Skip to content
Post Views: 3,538
அத்தியாயம் 21 ( 3 )
அதிகாலை முகூர்த்தமும் முடிந்து அஸ்வத்தும் அருந்ததியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
பூஜா தம்பதியினர் அஸ்வத் பெற்றோர் எல்லாம் திருமணம் முடிந்தவுடனே திருநெல்வேலிக்கு புறப்பட்டிருந்தனர்.
Advertisement
சற்று முன்தான் புதுமாப்பிள்ளையும் பெண்ணும்கூட கோவிலுக்கு வந்து சென்றிருந்தனர். மூன்று வருடமாக சரவணனுக்கு தோதாக வரன் அமையவில்லை என சித்ரா வேண்டுதல் வைத்திருந்தார். திருணமானவுடன் கோவிலுக்கு அழைத்து வருகிறேன் என.
அதுபடி மகனையும் மருமகளையும் முகூர்த்தம் முடிந்தவுடன், அழைத்து வந்து வேண்டுதலை முடித்து சென்றிருந்தார்.
“குட்டிம்மா சாமி கும்பிடுங்க” என தனது தோளில் இருந்த மகளின் கையை சேர்த்து வைத்து சாமி கும்பிட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அருந்ததி. பக்கத்தில் அஸ்வத் இவர்களுடன்.
Advertisement
“அருந்ததி அங்க பார் சாமிக்கு தீபாராதனை காட்றாங்க” என்றான் அஸ்வத்.
Advertisement
“சாமி கும்பிடுங்க” என மகளின் கையோடு தனது கைகளையும் சேர்த்து நின்று தாயும் மகளுமாக அன்னை மீனாட்சியை வணங்கி நின்றனர்.
மரகதவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டியராசகுமாரி தன் குழந்தைகளை கருணையுடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.
அருந்ததியின் நெடுநாள் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கோவிலைச் சுற்றி வெளியே வந்தாள். அவளையே ஓர விழிகளால் பார்த்து ரசித்து கொண்டு நடந்து கொண்டிருந்தான் அஸ்வத்.
Advertisement
“என்ன…?” என்றாள் கணவனின் கேலியான பார்வையில்.
ஒன்னுமில்லை என தலையசைத்தான்.
“என் வேண்டுதல் உங்களுக்கு கிண்டலா…?” என முறைத்தாள்.
“நான் எப்படி…, அப்படி சொன்னேன்…?”
“பின்ன எதுக்கு இந்த சிரிப்பு…? புரமோஷன் தள்ளி போவுதுன்னு எவ்வளவு பீல் பண்ணீங்க…? அதுக்காகதான் வேண்டிக்கிட்டேன்”.
“ம்ம்…” என தலையசைத்து சிரித்து கொண்டான்.
“ம்ப்ச்.., இன்னும் என்ன…?” என்றாள் அவன் முகத்தில் இருந்த கேலியைப் பார்த்து.
“ஏன்டி…? உழைச்சு அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு புரமோஷன் வாங்கனது நானு”.
“யார் இல்லன்னு சொன்னா…? உங்களோட நேர்மைக்கும், ஹார்ட் வொர்க்குக்கும், கிடைச்ச பரிசுதான் இந்த புரமோஷன். ஆனால் அது தள்ளி போயிட்டே இருக்குன்னு நீங்க எவ்வளவு நாள் பீல் பண்ணீங்க”.
“ஒவ்வொரு தடவையும் நீங்க வேதனை படறத பார்க்கும்போது, எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும் தெரியுமா…? அதுக்குதான் மீனாட்சிகிட்ட வேண்டிகிட்டேன். சக்கியுள்ள அம்மன்”.
அருந்ததிக்கும் அஸ்வத்துக்கும் திருமணமான இந்த ஐந்து வருடத்தில் அவனை இதுவரை இரண்டு இடங்களுக்கு மாற்றல் செய்திருந்தனர். ஆனால் அருந்ததியின் விருப்பத்திற்கிணங்க குடும்பம் மட்டும் சென்னையிலேயே தான் இருந்தது.
