Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

அத்தியாயம் – 4 

தனது கட்சி மீட்டிங் முடிந்து நேராக மீண்டும் தயாளனின் வீட்டுக்குச் செல்லவும் மனமில்லை நவிராவுக்கு.

அந்த வீடு.. அதிலிருக்கும் மனிதர்கள் என அத்தனை பேரோடும் சேர்த்து இந்த மொத்த உலகத்தையும் வெறுத்தாள் அவள். ஆனால் சூழ்நிலை காரணமாக அந்த வீட்டிலும், கூடவே இந்த உலகிலும் இருந்தாக வேண்டிய நிலை!

இருந்தாலும் வீட்டுக்குச் செல்லும் நேரத்தையாவது தள்ளிப் போடலாம் என்று அவளது பி.ஏ ஜான்சியுடன் வெளியே கிளம்பினாள்.

அந்த ஜான்சியும் ஒன்றும் சாதாரணமானவர் கிடையாது. முன்னால் ஐ.பி.எஸ்!



Advertisement

ஆனால் ஒரு நேர்மையான அதிகாரியான அவரை, அவரது மேல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அத்தனை பாடுபடுத்தியிருக்க, தனது முப்பத்து எட்டாவது வயதிலேயே வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

அவரைத் தேடிக் கண்டுபிடித்து தனது துணைக்காக பணியமர்த்திக் கொண்டாள் நவிரா. ஜான்சி வெறுமனே நவிராவுக்கு பி.ஏ மட்டுமல்ல, அவர் தான் நவிராவின் முக்கிய அரசியல் ஆலோசகர் மற்றும் அவளது பாதுகாப்பு அதிகாரியும் கூட.

இந்தக் கணத்தில் பெண்ணவள் நம்பும் ஒரே நபர் யாரென்றால், அது ஜான்சி மட்டும் தான்.

Advertisement

அந்த இரவு தொடங்கும் நேரத்தில் நவிரா, ஜான்சியின் இருசக்கர வாகனத்தைக் கிளப்பச் சொல்லவும், அது ஜான்சிக்கு பாதுகாப்பாகத் தோன்றவில்லை.

Advertisement

“இல்ல நவிரா. இந்த நேரத்துல தனியா, அதுவும் டூ வீலர்ல நீங்க வெளில போறது பாதுகாப்பு இல்ல.

என்ன தான் இன்னமும் மக்களுக்கு உங்களை முழுசா தெரியலைன்னாலும், இது ரிஸ்க் தான்.” என்று அவர் கூற, சற்று யோசித்த நவிராவோ..

“இல்ல ஜான்சி.. எனக்கு இந்த மனுஷங்களைப் பார்க்கவே மூச்சடைக்குது. கொஞ்ச நேரம் பீச்சல உட்கார்ந்துட்டு அப்பறம் வீட்டுக்குப் போவோம். ப்ளீஸ்..” என்று கூற, வேறு வழியின்றி சம்மத்தித்தார் ஜான்சி.

Advertisement

ஆனாலும் ஜான்சி தானே விஸ்பாவை ஓட்டுவதாகக் கூறி, நவிராவை முகத்துக்கு மாஸ்க் அணிந்து வண்டியில் அமரச் சொன்னார்.

கடற்கரை செல்லும் வழியெங்கும் ஒரே கூட்டம். எதற்காக என்றால், ஆளுங்கட்சியின் இந்தத் தேர்தல் வெற்றி மாநாட்டுக்குத் தான்!

செல்லும் வழியில் மாநாடு நடக்குமிடமும் வந்துவிட, அதைப் பார்த்த நவிராவோ..

“மாநாட்டுக்கு வண்டியை விடுங்க ஜான்சி.” என்றாள்.

அதைக் கேட்ட ஜான்சியோ சற்று அதிர்ந்து தான் போனார்.

