Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வினியின் நதி

அன்பு நவியின் வினியின் நதி அத்தியாயம் 7

 அத்தியாயம் 7

நதி வீட்டினுள் செல்லும் போது அவள் குடும்பமே அவளுக்காக விழித்திருந்தது. 

”இந்நேரம் எங்கடி தனியா போய்ட்டு வர?” என அவள் தாய் லட்சுமி கேட்க, 

”சும்மா காத்து வாங்க போனேன்மா” என நதி கூற,



Advertisement

”நடுசாமத்துல காத்து வாங்க வெளிய போற அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டயோ?” என அவள் தாய் அவளை அடிக்க வர, 

அவள் தந்தை தடுத்து, ”வர வர உன் போக்கு சரியில்ல நதி… நைட்டு ரொம்ப நேரம் லேப்டாப் பாத்துட்டு இருக்க… நீயா சிரிக்க… சரியா படிக்க மாட்டிக்க… நாங்க படிக்கலனு தான் என் பிள்ளைகளை படிக்க வைக்கேன்… என்ன நினச்சுட்டு இதெல்லாம் பண்ற நதி?” என்றார்.

”இல்லப்பா… நிஜமாவே காத்து வாங்க தான் போனேன்” என நதி தலையை குனிந்து கொண்டு கூற,

Advertisement

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த அவள் சகோதரி சுதா நதியைப் பார்த்து, ”காத்து வாங்க பேச்சு சத்தம் எதுக்கு வருது?” எனக் கேட்க, 

Advertisement

’எட்டப்பி எப்டி போட்டுக்கொடுக்கா பாரு’ என நதி நினைத்து ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.

”படிக்க இஷ்டம் இல்லேனா சொல்லு… எங்கயாச்சும் வேலைக்கு போ.. இல்ல வீட்லயே கூட சும்மா இரு.. எதாச்சும் செஞ்சு எங்க மானத்த வாங்காத” என அவள் தாய் கடிய, 

“அம்மா நான் நல்லா தான் படிக்கேன்…” என நதி கூற,

Advertisement

”உன் அக்கா சுதாவ பாரு.. காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கிருக்கா… ஆனா நீ? சும்மா படிக்கேன் படிக்கேன்னு ஏமாத்துற” 

’85% எடுத்த எனக்கே இந்த நிலைமையா? இத விட எப்டி நல்லா படிக்க… கடவுளே முருகா காப்பாத்து’ என நதி நினைத்து, 

“நானும் கோல்டு மெடல் வாங்க முயற்சி பன்றேன்மா…” என்றாள்.

”சும்மா வாய்ல சொல்லாத.. செஞ்சு காட்டு போ… போய் தூங்கு” என அவள் தாய் அனுப்ப,

தப்பித்தோம் என நதி மாடிக்கு தூங்க ஓடி விட்டாள்.

”என்னங்க இவ இப்டி பொய் சொல்றா? யாரா இருக்கும் அந்த பையன்? எதுவும் தப்பு நடந்துறாதே… வேணும்னா இனி அவள படிக்க போக வேண்டாம்னு சொல்லிருவோமா?” என லட்சுமி தனது கணவன் குருவிடம் கேட்க, 

“லட்சுமி இப்டி சொல்றத நிறுத்து… படிப்பு ரொம்ப முக்கியம்… நதி பொய் சொல்றா தான்… முதல்ல அந்த பையன் யாருனு பொறுமையா விசாரிப்போம்… நம்ம பொண்ணு நம்மல மீறி எதுவும் செய்ய மாட்டா நம்பு… தோளுக்கு மேல வளர்ந்த வயசு பிள்ளைய அடிக்குறது என்ன பழக்கம்?” என குரு கடிய, 

”நீங்க என்ன சொன்னாலும் சரி… 3 பொண்ண பெத்துருக்கோம்… இப்ப தான் ஒருத்திக்கு முடிஞ்சுருக்கு… நதிக்கு மூத்தவ இன்னொருத்தி இருக்கா… நம்ம கண்ணு முன்னாடி இருக்கனும்னு தான அவள இங்கயே படிக்க வைக்கோம்… இவ என்னனா நடுராத்திரில எவன் கூடவோ பேசிட்டு வரா… வயசு பிள்ளை எதுவும் ஆச்சுனா நமக்கு தான கஷ்டம்” லட்சுமி புலம்ப, 

அம்மா அப்டிலாம் நினைக்காத… நதி யோசிச்சு முடிவு செய்ற பொண்ணு… அவக்கிட்ட நான் பேசுறேன் நீ போய் தூங்குமா” என ரமா அவள் குழந்தையை ஆட்டிக்கொண்டே சொல்ல, 

“உன் பையன் எந்திச்சதுனால சரியா போச்சு… இல்லேனா என்ன ஆகிருக்கும்? நமக்கு எதுவும் தெரியாமலே போயிருக்கும்.. எனக்கு மனசே ஆறல போ” 

“அவ எந்த படிப்பு படிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு யோசிக்க தெரிஞ்ச நமக்கு அவ எதிர்காலத்த முடிவு பண்ண தெரியாத? நான் அவகிட்ட சொல்லி இனி யாருக்கிட்டயும் பேச வேண்டாம்னு சொல்றேன்மா” ரமா அவள் தாயை சமாதானம் செய்ய, 

இது அனைத்தையும் பார்த்தும் எதுவும் சொல்லாமல் சுதா தூங்க சென்றுவிட்டாள். 

