காற்றே எனைக் கிள்ளாதிரு 15
விசேஷம் நல்லபடியாக முடிந்து கிளம்பியிருந்தனர். வீட்டிற்கு வந்ததும் ஷ்யாமளாவும், அரவிந்தனும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி சென்றிருந்தனர். அமுதினி இன்று விடுமுறை எடுத்திருந்ததால் வீட்டில் இருந்தாள்.
கௌதமும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஹாஸ்பிட்டல் சென்றுவிட்டான். அமுதினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
மாலைவேளையில் ரக்ஷியும் கீதாவும் வந்திருந்தனர்.
அமுதினி, “வாங்க சித்தி. வா ரக்ஷி” என அவர்களை வரவேற்று உபசரித்தாள்.
Advertisement
திருமணத்திற்கு பிறகு இப்போதுதான் வருகிறார்கள். ரக்ஷி இன்ஜியனிரிங் பைனல் இயர் படித்துக் கொண்டிப்பதால் படிப்புக்கான நேரமே அவளுக்கு சரியாக இருந்தது. தாலி பெருக்கி போடுவதற்கு ஷ்யாமளா கீதாவை அழைத்திருந்தார்.
ஆனால் காலை அதே நேரத்தில் வேறொரு பங்ஷனுக்கு கீதா செல்ல வேண்டியது இருந்ததால் மாலை வீட்டில் வந்து பார்ப்பதாக ஷ்யாமளாவிடம் சொல்லியிருந்தார்.
மாலை ஷ்யாமளாவுக்கு போன் செய்தவர், அமுதினி மட்டும் வீட்டில் இருப்பதை அறிந்து அவளையாவது பார்த்து விட்டு வரலாம் என வந்திருந்தார்.
Advertisement
அமுதினி வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வந்து கொடுத்து, காபியும் போட்டு கொடுத்து, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
Advertisement
ரக்ஷி, “அக்கா உங்க வெட்டிங் ஆல்பம் இருக்கா. நான் பார்க்கவே இல்லை. காட்டறீங்களா?”
அமுதினியும் “இரு ரக்ஷி. இங்கதான் இருக்கு. எடுத்து வரேன்”, என்று அவளது அறைக்கு சென்று எடுத்து வந்து கொடுத்தாள்
மூன்று பேரும் சேர்ந்தே பார்த்துக் கொண்டிருந்தனர். நேரமாவதை உணர்ந்து இரவு உணவிற்காக டிபன் செய்ய என அமுதினி எழுந்து கிட்சன் சென்றாள்.
Advertisement
திருமணத்திற்கு பிறகு சமையலுக்காக இருந்தவரை காலை ஒருவேளை மட்டும் வந்தால் போதும் என்றிருந்தாள்.
காலையில் வருபவர் அமுதினிக்கு தேவையான உதவிகளை செய்துகொடுத்து விட்டு சென்றுவிடுவார்.
இரவுக்கு அமுதினியே அவரவர்க்கு ஏற்ற வகையில சமைத்திடுவாள்.
இன்று இவர்கள் வந்திருப்பதால் சற்று முன்னமே இரவுக்கான உணவை சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
இவள் கிட்சனில் தனியாக சமைப்பதைப் பார்த்து கீதாவும் வந்து அவளுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
ரக்ஷி மட்டும் தனியாக உட்கார்ந்து ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்தவளது கண்கள் ஒரு இடத்தில் வந்ததும் அப்படியே நிலைக்குத்தி நின்றது.
அந்த போட்டோவையே வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதில் மெல்ல பொறாமை தீ எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
அதில் அரவிந்தனும் கனிமொழியும் சேர்ந்தமாதிரி நிறைய புகைப்படங்கள் இருந்தது. எல்லாம் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்ததுதான்.
இருந்தும் இந்த புகைப்படத்தில் இன்னும் நெருக்கமாக அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்தாற்போல பார்த்ததும் ரக்ஷிக்கு பொறாமை கனன்றது.
சில புகைப்படங்களில் தள்ளி இருந்தாலும், சிலதில் அரவிந்தன் அவளையொட்டி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தது எரிச்சலாக இருந்தது.
அரவிந்தன் சில புகைப்படங்களில் வேண்டும் என்றே கனியுடன் ஒட்டி நின்றவாறுதான் எடுத்திருந்தான்.
