Skip to content
Post Views: 7,026
“சின்னக் குட்டி சாப்பிட வாடா. நீ சாப்பிட்டனா… எனக்கு வேலை முடிஞ்சிடும். தலைய பொளக்குது. நான் செத்த போய் படுப்பேன்” என்றார் சாரதா கனிமொழியிடம்.
“அம்மா… எனக்கு படிக்கற வேலையிருக்கு. நான் அப்புறமா சாப்பிடறேன்”.
“சாப்பிட்டு படியேன்டா. இப்பவே மணி எட்டுக்கு மேல ஆகுது”.
Advertisement
“நாளைக்கு எக்ஸாம் இருக்குமா… நிறைய இருக்கு படிக்க. டிஸ்டர்ப் பண்ணாத”.
“சரி உனக்கும் அனிக்கும் தோசை ஊத்தி ஹாட்பாக்ஸ்ல வைச்சிடவா? அப்புறம் சாப்பிடறியா..? அனி வந்தாலும் சாப்பிட சொல்லுடா”.
“அக்கா சூடாதான சாப்பிடுவா. அவள் வந்ததும் ஊத்தி குடுத்திட்டு, நானும் சாப்டுக்கறேன். நீ போய் படும்மா…”.
Advertisement
“சரி. அப்ப நான் போய் படுக்கவா…? ஊத்தி சாப்பிடறீங்களா…?”
Advertisement
“ம்ம்…” என்றாள் கனிமொழி புத்தகத்திலிருந்து பார்வையை நிமிர்த்தாமலே.
சாரதாவுக்கு நேற்றிலிருந்து சரியான தூக்கம் இல்லை. வீட்டில் நடந்த நிகழ்வுகளை நினைத்து, மனதில் அதையே போட்டு உழப்பிக் கொண்டிருந்ததால் மாலையிலிருந்து தலை வலியுடனேயே நடமாடிக் கொண்டிருந்தார்.
வேலை முடிந்தால், சீக்கிரம் படுக்கலாம் என்றிருந்தவர், கனிமொழி இப்படி கூறியதும் சென்று படுத்துவிட்டார்.
Advertisement
கனிமொழி ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். பூங்குழலி பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவளுக்கு நைட் ஷிப்ட் வேலை என்பதால் மாலையே கிளம்பி சென்றிருந்தாள்.
பூபதியும் சாப்பிட்டு முடித்து படுத்திருந்தார். இவள் மட்டும் தனியாக ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
படிப்பில் ஆழ்ந்திருந்தவளை காலிங் பெல் சத்தம் கலைத்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அமுதினி நின்றிருந்தாள் வெளியே. கனிமொழி அவளைப் பார்த்து சிநேக பாவத்துடன் சிரித்தாள்.
“ஏய் வழியை விடுடி” என அதட்டிய அமுதினி கனிமொழியை ஒருகையால் பிடித்து நகர்த்திவிட்டு உள்ளே நுழைந்தவாறே “வழிய விடாம, இளிச்சிட்டு நிக்கறா…”என முணுமுணுத்தாள் கோவமாக கனிமொழியை பார்த்து.
இடுப்பில் கை வைத்து அமுதினியை முறைத்த கனிமொழி “சிரிச்சா திரும்ப சிரிக்கனும். அதான் குட் மேனர்ஸ்” என்றாள் அவளுடன் நடந்தவாறே.
கனி சொல்லியதும் இன்று ஹாஸ்பிட்டலில் டாக்டர் ஷ்யாமளா அவரது மகன் கௌதமை அறிமுகப்படுத்தும் போது, ஒரு மரியாதைக்கு கூட சிரிக்காமல் அழுத்தமாக அவன் உட்கார்ந்திருந்தது நினைவு வந்து தொலைத்தது மனதில். கூடவே சிரிப்பும்.
“இவளுக்கு என்கிட்ட வம்பு இழுக்கலன்னா தூக்கம் வராது” என முணுமுணுத்தவள் “போடி வேலைய பார்த்துட்டு. என்கிட்ட வம்பிழுக்காத. நானே டையர்டா வந்திருக்கேன்” என்று அறையினுள் சென்று விட்டாள்.