ரமா என்ன தான் தாயை சமாதானம் செய்தாலும் அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை… நதி செய்வது தவறு.. அதை சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இப்ப்போது நதிக்கு இல்லை… இதனால் அவள் தவறான முடிவும் எடுத்து விடக்கூடாது.. என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.

இது எதுவும் தெரியாமல் நதி யாருக்கும் எதுவும் தெரியாது என அவளே எண்ணிக் கொண்டு தனக்கு பிடித்தவனே காதலை சொல்லிய சந்தோஷத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள். 

மறுநாள் நதி கல்லூரிக்குச் சென்றதும் ரமா அவள் மடிக்கணினியை எடுத்து நதியின் முகநூலை திறந்தாள். நதியின் கெட்ட நேரம் அவள் முகநூல் கணக்கை வெளியேற்றாமலே (logout) வைத்திருந்தாள். 

ரமா அவளின் செய்திகளை எல்லாம் படித்து விட்டாள். இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும் அவளுக்கு இருக்கு என நினைத்துக் கொண்டாள்.

நதியோ கல்லூரிக்கு சென்று காலை இடைவேளை நேரத்தில் வினோதனைப் பார்க்க சென்றாள். ”அவனும் ஏதேனும் வீட்டில் பிரச்சனையா?” எனக் கேட்டான்.  

”அப்படிலாம் இல்ல.. நான் தான் எல்லாம் சமாளிச்சுட்டேன்ல…” என இரவு வீட்டில் நடக்கப் போவது தெரியாமல் அவனிடம் கொஞ்சம் கடலை போட்டு விட்டு கிளம்பினாள்.

நதி மாலை வீட்டிற்கு சென்றதும் சிற்றுண்டி எடுத்து மாடிக்கு சென்று உண்ண அமர்ந்தாள்.

அவள் பின்னாடியே வந்த அவள் சகோதரி ரமா அவளை முதுகோடு ஓங்கி ஒரு அடி அடித்தாள். 

சாப்பிட்டை வாய்க்கு கொண்டு சென்றவள் முதுகில் அடி விழுந்ததும் ”என்னக்கா?” என்றாள் கண்களில் பெருகும் கண்ணீரோடு.

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ… இந்த வயசுலயே காதல் கேக்குதா உனக்கு… கொன்னுருவேன் பாத்துக்கோ.. இனி மடிக்கணினி எடுத்த பிச்சுருவேன் பிச்சு… நம்ம நிலைமை என்னனு தெரிஞ்சும் இப்டி பண்ணலாமா?” என கேட்டு அடி வெளுத்து விட்டாள்.

நதியை அடித்து அடித்து ரமாக்கு கை வலியே வந்து விட்டது. அவ்வளவு அடி வாங்கியும் நதி ஒரு வார்த்தை பேசவில்லை. அழுதுகொண்டே அடியை வாங்கிக்கொண்டாள்.

”என்ன இனி எதுவும் பண்ணமாட்டேனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டிக்க.. அவ்ளோ திமிரா உனக்கு?.. அப்பா, அம்மாவ கஷ்ட படுத்துற மாதிரி இனி இப்டினு எதாச்சும் தெரிஞ்சது அவ்ளோ தான் சொல்லிட்டேன்..” சொல்லி விட்டு ரமா கீழே சென்றுவிட்டாள். 

நதி அழுதுகொண்டே சாப்பிடாமல் அப்படியே படுத்து தூங்கிவிட்டாள். (என்ன இவ அடி வாங்குனதுக்கு வருத்தப்படாம தூங்குறானு நினைக்கவேண்டாம்.. ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மருந்து… நதிக்கு தூக்கம் தான் மருந்து.. நல்லதோ, கெட்டதோ தூங்கி எழுந்து முடிவெடுத்தா அவள் முடிவு தெளிவா இருக்கும்…) 

இரவு 10 மணிக்கு மேல் எழுந்தாள். நதிக்கு பசித்தது எழுந்து சென்று சாப்பிட்டாள். வயிறு முழுவதும் சாப்பிட்ட பிறகு ஒரு தெளிவு வந்தது அவளுக்கு… 

நதியின் தாயோ தூங்க செல்லும் முன் அவளைப் பார்த்து ”ரமா எல்லாம் சொன்னா.. ஒழுங்கா இரு இனி… இல்லேனா படிக்க அனுப்ப மாட்டேன் சொல்லிட்டேன்” என சென்றுவிட்டார். 

