Skip to content
Post Views: 6,438
அன்றிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் குழந்தை அவளின் பொறுப்பு குழந்தையும் அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது, பார்கவியின் திருமணத்திற்கு வராமல் அவ்வளவு தூரம் வந்தும் தந்தையை காண வராமல் இருந்த அவளின் மாமியாரும் மாமனாரும் அன்று வந்திருந்தனர்.
Advertisement
கோபம் கோபம் மட்டுமே துளசிக்கு வார்த்தைகளை விட்டுவிடாமல் இருக்க பொறுமையை இழுத்து பிடித்தாள், அவர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, மறுநாள் காலைக் கீதா தயங்கி தயங்கி துளசியின் வீட்டிற்கு வந்தாள்.
Advertisement
“என்னாச்சு கீதா” என்றாள் துளசி.
Advertisement
Advertisement
“பாப்பாக்கு ராத்திரில இருந்து ஜுரம் எனக்கு லீவ் குடுக்க மாட்டறாங்க” என்று கையைப் பிசைய “அதுக்கு எதுக்கு இப்படி தயங்குற வா” என்று அவளுடன் அவள் வீட்டிற்கு சென்றவள் உறங்கிக்கொண்டிருந்த பிள்ளையைத் தூக்கிக்கொண்டாள்.
“நான் பாத்துக்குறேன் டாக்டர் கிட்ட காமிச்சிட்டியா” என்க.
“ஹ்ம்ம் நைட்டே காமிச்சிட்டேன் மருந்து குடுத்திருக்காங்க” என்றாள் அவள்.
“சரி மருந்தைக் குடு நீ போ” என்று பிள்ளையைத் தூக்கி வந்துவிட்டாள், அதற்குள் வெற்றி சிக்கன் வாங்கி வந்துவிட்டான்.
“வெற்றி இன்னைக்கு போய்ப் பாட்டியைப் பாத்துட்டு வந்திடலாம் உன் சித்தி வீட்டில இருக்காங்க” என்றார் விஸ்வநாதன்.
“சரிப்பா சாயந்திரம் போலாம்” என்றான் வெற்றி அதோடு துளசியிடமும் விவரத்தைக் கூற அவள் சிலிர்த்துக்கொண்டு நின்றாள் வர முடியாது என்று, காலையிலே இருவருக்கும் முட்டிக்கொண்டது இவ்வளவு நாட்களாக இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகூட கிடையாது இன்று தான் பேசியது அதும் சண்டையில் முடிந்திருந்தது.
குழந்தைக்கு ரசம் சாதம் ஊட்டி உறங்கவைத்தவள் அதன் அருகில் அமர்ந்திருக்க சாந்தாவும் பார்கவியும் மாறி மாறி அழைத்தனர், அவர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது ஆகையால் அழைப்பை எடுக்கவில்லை நினைவுகளிலிருந்து மீண்டிருந்தாள் வெளியில் கதவு தட்டும் ஓசையில்.
மாமியார் மாமனார்தான் வந்திருந்தார்கள் மதியம் மூன்று மணிக்கு வந்து சாப்பிட்டவர்கள் கிளம்பிக்கொண்டிருக்க துளசி அமைதியாகக் குழந்தையின் அருகிலே அமர்ந்திருந்தாள்.
“இப்போ வரியா இல்லாயாடி” என்றான் வெற்றி அவளுக்கு மட்டும் கேட்க்கும் விதமாக.
“வரல” என்றாள் முடிவாக.
“நீ வரலையா துளசி அந்தப் பொண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவா தானே பிள்ளையை அவங்க மாமியார்கிட்ட குடுத்துட்டு வா” என்றார் விஸ்வநாதன்.
“இல்ல எனக்கும் உடம்பெல்லாம் வலிக்குது ஜுரம் வரப்போகுது ரெஸ்ட் வேணும்” என்றாள் அதற்குமேல் பேசாமல் அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர், மகனும் பெற்றோரும் கூடி கூடி பேசிக்கொண்டனர் தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது.
இரண்டுநாட்களாக வீட்டினரின் அழைப்பை ஏற்காமல் இருந்தவள் அன்று சாந்தாவின் அழைப்பை எடுத்தாள் ‘துளசி அப்பாக்கு முடியலடி ராத்திரில இருந்து கண்ணே தொரக்கல எனக்குப் பயமா இருக்கு கூட யாருமே இல்லாம தனியா இருக்குற மாதிரி இருக்கு” என்று அழுக.
“நான் வரேன்மா” என்றவள் “நான் ஊருக்குப் போகணும்” என்றாள்.
“இங்கவந்தே ரெண்டு மாசம்தான் ஆகுது திரும்ப என்ன” என்றார் மாமியார்.
