Skip to content
Post Views: 6,335
ஷ்யாமளாவுக்கு தெரியும் வரை கொஞ்சமாவது அடங்கி இருந்த தாமோதரன், மனைவிக்கு தெரிந்ததும் அதையே சாக்காக எடுத்து கொண்டு, அவர் வீட்டில் இருக்கும் பொழுதுகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
குடும்பத்தின் மீதும் பற்றில்லாமல், ஒட்டுதல் இல்லாமல், உறங்க மட்டுமே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஷ்யாமளாவுக்கும் அவரை என்னவென்று கேட்பது, எப்படி பேசுவது என புரியவில்லை. ஏதாவது கேட்டு இருக்கும் உறவும் போய்விடுமோ என பயந்து கொண்டிருந்தார்.
ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லாதவாறு உச்சகட்டமாக தாமோதரன் வீட்டிற்கு வருவதையே மொத்தமாக நிறுத்தியிருந்தார். ஷ்யாமளாதான் தவித்து போனார்.
Advertisement
வயிற்றில் அரவிந்த் ஒன்பது மாதம், கையில் கௌதம் ஐந்து வயது குழந்தை. தனியாக அவரால் இதற்கு மேல் போராட முடியாது என தாய் வீட்டில் சரண் புகுந்திருந்தார்.
ஷ்யாமளாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கணவருடன் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். தன்னை அவர் புரிந்து கொள்ளவேயில்லையா? இவ்வளவு நாள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயர் தான் என்ன, என நொந்து போனார். பிள்ளைகளைக் கூட அவர் நினைத்துப் பார்க்கவில்லையே. இப்படியா அவர் மனம் கல்லாகிப் போகும் என வேதனையில் கிடந்து தவித்தார்.
கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாக அவர் நிலைதான் கவலைக்கிடமானது. கணவனின் ஆதரவு தேவைப்பட்ட அந்த நேரத்தில் தாமோதரனின் நிராதரவு அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது.
Advertisement
குற்றுயிரும் குலையுயிருமாக மனதால் நலிந்து கொண்டிருந்தவரை தக்க நேரத்தில் ஆதரவு கரம் கொடுத்து காத்து நின்றனர் அவரைப் பெற்றவர்கள்.
Advertisement
மகளுக்கு அரணாக இருந்து அவரை சிதையவிடாமல், தங்களது ஆதரவையும் அன்பையும் கொடுத்து அரவணைத்துக் கொண்டனர்.
அந்த அறியாப் பருவத்தில் நடந்தது எதுவுமே தெரியாமல் தந்தையின் பாசத்திற்கு ஏங்கித் தவித்த அந்தச் சிறுவனைப் காணக் காண பாவமாக இருந்தது அந்த பெரியவர்களுக்கு.
அப்படி ஒன்றும் தாமோதரன் ஆரம்பித்திலிருந்தே பிள்ளையுடன் பெரிதாக ஒட்டுதலுடன் இருந்ததில்லை. இருந்தாலும் ஷ்யாமளாவும் கௌதமும் அதையெல்லாம் பொருட்டாகவே கருதியதில்லை.
Advertisement
அரவிந்த் பிறந்த பின்னாவது தன்னுடன் வந்து விடமாட்டாரா என ஏங்கியிருந்த ஷ்யாமளாவுக்கு அவர் விவாகரத்து கேட்டு அனுப்பிய நோட்டீஸ்தான் வந்து சேர்ந்தது.
வெறுத்துவிட்டார் கணவரை நினைத்து. எதன்மீதும் பற்றில்லாமல் வாழ்க்கையே சூன்யமானது போல மறுகி தவித்தார்.
அரவிந்த் பிறந்து ஆறு மாதம் கழித்து தாமோதரனிடம் இருந்து டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் வந்திருந்தது. ஏதோ பொல்லாத நேரம். எல்லாம் சரியாகிவிடும். மகளின் கணவர் திரும்ப வந்துவிடுவார் என எதிர்பார்த்திருந்த பெற்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனதை தைரியப்படுத்தி, நிலைமையைப் புரிந்து மகளை தேற்றுவதில் மனதை செலுத்த ஆரம்பித்தனர் பெற்றவர்கள்.