“நவிரா.. ப்ளீஸ் எமோஷன் ஆகாதீங்க. இப்போ அங்க போறது சேஃப் இல்ல. யாருக்காவது உங்களை அடையாளம் தெரிஞ்சுட்டா, அவ்ளோ தான்..” என்று அவர் கூற, நவிரா கேட்பதாக இல்லை.

“இல்ல ஜான்சி. நான் அங்க போய்த் தான் ஆகணும்.” என்று அவள் அங்கு சென்றிருந்த சமயம் தான் ஷிவ் மைக்கின் முன்னே வந்து நின்றிருந்தான்.

அப்பொழுது அவனது கண்களில் தெரிந்த தடுமாற்றத்தையும், சற்று நேரம் அவன் பேச்சற்று நின்றிருந்த விதத்தையும் விழியெடுக்காது பார்த்திருந்தாள் நவிரா.

ஆனால், அவன் மக்கள் முன்பாக பேசியதைக் கேட்டு கண்களில் கனல் பறந்தது அவளுக்கு.

கோபமான முகத்துடன் அவனையே அவள் பார்த்திருக்க, தனது பேச்சின் இறுதியில் எதேச்சையாக சுழற்ற ஷிவ்வின் விழிகளோ, மாஸ்க்கினால் முகம் மறைக்கப்பட்டிருந்த பொழுதும் விழிகளைக் கொண்டே அவளைக் கண்டுகொண்டன.

அவன் தன்னைக் கண்டு கொண்டான் என்று அறிந்ததும் அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாத நவிராவோ, ஜான்சியிடம்.. “வண்டியை எடுங்க ஜான்சி, கிளம்பலாம்.” என்று கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

ஆனால் ஷிவ்வுக்கோ, ‘என்ன தைரியம் இருந்தா அவ என் கண் முன்னாடி வருவா?’ என்று ஆத்திரம் தான் மிஞ்சியது!

அவள் பின்னூடே சென்று, அவளது தோள்களைப் பற்றி உலுக்கி தனது கேள்விகளை எல்லாம் கேட்டுவிட வேண்டும் என்னும் ஆத்திரம் பெருகியது அவனுக்கு.

ஆனாலும் அந்தச் சூழ்நிலையில் அவனால் மேடையை விட்டுக் கீழிறங்கவே முடியாது. எனவே அவள் செல்லும் வழியைப் பார்த்தான்.

அந்த விஸ்பா கடற்கரை நோக்கிச் செல்லுவதை அவனது கண்கள் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டன.

மாநாட்டுத் திடலைத் தாண்டிச் சற்று தூரம் செல்லும் வரையிலும் கூட்டம் இருக்கவே செய்தது. ஆனால் அதன் பிறகு சாலை வெறிச்சோடிவிட்டது.

இரவு ஒன்பது மணி. அந்த ஒன்பது மணிக்கே சென்னை இப்படி அடங்கிவிட்டது ஆச்சர்யம் தான். ஆனால் அன்றைய மாநாட்டின் காரணமாக அந்த நகர்ப்பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதால், அந்தப் பகுதியில் அப்போதைக்கு அத்தனைக் கூட்டமில்லை.

ஆனால் வெறிச்சோடிய சாலையில் ஒரு புறம் கூட்டமாகக் கரை வேட்டிக்காரர்களின் தலை தென்பட்டது.

எல்லோரும் ஆளுங்கட்சிக்காரர்கள் என்று எண்ணிய ஜான்சியோ, எதையும் கண்டுகொள்ளாது சாதாரணமாகவே வண்டியை வேகமாக செலுத்தினார்.

ஆனால் அந்தக் கும்பல் திடீரென்று இவர்களது வெஸ்பாவின் முன்னே வந்து இவர்களை வழி மறிக்க, பெண்கள் இருவருக்கும் சற்று அதிர்ச்சி தான்.

ஏனென்றால் அவர்கள் முன்பாக வந்து நின்றது, அன்று காலையில் நவிராவிடம் அவமானப்பட்டு கட்சிக் கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அதே தண்டபாணி தான்!