அது அவனாகவே யாருடைய கருத்தையும் கவராது பார்ப்பவருக்கு இயல்பாக தோண்றும்படி நின்று எடுத்ததுதான்.
இருவர் மட்டும் தனியாக இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இருந்ததால் யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ரக்ஷிக்கு பார்த்ததுமே தெரிந்தது.
திருமணத்திலும் ரிசப்ஷனிலும் அரவிந்தனின் ஒவ்வொரு செயலையும் விடாது அவள் பார்த்திருந்ததால் அவனை நன்றாகவே புரிந்தது.
திருமணத்திற்காக முகூர்த்தப் புடவை எடுத்த அன்றும் அரவிந்தனின் நடவடிக்கையை பார்த்துவந்த கீதா மகளிடம் கேலியாக பேசிக் கொண்டிருந்தார்.
“இந்த அரவிந்த் பய அனியோட கடைசி தங்கச்சி கனிகிட்ட என்ன வழிசல்ன்ற. ஹோட்டல்ல சாப்பிடும் போது கூட அவளை அப்படி கவனிக்கறான்” என பேச்சுவாக்கில் சிரித்துக்கொண்டே விளையாட்டாக ரக்ஷியிடம் கூறியிருந்தார்.
அரவிந்த் மாமாக்கு என்னைதான் பிடிக்கும். அது சம்பந்த வீட்டுகாரங்கன்ற மரியாதைக்காக அப்படி கவனிச்சிருப்பாங்க. இந்த அம்மா சரியா புரிஞ்சுக்காம எதையோ பார்த்துட்டு வந்து பேசறாங்க.
நான்தான் அன்னைக்கு கொலுவுக்கு வந்தன்னைக்கே பார்த்தேனே. அந்த கனிமொழி எவ்வளவு வெகுளியா காமடியா பேசிட்டிருந்தான்னு.
அதுமாதிரி ஏதோ சின்னப் பொண்ணுன்னு அக்கறையா கவனிச்சிருப்பாங்க. ஷ்யாமு அத்தை அவங்க இரண்டு பேரையும் ட்ராப் பண்ண சொன்னப்ப கூட அரவிந்த் மாமா மாட்டேன்னு சொல்லிட்டாங்க. கௌதம் மாமாதான போனாங்க.
இந்த அம்மாதான் எதையோ தப்பா பார்த்துட்டு வந்து பேசிட்டிருக்காங்க என கீதா சொல்லிய போதும் நம்பாமல் தன்னை சமன் செய்திருந்தாள்.
ஆனால் அந்த எண்ணங்கள் எல்லாம் திருமணத்திலும் ரிசப்ஷனிலும் கனியின் பின்னே அரவிந்தன் சுற்றுவதைப் பார்த்ததும் பொய்யாகியிருந்தது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் இதோ இந்த போட்டோவில் கனிமொழியைப் பார்க்கும்போது அரவிந்தனின் கண்களில் தெரிந்த மயக்கம் ஆத்திரத்தைக் கொடுத்தது.
உள்ளுக்குள் தோன்றிய எரிச்சலில் கண்ணுக்கு முன் இருந்த அந்த படத்தை பிரித்தெடுத்து கிழித்துவிடும் ஆங்காரம் வந்தது.
கனிமொழி அமுதினியின் கையைப் பிடித்துக் கொண்டு மலர்ந்து சிரிப்பது போலும், அரவிந்தன் அவளை கண்களில் காதல் சொட்ட ரசனையோடு பார்த்து நிற்பதைப் போலும் இருந்தது அந்த புகைப்படத்தில். அரவிந்தன் கண்களில் தெரிந்த கனிமொழியின் மீதான காதல் ரக்ஷிக்கு பொறாமையை பற்றவைத்தது.
சின்ன வயதிலிருந்து அவளுக்கு அரவிந்தன் என்றால் கொள்ளை பிரியம். விடுமுறை நாட்களில் இங்கு வரும் போது எல்லாம் அவனுடன்தான் சுற்றிக் கொண்டிருப்பாள். அவனும் ரக்ஷியை விட்டு விலகமாட்டான். இவள் மீது அவனுக்கு பாசமும் அதிகம். அத்தை பெண் என்பதைவிட உற்ற தோழியாய் அவளை பாவிப்பான். இருவருக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்காது.
இவர்கள் இருக்கும் இடம் எப்போதும் கிண்டல் கேலி காமெடி என கலகலப்புடன் சந்தோஷமாக உயிர்ப்புடன் இருக்கும்.
