Skip to content
Post Views: 6,056
குடும்பமாக முன் காலைப் பொழுதிலேயே வந்திருந்தனர். சாரதா பிடிவாதமாக காலை உணவுக்கே அழைத்திருந்ததால் மறுக்க முடியாமல் சரி என கிளம்பி வந்திருந்தனர்.
சாரதா குழலி வீட்டினரையும் அழைத்திருந்தார். அவர்கள் விசேஷ நேரத்துக்கு சரியாக வருவதாக கூறியிருந்தனர்.
ஆண்கள் எல்லோரும் உட்கார்ந்து உண்டு கொண்டிருந்தனர். அமுதினி, கனிமொழி இருவரும் நின்று பரிமாறினர்.
சாரதா கிட்சனில் சூடாக பூரி போட்டுக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் கல் வைத்து மருமகனுக்கு தோசையும் ஊற்றிக் கொண்டிருந்தார்.
Advertisement
ஆம். அமுதினி வந்தவுடன் சொல்லியிருந்தாள். “அம்மா அவருக்கு இட்லி பிடிக்காது. தோசைதான் சாப்பிடுவாரு. அதுவும் முறுவலா இருக்கனும். நீங்க எப்பவும் எங்களுக்கு மொறு மொறுன்னு நெய்போட்டு பொடி தூவி தோசை சுட்டு தருவீங்களே, அதே மாதிரி சுடுங்க” என்றிருந்தாள்.
மருமகனின் மீதான மகளின் அக்கறையைக் கண்டு தாய்க்கு உள்ளம் பூரித்தது. “சரிடா நான் ஊத்தறேன். நீ அவங்களை எல்லாம் கவனி” என ஒரு அடுப்பில் கல்லை வைத்து சூடாக தோசை ஊற்றிக் கொண்டே, இன்னொரு அடுப்பில் காய்ந்திருந்த எண்ணெயில் பூரியும் போட்டு எடுத்தார்.
நால்வர் அமரும் டைனிங் டேபிளில், பூபதி, ஷ்யாமளா, கௌதம், அரவிந்தன் என நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்னமே இட்லி, பொங்கல், வடை, இனிப்புக்கு அசோகா என செய்து வைத்தவர், பூரி மட்டும் வந்ததும் சூடாக போட்டுக் கொள்ளலாம் என காத்திருந்தார்.
Advertisement
இப்பொழுது அமுதினி சொல்லியதும் கூடுதலாக தோசையும் ஊற்றிக் கொண்டிருந்தார். மூன்றாவது அடுப்பில் காபிக்காக பாலையும் காயச்சிக் கொண்டிருந்தார். கௌதமும் அரவிந்தனும் நன்றாகவே ருசித்து சாப்பிட்டனர்.
Advertisement
திருமணம் ஆனதிலிருந்து மனைவியின் சமையலை விரும்பி சாப்பிட ஆரம்பித்திருந்தவனுக்கு அந்த கைப் பக்குவம் எங்கிருந்து வந்தது என புரிந்தது.
ஷ்யாமளா வீட்டில் சமைப்பது எல்லாம் அரிது. அவருக்கு அதில் ஆர்வம் இல்லையென்றாலும் நேரமும் இருந்ததில்லை. அவரது அம்மா உயிருடன் இருந்தவரை சமையல் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். அவரது மறைவிற்குப் பின் எல்லாம் வேலையாட்கள்தான்.
கௌதம் அரவிந்தன் இருவருமே பாட்டி இருந்தவரை அவரது சமையலை சாப்பிட்டு வளர்ந்தவர்கள். அவரது மறைவுக்குப் பின் வேலையாட்களின் சமையல் சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றாலும் நிதர்சனத்தை உணர்ந்து தங்களை பழக்கியிருந்தனர்.
Advertisement
ஷ்யாமளாவைப் பற்றியும், அவரது வேலை, சூழ்நிலை எல்லாவற்றையும் அறிந்தவர்களாதலால் அவரை எதற்கும் எதிர்பார்த்து கஷ்டப்படுத்தியிதில்லை.
