ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 15
குறிப்பு:- யாரும் இந்த சின்ன புள்ளைய திட்டபிடாது… இன்னைக்கும் கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போகலை.. ஆனா வியாழன் அன்று கண்டிப்பா கூட்டீட்டு போறேன்.. 🙂
பிடித்தம் 15
Advertisement
“டேய்.. நான் என்ன டா சொன்னேன்? இடிக்கிற மாதிரி வந்து லேசா ரியர் வியு மிரரை மட்டும் இடிச்சி ஒடச்சிட்டு போ னு தானே சொன்னேன்?” என்று கைபேசியில் யாரிடமோ பிரசாத் தனது அறையில் இருந்து கத்திக் கொண்டிருந்தான்.
மறுமுனையில் இருப்பவன், “சாரி சார்.. ஏதோ தப்பு நடந்துடுச்சு……….”
Advertisement
Advertisement
“சாரி சொன்னா ஆச்சா? ரெண்டு பேருக்கும் பெருசா அடி பட்டிருந்தா என்னாகுறது?” என்று மேலும் எகிறியவன் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்கவும் சட்டென்று குரலை தாழ்த்தி, “சரி.. நான் அப்பறம் பேசுறேன்.. சொன்னது போல் பணம் வந்திடும்.. நானே காள் பண்றேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
Advertisement
மித்ராணி மனோஜ் இருவருக்கும் பெரிதாக எதுவும் அடி படவில்லை. மித்ராணி சுதாரிப்புடன் கைகளை வைத்து முகத்தை மறைத்திருக்க, உடைந்த கண்ணாடி துண்டுகள் கையில் பட்டு சிறு சிறு காயங்களை ஏற்படுத்தி இருந்தது. இடது கையில் முழங்கைக்கு மேல் லேசாக காயமடைந்திருக்க, வலது கை உள்ளங்கை லேசாக காயமடைந்திருந்தது. மனோஜிற்கு கன்னத்தில் லேசான கீறல் ஏற்பட்டிருக்க, கதவில் இடித்ததால் வலது பக்கம் நெற்றியில் லேசான வீக்கம் இருந்தது.
இருவருக்கும் அருகில் இருந்த மருத்துவமனையில் முதல் உதவி செய்து கிருபாகரன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
முகூர்த்தப் புடவை எடுக்காமல் வீட்டிற்கு வந்ததில் பிரசாத்திற்கு மகிழ்ச்சி தான் என்றாலும் இந்த விபத்தை கண்ட போது அவனது மனம் பதறத் தான் செய்தது. மனோஜ் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பாசமும் இருப்பதால் மித்ராணிக்காக மட்டுமின்றி மனோஜிற்காவும் சேர்த்து தான் பதறினான். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இது தான் போல!
பிரசாத் கதவை திறக்க வெளியே கமலா தான் நின்றிருந்தார்.
“சாரி அத்தை..” என்று வருத்தமான குரலில் கூறினான்.
அவர், “இவ்ளோ நேரம் மனோஜ் இதை தான் சொல்லிட்டு இருந்தான்.. அவனை சமாதானம் செஞ்சு ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வந்தா இப்போ நீயா? சாரி சொல்றதுக்கு நீ என்ன பண்ண?”
“நான் தானே மித்துவும் மனோவும் தனியா வர பிளான் போட்டேன்”
“நீ நல்லதை நினைத்து தான் பண்ண.. இப்படி நடக்கணும் னு இருக்கு.. விடு”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அத்தை.. என்னால் தானோ னு மனசை அரிச்சிட்டே இருக்குது” என்றான் உண்மையான வருத்ததுடன்.
“நீ என்ன பண்ணுவ! விடு” என்றார்.
“மித்து என்ன பண்றா அத்தை?”
“விபத்து நடந்த அதிர்ச்சியா இல்லை டாக்டர் கொடுத்த மருந்தா னு தெரியலை தூங்குறா” என்றவர், “அண்ணா இப்போ தான் அண்ணியை கூட்டிட்டு கடைக்கு போறார்………”
“எங்க? என்ன கடை?”