ரக்ஷி வளர வளர அவன் மீதான அன்பும் பிடித்தமும் இன்னும் வளர ஆரம்பித்தது. ஒருவேளை இது காதலாக இருக்குமோ என அவளுக்கு சந்தேகம்கூட. நாம மாமாவ காதலிக்கிறமோ. ஏன் கௌதம் மாமா மேல இல்லாத பாசம் அரவிந்த் மாமா மேல மட்டும் நமக்கு இருக்கு என அவளையே அவள் குழப்பி கொண்ட தருணங்கள் நிரம்ப உண்டு. இதுவரை வாய்விட்டு வெளியில் பேசியதில்லை.
பெண்களுக்கே உரிய அச்சம் நாணம் எல்லாம் அவளைத் தடுத்திருந்ததுபோல.
அத்தை மகன்தானே அப்படியிருந்தால் படிப்பு முடிந்ததும் நேரடியாக வீட்டில் தனது விருப்பத்தை சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணியிருந்தாள்
“இன்னுமா ஆல்பத்த பார்க்கற நீ?” என ரக்ஷியின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கீதா. அன்னையை நிமிர்ந்து பார்த்தவள், ஏதும் பேசாமல் மௌனத்துடன் ஆல்பத்தை மூடி வைத்தாள்.
அதற்குள் அமுதினியும் வந்து “வாங்க சித்தி சாப்பிடலாம். வா ரக்ஷி” என சாப்பிடுவதற்காக அவர்களை அழைத்துச் சென்றாள்.
ரக்ஷி சரியாக சாப்பிடாததைப் பார்த்த அமுதினி அவளிடம் “என்னாச்சு ரக்ஷி? தட்டுல வைச்சது அப்படியே இருக்கு. பிடிக்கலையா? என்றாள்.
“இல்லக்கா. பசியில்ல” என சிரிக்க முயன்று சமாளித்தாள்.
கீதாவும் மகளை நிமிர்ந்து பார்த்தார். எப்போதும் சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா என்றால் விரும்பி சாப்பிடும் மகள் இன்று முகத்தை சுணக்கமாக வைத்துகொண்டிருந்ததும் இல்லாமல் சரியாக சாப்பிடாமலும் இருந்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
என்னாச்சு இவளுக்கு? வரும்போதுகூட நல்லாதான பேசிட்டு வந்தா என்கூட என மகளைப் பற்றி சிந்தித்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ரக்ஷிதா மனதில் கண்டதையும் நினைத்து உழன்றவளுக்கு தொண்டையில் உணவு இறங்குவேனா என அடம் செய்தது.
முடிந்தவரை சாப்பிட்டு எழுந்தவள் கூடிய விரைவில் தனது மனதிலிருப்பதை அரவிந்தனுக்கு தெரியப்படுத்திவிட வேண்டும் என என முடிவு செய்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் கீதாவும் ரக்ஷியும் புறப்பட ஆரம்பித்தனர்.
“அத்தை வந்ததும் அவங்களையும் பார்த்துட்டு போலாமே சித்தி”.
“இல்லம்மா. இப்பவே நேரமாயிடுச்சு. அவங்களாம் வர இன்னும் நேரமாகும் போல. ரக்ஷி அப்பாவும் வீட்டுக்கு வர நேரமாச்சு. முக்கியமா நான் உன்னதான் பார்க்க வந்தேன். அவங்ககிட்ட போன்ல பேசிக்கறேன்” என்று கூறி புறப்பட்டு விட்டார்.
அடுத்த இரண்டு நாளில் ரக்ஷி முடிவு செய்ததைப் போலவே அரவிந்தனுடன் பேசி அவனை சந்திப்பதற்காக வந்திருந்தாள். அவர்கள் எப்போதும் வரும் மாலில் இருந்த ஐஸ்கிரீம் கடையில் அவனுக்காக காத்திருந்தாள்.
இருவரும் இதுமாதிரி எப்போதாவது போரடித்தால் வெளியில் செல்வதுதான். ஆதலால் இவள் அழைத்ததும் அவனும் ஒப்புக் கொண்டிருந்தான்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை என்பதால் மதியத்திற்கு மேல் சந்திப்பதாக முடிவு செய்திருந்தனர்.
“ஹேய் வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என கேட்டுக் கொண்டே வந்து உட்கார்ந்தான்.
