Skip to content
Post Views: 4,400
“எதுக்கு வர அவங்கள சொன்னிங்க?” தவிப்போடு பார்த்தவள் கேள்வியை நிராகரிக்காமல் கைபேசியை அருகிலிருந்த மேஜையில் காட்டினான்.
அவன் எடுக்கும் தூரம் தான், சற்று நகர்ந்தாலும் அவளின் ஸ்பரிசம் சென்றிடுமோ என அஞ்சி அவளிடம் கேட்க கொஞ்சமும் நகராமல் கையை மட்டும் நீட்டு அவனிடம் கொடுத்தாள்.
அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினான். அதனை பார்த்தவள் விழிகள் இரண்டும் மகிழ்ச்சியில் மின்னியது.
“நம்ம…”
Advertisement
“ஆமா, அன்னைக்கு மீட்டிங் எண்ட்ல நம்ம கல்யாணத்தை இந்த போஸ்டர் போட்டு அனவுன்ஸ் பண்ணிடலாம் நினைச்சேன். யாருக்கும் வீட்டுல தெரியாது. எல்லாருக்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கலாம் தான் என்னோட பிளான்.
அஞ்சுவ வர சொன்னதும் அதுக்கு தான். அவ குடும்பம் பண்ண கேடி வேலைய நான் வெளிய சொல்லியும் என்ன நச்சு பண்றதை அவ விடல. அவ மேல தப்பே இல்லனு.
ஏதோ ஒரு இடத்துல நான் அவளை தேடி போவேன்னு அவளே நம்புனாளா இல்ல என்னை அறியாம நான் நம்பிக்கை குடுத்தேனானு தெரியல. அவளுக்கும் இதான் உண்மைன்னு புரிய வைக்க வர சொன்னேன். நீங்க நினைக்கிற மாதிரி அஞ்சுவால என்ன கொஞ்சம் கூட நெருங்கி வர முடியாது”
Advertisement
“தெரியும்…” என்றாள் இலக்கியா வேகமாக.
Advertisement
“என்ன தெரியும்?”
“நம்ம கல்யாணம் முடிவான அன்னைக்கு என் கழுத்தை நெரிச்சீங்களே. அவங்களுக்கும் அதே நிலைமை தான் வந்துருக்கும்” கூறும் பொழுதே அழுகையோடு இலக்கியா மெல்ல சிரிக்க, அர்ஜுன் கரம் மனைவியின் மென்மையான கழுத்தில் ஊர்ந்தது.
மயிலிறகாய் வருடிய அர்ஜுனின் விரலின் ஜாலத்தில் மொத்தமும் தொலைந்து போனது பெண்மை.
Advertisement
விரலை தொடர்ந்து அர்ஜுனின் இதழ்களும் குட்டி குட்டி முத்தம் வைக்க, மயிரிழைகள் சிலிர்த்து அடங்கியது இலக்கியாவிற்கு. அர்ஜுனின் இந்த திடீர் பரிமாணத்தில் விழித்தவள், அவன் கன்னம் பற்றி அவனின் முத்த வேட்கையை நிறுத்தினாள்.
“இலக்கியா…” ஏமாற்ற குரலோடு அர்ஜுன் கண் விழிக்க அவளும் இளகவில்லை.
“என்ன பண்றீங்க?”
“உனக்கு வலிச்சிருக்கும்ல அதான் ஒத்தடம் குடுக்குறேன்” என்றோ செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு கேட்க துவங்கினான் மருத்துவன், வாகாக அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளில் வாசம் பிடிக்க, வீட்டிற்கு வந்தவள் குளித்திருந்தது வாசமாக இருந்தது.
“சார்…”
அவளின் எதிர்வினை பார்த்தவன் ஏமாற்றமாக, “என்னடி?” என்றான் சலிப்பாக அவளை ஏக்கமாக பார்த்து.
“உங்க எண்ணம் மாறிடுச்சா?”
“எந்த எண்ணம்?”
“பிடிக்கல சொன்னிங்க” புரிந்தது அர்ஜுனுக்கு மனைவியின் எண்ண போக்கு, அவள் இன்னும் அவனின் அர்த்தமற்ற பேச்சுகளிலிருந்து வெளிவரவில்லை. தெளிய வைக்க இறங்கினான்.
“இப்போ பைத்தியம் பிடிக்கிற அளவு புடிக்கிது” உண்மையாக அவள் கண்ணிலிருந்து பார்வையை அகற்றாமல் கூறினான்.