ஆறு மாதத்திற்கு முன்னர்தான் அவனுக்கு துணை போலீஸ் சுப்பிரண்டுக்கான புரமோஷன் கிடைத்திருந்தது. கோயமுத்தூரில் இருந்தவன் புரமோஷனில் டிஎஸ்பி ஆகி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தான். ஆமாம் அவனது கடுமையான நேர்மையான உழைப்புக்கு அரசாங்கம் கொடுத்த பரிசு அது.
ஒரு வருடத்திற்கு முன்பே அவனுக்கு கிடைத்திருக்க வேண்டிய புரமோஷன். கிடைக்காமல் டிலே ஆவதை வைத்து அஸ்வத் அவளிடம் புலம்பும் போதெல்லாம், அவளுக்கும் வருத்தமாக இருக்கும்.
புரமோஷன் கிடைத்தாலும் சென்னையிலே அவனுக்கு பணி நியமனமாக வேண்டும் என்பது இருவரின் விருப்பமும். அதற்காகதான் தாய் மீனாட்சியிடம் வேண்டுதல் வைத்து, அது நல்லபடியாக நிறைவேறியதில் இருவருமாக வந்திருந்து வேண்டுதலை நிறைவேற்றியிருந்தனர்.
அருந்ததியை கிண்டல் செய்தாலும், அஸ்வத்துக்கும் மனைவியை புரிந்தது. அவளின் சப்போர்ட்டும், அனுசரணையும் அவனுக்கு இல்லையென்றால், இந்த அளவு அவனால் பீஸ்புல்லாக வேலையில் கவனம் செலுத்த முடியாது.
அவளது பிரசவ சமயத்தில் கூட அவனால் உடன் இருக்க இயலவில்லை. கவிதாயினி பிறந்து அடுத்த நாள்தான் அவனால் வர முடிந்தது.
இதற்காகவே பூஜாவிலிருந்து, விசாலினி, பரணி என எல்லோரும் அவளுக்கு உறுதுணையாக இருந்தனர். அஸ்வத்துக்கு கவிதாயினி பிறந்த ஆறு மாதத்திலேயே சென்னையிலிருந்து விழுப்புரத்துக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது.
அருந்ததியின் வேலை பொருட்டு அவளை சென்னையிலேயே விட்டு சென்றாலும், தனியாக கைக் குழந்தையுடன் விட்டு செல்வதற்கு அவனுக்கு தவிப்பாக இருந்தது.
பூஜாதான் தம்பியின் குடும்பத்தை அவள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே மாற்ற வைத்திருந்தாள். இதோ அன்றிலிருந்து இன்று வரை அங்கேதான் அவர்களின் வாசம். இப்போது இந்த திருமணத்திற்குகூட எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான் சென்னையிலிருந்து வந்திருந்தனர்.
அருந்ததிக்கு திருமணமான புதிதில் இதையெல்லாம் சமாளிக்க கஷ்டமாக இருந்தாலும், தனித்து செயல்பட காலம் அவளை பழக்கியிருந்தது.
“ஹேய் கவி எங்கடா…?”
“நமக்கு முன்னாடிதானங்க நடந்து போயிட்டிருந்தா… எங்க போயிட்டா…?” என பதறினாள் அருந்ததி.
“இரு… இரு… இங்கதான் இருப்பாள். டென்ஷன் ஆகாத…” என மனைவியை சமாதானப்படுத்தியவனின் மனதிற்குள்ளும் பதற்றம் தொற்றியது பிள்ளையைத் தேடி.
கோவில் பிராகாரத்தை சுற்றி முடித்து விழுந்து வணங்கிவிட்டு இருவரும் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தனர். அஸ்வத்தின் கைகளை பிடித்து நடந்து வந்து கொண்டிருந்த கவிதாயினி, வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆர்வத்தில் இவர்களுக்கு முன்னால் வேகமாக எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தாள்.