அமுதினி வெதுவெதுப்பான வெந்நீரில் அலுப்பு தீர குளித்து, இரவு நைட் பேன்ட் ஷர்ட்டை அணிந்து வெளியே வந்து தண்ணிர் பாட்டிலை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து, தண்ணீர் குடித்தாள்.
கனிமொழி அமுதினியைப் பார்த்ததும் எழுந்து சென்று, அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை வைத்தாள். கனி கிட்சன் சென்றதும் இந்நேரம் இவள் என்ன பண்றா கிட்சன்ல என எட்டிப் பார்த்தாள் அமுதினி.
கனி, “அக்கா வா சாப்பிடலாம்”.
அமுதினிக்கு நல்ல பசி. இருந்தும் “எனக்கு வேண்டாம்” என முறுக்கினாள்.
“அப்ப எனக்கும் வேண்டாம் போ. நானும் பசியோடவே இருக்கேன். ஏற்கனவே, நான் பசி மயக்கத்துல, உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”.
“போ… போ… நாளைக்கு எக்ஸாமுக்கு நான் படிச்ச மாதிரி தான்” என அவளும் முறுக்கிக் கொண்டு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு அப்படியே போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
“ஹேய். நீ ஏன்டி இன்னும் சாப்பிடாம இருக்க? போ போய் சாப்பிடு. நாளைக்கு எக்ஸாமா… உனக்கு? என்றாள் அமுதினி தங்கையிடம் வந்து அமர்ந்து.
“நீ சாப்பிட்டா நான் சாப்பிடறேன். நீ சாப்பிடலன்னா எனக்கும் வேணாம் போ”.
“ம்ப்ச்…, சும்மா சீன் போடாத. சாப்பிடு போடி… உசுர வாங்காம” என்றாள் கோபமாக அவளைப் பார்த்து.
கனிமொழி அமுதினி சொன்னதை காதிலே வாங்காமல் உட்கார்ந்திருந்தாள், புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு.
அமுதினி சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவள், பெருமூச்செடுத்து விட்டாள். அவளுக்கும் தெரியும். தன்னால் ரொம்ப நாள் எல்லாம் இந்த கோவத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியாது என.
வீட்டில் பேசாமல் சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. நிதர்சனத்தை புரிந்தவள், கோபத்தை தள்ளி வைத்து “சரி வா சாப்பிடலாம்” என அழைத்தாள் தங்கையை.
கனி ஏதும் பேசாமல் தனது கண்களை மட்டும் உயர்த்தி அமுதினியை பார்த்தாள்.
அவளது பார்வையில் அமுதினிக்கு முறுவல் வந்தது.
கனியின் காதை பிடித்து திருகியவள், “ஏன்டி..? உனக்கு படிக்காம இருக்கறதுக்கு ஒரு சாக்கு இது. அதுக்கு என்னை பலிகடா ஆக்கறயா… நீ. கேடிடி நீ?” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அப்படிலாம் ஒன்னும் இல்ல. எனக்கு ஒன்னும் வேணாம் போ. நான் கூப்பிடும் போதே நீ வந்திருக்கனும். இப்ப என்னால முடியாது” என இன்னும் முறுக்கிக் கொண்டாள் கனிமொழி, அமுதினியின் கேலியில்.
“சோம்பேறி. நான் தோசை ஊத்தனும். அதுக்கு என்னல்லாம் ஆக்ட் குடுக்கற நீ…” என தங்கையின் தலையில் கொட்டினாள் வலிக்காமல் சிரித்துக் கொண்டே.
அய்யோ கண்டு பிடுச்சிட்டாளே… என அசடு வழிந்தாள் கனிமொழி.
அமுதினி எழுந்து சென்று அடுப்பை பற்ற வைத்து தோசை ஊற்ற தொடங்கினாள். அமுதினியின் பின்னேயே வந்த கனிமொழி அடுப்பு மேடை மேல் ஏறி உட்கார்ந்து, தட்டை எடுத்து வைத்துக் கொண்டு “அக்கா எனக்கு வெங்காயம் போட்டு பொடி தூவி தோசை வேணும்” என்றாள்.
