Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 8

“கௌதம் ஏதாவது ஒரு முடிவு சொல்லு.  எந்த பொண்ணு போட்டோவ காட்னாலும், ஏதாவது ஒன்னு சொல்லி வேணான்ற.  உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க?  அப்படி என்னதான் இருக்கு உன் மனசுல?  அதையாவது ஓபனா சொல்லு”

“இன்னிக்கு எனக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்.  இதுக்கு மேல எனக்கு பொறுமை கிடையாது” என்றார் ஷ்யாமளா.

கௌதம்க்கு ஷ்யாமளா பேசியதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது.  அவர் சீரியசாக பேச பேச இவன் சிரித்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.  “ம்மா…… என்ன நீங்க சின்னப் பிள்ளை மாதிரி அடம் பண்றீங்க” என சிரித்தான்.

ஷ்யாமளா அவனை முறைத்தார்.  “என்னைப் பார்த்தா உனக்கு சின்னப் பிள்ளை மாதிரி இருக்காடா?  நீ தான் இன்னும் உன்னை சின்னப் பையன்னு நினைச்சிட்டிருக்கே.  உனக்கு என்ன வயசாகுதுன்னாவது தெரியுதா?   உனக்கு அடுத்து ஒருத்தன் இருக்கான்.  அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?”



Advertisement

அர்விந்த், “தேங்க்ஸ் ம்மா.  நீங்களாவது என்னை மறக்காம இருக்கீங்களே?”  என்றான் முகத்தை பாவனையாக வைத்துகொண்டு.

அவனின் கிண்டலில் அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.  “சும்மாயிருடா நீ வேற” என அவன் முதுகில் ஒரு அடி வைத்தார்.

“உண்மையை சொன்னா அடிப்பீங்களா…?” என்றான் அரவிந்த் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

Advertisement

“ம்ப்ச்.  நீ வேற நேரங்காலம் தெரியாம விளையாடிட்டு.  கம்னிரு அரவிந்த்”

Advertisement

அரவிந்த், “ஹ்ம்ம்… நல்லதுக்கே காலம் இல்லை.  நல்லது சொன்னா யார் கேட்கறீங்க?  என்னைக் காரணமா வச்சாவது அண்ணன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னேன்.  என் மனசு யாருக்குப் புரியுது” என்றான் கேலியுடன்.

ஷ்யாமளா அவனை முறைத்தார்.  கௌதம் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.  “ம்மா என்னை முறைக்காதீங்க.  அவன் கிட்ட பேசுங்க.  என்னை திட்டறன்னு, அங்க கோட்டை விட்டுடாதீங்க.  அதான் சாக்குன்னு அவன் எஸ்கேப் ஆயிடுவான்.  தோ பாருங்க பேசிட்டு இருக்கும்போதே எழுந்துக்கறான்.  அவனை பிடிங்க…” என கௌதமின் தோளை பிடித்து அழுத்தி உட்கார வைத்தான் அரவிந்த்.

உண்மையில் கௌதம் அங்கிருந்து எழுந்திடதான் நினைத்தான்.  அதற்குள் அரவிந்த் அவனைக் கோர்த்து விட்டிருந்தான்.  இப்பொழுது கௌதம் அரவிந்தை முறைத்தான், சும்மாயிருக்கமாட்டியா என.

Advertisement

“என்னடா அரவிந்தா…?  இப்படி உன்னை ஆளாளுக்கு முறைக்கிறாங்களே, நீ அவ்வளவு அழகாவாடா இருக்க.  ஹம்ம்… ஏதாவது ஒரு நல்ல ஃபிகர் என்னைப் பார்த்தாலும் புரயோஜனம் இருக்கும்.  நீங்க பார்த்து எனக்கு என்ன ஆகப் போகுது?” என்றான் கேலியாக.

கௌதம் அரவிந்தனின் தோளில் ஒன்று வைத்து “டேய் காமடி பண்றனு மொக்கை போட்டுட்டிருக்காத.  அடங்குடா” என்று  சிரிப்புடன் கூறியவன், திரும்பி அன்னையைப் பார்த்தான்.   ஷ்யாமளா கௌதமை பார்த்து “பேசிட்டிருக்கும் போதே எங்க எழுந்து போறே…?” என முறைத்தார்.