ஷ்யாமளாவே ஒரு கட்டத்தில் அவரது பெற்றவர்களின் முயற்சியைப் புரிந்து தன்னை வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றார். அவரின் முயற்சியும் பலித்தது.
விருப்பமில்லாதவரை வலுக்கட்டாயப்படுத்தி இழுத்து வைக்கவோ, பிடித்து வைக்கவோ அவருக்கு மனமில்லை.
ஆதலால் தாமோதரனின் விருப்பப்படியே அவரிடமிருந்து சட்டப்படி விலகி விட்டார். விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே தாமோதரன், அவருக்கு கீழ் வேலை செய்த நர்ஸையே திருமணம் செய்து கொண்டதாக ஷ்யாமளாவுக்கு தெரியவந்தது
ஷ்யாமளாவுக்கு தாமோதரனின் துரோகத்தை நினைத்து ஆரம்பத்தில் ஆத்திரமும் அழுகையும் வந்தாலும், பிள்ளைகளைக் கொண்டு தன்னைத் தேற்றி தன் முழு கவனத்தை பிள்ளைகளின் மீதும், தன் தொழிலிலும் திருப்பினார். அதன் விளைவே இன்று அவர் அவரது துறையில் இந்த அளவு வளர்ந்து நிற்பது.
தந்தையுடனான கௌதமின் நினைவுகள் நிழலாகக் கூட அவனிடம் ஏதும் இல்லை. அது எல்லாம் அவனது அறியாப் பருவத்திலேயே எல்லாம் முடிந்திருந்தது. இவனாவது தந்தையின் முகத்தை பார்த்திருக்கிறான். அரவிந்துக்கு அந்த வாய்ப்பும் இல்லை. இவர்களை தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருந்து வளர்த்தார் ஷ்யாமளா. இன்னும் சொல்லப் போனால் மகன்களுக்கு அன்னை என்பதைவிட உற்ற தோழி எனவும் சொல்லலாம்.
தந்தையால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பெண்கள் மேல் சிறு வயதிலிருந்தே வெறுப்புதான் கௌதமுக்கு. வெளியில் யாரிடமும் இது பற்றி காட்டாவிட்டாலும், சொல்லாவிட்டாலும் எப்போதும் பெண்களிடம் இருந்து தள்ளியே இருப்பான்.
ஷ்யாமளாவுக்கு கணவரின் துரோகத்தை நினைத்து உள்ளுக்குள் வலித்தாலும் வெளியில் காட்டாமல் இருக்க பழகிக் கொண்டார். பிள்ளைகளில் இருந்து பெற்றவர்கள் வரை தனக்காகவே மெனக்கடுவதால், இதற்கு மேலும் நடக்கப் போவாததை நினைத்து அதிலேயே உழன்று கொண்டிருக்க விரும்பவில்லை.
அவருடைய வாழ்க்கையின் வலி கொடுத்த அனுபவம் அவரை உறுதியாக்கியிருந்தது என தான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எந்த சிக்கலான இக்கட்டிலும் தொய்வுறாமலும், துவண்டு போகாமலும் இருக்க அவர் பட்ட அனுபவம் அவரை புடம் போட்டிருந்தது.
கணவரின் நினைவுகளிலிருந்து போராடி மீண்டு வந்திருந்தார்.
அதன்பின்னான வாழ்க்கையில் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என தனது கவனத்தை திசை திருப்பி, மகன்களையும் நல்ல வழியில் வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்து அவர்களும் மருத்துவ துறையிலேயே கால் பதித்திருந்தனர்.
அவருடைய சின்ன கிளினிக், அவரது இத்தனை கால கடுமையான உழைப்பால் இன்று மக்களிடையே நேர்மை, கைராசி, நம்பிக்கை என புகழ் பெற்ற மருத்துவமனையாக வளர்ந்து நிற்கிறது.
அன்னையின் வாழ்க்கையையும், அவரது கஷ்டத்தையும் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, கௌதமின் எண்ணத்தில் கருத்தில் எல்லாம் பெண்கள் என்றாலே ஒட்டாத தன்மைதான்.