தனித்து முன்னால் நடந்து செல்லும் மகளை ரசித்துக் கொண்டே பேசியபடி நடந்து வந்தவர்கள், தங்களது பேச்சு மும்முரத்தில், அவளை தங்களது பார்வையிலிருந்து தப்ப விட்டிருந்தனர்.
அருந்ததிக்கு கண்களில் நீர் கட்டிவிட்டது. மகளை சுற்றும் முற்றும் தேடிப் பார்க்க ஆரம்பித்தாள். ஐந்து நிமிடமாக இங்கும் அங்கும் தேடி அலைபாய்ந்தனர் இருவரும்.
“எங்கயும் போயிருக்க மாட்டாடா. இங்கதான் இருப்பாள் வா..” என மனைவியின் கையைப் பிடித்து வேகமாக பொற்றாமரை குளத்தின் வழியாக அழைத்து வந்தான்.
@@@@@@@@@@@@@@@@@
“யாரு முகி இந்த பாப்பா…?” என்றாள் நித்யா.
“அவன் ஸ்கூலா இருக்கும்” என்ற வசீகரன், “உன் கூட படிக்கறாளா..?” என்றான் மகனிடம்.
“நோ பா…” என தலையசைத்தான் முகிலன்.
கவிதாயினி இவர்களைப் பார்த்ததும் மிரண்டு, உதடு பிதுக்க ஆரம்பித்துவிட்டாள்.
“யாருடா இது? நீ பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட. அவங்க வீட்ல தேட போறாங்க…டா?” என வசீகரன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ப்பா. யாருன்னு தெரியல. கீழ விழுந்ததுல, அழுதுட்டிருந்தாள். அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான்.
“கீழ விழுந்துட்டாளா…? அச்சோ இங்க வாடா…” என கவிதாயினியை கைப்பிடித்து மடியில் உட்கார வைத்து அவளது காலில் காயம் ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்தாள் நித்யா.
“காயம் எதுவும் இல்ல. அழக்கூடாது. தனியாவ வந்த? உன்கூட யார் வந்தா…? என்றாள் நித்யா கவிதாயினியின் கண்களை துடைத்துவிட்டு கொண்டே.
“மம்மியும்… டாடியும்…” என்றாள் வெதும்பிக்கொண்டே.
“எங்க அவங்க…?”
சுற்றும் முற்றும் திரும்பி அவள் வந்த வழியையே பார்த்தாள். யாரையும் காணாமல் திரும்பி பார்ப்பதும் கண்ணைக் கசக்குவதுமாக இருந்தாள்.
“மிஸ் பண்ணிட்டாள் போல” என கூறிய வசீகரன், “குட்டிப் பாப்பா அழகாயிருக்கீங்களே. உங்க பேர் என்ன…டா செல்லம்…?” என கேட்டான் கவிதாயினியிடம்.
முகிலன் தந்தையின் மடியில் உட்கார்ந்திருந்து கொண்டு, நித்யாவின் மடியில் உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு, உதட்டைப் பிதுக்கி கண்ணை கசக்கி கொண்டிருந்த கவிதாயினியையே பார்த்திருந்தான் ஆர்வமாக.
“கவி..தாயி..னி…”
“அழகாயிருக்கே உங்க பேர். உங்கப்பா பேர் என்னம்மா…?” என்றான் வசீகரன்.
“அசு..வத்…தாமன்…” என்றாள்.
“ஓ… அம்மா பேரு…” என்றான் திரும்பவும்.
“அரு..ந்ததி…” என்றாள்.
“சூப்பர். டான் டான்னு எல்லாத்துக்கும் கரெக்டா பதில் சொல்றீங்களே கவி பாப்பா” என கவியின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சி முத்தம் வைத்த நித்யா, “உங்க வீடு எங்கடா இருக்கு…?” என்றாள் அவள் தாடையைப் பிடித்து.
“இங்கதான்…. தாத்தா வீடிருக்கு” என்றாள்.
இவர்கள் கவிதாயினியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அஸ்வத்தும் அருந்ததியும் மகளை கண்டுகொண்டு இவர்களை நெருங்கியிருந்தனர்.