இலக்கியா, “நான் வெறும் நர்ஸ் தானே”
அர்ஜுன், “இருக்கட்டுமே. டாக்டர் வெறும் டிரீட்மென்ட்க்கு தான். நர்ஸ்சம்மா தான் கேர்க்கு. டிரீட்மென்ட்க்கு நான் இருக்கேன், நீ கேர் பண்ணு”
இலக்கியா, “நாளைக்கே இந்த எண்ணம் மாறும்ல. யாரோ ஒருத்தர் என்ன அர்ஜுன், டாக்டர் பொண்ணு இல்லையானு கேட்டா இந்த கோவம் திரும்ப வரும்ல”
அர்ஜுன், “நான் நர்ஸ் கட்டுறேன், இல்ல நர்ஸ் அம்மாவை கட்டுறேன் உனக்கென்னடா புண்ணாக்குனு கேப்பேன்”
அவனது தீவிரமான பதிலில் அழுதுகொண்டிருந்தவள் அழுகையோடு சிரிக்க அர்ஜுன் இதழிலும் புன்னகை.
“பேச்சு மாற மாட்டீங்க தான?”
“உயிரே போனாலும் மாற மாட்டேன்” மின்னலாக பளிச்சிட்டது அவள் கண்கள்.
“அந்த ஆள் அன்னைக்கு என்கிட்ட பண்ணதை…”
“வேணாம் இலக்கியா, அதை பதியே பேசாத. நான் குடுத்த தண்டனையை விட தாத்தா அவனுக்கு அதிகம் குடுத்துட்டாரு. உன் பக்கத்துல இருந்து ஆறுதல் சொல்ல கூட முடியாம என்னோட ஈகோவால கீழேயே நின்னுட்டு போய்ட்டேனு இப்போ நினைச்சாலும் அசிங்கமா இருக்கு. நீயும் அதை மறந்துடு” என்றான் அவள் கன்னம் வருடி.
அவளும் அதிலிருந்து கிட்ட தட்ட மீண்டு வந்துவிட்டாள் தான், இருந்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது பேச்சாக கூடாதென அவள் தயங்கியதற்கு காரணம் அர்ஜுன் அவ்வளவு கீழ் இறங்கி போக மாட்டான் என்கிற நம்பிக்கை.
அதனை தொடர்ந்து நெடுஞ்செழியனோடு நிகழ்ந்த சந்திப்பை நினைத்தவள், “அன்னைக்கு செழியன் கூட நான் பேசுனது…”
அவளை இடைமறித்து, “உன் மேல சந்தேகப்படுற அளவு என்னைக்கும் நீ இருந்ததில்லை. அவன் உன் கைய புடிச்சிருந்தது எனக்கு தப்பா படல, சந்தேகம் கூட வரல. இன்பேக்ட் நான் அங்க நிக்கிறது உன்ன சந்தேகப்படுற மாதிரி ஆகிடும்னு தான் போனேன்”
இதழ் துடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள், “இப்டி எல்லாம் பேசாதீங்க” என்றாள்.
“எதுக்கு?” என்றவன் அவளது கண்ணீரை மிருதுவாக துடைத்தான்.
“எனக்கு உங்கள ரொம்ப பிடிக்க ஆரமிச்சிடும்”
அவளது பதிலில் அட்டகாசமாக சிரித்தவன், “அப்போ இதுக்கு முன்னாடி பிடிக்கல?”
“அப்போ பிடிச்சது தான். இப்போ ரொம்ப பிடிக்கிது” என்றாள் மறைக்காமல்.
ஆசையாக மனைவியை பார்த்தவன் அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தம் வைக்க கண் மூடி அவனின் முதல் ஆத்மார்த்தமான முத்தத்தில் கிறங்கி மயங்கி போனாள்.
“எதுக்குடி எனக்கு உன்ன இவ்ளோ பிடிக்கிது? எப்படி எல்லாம் எனக்கு வர்ற பொண்ணு இருக்க கூடாதுனு நினைச்சேனோ அதோட மொத்த உருவமா இருந்த உன்ன, இன்னைக்கு இவ்ளோ தூரம் நினைக்கிறன். எதுக்கு? இந்த கண்ணா, இல்ல என்னோட மனசா செயல்படுற உன்னோட மனசா?”
இதற்கு என்ன பதில் கூற முடியும், அவனுக்கு தன் மேல் பிரியம் உருவாகிவிட்டது என்பதே அவளை தரையில் நிற்கவிடவில்லை. உல்லாசமாக மாறியது அவள் உடலே.
ஒற்றை வார்த்தையால் அவளுடைய உலகத்தையே அழகாக்கும் யுக்தியை எப்படி கண்டானோ, அவள் மகிழ்ச்சிக்கு இப்பொழுது அளவே இல்லாமல் போனது.