“ம்ம்… அம்மா உனக்கு நல்லா நாக்க வளர்த்து வச்சிருக்காங்க..டி”
“ஏன்? நீங்களாம் மட்டும் அம்மா செய்யும் போது சாப்படறதில்லையா…?” என இருவரும் கிண்டல் கேலியுடன் தோசை சுட்டு சாப்பிட்டு முடித்து, பாலையும் சூடு செய்து டம்ளரில் ஊற்றி எடுத்து வெளியே வந்து அமர்ந்தனர்.
“அம்மா ஏன் சீக்கிரம் படுத்திட்டாங்க”, என்றாள் அமுதினி.
கனி அக்காவை சில நொடிகள் உற்று பார்த்தவள், “எல்லாம் உங்களாலதான்” என்றாள்.
“ஹேய் நான் என்னடி பண்ணேன்”.
“நீன்னா நீ மட்டுமா…? வீட்ல எல்லாரும் சேர்ந்துதான்”.
அமுதினி எதுவும் பேசாமல் பாலை குடித்து கொண்டிருந்தாள்.
“நேத்துல இருந்து வீட்டுல நடந்த டென்ஷன்ல அம்மாவுக்கு கொஞ்சம் பிபி ரெய்ஸ் ஆகிடுச்சு. அதான் மாத்திரை போட்டு படுத்திட்டாங்க…” என்றாள் கனிமொழி.
அமுதினி பதட்டமாக, “ஏன்டி வந்தவுடனே அதை சொல்றதுக்கு என்ன? மத்த கதையெல்லாம் பேசிட்டிருக்க…” என வேகமாக எழுந்து போய் சாரதா படுத்திருந்த அறைக் கதவைத் திறந்து பார்த்தாள்.
சாரதா நல்ல உறக்கத்தில் இருந்தார். சத்தம் செய்யாமல் அவரது அருகே சென்று நின்று பார்த்தாள். இவள் பின்னாடியே வந்த கனி இவள் கையைப்பற்றி வெளியே இழுத்து வந்து அறைக்கதவை சத்தமிடாமல் மூடினாள்.
கனி அறையைவிட்டு வெளியே இழுத்து வந்ததற்காக, அமுதினி கனியை முறைத்து நின்றாள்.
“நேத்துல இருந்து எல்லாரும் போட்டு அவங்களை டென்ஷன் பண்ணிட்டு “இப்ப என்ன லுக்கு?’’ என்றாள் அமுதினியைப் பார்த்து.
அவள் அப்படி சொன்னதும் அமுதினிக்கு அழுகை வந்துவிட்டது. நேற்றிலிருந்து அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து வெடித்திருந்தது. எதுவும் பேசாமல் சோபாவில் உட்கார்ந்து கைகளில் முகத்தைப் புதைத்து தேம்ப ஆரம்பித்தாள்.
கனி ஒன்றும் சொல்லவில்லை. அவளையே பார்த்திருந்தாள்.
அமுதினி அழுகையினூடே அவளைப் பார்த்து கோவமாக “என்னடி தெரியும் உனக்கு? பெரிய மனுஷி மாதிரி பேச வந்திட்ட?’’ என சீறினாள் தங்கையிடம்.
“எனக்கு ஒன்னும் தெரியாதுதான். நான் சின்னப் பொண்ணுதான். ஆனால் அம்மா வேணும்னே உன்னை அவாய்ட் பண்ணிட்டு, குழலி அக்காவை உன் இடத்துல நிப்பாட்டல. அது எனக்கு கரெக்டா தெரியும்” என்றாள் விட்டுக் கொடுக்காமல்.
“அந்த சமயத்துல இருந்த பதட்டத்துல, சரியா யோசிக்காம கூட பண்ணியிருக்கலாம் இல்லையா…?” என்றாள் தாயை சரியாக கணித்து.