புருவம் சுருக்கியபடியே பின்னே அமர்ந்திருந்த நவிரா வண்டியிலிருந்து கீழே இறங்க, அவளைப் பார்த்த தண்டபாணியோ..

“அமெரிக்கா மேடம்.. வணக்கம்!” என்று கிண்டலாகக் கூறித் தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டான்.

முகத்தில் கோபத்துடன் அவனைப் பார்த்தவள், “என்ன வேணும் உனக்கு?” என்றாள்.

அவளது கோபத்தைக் கண்ட அந்த தண்டபாணிக்கு ஆனந்தமாக இருந்தது போலும். மெதுவே அவளருகே நெருங்கி வந்தவன்..

“அமெரிக்கால இருந்து இந்த ஊரைப் பத்தி எதுவுமே தெரியாம நீ வந்ததுல தப்பு இல்ல கண்ணு.

ஆனா.. இந்த தண்டபாணியைப் பத்தி எதுவும் தெரியாம என்கிட்டே பகைச்சுக்கிட்டியே.. அது ரொம்பவே தப்பு..” என்று கூறி அவளது கன்னத்தைத் தொட அவன் கையை நீட்ட, நொடிக்குள் அவனது  கரத்தை ஜான்சியின் கரம் பற்றியது.

அதை ஏளனமாகப் பார்த்தவன்,

“அட.. அட.. அட.. என்ன ஒரு வேகம்!

இந்த வேகத்தை எல்லாம் வேற விசயத்துல காட்டு கண்ணு..” என்று அசிங்கமாகப் பேசியவன், பின்னே திரும்பி தனது ஆட்களைப் பார்க்க.. இருவர் வந்து ஜான்சியைப் பிடித்துக் கொள்ள, இன்னும் இருவர் வந்து அவரது முதுகுப் புறத்திலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டனர்.

அதைப் பார்த்து நவிராவின் கண்களில் சிறு மிரட்சி தான். ஆனால் இப்படிப் பொது இடத்தில் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? என்று சற்று தைரியமாகத் தான் இருந்தாள் நவிரா.

ஆனால்.. அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தண்டபாணி கூறினான்.

“இங்க பாரு நவிரா.. இதெல்லாம் உனக்குப் புதுசு கிடையாது. ஏற்கனவே அமெரிக்காவுல சந்தி சிரிச்சவ தானே நீ?

அதே தான் இங்கயும் நடக்கப் போகுது! என்ன?.. நான் கொஞ்சம் வயசானவன்.. அதனால அமைதியா ஒத்துழைச்சா, உனக்குப் பழைய மாதிரி சேதாரம் எதுவும் ஆகாம இருக்கும்.

இன்னைக்கு நீ என்னை அசிங்கப் படுத்தினதுக்கு, என் பசங்க முன்னாடி உன்னை நான் அனுபவிக்கனும்.. அது தான் உனக்குத் தண்டனை!” என்று நவிராவிடம் கூறியவன், பின்னிருந்த தன் ஆட்களிடம் திரும்பி..

“என்னடா? அடங்காத குதிரையை அடக்கிக் காட்டறதுல தான இருக்கு நம்ம வீரம்?” என்று எகத்தாளமாகக் கூற, பற்றிக் கொண்டு வந்தது நவிராவுக்கு.

அவனை ஓங்கி அறைய கைகள் பரபரத்தன தான். ஆனால் அதன் பிறகு.. இப்படி இருபது பேர் கொண்ட கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாது.

அதே சமயம் அவனது சாக்கடைப் பேச்சுக்களையும் சும்மா கேட்டு சகிக்க முடியாமல், “டேய்.. என்னைப் பத்தி காலைலயே நீ புரிஞ்சிருக்கணும். ஆனா நீ மேலும் மேலும் தப்பு பண்ணிட்டே போற.

இதுக்கெல்லாம் பின் விளைவுகள் ரொம்ப அதிகமா இருக்கும்.” என்று அவள் கூற, சலிப்பாகத் தலையசைத்தான் அந்த தண்டபாணி.