“ஆமாம், எப்பவும் போல நீங்கதான் லேட்டு. நான் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு” என்று சிணுங்கினாள்.
“சாரிடா. இன்னைக்கு ஒரு நாள்தான லீவ். அதான் நல்லா தூங்கிட்டேன்”.
“ஹ்ம்ம்… இப்பல்லாம் ஐயா ரொம்ப பிஸி போல. வீட்டுக்கு வந்தாலும் பார்க்க முடியறது இல்ல. எங்க வெளிய கூப்பிட்டாலும் வரது இல்ல. என்னலாம் ஞாபகத்துல இருக்குமா ஸாருக்கு. நான்தான் உங்களையே நினைச்சிட்டிருக்கேன்” என்றாள் பூடகமாக.
“ஹேய் அப்படியெல்லாம் இல்லடா. உண்மையாவே வேலை இருந்ததுடா. இல்லனா நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா? சரி அதவிடு. மாமா அத்தையெல்லாம் எப்படி இருக்காங்க?”
“ஹ்ம்ம் நல்லாயிருக்காங்க”.
“வீட்டுக்கு வந்துருக்கலாம் இல்ல. அம்மாவும் உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டிருந்தாங்க”.
“நான்தான் வந்தனே. நீங்க இல்ல”.
“ஓ… அதுக்குதான் இன்னைக்கு நான் வீட்டுக்கு கூட்டதுக்குகூட வரலன்னு சொன்னியா…?”
“ம்ஹூம்” என்றவள். எனக்கு உங்ககிட்ட தனியா பேசனும். அது வீட்டுல முடியாது என சொல்ல வந்து சொல்ல முடியாமல், “இல்ல எனக்கும் வீட்ல போரடிச்சது. எங்கயாவது வெளியில போனா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதான் இங்க, மாலுக்கு கூப்பிட்டேன்”.
“ஓகே. என்ன ஆர்டர் பண்ணட்டும்? ரெகுலரா உனக்கு பிடிச்சதுதான”.
“நான் அல்ரெடி இரண்டு உள்ள விட்டுட்டேன்”.
“அடிப்பாவி, உன்னை நான் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல…”
“இது ஒன்னும் அதிகம் இல்ல. எப்பவாவது இதுமாதிரி வெளிய வரும் போதுதான் சாப்பிடுறேன்”.
“சரி. இரு” என எழுந்து சென்று அவளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி பிளேவரில் ஐஸ்கிரீம் வாங்கி வந்து கொடுத்தான்.
“நீங்க…, உங்களுக்கு வாங்கலயா”?
“நான் ஜூஸ் ஆர்டர் பண்ணியிருக்கேன். நீ சாப்பிடு”.
“ம்ம்…”
“படிப்ஸ் எல்லாம் எப்படி போகுது. எப்ப செம் ஆரம்பிக்குது? இந்த செம்முக்கான அசைன்மன்ட் வொர்க்லாம் முடிச்சிட்டியா…? என பொதுவான பேச்சுக்கள் அவர்களுக்கு இடையில் சென்று கொண்டிருந்தது.
ரக்ஷி அரவிந்தனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் எப்படி தன் மனதில் உள்ளதை அவனிடம் வெளிப்படுத்துவது என தடுமாறிக்கொண்டிருந்தாள். அவளது மனதில் உள்ளதை அவனிடம் பட்டென சொல்ல முடியாமல் வெட்கமும், தயக்கமும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.
ரக்ஷியின் மனதில் அரவிந்தன் தனக்கானவன் என்ற பிம்பத்தை தவிர்த்து வேறுமாதிரியாக அவளால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை.
அரவிந்தனின் கனிமொழியுடனான நெருக்கம் அவளுக்குள் பூதாகரமாக பொங்கிக் கொண்டிருந்தது.
அதை அவள் உணர்ந்த தருணத்தில் இருந்து அவளால் வேறு எதையும் சிந்திக்கவோ எண்ணவோ முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக தன்னை ஸ்திரப்படுத்தியவள் அவனிடம், அவன் மீதான தன்னுடைய காதலை கூறிவிட்டாள். அதைக் கேட்ட அரவிந்தன் ஸ்தம்பித்துவிட்டான்.