தங்கை இவ்வாறு சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்தவள், “இருக்கட்டுமே. அதுக்கு என்ன வேணா பண்ணுவாங்களா…? யாரோ எதுவோ சொன்னா, இவங்க யோசிக்க மாட்டாங்களா…? இவங்க என்னை பெத்தவங்கதான. இவங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா…? அப்ப நான் அவ்வளவு தானா? என்னைப் பத்தி, என் மனச பத்தி எதையுமே யோசிக்க மாட்டாங்களா…?”
“யாரோ மூணாவது மனுஷங்களுக்கு குடுத்த முக்கியத்துவம் கூட பெத்த பொண்ணு எனக்கு குடுக்கலையே? நான் வரலைன்னு அவளை சபையில நிறுத்தினா, என்னை விட்டுக் கொடுத்ததா தான அர்த்தம். என் ஃபீலிங்ஸ புரிஞ்சிக்கவே இல்லையே” என சத்தமிட்டாள்.
அமுதினி கத்தியதைப் பார்த்து பயந்த கனிமொழி அவளது கையை எட்டி பிடித்து “அய்யோ அக்கா ஏன் சத்தம் போடறே? தூங்கறவங்க எழுந்து வந்திடப் போறாங்க” என சமாதானப்படுத்தினாள்.
“ஏய் விடுடி” என கனியின் கையை கோவமாக உதறிய அமுதினி. “போடி நீயும் என்னைதான குறை சொல்லற. இந்த வீட்ல யாருக்கும் நான் முக்கியமில்லை. யாரும் என்னை புரிஞ்சுக்கல. இதோ இப்ப நீகூட என்னைதான பேசறே…” என்றாள் விசும்பிக்கொண்டே.
“புரிஞ்சுக்கோ க்கா. யாரும் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல. நான் யாரையும் குறை சொல்லவும் இப்ப இத பேசல. உனக்கு உன் சைட்.. பீலிங்க்ஸ் மாதிரி, அம்மா சைட்…, குழலி சைட்… யோசிச்சு பார்த்தியா…?”
“அம்மாவாது அந்த நேர டென்ஷன்ல வந்த மாப்பிள்ளை வீட்டை சமாளிக்க, அவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க. எதுவும் சொல்லிடப் போறாங்கன்னு ஏதோ ஒரு பதட்டத்துல குழலியை நிப்பாட்டினாங்க. ஓகே”.
“ஆனால் குழலியை யோசிச்சியா நீ? அவள் என்ன மாதிரி மனநிலைமையில இருந்திருப்பான்னு. கொஞ்சமாவது திங்க் பண்ணி பார்த்தியா…?”
“யாரு என்னன்னே சொல்லாம, எந்த முன்னேற்பாடும் இல்லாம திடுதிப்புன்னு நீ வரலைன்னு அவளை கொண்டு போய் நிப்பாட்டினதும், அவளுக்கு எப்படி இருந்திருக்கும். அந்த நேரத்துல, அவள் என்ன மாதிரி பீல் பண்ணிருப்பாள் நினைச்சியா…?”
“ஒரு நெயில் பாலிஷ் வாங்கனும்னாலே, நாலு கடை ஏறி எறங்கி, தேடியலைஞ்சு செலக்ட் பண்றவளை, இவர்தான் உனக்கான மாப்பிள்ளன்னு சொல்லாம கொள்ளாம, அவங்க எதிர்ல கொண்டு போய் நிப்பாட்டினா அவளுக்கு எப்படி இருந்திருக்கும்” என்றாள்.
அப்பொழுதுதான் அமுதினிக்கும் சுரீரென்றது. கனி சொல்லியதுபோல் பூங்குழலியைப்பற்றி சிந்தித்துப் பார்க்க வில்லையே என அமுதினி நினைத்தாள்.
இத்தனை நேரம் தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருந்தவளுக்கு தங்கையைப் பற்றிய எண்ணம் தோன்றி வருத்தியது.
கனி சொல்றதும் நிஜம்தான. அவள் அந்த நேரத்துல என்ன கஷ்டப்பட்டாளோ…? என குழலியை நினைத்து வருத்தப்பட்டாள்.
