Skip to content
Post Views: 5,982
இரவு உணவு எடுக்காததில் உண்டான பசியால் அமுதினிக்கு எப்போதும் விழிக்கும் நேரத்தைவிட முன்னமே விழிப்பு வந்திருந்தது. எழுந்து அமர்ந்தவளுக்கு தலையெல்லாம் பாரமாக இருந்ததோடு, வலியில் விண் விண்ணென தெறிக்க ஆரம்பித்தது.
இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே குனிந்து அமர்ந்துவிட்டாள். சில நொடிகளுக்கு பின்பு தான் டைம் என்ன சாயந்தரம் வந்து படுத்தோம். அச்சோ இராத்திரி ஆயிடுச்சா என பரபரத்து நேரம் பார்த்தாள் கடிகாரத்தில். அது காலை ஐந்து மணி என்றது.
கண்களை விரித்தவள் இவ்வளவு நேரம் தூங்கிட்டமா..? அச்சோ நைட் டிபன்கூட செய்யலையே. அத்தை என்ன நினைச்சிருப்பாங்க என தன்னையே கடிந்து கொண்டவள், யாரும் என்னை வந்து எழுப்ப கூட இல்லையே என எண்ணிக் கொண்டே பாத்ரூம் சென்றாள்.
காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தவள், கிழே சென்று பால் காச்சி, காபி சேர்த்து எடுத்து வந்து அமர்ந்து குடித்தாள். பசி கொஞ்சம் மட்டு பட்டதும் தான் அவள் மூளையே வேலை செய்ய ஆரம்பித்தது.
Advertisement
நேற்று நடந்ததை எல்லாம் நிதானமாக தனக்குள்ளேயே ஓட்டிப் பார்த்து கொண்டிருந்தாள். ரக்ஷி பேசியதை நினைக்க நினைக்க ஆத்திரம் அதிகமாக வந்தது. என்ன தைரியம் அவளுக்கு? எப்படி பேசிட்டாள் நேத்து? ஏதோ சின்ன பொண்ணு, இவங்களுக்கு சொந்தமாச்சேன்னு பொறுமையா இருந்தா, மொத்த குடும்பத்தையும் இல்ல அவமானப் படுத்தற மாதிரி பேசினா சும்மா விட கூடாது அவளை. என்ன நினைச்சிட்டிருக்கா மனசுல?
எங்களுக்கு வாழவே வக்கில்லன்னு நினைச்சிட்டாளா? என்ன அகங்காரம் அவளுக்கு? இவங்க பெரிய ஆளா இருந்தா இவங்களோட? நேத்தே அவளை இழுத்து வச்சி இரண்டு குடுத்திருக்கனும்? நேர்ல இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் அவளுக்கு என உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
அவள் பேசும் போதே அவளுக்கு மண்டைல உறைக்கற மாதிரி சூடா பேசியிருக்கனும், பேசாம விட்டது என்னோட தப்பு என தன்னையே நொந்து கொண்டாள்.
Advertisement
திரும்ப திரும்ப நிதானமாக யோசித்தவளுக்கு ரக்ஷி தன்னிடம் சொல்ல வந்தது பிடிபட்டது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷி இறுதியில் ஆத்திரமாக சொல்லி போனை வைத்ததும் நினைவில் வந்தது.
Advertisement
என்னை மட்டும் பேசாம என் தங்கச்சியையும் இல்ல சேர்த்து பேசினா? அப்ப அவள் அரவிந்தன விரும்பறாளா? கல்யாணம் பண்ணிக்க நினைக்கறாளா?
விரும்பட்டுமே. தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டுமே. இதுக்கு எங்க மேல ஏன் கோவப் படனும்? கனிய ஏன் இழுக்கறாள்? கனி என்ன பண்ணாள்?
கனி அரவிந்தன் பின்னாடி அலையறதா சொன்னாளே? ஏன் அப்படி சொன்னா…? கனி அரவிந்த மீட் பண்ணதே இரண்டு மூனு தடவைதான். இதுல அவள் அரவிந்தன விரும்பறாளா? அப்படின்னா எனக்கு தெரியாத இருக்குமா?
Advertisement
ஒருவேளை எனக்கு தெரியாம கனி அரவிந்தன மீட் பண்ணி பேசியிருப்பாளோ? அதை ரக்ஷி பார்த்துட்டு தான் என்கிட்ட நேத்து அப்படி பேசினாளோ என யோசித்ததில் அவளுக்கு மீண்டும் தலைவலியே வந்துவிட்டது.
தலையை பிடித்துக் கொண்டு அப்படியே டைனிங் டேபிளில் படுத்துவிட்டாள். கூடவே பயமும் வந்து தொலைந்தது. ஒருவேளை அப்படியிருக்குமோ? கனி அரவிந்தன லவ் பண்றாளோ? என சஞ்சலமானாள்.
கனியா..? கனியா… இப்படி? ச்ச ச்ச இருக்காது. அவளுக்கு வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி. மத்தபடி இந்த லவ் எல்லாம் அவளுக்கு தெரியாது. அவள் அப்படி பண்ணமாட்டாள் என அவளே சமாதானமும் ஆனாள்.