முதலில் ஏதோ விளையாட்டுக்கு தன்னை பிராங் செய்வதற்காக சொல்கிறாளோ என நினைத்து அவளிடம் “ஹேய் விளையாடாத. எதெதுல விளையாடறதுன்னு இல்லையா உனக்கு?” என அவளை அதட்ட செய்தான்.
“நிஜமாதான் சொல்றேன் மாமா. நான் விளையாடலாம் இல்ல. நான் நிஜமாவே உங்களை லவ் பண்றேன்” என அவள் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு பேசியதும்தான் அவனுக்கு ஓரளவு புரிய ஆரம்பித்தது.
அப்பொழுதும் அவளை நம்பாமல் முறைத்துக் கொண்டிருந்தவனை, “பிராமிஸ் மாமா” என அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்து அவள் சொல்லவும் விக்கித்துபோய்விட்டான்.
சின்னப்பெண் என நினைத்தவளிடம் இப்படியான வார்த்தைகள் அவனை அதிர்வுறதான் செய்தது. செயலற்று பார்த்திருந்தான்.
இத்தனை நாள் பாசமாக பழகியவளிடம் இருந்து இத்தகையான அணுகுமுறையை அவன் எதிர்பார்க்கவில்லை. ரக்ஷியின் வாயிலிருந்து வந்திருந்த வார்த்தைகள் அவனை உறைய வைத்திருந்தது.
“வாட்? என்ன சொல்ற ரக்ஷி” என அதிர்ந்துதான் போனான்.
விவரம் தெரிய ஆரம்பித்ததிலிருந்து அவள் கூடவே வளர்ந்தாலா, இல்லை தாத்தா பாட்டி இருக்கும் காலத்தில் “அவள் உன்னைவிட வயசுல சின்னவ. உன்னோட தங்கச்சி மாதிரி பத்திரமா பார்த்துக்கனும்” என இவர்கள் வீட்டிற்கு வந்த போதெல்லாம் சொல்லி கொடுத்தாலோ இதுவரை ரக்ஷியை அப்படி ஒரு கோணத்தில் எண்ணி பார்த்ததில்லை.
கருத்து தெரிய ஆரம்பித்த பிறகு இருவரும் நண்பர்கள் போல் வெளிப்படையாக பேசி பழகியதால் அவர்களுக்கிடையே இதுவரை எந்த பேதமும் இருந்ததில்லை. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் சகஜமாகவே பேசி பழகுவர்.
ரக்ஷிக்கு இன்றுவரை ஒரு நல்ல தோழன் என்றால் அது அரவிந்தன்தான். பள்ளிகாலத்தில் ஆகட்டும், கல்லூரியில் நடக்கும் எந்த நிகழ்வுகளாகட்டும் எல்லாவற்றுக்கும் அவன் வேண்டும் அவளுக்கு.
எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்தால்தான் அவளால் நிம்மதியாகவே இருக்க முடியும். அந்த அளவுக்கு அவனிடம் நெருக்கமாக இருப்பாள்.
அரவிந்தனும் அவளிடம் நன்றாகவே பேசி பழகுவான். ஆனால் இதுவரை அவளை தனக்கு இணையாக தன்னுடன் சேர்த்து வைத்து நினைத்து பார்த்ததில்லை. ரக்ஷி இப்படி கேட்டதும் அவனுக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.
இவள் மனசுல எப்ப, எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்தது? இதுவரைக்கும் நான் எப்படி இதை கவனிக்காம இருந்தேன் என நொந்து கொண்டவன், எதனால இவ இப்படி நினைக்க ஆரம்பிச்சாள்? என தனக்குள்ளேயே தத்தளித்துக் கொண்டிருந்தான்.
என்ன சொல்வது என்று அவனுக்கு தடுமாற்றமாக இருந்தது. எதிரிலிருக்கும் ரக்ஷியைப் பார்க்க அவனுக்கு இன்னும் சிறு பெண்ணாகதான் தெரிந்தாள்.
அவள் தப்பா புரிஞ்சுகிட்டாளா…? இல்லை நான் அவள் மனசுல அப்படிப்பட்ட எண்ணம் உருவாகற மாதிரி நடந்துகிட்டேனா… என தலையைப் பிடிக்காத குறையாக தன்னை உலுக்கிக் கொண்டிருந்தான்.
ம்ப்ச்… சின்ன பொண்ணு ஏதோ என் மேல இருக்கற க்ரஷ்ல தப்பா புரிஞ்சுகிட்டிருக்கா? எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா என நினைத்தவன் பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொன்னான்.
