அத்தியாயம் – 5
அத்தியாயம் – 5
நடுங்கும் இதயத்துடன் தன் முன்னால் இருப்பவனைப் பார்த்தாள் நவிரா. அவன் முன்பாக மீண்டும் அதே போன்றதொரு பலவீனமான நிலையில் இருப்பது அவளுக்குப் பெரும் அவமானமாகத் தான் இருந்தது.
Advertisement
ஆனால் இன்னமும் பழைய சம்பவங்களில் இருந்து மீண்டிராத மனமோ தன்னையும் அறியாது தன் வாயை மூடியிருந்த அவனது கரத்தை இறுக்க பற்றியிருந்தது.
தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் குழந்தை, தன் காலைச் சுற்றிப் பிடித்து, தன்னை நீருக்குள் இழுத்துக் கொண்டிருக்கும் கொடியையே தன் துணையாய்க் கருதி இறுக்கப் பற்றிக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்?
Advertisement
Advertisement
அதே நிலை தான் தன்னது என்று நவிராவுக்குப் புரிந்தாலுமே, அவளால் தன்னை நிலைப்படுத்தவே முடியவில்லை.
அவனுக்கும்.. ஷிவ்வுக்குமே அதே போன்றதொரு நிலை தான்.
Advertisement
அவள் கோபப்பட்டிருந்தால், கத்தியிருந்தால், ஏன் எப்பொழுதும் போல வெறுமனே அவனை அவள் வெறுப்பாகப் பார்த்திருந்தால் கூட இவனுக்கு உச்சந்தலையில் சுர்ரென்று ஏறியிருக்கும் தான்.
ஆனால் முற்றிலும் மாறாக இப்படி பயந்து போய் ஒடுங்கி அமர்ந்திருந்த அந்தத் தோற்றம் அவனுக்குள்ளுமே ஏதோ செய்ய, மெல்ல அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தான்.
என்னவோ.. அவளைக் சுற்றியிருக்கும் அத்தனை ஆபத்துகளுமே அவனது அந்த அணைப்பில் அவளை விட்டு விலகப் போவதாய் ஓர் எண்ணம் அவனுக்குமே!
இருவரும் ஒருவரை ஒருவர் விழியெடுக்காது பார்த்திருந்த அந்த நேரத்தில் காதையே பிளக்கும் அளவுக்கு பேரிடி ஒன்று இடிக்க, அதில் சட்டென்று சுய உணர்வு அடைந்தார்கள் இருவரும்.
தன்னை அணைத்திருந்தவனின் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டுவிட்டு, தடதடக்கும் இதயத்தோடு அங்கிருந்து எழுந்து சென்று அருகிலிருக்கும் ஜன்னலுருகில் நின்றுகொண்டாள் நவிரா.
இவ்வளவு நேரம் அவன் அணைப்பில் அவள் கிறங்கி இருந்ததென்ன? இப்பொழுது என்னவோ தீச்சுட்டதை போல அவள் விலகி ஓடுவதென்ன? என்று ஆத்திரமாய் வந்தது ஷிவ்வுக்கு.
அந்தக் கோபத்தில்..
“என்னமோ இவ்வளவு நேரம் அப்படி இறுக்கமா கட்டிக்கிட்டு இருந்த? இப்போ என்ன ரொம்ப ஒழுங்கு மாதிரி என் கையைத் தட்டிவிட்டுட்டு ஓடிப் போற?
இதெல்லாம் செஞ்சா மட்டும் உன்னை நான் நல்லவனு நம்பிடுவேனா?
நீ, உன் காரியம் ஆகறதுக்காக எவ்வளவு கீழ இறங்குவன்னு எனக்கு நல்லாவே தெரியும்டி..” என்று அவன் அமிலமாய் கொட்ட, அவனைச் சுட்டெரித்துவிடும் கோபத்துடன் திரும்பி முறைத்தாள் நவிரா.
“நீ எவ்வளவு கேவலமானவன்னு எனக்கு மட்டுமில்ல, உனக்கும் கூட நல்லாவே தெரியும்.
அதனால உன் நல்லவன் வேஷத்தை வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ..
ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு உன்கிட்ட போய்.. நான்.. நான்..” என்று வாக்கியத்தை முடிக்க முடியாதது அவள் இதழ் நடுங்கித் தடுமாறித் திணற, அவளது முற்றுப் பெறாத வாக்கியமே அவனது கோபத்தை எரிமலையின் சீற்றமாய் மாற்ற போதுமானதாய் இருந்தது.