இருவரின் ஏக்கத்தை அமுதினி வந்து தீர்த்து வைத்தது போல் இருந்தது.
பின்னே சமையல் செய்யும் அம்மா, காலைக்கான டிபன், மதியத்துக்கான சமையல் எல்லாம் காலையிலேயே செய்து வைத்துவிட்டு சென்றுவிடுவார். அவர் செய்யும் வெரைட்டிகளும் கொஞ்சமாகதான் இருக்கும்.
திரும்ப திரும்ப அதே அரிசி மாவில் செய்த தோசை, இட்லி, ஊத்தப்பம், பொங்கல் என இருக்கும்.
பூரி சப்பாத்தி எல்லாம் எப்போதாவது தான், அவரது நேரத்தை கணக்கிட்டு கூடுதலாக நேரம் இருந்தால் மட்டுமே செய்வார்.
மதியத்திற்கு சாதம், சாம்பார் இல்லை குழம்பு என செய்பவர், கூட ஒரு காய் என செய்து வைத்துவிட்டு சென்று விடுவார்.
அதேபோல் மாலையே வந்து டிபன் செய்து வைத்துவிட்டு சென்றுவிடுவார். அது இவர்கள் இரவு வேலையிலிருந்து வருவதற்குள் ஆறிப் போய் அவலாகியிருக்கும். பசிக்காக சாப்பிட்டு படுத்துவிடுவர்.
உடல் நலனைக் கொண்டு அவுட் சைட் புட்டை பெரும்பாலும் தவிர்த்துவிடுவர்.
அப்படியிருந்தவர்களுக்கு அமுதினி வந்ததிலிருந்து பார்த்து பார்த்து வெரைட்டியாக சமைப்பது அப்படி ஒரு ஆசுவாசத்தை ஆனந்தத்தை கொடுத்திருந்தது.
ஷ்யாமளாகூட ஆரம்பத்தில் “எதுக்கு அனி நீ இதெல்லாம் செஞ்சு கஷ்டப்படற. வேலைக்கும் வந்துட்டு வீட்லயும் வேலை பார்க்கனுமா” என மறுத்திருந்தாலும். நாளாக நாளாக அவரும் அவளது நளபாகத்துக்கு கட்டுண்டிருந்தார்.
தனிதனியாக அவர்களின் பிடித்தத்தை தெரிந்துவைத்து உடல் நலனையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு செய்து கொடுப்பவளை யாருக்குதான் பிடிக்காது.
சலிப்புடன் சாப்பிடுவது மறைந்து, ருசியுடன் சுட சுட வேளா வேளைக்கு விரும்பி சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.
அரவிந்தன் இலையில் ஒரு தோசையை கொண்டு வந்த வைத்தாள் அமுதினி. “அண்ணி போதும் வயிறு புல். இதுக்கு மேல சாப்பிட முடியாது?”
“இந்த ஒன்னு மட்டும் சாப்பிடுங்க” என சிரித்துக் கொண்டே கூறியவள், கணவனுக்கும், மாமியாருக்கும் என்ன வேண்டும் என்பதையும் பார்த்து பரிமாறினாள்.
அரவிந்தன் கிட்சனைப் பார்த்து சத்தமாக “அத்தை உண்மையிலேயே எல்லாம் சூப்பரா இருந்தது. எப்பவும் சாப்பிடறது விட, இன்னைக்கு அதிகமாவே சாப்பிட்டேன். தேங்க்ஸ்” என்றான் புன்னகையுடன்.
சாரதா கிட்சனிலிருந்து வந்து எட்டிப் பார்த்தவர் கூச்சப்பட்டுக்கொண்டே “இருக்கட்டும் தம்பி” என சிரித்துகொண்டார்.
