Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 15.1

அன்று மாலை நேரம். வீட்டிற்கு செல்ல இருந்தவளை அர்ஜுன் பிடித்து அமர்த்தியிருந்தான். காரணம் அவனுடைய பனி நேரம் முடிய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.

இலக்கியாவின் பனி நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் முடியவிருக்க, ஓ.பி அறைக்கு அருகே இருந்த மேஜையில் அன்றைய குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“இலக்கியா” குரல் கேட்கவும் சிரம் உயர்த்தி பார்த்தவள், அங்கு நெடுஞ்செழியன் நிற்பதை பார்க்கவும் சங்கடமாய் உணர்ந்தாள்.

ஆனால் அவன் அவளை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது காட்டிய ஆசையை சுற்றி இத்தனை மக்கள் இருக்கும் பொழுது காட்டவில்லை. தொழில்முறை தொனி மட்டுமே அவனிடம் வெளிப்பட்டது.



Advertisement

“ஒக்காரலாமா?” சிறு சிரிப்போடு அவன் கேட்க, “உக்காருங்க” என்றாள் அவனை உன்னிப்பாக கவனித்து.

முன்பு பார்க்கும் பொழுது சிகை எல்லாம் களைந்து, சரியான உடை இல்லாமல் பார்க்கவே சற்று தள்ளி நின்றிடலாம் என தான் இருக்கும்.

இன்றோ வெள்ளை நிற சட்டை, பழுப்பு நிற காற்சட்டை அணிந்து உழைப்பின் அடையாளமாக பார்க்கவே மதிக்கும் தோற்றத்தோடு தான் இருந்தான்.

Advertisement

“அன்னைக்கு உங்ககிட்ட சரியா பேச முடியல. நீங்க ஏதோ அவசரத்துல இருந்திங்க. உங்களுக்கு தெரியாதுல. இங்க மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்றேன்”

Advertisement

“ஓ சரிங்க. ஏதாவது வேணுமா?”

நெடுஞ்செழியன், “ஆமா டிஷ்ச்சார்ஜ் ஆன சில பேஷண்ட்ஸ் பத்தி கொஞ்சம் டீட்டைல்ஸ் மிஸ் ஆகியிருக்கு. அதுல உங்க டிபார்ட்மென்ட்ல ரெண்டு பேஷண்ட்ஸ் டீடைல்ஸ் வேணும்”

“கவிதா மேம் கேபின் காட்டவா. அவங்களுக்கு என்ன விட எல்லாம் தெரியும்”

Advertisement

“இல்ல அவங்க ஏதோ எமெர்ஜென்சினு வேகமா போய்ட்டதா சொன்னாங்க. கால் பேசிட்டு தான் வர்றேன். வேற யாரை கேக்கனு தெரியல”

“ரொம்ப அர்ஜென்ட்டா?”

“ஆமா அடுத்த வாரம் ஒரு மீட்டிங், இந்த ஒர்க் முடிச்சி நான் குடுத்தா தான் அடுத்த வேலை நடக்கும். சாரி உங்கள டிஸ்டர்ப் பன்றேனா?”

“இல்ல, இருக்குற டீட்டைல் தாங்க, நான் லாக் (Log) எடுத்துட்டு வர்றேன்” அவன் தகவல்களை கொடுக்க, அதை எடுக்க அர்ஜுன் இருக்கும் அறைக்கு அருகே இருந்த அறைக்கு தான் செல்ல வேண்டும்.

இவள் தேவையானவற்றை எடுத்து வெளியே வர, சரியாக அர்ஜுன் வந்தான்.

மனைவியை பார்த்ததும் பெருமூச்சோடு, “ஒரு காபி தர்றியா?”

“சார் ஒரு அர்ஜென்ட் ஒர்க். பசுபதி அண்ணாகிட்ட சொல்றிங்களா?” நிற்க கூட இல்லை வேகமாக ஓடிவிட்டாள்.

இலக்கியா கொடுத்த குறிப்பேட்டிலிருந்து தனக்கு தேவையான தகவல்களை நிதானமாக ஆராய்ந்து குறிப்பிட்டுக்கொண்டிருந்தான் நெடுஞ்செழியன்.

“புதுசா இம்ப்ளிமென்ட் பண்ண பார்ம் கொஞ்சம் குழப்பமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அதுனால இந்த பிரச்சனை வரலாம்” என்றாள் அவளே அனைவரின் பிரதிநிதியாக.

