Skip to content
Post Views: 4,378
“புடிக்காம தான் பண்ணீர்ல இருக்க எல்லா ரெசிபியும் கரைச்சு குடிச்சு வச்சிருக்கியா?”
“உங்களுக்கு மட்டும் இல்லையே எனக்கும் பண்ணீர் புடிக்கும். அதுனால தெரிஞ்சு வச்சிருக்கேன்”
வேகமாக அவள் இடை வளைத்து தன்னை பார்த்து திருப்பினான், “பொய் சொல்லாதடி. உனக்கு என்ன புடிக்கும். அப்றம் எதுக்குடி என்ன டெய்லி அப்டி பாக்குற?”
“எப்படி பாத்தேன்?”
Advertisement
“ஏதோ உன் உலகமே நான் தான்னு”
இலக்கியா, “அது உங்க கற்பனை”
“அன்னைக்கு தாத்தா வீட்டுல கூட என்ன எப்போ இருந்து பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டியே அதுவும் பொய்யா?” இதை எப்பொழுது இவன் கேட்டானென விழித்தாள்.
Advertisement
பிரியங்கா, வருண் தர்ஷனிடம் அவள் பகிர்ந்த உண்மை அவனுக்கு சில நாட்கள் முன்பு தான் காட்சிப்படமாக தர்ஷன் மூலம் பகிரப்பட்டதை பெண்ணவள் அறிந்திருக்கவில்லை.
Advertisement
“அது சும்மா அவங்கள எல்லாம் நம்ப வைக்கிறதுக்கு”
அன்பை அடக்கி வைத்து ஒருவரிடமிருந்து பின் வாங்குவது அவ்வளவு எளிதல்ல, நாவிலிருந்து, உடல் மொழி, கண்கள் என எல்லாம் ஒன்றாய் இணைந்து வேலை செய்ய வேண்டும்.
இங்கோ இலக்கியாவிற்கு நாவானது மட்டும் அந்த வேலையை செய்ய கண்கள் முற்றிலும் அவளுக்கு முரணாய் நின்றது.
Advertisement
“பொய் மேல பொய் சொல்லாத. கடிச்சு வச்சிடுவேன். அப்றம் என்னத்துக்கு அன்னைக்கு என்ன தேடி அந்த நெடுஞ்செழியனை விட்டு ஓடி வந்த?”
“நீங்க தான சார் ஹாஸ்பிடல் பொறுப்பாளி. அதான் வந்தேன்”
அவளை முறைத்தவன், “அந்த நம்பிக்கை வச்சேன்னு சொன்னது?”
இலக்கியா, “அப்போ ஏதோ ஒரு எமோஷன்ல சொல்லிருப்பேன்” எழுந்த கோவத்தில் கட்டிலில் அர்ஜுன் எழுந்து அமர்ந்துவிட இலக்கியா அவன் முதுகை பார்த்து சிரித்துக்கொண்டாள்.
“தூங்கலையா சார்?” சீண்டலோடு பெண்ணவள் கேட்க, திரும்பி மனைவியை முறைத்தவன் கட்டிலிலிருந்து இறங்கி வெளியே சென்றான்.
இலக்கியா கணவனை தொடர்ந்து எழுந்து அமர்ந்திருக்க சென்றவன் அதே வேகத்தில் உள்ளே வந்தவன் அவிழ்த்து வைத்திருந்த சட்டையை எடுத்து மாட்ட, இலக்கியாவிற்கு கலவரமானது.
அவன் அருகாமை வேண்டும், அவன் வேண்டும் என அர்ஜுன் எழுந்து சென்ற பொழுது கதறிய மனதை உள்ளே வரட்டும் என நினைத்திருக்க அவனோ கிளம்பும் எண்ணத்திலிருந்தான் போல.
அவசரமாக சட்டையை போட்டு வாகனத்தின் சாவியை தேட, “உங்களுக்கு டாக்டர் தான வேணும்னு சொன்னிங்க?” குரல் கமர அவனை பார்த்தாள்.
“உன்ன ஒரு பக்கம் வச்சிட்டு டாக்டர மெயின் பொண்டாட்டியா வச்சுக்க போறேன்” எள்ளலாக கூறியவன் முகம் இறுகி போயிருந்தது.