“முகூர்த்தப் புடவை எடுக்க போயிருக்காங்க”
இதை கேட்டதும் வருத்தம் நீங்க மீண்டும் கோபமும் வெறியும் பிரசாத்தை ஆட்கொண்டது.
அவன் எரிச்சலுடன், “இந்த நிலையில் இன்னைக்கே போகனுமா?”
“இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்குது.. கல்யாணத்திற்கு நாளும் கம்மியா இருப்பதால் இன்னைக்கே முகூர்த்தப் புடவை எடுத்திரலாம் னு அண்ணா அண்ணியை கூட்டிட்டு போயிருக்கார்”
“என்னவோ போங்க அத்தை! எனக்கு என்னவோ எல்லாத்தையும் இப்படி அவசர அவசரமா செய்றதில் கொஞ்சம் கூட உடன்பாடே இல்லை.. நம்ம குடும்பத்தில் முதல் கல்யாணம்.. நிதானமா மகிழ்ச்சியுடன் செய்ய வேணாமா?”
“அண்ணா………….” என்று அவர் இடை புகுந்ததை கவனிக்காதவன் போல் தொடர்ந்து பேசினான்.
“நேத்து வரை கூட ரொம்ப தெரியலை.. ஆனா இன்னைக்கு என்னவோ மனசே சரியில்லை அத்தை.. முகூர்த்தப் புடவை எடுக்க போனப்ப இப்படி ஆனது!! எப்படி சொல்ல னு தெரியலை அத்தை.. என் மனசில் படுறதை சொல்லலாமா னு கூட யோசனையா தான் இருக்குது” என்று அவன் வரவழைத்த தவிப்பான குரலில் பேசி இழுத்து நிறுத்த,
கமலா, “என்ன டா? ஏன் இப்படி பேசுற? சொல்லு” என்று கேட்கவும்,
அவருக்காக சொல்வது போல் தயங்கி தயங்கி சொல்ற பாவனையுடன், “இல்ல.. அது வந்து அத்தை.. இந்த விபத்து.. அதுவும் முகூர்த்தப் புடவை எடுக்கப் போனப்ப நடந்து.. மனசுக்கு என்னவோ அபசகுனம் போல லேசா படுது.. மித்து மனோ இப்படி அவசரமா இணைவது சரி தானா? அவங்க ராசி பலன்களை………….” என்று நிறுத்தியவன் அப்பொழுது தான் அவரது கலவர முகத்தை பார்ப்பது போல் பார்த்து, “ச்ச்.. சாரி அத்தை.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. நான் ஏதோ தெரியாம.. மனசில் படுது னு.. ப்ச்.. விடுங்க அத்தை.. நான் சொன்னதை மறந்துடுங்க.. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்.. சாரி அத்தை” என்று வருந்துவது போல் பேசி அவரைத் தேற்றினான்.
பிரசாத்தின் திட்டத்தை அறியாத கமலா தனது கலக்கத்தை மறைத்து, “நீ கவலைப் படாத டா.. எல்லாம் நல்லாதவே நடக்கும்” என்று கூறி அவனது புஜத்தை தட்டிவிட்டுச் சென்றார்.
மனோஜ் தனது அறையில் இருந்து வெளியே வர, பிரசாத், “இப்போ எப்படி இருக்குது?” என்று உண்மையான அக்கறையுடன் கேட்டான்.
மனோஜ் மென்னகையுடன், “எனக்கு ஒன்னுமில்லை டா.. அம் பைன்” என்றான்.
பிரசாத், “ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே!”
“எவ்ளோ நேரம் தான் படுத்தே இருக்கிறது? கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்”
“இன்னைக்கு லீவ் எடுக்கிறதா தானே இருந்த அப்பறம் என்ன?”
“சின்ன வேலை தான் டா.. போயிட்டு வந்துடுவேன்”
“என்ன வேலை னு சொல்லு நான் போறேன்.. நீ ரெஸ்ட் எடு”
“டேய் நான் நல்லா தான் இருக்கிறேன்.. பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்ணாத.. XX சைட்டில் பிரச்சனை.. நான்……….”