“அர்ஜுன் சார் தான் போன மாசம் இதை திடீர்னு கொண்டு வந்துருக்கார். எங்களுக்கே கஷ்டமா தாங்க இருக்கு. ஆனா அதுல இருக்குறது எல்லாம் ரொம்ப அவசியமானது தான். விட முடியாதுல” என்றான் பொறுப்பான நிர்வாகியாக.

“சரி தான், அப்போ அதை கொஞ்சம் மீட்டிங் வச்சு சொல்லலாமே. இங்க இருக்குற எல்லாரும் ஈஸியா கேட்ச் அப் பண்ணிக்கிறவங்க இல்ல”

சிரித்துக்கொண்டான் அவன், “சொல்லி பாக்கறேன் மேனேஜர்கிட்ட, அவர் ஈஸியா எடுத்துக்குறவர் மாதிரி தெரியல. ‘எனக்கு என்ன மீட்டிங் வச்சா சொல்லி தந்தங்களா’னு கேக்குற மனுஷன்”

“அப்போ எங்களுக்கும் வேற வழியில்லை, தப்பு தப்பா பிள் பண்ணி அனுப்புறோம்”

இவளும் சிறிய புன்னகையோடு கூற தலை உயர்த்தி அவளை பார்த்தவன், பற்கள் தெரியாமல் அவள் சிரித்த அழகில் ஒரு நொடி சுயம் மறந்து தான் போனான்.

அவளை சிரித்த முகமாய் அவன் பார்ப்பது இதுவே முதல் முறை. எதுவும் பேசாமல், தனக்குள்ளே ஒடுங்கி போயிருந்த இலக்கியாவை தூரத்தில் மட்டுமே இருந்து ரசித்து காதலித்து வந்த நெடுஞ்செழியனுக்கு இவ்வளவு அருகே அடக்கமான அழகோடு வசீகரிக்கும் பெண்ணை பார்த்து மயங்கி போனதில் தவறில்லையே.

உடனே தன்னை சுதாரித்தவன் அதே மெல்லிய புன்னகையோடு, “சொல்லி பாக்குறேன், இல்லனா அர்ஜுன் சார் பீட்பேக் உங்க எல்லார்கிட்ட இருந்தும் வாங்கணும்னு சொன்னார் அதுல சொல்லுங்க. பல்க்கா இருந்தா டக்குனு ஆக்ஷன் நடக்கும்”

இலக்கியா, “ஏங்க, அப்போ ஒரு ஆள் சொல்றதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?”

“நூத்து கணக்கானவங்க இருக்குற இடத்துல ஒருத்தரோட வார்த்தை எப்படி எடுபடும்?”

“அது தாங்க அழகான நிர்வாகம். எல்லாரையும் திருப்த்தி படுத்த முடியாது தான். அதுக்காக கேக்காம கூட இருக்குறது தப்பில்லையா?”

“நீங்க பேசாம மேனேஜ்மென்ட் பக்கம் வந்துடுங்க, யாரையும் உங்கள கேள்வி கேக்க விட மாட்டீங்க” சாதுர்யமாக இவன் நழுவ பார்த்தான்.

“அப்டி எல்லாம் எஸ்கேப் ஆகிட முடியாது. பீட்பேக்ல நான் வில்லங்கமா ஒன்னு யோசிச்சு எழுதுறேன். பாக்கலாம் என்ன ஆக்ஷன் எடுக்குறீங்கனு”

குறிப்பேட்டை அவளிடம் ஒப்படைத்தவன், “என் முதல் வேலையே உங்க பார்மை எங்கையாவது ஒளிச்சு வைக்கிறது தான்” என்றவன், “எங்கங்க ஒளிச்சு வச்சிருந்திங்க இந்த இலக்கியாவை? இவ்ளோ பேச தெரியுமா உங்களுக்கு?”

ஓபி பார்த்துக்கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு தகவலுக்காக அர்ஜுனை அங்கு அழைத்திருக்க, வந்தவன் சிரித்து பேசிக்கொண்டிருந்த மனைவியையும் நெடுஞ்செழியனையும் பார்த்து உள்ளே சென்றான்.

அவன் பேசி முடித்து வந்த பொழுது தான் நெடுஞ்செழியன் அவ்விடத்தை விட்டு அகன்றது.

அவள் இவ்வாறெல்லாம் பேசி அவன் பார்த்ததே இல்லை, அங்கு பணிபுரியும் பெண்களோடு பேசுவாள் அதுவும் அதிகம் சிரித்து கூட பேசாதவள் இவனிடம் பேசியது ஆச்சிரியமாக தான் இருந்தது.