“எங்க வீட்டுக்கு வரவே உங்களுக்கு இவ்ளோ நாள் ஆகியிருக்கு. இந்த சின்ன வீடு, படிப்பறிவு இல்லாத அப்பா, நர்ஸ் டிகிரி. இது எல்லாம் தான் இலக்கியா”
“உன்ன பத்தி செல்ப்-இன்ட்ரோ நான் கேட்டேனா இல்ல எதுவும் தெரியாம தான் வந்தேனாடி? புடிக்காதாமே…”
சாவியை தேடுவதில் மும்முரமாய் இருந்தவன் கண்களில் கட்டிலின் ஓரம் அது தென்பட அதனை எடுக்க சென்றவன், “இவளுக்காக ராத்திரி பகல் தூங்காம பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். தேவை தான்டி எனக்கு”
அவளது நிராகரிப்பை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை மாதங்கள் அதே நிராகரிப்பை தான் அவளும் தங்கியிருப்பாள் என்பது கூட மறந்து போனான்.
சாவியை குனிந்து எடுத்து அவன் வெளியே நகர போகும் பொழுது, “என்னங்க…” என்கிற மனைவியின் அழைப்பில் கால்கள் அசையாமல் நின்றது.
“கெளம்புறீங்களா?”
“வந்ததுல இருந்து போக தான சொல்லிட்டு இருக்க”
“என் மனசுல என்ன ஓடுதுனு யோசிக்கவே மாட்டிங்களா?”
“எதுக்கு யோசிக்கணும், அதான் என்ன நினைச்சாலே வெறுப்பா இருக்குன்னு சொன்னியே”
“உங்கள வெறுப்பேத்த சொன்னேன். அன்னைக்கு எவ்ளோ ஈஸியா செழியன் கைய புடிச்சதுக்கு கூசலையானு கேட்டீங்க. ஏன் எனக்கு அந்த கோவம் இருக்க கூடாதா?” குரலை சற்று உயர்த்தி தான் அவனை முறைத்தாள்.
“சுலபமா என் பக்கம் திருப்பி விடுறல. பர்ஸ்ட் ஆரமிச்சது யாரு, என்னோட கேரக்டர நீ அசாசினேட் பண்ண. அதுக்கு பதிலடி குடுத்தா ஒடனே நான் கொடுமைக்காரனா?” என்றான் இவனும் விடாமல்.
“இன்னுமா உங்களுக்கு புரியல, நான் அதை அந்த…” ஒரு நொடி நிறுத்தி, “அவனை வச்சு சொன்னேன். அதுக்காக என்ன அப்டி பேசுனீங்களா?” அயர்வோடு அர்ஜுனை அவள் பார்க்க, கண் மூடி நெற்றியை நீவியவன் வந்து மனைவி அருகே அமர்ந்தான்.
அர்ஜுன் அமரவும் எப்பொழுதும் வரும் கூச்சம் நெட்டித்தள்ள அர்ஜுன் மனைவி இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.
கொஞ்சம் மலையிறங்கியிருந்தவன் மீண்டும் அதில் விழிக்கப்பெற்று அவளை முறைத்தவன் அடுத்த நொடி அவளை அள்ளி மடிக்கு இழுத்திருந்தான்.
அவனது திடீர் செயலில் அதிர்ந்தவள் உடல் வெடவெடக்க தன்னுடைய மார்பில் கை வைத்து அவனை பயத்தோடு பார்த்தாள்.
“எதுக்கு இந்த நடிப்பு?” மார்போடு ஒட்டியிருந்த கையை பார்த்தவன், “இத நடிப்புனு நினைக்கிறதா, இல்ல” அர்ஜுன் விரல்கள் மார்போடு ஒட்டியிருந்த இலக்கியாவின் சேலையை உரசி அவளது கையை பற்றிவிட ஏறி இறங்கிய மூச்சு அவனுக்கு இன்னும் வசதியாகி போனது,
“முன்னாடி இருந்த இலக்கியா தான் உண்மை, உன்ன மீறி நீ நீயா இருக்கறதா நினைச்சுக்குறதா?”
அவளுக்கு எப்படி பேச்சு வரும், அவனுள் அவளை மொத்தமாய் இழுத்துக்கொண்டு அமர்ந்திருப்பது போதாமல் அவள் கைகளை தளர்த்திய பிறகும் விடாமல் அதே இடத்தினில் அவளது விரல்களை பற்றி நிற்கும் அர்ஜுனின் செயலில் திக்கும் மறந்து போனது.
“ம்ம்ம்?” புருவம் உயர்த்தி கேள்வி கேட்டவன், சொக்கி நிற்கும் அவளது கண்களில் தானும் மயங்கி, பேதையை மேலும் போதையேற்ற மெல்ல குனிந்து தான் பற்றியிருந்த பெண்ணின் விறல் மேல் மீசை உரச முத்தம் வைத்தான்.
அவனது அந்த நிதான செயலில் இலக்கியாவின் மற்றொரு கரம் அவனது கன்னத்தை வேகமாக பிடித்தது.
