Skip to content
Post Views: 4,092
இன்னும் இரண்டு மணி நேரத்தில் அர்ஜுன் செல்லும் விமானம் புறப்படவுள்ளது. அதற்காக தான் நேற்று இரவு களைத்து தள்ளிய உடைகளை மீண்டும் அடுக்கும் முயற்சியில் இருந்தான்.
நேரம் வேறு ஆகிறது. சில ஆடைகள் கசங்கி நலுங்கி போயிருந்தன. அவற்றை அயர்ன் செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அவனது அவசரத்தையும், தாமதமானதால் ஏற்படும் கோபத்தையும் அமைதியாக அமர்ந்து பார்க்க வேண்டிய நிலை.
அவள் அமைதியாக ராதாவோடு தான் அமர்ந்திருந்தது, அவர் தான், “உன் புருஷன் போகுறப்போ கூட நில்லு. தள்ளி நின்னா எப்படி உறவு வளரும்? போ” அதட்டாத குறையாக இவளை வம்படியாக அனுப்பி வைத்தார்.
Advertisement
வந்தவளுக்கு அவனுக்கு உதவும் எண்ணம் சிறிதும் இல்லை. நேற்று வந்ததில் இருந்து இந்த நொடி வரை அவளிடம் அவன் பேசவே இல்லை.
இப்பொழுதும் அவனே வேகமாக ஓரிரு துணியை மட்டும் அயர்ன் செய்தவன் மற்றவற்றை ஏடாகூடமாக திணித்தான். அடிக்கடி அவ்வறையில் இருந்த மனைவியை பார்த்துக்கொண்டான்.
அனைத்தையும் எடுத்து வைத்து இறுதியாக நேற்று மீதம் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து வைத்தான்.
Advertisement
அவன் இதை எடுத்து வைத்ததை பார்த்த இலக்கியா பெருமூச்சு ஒன்றை விட அவளின் செயலில் முழு உயரத்திற்கு எழுந்து நின்றவன் அவளை பார்த்து, “என்ன நான் சிகரெட் பிடிச்சதை வீட்டுல சொல்ல போறியா?”
Advertisement
அவன் கேள்விக்கு சாதாரணமாக தோளை குலுக்கினாள், “நான் எதுக்கு சொல்லணும்?” என்று.
“இல்ல புருஷன்… உடம்புக்கு நல்லது இல்ல… அப்டி இப்டினு?”
“நீங்க டாக்டர் ஆச்சே, உங்களுக்கு உங்க மேல இல்லாத அக்கறை எனக்கெதுக்கு?”
Advertisement
ஆமாம் அக்கறை உள்ளதென கூறி அறிவுரை மழையை பொலிவாலென காத்திருக்க புஸ்ஸென ஆனது அர்ஜுனுக்கு.
ஏமாற்றத்தை மறைத்து, “குட்” தலை ஆட்டி ஆட்டி கூறியவன் அவளை நெருங்கி வந்து அவள் கையில் சில ரூபாய் நோட்டுகளையும் ஒரு கார்டையும் திணித்தான்.
அவன் வைத்த வேகத்தில் இவளும் அவற்றை மெத்தையில் உடனே வைத்துவிட்டாள், “இதெல்லாம் எதுக்கு செய்றிங்க?”
“நான் வெளி ஊர் போறேன். வர மினிமம் த்ரீ மந்த்ஸ் ஆகும்”
“சோ வாட் சார்? நான் வேலைக்கு போறேன். என் தேவையை நானே பாத்துக்குவேன்”
“லூசாடி நீ? நீ வாங்குற சம்பளம் பல்லு குத்த கூட ஆகாது. இங்க எல்லாரும் அடிக்கடி வெளிய போவாங்க. பல பொருள் வாங்குவாங்க. அப்போ நீ வேடிக்கை பாத்துட்டு இருப்பியா, இல்ல நான் உனக்கு எதுவும் பண்றதில்லன்னு வெளிச்சம் போட்டு காட்ட போறியா?” எரிச்சல் மண்டிய குரலில் காய்ந்தான்.