மனம் அவளை ஒருநிலையில் இருக்கவிடாமல் பந்தாடிக் கொண்டிருந்தது. கண்டதையும் நினைத்து குழம்பி தவித்துக்கொண்டிருந்தவளுக்கு தலையில் தூக்கி பாறாங்கல்லை வைத்ததுபோல் பாரமாக இருந்தது.
வலியை பொறுக்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு அப்படியே படுத்திருந்தாள்.
தூக்கம் கலைந்த அரவிந்தன் வாக்கிங் செல்வதற்காக எழுந்து வெளியே வந்தான். தலையை பிடித்துக் கொண்டு டைனிங் டேபிளில் படுத்திருந்த அமுதினியைப் பார்த்தவன் அவளின் அருகே வந்து, “அண்ணி…” என மெல்ல குரல் கொடுத்தான்.
அரவிந்தனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பேசாம இவன்கிட்டயே கேட்டுடலாமா…? என்ற எண்ணம் எழுந்தது.
என்னன்னு கேட்ப? என் தங்கச்சி உன்னை லவ் பண்றாளான்னா கேட்க முடியும்? அப்ப அவளை நீ நம்பலியா? கனி மேல இவ்வளவுதான் உனக்கு நம்பிக்கையா? என அவள் மனதே அவளை கொந்தி எடுத்தது.
பார்வை மட்டும் அரவிந்தன் மீதிருந்தது. ஆனால் அவளது சிந்தனை எல்லாம் தனக்குள் சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலேயே சிக்கிக் கொண்டிருந்தது.
அமுதினி தன்னைப் பார்த்தும் ஏதும் பேசாமல் அப்படியே இருப்பதைப் பார்த்தவன் திரும்பவும் “அண்ணி…” என அழைத்தான்.
அவனது அழைப்பில் தனது எண்ணங்களிலிருந்து விடுபட்டவள், இப்பொழுது நன்றாக நிமிர்ந்து அமர்ந்து என்ன என பார்த்தாள்.
“ஏன், இங்கப் படுத்திருக்கீங்க? உள்ளப் போய் படுக்க வேண்டியது தான?” அவள் நெற்றியை ஒரு கையால் அழுத்திவிடுவதைப் பார்த்தவன், “தலைவலிக்குதா? டேப்லெட் தரவா?” என்றான் கரிசனமாக.
வேண்டாம் என தலையசைத்தவள், “காபி சாப்பிடறீங்களா…? இருங்க காபி எடுத்துட்டு வரேன்” என எழுந்து அரவிந்தனுக்காக காபி போட கிட்சனுக்குள் சென்றாள்.
அரவிந்தனுக்காக காபி கலந்தவள் அதை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தபோதுதான் ஞாபகம் வந்தது. சன்டே இவன் ரக்ஷிய மீட் பண்ண போறதா தான அத்தை கிட்ட சொல்லிட்டு போனான்
ஒருவேளை அவள் எனக்கு போன் பண்ணது இவனுக்கும் தெரிஞ்சிருக்குமோ. அதான் சண்டேலயிருந்து இவனும் டல்லா இருக்கானோ?
என்ன ஆனாலும் பரவாயில்லை. இவன் கிட்டயே கேட்டுடலாம் என முடிவு செய்தவள், “நேத்து… ஈ…வ்னிங் ரக்..ஷி எனக்கு போ…ன் பண்ணியிருந்தாள் என்றாள் நிறுத்தி நிதானமாக அவனது முக அசைவுகளை பார்த்துகொண்டே.
அமுதினிக்கு எதிரில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தவனுக்கு, ரக்ஷி நேத்து போன் பண்ணியிருந்தாள் என அமுதினி சொல்லியதுதான் குடித்துக் கொண்டிருந்த காபி நாசிக்கும் தொண்டைக்கும் இடையில் சிக்கி புரை ஏறியது.
அரவிந்தனுக்கு புரை ஏறி மூச்சுக்கு திணறுவதைப் பார்த்த அமுதினி சட்டென எழுந்து அவனது தலையை தட்டிக் கொடுத்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன், புரை ஏறியதில் கண்களில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்தவாறே அமுதினியை நிமிர்ந்து அதிர்ச்சியாகப் பார்த்தான்.
அரவிந்தனுக்கு மனதில், அப்போ ரக்ஷி அவ்வளவு சொல்லியும் கேட்காம, அண்ணிகிட்ட போன் பண்ணி உளறி வைச்சிருக்காளா? அவளை… என பல்லைக் கடித்தான் கோவத்தில்.
அவளை மதிச்சு நான் என் மனசுல இருக்கறத சொன்னேனில்ல. என்னை சொல்லனும். இவங்க கிட்ட என்ன உளறி வச்சிருக்கானு தெரியலையே என முழித்தான்.
அண்ணி அவங்க வீட்ல சொல்லிட்டா, கனிக்கு இதனால ஏதாவது பிரச்சினை வந்தா…? அய்யோ வேற வினையே வேணாம் என தலையில் கைவைத்துக் கொண்டான்.
