Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 12

ரிசப்ஷனுக்கு மகேஷ்வரனுடன் சித்தார்த்தும் வந்திருந்தான்.  வரவேற்பில் நின்றிருந்த பூபதியும் சாரதாவும் அவர்களை கைகூப்பி சந்தோஷமாக வரவேற்றனர்.

சித்தார்த்தின் கண்கள் கனிமொழியை எதிர்பார்த்து ஏமாந்தது.  அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் ரிசப்ஷனுக்கு தந்தை அழைத்ததும் மறுக்காமல் வந்ததுகூட.

பூபதி அவர்களை மரியாதை நிமித்தம் அழைத்துச் சென்று முதல் வரிசையில் உட்கார வைத்து சில வார்த்தைகள் பேசியிருந்துவிட்டு வந்தார்.

சென்னையில் புகழ்பெற்ற ஸ்டார் ஹோட்டலில்தான் ரிசப்ஷன் வைத்திருந்தனர்.  ஹால் முழுக்க கூட்டம் நிரம்பியிருந்தது.



Advertisement

அமுதினி அழகோவியமாக மேடையில் கௌதமுடன் நின்றிருந்தாள்.  கௌதம்கூட நேற்றைக்குவிட இன்று சற்று முக மலர்ச்சியுடன் நின்றிருந்தான். மணமக்களின் ஜோடிப் பொறுத்தம் காண்போரைக் கவர்ந்தது. 

உறவினர்களுடன் சேர்ந்து மணமக்களின் நண்பர்கள், பூங்குழலி, கனிமொழி, அரவிந்தனின் நட்புகள் என இளசுகளின் வரவும் அதிகமாக இருந்தது.

ஷ்யாமளாவின் தொழில்முறையில் தெரிந்தவர்கள், நண்பர்கள், மேலும் அவரது ஹாஸ்பிட்டலில் வேலை செய்வோர், பூபதியுடன் வேலை செய்வோர் என ரிசப்ஷனுக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது.

Advertisement

மணமக்களை காண்பதற்காக ஒரு கும்பலே மேடை ஏறியது.  மேடை ஏறிய அத்தனை பேரும் அமுதினியின் வயதை ஒத்த பெண்கள்.  அதில் பாதி பெண்களுக்கு மேல் திருமணமும் முடிந்திருந்ததுபோல.  பார்த்தாலே தெரிந்தது.

Advertisement

சந்தோஷமாக மணமக்களிடம் வந்தவர்கள் கௌதமைப் பார்த்து “ஹாய்..” என்றார்கள் கோரஸாக சிரித்துக் கொண்டே.  கௌதமுக்கு இத்தனைப் பெண்களை சேர்த்து கூட்டமாக மேடையில் பார்த்ததும் திணறித்தான் போனான்.  அது அவன் முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.

“இவங்க எல்லாம் என்னோட ப்ரண்ட்ஸ். ஸ்கூல் காலேஜ்ல என் கூட படிச்சவங்க” என அமுதினி அவனுக்கு வந்திருந்தவர்களை மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினாள்.

தோழிகள் ஒன்று சேர்ந்தால் கேட்க வேண்டுமா…?  கிண்டல், கேலி, கலாட்டா என அந்த இடமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

Advertisement

வந்திருந்த தோழிகள் எல்லோரும் மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்து, போட்டோ எடுத்து என சில நிமிடங்கள் அந்த இடமே சந்தோஷ அதிர்வலையில் மூழ்கி திளைத்தது.

பெண்கள் எல்லாம் மேடையிலிருந்து இறங்கியதும் தான் கௌதமுக்கு சுவாசம் சீராகி முகம் தெளிந்தது.  ஊப்.. என தன்னையறியாமலேயே மூச்சை இழுத்து விட்டவன், பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை ஒத்தி எடுத்தான்.

இத்தனை நேரம் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அமுதினிக்கு குறுநகையில் உதடு விரிந்தது.  அதை உணர்ந்தவன் போல பட்டென கௌதம் இவளைத் திரும்பி பார்த்ததும், அச்சோ என நாக்கை கடித்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.  மனைவியின் செயலில் அவனுக்கும் முகம் மலர்ந்தது.

வந்தவர்கள் எல்லாம் மணமக்களைப் பார்த்து வாழ்த்தி, பரிசு கொடுத்து, போட்டோக்கு போஸ் கொடுத்து என சாப்பிடச் சென்று கொண்டிருந்தனர்.