“உங்களுக்கு பல் குத்துற குச்சி தான் ஆனா எனக்கு இது கடப்பாரை மாதிரி. இத்தனை நாள் அது தான் எனக்கு இந்த டிரஸ் எல்லாம் குடுத்துச்சு. அதையும் மீறி எனக்கு தேவை இருந்தா என்கிட்டயும் கிரெடிட் கார்ட் இருக்கு, அதுல வாங்கிக்குவேன். உங்க பணம் வேணாம் எனக்கு” என்றாள் பிடிவாதமாக.
ஆத்திரமாக வந்தது அர்ஜுனுக்கு, எங்கும் பிடிவாதம் எதிலும் பிடிவாதம் பிடிக்கும் இந்த இலக்கியா மேல் எல்லையில்லா கோவம் தான் வளர்ந்தது. இதில் எங்கிருந்து இவளது குணத்தை புரிந்துகொள்வது?
அவளது தன்மானத்தை பணத்தை காரணம் காட்டி என்றோ அவன் தட்டிவிட்டிருந்தான். அதிலிருந்து அவன் தான் மீண்டும் அவளை மீட்டு வர வேண்டும் என்பதை அவனும் அறியப்போவதில்லை.
“போ உன் திமிருக்கு வர வர அளவே இல்லாம போகுது. உன் இஷ்டத்துக்கு தான்டி எல்லாம் செய்ற”
“அப்டி இல்லையே… உங்க விருப்பம்படியும் தான் இங்க எல்லாம் நடக்குது, நான் இங்க வந்ததுல இருந்து எந்த டிபார்ட்மென்ட்ல நான் வேலை பாக்குறதுனு வரை எல்லாம் உங்க விருப்பம் தானே சார்”
“சீ சண்டை இழுக்குறதுக்கு டைம் எனக்கு இல்லை”
இலக்கியா, “ஓ அப்போ தாராளமா கிளம்புங்க சார். நான் உங்கள இழுத்து வச்சு பேசலையே”
அவளும் எத்தனை நாள் தான் அமைதியாக இருப்பது? இவனே வந்து பேசி, இவனே நேரம் ஆகிறதென கூறவும் செய்கிறான். எல்லாம் அகங்காரம் தான்.
“உன்கிட்ட பேசி வேஸ்ட்” அவனே முடிவும் எடுத்து உடமைகளை எடுத்து கீழே இறங்கினான்.
வீட்டினர் அனைவரிடமும் கூறி தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் வாகனத்தை உயிர்ப்பித்து மனைவியை பார்க்க அவளும் இவனை தான் நோக்கினாள்.
இருவரும் மற்றவரை பார்த்து சம்ரதாயத்திற்கு கூட தலை அசைக்கவில்லை. பார்வைகள் முட்டி மோதிக்கொள்ள வாகனம் தீப்பிடித்து தார் சாலையில் உஷ்ணத்தை பரப்பி கிளம்பியது.
*****
“சாப்டியாம்மா?”
இலக்கியா தந்தைக்கு உணவை பரிமாறி தானும் அவர் அருகே அமர்ந்தாள், “இல்ல ப்பா. உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். நாம சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் அச்சுல?” என்றாள் ஆசையாக.
“ஆமா ஆமா ம்மா” சுட சுட வடித்திருந்த சாதம், தண்ணீர் பருப்பு, பீன்ஸ் பொரியல், குடைமிளகாய் பொரியல், தக்காளி ரசம் என மகளின் கை வண்ணத்தில் மதிய உணவு அமர்களப்பட்டது.
கொதிக்க கொதிக்க பரிமாறப்பட்ட சாதத்தை இரண்டு கவளம் எடுத்து வைத்த உடனே முகத்தில் மகிழ்ச்சி பெருகியது.
“உன் கை பக்குவம் தனி ம்மா. இருக்கறதை வச்சு உன்னால மட்டும் தான் இவ்ளோ ருசியா செய்ய முடியும்”
“ப்பா சாதாரண தண்ணி பருப்பு தான்ப்பா” என்றாள் சிரிப்போடு.
அவருக்கு மகளை புகழ்ந்து தள்ள காரணங்கள் தேவையில்லை நேரம் கிடைத்தாலே போதும். அதுவும் மகளுக்கு திருமணமாகி ஏழு மாதங்கள் ஆகிறது.