“என்ன பிரச்சனை? அந்த தர்மராஜ் வேலையா?” என்றான் சிறு கோபத்துடன்,
“அவனை தவிர வேறு யாரு எனக்கு பிரச்சனையை கிளப்புவான்? அப்பாக்கு விஷயம் போறதுக்குள் சரி பண்ணனும்”
பிரசாத், “வெளியே புலி வீட்டில் எலி” என்று நக்கலுடன் கூற,
மனோஜ், “இது பயம் இல்லை.. மரியாதை.. சின்ன வயதில் இருந்து அப்படி இருந்தே பழகிடுச்சு.. சரி நான் கிளம்புறேன்” என்றவன் கமலாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
பிரசாத்தும் வேலை விஷயமாக கிளம்பினான்.
சிறிது நேரம் தூங்கி கண் விழித்த மித்ராணி கண்டது தன்னை பார்த்தபடி கவலையும் கலவரமுமாக அமர்ந்திருந்த கமலாவைத் தான்.
மித்ராணி, “எனக்கு ஒன்னுமில்லை மா.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிற?”
மகளின் குரலில் சிந்தனை கலைந்தவராக, “பால் இல்ல ஜூஸ் குடிக்கிறியா டா?”
“ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிற னு கேட்டேன்”
“அது.. ஒன்னுமில்லை.. அடி பட்ட கையை பார்த்து…………”
“அம்மா.. இப்போ என்ன உன் மனசில் ஓடுது? மறைக்காம சொல்லு.. உனக்குள்ளேயே நினைச்சு கவலைப்படாம சொல்லு”
“அதான் சொன்னேனே………….”
“எனக்கு அடிபட்டதை நினைத்து னா கவலை மட்டும் தான் படுவ, ஆனா உன் முகம் கலவரமா இருந்துது.. என்ன பயம் உனக்கு? என்னாச்சு?”
“அது..” என்று அவர் இன்னமும் தயங்க, அவள், “சொல்லு மா” என்றாள் சற்று கனிவான குரலில்.
கமலா, “இந்த விபத்து என்னவோ மனசுக்கு நெருடலா இருக்குது”
“என்ன?” என்று அவள் புரியாமல் வினவ,
அவர், “முகூர்த்தப் புடவை எடுக்க போனப்ப இப்படி ஆனது கொஞ்சம் மனசு சரியில்லை”
“அபசகுனம் னு நினைக்கிறியா?” என்று அவள் சரியாக கணித்து கேட்க கமலா அமைதியாக ‘ஆம்’ என்று தலையை ஆட்டினார்.
“தேவை இல்லாம மனச குழப்பிக்காத மா…………”
“இல்லை.. கல்யாணம் பேசிய பிறகு நீங்க ரெண்டு பேரும் முதல் முறையா தனியா வந்தீங்க.. அதுவும் முகூர்த்தப் புடவை எடுக்க.. அதான்.. உங்க ரெண்டு பேர் ஜாதகம் பார்க்கலாமா னு யோசிக்கிறேன்”
“ஓ!” என்றவள், “ஒருவேளை ஜாதக பொருத்தம் இல்லை னா என்ன செய்வ?”
“ஏன் டி இப்படி பேசுற?”
“பின்ன என்ன மா? ஒரு வாரத்தில் கல்யாணத்தை வச்சுகிட்டு இப்போ ஜாதகம் பார்க்க போறேன் னு சொல்ற!”
“வேற என்ன தான் பண்றது?”
“எல்லாம் நாம நினைக்கிறதில் தான் மா இருக்குது.. நானும் மனோவும் போகும் போது இப்படி விபத்து நடந்து அபசகுனமா ஆகிடுச்சே.. நாங்க இணைந்தால் சரி வருமா னு நீ நெகட்டிவ்வா நினைக்கிற.. அதையே இப்படி யோசிச்சுப் பாரேன்.. நாங்க ரெண்டு பேர் சேர்ந்து இருந்ததால், இணைந்து இருந்த எங்க ராசியினால் தான் பெருசா எதுவும் நடக்காமல் லேசான அடியுடன் நாங்க தப்பித்தோம் னு நினை மா.. எதுவும் நாம எடுக்கிறதில் தான் இருக்குது.. நம்ம எண்ணங்களுக்கு நிறைய சக்தி உண்டு மா.. நாம பாசிட்டிவ்வா நினைத்தால் எல்லாமே பாசிட்டிவ்வா தான் நடக்கும்” என்றதும் கமலாவின் முகத்தில் சிறு தெளிவு வந்தது.