“என்னாச்சு?” எதுவுமே தெரியாதது போல் அவன் கேட்டதற்கு வழக்கம் மாறாமல் விழிக்க மட்டுமே செய்தாள்.
குனிந்து முத்தமிட்டதே, அவளது விரல்களை தாண்டி மேனியில் நேரடியாக அவன் முத்தமிட்டது போல் சிலிர்க்க, அவனோடு சிகையானது அவளது உடை மறைக்காத கழுத்தில் சரசரத்து மனைவியை வேறொரு உலகிற்கே இழுத்து சென்றிருந்தது.
“சார்…” தடுமாறினாள் அவனது முன்னேற்றத்தில்.
“சார் வேணாம் இலக்கியா” அவளுக்கு மூச்சை விட அனுமதித்து அவள் முகம் பார்த்தான், வாகாய் அணைத்து அமர்ந்து.
“என்னாச்சு உங்களுக்கு, உங்கள புடிச்சு வச்சிருக்க கூடாது. விடுங்க என்ன” கூச்சத்தில் அவள் நெளிவதை பார்க்கவே ரசனையாக இருந்தது.
“ம்ம் இப்டி சொல்லு. ங்க போட்டு, இல்லையா அர்ஜுன் கூட எனக்கும் ஓகே தான்”
‘நான் என்ன கேட்டால் இவர் என்ன பேசுகிறார்?’ அரிவை விளங்காத பார்வை பார்க்க, “அதெல்லாம் முடியாது” அவனிடமிருந்து கையை விலக்கி இடைவேளை உருவாக்க பார்த்தாள்.
“ப்ச் போகாதடி. நம்ம சண்டை இன்னும் முடியல” தீரமானான் மருத்துவன்.
“நீங்க எதுக்கு முறைக்கிறீங்க, நான்ல கோவப்படணும்”
இவளும் முறுக்கிக்கொண்டாள், பேச்சுக்காக கோவத்தை காட்டினாலும் ஒருவர் அருகாமையை மற்றவர் விட்டு பிரியாமல் இருப்பது தான் அவர்கள் காதலின் முதல் வெளிப்பாடு.
“கோவப்படுங்க மேடம். நான் என்ன உன்ன தப்பா பேசுனேனா, இல்ல அவனோட சேர்த்து வச்சு தான் பேசுனேனா” “
அது வேற பேசுவீங்களா? பேசிருந்திங்க, டாக்டர்க்கு அவர் ஹாஸ்பிடல்லயே ஸ்பெஷல் வார்ட் ஏற்பாடு பண்ணிருப்பேன்”
“எப்படி இந்த பெட் மாதிரியா?” அவர்கள் அமர்ந்திருக்கும் இரும்பு கட்டிலை காட்டினான் கேலியாக.
“பாத்திங்களா, இதான் நீங்க. என்கிட்ட குறை மட்டும் தான் பாப்பிங்க. அவன் கைய புடிச்சிட்டேன்னு சொன்னிங்களே, அப்போ என்ன பாக்காமயா இருந்திருப்பிங்க, நான் அழுகுறதை கூட கவனிக்காம போயாச்சு. என்ன விட்டு போக உங்களுக்கு அது ஒரு காரணமா போச்சு”
“இந்த வீடு உனக்கு குறையா தெரியிதா?” இந்த சிறிய வீடு என்னைக்குமே அவளுக்கு குறையாக தெரியாத அளவு நிறையாகவும் தெரிந்ததில்லை.
பெற்றோரை இரண்டு படி உயர்த்தி வைக்க பார்க்கும் சாதாரண நடுத்தர பிள்ளையின் ஆசை தான் இலக்கியாவுக்கும். தந்தை வாழ்க்கையில் உழைத்த உழைப்பிற்கு இதை விட சற்று பெரிதாக, குறைந்தது தனி சமையலறை கொண்ட வீட்டில் அவரை அமர்த்தி பார்க்க ஆசை அவளுக்கு.
“வீட்டோட அளவு பெருசு இல்ல இலக்கியா, குடிசையா இருந்தாலும் எங்க நிம்மதி இருக்கோ அது தான் சொர்கம்”
‘பேசுவது அவள் மருத்துவன் அர்ஜுனா?’ என்கிற சந்தேகம் வலுப்பெற்றது.
“அவன் கூட நீ பேசிட்டு இருந்தப்போ உன் முதுகை தான்டி பாத்தேன்”
“நான் உங்க முதுகை பாக்கலயே…” அஞ்சுஸ்ரீ பக்கம் பேச்சு திரும்பியது
“போதும். அவளை நான் தான் வர சொன்னேன். இல்லனு சொல்லல. அது வேற ரீசன்”
இலக்கியா, “அப்டி என்ன பெரிய ரீசன் உங்களுக்கு, அவளை பாக்க ஆசை வந்திருக்கும்” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டவளுக்கு அவன் தான் வர கூறினான் என அவனே மொழிந்த பிறகு அழுகையாக வந்தது.