“ஏய்..” என்று கத்தியபடியே எழுந்து அவளருகே சென்றவன், நொடியில் அவளது கழுத்தைப் பற்றிவிட, அவளோ சற்றும் அதிராமல் அவனது விழிகளையே பார்த்தாள்.
அந்த சலனமற்ற பார்வையில் ஷிவ்வின் இதயத்துடிப்பின் தாளம் ஏனோ தடுமாறியது.
வெளியே பெய்யும் மழையின் சாரல், ஜன்னல் வழியாக நுழைந்து நவிராவின் முகத்தை நனைக்க, முகம் நனைத்த மழைத்துளி, தாகம் தணிக்க அவளது இதழ் நோக்கி பயணப்பட்டது!
அசையாது நிலைத்திருக்கும் அவளது விழிகளையே அலைப்புறுதலாய் பார்த்தவன், மழை நீர் பயணிக்கும் பாதை பிடித்து தன் பார்வையை அவன் ஓட்ட, அந்த மழைநீர் இளைப்பாறிய பெண்ணவளின் தேனிதழில் அவன் பார்வையும் தடம்புறள.. தன்னையும் மீறி அவளது இதழோடு அவனிதழ் இதழ் பதிய, ஒரு கணம் அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகளோ தன்னையும் அறியாது மூடிக் கொள்ள, நவிராவின் இரு கைகளும் ஷிவ்வின் சட்டைக் காலரை இறுகப் பற்றிக்கொள்ள, அவளின் கழுத்தைப் பற்றியிருந்த ஷிவ்வின் இடக்கையின் அழுத்தம் குறைய, அவளது வலக்கையோ.. மெல்ல மேலெழுந்து பெண்ணவளின் இடையில் பதிந்தது!
அந்த இதழ் முத்தம் எத்தனை நேரம் நீண்டதோ தெரியவில்லை. காதல், காமம் ரெண்டும் தவிர்த்து, கோபம்.. ஆத்திரம்.. வன்மம்.. என அத்தனை உணர்வுகளும் கலந்து அந்த முத்தம் பரிமாறப்பட, சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ஒலிகளும் இவர்களுக்காகவே நிசப்தித்து விட, அங்கே கேட்டதென்னவோ.. வான் மழையின் ஓசைக்கு இசைவாக ஒலித்த அவர்களின் இதயத்தின் “தடக்.. தடக்” இசை!
ஆரம்பகட்ட வேகம் குறைந்து, ஒருவருள் ஒருவர் மூழ்கும் நேரம், அந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவும், சட்டென இருவரும் தன்னிலை மீண்டு, வேகமாகப் பிரிந்து.. அந்த அறையின் இரு வேறு மூலைகளில் முதுகு காட்டி நிற்க, யாரும் எதிர்பாராத விதமாக கையில் ஒரு பெரிய டார்ச்சுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சூர்யவர்மன்!
மூலைக்கு ஒருவராய் நின்றிருந்த நவிராவையும், ஷிவ்வையும் பார்த்த சூர்யவர்மனுக்கு நிஜமாகவே பேரதிர்ச்சி தான்.
ஜான்சி அந்த நேரத்தில் போன் செய்து நவிராவும், அவரும், இப்படி தண்டபாணியின் ஆட்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதாகவும், அந்த இடத்துக்கு ஷிவ்வும் வந்திருப்பதாகக் கூறவும் இவனுக்கு அதிர்ச்சி தான்.. பதட்டம் தான்.. பயமும் தான்!
ஆனால் அவன் தண்டபாணியை நினைத்து பயப்படவில்லை, மாறாக அவனது பயமெல்லாம் ஷிவ்வை நினைத்து தான்.
இருவரது கடந்த காலம் ஒரு மேடை ரகசியம்!
ஆனால் நிகழ்காலம் யாருக்குமே புரியாத புதிர்!
அதன் சிறு பகுதி ஊடகத்தின் யூகம்!
அந்த யூகம் தான் உண்மை என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஊடகத்தாலும், ஏன் இந்த இருவராலும் பரப்பப்பட்ட செய்தியின்படி பார்த்தால், இருவரும் ஒருவரை ஒருவர் ஆதி முதல் அந்தம் வரை வெறுக்கின்றனர்.
