மருமகளிடம், “நீ பெரிய ஆள் தான்ம்மா. நேத்து தான் சொன்னேன் இவனை வீட்டுக்கு இழுத்துட்டு வந்துடுன்னு. இன்னைக்கே செஞ்சிடியே” என்றார் அவன் கையிலிருந்த இரண்டு பெரிய டிராலிகளை பார்த்து.
“இதுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றாங்க போல” என்றார் பரிமளாவும். இலக்கியாவிற்கு ஆயாசமாக இருக்க, அர்ஜுனுக்கு எரிச்சல் தான் வந்தது.
“ரொம்ப திங்க் பண்ணாதீங்க டாட். நான் நாளைக்கு நைட் வைசாக் (விசாகப்பட்டினம்) போறேன். இங்க இருந்து பக்கமெனு வந்தேன்” என்றான் ஆரமில்லாத குரலில்.
அவனது இந்த சொல்லில் சினம் வரப்பெற்ற வரதராஜன், “இன்னைக்கு பண்ணீர் வச்சு ஒரு டிஷ் கூட டேபிள்ல இருக்க கூடாது. அதான் ஊர் ஊரா சுத்துறலடா… அங்கையே வாங்கி இதை சாப்டுக்கோ” கோவத்தில் அவர் சொன்னாலும் ராதா அதை செயல்படுத்திவிட்டார்.
இரவு உணவில் தான் கேட்டும் வராத உணவை கவனித்த அர்ஜுன் கோவமாக சரியாக உணவை கூட உண்ணாமல் மௌனமாகவே எழுந்து அறைக்கு சென்றுவிட்டான்.
“ஏன்டா கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்ல? பாரு புள்ள சாப்பிடாம கூட போய்ட்டான்” என்றார் ராதா பேரன் சரியாக சாப்பிடாததை கவனித்து.
“அவன் சொன்னதுல என்ன தப்பு இவன் பண்றது எல்லாத்தையும் நாம அமைதியா பாத்துட்டு இருக்கணுமா? உன் பேரன் விசாகப்பட்டினம் போறான். போறவன் எப்படியும் ரெண்டு மாசம் மேல ஆக்கிடுவான்.
இது என்ன பழக்கம், வீட்டுல அவனை நம்பி ஒரு பொண்ணு இருக்குறப்போ இப்படியா ஊர் ஊரா ஓடுறது? சரியில்ல சொல்லி வை அவன்கிட்ட” ராமகிருஷ்ணனும் பேரனுக்கு குறையாத கோவத்தோடு பேசிவிட்டு எழுந்து சென்றார்.
“இவர்கிட்ட இருக்குற கோவம் தான அவனுக்கும் வரும். இதுல அவனை மட்டும் சொல்லுகிறது” முணுமுணுப்போடு தன் உணவை முடித்து எழுந்தார்.
வரிசையாக அனைவரும் உணவை முடித்து இன்னும் சில நிமிட பேச்சுகளுக்கு பிறகு அறைக்கு செல்ல, இலக்கியா வரவேற்ப்பறையிலே தேங்கிவிட்டாள்.
அந்நேரம் தண்ணீர் எடுக்க வந்த பானு, “என்ன இலக்கியா எதுக்கு இங்க வெயிட் பண்ற?”
“இல்ல அத்தை அப்பா கால் பண்ணுவார்” என சமாளித்தாள்.
வேறு அறையை கேட்கவும் சங்கடமாக இருந்தது. அவனோடு அவன் அறையில் இருக்கவும் தயக்கம். இழுத்து மூச்சை விட்டு முடிவோடு அறைக்கு சென்றாள் அனைத்திற்கும் தயாராகி.
கதவை திறந்து உள்ளே வர, கணவன் அரவம் நேர் எதிர் பார்வையில் தெரியாமல் போக குளியலறை சென்று சுடிதாரிலிருந்து எளிமையான புடவை ஒன்றில் மாறிக்கொண்டாள். அவன் இல்லையேல் இரவு உடை உடலை தழுவியிருக்கும்.
குளியலறை விட்டு வெளியே வந்த பொழுது தான் பால்கனியில் அவன் நிற்பது தெரிந்தது. அப்படியே விட்டு அமைதியாக வந்து கண் மூடி ஒரு ஓரம் படுத்துக்கொண்டாள்.