ஏதோ ரோட் சைட் ரோமியோ ரேஞ்சுக்கு என்னை ஆளாக்கிட்டாளே. இவளை நம்பி பேசனது எவ்வளவு முட்டாள்தனம். கனியை நினைத்து வேறு அவனுக்கு பயமாக இருந்தது.
ஏற்கனவே ராங்கி, என்னை முறைச்சிட்டே திரிவாள். ரோஷக்காரி வேற. இது எல்லாம் தெரிஞ்சா சுத்தம் என் லவ்வ சீக்கிரமாவே ஊத்தி மூடிட வேண்டியது தான்.
அண்ணியோட அம்மா அப்பாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? முதல்ல என்னை மதிப்பாங்களா?
முதல்ல இதெல்லாம் அம்மாக்கு தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க? எனக்கு மட்டுமில்லாம கனிக்கும் இதனால கஷ்டம். என்னால அவள் வேற கஷ்டப்படனுமா?
தப்பே பண்ணாம அவள் ஏன் அசிங்கப் படனும். இதனால கௌதமுக்கு அண்ணிக்கு நடுவுல ஏதாவது பிரச்சினை வந்ததுனா…? அச்சோ ஏற்கனவே அவங்க இரண்டு பேருக்குள்ள இன்னும் எதுவுமே சரியான மாதிரி தெரியல. இதுல தேவையில்லாம என்னால ஏதும் குழப்பமாச்சுன்னா என கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
என் விருப்பத்தை அம்மாகிட்ட சொல்லி, பெரியவங்க மூலமா பேசியிருந்தா எவ்வளவு சந்தோஷமா சுமூகமா முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம் இவ்வளவு சிக்கலாக்கிட்டாளே. நான் அவ்வளவு எடுத்து சொல்லியும் புரிஞ்சிக்கலையே அவள். ச்ச… என எரிச்சல் அடைந்தான்.
சில நொடிகள் யோசித்து பார்த்தவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. முழுக்க நனஞ்சாச்சு இதுல முக்காடு எதுக்கு? என கனியின் மீதான அவனது விருப்பத்தை அமுதினியிடம் சொல்லிவிட்டான்.
தான்தான் அவளை விரும்புவதாகவும் அவளுக்கு இன்னும் இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் கூறியிருந்தான். “அவள் படிப்பை முடிச்சதும் அம்மா கிட்ட சொல்லி உங்க வீட்ல பேசி, முறையா பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன் அண்ணி” என சொல்லிவிட்டான்.
“கனி படிப்பு முடியற வரைக்கும் யார்கிட்டயும் வெளியே சொல்ற ஐடியாவே இல்ல. ரக்ஷி வந்து என்னை குழப்புனதால அவள்கிட்ட என் விருப்பத்தை சொல்ல வேண்டியதாப் போச்சு. அப்பக் கூட நல்ல எண்ணத்துல தான் சொன்னேன். அவள் உங்களுக்கு போன் பண்ணுவாள்னுலாம் எனக்கு தெரியாது” என்றான் பாவமாக.
அவனையே உற்று நோக்கியவள், “அப்படியே நீங்க கனிய விரும்பியிருந்தாலும் ரக்ஷிகிட்ட ஏன் சொல்லனும்?” என்றாள் கேள்வியாக.
சுருக்கமாக நேற்று நடந்ததை அவளிடம் கூறினான்.
“ரக்ஷிக்கும் உங்களுக்கும் சின்ன வயசா இருக்கும் போதே, வீட்ல கல்யாணம் பேசி முடிவு பண்ணதா என்கிட்ட அவள் சொன்னது…?”
“அப்படிலாம் எதுவும் இல்ல அண்ணி. சும்மா அவளே சொல்லியிருக்கா. இன்னும் சொல்லப் போனா இரண்டு குடும்பத்து பெரியவங்களுக்குமே அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல. இதுவரைக்கும் வீட்ல அந்த மாதிரி பேச்சுக்கு கூட யாரும் பேசினது இல்ல”.
“அவள் ஏதோ கிறுக்கு மாதிரி உளறியிருக்கா. எனக்கு அப்படி எந்த எண்ணமும் மனசுல இல்ல. சின்ன வயசுல இருந்து நாங்க ஒன்னா பேசி பழகி விளையாடி வளர்ந்ததால எங்களுக்குள்ள எந்த பேதமும், விகல்பமும் இல்லாம தான் வளர்ந்தோம். முக்கியமா என் மனசுல அவளை நான் உறவா பார்க்கறத விட ஒரு நல்ல தோழியா தான் நினைச்சு பழகியிருக்கேன். நாங்க சின்ன பிள்ளையா இருக்கும்போது எப்படி பழகினேனோ, இன்னும் அப்படிதான் அவளை மனசுல நினைச்சிட்டிருக்கேன்” என்றான் தன்னை அமுதினிக்கு புரிய வைத்து விடும் நோக்கத்தில்.
“அவள் கிறுக்குதனமா மனசுல ஏதோ நினைச்சிட்டு உங்க கிட்ட உளறியிருக்கா அண்ணி. தயவு செஞ்சு நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க” என்றான். இன்னும் ரக்ஷி அமுதினியிடம் என்ன பேசியிருக்கிறாள்னு அவனுக்குத் தெரியாதே, அதனால் பொதுவாக சொன்னான்.