’க்கும் மிரட்டுறாங்களாம்.. அப்டியே பிடிச்ச படிப்பு படிக்க வச்ச மாதிரி… இது உங்க நேரம் மம்மி.. நடத்துங்க நடத்துங்க’ என நினைத்து எதுவும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்றுவிட்டாள்.

மறுநாள் கல்லூரி சென்று நடந்ததை வினோதனிடம் சொல்லலாம் என பார்த்தால் அவள் நேரம் சுத்தமாக சரியில்லை போல வினோதன் கல்லூரிக்கே வரவில்லை… அடுத்த இரண்டு நாட்களும் வினோதன் வரவில்லை. அதற்கடுத்த இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு கல்லூரி விடுமுறை. அவளுக்கு என்னடா இது என்று வெறுத்துவிட்டது. 

ஒரு வழியாக அந்த வாரம் கடந்து திங்கட்கிழமை பிறந்தது. கல்லூரிக்கு சென்றதும் முதல் வேளையாக வினோதனைக் காணச் சென்றாள். வினோதனோ நதியைக் காண அவள் வகுப்பிற்கு சென்றிருந்தான். 

இருவரும் இவனுக்காக அவளும், அவளுக்காக இவனும் காத்திருந்து இடைவேளை நேரமே முடிந்தது. நதிக்கு கடுப்போ கடுப்பு. 

கிளம்பி அவள் வகுப்பிற்கு செல்லும் போது, ’அடக்கடவுளே.. ஒரு தடவை, இரண்டு தடவைன்னா சரி.. இப்டி ஒரு வாரம் முழுக்க தண்டிக்கக்கூடாது ஆண்டவா… மீ ரொம்ப ரொம்ப பாவம்… இதுக்கு மேல அவன பாக்கவிடலேனா அழுதுருவேன் சொல்லிட்டேன்.. என் கண்ணீர் விலைமதிப்பில்லாதது.. அத பாக்கவச்சுராத… ப்ளீஸ் வினோதன் கிட்ட பேச வச்சுரு’ என மானசீகமாக வேண்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் வினோதன் நடந்து வந்து கொண்டிருந்தான். 

மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் பூக்க ’அய்யோ கடவுளே.. யு ஆர் வெரி வெரி குட் கடவுள் (You are very very good god)… நினச்சதும் பாக்கவச்சுட்டயே… என் செல்லம் லவ் யூ முருகா’ என சொல்லி அவனிடம் வேகமாக சென்றாள்.

வினோதனோ நதியிடம் காதலைச் சொன்னதிலிருந்து பேசவே முடியவில்லை, முகநூலுக்கும் அவள் வரவில்லை. எதுவும் பிரச்சனையில்லை என்று தானே சொன்னாள் பிறகு என்ன? இவனுக்கும் உடல்நிலை சரியில்லாததால் 3 நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை. அதை முகநூலில் அவளிடம் சொல்லியிருந்தான். (ஆனால் அவள் தான் முகநூல் பக்கமே வரவில்லையே பிறகு எப்படி தெரிந்திருக்கும்?) 

அவளிடம் பேசலாம் என சென்றாள் வகுப்பில் அவள் இல்லை… அவளை எப்படி பார்ப்பது, நேரமாகிற்று என அவன் வகுப்பிற்கு செல்கையில் எதிரில் அவன் தேவதை. 

“அழகோ அழகு அவள் கண்ணழகு

அவள் போல் இல்லை ஒரு பேரழகு”

அவளை வெகு நாட்களுக்கு பின் பார்த்ததும் அவன் மனம் தானே பாடலைப் பாடத் துவங்கியது. அதை அடக்கிவிட்டு அவளிடம் பேசச் சென்றான். 

இவர்கள் இருவரும் பேச நெருங்கி வருகையில் ‘குறுக்க இந்த கெளசிக் வந்தா!…’ என கல்லூரி முதல்வர் அவர் அறையில் இருந்து அப்போது தான் வெளியில் வந்து நிற்கிறார். 

‘இப்ப என்ன பண்ணுவ.. இப்ப என்ன பண்ணுவ?’ என நதியின் மனசாட்சியே அவளைப் பார்த்து எதிரில் நடனம் ஆடிக்கொண்டிருந்தது. 