வேகமாக இவள் மெத்தையில் விழும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க கண்களை இறுக்கமாக மூடி படுத்திருந்தாள். அவளிடம் சென்று பேசவும் தோணவில்லை திட்டவும் மனம் இல்லை.
சலிப்பாக இருந்தது அவன் வாழக்கையே. சுவாரஸ்யமே இல்லாமல் ஏனோ தானோ என இருப்பது அவன் இயல்பே இல்லை. இத்தனை நாட்கள் இப்படி தான் போயிருந்தாலும் என்றும் இல்லாத ஒரு ஆர்வமின்மை வாழ்க்கையின் பிடியில்.
இந்த திருமணத்தின் விளைவா எனவும் ஆராய்ந்துவிட்டான். அதற்கும் பதில் இல்லை. ஆனால் ஒரு வேளை திருமணம் பற்றி ஒரு குட்டி கனவில் இருந்து அது சரியாக அமையாத சலிப்போ? இருக்கலாம்.
மீண்டும் பார்வை மனைவியிடம் சென்றது. இம்முறை இவனுக்கு முகம் காட்டாமல் முதுகை காட்டி படுத்துகொண்டாள். இவளையும் முழுதாய் குறை கூறிவிட முடியாதே.
அன்று அவளது மன்றாட்டை கேட்டு தீர விசாரித்திருந்தால் இந்த நிலையே இல்லை. இவளோடு திருமணம் கூட பெரிதாக தெரியவில்லை. அவனுக்கு உறுத்துவது எல்லாம் இலக்கியாவின் அழகு, படிப்பு மற்றும் அவளது செல்வநிலை.
மூன்று தானே என சொல்லிக்கொண்டான், அதைவிட்டு அவளிடம் வேறு நல்ல குணங்களை தேடி பார்க்க அவன் மனம் சம்மதிக்கவே இல்லை.
அவளோடு, அவன் குடும்பத்தோடு இருந்தால் இதுவே மேலும் மன அழுத்தம் கொடுக்குமென தான் வேலையை காரணம் காட்டி பறப்பது.
முன்பும் செல்வான் தான். அப்பொழுதெல்லாம் ஒரு வாரமோ இரண்டு வாரமோ தான் செல்வான். இப்பொழுது அவன் கணக்கே குறைந்தது மூன்று மாதங்கள். அதிகப்படி ஆறு மாதங்கள்.
அதுவரை அவள்? மீண்டும் பார்வை தன்னாலே மனைவியிடம் சென்றது. முகத்தை கைகள் கொண்டு பரபரவென தேய்த்தான்.
தூக்கம் வேறு அண்டாமல் பசி வயிற்றை பிடித்தது. மதியம் கூட உணவை எடுத்துக்கொள்ளவில்லை, இலக்கியா தன் சொல்லை மீறி தன்னிடம் கூட கூறாமல் வீட்டிற்கு சென்ற செய்தியை கேட்டு.
கோவம் வந்தது தீயாய், பிறகு தான் அவளிடம் கூறினால் தானே அவளிடமே கேட்கும் உரிமை வரும் என முற்றிலும் கோவம் துறந்தான். எங்கேனும் செல்லும் முன்பு வீட்டினரிடம் தகவல் அலைபேசியின் மூலம் மட்டுமே கொடுப்பான்.
இன்று இங்கிருந்து செல்லலாம் என முடிவெடுத்தது எதற்கென்று அவனுக்கே தெரியவில்லை. மீண்டும் அனுமதி இல்லாமல் பார்வை உறங்குபவளிடம் சென்றது.
மனதில் எரிச்சல் அதிகமாக அறையை விட்டு வெளியே சென்று பத்து நிமிடங்களுக்கு மேலான பிறகு தான் வந்தான்.
வந்தவன் கையில் தேநீர் குவளை ஒன்று. இவன் அரவத்தில் உடனே கண் மூடிக்கொண்டாள். அவனோ கையிலிருந்த தேநீரை அருந்தி அதன் ருசியை மேலும் ருசிக்க விருப்பமில்லாமல் சத்தமெழுப்பும்படி பட்டென வைத்தான்.
முன் பின் சமையலறை சென்றால் தானே எதை எந்த அளவிற்கு சேர்க்கும் ஞானமிருக்கும்.
பிறகு அழகாக அடுக்கி வைத்திருந்த பெட்டியை களைத்து விட்டு தேடி எடுத்திருந்தான் அந்த சிகரெட்டை.