“எதனாலடா உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. உன்னை என்னால அப்படி நினைச்சுகூட பார்க்க முடியல. நீ இன்னும் என் கண்ணுக்கு சின்ன வயசுல என் கையை பிடிச்சுட்டு விளையாடுவியே அந்த ரக்ஷியாதான் தெரியற”.
“ஒருவேளை நாம இரண்டு பேரும் பிரண்ட்லியா பேசி பழகறத நீ வேற மாதிரி நினைச்சிட்டியாடா…? அப்படிதான் தோணுது. கரெக்ட், அதுதான் உன்னை இப்படி பீல் பண்ண வச்சிருக்கும்”.
“சின்ன வயசுல இருந்தே நாம இரண்டு பேரும் க்ளோசா இருக்கறதால நீ இப்படி நினைச்சுட்ட போல. இதுக்கு பேர் லவ் இல்லடா. அது வேற. கிரஷ்மாதிரி”.
“நீ சின்ன பொண்ணுடா. முதல்ல படிப்பை முடி. முடிச்சிட்டு வேலைக்கு போனேன்னா உனக்கே வெளியுலகம் புரியும். படிக்கற பிள்ளை கண்டதையும் நினைச்சு மனசை குழப்பிக்காத”.
“இதுக்கெல்லாம் இன்னும் டைம் இருக்குடா. உனக்கு பிடிச்ச மாதிரி, நீ நினைக்கற மாதிரி லைப் பார்ட்னர் உனக்கு நிச்சயம் கிடைப்பான்”.
“நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம். எங்க ரக்ஷிக்கு ஏத்த மாதிரி அவளுக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பார்த்து கலக்கிடமாட்டோம்” என சந்தோஷமாகவே அவளுக்கு குழந்தைக்கு சொல்வது போல நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் பேச பேச அவளுக்கு ஆத்திரம்தான் அதிகமானது. ஓஹ்… நான் சின்னப் பொண்ணா…? அப்படின்னா…, அவளுக்கு என்ன வயசு ஆச்சு? அவள் மட்டும் இவன் கண்ணுக்கு குமரியா தெரியறாளா…? என இன்னும் பொங்கிக் கொண்டுதான் வந்தது ஆவேசம்.
மொத்தமாக அரவிந்தன் பேசியது எதுவும் அவள் காதுக்குள் செல்லவில்லை. அவன் பேசியதத்தன்னையும் கிடப்பில் போட்டு, அவள் எண்ணியது நடக்க வேண்டும் என திரும்ப திரும்ப அவள் எண்ணியதையே பேசிக் கொண்டிருந்தாள்.
“ஏன்? எனக்கு பிடிச்ச மாதிரியான லைப் பார்ட்னரா, நீங்க ஏன் இருக்க கூடாது மாமா? என் ஆசையும் அது தானே? நான் கண்டதையும் நினைக்கல தெளிவாதான் யோசிக்கறேன். நான் இன்ஜினியரிங் பைனல் இயர் படிக்கறேன். சின்ன பொண்ணு இல்ல. எனக்கு நல்லா விவரம் தெரியும். மெச்சூர்டான பொண்ணுதான். எனக்கும் எது சரி தப்புன்னு யோசிக்க முடியும். அது மட்டும் இல்லாம நீங்க யாரோ இல்லயே. எனக்கு கட்டிக்கற முறைதான” என அவனிடம் திரும்ப திரும்ப வாதிட ஆரம்பித்தாள்.
அவளை ஆயாசமாக பார்த்திருந்தான். எவ்வளவு எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாமல் அவள் பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறாளே. இருக்கலாம் அவள் மனதில் அவனைப் பற்றின விருப்பம் காதலாகவும் இருக்கலாம்.
ஆனால் இவனுக்கு அவள் மேல் அப்படி எதுவும் எண்ணம் இல்லையே. இது இருவர் சம்பந்தப்பட்ட வாழ்க்கை அல்லவா? இவனுக்கும் விருப்பம் இருக்க வேண்டும் அல்லவா? இவன் மனதுதான் வேறொருத்தியின் புறம் சென்றுவிட்டதே.