ரிசப்ஷன் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.

இங்கு வருவதற்கு முன்னால் காபி குடித்தது.  தொண்டையெல்லாம் வறண்டு போய், தாகமாக இருப்பது போல் இருந்தது அமுதினிக்கு.  சில்லென ஏதாவது குடித்தால் தேவலை போல இருந்தது.

வீட்டினர் யாராவது இருந்தால் குடிக்க ஏதாவது கேட்கலாம் என அவளது கண்கள் சுற்றும் முற்றும் குடும்பத்தினரைத் தேடி அலைபாய்ந்தது.  ஒருத்தரும் கண்ணுக்கு புலப்படவில்லை.

நெடு நேரமாக இவள் பக்கத்தில் நின்றிருந்த குழலிகூட இப்பொழுதுதான் அவளது வீட்டினருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக சென்றிருந்தாள்.

இவள் தவிப்பை பார்த்துக் கொண்டிருந்தவன், பொறுக்க முடியாமல் அவள்புறம் குனிந்து “என்ன? ஏதாவது வேணுமா?” என்றான் அக்கறையாக.

முதன் முதலாக அவன் அவளிடம் தயக்கத்தை உடைத்து தானாகவே வந்து பேசுகிறான்.  அவன் கேட்டது கூட அவள் காதில் விழவில்லை.   கௌதம் தன்னிடம் பேசியதை நம்ப முடியாமல் அவனையே பார்த்திருந்தாள்.  அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

எதுக்கு இப்ப இப்படி பார்க்கிறா? ஏதாவது வேணுமான்னுதான கேட்டேன்.  அதுக்கு ஏன் இந்த முழி முழிக்கிறா என அவனும் அவளைதான் கேள்வியாக பார்த்திருந்தான்.

ஆனால் மேடையின் கீழ் இருப்போருக்கு இவர்களின் இந்த நெருக்கமும் பார்வையும் ஏதோ காதல் பரிபாஷை புரிவது போல ரசனையாக இருந்தது.  ஏதேச்சையாக இங்கு பார்த்த அரவிந்தன் பக்கத்தில் உறவினரிடம் பேசியபடி நின்றிருந்த ஷ்யாமளாவை அழைத்து காண்பித்தான் கண்களால்.

நேற்றிலிருந்து மகனை மனதிலேயே வறுத்தெடுத்துக் கொண்டிருந்த ஷ்யாமளாவுக்கு மனதில் நிம்மதியும் முகத்தில் புன்னகையும் வந்திருந்தது.

இந்த திருமணம் கூடியதிலிருந்து மகனின் அலப்பறைகளை பொறுத்திருந்தவருக்கு இப்பொழுதுதான் மனம் சற்று குளிர்ந்தது.

ஷ்யாமளாவுக்கும் கௌதமுக்கும் இடையில் இத்தனை நாட்களாக மாட்டிகொண்டு தவித்துக் கொண்டிருந்த அரவிந்தனுக்கு ஹப்பாடா எனதான் இருந்தது. ம்ம்… பரவாயில்ல அண்ணி இனிமே இவனைப் பார்த்துக்குவாங்க என ஆசுவாசப்பட்டான்.

அவர்களுக்கு முன்னிருந்த கேமராகூட இந்த தருணத்தை மிஸ் செய்யாமல் அழகாக பல கோணங்களில் படம் பிடித்து தனக்குள் சேமித்துக் கொண்டது.

அடுத்து மேடையேறி இவர்களைக் பார்க்க வந்தவர்களின் சலசலப்பில்தான் இருவரும் சுயம் வந்து திரும்பி நின்றனர்.

அமுதினிக்கு இன்னும் நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை.  அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்த டென்ஷனில் முகத்தில் வியர்வை துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வழிய ஆரம்பித்தது.

வந்தவர்களையும் கவனித்து பேசிக்கொண்டே, மனைவியையும் ஓரக்கண்ணால் அடிக்கடி நோட்டமிட்டு கொண்டிருந்தவனுக்கு அவளது முகத்தில் வழிந்த வேர்வையில் எங்கே மேக்கப் கலைந்துவிடுமோ என அவனது பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.

எதிர்பாராமல் இப்படி அவன் சட்டென கர்ச்சீப்பை எடுத்து நீட்டியதும் ஆங் என கண்களை விரித்து ஆச்சர்யமாக பார்த்தாள்.