அவன் உள்ளே வந்ததையும் எடுத்த பொருளோடு மீண்டும் வெளியே அதே இடத்திற்கு சென்று நின்றுகொள்ளும் வரை பார்த்தாள். அடுத்த சில நொடிகளில் அடித்த காற்றின் உபயத்தால் அவன் நாசிலிருந்து வந்த புகையானது மனைவியின் நாசியையும் தீண்டியது.
‘துறைக்கு இந்த பழக்கம் வேற இருக்கா? இதுல ஊரையே குறை சொல்றது’ திட்டியபடியே எழுந்த இலக்கியா அவன் வைத்து சென்ற தேநீர் கோப்பையை எட்டி பார்க்க அது அப்படியே இருந்தது.
பசியில் உள்ளான் என புரிந்தது. கீழே சென்றவள் இருவது நிமிடத்தில் அவன் கேட்ட பண்ணீர் மக்கானி செய்வதெப்படி என பார்த்துக்கொண்டே செய்து முடித்து முன்பு செய்திருந்த சப்பாத்தியை ஒரு முறை சூடேற்றி அவன் அறைக்கு வந்தாள்.
இவள் எழுந்ததை கவனித்தவன் இலக்கியா வரும் பொழுது உண்ண தயாரென சோபாவில் அமர்ந்து டீபாயை இழுத்து வசதியாக போட்டிருந்தான். அதன் மேல் தண்ணீர் கூட எடுத்து வைத்து தயாராக தான் இருந்தான்.
‘என்ன புடிக்காதாம் ஆனா நான் செய்ற சாப்பாடு மட்டும் ஆகுமாம், ஏன் அந்த டாக்டர் அஞ்சு ஸ்ரீக்கு கால் பண்ணி நான் வித் மக்கானி கேட்ருக்கலாம்ல’
வாசலில் இருந்து அவனை நெருங்கும் வரை மனதில் திட்டிக்கொண்டே எடுத்து வந்த உணவை வைத்து மீண்டும் சென்று படுத்துக்கொண்டாள்.
இரவு எல்லோருக்கும் செய்த உணவை தான் இலக்கியா எடுத்து வந்திருப்பாள் என நினைத்திருக்க அவன் கேட்டதே கிடைக்குமென உணவை திறந்து பார்த்தவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பசி வேறு சிந்தையை முற்றிலும் செயலிழக்க செய்திருக்க உணவை ரசித்தபடியே மனைவியின் முதுகை வெறித்தான்.
அவள் மேல் சந்தேகம் இன்னும் இன்னும் அதிகமாகி போனது மருத்துவனுக்கு.
அர்ஜுன் உண்டு முடிக்கும் பொழுது இலக்கியாவிடமிருந்து சீரான மூச்சு காற்று வந்தது. பாத்திரங்களை கீழே வைத்து மீண்டும் படியேறும் பொழுது தான் இன்னும் விழித்திருக்கும் ராதாவை பார்த்து,
“ஏன் பாட்டி இன்னும் தூங்கல ஒடம்பு எதுவும் சரியில்லையா?” என்றான் அவரை நெருங்கி அமர்ந்து.
“சாப்டியா அர்ஜுன்?” அக்கறையாக அவர் கேட்க காரமில்லாத கோவத்தை காட்டினான் பெரியவரிடம்.
“உங்களுக்கு என்ன கவலை? அதான் உங்க பையன் சொல் பேச்சு கேட்டு எனக்கு புடிச்சதை செய்யலல அதோட விட்டீங்களா நான் எதை அவாய்ட் பண்ணுவேனோ அதை தேடி தேடி சமைச்சிருக்கீங்க” என்றான் குற்றம்சாட்டி.
“நான் செய்யலைன்னா என்னடா உனக்கு தான் உன் பொண்டாட்டி செஞ்சு குடுத்துட்டாளே”
முகத்தை சுளித்தான், “இதெல்லாம் கரெக்ட்டா பொண்ணுங்க நோட் பண்ணிடுங்க” எழுந்து, “போய் படுங்க இவ்ளோ நேரம் முழிச்சிருக்க கூடாது” என்றான்.
அவரோ அவன் கையை பிடித்து அமர செய்தார். பெருமூச்சோடு அமர்ந்தவன், “நீங்க என்ன பேச போறீங்கனு தெரியும்”
“என்ன தெரியும்?” ராதாவின் பலமே அவரது பொறுமை தான்.