அந்த வெறுப்பினால் இப்பொழுது தனித்திருக்கும் நவிராவை என்ன செய்வான் அந்த ஷிவ்? என்ற பயத்தினால் தான் புயல் வேகத்தில் இங்கே அவன் வந்தது.
என்னவோ காரணமே தெரியாமல் நவிராவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் பிறந்து அவனையும் அறியாது அவனது இதயம் நடுங்கத் தொடங்கியது.
நியாயமாகப் பார்த்தால், அவனுக்குப் போட்டியே நவிரா தான். அவளில்லா விட்டால், இந்நேரம் இந்தக் கட்சியின் தலைமை அவன் கையில்!
தயாளன் தலைமையில் கட்சி இருந்த போதே அது தானே நிலை.
ஆனால் இவள், தயாளனைப் போல அல்லாது எல்லாவற்றையும் தன் கையில் இறுக்கியல்லவா வைத்திருக்கிறாள்?
அதனால் இப்பொழுது நவிராவுக்கு ஏதேனும் ஆகிவிட்டதென்றால் கட்சியின் முழுப் பொறுப்பும் சூர்யாவிடம் வந்துவிடும்.
அதற்காகவேனும் அவன் ஆனந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் என்னவோ அவளை பார்த்ததிலிருந்தே.. அதிலும் அவள் நிமிர்வை நேரில் கண்டதிலிருந்தே அவனையும் அறியாது அவள் காலடியில், இவன் சரண்!
அதை இன்னமும் அவன் உணர்ந்திரா விட்டாலும், அவன் மனது அவளுக்காக படபடக்க, மின்னல் வேகத்தில் ஜான்சி குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து, வேகமாக அந்தப் பள்ளிக்கூடத்துக்குள் சென்று தேடி, இதோ அவளைக் கண்டுபிடித்த இந்த நொடியில் தான் அவன் முழுமையாக மூச்சே விட்டான் எனலாம்.
ஆனால் அதே இடத்தில் நவிராவுடன், ஷிவ்வை காணவும் உடலெல்லாம் காந்தியது அவனுக்கு.
அதிலும் இருவர் முகத்திலும் தப்பு செய்து மாட்டிக் கொண்ட பாவம் வேறு!
புரியவில்லை.. இவர்களுக்குள் என்ன நடந்தது.. என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை அவனுக்கு.
ஆனாலும் உள்ளுக்குள் உண்டான எரிச்சலை அடக்கவும் முடியாமல் அதை வெளிப்படையாக முகத்தில் காட்டினான் அவன்.
அதையெல்லாம் ஷிவ் கண்டுகொள்வதாய் இல்லை. மழையில் நனைந்த தன் சிகையை ஒற்றைக் கையால் சிலுப்பிவிட்டுக் கொண்டு சூர்யாவை அலட்சியமாய் பார்த்தான் அவன்.
கடுப்புடன் அவனை முறைத்தபடியே நவிராவின் பக்கம் திரும்பிய சூர்யாவோ,
“ஒன்னும் ப்ராப்லம் இல்ல மேடம். அந்த தண்டபாணியையும், அவனோட ஆட்களையும் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க.
ஆனா மீடியாவுக்கு நியூஸ் லீக் ஆகிடுச்சு. பட் கவலைப் படாதீங்க மேடம். அதை நான் சமாளிச்சுக்கறேன். நீங்க எந்த கேள்விக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.” என்று அவன் கூறிமுடிக்க, அவனையே பார்த்தபடி அவனருகே வந்த நவிராவோ..
“என்ன மிஸ்டர். சூர்யவர்மன்? உங்களுக்கு மனசுல பெரிய ஆபத்பாந்தவன்னு நினைப்பா?
என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.
டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்.” என்று கூறிவிட்டு அவள் வெளியே செல்ல, அதைக் கேட்டிருந்த இரண்டு ஆண்களுக்கும் சற்று திகைப்பு தான்.
முதலில் சூர்யாவுக்கு, அவனிடம் எந்தப் பெண்ணும்.. பெண்ணென்ன? எந்தவொரு ஆணுமே கூட இப்படி முகத்தில் அடித்தது போல அவனிடம் பேசியதில்லை.