அவளது பார்வை இலேசாக அவனுக்கு புரிந்ததுபோல.  அதில் சற்று அவனுக்கும் புன்னகை வந்தது.  இன்னும் தன் கையில் இருந்த கர்ச்சீப்பை வாங்காமல் தன்னையே விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தவளை, கண்களால் கையிலிருந்த கர்சீப்பை காட்டி வாங்கிக் கொள்ளும்படி ஜாடை செய்தான்.

டேய் ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சி என்னால முடியல எனதான் இருந்தது அமுதினிக்கு.  கையை நீட்டி வாங்கியவள் கணவனை பற்றிய சிந்தனையில் தன்னை மறந்து நெற்றியை அழுத்தி துடைக்க ஆரம்பித்தாள்.

அதில் அவளது மேக்கப் கலைவதைப் பார்த்தவன், “ஹேய்… என்ன பண்ற?  வெயிட்” என சொல்லி அவசரமாக கண்களைத் திருப்பி யாராவது தெரிகிறார்களா என பார்வையை சுழலவிட்டான்.

அரவிந்தன் மேடைக்கு கீழே எதிரில் நின்றுகொண்டு, யாரோ ரிசப்ஷனுக்கு வந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.  எதிரில் இருந்த கேமரா மேனிடம் சொல்லி அரவிந்தனை அழைக்க சொன்னான்.

அரவிந்தன் மேடைக்கு வந்ததும், “இவங்க வீட்ல யாராவது இருந்தா வரச்சொல்லுடா” என்றான்.

கௌதம் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு சொல்லியதில் என்னவோ என பயந்தவன், “என்னாச்சு அண்ணி…? என பதட்டப்பட்டான்.

“டேய் அவங்களை வரச்சொல்லுன்னா, இங்க நின்னு என்னன்னு கேட்டுட்டிருக்க…?” என அரவிந்தனை முறைத்தான்.

என்னடா இவன்?  எதுக்குன்னே சொல்லாம, இப்படி பாய்ஞ்சா… என புலம்பிக்கொண்டே அரவிந்தன் இறங்கி சென்றான்.

இதையெல்லாம் வாய் பிளக்காத குறையாக பக்கத்தில் இருந்த அமுதினி பார்த்து கொண்டிருந்தாள்.  ம்ஹூம் இன்னைக்கு இவனுக்கு என்னவோ ஆயிடுச்சு என அதிர்ச்சி குறையாமலே அவனை ஓரக் கண்ணால் பார்ப்பதும் நேரே பார்ப்பதுமாக நின்றிருந்தாள்.

முதலில் பூங்குழலியைத்தான் தேடிச் சென்றான் அரவிந்தன்.  அவள் அவளது குடும்பத்தாருடன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,  அவளை விட்டு கனிமொழியை தேடி சென்றான்.

அவள் சாப்பிடும் இடத்தில் யாரோ உறவினரை உபசரித்து கொண்டிருந்தாள்.  மஸ்டர்ட் கலர் லெஹங்காவில் துறு துறு என கண்ணைப் பறித்தவளைக் கண்டவன், கொல்றாயா… என நினைத்துக் கொண்டே அவள் அருகில் வந்து நின்றான்.

அரவிந்தன், “மொழி அண்ணி கூப்பிடறாங்க.  வா” என்றான்.

“இப்பதான அக்காகிட்ட இருந்து இங்க வந்தேன்.  அங்க குழலி இருப்பா. அவள்கிட்ட சொல்லுங்களேன்.  அப்பா இவங்களை கூட இருந்து கவனிக்க சொல்லிருக்காங்க”.

“உங்க குழலி அக்கா, அவங்க பேமிலியோட இருக்காங்க.  அங்க போய் பார்த்துட்டுதான் இங்க வரேன்.  நீ வா”.

“சரி நீங்க போங்க.  டென் மினட்ஸ்.  இவங்களை சாப்பிட வைச்சுட்டு வந்துடறேன்”.

ம்ப்ச்.  அங்க ஒருத்தன் முறைக்கிறான்.  இவள் என்னமோ இப்பதான் ஒய்யாரமா வரேன்னு டென்ஷன் பண்றாள் என எரிச்சலானவன், “அர்ஜென்ட் வான்னு கூப்பிடறேன்.  நீ பாட்டுக்கு கண்டுக்காம நின்னுட்டு பேசிட்டிருக்க” என அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றான்.