அவள் நடக்கவே நடக்காது கணவாய் தான் முடியுமென எண்ணிய வாழ்க்கை இப்பொழுது கொத்து கொத்தாய் மலர்களை பூத்து குலுங்கும் அழகில் பேரானந்தம் பெண்ணுக்கு.
அவள் காதல் கைகூடிவிட்டது. கை சேர்ந்துவிட்டது. அவன் கைகளிலும் சேர்ந்தாயிற்று. காதலில் தகித்த அவளது மனமானது இன்று குளிர துவங்கிவிட்டது.
“சொல்லு என் மேல உன்னோட பீலிங்ஸ் என்னனு”
“அப்டிலாம் எதுவும் இல்ல” உடனே ஒரு பொய்யை வைத்தாள் கூச்சத்தை மறைக்க.
“சொல்ல மாட்ட?” கண் சுருக்கி அர்ஜுன் இலக்கியாவை பார்க்க பலமாக தலையை ஆட்டினாள்.
“எப்டி வாங்கணுமோ வாங்கிக்கிறேன். இப்போ தூக்கம் வருதா உனக்கு?” அவள் இல்லை எனவும் எழுந்து மனைவியோடு வெளியே வந்தவன் அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர கூறினான் மனைவியிடம்.
“நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் நீங்க”
“டியூட்டி மாத்தி விட்டுட்டேன். உனக்கும் லீவ் தான். வா” அவளை அமர வைத்தவன் அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
ஊரே உறக்கத்தில் இருக்க, இவர்கள் இருவருக்கும் நிலவும் நட்சத்திரங்களும் குடைபிடித்து துணைக்கு நின்றனர். வெப்பமில்லாமல் குளிருமில்லாமல் இதமான இரவு பொழுது.
அவன் மேல் இன்னும் உரிமை பிறக்காமல் கையை சங்கடமாக ஒரு பக்கமும் வைத்திருந்தவளது இடது கையை எடுத்து தன் மார்போடு வைத்துக்கொண்டான். வெளியில் வரும் பொழுதே சட்டையை அவிழ்த்திருக்க, பெண்ணுக்கு கூச்சமாக இருந்தது.
“இந்த செடி எல்லாம் யார் வைக்கிறது?”
அவளை திசை திருப்ப பூகைளை பேச்சில் இழுத்தான். சுற்றிலும் ஒவ்வொரு வகையான பூக்கள் செடிகள் என கண்ணுக்கு குளுமை தான்.
“அப்பா தான். அம்மாக்கு இதெல்லாம் பிடிக்கும். அதுலயும் அங்க பாருங்க சங்கு பூ. எங்ககிட்டையே அஞ்சு கலர்ல இருக்கு. இன்னும் ஒரு கலர் மட்டும் வாங்கணும்”
“உன் கான்ட்ரிபியூஷன் இல்லையா?”
“ஏன் இல்லாம, வாங்கிட்டு வர்றது தான் அப்பா. தொட்டில வைக்கிறது எல்லாம் நான் தான். என் கைக்கு செடி ரொம்ப நல்லா வரும்னு சொல்லி அப்பா என்ன தான் வைக்க சொல்லுவாங்க. நான் ஒரு நேரம் தண்ணி விடுவேன், அப்பா ஒரு நேரம் விடுவாங்க”
என்றவள் தங்களுக்கு எதிரே இருந்த ஒரு செடியை காட்டி, “இது காஸ்மோஸ். எல்லோ, ரெட், ஆரஞ் மூணு கலர்ஸ் இருக்கும். எனக்கு ரெட் தான் கிடைச்சது. தரைல வச்சா தான் நல்லா வரும்னு சொன்னாங்க. நான் வளர்த்து காட்டுறேன்னு சொல்லி வாங்குனேன். அதே மாதிரி தான் சூரிய காந்தி செடி அங்க இருக்கு. மொட்டு விட்ருச்சு சார்”
இதனை வெற்றிகரமாக வளர்க்க அவள் எடுத்த நடவடிக்கைகளை வரிசையாக மகிழ்ச்சி பொங்க அவள் கூற, மனைவியை மெய் மறந்து பார்த்தான் அர்ஜுன்.
இத்தனை வருடங்கள் அவன் அறிந்த இலக்கியா, இந்த உலகம், ஏன் அவள் தந்தை அறிந்த பெண் இல்லை இவள்.
அவளுள் சொல்லப்படாத ஆசைகள், மறைத்து வைத்திருக்கும் எண்ணங்கள், பகிரப்படாத நிகழ்வுல்கள் என பல புதைந்த மெல்லிசை கவிதைகள் உள்ளதென மெல்ல உணர்ந்தான் அர்ஜுன்.