இப்பொழுது தான் பத்து நாட்களுக்கு முன்பு திடீரென அவளாக வந்து நிற்கிறாள்.
என்னவென கேட்டதற்கு, “சும்மா தான் ப்பா. அவர் வேற ஊருக்கு போயிருக்கார்ல, அதான் வந்துட்டேன்” என்றாள்.
வந்த நாளில் இருந்து மீண்டும் ஓட்டமும் நடையுமாய் தந்தை மகள் இருவரும் அவரவர் வேலையை பார்த்து வந்தனர். அவர் இரவு வேலைக்கு செல்லும் நேரம் தான் இலக்கியா இல்லம் வருவாள், அவர் வரும் நேரம் இவள் மருத்துவமனைக்கு சென்றிருப்பாள்.
இன்று தான் தந்தையோடு நேரம் செலவழிக்க ஆசைக்கொண்டு விடுமுறை எடுத்து இருக்கிறாள். தந்தையானவருக்கு அதுவே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
“நானும் உன்கிட்ட கேட்டு தான்ம்மா செஞ்சு பாக்குறேன், உன் அளவுக்கு தான் வைக்க முடியல” என்றார் இன்னும்.
“அப்பா நானே உங்ககிட்ட கேட்டு தான் சமைக்க பழகுனேன். போதும்ப்பா”
“அதான்ம்மா எனக்கும் தெரியல, என்கிட்ட கத்துக்குட்டு எப்படி என் பொண்ணால இவ்ளோ ருசியா சமைக்க முடியிது? மாப்பிள்ளை குடுத்து வச்சவர் தான்”
“ஆமா” என்றாள் உள் பொதிந்த அர்த்த சிரிப்போடு.
“நீங்க சொல்லனாலும் அது உண்மை தான்” சற்று முத்திரிந்த குரல் கேட்க அங்கு ராதா மற்றும் ராமகிருஷ்ணன் வந்து நின்றனர்.
தந்தை மகள் இருவரும் தரையில் அமர்ந்து உண்டுகொண்டிருக்க இவர்களை பார்த்து அடித்து பிடித்து எழாத குறையாக எழ பார்த்த மணிகண்டனை,
“இல்ல சாப்பாடை பாதில விட்டு எந்திரிக்க கூடாது. உக்காருங்க தம்பி. இலக்கியா ம்ம்ம்” ராதா மிரட்ட அமைதியாக அமர்ந்துக்கொண்டாள் இலக்கியாவும்.
ராமகிருஷ்ணனுக்கு தானே ஒரு இருக்கையை எடுத்து போட்ட ராதா தான் கீழே அமர்ந்துகொண்டார்.
இலக்கியாவிற்கு தான் அவர் கீழே அமர்வது சங்கடமாக இருக்க, உணவை உண்ணாமல் பாட்டியை பார்த்தாள்.
“யோசிக்காம சாப்பிடு இலக்கியா, கீழ ஒக்கார்றது அவ்ளோ பெரிய தப்பு இல்லையே” என்கவும் தான் தந்தை மகள் உண்டனர். அதுவும் வேகமாக அரைகுறையாக தான்.
“டீ தண்ணி போடும்மா” மணிகண்டன் மகளிடம் ஏவ, “அதெல்லாம் எதுவும் வேண்டாம்” மறுத்த பெரியவர்களிடம்,
“சரி கலர் வாங்கிட்டு வர்றேன் அய்யா” என்றார் மணிகண்டன் மீண்டும். பெரியவர்கள் முடிவாக மறுத்துவிட்டனர்.
“மருமகளை வீட்டுக்கு அழைச்சிட்டு போக தான் வந்தோம்” என்றார் ராமகிருஷ்ணன்.
மணிகண்டனுக்கு மகள் பத்து நாட்கள் மகள் வீட்டில் இருப்பது மகிழ்ச்சியாகவே இருந்தாலும், இந்த பத்து நாட்களில் கணவனோடு அவள் பேசியதை கண்டிறாதது ஒரு பக்கம் மனம் நெருட தான் செய்தது. இதுவே இவர்கள் வந்து அழைக்கவும் மனம் கொண்டிருந்த அச்சம் நீங்கியது.