“ம்ப்ச்… ம்மா… ஏன் இவ்வளவு ப்ரஷர் குடுக்கறீங்க?” என்றான் கௌதம் சலித்துக்கொண்டே.

ஷ்யாமளா “எதுடா ப்ரஷர்?  எத்தனை வருஷமா உன்கிட்ட கல்யாணத்துக்கு பேசிட்டிருக்கேன்?  வர பொண்ணை எல்லாம் வேணாம் வேணாம்னு தடுத்துட்டு இருக்க.  கொஞ்சமாவது என் கஷ்டம் தெரியுதா…?” என வருத்தத்துடன் கண்ணை மூடிக் கொண்டார்.

ஷ்யாமளாவின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்ததும், “ம்ப்ச் இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கீங்க? என்றான் அலுப்பாக.

கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தவர், “எதுக்குன்னு உனக்கு தெரியாதா?” என்றார் அமைதியாக.

அவனுக்கும் புரிந்ததுதான், அன்னையை படுத்துகிறோம் என.  எவ்வளவு நாள் கல்யாணம் வேண்டாம் என தள்ளிப் போட முடியும்.  நிச்சயம் தான் திருமணம் செய்யாமல் அரவிந்தும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான்.

எப்படியும் செய்துதான் ஆக வேண்டும் என தெரியும்.  இருந்தாலும் தந்தையைப் போல் ஒருத்தி தனக்கு மனைவியாக வந்துவிட்டால் என்ற பயமும் இருந்தது.  அதுதானே அவன் திருமணத்தை தள்ளிப் போடுவதற்கான காரணமும்.  இதை வெளிப்படையாகவும் பேச முடியாது.

கௌதம் நெற்றியைக் கீறியவாறே ஷ்யாமளாவை சிறிது நேரம்  பார்த்தவாறு இருந்தவன், “இப்ப என்ன?  நான் கல்யாணம் பண்ணிக்கனும்.  அதானே உங்களுக்கு.  ஓகே.  பாருங்க” என்றுவிட்டான் அன்னையிடம்.

ஷ்யாமளாவுக்கு நம்பமுடியவில்லை.  “கௌதம்!  நிஜமாவா சொல்ற” என ஆச்சர்யத்துடன் கேட்டவர்.  “அப்புறம் பேச்சு மாற கூடாது” என்றார் அவனைப் பார்த்து இன்ப அதிர்ச்சியுடன்.

“மாறமாட்டேன்.  ஆனால் ஒரு கண்டிஷன்”.

என்ன… என பார்த்தார் அவனை.

“இந்த பொண்ணு பார்க்க வர சொல்லி கூப்பிடறது.  அது இதுன்னு என்னை போட்டு எதுக்கும் டார்ச்சர் பண்ண கூடாது.  நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்குங்க”.

ஷ்யாமளாவுக்கு அவன் விவாகத்திற்கு ஒத்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், இது என்ன இவன் பொண்ணு கூட பார்க்க வரமாட்டேன்னு  சொல்றானே என பார்த்தார்.

“நீ இல்லாம எப்படி பொண்ணு பார்க்கறது?  உனக்கு பொண்ண பிடிக்க வேணாமா….?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.  உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்”.

“டேய் விளையாடாத.  மாப்பிள்ள இல்லாம எப்படிடா பொண்ணு பார்க்கறது…?”

“அதான் உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்னு சொல்லிட்டேனில்ல”.

“நானா கட்டிக்கப் போறேன்.  கட்டிக்கப் போறவன் நீதான”.

“அப்படி சொல்லுங்க மா.  உனக்காக இல்லன்னாலும், பொண்ணு வீட்ல கேட்க மாட்டாங்களா. மாப்பிள்ளைய பார்க்கனும்னு.  அதுக்கு என்ன சொல்றது…?  ஒழுங்கா அம்மா சொல்றத கேளு…” என்றான் அரவிந்த்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது.  இதுக்கு ஒகேன்னா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்” இதுதான் என் முடிவு என்பது போல அழுத்தமாக உட்கார்ந்திருந்தான் கௌதம் ஏதும் பேசாமல்.