அருந்ததியைப் பார்த்ததும் வசீகரனுக்கு ஒரு நொடி ஷாக்தான். இவளா…? இவள் பொண்ணா…? என அருந்ததியைப் பார்த்திருந்தான் ஒரு க்ஷணம்.
நித்யாவுக்கு இது ஏழாவது மாதம். அடுத்து பிள்ளையுண்டாகி இருக்கிறாள். வசீகரன் மனைவி மகனுடன் கோவிலுக்கு வந்திருந்தான். சாமி கும்பிட்டு முடித்தவர்கள், பொற்றாமரைக் குளத்தின் அருகே வந்து சற்று நேரம் உட்கார்ந்திருந்தனர்.
அவர்களது மகன் முகிலன் அங்கேயே விளையாடிக் கொண்டிருந்தான். அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் எதிரில் கவிதாயினி நடந்து வந்ததைப் பார்த்தான்.
முகத்தில் சந்தோஷமாக, துள்ளலுடன் வேகமாக நடந்து வந்தவள், சட்டென அவளது பாவாடை தடுக்கி கீழே விழுந்ததையும், விழுந்தவள் எழாமல் அங்கேயே உட்கார்ந்து கண்ணை கசக்கியதையும் பார்த்தவன் ஓடிச்சென்று அவளை எழுப்பி சமாதானப்படுத்தி அழைத்து வந்திருந்தான் தாய் தந்தையிடம்.
“குட்டிம்மா…” என மகளை பார்த்ததும் வந்து அள்ளிக் கொண்டாள் அருந்ததி நித்யாவிடம் இருந்து.
“கொஞ்ச நேரத்துல அம்மாவ பயமுறுத்திட்டியே செல்லம்…” என மகளை கட்டித் தழுவி முகம் முழுக்க முத்த மழை பொழிந்து விட்டாள்.
“ஒன்னும் இல்லடா ரிலாக்ஸ்…” என மனைவியின் தலையை தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன், வசீகரனிடம் திரும்பி நின்று “தேங்க்ஸ் ஸார்…” என்றான் அஸ்வத் நன்றியுடன் சிரித்த முகமாக.
“இருக்கட்டுங்க….” என முடித்துவிட்டான் வசீகரன். அவனால் அதற்குமேல் பேசமுடியவில்லை. அவனுக்கு அருந்ததியின் குழந்தை என்பதே அதிர்ச்சியாக இருந்தது. இதில் அவள் எங்கு தன்னை கண்டுகொள்வாளோ என பயமும் இருந்தது. அதில் பேசாமல் மௌனமாக இருந்தான்.
நித்யாதான் “வழி மாறி வந்துட்டாளா…?” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஆமாங்க” என தலையாட்டிய அஸ்வத் மனைவியிடம் இருந்து மகளை தன் கைகளில் ஏந்தியிருந்தான்.
மகள் அழுத தடத்தை கண்களி்ல் கண்டு, “கவிம்மா அழுதீங்களா..? செல்லம். பிரேவ் கேர்ள் ஆச்சே என் பொண்ணு. அழமாட்டாளே…” என கொஞ்சி கொண்டிருந்தான்.
அருந்ததி நித்யாவிடம் “ரொம்ப தேங்க்ஸ்ங்க…” என்றாள் இரு கையையும் கூப்பி கும்பிட்டு.
“அச்சோ என்னங்க நீங்க…? இத போய் பெரிசா பேசிட்டு. பிள்ளைய பத்திரமா பார்த்துக்கங்க. நடந்து வரும்போது கீழ விழுந்துட்டா போல. அத பார்த்துட்டுதான் என் பையன் கூட்டிட்டு வந்தான்” என்றாள் சமாதானமான புன்னகையுடன்.
உடனே அஸ்வத் மகளின் கால் முட்டியை ஆராய்ந்தான். அவன் ஆராய்வதைப் பார்த்த நித்யா, “அடி எதுவும் இல்லங்க. பார்த்துட்டேன்” என்றாள்
அவள் சொல்லியதுபோல அடி எதுவும் இல்லை.