அரவிந்தன் வெளியே சொல்லிவிட்டான். கௌதமால் சொல்ல முடியவில்லை. இதுவரை யாரிடமும் சகஜமாக பேசி பழகாததால் பேசுவதற்கு சங்கோஜமாக இருந்தது. இருந்தாலும் சாரதாவை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தவன் தன் புன்னகையின் மூலம் அவனது பிடித்தத்தை தெரிவித்தான்.
ஷ்யாமாளாகூட “எல்லாமே நல்லாயிருந்தது அண்ணி” என புகழ்ந்தார்.
சாரதாவுக்கு மருமகன் வாயைத் திறந்து ஏதாவது சொல்வானா என அவனையே பார்த்திருந்தார். அவரது பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ சாப்பிட்டு முடித்து எழுந்தவன், “தேங்க்ஸ் அத்தை. சாப்பாடு நல்லாயிருந்தது” என வாயிலிருந்து முத்துக்களை உதிர்ந்திருந்தான் புன்னகை முகமாக.
சாரதாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. மருமகன் தன்னைப் பார்த்து பேசியதும்.
அவருக்கு வாயெல்லாம் பல் தெரியும்படியான சிரிப்பு. “சரிங்க மாப்பிள்ளை” என தலையாட்டி நெகிழ்ந்துவிட்டார்.
அமுதினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அங்கிருந்தவற்றை எல்லாம் ஒழுங்குபடித்திக் கொண்டிருந்தவள் கௌதம் திடுமென சாரதாவைப் புகழ்ந்ததில் பிரேக்கடித்தது போல அசையாமல் நின்று இங்க என்னடா நடக்குது என்பதுபோல் வாயைப்பிளந்து கௌதமையே பார்த்திருந்தாள்.
மனைவியின் பார்வையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. அவள் அருகே வந்தவன் “சரியா சொன்னனா? ஓகேவா… ம்ம்…” என கிசுகிசுத்தான் முறுவலுடன்.
அருகில் நெருங்கி நின்றவனின் பார்வையை தாள முடியாமல் “ம்ம்…” என முனகியவளுக்கு தலை தானாக சரி என ஆடியது.
மனைவியைப் பார்த்து சிரித்துகொண்டே கைகழுவ சென்றுவிட்டான்.
சுற்றி இருந்தவர்கள் இதைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் நகர்ந்திருந்தனர். சாரதாவும் சிரித்துக் கொண்டே மகளைப் பார்த்து “போடா அவருக்கு என்ன வேணும்னு பார்த்து கவனி. துண்டு வேணும்னா துடைக்க எடுத்து கொடு” என்றார்.
அரவிந்தன் ஷ்யாமாளாவிடம் வந்தவன் “ம்மா… இங்க என்ன நடக்குது? பக்கத்துல வயசுப் பையன் இருக்கேன்னு கொஞ்சமாவது அவனுக்கு கூச்சம் இருக்கா…? என்னமா ரொமான்ஸ் படம் ஓட்டறான். உங்ககிட்ட விசேஷத்துக்கே வர முடியாதுன்னு வீம்பு பிடிச்சவன், அண்ணி சொன்னதும் தலையாட்டிட்டு கிளம்பிட்டான். இப்ப என்னடான்னா எல்லாருக்கும் முன்னாடி, கண்ணாலே ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்”.
“ஹ்ம்ம்… சொல்லி வைங்க அவன்கிட்ட. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. சின்ன பையன் என்ன வச்சுட்டு பண்ற காரியா இது. உங்க பையன்கிட்ட சொல்லிவைங்க. சொல்லிட்டேன்” என்றான் கேலியாக சிரித்துக் கொண்டே.
ஷ்யாமளாவுக்கு மனதெல்லாம் நெகிழ்ந்திருந்தது. எப்படியோ மகன் மாறினால் போதும் என சந்தோஷப்பட்டார். “டேய் சும்மாயிருடா நீ வேற. அவன் காதுல விழுந்துடப் போகுது” என திரும்பி கௌதம் வந்து விட்டானா என பார்த்தார்.