ஷ்யாமளா தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து கொண்டார் சோபாவில்.   மகன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டானே என சந்தோஷப்படுவதா…?  இல்லை அவனது கிறுக்குத் தனத்தை நினைத்து வருந்துவதா என தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார் ஏதும் பேசாமல்.

அவரையே பார்த்திருந்தவன், “அதான் ஓகே சொல்லிட்டனே.  அப்புறம் ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க” என்றான் கௌதம்.

“ம்ப்ச் போடா.  நீ வேணாம்னு சொன்னாலும் பொண்ணு வீட்ல இதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்களா?  பொண்ணு மாப்பிள்ளையை பார்க்காம கல்யாணத்துக்கு ஒத்துக்குமா…?” என்றார் மகனை முறைத்துக் கொண்டே.

“எனக்கு அதெல்லாம் தெரியாது.  நீங்க என்ன சொன்னீங்க?  கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.  மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னீங்கல்ல.  என்னோட விருப்பத்தை நான் சொல்லிட்டேன்.  அப்புறம் உங்க விருப்பம்”.

“டேய் அப்படிலாம் உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாது.  ஏதாவது உளராத”.

நீங்க ஏதாவது செஞ்சுக்கோங்க.  நான் என் விருப்பத்தை சொல்லிட்டேன் என அசையாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.  ஷ்யாமளாவுக்கு எரிச்சலாக வந்தது, இவன என்ன பண்ணலாம். கல்யாணம் வேணான்றதுக்கு எப்படிலாம் என்னை லாக் பண்றான்.

அவருக்கு கொஞ்ச நாளாகவே மனதில் ஒரு எண்ணம் முளை விட்டிருந்தது.  இவனிடம் பேசினால் ஒத்துக் கொள்வானா… என யோசித்தவர்.  சரி கேட்டு விடுவோம் என முடிவு செய்து அவனைப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார்.

“பொண்ணு பார்க்க நீ வரமாட்ட…?”

“ம்ஹூம்…”

“நல்லா யோசிச்சுதான சொல்ற…?  நீ பார்க்க வேணாமா?  நான் பார்த்து முடிவு பண்ணா, ஓகேவா உனக்கு?”

“ஹ்ம்ம்…”

“அப்புறம் பேச்சு மாறக் கூடாது.  நான் பார்த்து முடிவு பண்ணதுக்கு அப்புறம் எதுவும் மாத்தி பேசகூடாது.  இது விளையாட்டு விஷயம் இல்ல.  நல்லா யோசிச்சு சொல்லு”.

அரவிந்த் மனதில் ஆஹா… அம்மா என்னவோ ப்ளான் பண்ணிட்டாங்க போல என நினைத்தான்.

கௌதம் யோசனையாக நெற்றியை சுருக்கி ஷ்யாமளாவை கண்ணெடுக்காமல் சில நொடிகள் பார்த்திருந்தவன், “ம்ஹூம்.  எதுவும் மாறமாட்டேன்.   நீங்க பாருங்க.  என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா போதும்” என்றான்.

“ஓகே.  அப்ப அமுதினியை உனக்கு பார்க்கட்டுமா?  கல்யாணம் பண்ணிக்கிறியா…?”

“அமுதினியா… யார்… அது?” என்றான் கௌதம்.

“நம்ம ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றாளே”

“ஓஹ்…” என்றவனுக்கு இது என்ன புதுக்கதை எனதான் இருந்தது.  ரக்‌ஷிதாவை எதிர்பார்த்திருந்தான்.  அவளுக்கும் தனக்கும்கூட நிரம்ப வயது வித்தியாசம் இருந்தது.  அவனும் இதுவரை ரக்‌ஷிதாவை அப்படி எண்ணி பார்த்ததில்லை.  தங்கை மாதிரிதான் அவனது மனதில் அவள் பதிந்திருந்தாள்.  அன்னை பேசினால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என எண்ணியிருந்தான்.