அமுதினிக்கு அவன் சொன்னதில் பெரிய ஆசுவாசம் என்னவென்றால் கனி அரவிந்தனை லவ் பண்றாளோன்னு பயந்துட்டு இருந்தவளுக்கு, இவனது பேச்சு, அப்படி எதுவும் இல்லை என ஆசுவாசப்படுத்தியிருந்தது.
அரவிந்தனுக்கு கனியின் மீதிருந்த விருப்பத்தை அறிய நேர்ந்தது புதிய தகவலாக இருந்தாலும், ரக்ஷி பேசின வார்த்தைகள் ஒன்றொன்றும் அவளை குத்திக் கிழித்திருந்தது.
அப்படி மட்டும் நடந்தால் ரக்ஷி பேசினது எல்லாம் உண்மை என்று ஊர்ஜிதம் பண்ணது போல் ஆகாதா? காலத்துக்கும் அந்த பழி சொல்லுக்கு ஆளாக நேரிடுமே.
கனியும் திருமணமாகி இங்கே வந்தால், இன்று ரக்ஷி பேசினது போல, நாளை யாரெல்லாம் பேசுவார்கள் என தெரியாதே? வேண்டவே வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள் மனதில்.
அமுதினி ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்து தவிப்பானது.
“அண்ணி…” என தயங்கியவன் “ரக்ஷி உங்ககிட்ட என்ன சொன்னா…?” என்றான் பொறுமையாக.
அரவிந்தன் ரக்ஷியைப் பற்றி பேசியதுமே, அமுதினியின் முகம் வேதனையில் கசங்கி கண்களில் நீர் சுரந்து நின்றது. அவளது முக மாற்றத்தைப் பார்த்தவனுக்கு இன்னும் பதறியது.
இந்த லூசு என்ன சொல்லி வைச்சிருக்குன்னு தெரியலையே, இவங்க இப்படி கலங்கற அளவுக்கு என வேதனைப்பட்டான்.
“என்ன சொன்னா.. அண்ணி? ப்ளீஸ் சொல்லுங்க”. தெரிஞ்சுக்காம… மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு. நீங்க பீல் பண்றத பார்த்தா, இன்னும் ஏதோ ஏடாகூடமா சொல்லி வச்சிருக்காளோன்னு தோணுது” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
என்ன முயன்றும் கட்டுப் படுத்த முடியாமல் அரவிந்தனின் வார்த்தைகளைக் கேட்டு அமுதினியின் கண்களில் இருந்து நீர் சரசரவென இறங்கிவிட்டது. ஒருகையால் கண்ணீரைத் துடைத்தவள் மறுப்பாக தலையசைத்துகொண்டே “இல்லை வேணாம் அரவிந்த் விட்டுடுங்க. அதைப்பத்தி பேச வேணாம்” என்றாள் வெளியே சொல்ல விருப்பமின்றி.
பின்னே அவள் வெளியே சொல்லும்படியான வார்த்தைகளையா சொல்லி வைத்திருக்கிறாள். ஏன் இவனிடம் மட்டுமில்லை, ஷ்யாமளாவிடம் கூட ரக்ஷி பேசியதை கூறி நியாயம் கேட்கலாம். அவரும் நிச்சயம் அவளைக் கூப்பிட்டு ஏன் இப்படி பேசினாய் என கண்டிப்பார்தான்.
ஆனால் விஷயம் அதோடு முடியாதே. இவங்கள பொறுத்தவரை இது சாதாரணமாகக் கூட இருக்கலாம். எங்களுக்கு இது மானப் பிரச்சினை இல்லையா? நடுத்தர வர்க்கத்துல பொறந்த எங்களை மாதிரியான ஆளுங்களுக்கு மானத்தை, கௌரவத்தை உயிர் மூச்சாக நினைத்து வாழறவங்களு இது எத்தனை பெரிய அவச்சொல்? எவ்வளவு பெரிய அவமானம்?
இதனை நானே வெளியில எல்லோருக்கும் பரப்பிவிட்ட மாதிரி ஆகிடாது. நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததை பொறுக்க முடியாம இன்னும் இவங்க உறவுக்குள்ள ரக்ஷியை போல பேசுறவங்க எத்தனைபேரோ?
இத கேட்டு அவங்க எல்லாம் எங்கள இளக்காரமா பேச நானே விளக்கம் கொடுத்து வழிகாட்னதுபோல ஆகாதா?
நியாயம் கேட்கறேன்னு எல்லார் கிட்டயும் சொல்லி வெளிய தெரிஞ்சு இன்னும் இருக்கறவங்க வாய்க்கு அவல் கிடைச்சது போல ஆகாதா என பயத்துடன் கூடிய தயக்கம் அவளுக்குள் இருந்தது. அதில் அரவிந்தனிடம் சொல்ல மறுத்தாள்.