“நம்ம வீட்டை மட்டும் பார்க்காத. மாப்பிள்ள வீட்டுலயும் முன்னாடியே நம்ம கிட்ட பேசி, எல்லா அரேஞ்மென்ட்சும் பண்ணி, நம்ம விருப்பம் கேட்டுதான உன்னை பார்க்க வந்தாங்க”.
“வந்தவங்க கிட்ட பொண்ணு வீட்ல இல்ல. வேலைக்கு போயிருக்கு. இன்னும் வரலைன்னா, என்ன நினைப்பாங்க, அவங்க? உனக்கு இந்த வரன்ல விருப்பம் இல்லைன்ற மாதிரியான அர்த்தமாயிடாதா…?”
“சாந்தா அத்தை அம்மாவை வாயை விட்டு நேராவே கேட்டாங்க. நானே பார்த்தேன். அமுதினி ஏதாவது லவ் பண்றாளான்னு. அப்ப அம்மாக்கு எப்படி இருந்திருக்கும்?”
“நம்ம அப்பா, அவங்க எதிர்ல எல்லாம்… எவ்வளவு சங்கடப்பட்டு நின்னாங்க தெரியுமா..? பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருந்தது.
மரியாதையா உட்கார்ந்து பேச வேண்டிய இடத்துல, உன்னால அப்பாக்கு எவ்வளவு தலைகுனிவு. ஒன்னுமே வாயை திறந்து பேச முடியாம உட்கார்ந்திருந்தாங்க”.
“மாப்பிள்ள வீட்டு ஆளுங்க எல்லாம், நீ இன்னும் வேலையில இருந்து வரலை, பொண்ணு வீட்ல இல்லைன்னதும், எப்படி பார்த்தாங்க தெரியமா? அவங்க வாயால ஒன்னும் சொல்லலனாலும், அது அசிங்கம் தான நமக்கு”.
“தப்பு உன் பேர்லயும் இருக்கு. நீ ஏன் லேட்டா வந்த?” என்றாள் பொறுமையாக கனிமொழி. அன்றைய சூழ்நிலையை தமக்கையிடம் விளக்கிவிடும் பொருட்டு.
“நான் லேட்டா வந்தா? என் மேல நம்பிக்கை இல்லையா இவங்களுக்கு? நம்ம பொண்ணு காரணம் இல்லாம லேட் பண்ண மாட்டான்னு, தெரிய வேணாமா..? நான் இதுவரைக்கும் இப்படி நடந்திருக்கேனா…?” என்றாள் அமுதினி இன்னும் சமாதானமாக முடியாமல்.
“ம்ப்ச்…, சொல்லுக்கா…, ஏன் லேட்டு….? ஒரு போன் கூட பண்ணல நீ…?”
“ஏய் சும்மா அதையே சொல்லிட்டிருக்காதடி. அர்ஜென்டா பார்க்க வேண்டிய எமர்ஜென்சி கேஸ் ஒன்னு”.
“வேற ஒரு சிஸ்டர் பார்க்க வேண்டியது. அவங்க திடீர்னு அவங்க பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு லீவ்ல போயிட்டாங்க. டாக்டர் ஹெல்ப்புன்னு கேட்கும் போது, எப்படி என்னால மாட்டேன்னு சொல்ல முடியும்? உயிர் சம்மந்தப்பட்ட விஷயம். இல்லனா கூட, யாரையாவது விட்டுட்டு வந்திருப்பேன். என் பீல்டில இது எல்லாம் தெரிஞ்சது தான. ஏன் அப்படி நினைக்கல….? நீங்க யாரும்” என்றாள் கோவமாக.
“என்ன அவசரமா இருக்கட்டுமே, வீட்லயும் உன்னை பொண்ணு பார்க்க வராங்க. அது உனக்கு தெரியுமில்ல. நீயில்லாம என்ன பண்ணுவாங்கன்னு உனக்கு தோணலையா? மத்த விஷயமா…, நீ இல்லாம சமாளிக்க”.