“கையை விடுங்க.  என்ன பழக்கம் இது?  எப்பப் பார்த்தாலும் கையைப் பிடிச்சுக்கறது.  யாராவது பார்க்கப் போறாங்க” என்றாள் சுற்றிப் பார்த்துக் கொண்டே.

அவனுக்கு அவள் சொன்னது காதில் விழுந்தது போல் தெரியவில்லை.  அவனது எண்ணம் முழுவதும் கௌதமிடம்தான் இருந்தது.

எங்கே தாமதமானால், கௌதம் எல்லோர் முன்பும் மேடையிலே ஏதாவது டென்ஷன் ஆயிடுவானோ என்ற பதட்டத்தில் அவன் அவளின் கையைப் பிடித்துகொண்டு முன்னே வேகமாக நடந்து கொண்டிருந்தான்.  அவன் பின்னால் கனி நடந்து கொண்டிருந்தாள்.

அரவிந்தனின் செய்கையில் கனிக்குத்தான் பயம் வந்தது.  தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா.  அய்யோ இவன் என்ன சொல்ல சொல்ல கேட்காம என அவளது கையை அவனிடம் இருந்து உருவகூட முடியாமல் அவனது இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள்.

இவன் அவளது கையைப் பற்றியபடி மேடைக்கு அழைத்துச் சென்றதை சித்தார்த்தும், ரக்‌ஷியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தார்த்துக்கு யோசனையாக இருந்தது.  யார் இவன்?  இவ்வளவு நெருக்கமா கையைப் பிடிச்சு கூட்டிட்டு போற அளவுக்கு என யோசித்துக் கொண்டிருந்தான்..

ரக்‌ஷிக்கோ புசு புசு என கோவம் விஸ்வரூபமெடுத்தது.  பின்னே திருமணத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.  அரவிந்தன் கனிமொழியிடம் காட்டும் நெருக்கத்தை.

கனியின் கையைப் பிடித்துகொண்டே மேடையேறியவன், “கூட்டிட்டு வந்துட்டேன் அண்ணி” என்றான், அப்போதும் கையை விடாமல்.

கௌதம் அரவிந்தன் கனியின் கையை பிடித்திருந்ததைக் பார்த்து, “என்னடா பண்ற…?” என வாயசைத்து கண்களால் அவளைப் பிடித்திருந்த கைகளைக் காட்டி மிரட்டலாக ஒரு பார்வை பார்த்தான் அரவிந்தனை.

அப்பொழுதுதான் அரவிந்தனுக்கு ஸ்மரணையே வந்ததுபோல. “அ..து நான் கூப்பிட கூப்பிட வரமாட்டேன்னு நின்னுட்டிருக்கா.  அதான் கையைப் பிடிச்சி கூட்டிட்டு வந்தேன்” என்றான் அசடு வழிந்து கொண்டே.

“முதல்ல கையை எடுடா” என்றான் முறைத்துக் கொண்டே.  ஹி……ஹி…. என சிரித்துக் கொண்டே அவளைப் பிடித்திருந்த கையை விட்டான்.   இவன் கையை விட்டதும் கனி நேரிடையாகவே அரவிந்தனை முறைத்து நின்றாள்.

அய்யோ ஏற்கனவே இவன் டென்ஷனா இருக்கான்.  இவள் வேற நேரங்காலம் தெரியாம அவனை ஏத்தி விடற மாதிரி முறைச்சிட்டிருக்கா.  நல்லது பண்ணனும்னு நினைச்சாகூட வில்லங்கமாகுது.

கீழே இருப்பவர்களுக்கு முதுகு காட்டி மணமக்களைப் பார்த்து கனியும் அரவிந்தனும் நின்றிருந்ததால், வேறு யாருக்கும் பெரியதாக இது தெரியவில்லை.

ஆனால் சித்தார்த்தான் இவர்கள் மேடை ஏறுவதற்கு முன்பே பார்த்திருந்தானே.  பார்வை மொத்தமும் அவர்கள் மேல்தான் இருந்தது.  அரவிந்தனைதான் கண் எடுக்காமல் பார்த்திருந்தான்.

இவர்கள் பண்ண அலப்பறையில் இதற்கு முன் நடந்தது, வீட்டினரைத் தேடியது என எல்லாம் அமுதினிக்கு மறந்து விட்டிருந்தது.  இவர்களைத்தான் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

கௌதம் திரும்பி மனைவியை பார்த்து “நீ என்ன வேடிக்கை பார்த்துட்டிருக்க” என அதட்டிவிட்டு திரும்ப கனியைப் பார்த்து “அவளுக்கு என்ன வேணும்னு பாரு.  உங்களைதான் யாரையோ தேடிட்டிருந்தா…” என்றான் முக பாவனையை கொஞ்சமும் மாற்றாமல்.