“செடி, ஸ்டார்ட். அப்டினு சொன்னா இந்த டேப் நிக்காது போலயே” தன்னை கேலி பேசிய அர்ஜுனை மெல்ல அடித்தவள், “நீங்க தான கேட்டீங்க” என்றாள்.
“கேட்டேன் தான். அதை விடு, நீ பேசுறதை பத்தி எல்லாம் வச்சு பாத்தா அறிவான புள்ள மாதிரி தான் இருக்குற. அப்றம் ஏன் எம்.பி.பி.எஸ் எடுக்கல? டுவல்த்ல எவ்ளோ மார்க்?”
“1177” என்றாளே பார்க்கலாம், அர்ஜுன் அதிர்ந்து எழுந்தே அமர்ந்துவிட்டான்.
“பயோ-மேக்ஸ் குரூப்பா?”
இலக்கியா, “ஆமா”
அர்ஜுன், “மெடிக்கல் கட் ஆப்?”
இலக்கியா, “197.50”
அவனால் நம்பவே முடியவில்லை, “பொய் சொல்ற தான, நான் கூட 191 தான். எப்படி டி?”
“இருங்க” உள்ளே சென்று தன்னுடைய சான்றிதழை எடுத்து நீட்டினாள்.
“ஸ்கூல் டாபர் நான். மெடிக்கல் சீட் கிடைச்சது. ஆனா சிக்கல் எனக்கு கிடைக்க வேண்டிய சீட் சென்னைல போடுறதுக்கு பதிலா கோயம்பத்தூர்ல மாத்தி போட்டுட்டாங்க. கேட்டு பாத்தோம் மாத்தி தர முடியாதுனு சொல்லிட்டாங்க”
அர்ஜுன், “ஏன் கோயம்பத்தூர் போயிருக்கலாமே”
சங்கடமாக நெளிந்தாள், “ஹாஸ்டல்க்கு பணம் கட்ட அப்பாவால முடியாது சார்” வேதனை மறைத்து அவள் சிரித்தது அர்ஜுன் இதயத்தில் குத்தியது.
“யார்கிட்டையாவது பணம் கேட்ருக்கலாமே” தோள்களை குலுக்கினாள்,
“அப்பா அவரோட ஆபீஸ் ஓனர்கிட்ட பேசுனாங்க. பிடி குடுத்து பேசல அவர். அவரோட பொண்ணு என் செட் தான். அவங்களுக்கு சீட் கிடைக்கல அந்த கோவமோ என்னவோ. நர்சிங் வேணா சிபாரிசு பன்றேன்னு சொன்னார்”
“அதுக்காக உன்னோட கனவையே விட்டுட்டியா இலக்கியா? எவ்ளோடி ஆகிருந்திருக்கும் ஹாஸ்டல் பீஸ்? அதை நீ ஒரே வருசத்துல அடைச்சிருக்கலாமே”
தகுயிற்ற பலர் அந்த பட்டத்தை தலை மேல் வைத்து சுற்றும் பொழுது, அதற்கு முழு தகுதியுடைய பெண் வேடிக்கை பார்த்து வந்திருக்கிறாள் என்பது அர்ஜூனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளது நிலையை கேட்ட பிறகு தானே இந்த படிப்பிற்கு தகுதியற்றவனாக தெரிந்தது.
“எல்லாம் யோசிச்சேன் தான். அந்த நேரம் அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடியாம போக ஆரமிச்சது சார். என்னோட சுயநலத்துக்காக அவரை அப்டியே விட்டு போக மனசு வரல.
நான் கூட இல்லனா வேலை அதிகமா செஞ்சு என்ன படிக்க வைக்கணும்னு அவர் ரொம்ப கஷ்டப்படுவார். எனக்குன்னு இருக்க என் ஒரே உறவு அவரை கஷ்டப்படுத்த என் கனவு கூட காரணமா இருக்க கூடாதுனு நினைச்சேன். தப்பில்ல தான?”
சராசரியாக தந்தை மேல் உண்மையான பாசம் வைத்திருக்கும் எந்த மனிதனும் யோசிக்கும் எண்ணம் தான் மனைவிக்கும் வந்ததென புரிந்தவன் தலை மறுப்பில்லாமல் தலை ஆட்டியது. இருந்தும் மனம் மட்டும் அமைதியாகவே இல்லை.
அவளது குணத்திற்காக, நல்லெண்ணங்களுக்காக இறைவன் கொடுத்த சோதனை அர்த்தமற்றதாக தோன்றி மனதை அரித்தது. உறங்கலாம் என படுத்தவன் அங்கு அருகிலே மனைவியை படுக்க வைத்து யோசனையோடு படுத்திருக்க தன்னையும் மீறி உறங்கியிருந்தான்.
error: Content is protected !!