“சரிங்கயா” என்றார் உடனே.
பெண்ணவளால் தந்தையை போல் மகிழ இயலவில்லை. போகிறேன் என்றவன் இந்த நாள் வரை ஒரு வார்த்தை பேசாதிருப்பது வெறுப்பு, கோவம் இரண்டையும் சரி விகிதத்தில் கொடுத்தது.
அதை தாண்டி அவனை தேடும் இதயத்தை அவள் தேட முற்படவில்லை. ஆனால் சென்று தானே ஆக வேண்டும், விதி அவளை எங்கு வரை கொண்டு செல்ல போகிறதென பார்க்கவேண்டும்.
தந்தையிடம் விடைபெற்று பெரியவர்களோடு இலக்கியா சென்று நின்றது அர்ஜுனின் இல்லத்திற்கு தான். வீட்டினை நெருங்கும் வேளையில் தான் கவனித்தாள்.
எதற்கு இங்கு என பார்க்க, “எப்டியும் அவன் வந்ததை உன்கிட்ட சொல்லிருக்க மாட்டான். அவன் ரெண்டு நாள் முன்னாடி நைட் வந்துட்டான்ம்மா. அதான் உன்ன நாங்களே உன்வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்தோம். உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே” வரவழைக்கப்பட்ட புன்னகையோடு இல்லை என மட்டும் தலையை ஆட்டினாள்.
வீட்டிற்கும் வந்தாயிற்று. ஆனால் அர்ஜுன் இல்லை. மருத்துவமனை சென்றிருந்தான் போல.
இரவு ஏழு மன்னிக்கு பிறகு தான் வீட்டிற்கு வந்தான். வந்தவன் முகத்தில் எந்த பாவமும் இல்லை, இவள் இங்கு வருவது தெரிந்து தான் இருக்கும் போல.
சாதாரணமாக தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்க, “இன்னைக்கு சமைக்க வேணாம் இலக்கியா, நாம வெளிய போகலாம்” என்றார் ராதா.
“எனக்கு வெளி சாப்பாடு சாப்பிட்டு அழுத்து போச்சு பாட்டி” சலித்துக்கொண்டான் அர்ஜுன்.
“அது உன் மிஸ்டேக், உன்ன யார் இவ்ளோ நாள் வெளிய தங்க சொன்னது? எனக்கு இன்னைக்கு என் பேரன் பேத்தியோட வெளிய போகணும் போல இருக்கு” என்றார் ராமகிருஷ்ணன்.
அதற்கு மேல் அர்ஜூனால் மறுக்க முடியவில்லை. கிளம்பி வருவதாக சென்றவன் நேர்த்தியாக வந்து நின்றான். இலக்கியா பெரியவர்களுக்கு சூடு தண்ணீர் இரண்டு பாட்டில்களில் பிடித்து, தனக்கும் பிடித்து வந்து வைக்க, தன்னை நிராகரித்த மனைவியை பார்த்தான்.
அவளோ தன்னுடைய வேலை முடிந்ததாய் ராதாவோடு அமர்ந்துக்கொள்ள அர்ஜுன் தான் சென்று தனக்கான தண்ணீரையும் எடுத்து வந்தான்.
நால்வரும் கீழே வர வாகனத்தில் முன்னிருக்கையில் ராமகிருஷ்ணனை அமர வைக்கும் பொருட்டு அர்ஜுன் திரும்ப அதற்குள் அவன் மனைவி தானே பின்னே ஏறிக்கொண்டாள்.
ராமகிருஷ்ணன் கூற பிடிவாதமாக தான் பின் தான் அமர்வதாக கூறிவிட்டாள்.
ஒரு உயர் ரக ஹோட்டலில் வாகனத்தை நிறுத்தினான். ஈ.சி.ஆர் பீச்சை விட்டு அரை கிலோமீட்டர் தூரம் இருந்த அந்த உணவகத்தின் மேற்கூரையில் இதமாய் வீசியது கடல்காற்று.
நீச்சல்குளத்தின் வலது பக்கத்தில் வரிசையாக தேவையான இடைவெளிவிட்டு அடுக்கி போடப்பட்டிருந்த டேபிள்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர் இவர்கள் நால்வரும்.