கனிமொழிக்கு கௌதமின் இந்த பரிணாமம் புதியது.  அவன் இதுவரை அவளிடம் பேசி பழகியதில்லை.   அதனால் கௌதமை பற்றி ஏதும் தெரியாது.  இதுவரை அவள் நினைத்திருந்தது எல்லாம் கௌதம் ரிசர்வ்ட் டைப் எனதான் நினைத்திருந்தாள்.

அவனது இந்த அதிகாரத்தில் கனியின் தலை தானாகவே ஆடியது.  தலைதான் ஆடியதே தவிர நகராமல் இன்னும் கௌதமையே ஆ… என பார்த்திருந்தாள்.

பூங்குழலியின் கணவன் தீபக்கூட இதுவரை அவளிடம் ஏதும் பெரிதாக பேசியதில்லை.  எப்போது பார்த்தாலும் ஒரு ஸ்மைலுடன் நகர்ந்துவிடுவான்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே கௌதமின் இந்த அதட்டலான தோரணை அவளுக்கு புதியதாகவும் வியப்பாகவும் இருந்தது.

இவளைக் கண்ட அரவிந்தனுக்கு நமுட்டுச் சிரிப்பு.   வெளியே சிரித்தால் எதிரில் இருப்பவன் எரித்துவிடுவான் என பயந்துகொண்டு கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.

இன்னும் கனி அசையாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கௌதமன் கண்களாலேயே அமுதினியைப் பார்க்கும்படி காட்டினான்.   அவனது பார்வையின் பொருள் உணர்ந்தவள் அமுதினியைத் திரும்பி பார்த்து ‘’என்னக்கா’’? என்றாள் பாவமாக உள்வாங்கிய குரலில்.

கனியின் கையைப் பிடித்து ஓரமாக அழைத்து சென்ற அமுதினி, “எங்கடி போனீங்க எல்லாரும்?  குழலி எங்க போனா?  அம்மாவையும் காணோம்”.

“அம்மா ரிசப்ஷன்ல அப்பாவோட இருக்காங்க.  குழலி அவள் மாமியார் வீட்டு ஆளுங்ககளோட இருப்பான்னு, நினைக்கறேன்.  ஏன்? என்னாச்சு?”

“நீயாவது என்கூட இருக்கலாமில்ல…?”

“இவ்வளவு நேரம் இங்க தான இருந்தேன்.  அங்க யாரோ அப்பாவுக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்லி, சாப்பிட அழைச்சிட்டு போய் கவனிக்கச் சொன்னாங்க.  அதான் சாப்பிடற இடத்தில நின்னுட்டிருந்தேன்”.

“ஏன்? டென்ஷனா இருக்க?  மாமா ஏதாவது சொன்னாங்களா?”.

கனி அப்படி கேட்டதும், அமுதினிக்கு கொஞ்சம் முன்பு மேடையில் கௌதம் பார்த்தது, பேசியது எல்லாம் மனதில் ஓடியது.

கனி, “ஏன்? உனக்கு இப்படி வேர்க்குது?”  என அமுதினியின் கையில் இருந்த கர்ச்சீப்பால் அவளது முகத்தில் இருந்த வேர்வை துளிகளை ஒத்தி எடுத்து, அமுதினியின் முகத்தை சரி செய்தாள்.

கனி, “ஏதாவது ஜூஸ் கொண்டு வரட்டா?  குடிக்கிறயா?”

“ம்ப்ச்.., அதுக்குதான் யாராவது இருக்கீங்களான்னு தேடுனேன்.  தொண்டையெல்லாம் காஞ்சிபோச்சு.  தாகமாயிருக்குன்னு.  கடைசியில அதை மறந்துட்டேன்”.

“இரு.  நான் போய் எதாவது எடுத்துட்டு வரேன்” என்று இறங்கி சென்றாள் கனிமொழி.   இவளையே பார்த்திருந்த சித்தார்த்துக்கு, இவளை பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்குமா…?  முன்னவிட ஆள் நல்லா வளர்ந்துட்டா என பார்த்து கொண்டிருந்தான்.

பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்று அங்கிருந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் ஜூஸ் வேண்டும் என கேட்டாள்.