“அட்லீஸ்ட் ஒரு போனாவது போட்டு, அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ சொல்லிருக்கனும்ல?”
“உன் போன் கான்டேக்ட் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. எப்படி அம்மா உள்ளுக்கும் வெளியிலயும் தவிச்சாங்க தெரியுமா?”.
“ஏன்டி? நான் என்ன வேணும்னா பண்ணினேன்? நேத்து பார்த்து என் போன்ல சார்ஜ் இல்ல. கூட வேலை பார்க்கற சிஸ்டர் கிட்ட போன் பண்ணி அம்மாகிட்ட சொல்ல சொல்லிட்டுதான் போனேன். என் நேரம் அவங்களுக்கு வொர்க் டென்ஷன். அதுல சொல்ல மறந்துட்டாங்க”.
“உன் சைட், நீ காரணம் சொல்ற மாதிரி அம்மாக்கும் அவங்க சைட் ரீசன்”.
“அம்மா பண்ணது மட்டும்தான் தப்பா…? உன் மேலயும் தான தப்பு இருக்கு. இதுல அம்மா பண்ணது மட்டும் தப்புன்னு கோச்சுக்கற. உனக்கு கோவம் வர மாதிரி…, நீ அந்த நேரத்துக்கு வீட்டுக்கு வரலன்னு, ஒரு போன்கூட பண்ணி இன்ஃபார்ம் பண்ணலன்னு அவங்களுக்கும் கோவம் இருக்குமில்ல”.
“வந்தவங்க முன்னாடி, அந்த நேரம் அவங்க பட்ட அவஸ்தைய கொஞ்சம் நினைச்சு பாரு. உனக்கே புரியும்”.
அமுதினிக்கு கனி பேச பேச அந்த சுழ்நிலையில் தான் இல்லாமல் பெற்றவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என மெல்ல புரிய ஆரம்பித்தது. அழுகையை நிறுத்தி யோசிக்க முயன்றாள்.
“இதுல வேற இன்னொரு புது டென்ஷன். இன்னைக்கு சாயந்துரத்துல இருந்து”.
“என்ன…?” என்றாள் அமுதினி இன்னும் கோவம் தீராமல்.
“மாப்பிள்ளை வீட்ல இருந்து சாயந்திரம் போன் பண்ணிருந்தாங்க. குழலியை அவங்களுக்கு பிடிச்சிருக்காம். மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருச்சாம்”.
“கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்? அதைப் பத்தி பேசனும். எப்ப வரட்டும்னு கேட்டு போன் பண்றாங்க”.
“அம்மா, அப்பா… என்ன சொன்னாங்க…?”
“என்ன சொல்லுவாங்க? அம்மாதான் எங்க பெரிய பொண்ணுக்கு முடியாம குழலிக்கு பண்றதா இல்லங்க. கோச்சுக்காதீங்க. நீங்க வேற இடம் பார்த்துங்கன்னு சொல்லிட்டாங்க…” என்றாள்.
அமுதினிக்கு இதைக் கேட்டு இன்னும் மனம் பிசைந்தது. ஒரு பக்கம் பெற்றவர்கள். இன்னொரு பக்கம் குழலி. பாவம் நான் இல்லாம அவள் என்ன கஷ்டப்பட்டாளோ இவங்ககிட்ட மாட்டிட்டு என வருந்தினாள்.
தேவையில்லாமல் தன்னால் எவ்வளவு குழப்பம். பிரச்சனை. ஒழுங்கா அம்மா சொன்ன மாதிரி கேட்டு, லீவ் போட்டு வீட்டில் தங்கியிருந்தா, இந்த பிரச்சனைக்கே இடமிருந்திருக்காது என மனதில் வேதனைப்பட்டாள்.
“அம்மாக்கு ரொம்ப முடியலையா கனி…” என்றாள் தங்கையை கவலையாக பார்த்துக் கொண்டே.