கௌதம் வளர்ந்து பெரியவன் ஆனதும் தான் இவர்களுக்கான பிரிவைப் பற்றி முழுமையாக தாத்தா பாட்டி மூலம் அறிந்திருந்தான். அதிலும் தாமோதரனின் மறு திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு. மகன்களான தங்களை கூட தந்தை நினைக்கவில்லையே என ஆவேசம் மனதில்.
கல்யாணமான ஒருவரை அவரது குடும்பத்தில் இருந்து பிரித்து, மனைவி மக்களை மறக்கச் செய்து, விவாகாரத்தும் வாங்க வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்றால் அவள் எந்த மாதிரியான கீழ்தரமான பெண்ணாக இருக்க வேண்டும் என, அவனது தந்தையை மறு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது கடும் கோவம்.
அந்த நினைவேலேயே வளர்ந்தவனுக்கு காலபோக்கில் பெண்களின் மீதான நல்லெண்ணம் குறைந்திருந்தது.
மருத்துவக் கல்லூரியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பேதமில்லாமல் பப், டிஸ்கோத்தே செல்வது, பாய் ப்ரண்ட்ஸ் என்ற பெயரில் இல்லாத அத்துமீறல்கள் செய்வது என தான் படிக்கும் காலத்தில் கல்லூரியில் பார்த்து வளர்ந்தவனுக்கு மேலும் வெறுப்புதான்.
பெண்கள் மீது கொஞ்ச நஞ்சமிருந்த மரியாதையும் அடியோடு அழிந்திருந்தது அவன் மனதில்.
அதனால்தான் படிக்கும் காலத்திலும் இவனுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பியவர்களைக் கூட அருகே சேர்த்ததில்லை. இதில் இவன் பின்னால் காதல் சொல்லி அலைந்த ஒரு சில பெண்களையும் கண்டு கொள்ளாமல் அவர்களை பார்வையாலையே அலட்சியப்படுத்தி தள்ளி நிறுத்தியிருந்தான்.
ஷ்யாமளாவின் பெற்றோருக்கு அவர் ஒரே பெண். கூடப்பிறந்தவர்கள் என யாரும் இல்லை. அவரது பெற்றோருக்கு இவரது வாழ்க்கையை நினைத்தே, வெளியில் சொல்ல முடியாத வேதனை. அந்த கவலையிலேயே அவர்களும் சீக்கிரம் போய் சேர்ந்திருந்தனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூங்குழலிக்கு திருமணமாகி ஆறு மாதத்திற்குமேல் ஆகியும் அமுதினிக்கு இன்னும் வரன் ஒன்றும் சரியாக தகையவில்லை. சாரதாவுக்கும் பூபதிக்கும் இதுவே பெரிய வருத்தத்தை கொடுத்தது.
ஏன் திருமணம் கூடாமல் தள்ளிக் கொண்டே செல்கிறது என அவளது ஜாதகத்தை எடுத்து சென்று ஜோசியரிடம் பார்த்ததில், குலதெய்வக் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து, பூஜை செய்து வருமாறு கூறியிருந்தார்.
அதற்காக இதோ குடும்பத்துடன் கிளம்பி குலதெய்வக் கோவிலுக்கு வந்திருந்தனர் அனைவரும்.
சாரதா தம்பதியினர் பூங்குழலியையும் தீபக்கையும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக முறையாக நேரில் சென்றே அழைப்பு விடுத்திருந்தனர். தீபக்குக்கு வேலை இருந்ததால் பூங்குழலியை மட்டும் அனுப்பி வைத்திருந்தான்.
இதற்கே அவனிடமிருந்து அனுமதி வாங்கி வருவதற்குள் பூங்குழலியின் நிலைமை திண்டாட்டமானது.
மனைவியை தனியாக எங்கும் அனுப்புவது என்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். சாரதா போன் மேல் போன் செய்து கேட்டு கொண்டதால் தான் மறுக்க வழியில்லாமல் அனுப்பி வைத்திருந்தான்.
பூங்குழலிக்கு அவனது இந்த குணம் ஆரம்பத்தில் ஆத்திரத்தையும் அழுகையையும் கொடுத்தாலும், காலத்தின் போக்கில் இவன் இப்படிதான் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. அதில் பெண்ணின் எதிர்பார்ப்புகளும் குறைய ஆரம்பித்திருந்தது.