எதிலும் வேகம் இல்லாத நிதான குணம். அவரது ஒவ்வொரு முடிவும் பளிச்சென வெளிச்சத்தை மட்டுமே தரும். இப்பொழுதும் பாட்டியிடம் அதே பொறுமை அர்ஜுனை சோதித்தது.
“என்ன சொல்லிட போறீங்க ஊருக்கு போக வேணாம்னு தான?”
ராதா, “இல்லையே அர்ஜுன். தாராளமா போய்ட்டு வா”
“என்ன மிஸஸ் ராமகிருஷ்ணன், அந்த கிருஷ்ணனோட வார்த்தை ஜாலம் உங்களுக்கும் வந்துடுச்சா? இதுல எதுவும் உள்குத்து இல்லையே” சந்தேகமாக அவன் கண்கள் பாட்டியை பார்த்தது.
“எந்த மந்திரமும் இல்ல. போகுறப்போ இலக்கியாவையும் கூட்டிட்டு போ” என்றார் அலுங்காமல் குண்டை இறக்கி.
அவளிடமிருந்து தப்பிக்க தானே இந்த ஓட்டம், மீண்டும் அவளை அழைத்து செல்வதா என்கிற ஆயாசம் அவனிடம்.
“எதுக்கு அங்க வந்தும் நர்ஸ் வேலை பாக்கவா?” என்றான் காரணமாகவே.
“ஏன் அர்ஜுன் பாத்தா என்ன?”
“உங்களுக்கு எல்லாமே அசால்ட்டு தான் பாட்டி. என்னோட இமேஜையே அவளோட டிகிரி தான் அசிங்கப்படுத்துது”
பேரனின் சொல்லில் ராதா சிரித்தார், “இதே மாதிரி தான அர்ஜுன் என்ன பத்தி சொல்றப்பவும் உனக்கு அசிங்கமா இருக்கும்?” வருத்தம் எழாமல் இயல்பாய் கேட்டார்.
“பாட்டி… இது வேற அது வேற” என்றான் குரலை உயர்த்தி.
“எல்லாமே ஒன்னு தான் அர்ஜுன். நாளைக்கு உன்னோட குழந்தைங்க மெடிக்கல் பிடிக்கலைனு வேற படிச்சா அவங்கள உன் பிள்ளைங்கன்னு சொல்ல கூச்சப்பட்டு விட்ருவியா? அது மாதிரி தான் இதுவும்”
“இங்க தான் பாட்டி எல்லாரும் என்ன தப்பா நினைக்கிறீங்க. அவ படிச்சது எதுவும் எனக்கு பிரச்சனை இல்ல. சொல்லப்போனா அவளை மாதிரி இவ்ளோ க்ளீனா யாரும் வேலை பாக்க முடியாது. ஷி இஸ் பேர்பக்ட் இன் ஹர் ஒர்க்.
எனக்குன்னு ஒரு ஆசை இருந்துச்சு இப்டி பட்ட பொண்ணு வேணும்னு. அது இன்னைக்கு நேத்து நான் யோசிச்சது இல்ல, இந்த ப்ரோபஷன்ல நான் கால் எடுத்து வச்ச நாள்ல இருந்து முடிவு பண்ணது”
“சரி ப்பா… நடந்துடுச்சு. இதை ஏத்துக்குட்டு வாழலாம்ல?”
“கடமைக்குனு வாழ சொல்றிங்களா?”
“உனக்கு முன்னாடி பேசுன பொண்ண நீ காதலிச்சு கல்யாணம் பண்ண பாத்தியா அர்ஜுன்? அதையும் உன்னோட பிஸ்னஸ் லாபத்துக்காக தான் ஏத்துகுட்ட?” இவரிடம் பேசி தன்னால் வெல்ல இயலாதென புரிந்து அமைதியானான் அர்ஜுன்.
“தொழில், தொழில் சார்ந்த விஷயம் நம்ம வீட்டுக்குள்ள வர கூடாதுனு எப்பவும் சொல்லுவோம் அர்ஜுன். ஊருக்கே மஹாராணியா இருந்தாலும் வீட்டுக்கு மனைவி தான்.