“ஸ்ஸ்ஸ்ஸ்.. இங்க பாருமா.. உன்கிட்ட பாடம் படிக்கறதுக்காக நான் இங்க வரல.. எனக்கு என்ன தேவைன்னு நான் சொல்லிட்டேன்..

சம்மதிச்சா, உடம்பு புண்ணாகாம இருக்கும்.. ஏற்கனவே காயப்பட்ட உடம்பு வேற.

இல்லனா, இதோ.. இந்த ஜான்சியமாவோட உயிருக்கு நான் உத்திரவாதமில்ல..” என்று கூற, இப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவனோ, ஜான்சியிடமிருந்து பறித்த துப்பாக்கியை எடுத்து, அவரை நோக்கியே குறிபார்க்கத் துவங்கினான்.

ஆனால் அவன் அந்தத் துப்பாக்கியில் குறி பார்க்கும் பொழுது தான் ஜான்சிக்கும், நவிராவுக்கும் தெரிந்தது, அவர்களுக்கு துப்பாக்கியை இயக்கும் முறையின் அடிப்படை கூடத் தெரியாது என்பது.

ஜான்சியின் சைகையில் நவிரா சாலைக்கு எதிர்ப்புறம் ஓட, இங்கு ஜான்சியோ தன்னைப் பிடித்திருந்தவர்களின் பிடியிலிருந்து முயன்று நழுவி, அவர்களை அடித்து வீழ்த்தத் துவங்கினார்.

இன்னமும் சிகிச்சையிலிருந்து மீண்டிராத நவிராவின் உடல் மெல்ல மெல்ல தொய்வடையத் தான் செய்தது.

ஆனால் பின்னால் துரத்திக் கொண்டு வருபவர்கள், கூலிக்கு அடிபணியும் மந்தை ஆடுகள். அவள் ஒரு கட்சித் தலைவரின் மகள், மேலும் இப்பொழுது அந்தக் கட்சிக்கே தலைவி என்பதும் சேர்ந்துகொள்ள, என்ன தான் தண்டபாணியின் பின்னே இருந்து குரல் கொடுத்தாலும், அவருக்கு முன்னே நின்று அவருக்காகப் போராடும் உண்மைத் தொண்டர்கள் அல்லவே!

அதனால் அத்தனை வேகமெடுத்து அவர்கள் துரத்தவில்லை.

ஆனால் வெறிகொண்ட நாயாய் அவளைப் பின்னே துரத்த வந்தான் தண்டபாணி. அவன் அத்தனை பலமானவனாக இல்லாது போனாலும், அவனது குடிவெறியும், நவிராவின் மீதிருக்கும் பழிவெறியும் அவனது உடலுக்கு உத்வேகத்தையே கொடுத்தன.

பின்னால் திரும்பிப் பார்த்தபடியே ஓடிய நவிரா, எதிரிலிருந்த புதர் மண்டிய சிறு காட்டுக்குள் நுழைய, அவளைப் பின்தொடர்ந்து வந்த தண்டபாணியும் அதற்குள் புகப் போனான்.

ஆனால் அந்தக் காட்டின் வளத்தோரமாய் பாழடைந்த ஒரு பள்ளி இருக்க, அந்தப் பள்ளிக்குள் புகுந்து கொண்டாள் அவள்.

அதே சமயம் தன்னைச் சுற்றி இருந்தவர்களில் ஐந்தாறு பேரை அடித்து வீழ்த்தி இருந்த ஜான்சியோ, அதற்கு மேல் இவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், நவிராவைக் காப்பாற்றத் தாமதமாகிவிடும் என்று அவள் சென்ற திசைக்கு செல்லப் பார்த்தார்.