அவள் எதிர்பார்த்திருந்த திருமண வாழ்க்கைக்கு நேர் எதிர், அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு. வசதியிருக்கிறது. ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் அங்கே எடுக்க முடியாது.
ஒவ்வொன்றிற்கும் கணவனின் சம்மதத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டும். அடைப்பட்ட கூண்டுக் கிளி போன்ற வாழ்க்கை அவளது நிலை. தீபக்கை பொறுத்தவரை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து, அவளுக்கு வசதியான வாழ்வைக் கொடுத்திருக்கிறோம் என்ற எண்ணம்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் அவனின் மூடைப் பார்த்து அவனின் பர்மிஷன் வாங்கி என அலுத்துவிடும் அவளுக்கு. இப்பொழுதெல்லாம் இதுதான் வாழ்க்கை என்றானதால் அமைதியாக இருக்க பயகியிருந்தாள்.
சாரதா காலையிலேயே எழுந்து எல்லோருக்குமான டிபன், சாப்பாடு என தயார் செய்து கையோடே கொண்டு வந்திருந்தார். பேருந்தில் போகலாம் என்றவரை மறுத்து அமுதினிதான் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து காரிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.
இவர்கள் வருவதை முன்கூட்டியே போன் செய்து கோவில் பூசாரியிடம் சொல்லியிருந்ததால், அவர் இவர்கள் வருவதற்கு முன்பாகவே பூஜைக்கு தேவையானவற்றை எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்.
சாரதா பூபதியிடம், “என்னவோ கோவிலுக்குள்ள கால் எடுத்து வைக்கும்போதே மணியடிக்குது. மனசுக்கு நல்ல சகுணமா இருக்குங்க. பெரியவளுக்கு நல்லபடியா கல்யாணம் கூடிடுச்சுன்னா சந்தோஷமாயிருக்கும்”.
“எனக்கும் அப்படிதான் படுது. எல்லாம் நல்லபடியா நடக்கனும்”.
“ம்ம்… மாப்பிள்ளையும் வந்திருந்தா இன்னும் நிம்மதியா இருந்திருக்கும்” என்றார் சாரதா குழலியைப் பார்த்துகொண்டே.
மகள்கள் மூவரும் பெற்றவர்களுக்கு முன்னால் பேசி சிரித்தபடி கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.
“அதான் வேலையிருக்குன்னு சொன்னாரில்ல. அடுத்த தடவை வரும்போது அவரை கூட்டிட்டு வந்தா போச்சு. சும்மா அதையே பேசிட்டிருப்பியா…?”
“ம்ம்…”
“சரிமா பேசிட்டேயிருக்காம… நல்ல நேரத்துல பொங்கல வைக்க ஆரம்பிங்க” நான் போய் கார்ல இருந்து எல்லா பொருளையும் எடுத்துட்டு வரேன்”.
“இருங்க, முதல்ல பூசாரிய பார்த்துட்டு வருவோம்”.
“சரி வா”.
கோவிலுக்குள் சென்றவர்கள், முதலில் அம்மனை தரிசித்து, பூசாரியை பார்த்து தாங்கள் வந்திருக்கும் தகவலை தெரிவித்துவிட்டு, பொங்கல் வைக்கும் வேலையை ஆரம்பித்தனர்.
பெண்கள் மூவரும் கல கல என பேச்சும் சிரிப்புமாக சந்தோஷமாக சாரதாவுடன் சேர்ந்து பொங்கல் வைக்க தேவையானதை செய்து தந்தனர்.
கனி சென்று கல் எடுத்து வந்து அடுக்கி பொங்கல் வைப்பதற்கான அடுப்பை தயார் செய்தாள். அங்கேயே பக்கத்தில் கிடந்த விறகு குச்சிகளை ஒடித்து அடுப்பு பற்ற வைக்க கொண்டு வந்து கொடுத்தாள்.
பூங்குழலி தவளையை எடுத்துச் சென்று பக்கத்தில் இருந்த குழாயில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அமுதினி சாரதாவுடன் சேர்ந்து பொங்கல் பானையை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அடுப்பில் ஏற்றினாள்.