“தேங்க்ஸ்ங்க” என்றான் அஸ்வத்தும் நித்யாவிடம்.
நித்யா எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டாள்.
அஸ்வத் முகிலனைப் பார்த்து “பேர் என்ன..?” என்றான் புன்னகையுடன்.
இதுவரை அவர்களையே வேடிக்கை பார்த்தவன், அஸ்வத் அவனைப் பார்த்து பேர் என்ன என கேட்கவும் முகிலனுக்கு வெட்கமானது. வசீகரனின் கழுத்தை கட்டிக்கொண்டு தந்தையின் தோளில் முகத்தை புதைத்து மறைத்து கொண்டான் ஏதும் சொல்லாமல்.
அதில் எல்லோருக்கும் முறுவல் வந்தது முகத்தில். “அங்கிள் பேர் கேட்கறாங்கல்ல, பேர் சொல்லுடா…?” என்றான் வசீகரன் மகனை பிரித்தெடுத்து.
வெட்கப்பட்டுக் கொண்டே தலையை நிமிர்த்தியவன், “முகிலன்…” என்றான் கூச்சத்துடன் நெளிந்துகொண்டே.
“தேங்க்ஸ் முகிலன். பாப்பாவ சேவ் பண்ணியிருக்கீங்க. பிரேவ் பாய்….” என்ற அஸ்வத் மகளை கீழே விட்டு அவனை தூக்கிக் கொஞ்சினான்.
அருந்ததிக்கு வசீகரனை அடையாளம் தெரியவில்லைபோல. அவளுடைய கவனம் எல்லாம் மகளிடமே இருந்தது. சற்று நேரத்தில் கலங்கடித்திருந்தாள் கவிதாயினி.
“அண்ணாக்கு தேங்க்ஸ் சொல்லு குட்டிம்மா…” என்றாள் அருந்ததி மகளின் கைப்பிடித்து முகிலனைக் காட்டி.
“தேங்க்ஸ்…” என்றாள் கவிதாயினி முகிலனின் கைகளைப் பற்றி. அதில் முகிலனுக்கு இன்னும் வெட்கமானது. முகத்தில் வெட்கப் புன்னகையுடன் நெளிந்தான் முகிலன் அவர்களைப் பார்த்து.
ரொம்ப வெட்கப்படறான் என்று சிரித்த அஸ்வத் அவனை கீழே இறக்கிவிட்டு கொண்டே, தன்னை வசீகரனிடம் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
அருந்ததியும் மகளை கையில் பிடித்தவாறே நித்யாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“எத்தனாவது மாசம்…?” என்றாள் அருந்ததி நித்யாவை பார்த்து சிரித்துகொண்டே.
“ஏழு…”
“ஓ… முகிலனுக்கு என்ன வயசு…?” என்றாள் அருந்ததி
“ஐஞ்சு…”
“இவளுக்கு…” என்றாள் நித்யா கவிதாயினியை பார்வையால் சுட்டிக்காட்டி
“நெக்ஸ்ட் மன்த் வந்தா நாலு ஆகப் போகுது. நீ…ங்க… மதுரைதா…னா…?” என்றாள் அருந்ததி.
“ம்ம்… இங்கதான், உங்களுக்கு…?” என்றாள் நித்யா.
“நாங்க சென்னை. அம்மா வீடு இங்க மதுரையிலதான் இருக்கு. ஒரு மேரேஜுக்கு வந்திருந்தோம். அப்படியே கோவிலுக்கு வந்தோம். சாமி கும்பிட்டு முடிச்சு, வெளிய பேசிட்டே நடந்து வந்திட்டிருந்தோம்”,
“எங்களுக்கு முன்னாடிதான் கவி நடந்து போயிட்டிருந்தாள். எப்படி மிஸ் ஆனானே தெரியல. திடீர்னு இவள காணோம்னதும் பக்குனு ஆயிடுச்சு. ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல. பயந்து போயிட்டேன். நல்லவேளை நீங்க பார்த்தீங்க. தேங்க்ஸ்ங்க…” என்றாள் நித்யாவின் கைகளைப் பிடித்துகொண்டு.