இது மட்டுமா எங்க வீட்டுக்கு தெரிஞ்சா, தெரிஞ்சா என்ன? நான் இவன்கிட்ட சொன்னேன்னா கண்டிப்பா தெரிய வந்துடும். அப்படி மட்டும் தெரிஞ்சா அப்பா அம்மா எல்லாம் கூனி குருகி போயிட மாட்டாங்களா? கனியை பத்தின தப்பான கண்ணோட்டம் வந்துடாதா? பின்னாடி அவளுக்கு வரன் பார்க்கும் போது அவளுடைய வாழ்க்கைக்கு இதுவே இடைஞ்சலாகிடாதா? என பலதும் நினைத்து அரவிந்தனிடம் சொல்ல மறுத்துவிட்டாள்.
கண்ணைத் துடைத்தவள் அவனிடம் ஏதும் பேசாமல் திரும்ப கிட்சனுக்கு நுழைந்து கொண்டாள். அரவிந்தனுக்கு அமுதினியின் தோற்றத்தைப் பார்த்து ஒன்றும் பேசமுடியவில்லை.
இதுவரை கனிவாகவும் அன்பாகவும் மட்டுமே பார்த்திருந்ததவனுக்கு அவளின் இந்த வாடி கசங்கிய முகமும், களைத்த தோற்றமும் பதைக்கதான் வைத்தது.
அதற்குமேல் அவனாலும் ஒன்றும் பேச முடியவில்லை. அப்படியே நின்றிருந்தான்.
அமுதினியை அவனுக்கு ஹாஸ்பிட்டலில் வேலை செய்யும் காலத்திலிருந்தே தெரியும். யாரிடமும் மரியாதைக் குறைவாக நடக்க மாட்டாள். எந்த வீண் பழி சொல்லுக்கு இதுவரை ஆளானது இல்லை.
எப்போதும் அவள் செயலில் நிமிர்வும் கம்பீரமும் நிறைந்திருக்கும், தைரியமானவளும் கூட. ஏன் திருமணத்திற்கு பின்பும் கௌதமின் ஒதுக்கத்தாலோ, அவனது நடத்தையாலோ என எந்த வீண் அலட்டலோ, வருத்தமோ, சச்சரவோ செய்யாமல் அண்ணனுடன் சுமூகமாக வாழ முயல்பவளின் மீது பெரிய மரியாதையே வந்திருந்தது அவனுக்கு.
இதுவரை அவள் கலங்கியோ, அழுதோ பார்த்திராதவனுக்கு, அவள் இப்படி கலங்கி நின்று கண்ணீர் விட்டு சென்றது, ரக்ஷியின் மேல் கொலை வெறியை உண்டு பண்ணியது.
அவள் மட்டும் இந்நேரம் எதிரில் இருந்திருந்தாள் அவனது ஆத்திரத்திற்கு கன்னம் பழுத்திருக்கும். ஏதோ ஆத்திரத்தில நான் கனிய விரும்பறத இவங்க கிட்ட போட்டுக் கொடுத்திருப்பான்னு நினைச்சா, அப்படியில்ல போல. வேற என்ன பேசி தொலைஞ்சான்னு தெரியலையே? என மண்டை காய்ந்தவனுக்கு அப்படி என்னத்த சொல்லி வைச்சாளோ? இவங்களும் வாயைத் திறக்க மாட்றாங்க. ஆளாளுக்கு சாவடிக்கிறாங்கடா என நொந்துக் கொள்ளதான் முடிந்தது.
வேகமாக கிட்சனிலிருந்து வெளியே வந்த அமுதினி அரவிந்தனைப் பார்த்து, “ரக்ஷி உங்களை விரும்பட்டும். இல்ல நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கங்க. எதுவா வேணா இருக்கட்டும். இதுல கனிய இழுக்காதீங்க. இனி அவள் பேர் எங்கயும் வரக்கூடாது. நீங்க வரவிடமாட்டீங்கன்னு நான் நம்பறேன். நான் என்ன சொல்ல வரேன்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்” என அழுத்தமாக அரவிந்தனைப் பார்த்து சொல்லிவிட்டு திரும்ப கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.
அவளது வார்த்தைகளில் இனி நீ என் தங்கையைப் பார்க்க, பேசக் கூடாது. ஏன், அதுக்கு முயற்சிக்கக் கூட கூடாது என மறைமுகமான வலியுறுத்தல் இருந்ததாகதான் அரவிந்துக்கு தோன்றியது.
நேரிடையாக என் தங்கையை பார்க்காதே. பேசாதே. இது சரிவராது. விட்டுடு என எதுவும் சொல்லாமல், நீ எப்படி வேணா போ. யார் வேணா உன்னை விரும்பட்டும். இல்லை நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ. எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தங்கச்சி பேர் கெடக் கூடாது. அவளை எதுலயும் இழுக்காத என நேராக சொல்லாமல், மறைமுகமாக குட்டு வைத்திருந்தாள்.
அய்யோ என தலையை பிய்த்துக்கொண்டு கத்தலாம் போல இருந்தது அரவிந்தனுக்கு. அதுவும் கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் இத்தனை கராராக பேசியதில் அப்படியே ஸ்தம்பித்துதான் போனான்.