ஆனாலும் பெரிதாய் எடுக்காமல் விட்டுவிட்டான், என்ன சிறு கோவம் அவன் கேட்ட காபி அவனுக்கு கிடைக்கவில்லை.

அடுத்த வாரத்தில் ப்ரியங்கா மகன் வேதவ் பிறந்தநாள் இடைப்பட்ட நாளில் வந்திருக்க, அன்று எளிமையாக கோவில் சென்று வழிபட்டு வந்த குடும்பம், வார இறுதியில் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

கொண்டாட்டம் என்றால் ஆடம்பர செலவுகள் செய்து, பலரை அழைத்து அல்ல. இவர்கள் குடும்பம் மற்றும் ப்ரியங்கா கணவனின் தாய் தந்தையர் தான். அனைவரும் இம்முறை இருந்தது சுந்தர்ராஜன் பரிமளா வீட்டில்.

மாலை நேரம் வீட்டிற்கு பக்கவாட்டத்திலிருந்த இடத்தில் தான் ஆங்காங்கு குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பல வகையான மரங்களுக்கு இடையில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் இளம்வெயிலில் இதமாக இருந்தது.

ஒரு பக்கம் மாலை சிற்றுண்டிக்காக வேலையாக பார்பிக்யூ வகையில் சிக்கன் ஒரு பக்கம் அனலில் வெந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் அர்ஜுனுக்கு பண்ணீர் தயாராகிக்கொண்டிருந்தது.

இரவு உணவு வெளியே சொல்லியிருக்க, மாலை நேர சிற்றுண்டி மட்டும் பெரியவர்களுக்கு ஓய்வு கொடுத்து இலக்கியா ப்ரியங்கா மட்டும் தான் பார்க்கிறார்கள்.

“அசைவம் இருந்தாலும் இவன் ஒருத்தன் தான் இந்த பண்ணீரை தேடியே போவான்” மகனை பானு செல்லமாக திட்டி செல்ல இலக்கியாவும் சிரித்துக்கொண்டாள்.

“கொஞ்சம் தான்க்கா பண்ணீர் இருக்கு, வாங்கிட்டு வர சொல்லலாமா?”

“வேணாம் இலக்கியா, அவன் ஒருத்தன தவற யாரும் இங்க பண்ணீர் எடுக்க மாட்டாங்க” என்றுவிட்டாள் ப்ரியா.

அதுவும் சரியாக பட அதனை சமைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து வைத்தாள்.

அபொழுதென பார்த்து தூரத்தில் ஆண்கள் பட்டாளமும், வேதவும் விளையாடிக்கொண்டிருந்த நேரம் எதிர்பாராத விதமாக பந்து உணவினை நோக்கி வர, துரிதமாக இலக்கியா அதனை எளிதாக பிடித்திருந்தாள்.

இன்று அவ்வளவு தான் உணவு என ஆண்கள் நினைத்திருக்க அதிர்ச்சியோடு இலக்கியாவை கேலி செய்யவே வருண் மற்றும் தர்ஷன் கூச்சலிட்டு கத்திவிட்டனர்.

போதாக்குறைக்கு விசில் வேறு.

“ஏண்டா இப்டி கத்துறிங்க?” ராமகிருஷ்ணன் கேட்க, “இங்க ஒரு அழகான பீல்டர வச்சிட்டு இத்தனை நாள் விட்டுட்டோமே”

ராதா, “வருண்…” என கண்டிக்க அவர்கள் விளையாட்டு ஆர்வத்தில் அல்லவா இருந்தனர், “இலக்கியா நீ வா, இன்னைக்கு உன்ன களத்துல இறக்குறோம்” என்றான் இலக்கியாவின் கையையே இழுத்து தர்ஷன்.

இவளோ பதறிவிட்டாள், “ஐயோ சார், எனக்கு இதெல்லாம் சுத்தமா வராது. ஏதோ தெரியாம புடிச்சிட்டேன்”

“பொய் சொல்றாடா, கிரிக்கெட் புட்பால் எல்லாம் பாப்பா” தன பங்கிற்கு அர்ஜுன் இழுத்துவிட்டான்.

“இதெல்லாம் என் மருமகளுக்கு தெரியுமா, சும்மா போ ம்மா” என்றார் வரதராஜன்.

“ஐயோ மாமா, அவர் சும்மா சொல்றார். பாப்பேன் அவ்ளோ தான்” அர்ஜுனை கண்களால் கெஞ்சினாள்.