“அப்பாக்கு உடம்பு சரியில்ல நான் போகணும்” என்றாள் பதட்டமாக.
“உங்க அப்பா எப்போதான் சரியா இருந்தார் படுக்கைல தானே இருக்கார் இப்போ என்ன புதுசா” என்றான் வெற்றி.
கோபத்திலும் அழுகையிலும் வார்த்தைகள் வரவில்லை வேகமாகத் தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டவள் வெளியில் சென்று ஆட்டோ அழைத்துவந்தாள்.
“என்ன செய்ற நீ உன் இஷ்டத்துக்கு போற” என்றான் வெற்றி.
“நான் என்ன சொல்றேன்னு கூடப் புரிஞ்சுக்க முடியாத உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை, எங்க அப்பா நேத்தில இருந்து கண்ணைத் திறக்கலாயம் எனக்குப் போகணும்” என்றவள் யாருக்கும் காத்திருக்கவில்லை.
முன்பதிவு செய்யவில்லை என்றாலும் அவர்கள் ஊருக்குப் போகும் ரெயிலில் பெரிதாகக் கூட்டம் இருக்காது கிடைத்த இடத்தில் அமர்ந்துகொண்டாள் மறுநாள் காலை ஊருக்குச் சென்று வீட்டிற்கும் சென்றுவிட்டாள், அவளைப் பார்த்ததும் சாந்தா அதிர்த்தி அடைத்தார்.
“என்னடி இப்படி வந்து நிக்குற ஒரு வார்த்தைகூட சொல்லல தனியாவா வந்த” என்று கேள்விமேல் கேள்வி, எதற்கும் பதில் சொல்லவில்லை நேரே தந்தை படுத்திருந்த அறைக்குச் சென்று அவரைப் பார்த்தாள்.
உடனே சென்று குளித்து உடைமாற்றி ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனை கொண்டு சென்றுவிட்டார்கள் “ஒன்னும் பண்ண முடியாதுமா டியூப் போட்டுவிடுறோம், பால் தண்ணி அப்படி மட்டும் குடுங்க” என்று சிறிய டியூப் போட்டு அனுப்பி விட்டனர்.
துளசிக்கு புரிந்துவிட்டது நேரம் நெருங்கிவிட்டது என்று வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டனர் “போறீங்களாப்பா” என்றாள் அவர் கையைப் பிடித்துக்கொண்டு.
“ஆமா போங்க போதும் எவ்ளோ வலி கஷ்டம் உங்க வலியை எங்களால வாங்கிக்க முடியாதே, எதைப் பத்தியும் கவலை படாதீங்கப்பா இங்க எல்லாரும் நல்லா இருக்கோம் நீங்க நிம்மதியா இருங்க” என்று பேசிக்கொண்டிருந்தாள்.
இரவு பத்து மணியைக் கடந்தபோது மெல்ல மெல்ல விஜயகுமார் உயிர் பிரிந்தது, அழுது தீர்த்துவிட்டாள் பிறகு தன்னை மீட்டுக்கொண்டாள் வேறுயாரும் அருகில் இல்லை அவளுக்குத்தான் இப்பொழுது முழு பொறுப்பும்.
துர்காவும் குடும்பமும் டெல்லிக்கு டூர் சென்றிருக்கிறார்கள் செய்தி அறிந்தவர்கள் கவலை பட்டார்கள் இப்பொழுது வரமுடியாதே என்று வருத்தப்பட்டார்கள் “சரி” என்று வைத்துவிட்டாள், அதெல்லாம் அவர்கள் இஷ்டம்.
பார்கவியும் பிரசாத்தும் வர முடியாது பார்கவி கர்ப்பமாக இருக்கிறாள் அவளை விட்டுப் பிரசாந்த்தால் வர முடியாது சரி என்றுவிட்டாள் துளசி, வெற்றி மட்டும் வருவதாகச் சொல்லியிருந்தான் அவனுடைய வீட்டில் யாரும் வரமாட்டார்கள் பயணம் செய்ய முடியவில்லை என்றான் அதற்கும் சரி என்றுவிட்டாள்.
அதிக நாட்கள் படுக்கையில் கிடந்ததால் சீக்கிரமாக இறுதி சடங்கைச் செய்யலாம் என்றார்கள் உறவினர்கள் “நானே செய்கிறேன்” என்றாள் துளசி.
உறவில் ஆண் பிள்ளைகள் இருந்தும் அவள் பிடிவாதம் வென்றது, தந்தைக்கு அனைத்தையும் அவளே செய்தாள் அன்று இரவுதான் வெற்றி வந்து சேர்ந்தான், துளசி திடமாக இருந்தாள் ஏதோ புதிதாகத் தெரிந்தாள் வெற்றிக்கு.