அவர் அமைதியாக அவளை பார்க்கவும், மித்ராணி, “என்ன மா?”
அவர் மென்னகையுடன் அவளின் கன்னத்தை தட்டி, “உன்னை நினைச்சு பெருமையா இருக்குது டா.. நீ தகப்பன் சாமி மாதிரி டா”
“நான் சாமிலாம் இல்லை ஆசாமி தான்.. பசிக்குது.. ஜூஸ் கொண்டு வா.. குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள்.
“மாமாவும் அத்தையும் வந்த பிறகு கிளம்பலாம்”
அவள் யோசனையுடன் பார்க்க அவர், “முகூர்த்தப் புடவை எடுக்க போயிருக்காங்க”
அவள் முறைக்கவும், அவர், “நீயே நாம எடுத்துக்கிறதில் தான் இருக்குது சொன்னியே! அப்பறம் என்ன?”
கோபத்தை அடக்கியபடி அவள், “மனோவும் போயிருக்கானா?”
“இல்லை.. அவங்க கிளம்பும் போது மனோ ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தான்.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மனோவும் பிரசாத்தும் கிளம்பி ஆபீஸ் போனாங்க”
“உன் அண்ணன் பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லை மா.. ரொம்ப அராஜகம் பண்றார்” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு,
“அப்படி என்னடி பண்ணிட்டார்? சும்மா எப்ப பார்த்தாலும் அவரை ஏதாவது சொல்லிட்டு இருக்காத”
“என்ன பண்ணாரா! யார் கல்யாணத்துக்கு இந்த புடவை எடுக்கிறார்? நானும் இல்லை மனோவும் இல்லை..” என்று கோபத்துடன் கூறியவள் பின் அமைதியாக கைபேசியை எடுத்து ஏதோ செய்யத் தொடங்கினாள்.
“உன்னை அலைய வைக்க வேணாம் னு தான் அவங்க மட்டும் போனாங்க.. நமக்கு நேரமும் கம்மியா தானே இருக்குது.. கல்யாணத்தை கிட்டக்க வச்சிட்டு வேற என்ன பண்ண?” என்ற கமலாவின் சமாதானத்தை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.
இரண்டு நிமிடத்தில் கைபேசியில் யாருக்கோ அழைத்தவள், “ஹலோ ஓலா கேப் புக் பண்ணியிருந்தேன்……” என்று பேச ஆரம்பிக்கவும்,
கமலா, “மித்து என்ன பண்ற? மாமாவும் அத்தையும் வந்திரட்டும்.. கொஞ்சம் பொறுமையா இரு” என்று அவர் சொன்னதை கண்டுக் கொள்ளாமல் அந்த ஓட்டுனரிடம் பேசி முடித்தவள் கட்டிலில் இருந்து எழுந்தபடி, “இன்னும் மூணு நிமிஷத்தில் கார் வந்திடும்.. நான் கிளம்புறேன்.. நீ என்னுடன் வரியோ இல்லை உன் நொண்ணனை கொஞ்சிட்டு வருவியோ! அது உன் இஷ்டம்” என்றவள் அவரது பதிலை எதிர்பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
இரண்டு நிமிடத்தில் குளியலறையை விட்டு வெளியே வந்தவள் முகத்தை துடைத்து லேசாக கலைந்திருந்த முடியை சீர் செய்து அன்னையின் கைபையில் இருந்து வீட்டுச் சாவியை எடுந்துக் கொண்டு வெளியே சென்றாள்.