அமுதினி மொத்தத்திற்கும் அவனையே காரணகரத்தாவாக்கி நேரடியாக குற்றம் சாட்டியதுபோல் இருந்தது.
பாரு, உன்னால் தான் என் தங்கச்சி இவகிட்ட எல்லாம் இப்படி பேச்சு வாங்க வேண்டியிருக்கு. நீ தான் அதுக்கு காரணம் என மறைமுகமாக அவனை குற்றம் சாட்டியது போல் இருந்தது அவனுக்கு.
உண்மையும் அதுதானே. இவன் கனிமொழியை பார்க்காமலோ பேசாமலோ இருந்திருந்தால், கனியும் இவனை திரும்பி பார்த்திருக்க மாட்டாள்தானே.
உண்மை சுடுகிறது என்பார்களே அரவிந்தனுக்கு அதுபோல்தான் இருந்தது.
இன்னொரு பக்கம் சுய பச்சாதாபமும் தோன்றியது அவன் மனதில்.
அப்ப அண்ணிக்கு நான் முக்கியமில்லையா? கனி இவங்களுக்கு தங்கச்சினா, அப்ப நான் யாராம்? என சுயபச்சாதாபம்தான் எழுந்தது.
இவங்களை நான் என் அம்மாவோட இன்னொரு பரிணாமமா தான பார்க்கிறேன். என் எண்ணமோ, ஆசையோ, விருப்பமோ இவங்களுக்கு முக்கியம் இல்லையா? நான் தப்பே செஞ்சாலும் என்னை விட்டுவாங்களா…?
இவங்க தங்கச்சிய அவள் பேசிட்டான்னதும் என்னை அப்படியே ஒதுக்குறாங்களே என வருந்தினான்.
அவனுக்கும் தெரியும். நிச்சயம் அமுதினி சம்மதிக்காமல் இரண்டு குடும்பத்திலும் அவனது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காது. ஏன்? கனிமொழியே ஒத்துக் கொள்ளமாட்டாள்.
பலதரப்பட்ட எண்ணவோட்டத்தின் அதிர்வலைகளில் தலைவலிதான் மிச்சமானது அவனுக்கு. தற்செயலாக நேற்றைய இரவு உணவின் போது ஷ்யாமளா கௌதமிடம் சொன்னது நினைவு வந்தது அவனுக்கு. மாலையில் இருந்து அமுதினி கீழேயே வரவில்லை, உணவு உண்ணக் கூட வரவில்லை என கூறியதை நினைவு கூர்ந்தான் மனதில்.
அப்ப நேத்து இதை நினைச்சு தான் பீல் பண்ணிட்டு இருந்தாங்களா? அதான் சாப்பிடக் கூட வராம இருந்தாங்களா? அதான எப்பவும் அண்ணி தான நமக்கு டின்னர் பரிமாறுவாங்க. எங்க அவங்கள காணம்னு அப்பவே நினைச்சேன். எனக்கு இருந்த டென்ஷன்ல ம்ப்ச் இதை கவனிக்கல.
அவங்க கண்ணும் வீங்கின மாதிரி இருந்ததே. அப்ப ரக்ஷி பேசனதை நினைச்சு நேத்து அழுதிருக்காங்க. கண்ணெல்லாம் வீங்கி போறளவுக்கு அழுதிருக்காங்கன்னா…, இப்பக் கூட அதைப் பத்தி கேட்டதும் அழுதுட்டாங்களே. அப்படி என்னத்த அவங்ககிட்ட பேசனான்னு தெரியலையே….? என தத்தளித்து கொண்டிருந்தான்.
அரவிந்தன் தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அமுதினிக்கு பாவமாக இருந்தது. இப்ப இவனுக்கு பாவம் பார்த்து நாம சமாதானமா பேசினோம்னா அதையே அவன் அடவான்டேஜா எடுத்துப்பான் என மனதை கட்டுப் படுத்தியவள் ஏதும் பேசாமல் கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.
அரவிந்தனுக்கு இந்த விஷயம் வெளியே தெரிய வருவதில் விருப்பமில்லை. அதனால் அமுதினியிடம் சென்றவன் “அண்ணி நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றான். என்ன என பார்த்திருந்தவளிடம் “ப்ளீஸ் அண்ணி. இந்த விஷயம் யாருக்கிட்டயும் வெளியே சொல்லாதீங்க. முக்கியமா கனிக்கிட்ட….” என்றான்
கனியின் பேரைக் கேட்டதும் அவனை முறைத்தாள் அமுதினி.
“ப்ளீஸ் அண்ணி புரிஞ்சுக்கோங்க. உங்களையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியவரது எனக்கு விருப்பமில்லை” என்றான் கெஞ்சலாக.
சில நொடிகளில் அமுதினியின் தலை அவன் சொல்லியதற்கு சம்மதமாக அசைந்தது.
“தேங்க்ஸ் அண்ணி. அவள் என்ன சொன்னான்னு எனக்கு தெரியலை. நீங்க பீல் பண்ணாதீங்க”.