“ஹ்ம்ம்… உங்க பெரிய பையனுக்கு மட்டும் நல்லா அட்டென்ஷன் குடுங்க. என்னை டீல்ல விட்டுடுங்க” என வம்பிழுத்தான்.
ஷ்யாமளா, “போட்டேன்னா… எங்க என்ன பேசறதுன்னு இல்லாம. வந்த எடத்துல என்னடா வம்பு இது?” என அவனை முறைத்தார்.
அடுத்து குடும்பத்து பெண்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்ததும், சாரதா அமுதினியை போய் தயாராக சொன்னார். அவள் காலையில் குளித்து எப்போதும் போல் சுடியை அணிந்து வந்திருந்தாள்.
ஷ்யாமளா கூட “ஏன்டா, புடவைக் கட்டிக்கலையா?” என கேட்டிருந்தார்.
“எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துகிட்டேன் த்தை. அங்க போய் சேன்ஜ் பண்ணிக்கறேன். இங்கயே கட்டிக்கிட்டா கசங்கிடும்”.
சாலையில் கவனம் வைத்து கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும், கௌதமுக்கு இவர்கள் பேசிக் கொண்டது காதில் விழதான் செய்த்து.
ம்ம்… விவரம் தான் என சிரித்துக் கொண்டான்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் பூங்குழலியின் குடும்பமும் வந்து சேர்ந்தனர். அமுதினியை தயார் செய்ய ஆரம்பித்தனர்.
சாரதா அந்த தெருவில் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தனர்.
ஹாலில் நடுநாயகமாக பெரிய மணப்பலகையைப் போட்டு அதன் மேல் ஜமக்காளம் விரித்து அமுதினியை உட்கார வைத்தனர்.
கனிமொழி மொபைலில் மிருதங்க நாதஸ்வர இசையை மெல்லிய ஒலியில் ஓடவிட்டாள்.
பெண்கள் எல்லோரும் அமுதினியை சூழ்ந்து உட்கார்ந்தவாறு அவளுக்கு தாலி பெருக்கி போட்டுக் கொண்டிருந்தனர்.
கௌதமின் கண்கள் அசையாமல் பசை போட்டு ஒட்டியது போல் மனைவியின் மீதே படிந்திருந்தது.
இந்த நிகழ்ச்சி அவனுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.
இதுவரை மனைவியை நேருக்கு நேர் இருந்து பார்த்ததில்லை. எப்போதும் அவள் தூங்கியதும் அவளுக்கு தெரியாமல் அவளை ரசிப்பவன், இன்று அவளுக்கு நேராகவே ரைட் அன்ட் ராயலாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு நடப்பதையெல்லாம் நேராகவே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
முகூர்த்தப் புடவை கட்டி, தலை நிறைய பூ வைத்து, கை கழுத்துகளில் தங்க நகைகளை போட்டு பார்ப்பதற்கு மங்களகரமாக இருந்தாள்.
ஒரே ஒரு ஆரத்தை மட்டும் கழுத்தில் போட்டு வந்து உட்கார்ந்தவளை சாரதாதான் வற்பறுத்தி, கை, கழுத்து என நிறைய நகைகளைப் போட வைத்திருந்தார்.
இதில் கையில் புடவைக்கு மேட்சாக கண்ணாடி வளையல் வேறு அணிய வைத்திருந்தார்.
கல்யாணத்தன்று மட்டும் கொலுசு போட்டிருந்தவளை அதட்டி இன்றும் போட வைத்திருந்தார்.
தனக்கு எதிரில் சட்டமாக அமர்ந்து தன்னையே கண் கொட்டாமல் பார்த்திருந்தவனை அவளும் உணர்ந்து, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமர்ந்து பார்த்ததும், புருவத்தை இலேசாக தூக்கி என்ன என்றான் கேள்வியாக?
அச்சோ…, இவங்க என்ன எதிர்லயே உட்கார்ந்து இப்படி பார்த்துட்டிருக்காங்க என அவளுக்குதான் வெட்கமானது.