“மித்ரா நீ செய்றது சரி இல்லை.. நான் சொல்றதை கேளு” என்றபடி அவள் பின்னால் வந்த அன்னையை கண்டுக் கொள்ளாமல் காத்திருந்த வண்டியில் கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.
கமலாவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. பிரசாத்தின் பேச்சில் குழம்பிய மனம் மகளின் பேச்சில் சிறிது தெளிந்தாலும் முற்றிலும் தெளிய விடாமல் ஏதோ ஒரு பயம் நெஞ்சை ஒரு பக்கம் அரித்துக் கொண்டிருக்க, தான் சொல்லச் சொல்ல கேட்காமல் மித்ராணி இப்படி கிளம்பியதில் அவள் மீது கோபம் ஒரு பக்கம் இருக்க, பசி என்றவள் எதுவும் உண்ணாமல் செல்கிறாளே என்று தாய் மனம் ஒரு பக்கம் கவலை கொள்ள, அண்ணன் அண்ணியிடம் என்ன சொல்வது என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று செய்வதறியாது திண்டாடிக் கொண்டிருந்தார்.
மித்ராணி கிளம்பிய சிறிது நேரத்தில் கிருபாகரனும் மல்லிகாவும் வந்தனர்.
மல்லிகா, “என்ன அண்ணி நீங்க மட்டும் தனியா இருக்கிறீங்க?”
“மனோவும் பிரசாத்தும் ஆபீஸ் கிளம்பிட்டாங்க”
“ஓ.. மித்து தூங்குறாளா?”
“இல்லை.. வந்து” என்று அவர் திணற,
கிருபாகரன் இறுக்கமான குரலில் கோபத்தை அடக்கியபடி, “என்ன! உன் பொண்ணு கோபப் பட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாளா?”
“இல்ல ணா அப்படியெல்லாம் இல்லை”
“இப்பலாம் யாரும் என் பேச்சை கேட்கிறதே இல்லை.. என்னமும் பண்ணுங்க” என்று கோபத்துடன் கூறியவர், “ஆபீஸ் கிளம்புறேன்” என்று கூறி அலுவலகம் கிளம்பினார்.
மனதின் தவிப்பில் ஏனோ கமலாவிற்கு கண்கள் கலங்க, மல்லிகா அவரது கைகளை பற்றி, “என்ன அண்ணி.. உங்க அண்ணாவை பத்தி தான் தெரியுமே! கவலைப் படாதீங்க” என்றார்.
“என்னவோ மனசே சரி இல்லை அண்ணி.. கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்தே பிரச்சனையா தான் இருக்குது.. இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணுமே னு பயமாவும் கவலையாவும் இருக்குது அண்ணி” என்றார் கலங்கிய குரலில்.
மல்லிகா மனதிலும் இதே கவலை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “கல்யாணம் நல்லபடியா அமோகமா நடக்கும் அண்ணி.. மனசை போட்டு அலட்டிக்காதீங்க” என்றார்.
“கண்ணை துடைங்க.. சந்தோஷமா இருங்க” என்று மல்லிகா அன்புடன் அதட்ட,
கமலா கண்களை துடைக்கவும் மல்லிகா மென்னகையுடன், “வாங்க புடவையை பார்க்கலாம்” என்றபடி முகூர்த்த புடவையை எடுத்துக் காட்டினார்.
அரக்கு நிறத்தில் முழுவதும் சருகை வேலைப்பாடுடன் புடவை ஜொலித்தது.
கமலா புன்னகையுடன், “புடவை ரொம்ப நல்லா இருக்குது அண்ணி” என்றார் மகிழ்ச்சியுடன். மல்லிகா முகத்திலும் புன்னகை.
அடுத்து மற்றவர்களுக்கு எடுத்த ஆடைகளை காட்டினார்.
அவற்றை பார்த்து முடித்ததும் கமலா, “கல்யாணத்துக்கு அப்பறம் மித்ரா ஏதாவது பண்ணா எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க அண்ணி” என்று அன்னையாக கவலைப் பட,
மல்லிகா மென்னகையுடன், “மித்து எனக்கு மகள் மாதிரி.. நான் நல்லா பாத்துக்கிறேன்.. கவலைப் படாதீங்க அண்ணி..”