“மேம் இங்க கும்பல் அதிகமாயிருக்கு.  சர்வ் பண்ணனும்.  இப்ப போக முடியாது.  நீங்களே யாரையாவது விட்டு கீழ போய் வாங்கிட்டு வர சொல்லுங்க”.

யாரிடம் கேட்பது என யோசித்து பார்த்தவள், சரி நாமே போயிட்டு வந்திடுவோம் என ரிசப்ஷன் ஹாலை விட்டு வெளியே சென்றாள்.  இவள் கீழே செல்வதற்காக லிஃப்டை அழுத்தி காத்துக் கொண்டிருந்தாள்.

லிப்ட் வந்து நின்று கதவு திறந்ததும் உள்ளிருந்து அரவிந்தன் வெளியே வர துவங்கியவன், இவளைப் பார்த்ததும் அங்கேயே நின்றுகொண்டான்..

அச்சோ இவனா என நினைத்துக் கொண்டே லிப்டிற்குள் சென்று கிரவுன்ட் ப்ளோர் பட்டனை அழுத்தினாள்.   உறவினர் ஒருவரை வழியனுப்புவதற்காக ஹோட்டல் வாயில் வரை சென்று விட்டு மேலேறி வந்தவன் இவளைக் கண்டதும் திரும்ப இவளுடனே சென்றான்.

“எங்க போற…?”

“அக்காவுக்கு ஜூஸ் வேணும்னா, கீழ போய் வாங்கிட்டு வரலாம்னு வந்தேன்”.

“அதுக்கு எதுக்கு நீ போற?  அங்க இருக்க சர்வர் யார்கிட்டயாவது ஆர்டர் பண்ணியிருக்கலாம் இல்ல”.

“அவங்ககிட்டதான் சொன்னேன்.  அங்க கூட்டம் அதிகமா இருக்கறதால, நீங்களே போய் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க”.

அதற்குள் லிப்ட் கீழ் தளத்திற்கு வந்திருந்தது.  வெளியே வந்ததும், “நீ இங்கயே இரு.  நான் போய் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வரேன்” என்றவன் உள்ளே சென்றிருந்தான்.

ஆர்டர் செய்துவிட்டு வந்தவன், “வா” என அவளையும் உள்ளே அழைத்து சென்று உட்கார வைத்து தானும் அமர்ந்தான்.

அவர்கள் அமர்ந்த சிறிது நேரத்தில் இரண்டு மாதுளை ஜூஸ் கொண்டு வந்து வைத்தார்கள்.

அச்சோ நான் அவங்களுக்கு சொன்னா இங்க கொண்டு வந்து வச்சிட்டு போறாங்க என ஜூஸ் கிளாஸை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

“அட அறிவே உட்காரு.  இது நமக்கு.  அவங்களுக்கு அங்க நேரா கொண்டு போய் குடுக்க சொல்லிட்டேன்”.   அவளுக்கும் தொண்டையெல்லாம் வறட்சியாக இருந்ததால் மறுத்து பேசாமல் “ம்ம்…” என தலையசைத்து அமர்ந்து குடித்தாள்.

பார்ரா… சொன்னதும் கேட்டுகிட்டா என ஆச்சர்யமாக அவளையே பார்த்துகொண்டு பழரசத்தை அருந்தினான்.

அரவிந்தன் தன்னையே பார்ப்பது கனிக்கு புரிந்தாலும் அவன் பக்கம் பார்வையை திருப்பாமல் எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல குடித்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்சமாவது என்னை கண்டுக்கிறாளா…?  வேணும்னே எங்கையோ பார்த்துட்டிருக்கா.  ம்ம்… எங்க…?  எப்ப பாரு முறைச்சிட்டே திரிய வேண்டியது என சலிக்கதான் முடிந்தது அவனால்.

ஜூசை குடித்து முடித்தவர்கள் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து லிப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்து நின்றார்கள்.

சரியாக அந்த நேரம் பார்த்து  ரிசப்ஷனை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய மகேஷ்வரனும் சித்தார்த்தும் லிப்ட் மூலமாக கீழ்தளத்தை அடைந்திருந்தனர்.

சித்தார்த்தின் பார்வை இவர்கள் மீதுதான் பதிந்தது.  கனிக்கு சித்தார்த்தை அடையாளம் தெரியவில்லை.  மறந்திருந்தாள்.  அவர்கள் லிப்டிலிருந்து வெளியே வந்ததும், இவர்கள் லிப்டிற்குள் சென்றிருந்தார்கள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!