“விடுங்க, இலக்கியா சங்கடப்படுது, டேய் போங்கடா. பொழுது போகலானா இங்க யாரையாவது வம்புக்கு இழுக்க வந்துடுங்க” பரிமளா இவர்களை விரட்ட அதில் வருண் தர்ஷன் இருவருக்கும் சற்று ஏமாற்றம் தான்.

“நாங்க கூப்பிட்டு வர மாட்டிக்கிற” என்றான் கொஞ்சம் கோவத்தை காட்டி தர்ஷன்.

“சார், நிஜமா எனக்கு அதெல்லாம் வராது. பாருங்க இந்த சுடி போட்டு எப்படி வருவேன்?”

“அதுக்கென்ன, ப்ரியா டிரஸ் போட்டுக்கோ” உடனே ஒரு தீர்வை கொண்டு வந்தான் வருண்.

“சார் ப்ளீஸ்”

“இந்த சார நீ எப்ப தான் விட போறியா” சலித்துக்கொண்ட வருண் அங்கு ஓரமாக இருந்த பண்ணீரை பார்த்துவிட்டான்.

“என்ன பண்ணீர் எல்லாம் இருக்கு? நீ செஞ்சியா இலக்கியா?” அவள் தலை அசைக்க, ருசி பார்க்க எடுத்தவனுக்கு அது பிடித்துப்போக தர்ஷனோடு இணைந்து அவனே மொத்தத்தையும் முடித்துவிட்டிருந்தான்.

உண்பவனை தடுக்க முடியாமல் இலக்கியா அடுத்த வேலையை பார்க்க அப்பொழுது அங்கு வந்த ப்ரியா, “அது அர்ஜூன்க்குடா, நீங்க ஏன் சாப்பிட்டீங்க?” மறக்காமல் அருஜுனை அழைத்தும் அதனை கூறிவிட்டாள். இவர்களோ எளிதாக ஒரு மன்னிப்பை வைத்து ஓடிவிட்டனர்.

சிற்றுண்டியை முடித்து ஒரு குடும்ப புகைப்படத்தை எடுத்துவிடலாம் என அனைவரும் கூடி நின்றனர்.

ப்ரியா மாமனார் மாமியார் மற்றும் ராமகிருஷ்ணன், ராதா தம்பதியர் இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு இடையில் வேதவ். அவர்களுக்கு பின்னே, வரதராஜன் தம்பதி, சுந்தராஜன் தம்பதி மற்றும் ப்ரியா தம்பியின் நின்றனர்.

அவர்களுக்கு பின்னே, ஒரு நீள் இருக்கையில் தர்ஷன், வருண், அர்ஜுன் மற்றும் இலக்கியா.

புகைப்பட கலைஞருக்கு எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும், குடும்பத்தினர் எந்த மாதிரி நிற்க வேண்டும் செய்கை செய்ய வேண்டுமென வருண் தர்ஷன் கூறிவிட்டு பின்னே வந்து நிற்க, அந்த இருக்கையில் நிற்பதற்கு இடமிருந்தும், “அர்ஜுன் தள்ளி நில்லு” வேண்டும் என்றே ஒட்டி நின்றான் தர்ஷன்.

“இடமில்லைடா” என்றான் இவன்.

“அப்போ நான் எங்க போறதாம், போடா அங்குட்டு” வருண் தள்ளிவிட, நுனியில் நின்ற இலக்கியா தடுமாறுவதை உணர்ந்த அர்ஜுன் வேகமாக அவளது இடையை வளைத்து பிடித்திருந்தான்.

‘ஹக்’ அதிர்ந்தவள் இதழிலிருந்து தன்னாலே அவ்வார்த்தை பிறக்க திரும்பி பார்த்தவனுக்கு அவளது நிலை பார்க்கவே அவ்வளவு பிடித்தது. அதே ஆசையில் இன்னும் தானாகவே நெருங்கி அவளிடமும் இறுக்கத்தை கூட்டினான்.

மௌனத்தின் மொழியில் இருவரும் பேச, “சார் இங்க பாருங்க” புகைப்பட கலைஞர் இவர்களை அழைத்தான்.

பெயருக்கு ஒரு முறை திரும்பி பார்த்தவன், அவன் அடுத்த புகைப்படம் எடுக்கும் முன்பு, “எங்கடி என் பண்ணீர்?” காதில் வந்து கேட்டான்.

இவளுக்கு திக் என ஆனது. அவன் சகோதரர்கள் கூறிய பொழுது பரவாயில்ல என கூறியவன் எதற்கு தன்னிடம் இப்பொழுது சண்டைக்கு வர வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!