“அச்சோ… எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்லுவீங்க”.
அருந்ததி சிரித்துக்கொண்டே “உங்க பேர்…” என்றாள் நித்யாவைப் பார்த்து.
“நித்யா ங்க….”
“ஸ்வீட் நேம். என் பேர் அருந்ததி…” என்றாள்.
“உங்க பேரும் அழகாயிருக்கு. பேர் மட்டுமில்ல, நீங்களும் அழகாயிருக்கீங்க…” என்றாள் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே நித்யா. அருந்ததியும் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டாள். வசீகரன் அஸ்வத்திடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்களின் பேச்சை காதில் வாங்கிக் கொண்டிருந்தான். இந்த வெகுளி குணம்தானே அவனை அவளிடம் இழுத்திருந்தது.
“வரேங்க…” என்றவள் அஸ்வத்தைப் பார்த்து கிளம்பலாமா என தலையசைத்தாள் அருந்ததி.
அவனும் சரி என தலையசைத்தவன், “தேங்க்ஸ்ங்க வரோம்…” என அவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தவன், “முகிலன், பாய்” என கையசைத்து அவனிடம் டாட்டா காண்பித்தான்.
கவிதாயினியும் அஸ்வத்தின் மேலே ஏறிக்கொண்டு முகிலனைப் பார்த்து சிரித்துக் கொண்டே “பாய்” என கையசைத்து டாட்டா காண்பித்தாள்.
நித்யா மெல்ல கவிதாயினியை நெருங்கியவள் அவளது கன்னத்தை பிடித்து கொஞ்சி கிள்ளி முத்தமிட்டவள், “பாய்…” என்றாள் கையசைத்து.
வசீகரன் மனைவியையே பார்த்திருந்தான். நித்யாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம் கவிதாயினிடம் பேசும்பொழுது. அது அவளது முக மலர்ச்சியிலேயே தெரிந்தது.
இவர்களிடம் தலையசைத்து அருந்ததியும் அஸ்வத்தும் கிளம்பிவிட்டனர்.
“எங்கடா போன…? அம்மாவ விட்டுட்டு” என இன்னும் மகளை விசாரித்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அருந்ததி.
வசிகரன் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் அவனால் அவளை நினையாமல் இருக்க முடியவில்லை. எப்போதாவது ராஜேந்திரனை பார்க்கும் சமயங்களில் எல்லாம் அருந்ததியின் ஞாபகம் தன்போல் நினைவில் மின்னி மறையும். கூடவே அன்று அவளை கோவிலில் திருமண கோலத்தில் பார்த்ததும் கண் முன் தோன்றி அவனை ஆசுவாசப்படுத்தும்.
தெரிந்தோ தெரியாமலோ வாழ்க்கையில் அவன் செய்த ஒரு தவறு அவனை இன்னும் துரத்திக் கொண்டிருந்தது போல மனதளவில்.
நல்ல குணம் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் அப்படிதான் போல. ஒருதரம் வாழ்க்கையில் சறுக்கினாலும் அவர்களை விடாது சுட்டெரித்து கொண்டேயிருக்கும், அந்த நினைவுகள் மனதின் வழியாக.
நல்லவேளை அவளுக்கு என்னை ஞாபகம் இல்லை போல என்ற ஆசுவாசம் அவனுக்குள். இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது மனதுக்குள். அருந்ததியை இப்படி அவள் கணவன் மகள் என குடும்பம் சகிதம் சந்தோஷமாக பார்த்ததை நினைத்து.
என்னமோ இந்த பொண்ணுக்கும் எனக்கும் சொல்லமுடியாத பந்தம் இருக்கும்போல என நினைத்துக் கொண்டான்.
“மாமா என்ன யோசனை…?” என்றாள் நித்யா அவன் கைகளை பிடித்து இழுத்து.
ஒன்னுமில்லை என தலையசைத்தான்.
“வாங்க கிளம்பலாம்…” என முன்னே மகனின் கைப்பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.
error: Content is protected !!