அரைமணி நேரமாக பொறுமையாக அவன் மறுபடியும் மறுபடியும் எடுத்து பேசியும் அவள் பிடிவாதமாக இருந்தாள். இவன் பேச பேச இன்னும் அவளுக்கு அழுத்தமும், பிடிவாதமும் கூடியதே தவிர. அவள் பிடியிலிருந்து மாறவில்லை.
“உங்களுக்கு இதபத்தி பேச கூச்சமா இருந்தா, அத்தை என்ன சொல்வாங்களோன்னு சங்கடப்பட்டீங்கனா, நீங்க வீட்ல பேச வேணாம் மாமா. நானே பேசறேன். எனக்கு உங்களை கட்டிக்க விருப்பம்னு நானே வீட்ல சொல்லி பேசறேன்”.
“அப்பா அம்மாகிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறேன்” என அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து விட வேண்டும் என முழுமுயற்சி செய்தாள்.
சின்ன பெண், ஏதோ மெச்சூர்ட் இல்லாம பேசறா, சொன்னா புரிஞ்சுப்பானு நினைத்து உட்கார்ந்திருந்தவனுக்கு, இவள் பேச பேச கோவம்தான் வந்தது.
“என்ன உளர்ற? நான் எப்போ உன்கிட்ட வீட்ல பேச பயமாயிருக்குன்னு சொன்னேன்” என்றான் கோவமாக.
“அப்ப உங்களுக்கு ஓகேவா? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா?” என்றாள் ஆசையை கண்களில் தேக்கி.
அவளைப் பார்க்க அவனுக்கும் பரிதாபமாக இருந்தது. “ம்ப்ச் திரும்ப திரும்ப அதையே பேசாத ரக்ஷி. நான்தான் தெளிவா சொல்லிட்டேன்ல”.
“என்ன சொன்னீங்க? நான் சின்னு பொண்ணு. எனக்கு மெச்சூர்ட் இல்ல. படிச்சிட்டு வேலைக்கு போ இதுவா? இதல்லாம் எனக்கு தெரியாதா மாமா? நான் உங்ககிட்ட பேச வந்தது இதை இல்ல. நம்ம லைப்ப பத்தி” என்றாள் ஆவேசமாக.
இதுவரை இவளது இந்த கோணத்தை பார்த்திராதவனுக்கு அய்யோ எனதான் இருந்தது. அவனுக்கு தெரிந்த ரக்ஷி இது இல்லையே. சின்ன பெண். ஸ்வீட் கேர்ள். கொஞ்சல், கேலி, கிண்டல், கலாட்டா, விளையாட்டு என இவளது எத்தனையோ பரிணாமங்களை பார்த்திருந்தவனுக்கு இவளது இந்த ரௌத்திரமான அவதாரம் பயத்தைக் கொடுத்தது. என்ன செய்வது? எப்படி இவளுக்கு புரிய வைப்பது என தவித்துக் கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தான்.
பாவம் ரக்ஷிக்கு புரியவில்லை. காதல் வற்புறுத்தி வருவதில்லை. அது தானாக வரவேண்டும் என.
தனக்கு மட்டும் அது இருந்தால் போதுமா? எதிராளிக்கும் அல்லவா தன்னைப் போல விருப்பம் இருக்கவேண்டும்.
விருப்பம் இல்லையென்றால் அது நரகமாகிவிடும் என அவளுக்கு யார் சொல்வது? அன்பு கேட்டுப் பெறுவதில்லையே. அது காலத்துக்கும் சிக்கலைக் கொடுத்துவிடும் அல்லவா?
ரக்ஷி அரவிந்தனை கனியுடன் சேர்ந்து பார்க்கும்வரை எதைப் பற்றியும் மனதில் போட்டு அலட்டிக் கொள்ளவில்லை. சாதாரண மனநிலையில்தான் இருந்தாள்.
யாருக்கு தெரியும்? ஒருவேளை அப்படியே வாழ்க்கை தொடர்ந்திருந்தால்கூட, கனி இவர்களுக்கு இடையில் வராமல் இருந்திருந்தால், வேறு யாரையாவது கூட இவளுக்கு பிடித்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்.
அரவிந்தனை விட பெட்டராக இவளது வாழ்க்கையில் யாரும் வந்திருந்தாலோ, அல்லது வீட்டில் அமைத்துக் கொடுத்திருந்தாலோ இவளும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
ஆனால் கனியை அரவிந்தனுடன் சேர்த்து பார்த்ததிலிருந்து அவளுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மாற துவங்கியிருந்தது. அது அவன் மேல் வைத்திருக்கும் பொசசிவ்னெஸ்சாககூட இருக்கலாம்.