அவன் இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்தான் “கூட வரியா” என்றான் அவளிடம், இல்லை என்றாள் துளசி.
“பதினாறு நாள் காரியம் இருக்கிறதே அது முடிஞ்சு வந்துடு என்னால மறுபடியும் வர முடியாது” என்றான் அவளிடம்.
அவனைப் பார்த்து நின்றவள் “நீங்க வர வேண்டாம்” என்றுவிட்டாள், துர்காவும் குடும்பமும் பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்து சேர்ந்தனர், பார்கவிக்கு மசக்கை படுத்தி எடுக்க அவளின் மாமியார் டூரிஸ்ட் விசாவில் சென்று மூன்று மாதம் நின்றார்.
இப்பொழுது சாந்தாவுக்கு விசா எடுக்கும் நடைமுறைகளைத் தொடங்கி கிட்டத்தட்ட கிடைத்துவிடும் நிலையில் இருந்தது ஆகையால் சாந்தாவும் இளைய மகளிடம் செல்ல அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்தார்.
அதன்பிறகான இரண்டு மாதமும் வீட்டில் அனைத்தையும் அவள்தான் பார்த்துக்கொண்டாள் வெற்றியோடு எந்தப் பேச்சுக்களும் இல்லை அவன் நேரடியாகச் சாந்தாவை அழைத்துச் சண்டையிட மக்களிடம் வந்து நின்றார் சாந்தா.
“என்னடி நெனச்சுட்டு இருக்க இன்னும் ஊருக்குப் போகாம இங்க எதுக்கு இருக்க கிளம்பு, நானும் ஆஸ்திரேலியா போறேன்” என்றார் அவர்.
“உனக்கு எங்க போகணுமா போ நான் இங்கதான் இருப்பேன் இனிமே” என்றாள்.
“இங்கதான் இருப்பேன்னா என்ன அர்த்தம்”.
“இனிமே அங்க போகமாட்டேன்னு அர்த்தம் அந்த வாழ்க்கை பிடிக்கலன்னு அர்த்தம்”.
“என்ன கொழுப்பா? கல்யாணம் என்ன உனக்கு விளையாட்டா எல்லாரும் என்ன நினைப்பாங்க” என்க.
“போதும் நிறுத்து” என்றவளின் அலறலில் அப்படியே ஸ்தம்பித்து நின்றார் சாந்தா.
“என்ன வாழ்க்கை… என்ன வாழ்க்கையை எனக்கு நீ அமைச்சு குடுத்த எல்லாமே உங்க இஷ்டம்தானா என் கல்யாணத்துக்கு மட்டும் உனக்கு அவ்ளோ ஈகோ இருந்துச்சு, உன் சின்ன மக கல்யாணத்துல எங்கபோச்சு இனிமே என்னை நான் பாத்துக்குறேன் நீ போய் உன் பொண்ணை பாரு”.
“அப்புறம் இங்கேயிருந்து என்னைப் போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை இந்த வீட்ல எனக்கும் உரிமை இருக்கு, என்னை விட்டுடு இப்படியே நிம்மதியா வாழ்ந்துட்டு போறேன் வேலை தேடிக்குறேன் என்னை நான் பாத்துக்குறேன்” என்றாள்.
“அதான் அந்தப் பையனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சே நீ ஏன் உன் லைஃப் வீணாக்குற”.
“அவருக்குக் கல்யாணம் ஆனதுதான் எனக்குப் பெரிய நிம்மதி, இத்தனை நாள் மனசை அழுத்திட்டு இருந்த பாரம் மொத்தமா போய்டுச்சு, உன்னைக் கையெடுத்து கும்பிடுறேன் என்னை இப்படியே விட்று இல்ல மறுபடியும் கட்டாயப்படுத்தினா மொத்தமா கிளம்பி போய்டுவேன் அதுக்கு அப்புறம் என்னை யாரும் பாக்க மாட்டீங்க” என்றவளை முதமுறையாகப் பயத்தோடு பார்த்தார் சாந்த்தா.
அறிவுரை… திட்டு… சமாதானம் என்று உறவுகளும் சகோதரிகளும் பேசிப்பார்த்தும் அவள் மாறவில்லை “முடியாது” என்று நின்றாள்.
வெற்றியின் வீட்டினர் போனிலே சண்டை போட்டனர் எங்க பையனுக்கு என்ன பதில் என்றார் விஸ்வநாதன், அடுத்த வாரமே விவாகரத்து பேப்பரை கையெழுத்திட்டு அனுப்பிவிட்டாள்.
error: Content is protected !!