சாரதா, அமுதினியை நன்கு அம்மனிடம் வேண்டிக் கொண்டு அவளது கையினாலேயே பொங்கல் வைக்க சொல்லியிருந்தார். பொங்கல் பானையில் முதலில் தண்ணீருடன் சேர்த்து கொஞ்சம் பசும் பால் விட்டு அது நன்றாக கொதித்து பொங்கி வந்ததும், எல்லோரது கையினாலும் அரிசியை எடுத்து போடச் சொன்னார் சாரதா.
பொங்கலுக்கான வெல்லத்தை பொடித்து கொடுத்தாள் பூங்குழலி. சாதம் குழைந்து வந்ததும் பெடித்த வைத்திருந்த வெல்லத்தை சாதத்துடன் சேர்த்து கிளறினாள்.
அதற்குள் சாரதா வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பச்சரிசி மாவில், ஏலம், வெல்லம் போட்டு, கொஞ்சமாக தேன் விட்டு நெய் சேர்த்து அம்மனுக்காக மாவிளக்கு போட உருண்டைகளை தயார் செய்திருந்தார்.
உருண்டைகளுக்கு பொட்டு வைத்து எலுமிச்சை பழத்தால் நடுவில் குழி செய்து அதில் நெய் விட்டு திரி போட்டு தயார் செய்திருந்தார். பூங்குழலியும் கனிமொழியும் அம்மனுக்காக வாங்க வந்திருந்த பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர்.
அமுதினி வெல்லம் சாதத்தோடு சேர்ந்து வெந்து குழைந்து வந்ததும், பொடித்து வைத்திருந்த ஏலக்காயையும், சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து நன்கு அடிப்பிடிக்காமல் கிளறி விட்டாள். பின்பு அதனுடன் நெய்யில் சிவக்க வறுத்து வைத்திருந்த முந்திரி திராட்சையை சேர்த்து அடிவரை கிளறி விட்டு இறக்கினாள்.
பானையை சுற்றிப் படிந்திருந்த அடுப்புக் கரியை ஈரம் வைத்து நன்கு துடைத்து மறுபடியும் பானைக்கு வீபூதியால் பூசை போட்டு பொட்டு வைத்து கருவரைக்கு எடுத்துச் சென்றனர்.
அதற்குள் பூசாரி அம்மனுக்கு அபிஷேகத்துக்கான எல்லாம் ரெடி செய்து வைத்திருந்தார். இவர்கள் வந்ததும் அபிஷேகம் ஆரம்பமானது.
சாரதா அம்மா தாயே என் பொண்ணுக்கு எந்த தடையும் இல்லாம நல்ல வரனா அமையனும். நீதான் கண்திறந்து பார்க்கனும் என மனதார வேண்டி நின்றார்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்வதற்கான திரை போட்டதும் மூன்று பெண்களையும் வாங்கி வந்திருந்த மண்ணாலான அகல் விளக்கு திரிநூல், எண்ணெய் எல்லாம் கொடுத்து கோவிலைச் சுற்றியுள்ள சந்நிதானத்தில் தீபம் ஏற்றி வரச் சொன்னார்.
சாரதா சொல்ல சொல்ல அவரது சொல்படியே மூன்று பேரும் சுற்றியுள்ள ஒவ்வொரு சந்நிதானத்திலும் தீபம் ஏற்றி, கட்டியிருந்த பூச்சரத்தை துண்டு போட்டு சாமிக்கு வைத்து வந்தனர். மீதமிருந்த பூச்சரத்தை அம்மனுக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.
பூபதி வெறும் பார்வையாளர் மட்டுமே. பின்னே அவராக எதையாவது செய்யப் போக சாரதாவிடம் யார் திட்டு வாங்குவது என அமைதியாக நின்று இவர்கள் செய்வதை பார்த்திருந்தார்.
சாரதாவும் அதற்குள் பச்சரிசி மாவில் செய்து வைத்திருந்த மாவிளக்கு தீபத்தை ஏற்றியிருந்தார் அம்மனுக்கு முன் வைத்து. அலங்காரம் முடிந்து, திரையை விளக்கியதும் மெய் சிலிர்த்தது எல்லோருக்கும்.