திருப்பியிருந்தவள் முகத்தை பிடித்து திரும்பியவன், “எதுக்கு இவ்ளோ அவசரம் உனக்கு. நம்பிக்கை இருக்கு நம்பிக்கை இருக்குனு சொல்ற உனக்கு தான்டி என் மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்ல.
அவளை வர சொல்ற நான் எதுக்கு அவ்ளோ பேர் இருக்குற ஹாஸ்பிடல்க்கு வர சொல்ல போறேன். தனியா அவளை பாக்க இடமா ஊர்ல இல்ல? எந்திரிடி”
வலுக்கட்டாயமாக அவளை தன்னிடமிருந்து பிரித்து அர்ஜுன் விலக்க பார்க்க அவன் சட்டையை பிடித்து இலக்கியா விலக மறுக்க, அர்ஜுனின் முறைப்பு இன்னும் கூடியது.
“யோசிக்கல” என்றாள் அழுகையோடு.
“எதையும் யோசிக்காத. என்ன பத்தி தப்பா மட்டுமே யோசி. உன் வீட்டுக்கு வர்றதுனா என் அப்பாவை பாக்கணும் வீட்டுல போய் விடுடா மடையா அர்ஜுன்னு சொல்லணும், சும்மா சும்மா வந்து சண்டை போட்டுட்டு போகிறது தான் உனக்கு தெரியும். எந்திரி நான் வீட்டுக்கு போறேன்”
“ம்ஹூம், உங்க வீடு சாவி உங்ககிட்ட இல்ல சொன்னிங்கல” அப்பாவியாக அவன் சட்டையை இறுக்கமாக பற்றியவள் மேல் கோவம் தான் அதிகமானது அர்ஜுனுக்கு.
“என்னைக்கு உன்ன புடிக்க ஆரமிச்சதோ அன்னைல இருந்து பொய் மூட்டையாகிட்டேன்டி நான். உன்ன புடிக்கலனு உன்கிட்ட பொய் சொல்றதுல இருந்து, காரணமே இல்லாம ஆன்கோ டிபார்ட்மெண்ட் வந்தது, இப்போ இங்க நிக்கிறது வரை பொய் தான் பேசுறேன்”
இலக்கியாவை வம்பாக படுக்கையில் அமரவைத்தவன் தான் எழும் முன்பு இலக்கியா அர்ஜுனை இரும்பாக பக்கவாட்டிலிருந்து அணைத்திருந்தாள்.
காற்றிலாடும் மரத்தின் இலைகள் கீழே சிந்திக்கிடக்கும் காய்ந்த இலைகளை பார்த்து மரத்தின் கிளையை கெட்டியாய் பிடிக்கும் இலையை போல அர்ஜுனை இலக்கியா பிடித்திருந்த இறுக்கமே அவனை அவளை விட்டு நகராவிடவில்லை.
முறுக்கிக்கொண்டாலும் முரடனுக்கு அவளை விட்டு போக பிடிக்கவில்லை, இருந்தும் சீறியது அவளது அவன் மீதான ஆசையில். விடவே மாட்டாள் என்கிற நம்பிக்கை.
“ஒவ்வொரு தடவையும் உன் கண்ணையே பாத்து நின்னு நான் தப்பு பண்ணலன்னு சொல்லிட்டே இருக்கணுமா? இல்ல உன்ன புடிக்கிது, பிடிக்கிதுன்னு போர்ட் புடிச்சு நிக்கவா?” உஷ்ணமாக தான் பேசினான், அவளின் பிடி கூடிக்கொண்டே போகும் உற்சாக கூத்தில்.
“இல்ல” என்றாள் உள் இறங்கிய குரலில்.
எளிமையான மங்கிய நிறத்தில் உடை அணியும் இந்த பெண் மேல் எப்படி பிடித்தம் வந்ததென அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
மொழியில்லா நேரம் வாயடிக்கும் அவளின் விழிகளை எதற்கு ரசிக்க துவங்கினான் என்பதை மறந்தான். ஆசைகள் எல்லாம் ஆசையாகவே போகுமென சினம் கொண்டு சுற்றி திரிந்தவனை ஆசை காதல் காட்டி இழுத்துவிட்டாள்.
இருவருக்கும் மற்றவரை பிடிக்க காரணம் தேவைப்படவில்லை. ஒருவர் குணத்தில் மற்றவர் தானாக ஈர்க்கப்பட்டு மீளவே முடியாத தூரம் சென்றுவிட்டனர்.
error: Content is protected !!