அஞ்சுஸ்ரீகிட்ட அவ டாக்டர்னு ஒரு பிளஸ் பாய்ண்ட் மட்டும் தான் இருந்தது. நம்ம இலக்கியாக்கு அவ டாக்டர் இல்லனு ஒரே ஒரு மைனஸ் பாய்ண்ட் மட்டும் தான்”
“இது தான் புடிக்கல. ஏன் என்ன எல்லாரும் இப்டி கட்டாயப்படுத்துறீங்க?” என்றான் ஆத்திரமாக முகத்தை கையில் பொத்தி. பேரனுக்கு அவகாசம் தேவையென புரிந்துகொண்டார்.
அவன் கையை பதமாக பிடிக்க மற்றொரு கை அவன் முதுகை ஆதூரமாய் வருடியது. அதில் சற்று ஆசுவாசமானவன் அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்நிலையில் தான் பேசுவதை அமைதியாக கேட்பான் என தெரியும் ராதாவிற்கு.
“வயசு இருக்கு அர்ஜுன் உங்களுக்கு. நேரமெடுத்து நல்லா யோசி. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். பொண்ணுங்கள மதிக்கிற வீட்டுல சகல செல்வங்களும் தங்கும். எந்த நிலமைலையும் இலக்கியாவை காயப்படுத்திடாத.
தங்கமான பொண்ணு ப்பா. ஒடனே வசதியில்லாத பொண்ணுனு யோசிக்காத. என் வயசுக்கு தெரியும் யார் உண்மையா இருக்காங்க, யார் நடிக்கிறாங்கனு.
உன்னோட நிச்சயதாம் நடந்தப்போ தான் நான் அவளை முதல் முறை பாத்தேன். உன் தாத்தா அறிமுக படுத்தவும் சட்டுனு கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டா”
அவள் தன்னுடைய நிச்சயத்திற்கு வந்ததே இன்று தான் அவன் நினைவில் ஆடியது. அன்றிருந்த மகிழ்ச்சியில் அவளை எல்லாம் பார்த்தது கூட மறந்து போனது.
“நான் உனக்கு எப்படி எல்லாம் பொண்ணு பாக்கணும்னு நினைச்சேனோ அதோட மொத்த உருவமா இருந்தா. முன்னாடியே பாத்திருந்தா அப்பயே இலக்கியாவை தான் உனக்கு பேசி முடிச்சிருப்பேன்”
அவரை பார்த்து முறைத்தான். அவர் அவனை சட்டையே செய்யவில்லை, “விதி உன் வாழ்க்கையை அவ கூட தான் முடிச்சு போட்டு வச்சிருக்கு. அந்த மனஸ்தாபம் இப்ப வரைக்கும் உங்களுக்குள்ள இருக்குனு தெரியும் ப்பா. அதுக்காக நீ ஒரு பக்கமும் இலக்கியா ஒரு பக்கமும் இருக்குறது நல்லது இல்ல அர்ஜுன், உன் வீடு தான் அவளுக்கு நிம்மதி. அதை தான் வரதராஜன் இன்னைக்கு சொன்னான்”
“இதுவும் என் வீடு தான்” என்றான் வீறாப்பாக.
“எப்பவும் உன் வீடு தான், ஆனா நீ எங்க இருக்குற அது தான் கணக்கு. அடிச்சாலும் புடிச்சாலும் ரெண்டு பேரும் ஒரு இடத்துல இருக்குறது பாக்கவே எவ்ளோ நல்லா இருக்கு சொல்லு” எழுந்து அமர்ந்துவிட்டான் அர்ஜுன்.
“ஒண்ணா இருந்தா தான் அர்ஜுன் ஒருத்தர் பத்தி இன்னொருத்தருக்கு தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கும்”
“உங்ககூட இருந்தாலே என்ன நீங்க ரொம்ப தான் கன்ப்பூஸ் பண்ணுவீங்க. எதுவா இருந்தாலும் நான் ஊருக்கு போய்ட்டு வந்து தான் டிசைட் பண்ணுவேன். இலக்கியா இங்கயே இருக்கட்டும். ப்ளீஸ் அதுவரை யாரையும் என்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லுங்க பாட்டி. ஐ வாண்ட் பீஸ்” என்றான் மன்றாடி.
அரை மனதாக சரி என்றார் ராதா. அதுவே அர்ஜுனுக்கு போதுமானதாக இருந்தது.
error: Content is protected !!