“உங்களை பத்தி தெரியும் அண்ணி.. ஆனா இப்பலாம் மித்ராக்கு ரொம்ப கோபம் வருது”
“அவளோட கோபம் நியாயமானதா தானே இருக்குது” என்றவர், “நான் மித்து கிட்ட பேசுறேன்” என்று கூறி மித்ராணியை கைபேசியில் அழைத்தார்.
அழைப்பை எடுத்தவள், “சொல்லுங்க அத்தை.. பர்சேஸ் முடிந்ததா? கொஞ்சம் அவசர வேலை அதான் கிளம்பிட்டேன்.. சாரி”
“சாரி-லாம் எதுக்கு டா! முகூர்த்தப் புடவையை அம்மா கிட்ட கொடுத்து விடுறேன்………”
“வேணாம் அத்தை.. நான் கல்யாணத்தன்னைக்கே பார்த்துக்கிறேன்.. அளவு ப்லோவ்ஸ் அம்மா கிட்ட இருக்குது.. அதை வாங்கிக்கோங்க”
“உனக்கு உன் மாமா பத்தி தான் தெரியுமே டா……….”
“உங்களுக்கும் என்னை பத்தி தெரியுமே அத்தை” என்றவள் மென்னகையுடன், “இப்படி சஸ்பென்ஸா கல்யாணத்தன்னைக்கு பார்க்கிறதும் ஒரு த்ரில் தானே அத்தை! அப்படியே இருக்கட்டும்” என்றாள்.
மித்ராணியை பற்றி அறிந்தவராக, “சரி டா உன் இஷ்டம்” என்றுவிட்டார்.
மாலையில் கமலாவை வீட்டில் விடும் பொறுப்பை தானே முன்வந்து ஏற்றுக் கொண்ட பிரசாத் வண்டியில் செல்லும் போது கமலா என்ன முடிவில் இருக்கிறார் என்பதை அறியும் பொருட்டு எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கமலாவே அந்த பேச்சை எடுத்தார்.
பிரசாத்தை தேற்றும் விதத்தில் இருந்தது கமலாவின் பேச்சு. காலையில் மித்ராணி தன்னிடம் கூறியதை கூறி, “அதானல் நீ கவலைப் படாத பிரசாத்.. எல்லாம் நல்லதே நடக்கும் னு நினைப்போம், நல்லதாவே நடக்கும்” என்றார்.
பிரசாத் மனதின் கொதிப்பையும் எரிச்சலையும் மறைத்து வெளியே சிரித்தபடி, “சரி அத்தை” என்றான்.
—————————————————————————————————————————————————-
வேலையில் வெற்றிவேல் தனது திட்டத்தை கண கச்சிதமாக நிறைவேற்றினான். ஆம்! ஆதரவற்ற பெண்களை கடத்தி அவர்களை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டிருந்த அந்த முக்கிய குற்றவாளியை என்-கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தான். மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் காரணம் கேட்ட போது, அந்த குற்றவாளியை கைது செய்து அழைத்து வரும் போது அவன் தன்னை சுட்டு தப்பிக்க முயற்சித்த வேலையில் வேறு வழி இல்லாமல் கொன்றதாக கூறினான். விசாரணை செய்த ஆணையர் தர்மத்திற்கு கட்டுப்படுபவராகவும் இவனுக்கு வேண்டியவராகவும் இருக்கவும் பிரச்சனை இன்றி சமாளித்தான்.
இந்த பிரச்சனை முடிந்ததும் அவன் செய்த முதல் வேலை அருணாச்சலத்தை போய் பார்த்தது தான்.
அருணாச்சலத்தை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று பார்த்தான்.
மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம், “குட் மார்னிங் மாமா” என்ற உற்சாக குரலில் நிமிர்ந்து பார்த்தார். வெற்றிவேலை கண்டு அவர் சிறிது அதிர்ந்தார்.