எதிரில் உட்கார்ந்திருப்பவனை பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அவள் நிலைமைதான் தடுமாற்றமானது.
நிமிர்ந்து பார்ப்பதும், பின்பு கூச்சத்தில் தடுமாறி தலை குனிவதுமாக இருந்தவளைப் பார்த்தவனுக்கு முகம் விகசித்தது.
அரவிந்தனுக்கு காதில் புகை வராத குறைதான். கௌதமின் காதுக்கருகே குனிந்தவன், “டேய் அநியாயம் பண்றிங்கடா இரண்டு பேரும். பக்கத்துல நான் ஒருத்தன் இருக்கேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்கறிங்களா” எனறான் கிண்டலாக.
ஏற்கனவே காலையில் இருந்து நல்ல மூடில், இதமான மனநிலையில் இருந்தவன், மனைவியின் பதில் பார்வையில் மெய் மறந்திருந்தான். இப்பொழுது இவனது கேலியில் உல்லாசமாக வாய்விட்டு சிரித்தான் சத்தமாக.
கௌதமின் முகம் மலர்ந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு எல்லோரது பார்வையும் இவன் மீதுதான் படிந்தது. அமுதினிகூட அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். இதுவரை அவன் இப்படி வாய் திறந்து சத்தமாக சிரித்தெல்லாம் அவள் பார்த்ததில்லை.
ஆதலால் அவனது சிரிப்பை அதிசயம்போல் கண் எடுக்காமல் பார்த்திருந்தாள். எத்தனை நேரம் அப்படி பார்த்தாளோ?
“மாமாவை சைட் அடிச்சது போதும். எல்லாரும் உன்னைதான் பார்க்கிறாங்க” என குழலியின் இரகசியத்தில்தான் சுயம் உணர்ந்தாள்.
குழலியின் வார்த்தைகளைக் கேட்டு சட்டென நிமிர்ந்து பார்த்தவளுக்கு வெட்கமானது. சுற்றியிருந்த பெண்கள் எல்லாம் அவளைதான் பார்த்து கொண்டிருந்தனர்.
அதில் இன்னும் வெட்கப்பட்டு குனிந்தவளுக்கு காது மடல்களோடு சேர்ந்து கன்னமும் சூடேறியது.
“அச்சோ… அக்கா. இது என்ன உன் கன்னம் இரண்டும் இப்படி சிவந்திடுச்சு” என கனி அவளைக் சேர்த்து கட்டிக் கொண்டாள் மகிழ்ச்சியில்.
“போடி..” என சிணுங்கிக்கொண்டே தலையை இன்னும் தாழ்த்திக் கொண்டாள் அமுதினி.
சாரதாவுக்கும் பூபதிக்கும் உள்ளம் நெகிழ்ந்திருந்தது.
மாப்பிள்ளையும் பொண்ணையும் நிக்கவச்சு சுத்தி போடனும் என நினைத்துக் கொண்டார் சாரதா.
பெண்கள் சாங்கியம் எல்லாம் முடிந்ததும், குழலியின் மாமியார் கௌதமை அழைத்து அமுதினிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைக்கச் சொன்னார்.
உடனே ஷ்யாமளாவுக்கு பகீரென்றானது.
மகனைத் திரும்பி பார்த்தவருக்கு, அய்யோ இவன் முறுக்கிக்காம செய்யனுமே எனதான் இருந்தது.
அமுதினி மனதில் அச்சோ இந்த அத்தை இவங்களப் பத்தி தெரியாம இப்படி கூப்பிடறாங்களே என பார்த்திருந்தாள்.
கௌதமோ எந்த அலட்டலும் இல்லாமல் எழுந்து சென்றவன், குழலியின் மாமியார் சந்தனத்தை எடுத்து அமுதினியின் கன்னத்தில் பூசசொன்னதும், ஆட்காட்டி விரலாலும் நடு விரலாலும் இலேசாக சந்தனத்தை தொட்டவன் அவளது பூப்போன்ற கன்னத்தில் மெல்ல வருடிவிடுவதுபோல தடவிவிட்டான்.