அரவிந்தன் நினைப்பதுபோல இன்னும் ஆற ஆமர அவள் யோசித்து பார்த்திருந்தால் அவளுக்கு புரிந்திருக்குமோ என்னவோ.
இப்போதைக்கு இந்த நேர எண்ணங்கள் அவளை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.
அந்த மனநிலையில் இருந்து வெளிவந்து அவள் யோசிக்கவும் விரும்பவில்லை. அவளைப் பொறுத்தவரை தான் நினைப்பது சரி என்ற குருட்டு பிடிவாதம்.
ரக்ஷிக்கு அரவிந்தனின் மீது நல்லெண்ணம் இருந்தது. இதுவரை இருவர் மட்டுமே க்ளோசாக பழகியிருந்ததால் மூன்றாவதாக ஒரு நபரை தங்களுக்குள் அனுமதிக்க அவளுக்கு விருப்பமில்லை.
உண்மையிலேயே அரவிந்தன் மீது பிடித்தம் இருந்தது. ஆனால் அதற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாட்டை அவள் பிரித்தறிந்திருந்தால் இன்றைய வாக்குவாதத்திற்கே வேலையிருந்திருக்காது.
அவள் தெளிவான மனநிலையில் இருந்திருந்தால் கொஞ்சம் நேரமெடுத்து நிதானமாக சிந்திருந்தால் அவளே உண்மையை உணர்ந்திருப்பாள்.
ஆனால், அவள்தான் கனியையும் அரவிந்தனையும் ஒன்றாகப் பார்த்ததிலிருந்து பித்து பிடித்தவள் போல இருக்கிறாளே.
அவர்களைக் ஒன்றாக கண்டதிலிருந்து மனதுக்குள் தேவையில்லாத எண்ணங்கள் எழுந்து அவளை வாட்டி வதக்கி பொறாமையில் எரித்துக் கொண்டிருந்தது.
அப்படியிருந்தும் ரிசப்ஷனில் அரவிந்தன் கனியின் பின்னே சுற்றியதைப் பார்த்து அவளது மனசாட்சியே, அப்படி என்ன அவன் பெரிய இவன்? கிட்டாதென வெட்டென மற என்பது போல் விட்டுத் தள்ளு.
இவன் மட்டும் தான் உலகத்தில இருக்கானா? என கேள்வி கேட்டு குடைந்தாலும், இல்ல இல்ல, இவனை மட்டும்தான் எனக்கு பிடிச்சிருக்கு. இவனை நான் யாருக்கும் விட்டு தரமாட்டேன் என அடுத்ததை எண்ண விரும்பாமல் பிடிவாதாமாக அவனையே இறுக்கிப் பிடிக்க நினைத்தாள்.
தனக்குப் பிடித்த பொம்மையை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என குழந்தைகள் அடம் பிடிப்பதுபோல் இவன் மறுப்பாக பேச பேச அவளுக்குள் மேன்மேலும் பிடிவாதம் மட்டுமே வளர்ந்தது.
அரவிந்தன் இதுவரை தனக்கு கொடுத்த முக்கியத்துவம் எல்லாம் பறி போனதாக, கனி இவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டதாக மனதில் துடித்துக் கொண்டிருந்தாள்.
திருமணத்திலும் ரிசப்ஷனிலும் அரவிந்தன் கனியிடம் காட்டிய அருகாமையை நினைத்து ரக்ஷிக்கு உள்ளுக்குள் புகைச்சல்தான்.
இவ்வளவு நாள் நாங்க இரண்டு பேரும் தான ஒன்னா இருந்தோம். இப்ப வந்த இவள் எங்களுக்குள்ள வருவாளா என்ற போட்டி மனப்பான்மை அவளை யோசிக்கவே விடவில்லை.
அப்படி என்ன என்னிடம் இல்லாதது, அவளிடம் இருக்கிறது. காணாததை கண்ட மாதிரி இந்த அளவு வழியிறான். அப்ப இவ்வளவு நாள் இவனோட க்ளோசா இருந்த நான் இவனுக்கு முக்கியமில்லையா? என கண்டதையும் முன்னுக்கு பின் முரணாக எதை எதையோ நினைத்து தன்னையும் வதைத்து அரவிந்தனையும் வதைத்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்.