ஆனால் இப்படி ஷ்யாமளா திடுமென்று அமுதினியைப் பற்றி அபிப்ராயம் கேட்பார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  அவனுக்கும் இது அதிர்ச்சிதான்.  யோசனையாக நெற்றியை கீறினான் அவரைப் பார்த்து.

பூங்குழலியின் விவாகத்துக்கு சென்று வந்ததிலிருந்து, ஷ்யாமளாவுக்கு அமுதினியின் மீதான ஆசை மனதில் துளிர் விட்டிருந்தது.  அன்று அவளை மணப்பெண்ணைப் போல அலங்காரத்தில் பார்த்ததும், கௌதம்கும் இதுபோல அழகான ஒருத்தி மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை அவரது மனதில் எட்டிப் பார்த்தது.  அது இன்று வாய் மொழியாக வெளியே வந்திருந்தது.

அழகு, குணம் என எல்லாம் இருந்தாலும் மகன் சம்மதிப்பானா என்ற நெருடலும் இருந்தது.  அவன் தனக்கு மனைவியாக வருபவள் தனக்கு இணையாக படித்திருக்க வேண்டும் என நினைப்பானோ என்ற தயக்கம் இருந்தது.

இப்பொழுது இவன் இப்படி சொல்லியதும் அவருக்குத் சட்டென மனதில் உதித்தது அமுதினியின் உருவம்தான்.  அர்விந்த் கூட “சூப்பர் சாய்ஸ் ம்மா….” என்றான் சந்தோஷமாக.

கௌதம்க்கு எதுவும் தோன்றவில்லை.  அமுதினியைப் பற்றி எந்த எண்ணமும் அவன் மனதில் இருந்ததில்லை.  அவளை இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் பார்த்ததை தவிர வேறெதுவும் அவன் மனதில் இல்லை.

அம்மா எதையும் யோசிக்காம பேச மாட்டாங்க என சிந்தித்தவன், “உங்களுக்குப் பிடிச்சிருந்தா, எனக்கு ஓகே” என்றுவிட்டான் சம்மதமாக தலையசைத்து.

ஷ்யாமளா “டேய்…” என ஆச்சரியத்தில் கண்களை விரித்து விட்டார்.  “நிஜமாதான சொல்ற.  சாதாரண விஷயமில்லடா.  பின்னாடி எதுவும் மறுத்து பேசமாட்ட இல்ல…” என்றார் அவனைப் பார்த்து வாகாக திரும்பி அமர்ந்துகொண்டே சந்தோஷமாக.

அன்னையின் ஆச்சரியத்தையும் அவரது செய்கையையும் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.  “என்னமா ரியாக்‌ஷன் இது.  சின்னப்பிள்ள மாதிரி ஒன்னொன்னுத்துக்கும்” என்றவனுக்கும் தனது திருமணத்திற்காக அன்னை எத்தனை ஏங்கியிருக்கிறார் என புரிந்து கொள்ள முடிந்தது.

பின்னே இருக்காதா?  இத்தனை நாட்கள் கல்யாணம்ற பேர்ல இவன் செய்த அலப்பறைகளை பார்த்திருந்தவருக்கு,  இது ஆச்சர்யமே.   மகன் எங்கே ஒத்துக்கொள்ளப் போகிறான், இதற்கும் மறுப்புதான் சொல்லுவான் என நினைத்து கேட்டவருக்கு, அவன் உடனே சம்மதித்தது ஆச்சர்யத்துடன், சந்தோஷத்தையும் கொடுத்தது.

கௌதமிற்கு அன்னையின் முகத்தில் தெரிந்த பாவனை சிரிப்பையே தந்தது.  “ரிலாக்ஸ் ம்மா….. நீங்க பில்டப் கொடுக்கற அளவுக்கு எல்லாம் பெரிய விஷயம் இல்ல.  நீங்க யோசிக்காம எதையும் பேசமாட்டீங்கன்னு தெரியும்”.