அமுதினி கண்கள் இரண்டும் தெறித்து வெளியே வந்து விழுந்துவிடுவதுபோல கணவனையே பார்த்திருந்தாள்.
ஷ்யாமளாவுக்குகூட விசித்திரமாக இருந்தது. ஒருவேளை எல்லார் முன்னாடியும் ஒன்னும் சொல்லமுடியாம செய்யறானோ என மகனை இன்னும் நம்பாமல் பார்த்திருந்தார்.
அடுத்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் வைத்தவன், அங்கிருந்த அட்சதையை எடுத்து அவள் தலை மேல் தூவி ஆசிர்வதித்தான்.
பெண்ணின் முதல் ஸ்பரிசம் ஆணுக்கு புதுமையாகதான் இருந்தது. இன்னும் இன்னும் அவளது கன்னத்தை தீண்டசொல்லி கைகள் இரண்டும் பரபரத்து நின்றது.
மணமக்கள் இருவரும் எல்லோரிடமும் விழுந்து ஆசிபெற்றதும், விசேஷம் முடிந்து, விருந்து உபசரிப்பு ஆரம்பமானது.
சாப்பாடு முடிந்ததும் குழலியின் குடும்பத்தினர் கிளம்பிவிட்டனர். ஷ்யாமளாவும் வேலை இருப்பதால் புறப்பட வேண்டும் என சொல்லி கிளம்பினார்.
அமுதினியிடம் “நீங்க இரண்டு பேரும் இருந்து சாயந்தரம் வாங்கடா. எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்பறேன்” என புறப்பட்டார்.
அவர் அப்படி சொன்னதும் கௌதம் அமுதினியைத் திரும்பிப் பார்த்தான். அவனது பார்வையில் என்ன தெரிந்ததோ, சாரதாவிடம் “ம்மா… நாங்களும் கிளம்பறோம்” என வந்து நின்றாள்.
“இருந்துட்டு போங்களேன்டா…”
“அவருக்கு வேலையிருக்கு ம்மா. இன்னொரு நாள் வரோம்” என அவர்களுடனே கிளம்பிவிட்டாள். கௌதமுக்கு உள்ளுக்குள் ஹ்ம்ம்….. பரவாயில்லை. நான் சொல்லாமலே என்னை தெரியுது என மெச்சிக் கொண்டான்.
சாராதாவும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. விசேஷம் நன்றாக முடிந்ததில் மகளை சந்தோஷமாகவே வழியனுப்பி வைத்தார்.
கிளம்பும்போது எல்லோரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தாலும் அரவிந்தனின் பார்வை கனியின் மேலேயே இருந்தது.
பின்னே காலையில் வந்ததிலிருந்து தன்னை பார்ப்பாளா என கனியையே பார்த்திருந்தான். அந்தோ பரிதாபம் உன்னை பார்ப்பேனா என கங்கணம் கட்டியது போல் இவ்வளவு நேரம் அவனைப் பார்க்காமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.
எல்லோரும் புறப்பட்டு வாசலுக்கு வந்து காரில் ஏறியதும் அரவிந்தனும் அவர்களுடன் கிளம்புகிறான் என்ற உந்துதலில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவனைத் திரும்பி பார்த்தாள் கனிமொழி.
இத்தனை நேரம் இந்த பார்வைக்காகவே ஏங்கி நின்றவன் அவள் பார்த்த க்ஷணம் அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டி, சிரித்து, தலையசைத்து விட்டு புறப்பட்டிருந்தான்.
கேடி இவன். சைடு கேப்ல சைக்கிள் ஓட்டுவானே. இவனைப் பத்தி எனக்குத் தெரியாது என அவனை நினைத்து சலித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் கனிமொழி.
தொடரும்.
error: Content is protected !!