நதியோ ஏக்கமாக வினோதனைப் பார்க்க, ”நீ வகுப்பிற்கு போ.. நான் அப்றம் வரேன்..” என வினோதன் சைகை செய்து விட்டு விறுவிறுவென அவன் வகுப்பிற்குள் சென்றுவிட்டான்.

இவளும் வேறு வழியின்றி வகுப்பிற்கு சென்றாள். அடுத்த இடைவேளையில் நதி அவன் வருகைக்காக வகுப்பறை வாயிலைப் பார்த்துக் காத்திருந்தாள். அவள் எதிர்ப்பார்ப்பை தற்போது பொய்க்காமல் வினோதன் அவளைக் காண வந்து சேர்ந்தான். 

”என்னாச்சு எதுக்கு முகநூல் பக்கம் வரவே இல்ல?” வினோதன் கேட்க, 

மடை திறந்த வெள்ளமென மடமடவென்று வீட்டில் நடந்தது. அவள் அடி வாங்கியது. அவள் சகோதரி சொன்னது. அவள் தாய் எச்சரித்தது என எல்லாம் சொல்லி முடித்தாள். 

அதைக் கேட்டதும் வினோதனுக்கே வருத்தமாகியது. எல்லாம் தன்னால் தானே என.. 

”நீ கவலப்படாத நதி.. இதுக்கு நாளைக்கு ஒரு வழி சொல்றேன்… நீ நல்லா படி.. இதயே நினைக்காத… அவங்க நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க… இந்த வயசுல நம்ம பொண்ணு தப்பாகிறக்கூடாதுனு அக்கறைல சொல்றாங்க.. வருத்தப்படாத..” என வினோதன் அவளுக்கு ஆறுதல் கூறினான்.

”எது இந்த வயசுல நான் ஓடி போய்ருவேன்… என் வாழ்க்கைய நானே கெடுத்துருவேன்னு நினைக்குறது நல்லதா? அவங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்ல.. அவங்க பொண்ணுதான நான்.. என் இப்டி நினைக்காங்க?” சொல்லி கண் கலங்கினாள்.

அவனோ ”அடியே அவசரத்துல பிறந்தவளே… இது எல்லா பெத்தவங்களுக்கும் இருக்குறது தான்.. நீ வருத்தப்படாத.. நீ ஜெயிச்சுக்காட்டு.. அவங்களே உன்ன நம்புவாங்க சரியா?” என்று அவளை தேற்ற, 

”இதுக்கு முன்னாடி கூட எதுவும் தெரியாது… இப்ப உங்கக்கிட்ட அவசரத்துக்கூட பேச முடியாதுன்னு நினச்சா கஷ்டமா இருக்கு” என புலம்ப, 

”அதுக்குத்தான் நான் நாளைக்கு ஒரு வழி சொல்றேன்னு சொன்னேன்… அதுக்குள்ள அவசரப்படுற..” 

நதியோ “என்ன வழி சொல்லப்போறிங்க?” என கேட்க,

“அது ரகசியம்… நாளைக்கு சொல்றேன்… சரியா? கவலைப்படாம இரு.. நான் எப்பவும் உன் கூட இருப்பேன்.. என்ன ஆனாலும் எது நடந்தாலும் ஓகே”

“ம்ம்ம்” என்றாள்.

“என்னடி உர்ராங்கோட்டான் உறுமுற மாதிரி ம்ம்ம்-னு சொல்ற… சந்தோஷமா சரி சொல்லு” என்றான்.

அவளும் “உங்களுக்காக சரி” என சொல்ல, நாளை காலையில் வந்து சந்திக்கிறேன் என வினோதன் விடைபெற்றான்.  

நதியும் அவனிடம் பேசிய மகிழ்ச்சியில் அவள் வகுப்பிற்கு செல்ல திரும்பினாள். 

அங்கே பத்தடி இடைவெளியில் இவள் தோழிகள் இவளேயேப் பார்த்துக் கொண்டு ‘மாட்டுனடி மவளே’ என்ற ரீதியில் நிற்கின்றனர்.  

‘அய்யய்யோ… எலிக்கு பயந்து பூரான்கிட்ட சிக்குன கதையால இருக்கு’ என மானசீகமாக அவள் நினைக்க, 

‘அது என்னடி பூரான்.. புலின்னு தான சொல்லுவாங்க.. நீ பழமொழிய தப்பா சொல்ற…’ அவள் மனசாட்சி அவளை அந்த நிலையிலும் திருத்த,

’இவங்கெல்லாம் புலிக்கு சரிபட்டு வரமாட்டாங்க.. அதான் இவங்கள நான் பூரானுக்கு புரமோட் (Promote) பண்ணிட்டேன்..’ என மனதிடம் சொல்லி விட்டு, 

எப்படியும் இவங்கள சமாளிக்க தான வேணும் இதையும் சமாளிப்போம் என அவர்களை நோக்கி சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!