ஆனால் அந்த சமயம் பார்த்து அவர்களை நோக்கி ஒரு பைக் வர, அந்த பைக்காரன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி வரவும், ஜானிசியோ, அவன் தண்டபாணியின் ஆள் என்று நினைத்து அவனையும் அடிக்கப் போக, பைக்காரனோ தனது ஹெல்மெட்டைக் கழற்ற, அவனது முகத்தை அப்பொழுது தான் பார்த்த அனைவரும் திகைத்துத் தான் போனார்கள், ஜான்சி உட்பட!

ஏனென்றால் அங்கே வந்திருந்தது ஷிவ்!

அவனைப் பார்த்து தண்டபாணி கோஷ்டி அதிர்ந்து நின்றது ஒரே ஒரு கணம் தான். ஆனால் மறுகணமே தண்டபாணி அவனிடம் சென்று..

“சார்.. மீட்டிங் அங்க நடக்குது.. நீங்க என்ன இந்த பக்கம்?” என்று எடுப்பாகக் கேட்க, அவனோ சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஜான்சியின் பக்கம் திரும்பி..

“நவிரா எங்க?” என்றான்.

ஜான்சியோ அவனையும் நம்பத் தயாராயில்லை. அவரைப் பொறுத்த வரைக்கும் நவிராவுக்கு தண்டபாணியால் எந்த அளவுக்கு ஆபத்து இருக்கிறதோ, அதே அளவு ஷிவ் மூலமாகவும் ஆபத்து இருக்கிறது.

அதனால் எதுவும் கூறாமல் அவர்களை எல்லாம் தாண்டி நவிராவைத் தேடிச் செல்லும் வழியைத் தான் கணக்கிட்டுக் கொண்டிருந்தார் அவர்.

அவரிடமிருந்து பதில் வராது என்று புரிந்து கொண்ட ஷிவ்வோ, தண்டபாணியைப் பார்த்து..

“எதுக்கு நீங்க நவிராவைத் துரத்தறீங்க?” என்று எடுப்பாகக் கேட்க, அவனோ அதற்கெல்லாம் அசைவதாய் இல்லை.

“அதெலாம் உட்கட்சி விவகாரம். உங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்ல.” என்று கூறிவிட்டு அந்த புதர்ப் பகுதிக்குள் செல்லப் போக, அதிலேயே ஷிவ்வுக்குப் புரிந்துவிட்டது, நவிரா அந்தப் பக்கமாகத் தான் சென்றிருக்கிறாள் என்று.

அவனுக்கு வேறு எதைப் பற்றிய யோசனையும் அப்பொழுது இல்லை. அவன் ஆளுங்கட்சியின் அடுத்த வாரிசு என்பதோ.. நவிரா எதிர்கட்சித் தலைவி என்பதோ, இருவரும் ஒருவரை ஒருவர் பழிவாங்கும் குறிக்கோளோடு இருக்கிறார்கள் என்பதோ, இருவரின் இந்த சந்திப்பு பின்னாளில் ஊடகத்தினால் எப்படி வேண்டுமானாலும் திரிக்கப்படும் என்பதும் கூட அவனுக்கு நினைவு வரவில்லை.

அப்பொழுது அவன் மனதில் தோன்றியதெல்லாம், நவிராவுக்கு ஆபத்து! அவளை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் அவனது மனதில் அப்போதைக்கு இருந்த எண்ணம்.

தண்டபாணியையும், அவனது ஆட்களையும் ஒரே தள்ளில் தள்ளிவிட்டுவிட்டு ஷிவ் முன்னோக்கிச் செல்ல, ஜான்சிக்கோ ஒன்றுமே புரியவில்லை.

தண்டபாணியின் ஆட்களுடன் நடந்த சண்டையில் கீழே விழுந்திருந்த தனது போனைத் தேடி எடுத்தவர், யார் யாருக்கோ போன் செய்ய அந்த இரவு நேரத்தில் யாருமே அவரது அழைப்பை ஏற்கவில்லை.

அவருக்கு இருந்த தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக போலீசை அழைக்கவும் அவர் விரும்பவில்லை. அதிலும் நவிராவுக்கு இப்பொழுது நாலாபுறமும் பகை இருந்தது.