ராதா, ராமகிருஷ்ணன் இருவரும் எளிமையான உணவினை கூற, இலக்கியாவும் இரண்டு இட்லியோடு நிறுத்திக்கொண்டாள்.
அர்ஜுனின் பார்வை முழுதும் இப்பொழுது மனைவியிடம் சென்றது. அவளை அவன் அதிகம் பார்த்திராத சுடிதார் அணிந்திருந்தாள்.
புடவையின் முதிர்ச்சி தோற்றம் இல்லாமல் இரண்டு வயது குறைந்து தெரிந்தது.
அதிகம் ஆடம்பரம் இல்லாத உடை அவளது உடலை எளிமையாய் தழுவி பெண்ணின் அழகை சிறப்பாய் எடுத்துக்காட்டியது.
சற்று பூசினார் போல் தான் இருந்தாள் ஆனால் முன்பை விட இப்பொழுது கொஞ்சம் இளைத்திருந்தாள், அதே அடக்கமான கண்ணை கவராத அழகு.
நிச்சயம் அவன் வாங்கி கொடுத்த உடை இல்லை இது. அதே சமயம் அவளின் சிக்கனத்தில் வந்த உடையும் இல்லை. உடையின் தரம் பார்த்தவுடனே கண்ணை அடைந்துவிட்டது.
அவளது நடவடிக்கையும் தான். மாதங்கள் தாண்டிய பிரிவு இருவரிடமும் வெவ்வேறு விதமாய் வெளிப்பட்டது.
அர்ஜுனுக்கு இயலாமையின் வெளிப்பாடாய், இலக்கியாவிற்கு வெறுமையின் உச்சமாய்.
அவன் வந்ததில் இருந்து அவளது பார்வை கூட அவனை நொடிக்கு மேல் தீண்டவில்லை.
அவன் அவள் முன்பு தோன்றிய நேரமெல்லாம் ஏதேனும் ஒரு காரணம் வைத்து அவனை தொடரும் அவளது பார்வை இன்று எங்கோ சென்றிருந்தது.
தூரம் விலகியிருந்தாள் என்பது அப்பட்டமாக தெரிந்தது.
“போதுமா இலக்கியா? வேற ஏதாவது சொல்லலாமே” ராதா கேட்க,
“போதும் பாட்டி” என்றாள்.
ராதா, ராமகிருஷ்ணனின் உணவு முன்னதே வர அவர்கள் உண்டு அந்த உயரத்திலிருந்து தூரம் தெரிந்த கட்டிடங்களை பார்வையிடும் சாக்கில் இளையவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றனர்.
இலக்கியா இரண்டு இட்லியை முடித்து எழும் நேரம், “இந்த ரெண்டு இட்லியா சாப்பிட தான் இவ்ளோ தூரம் வந்தியா?” என்றான் பேச்சை வளர்த்து.
“எனக்கு வரணும்னு ஆசை எதுவும் இல்ல சார். எதுக்கும் ரொம்ப நோ சொல்ல முடியல” என்றாள் பெரியவர்களை மனதில் வைத்து.
அவனோ அவளது பேச்சில் சிறிதும் அலட்டல் இல்லாமல், “சொல்ல வேண்டிய இடத்துல நீ எப்பவும் நோ சொல்ல மாட்ட” திருமணத்தை எடுத்து வந்து மீண்டும் குத்தி காட்டி பேசியவன், எளிதாக தன்னுடைய தட்டிலிருந்து இடியாப்பம் ஒன்றை அவளின் தட்டில் வைத்தான்.
“சாப்பிடு” மேலும் தேங்காய் பால் அவனே ஊற்றினான்.
அவனை விழி அகலாமல் இலக்கியா பார்க்க, உணவில் கவனமாய் இருந்தவன் நொடிகள் சில கடந்த பிறகே குத்தல் பார்வை உணர்ந்து மனைவியை ஏறிட்டான்.
அவன் கொடுத்த இடியாப்பத்தை நூலளவு கூட உட்கொள்ளாமல் அர்ஜுனை மட்டும் தான் பார்த்தாள்.
error: Content is protected !!