“என்னை முழுசா தெரிஞ்சவங்க நீங்க.  என்னைவிட எனக்கு என்ன வேணும்னு, உங்களுக்கு நல்லாத் தெரியும்.  சோ நான் உங்களை நம்பறேன்.  ம்ம்…” என அவரின் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

மகனது வார்த்தையைக் கேட்டதும், ஷ்யாமளாவுக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.  அவன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்.  எப்படி உணர்ந்தார் என சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.  கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவன், அதற்கு சம்மதம் சொன்னது மட்டுமில்லாமல், திடீரென அவரின் பொறுப்பில் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக எடுத்துக் கொடுத்தது போல இருந்தது அவருக்கு.

அடிவயிற்றில் பால் வார்த்தது போல என சொல்லுவார்களே, அப்படிதான் இருந்தது அந்த தாய்க்கு

அன்னையின் சந்தோஷம் மகனையும் தொற்றியதுபோல.  அவரது தோளை அணைவாக பிடித்தவன்,  “ம்மா.. இப்படி பார்க்காதீங்க.  எனக்கே வெட்கம் வருது” என்றான் அவரது நெற்றியில் முட்டி.

அப்படியே அவனது கன்னத்தை இரு கைகளாலும் பற்றியவர் அவன் நெற்றியில் முத்தம் வைத்து, “குமுதா ரொம்ப ஹேப்பி…” என்றார் புன்னகையுடன்.

அரவிந்த் சந்தோஷ கூச்சலுடன் கையை உயர்த்தி “ஹேய்…” என  சத்தமிட்டான் ஷ்யாமளா இப்படி சொன்னதும்.

ஷ்யாமளா சொன்னதற்கு பிறகுதான் உணர்ந்தார் தான் என்ன பேசினோம் என்றே.  அவருக்கே வெட்கமாகி விட்டது அரவிந்தின் கூச்சலில்.  அச்சோ பசங்ககிட்ட என்ன பேசிட்டிருக்கேன் என அழகாக முகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கையால் முகத்தை மூடிக்கொண்டார் புன்னகையுடன்.

“ஹா… ஹா… ம்மா… என்ன பாஷை இது?  எப்பலேர்ந்து இப்படிலாம் பேச ஆரம்பிச்சீங்க?  இவன் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்கறீங்களா…?  பாருங்க உங்களையும் கெடுத்து வச்சிட்டான்” என்றான் கௌதம் சத்தமாக சிரித்தவாறு.

“போடா…” என வெட்கப்பட்டுக்கொண்டே அவன் தோளில் தட்டியவர் அப்படியே கௌதமின் தோளில் சாய்ந்து முகத்தை மூடிக் கொண்டார்.

மகன்களுக்கும் தெரியும் அன்னை இப்படியெல்லாம் பேசி விளையாடக் கூடியவர் இல்லை என.  சந்தோஷத்தால் ஏற்பட்ட உணர்வுக் குவியலின் பீறிடலால் அவரை அறியாமலேயே பேசியிருந்தார்.

எப்பொழுதும் கம்பீரமாகவும், நிமிர்வுடனும் தாயை பார்த்து பழகிய மகன்களுக்கு அன்னையின் இந்த புதிய பரிணாமம் நெகிழ்வைக் கொடுத்தது.  கண்ணெடுக்காமல் அவரையே பார்த்திருந்தனர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்று ஞாயிறு என்பதால் சாரதவுக்கு காலையில் அரக்கபரக்க சமைக்கும் வேலையில்லை.  காலையில் எப்பொழுதும் போல் எழுந்தவர், நிதானமாக குளித்து, விளக்கேற்றி சாமி கும்பிட்டு வந்து, காப்பியுடன் உட்கார்ந்தார் ஹாலில்.

அமுதினியும் எழுந்து வந்து ஹாலில் உட்கார்ந்தாள்.  “இன்னிக்கு லீவுதான கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் இல்ல, ஏன், இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?” என்றார் அவளைப் பார்த்து.