“அம்மாக்கு பிபி எல்லாம் நார்மலாதான் இருக்கு. நேத்துல இருந்து நிறைய டென்ஷன். அதான் தலைய வலிக்குதுன்னு சீக்கிரம் படுத்துட்டாங்க. இல்லைனா பெரிய பொண்ணு வர வரைக்கும், அம்மாவாது வெயிட் பண்ணாம இருக்கறதாவது…” என்றாள் ராகமாக.
சாரதாவுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை என கேட்டதும்தான் அமுதினிக்கு நிம்மதியானது. “உனக்கு ஏன்டி… பொறாமை? அம்மா எனக்காக வெயிட் பண்றதுல…” என்றாள் கனியைப் பார்த்து சிரித்துக் கொண்டே.
“ம்ம்… என்னைக்காது, எனக்காக அப்படி வெயிட் பண்ணியிருக்காங்களா…? என்னை ஒரு பொருட்டாவே மதிக்கறதுல்ல, இந்த வீட்ல. கேட்டா சின்னப்பொண்ணுன்னு ஒரு மொக்கை ரீசன சொல்லுவீங்க…”
“அடிக் கழுதை. இப்படி வேற நினப்பா உனக்கு. அதுக்காக, அம்மாக்கு பிபி ன்னு என்னை பயமுறுத்துவியா நீ…?” என்றாள் அவள் தோளில் ஒரு அடி வைத்து.
“ம்ம்… அம்மாக்கு பிபின்னு சொன்னதாலதான், அம்மணி அம்மாவ பார்க்க ஓடுனீங்க. இல்லனா, இன்னும் அம்மா மேல கோவமாதான இருப்ப…” என்றாள் நொடித்துக் கொண்டே.
“குழலி உன்னை அடிக்கறதுல தப்பே இல்லடி. வாய் வாய் உனக்கு. என்னமா பேசறே… பாட்டி மாதிரி. பாயின்ட் பாயின்டா பிண்ற டி. பேசாம லாயர்க்கு படிடி. யூஸ்ஃபுல்லா இருக்கும்”.
“ம்க்கும்…, இங்க நாளைக்கு எக்ஸாம்கே வழிய காணமாம். லாயருக்கு போயிட்ட நீ” என சலித்துக் கொண்டாள்.
“படிடி படி…டி. பேசியே எப்படி ஒயிட்றதுன்னு பார்த்துட்டு இருப்பியே…” என அமுதினி தங்கையின் முதுகில் தட்டியவள் எழுந்து படுக்க உள்ளே சென்று விட்டாள்.
அமுதினி சத்தமாக அழுகையுடன் பேச ஆரம்பிக்கும் போதே சாரதா விழித்து விட்டார். இவளது அழுகை சத்தம் கேட்டு, எழுந்து கதவு வரை வந்தவர், அப்படியே நின்று விட்டார் இவர்களின் பேச்சைக் கேட்டு.
இதுவரை சகோதரிகள் பேசியதை நின்று கேட்டிருந்து விட்டு போய் திரும்பவும் படுத்து விட்டார் ஆயாசமாக. எப்படியோ அமுதினி கோவத்தை விடுத்து பேசியதே அவருக்கு போதுமானதாக இருந்தது.
கனிமொழியை நினைத்ததும் தானாகவே முகம் மலர்ந்தது. பெரிய மனுஷி மாதிரி, கனி அமுதினியிடம் பேசியதை நினைத்து சாரதாவுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.
சின்னக்குட்டி வர வர பெரிய மனஷி ஆகிட்டு வரா என சிரித்துக் கொண்டார். கனிக்கு படிப்பில் தான் ஆவ்ரேஜ். மற்றபடி சூச்சும புத்தி அதிகம்.
சிறு வயதிலேயே மனிதர்களையும், அவர்களது உணர்வுகளையும் சரியாக கணிக்கும் திறன் கொண்டவள். நேற்று வீட்டில் நடந்ததை கவனித்து இருந்ததால், யாரும் சொல்லாமலே எல்லாம் புரிந்திருந்தது. அதைத்தான் அமுதினியிடமும் பேசியிருந்தாள்.
தொடரும்.
error: Content is protected !!