“என்னை நீங்க உங்ககூட பிறந்த பிரதரா நினைச்சிக்கோங்க. என்ன பிரச்சினைன்னாலும், எப்ப வேணா நீங்க என்கிட்ட தைரியமா ஷேர் பண்ணலாம். நான் உங்ககூட இருப்பேன். அந்த நம்பிக்கையை என் மேல வைங்க. எதுவாயிருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க,. நான் உங்களுக்கு பிரதர் மட்டுமில்ல. நல்ல பிரண்டுன்னும் மனசுல பதிய வைச்சுக்கோங்க” என்றான் அமுதினியை பார்த்து.
அவன் கண்களில் தெரிந்த நிமிர்வும், முகத்தில் இருந்த தெளிவும் அவளை பதிலே பேசவிடாமல் சரியென தலையசைக்க வைத்திருந்தது.
“தேங்க்ஸ்” என்றவன் “இன்னொன்னும் சொல்லனும்” என்றான் பீடிகையாக.
என்ன? எனப் பார்த்தாள் அவனை நிமிர்ந்து.
“யார் சொன்னாலும், தடுத்தாலும் கனிமொழிதான் என் பொண்டாட்டி. அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்க மட்டுமில்ல, அவளே தடுத்தாலும் அவள்தான் என் பொண்டாட்டி” என்றான் கூர்மையுடன் பார்த்து.
அமுதினி அவனை முறைத்துப் பார்த்தாள்.
“அவன் சொல்லியதற்கு மறுத்து ஏதோ பேச வந்தவளை, கைநீட்டி தடுத்தவன், “முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. இதை உங்களை மதிக்காமயோ, கோவப் படுத்தவோ, டென்ஷன் ஆக்கவோ நான் சொல்லல.”
“நான் சொல்ல வரத நீங்க சரியா புரிஞ்சுக்கனும். உங்ககிட்ட என் மனசுல இருக்கறத பேசறேன். இதை நீங்க அலட்டலா எடுத்தாலும் எனக்கு கவலையில்ல”.
“அவளை எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க இரண்டு பேரும் முதல் தடவை எங்க வீட்டு கொலுவுக்கு வந்தீங்க ஞாபகம் இருக்கா? அப்பலேர்ந்து அவளை எனக்குப் பிடிக்கும்”.
“அப்ப அவள் ரொம்ப சின்னப் பொண்ணு, ஸ்கூல் படிச்சிட்டிருந்தா. அதனால என்னால எதுவும் சொல்ல முடியல. வெளிய காமிச்சுக்க கூட முடியலை. அவள் படிப்பு முடியனும், படிக்கற பொண்ணை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு வெயிட் பண்ணேன்”.
“நடுவுல நடந்த நல்ல விஷயம், அம்மா விருப்பப்பட்டதால நீங்க இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது. இது நானே எதிர்பார்க்காதது. இது உண்மையா அம்மா விருப்பம்தான். எங்க கிட்ட அவங்க விருப்பத்தை சொன்னப்ப எனக்கு ரொம்ப சந்தோஷம். அது நீங்க கனியோட அக்கான்றதால இல்ல. அதையும் நீங்க கரெக்டா புரிஞ்சுக்கனும்”.
“உங்களை உங்களுக்காகவே சரின்னு சொன்னவன் நான். உங்களை மாதிரி ஒருத்தவங்க என் அண்ணனுக்கு மனைவியா வந்தா அவன் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நினைச்சுதான் அம்மாகிட்ட சம்மதம் சொன்னேன்”.
“அண்ணன்கிட்டயும் சம்மதம் வாங்கிதான் அவன் சரின்னு ஒத்துகிட்டதுக்கு அப்புறம்தான் அம்மா உங்களை அவனுக்கு கட்டிவச்சாங்க”.
“இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட பேசறேன்னா, நீங்க இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததால தான் கனியை நான் விரும்பறேன்னு, அதாவது உங்களை வச்சு கனிய கல்யாணம் பண்ணிக்க நான் ஆசைப் படறேன்னு நீங்க நினைச்சிடக் கூடாதுன்னு தான் சொல்றேன்”.
“நீங்க இந்த வீட்டுக்கு மருமகளா வரலன்னாலும் அவள் படிப்பு முடிஞ்சதும் அம்மா கிட்ட சொல்லி, உங்க வீட்ல பேச சொல்லி அவளை கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்றான் நிமிர்வாக.
“சோ யாருக்காகவும் என் முடிவையோ, என் விருப்பத்தையோ நான் மாத்திக்க மாட்டேன். அதை உங்களுக்கு தெளிவு படுத்த தான் உங்ககிட்ட இவ்வளவு விளக்கமா பேசிட்டிருக்கேன்”.
“நான் இப்ப பேசனதை வச்சு கனிக்கட்ட எதுவும் கேட்கனும்னு நினைக்காதீங்க. அவளுக்கு நம்ம இரண்டு பேர்குள்ள இப்ப நடக்கற எந்த பேச்சு வார்த்தையும் என்னையில்லாம யார் மூலமாவும் தெரிய வரது எனக்கு விருப்பமில்லை. நீங்க என் வார்த்தைக்கு மதிப்பு குடுப்பீங்க, சொல்ல மாட்டீங்கன்னு நம்பறேன்” என திருப்பி அவள் சொல்லியதை அவளுக்கே சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அமுதினி அப்படியே நின்றுவிட்டாள் அவனது பேச்சைக் கேட்டு. என்னடா இது என்னன்னமோ சொல்லிட்டுப் போறான்.