அவரது அதிர்ச்சியை கண்டுக்கொள்ளதவன் போல் இயல்பான குரலில், “இங்கே கேன்டீன் இருக்குதா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்” என்று அருணாச்சலம் அமைதியாக தலையை ஆட்ட,
அவன், “நாம அங்கே போய் பேசலாமா?” என்று வினவ,
அதுவே அவருக்கும் சரி என்று பட அமைதியாக எழுந்து, “வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
அங்கே சென்று இருவருக்கும் காபி வாங்கி ஒரு மேஜையில் அமர்ந்தார்.
வெற்றிவேல், “என்னை பார்த்து எதுக்கு பயம்?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“இல்லை.. அப்படி இல்லை”
“அன்னைக்கு வராத பயம் இப்போ ஏன் வருது?”
“அன்னைக்கு நீங்க மூன்றாம் மனிதர்.. இப்போ அப்படி இல்லையே”
“ஸோ என்னை ஏத்துகிட்டீங்க!” என்று புருவம் உயர்த்த,
அவர் அவசரமாக, “இல்லை.. அப்படி சொல்லலை.. நான் உங்க நினைப்பை சொன்னேன்..”
“ரிலாக்ஸ்” என்றவன் மென்னகையுடன், “அன்னைக்கு தள்ளி இருந்து பார்த்ததால் பயம் இல்லை.. இன்னைக்கு கொஞ்சம் கிட்ட வந்து பார்க்கிறதால் பயம்.. இதே நீங்க நெருங்கி வந்திட்டா பயம் இருக்காது” என்றான்.
இப்பொழுது தெளிந்திருந்த அருணாச்சலம், “உங்களிடம் பயம் இல்லை உங்க எதிரிகளை நினைத்து தான் பயம்” என்றார்.
“என் மேல் நம்பிக்கையும் இல்லை”
அவர் சிறு சங்கடத்துடன் பார்க்க, அவன், “உங்களுக்கு என் வேலை தானே பிரச்சனை! அதை தூக்கி போட்டுட்டு வரேன், உங்க பொண்ணை எனக்கு தாங்க-னுலாம் வசனம் பேச என்னால் முடியாது.. மானு எனக்கு உயிர்.. என் வேலை எனக்கு உயிர் போன்றது.. உங்க கிட்ட மாலினிக்காக அத்தையை விட சொன்னாலோ இல்லை அத்தைக்காக மாலினியை விட சொன்னாலோ உங்களால் முடியுமா? அப்படி தான் எனக்கும்”
“..”
“நான் சொல்லி காட்டுறேன் னு தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு புரிய வைக்க எனக்கு வேறு வழி இல்லை.. அன்னைக்கு உங்க மகளை காப்பாற்ற இந்த ACP தேவைபட்டான்.. அன்னைக்கு என் மேல் இருந்த நம்பிக்கை இப்போ ஏன் இல்லை? அன்னைக்கு உங்க மகளை பிரச்சனையில் இருந்து காப்பாத்திய அதே ACP வாழ்க்கை முழுவதும் உங்க மகளை காப்பான் னு ஏன் யோசிக்க மாட்டிக்கிறீங்க?”
சில நொடிகள் மௌனமாக இருந்த அருணாசலம், “எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க” என்றார்.
வெற்றிவேல் விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ் மாமா.. நல்லா யோசிங்க” என்று கூறியபடி அவருடன் கை குலுக்கிவிட்டு கிளம்பினான்.
அன்று மாலை ஆறரை மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்ப்பதற்காக வெளியே கிளம்பிய போது புஷ்பா, “ரொம்ப நேரம் ஆக்காத சீக்கிரம் வந்திடனும்” என்றார்.
“கவலையே படாதே புஸ்ஸி கேட்.. மூர்த்தி சீக்கிரம் பேக் பண்ணி கொண்டு வந்து விட்டிருவான்” என்று அவரை வம்பிழுத்துவிட்டே கிளம்பினாள்.
அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அருணாச்சலம் வெற்றிவேல் தன்னிடம் பேசியதை பற்றி மனைவிடம் கூறினார்.