அங்கே அம்மன் சந்தனகாப்பில் அழகாக சிரித்துக் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். சாரதாவுக்கு என்னவோ அம்மனே வந்து நேரிடையாக அவரது பூஜையை ஏற்றுக் கொண்டு, அவரைப் பார்த்து நானிருக்கிறேன் என சிரிப்பதைப் போல் இருந்தது.
பூசாரி அம்மனுக்கு தீபாராதனைக் காட்டியதும், அனைவரும் கைகூப்பி அம்மனை மனதார வணங்கி பிரார்த்து கொண்டனர்.
“அனி நல்லா வேண்டிக்கோடா… மனசுல…” என்றார் சாரதா.
“ம்மா நானும் நல்லா வேண்டிக்கவா…? என்றாள் கனிமொழி.
“எதுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி படிப்பிலிருந்து எஸ்கேப் ஆகவா…? என்றாள் பூங்குழலி சிரித்துக்கொண்டே அவள் தலையில் நறுக்கென்று கொட்டி”.
“தலையில கொட்ற. இரு அம்மாகிட்டயே சொல்றேன் உன்னை..” என முறைத்தாள் பூங்குழலியை பார்த்து.
“சொல்லு. நானும் சொல்றேன் அம்மாகிட்ட. இவளுக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கறாளாம் ம்மான்னு”.
“வ்வா… ” என வாயில் கைவைத்த பூங்குழலி, “நான் எப்போடி அப்படி சொன்னேன்” என முறைத்தாள் பூங்குழலியை.
“இதோ இப்ப சொன்னயே, நானும் வேண்டிக்கட்டுமான்னு…” என்றாள் பூங்குழலி குறுநகையுடன்”.
“பொய்… பொய்… நான் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணனும்னு…, வேண்டிக்கவான்னு கேட்டேன்”.
“ஓஹ் அப்படியா சொன்ன. நான் கூட நீ மொட்டையா வேண்டிக்கவான்னு கேட்கவும், கல்யாணத்துக்குதான் கேட்கறியோன்னு நினைச்சேன்டி” என்றாள் கண்சிமிட்டி குறும்புடன்.
“போடி உன் பேச்சு கா. எப்பப்பாரு தலையில கொட்டிட்டே இருக்க” என பூங்குழலியை முறைத்துவிட்டு சாரதாவின் பக்கத்தில் நகர்ந்து நின்றுகொண்டாள் கனிமொழி. சாரதா அங்கு சாமி கும்பிடுவதில் மும்முரமாக இருந்ததால் இவர்களது முனுமுனுப்பைக் கேட்கவில்லை.
“ஆரம்பிச்சுட்டீங்களா… உங்க சண்டைய. ஏன்டி அவள்கிட்ட வம்பு வளர்த்துட்டு… இருக்க” என்றாள் அமுதினி.
“அதெல்லாம் கண்டுக்காத. சும்மா டைம்பாஸ்க்கு…” என அமுதினியைப் பார்த்து கண்சிமிட்டினாள் பூங்குழலி.
“எப்பப்பாரு அவளை சீண்டி விடறதே உனக்கு வேலையா போச்சு” என அமுதினியும் புன்னகைத்துக் கொண்டாள்.
அதற்குள் பூசாரி தீபாராதனை தட்டை கொண்டு வரவும் எல்லோரது கவனமும் அங்கே குவிந்தது. கற்பூர ஆரத்தியை தொட்டு வணங்கி நெற்றியில் குங்குமமும் வீபூதியும் பூசிக் கொண்டு கோவில் பிராகாரத்தை சுற்றி வந்து விழுந்து வணங்கினர்.
பூசாரி படைத்து கொண்டு வந்து கொடுத்த சர்க்கரைப் பொங்கலை, சின்ன வாழையிலைத் துண்டுகளில் வைத்து கோவிலில் இருந்த எல்லோருக்கும் கனியிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னார் சாரதா.
எல்லோருக்கும் மனது நிறைவாக இருந்தது. அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து, எடுத்துப் போயிருந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து, சந்தோஷமாக வீட்டுக்கு கிளம்பினர்.
தொடரும்.
error: Content is protected !!