இப்ப என்ன சொல்லிட்டு போறான் இவன்? நான் இவனை நீ கனிய இதுல இழுக்கமாட்டேன்னு நம்பறேன்னு மறைமுகமா சொன்னா, இவன் எனக்கே நீங்க இங்க நடந்தது எதுவும் கனிக்கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு நம்பறேன்னு மறைமுகமா குட்டு வச்சிட்டு போறான்.
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது அவனது காதலை நினைத்து. எந்த நம்பிக்கையில இவன் அவளை லவ் பண்றான். இவன் நினைச்சிருந்தா என் கல்யாணத்துக்கு முன்னாடியே கனிகிட்ட இவன் காதலை சொல்லியிருக்கலாம். ஏன் நான் கல்யாணம் பண்ணி வந்ததுக்கு அப்புறமாவது அவள்கிட்ட சொல்லியிருக்கலாம். அத்தைகிட்ட சொல்லியிருந்தா நிச்சயம் இவன் விருப்பதுக்கு ஆசைக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க.
ஏன் அவங்களே எங்க அம்மா அப்பாகிட்ட பேசி கல்யாணத்தை பண்ணி வைப்பாங்க.
அவளே பார்க்கிறாளே அரவிந்தன் மீது ஷ்யாமளாவுக்கு இருக்கும் அன்பை. கௌதமை விட அவனிடம் அவரின் அன்பு கூடுதலாகத்தான் இருக்கும்.
அதற்காக கௌதமின் மீது அன்பு இல்லை என்று அர்த்தமில்லை. அது அரவிந்தன் பிறந்ததிலிருந்து தந்தையின் பாசத்தை உணர்ந்ததில்லை. இவர் தான் தந்தை என போட்டோவில் பார்த்ததோடு சரி. கௌதமிற்காவது தந்தையின் நினைவு கலங்கலாக ஞாபகம் இருக்கும். அரவிந்தன் வயிற்றில் இருக்கும்போதே அவர்கள் பிரிந்திருந்ததால் அந்த பாக்கியம் கூட அவனுக்கு இல்லை. எல்லாம் அன்னைதான் அவனுக்கு.
குடும்பம் என்றால் தாத்தா பாட்டி, அம்மா, அண்ணன் மட்டும்தான். அதில் அப்பா என்பவர் அவனுக்கு தெரியாமலேயே போயிருந்தார்.
அந்த கவலை வரவிடாது மகனை ஷ்யாமளா அடைகாத்தார் என சொன்னாலும் மிகையாகாது. கௌதமும் தம்பியைப் புரிந்து தாயைப் போலவே அன்பாக அரவணைத்துக் கொண்டான். ஆதலால் ஷ்யாமளா அரவிந்தன் மீது காட்டும் கூடுதல் அக்கறைகூட அவர்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தியதில்லை.
இது எல்லாம் அமுதினிக்கு தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு தெரிந்தது எல்லாம் ஷ்யாமளாவுக்கு அரவிந்தன் என்றால் ஸ்பெஷல்.
அப்படிப்பட்டவன் தான் விரும்பும் பெண்ணை அவளது படிப்புக்காக, அவளுக்காக என எந்த தொந்தரவும் செய்யாமல் பொறுமையாக காத்திருப்பதை நினைத்து பிரமிப்பாக இருந்தது. இப்படிகூட யாராவது இருப்பாங்களா என ஆச்சர்யமாகவும் இருந்தது.
என்ன மாதிரியான அன்பு இது. அரவிந்தனது தகுதிக்கும் அழகுக்கும், வசதிக்கும் பெண் கொடுக்க எத்தனை பேர் விரும்புவார்கள். ஏன் இவன் பார்க்காத அழகிகளா? பெண்களா?
கனிதான் என்னோட மனைவி யார் தடுத்தாலும் நான் விட மாட்டேன் என எவ்வளவு உறுதியாக சொல்கிறான். கனி உண்மையிலேயே அதிர்ஷ்டம் பண்ணவள். சல்லடை போட்டு சலித்தாலும் இவனைவிட சிறந்த மாப்பிள்ளை அவளுக்கு கிடைக்காது. ஆனால் அதற்கு கொடுப்பினை வேண்டுமே என பெருமூச்சுவிட்டாள்.
இது தான் இறைவன் பிராப்தம்னா, இவங்களுக்கு நடுவுல நான் என்ன சொல்ல இருக்கு என்ற மனப்பான்மையும் தோன்றி மறைந்தது.
ஆனால் ரக்ஷி பேசுனது எல்லாம் என குழம்பி தவித்து மண்டையை உடைத்து கொண்டவளுக்கு, எது நடக்கனும்னு இருக்கோ நடக்கட்டும் என வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
தொடரும்.
error: Content is protected !!