ஆனால் இவளது அலட்சியம் அவனை அத்தனையாய் கவர்ந்தது. அவளது வார்த்தைகளில், சற்று வலுவான சக்தி கொண்ட மின்னல் இதயத்தைத் தீண்டிய சிலிர்ப்பில் அவன் நின்றிருக்க, காரணமேயின்றி சூர்யாவிடம், நவிரா கூறிய வார்த்தைகளில் ஷிவ் சிவந்தான், கோபத்தில்!
‘பொண்ணா இவ? திமிர்! உடம்பெல்லாம் ஏகத்துக்கும் திமிர்!
இவளை, இவளே பார்த்துப்பாளாமா? ஏன் சொல்ல மாட்டா? இவளுக்குப் பின்னாடி தான் இவளோட தாளத்துக்கு தகுந்த மாதிரி குட்டிக்கரணம் போட இவளோட அப்பன் இருக்கானே.. அப்பறம் ஏன் சொல்ல மாட்டா?’ என்று மனதுக்குள் பொரிந்தான்.
நவிரா வெளியேறிய சில வினாடிகளில் சிலிர்ப்படங்கிய சூர்யாவோ, முகத்தை மிடுக்காக வைத்துக் கொண்டு ஷிவ்விடம் திரும்பினான்.
அவன் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அவனிடம் இவன் எச்சரிக்க வேண்டியது முக்கியமாகப் பட்டது. அதிலும் நவிராவுக்காக!
எனவே ஷிவ் புறமாகத் திரும்பியவன், அவன் இன்னமும் நவிரா சென்ற திசையயையே வெறித்துக் கொண்டிருக்கவும்,
“ஹலோ..” என்று சொடக்கிட்டு அழைத்தான்.
விழிகளை மட்டுமாக ஷிவ், அவனை நோக்கித் திருப்ப, ரௌத்திரமான முகத்துடன்..
“நல்லா கேட்டுக்கோங்க.. என்ன தான் நவிரா மேடம் அவங்கள, அவங்களே பார்த்துப்பேன்னு சொன்னாலும், அது நிச்சயமான உண்மைன்னாலும்.. அவங்களுக்குப் பின்னாடி.. அவங்களுக்கே தெரியாம, நான் அவங்க நிழல் மாதிரி இருப்பேன்.
அதனால உங்களோட பழைய கதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுக்கிட்டு, கொஞ்சம் கண்ணியத்தோட நடந்துக்கோங்க.
இல்லைனா, நான் யாரு.. என்னனு எல்லாம் பார்த்துட்டு இருக்க மாட்டேன்.
புரியும்னு நினைக்கறேன்” என்று கூறி அவன் தனது முழு உயரத்துக்கு நிமிர்ந்து நிற்க, அவனை நேராய் பார்த்த ஷிவ்வின் விழிகளோ செவசெவ எனச் சிவந்தன.
“என்ன பார்க்கறீங்க? இந்த பார்வைக்கெல்லாம் பயப்பட இங்க யாரும் இல்ல.
அப்பறம் இன்னொன்னு, இப்போ உடனே நீங்க வெளில வர வேண்டாம்.
ஏன்னா வெளில இப்போ நிறைய மீடியா பீப்பிள் இருக்காங்க. நவிரா மேடம் கூட, நீங்களும் இவ்வளவு நேரம் இருந்தீங்கன்னு தெரிஞ்சா, அவங்க சும்மா இருக்க மாட்டாங்க.
கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சு, சினிமாவை விட அழகா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிடுவாங்க.
உங்களுக்கு எப்படியோ, நவிரா மேடம்க்கு அதுல சுத்தமா இஷ்டம் இருக்காது. அதனால நாங்க இருந்து கிளம்பின பின்னாடி, மீடியா பீப்பிள் எல்லாரும் போன பின்னாடி, நீங்க வெளில வாங்க.” என்று அதிகாரமாய் கூற அவனது கழுத்தை நெறிக்கும் அளவுக்கு ஷிவ்வுக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, நக்கலாக சிரித்தபடியே..
“மிஸ்டர். சூர்யவர்மன்! உங்களுக்கும், உங்க மேடம்க்கும் வேணும்னா இந்த கிசுகிசு, பப்ளிசிட்டி மேல எல்லாம் இன்டெரெஸ்ட் இருக்கும். ஏன்னா, ஆட்சியை இழந்து, எதிர்கட்சியா நிக்கற உங்களுக்கு, எப்படியாவது லைம் லைட்ல இருக்கணும்னு தோணும் இல்லையா?