அன்னையின் பக்கத்தில் போய் அமர்ந்து அவர் மடியில் படுத்துவிட்டாள் மறுபடியும்.  சாரதா அவள் தலையை கோதிவிட்டுக் கொண்டே “உள்ள போய் படேன்டா….” என்றார் அவளிடம்.

“ம்ம்… கொஞ்ச நேரம் ம்மா….”

அதற்குள் கனி எழுந்து வந்திருந்தாள்.  தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தவளது கையில் அமுதினியின் போன் இருந்தது.  “அக்கா உனக்கு கால் வந்தது.  யாருன்னு பாரு” என அமுதினியிடம் கொடுத்துவிட்டு,  அமுதினியை சாரதாவின் மடியிலிருந்து எழுப்ப முயற்சித்தாள்.

“எழுந்திரு.  நான் தான சின்னப்பொண்ணு.  நான் தான் அம்மா மடியில படுப்பேன்” என போட்டிக்கு நின்றாள் அமுதினியிடம்.

“முடியாது போடி.  எப்பவும் நீ தான அம்மா கூட ஒட்டிட்டு திரியற. எப்பவாவது தான் நான் அம்மா கூட இருக்கேன்” என படுத்த வாக்கிலேயே போனை கையில் வாங்கியவள் யார் அழைத்தது என பார்த்தாள்.  ஷ்யாமளா அழைத்திருந்தார்.

அதனை பார்த்ததும் சடக்கென எழுந்து உட்கார்ந்து, அவருக்கு அழைப்பு விடுத்தாள்.

அவள் எழுந்ததும் எங்கே மறுபடியும் படுத்து விடுவாளோ என உடனே கனிமொழி சாரதாவின் மடியில் படுத்துவிட்டாள்.

ஷ்யாமளாவிடம் போனில் பேசி வைத்தவள் யோசனையாக சாரதாவை திரும்பி பார்த்தாள்.  யார் என்றார் சாரதா கண்களால்.

“டாக்டர் ஷ்யாமளா ம்மா..”

“என்னவாம்…? வர சொல்றாங்களா…?  இன்னைக்கு லீவ்தான உனக்கு”. .

“ஹ்ம்ம் லீவ்தான்…” என இன்னும் யோசனையில் இருந்தாள்.

“என்னடா…?”

“இன்னைக்கு ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்றாங்க.  ஏதோ முக்கியமான விஷயம்னு சொல்றாங்க…”

கேள்வியாக நெற்றியைச் சுருக்கிய சாரதா, “எதுக்கு? அவங்க பையனுக்கு  கல்யாணமா…?  பத்திரிக்கை வைக்க வராங்களா…?” என்றார் மகளிடம்.

ஏன்னு மண்டையை உடைத்தவளுக்கு, ஓஹ்…. அப்படியும் இருக்குமோ என நினைத்தவள், “தெரியல ம்மா.  ஒன்னும் சொல்லல” என்றாள்.

ஷ்யாமளா கால் செய்து, “இன்னைக்கு சாயந்திரம் உன் வீட்டுக்கு வரேன், ப்ரீயா” என கேட்டதும், எதற்கு என கேட்க நினைத்தாலும், வீட்டுக்கு வரவா என கேட்பவரை “வாங்க” என்று விட்டாள்.

இவளையே பார்த்துக் கொண்டிருந்த சாரதா “என்னடா..?” என்றார் மகளின் முகம் வாடியதைப் பார்த்து.  ஒன்றும் இல்லை என தலையை அசைத்தவள் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளுக்கு மனதில் ஓஹ் அந்த டாக்டருக்கு கல்யாணமா எனதான் இருந்தது கௌதமை நினைத்து.  அப்படியிருந்தா ஹாஸ்பிட்டல்லே இன்விடேஷன் கொடுத்திருக்கலாமே.  ஏன் வீட்டுக்கு வரனும்?

அன்று மாலை ஷ்யாமளா சொன்னது போல் அரவிந்தை அழைத்துக் கொண்டு அமுதினியின் வீட்டிற்கு வந்திருந்தார்.  எதற்கு என்று தெரியாத போதும் சாரதாவம் பூபதியும் சந்தோஷமாகவே வரவேற்றனர்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!