புஷ்பா, “என்ன முடிவு பண்ணி இருக்கிறீங்க?”
“யோசிக்கணும்..” என்றவர், “நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டார்.
“நான் தான் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டேனே!”
“மாலு கிட்ட பேசினியா?”
“இல்லை.. அவளே தெளிந்து வரட்டும் னு பேசலை.. ரெண்டு நாளா அப்பப்ப யோசனையில் இருந்தா.. இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா தெரிந்தா அதான் மூர்த்திக்கு போன் பண்ணி பேசினேன்.. அவனும் வேலை கிடைச்சதுக்கு ட்ரீட் தரதா சொல்லி அவளை வர சொல்லி இருக்கிறான்”
“அதான் அன்னைக்கே பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் சேர்த்து தந்துட்டானே! மாலு கேட்டிருப்பாளே!”
“அவளை சமாளிக்க மூர்த்திக்கா தெரியாது! கூடவே அவளுக்கும் அவன் கூப்பிடுற காரணம் தெரியாமலா இருக்கும்!”
“ஹ்ம்ம்.. மூர்த்தி கிட்ட பேசிட்டு அவளே சொல்லட்டும்.. இன்னைக்கு வெற்றியை பார்த்ததை பத்தி இப்போதைக்கு மாலு கிட்ட சொல்ல வேணாம்.. அவளா முடிவு எடுக்கட்டும்.. அவர் தான் தன்னோட வாழ்க்கை னு நினைச்சா நமக்காக னு யோசிக்கிறதை மீறி நம்ம கிட்ட வந்து பேசுவா.. பார்க்கலாம்” என்றார்.
புஷ்பா சிரிக்கவும், அவர், “என்ன?”
“சார் காணாம போய் வெற்றி வந்திருக்குது” என்றார் மென்னகையுடன்.
அருணாச்சலம், “இப்போ சார் சொல்ல வரலை தான் ஆனா அதே நேரத்தில் முழு மனசா மாப்பிள்ளையாவும் நினைக்க முடியலை”
“ஹ்ம்ம்.. புரியுதுங்க.. மாலினி வெளியே வந்துட்டா நீங்களும் வந்துருவீங்க”
பெருமூச்சொன்றை வெளிட்டு, “அப்பவும் முழு மனசுடன் வருவேனா தெரியலை” என்றவர், “மாலு விஷயத்தில் பயப்படும் நீ எப்படி திடமா ஓகே சொல்ற?” என்று வினவினார்.
“அவர் கண்ணில் தெரிகிற காதல்..” என்ற புஷ்பா, “நீங்க மாலுவோட பாதுகாப்பை மட்டும் தான் யோசிக்கிறீங்க.. நான் கூடவே இன்னொன்னையும் யோசித்தேன்.. ரெண்டு பேருக்கும் ஏழு வயசு வித்யாசம்…………….”
“பொண்ணு கொடுக்கிறதா இருந்தா தானே அடுத்த கட்டத்துக்கு போகணும்! அப்போ தானே இதெல்லாம் நான் யோசிப்பேன்”
“அடுத்து நீங்க இதை யோசிப்பீங்க னு தான் இப்பவே சொல்றேன்.. இதுவரை யாரையும் திரும்பிப் பார்க்காத மாலுவோட மனதை இவர் தான் ஈர்த்து இருக்கிறார்.. ஈர்ப்பையும் மீறி அவளுக்கு அவரை பிடிச்சு போச்சுனா, அப்பறம் இந்த ஏழு வயசு வித்யாசம் பெருசு இல்லை னு நினைத்தேன்”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்றபடி அவர் எழ,
புஷ்பா, “இத்தனை வருஷத்தில் அவருக்கு எதிரிகள் இல்லாமலா இருந்திருக்கும்? அவரோட குடும்பத்தில் இருக்கிறவங்க பத்திரமா தானே இருக்கிறாங்க! மாலுக்கு ஒன்னு னா அவரால் தாங்கிக்க முடியாது என்றபோது அவர் மாலுவை இன்னும் கவனத்துடன் நல்லா பார்த்துப்பார்” என்றார்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