காவல்துறையும் இப்பொழுது ஆளுங்கட்சியின் கைவசம் இருப்பதால் அவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை.

எனவே வேறு வழியில்லாமல் அவர் அழைத்தது.. சூர்யவர்மனுக்கு!

தன்னைத் தாக்கிய ஷிவ்வை நேரடியாக எதிர்க்க முடியவில்லை தண்டாபணியின் குழுவால். ஆனால் அவனுக்கு முன்பாக தாங்கள் நவிராவைக் கண்டுபிடித்துவிடும் நோக்குடன் அந்தப் புதருக்குள் இறங்கி அவளைத் தேட ஆரம்பித்தனர்.

சற்று தொலைவில் இடிபாடுகளுடன் இருந்த அந்தப் பழைய பள்ளிக்கூடத்தின் அருகே மெதுவே சென்றான் ஷிவ்.

சுற்றிலும் ஆட்கள் நவிராவைத் தேடும் அரவம் கேட்டது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்துக்குள் வந்து யாரும் அவளைத் தேட முனையவில்லை.

ஏனென்றால் அந்த அளவுக்கு சிதிலமடைந்து இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். இதில் அப்பொழுது பயங்கரமாக இடிஇடிக்க ஆரம்பிக்க, மழையும் சிறு தூறலாகப் பெய்ய ஆரம்பித்தது.

அந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தால் இவர்கள் உள்ளே செல்லும் அதிர்விலேயே அது அவர்கள் மேலேயே உடைந்து விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

எனவே தான் நவிராவும் அங்கே சென்றிருக்க மாட்டாள் என்று அவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்துக்குள் செல்லவில்லை.

ஆனால் ஷிவ் அங்கே சென்றான்!

உடைந்து கிடந்த ஓடுகள், பாழடைந்த அறைகளுடன் எங்கே காலை வைத்தாலும் கண்ணாடி குத்திக் கிழிக்கும் அளவுக்கு இருந்தது அது.

சத்தம் கிளப்பாமல் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தான். கும்மிருட்டாக இருந்ததில் அவனால் தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை தான்.

ஆனாலும் விடாமுயற்சியுடன் ஒவ்வொரு அறையாகத் தேடினான்!

காலடி சத்தம் கூடக் கேட்காது அவன் ஒரு அறைக்குள் நுழைய, அங்கே யாரோ வேகவேகமாக மூச்சுவாங்கும் சத்தம் மிக மெல்லியதாகக் கேட்டது.

அது சந்தேகமே இன்றி நவிரா தான்!

ஒரு மூலையில் கால்களைக் குறுக்கி அமர்ந்திருந்தவள், முகத்தை மூடிக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த இருளிலும் அவனுக்கு அவளது உடல்மொழி தெளிவாக விளங்கியது. இது.. இந்த பயம் அவளிடத்தில் அவன் பார்த்திராத ஒன்று!

மழையில்.. இருளில்.. குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் குட்டி நாய்க்குட்டியைப் போல சுவரோரமாக ஒண்டிக் கொண்டிருந்தாள் அவள்!

மனதில் குழப்பத்துடன் அவன் மெல்ல அவளருகே செல்ல, அப்பொழுது பார்த்து பெரும் இடி ஒன்று இடித்தது.

அதில் நவிராவின் உடல் தூக்கிப் போட, அதே சமயத்தில் ஷிவ்வும் அவளது தோளைத் தொட, பெரும் கூவலாக கத்திவிட்டாள் அவள்.

சட்டென்று தனது கையால் அவளது வாயைப் பொத்தியவனோ, அந்த இருளிலும் அவளது விழிகளுக்குள் ஊடுருவி தைரியம் வழங்க முற்பட்டான். வெளியே மழை, தூறலிலிருந்து பெரும் மழையாக பிடிக்கத் துவங்கியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!