ஆனா பாருங்க., நான் இந்த மாநிலத்தோட துணை முதல்வர்!
எனக்கு இந்த சீப் பப்ளிசிட்டி எல்லாம் அவசியமில்லை. அதுவும் உங்க மேடம் கூட சேர்ந்து என் பேர் கிசுகிசுக்கப்படறது எனக்கு தான் அவமானம், சரியா?
அதனால கவலையே படாம உங்க மேடம பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.” என்று அவன் கூற, சூர்யவர்மனுக்கு நெற்றியின் நரம்புகள் கோபத்தில் புடைத்துக் கொண்டன.
ஆனாலும் வெளியே ஊடக மக்களிடம் சிக்கிக் கொண்ட நவிராவைப் பார்த்தவன், அதற்கு மேல் அங்கே நில்லாமல் நவிராவிடம் ஓடினான்.
நவிராவின் அருகே சூர்யவர்மனைப் பார்த்த ஷிவ்வுக்கு கரைகடந்த கோபம்! அவனை அடித்து வீழ்த்தும் அளவுக்கு கோபம்!
ஏன், அவளைத் தேடி அப்படி அரக்கப்பரக்க சூர்யவரவர்மன் வந்த பொழுதே ஷிவ்வுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. அப்பொழுதே அவனது முகத்தை உடைக்கும் வெறி வந்தது தான் அவனுக்கு.
இத்தனை நேரமாய் சிரமத்துடன் தன்னை அவன் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, அதற்கும் மேலாக நவிராவை பாதுகாக்கத் தான் இருப்பதாய் கூறிய சூர்யவர்மனின் பேச்சில் அந்தக் கோபம், இதோ.. இதோ என்று கரை தாண்ட காத்துக் கொண்டிருக்க.. இறுதியாக, தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு.. நவிராவின் பாதுகாப்பே முக்கியமென்று அவளருகில் அரண் போல சூர்யவர்மன் நிற்கவும் கட்டுப்படுத்தவே முடியாது அருகிலிருந்த சுவரில் ஓங்கி ஒரு குத்து குத்தினான் ஷிவ்!
ஏற்கனவே பழுதுபட்டிருந்த சுவர், இவனது அந்த ஒற்றைத் தாக்குதலில் பெயர்ந்து விழுந்தது!
ஆனால் முன்னே சென்றுவிட்ட மீடியாக்களின் கூட்டம் இதை நல்ல வேளையாகவோ அல்லது கெட்ட வேளையாகவோ கவனிக்கத் தவறிவிட்டனர்.
ஆனால் அந்தப் பள்ளியை விட்டு வெகுதூரம் சென்ற பிறகும் நவிராவின் உள்ளுணர்வின் உந்துதலால் அவள் பின்னே திரும்பிப் பார்க்க, மழையில் நனைந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஷிவ்.
அதைக் கண்டவள் உள்ளம் தடதடக்க சட்டென்று முன்னே திரும்பிக் கொண்டாள்.
ஆனால் ஷிவ்வின் உள்ளம் தான் ஆறாத ரணமாய் வெடித்துக் கொண்டிருந்தது.
மழையில் நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தவன், வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த தந்தையின் கேள்விக்கும் கூட எந்த பதிலும் கூறாமல், வேறு எதையுமே.. யாரையுமே பாராமல் அப்படியே நனைந்த உடலுடன் கட்டிலில் விழுந்தான்.
அவனது கரங்கள் மெல்ல மேலெழுந்து நவிராவின் பாடலை ஒலிக்க விட.. உள்ளுக்குள் மெல்லக் கிளம்பிய ரணம், இப்பொழுது கொளுந்துவிட்டு எரிந்தது!
“தேங்க்ஸ்.. மெனி தாங்க்ஸ் மிஸ்டர். ஷிவ்.. நீ.. நீங்க மட்டும் இல்லைன்னா, இந்நேரம் என் உயிரே போயிருக்கும்..” என்று நடுங்கும் குரலில் கூறியவளின் அருகாமை, அவளது அன்றைய அத்தனை உயரத்தை மீறியும்.. இவனை என்னவோ செய்தது தான்!
அந்த மயக்கத்தில் தான் அவளது கான்செர்ட்டுக்கு அந்த க்ரூஸில் ஏறினான் அவன்.
அந்த க்ரூஸ் பயணம் தான் இவர்களது வாழ்க்கையைப் பிணைத்ததும்!
