Skip to content
Post Views: 5,878
காலை வேளை சமையலில் கவனமாக இருந்த அமுதினிக்கு யாரோ பின்னால் நின்று தொண்டையை செருமுவது போல இருந்தது.
திடீரென்று தன் முதுகுப் புறமிருந்து சத்தம் கேட்டதும், அதில் திடுக்கென பயந்து நெஞ்சில் கை வைத்து திரும்பும்போதே பேலன்ஸ் தவறி ஒரு பக்கமாக சாய இருந்தவளை “ஹேய் பார்த்து” என சத்தமிட்டுக்கொண்டே சட்டென அவளைத் தாங்கிப் பிடித்தான் கௌதம்.
இரவு நெடு நேரம் மனைவியை பற்றிய சிந்தனையில் இருந்ததால் நேரம் கழித்துதான் உறங்கியிருந்தான். அதில் காலையில் எழுந்ததும் தாமதமாகியிருந்தது.
மனைவியை தேடிக் கொண்டு கிட்சன் வரை வேகமாக வந்தவனுக்கு பாழாப்போன தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அதற்குமேல் எங்கே பேசுவது?
Advertisement
பாவம் அவனும் அவளிடம் பேசவேண்டும், சகஜமாக இருக்க வேண்டும் எனதான் நினைக்கிறான்.
ம்கூம் முடியவில்லை. ஒரு நாள் பேசினால் ஒன்பது நாள் தடுங்குகிறது என்பார்களே அதுபோலதான் அவன் நிலையும்.
எத்தனை முயன்றும் அவனால் அவளிடம் இயல்பாக இருக்க முடியவில்லை.
Advertisement
இவன் வந்து நின்ற அரவத்தில் அமுதினி திரும்புவாளா என எதிர்பார்த்தான்.
Advertisement
ம்கூம் அவள் திரும்புவது போலில்லை. நேற்றிலிருந்து நடந்து கொண்டிருந்த சச்சரவில் தன் மனதை தொலையவிட்டிருந்தவள், எதிலும் கவனம் இல்லாமல்தான் இருந்தாள்.
மனம் அலைபாய்ந்தாலும் கை அதன்படி அன்றைய வேலைகளை செய்து கொண்டிருந்தது.
திரும்பிய வேகத்தில் தடுமாறி கீழே விழ போனவளை, கீழே விழாமல் தன் மார்போடு சேர்த்து அணைத்தவாக்கில் பிடித்தவன், “பார்த்து திரும்ப மாட்டியா…? அப்படியென்ன வேகம்? வீட்டுல நம்மள தவிர யாரு வரபோறாங்க. இப்படியா பயப்படுவ? கீழ விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்” என கடிந்துகொண்டான்.
Advertisement
“இல்ல அது ஏதோ யோசனையில இருந்தேன். நீங்க வந்தத கவனிக்கல”.
க்ஷண நேரத்தில் இருவரும் பதட்டமாகியிருந்தனர்.
கணவனது வலது கை மனைவியின் இடுப்புக்கு கீழே அவளை தாங்கி பிடித்தவாறும், இடது கை அவளது கழுத்திற்கு பின்னால் தோள்பட்டையை அழுத்திகொண்டு அவனோடு அவளை சேர்த்தவாறும் விழாமல் பிடித்திருந்தது.
ஏதோ குழந்தையை இலாவகமாக தாங்கிப் பிடித்திருப்பது போல இருந்தது பார்ப்பதற்கு.
கணவனது டி ஷர்டைப் அவளது இரு கையாளும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு வாகாக அவனது கையில் சாய்ந்து நின்றிருந்தாள்.
நொடி நேரத்தில் நடந்த தடுமாற்றத்திலும், எதிர்பாராத கணவனின் ஸ்பரிசத்திலும் நாணம் வந்தாலும் விலகாமல், அவனையே விழுங்கிவிடுவதுபோல பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனின் மார்போடு இவள் முழுவதுமாக உரசிக் கொண்டிருந்தாலும் அதை உணரும் ஸ்மரணையில் இல்லை.
முதன்முதலாக பெண்மையின் நளினங்களை உணர்ந்தவனுக்கும் சுகமான இம்சைகள் உள்ளுக்குள்.
மனைவியின் பார்வையில் அவனுக்கே கூச்சம் வருவதுபோல இருந்தது. அதில் அவளை விட்டு நகர நினைத்தவன் நகர முடியாமல் அமுதினியின் பிடி இழுத்து வைத்திருந்தது.
தன்னை மறந்து இன்னும் அவன் பிடியில் நின்றிருந்தவளைப் பார்த்து “ஹோய் என்ன?” என்றான் சிரித்துக்கொண்டே மனைவியிடம்.
ம்கூம்… என இடம் வலமாக தலையசைத்தவளுக்கு ஸ்மரணை வரவில்லையா? அல்லது கணவனை விட்டு விலக மனமில்லையா? என தெரியவில்லை. அவனுக்கும் அவளை விலக்க முடியவில்லை.
நெருங்கி நின்றிருந்ததில் இன்னும் தெளிவாகவே அமுதினியின் முகம் தெரிந்தது. கண்கள் இரண்டும் வீங்கி சிவந்திருந்தது. அழுகைக்கான காரணம் என்ன என கேட்க நினைத்தாலும் என்னவோ அவனுக்கு அவளிடம் இன்னும் உரிமையாக பேசவரவில்லை.
தான் கேட்டால் அதற்கான காரணத்தை தன்னிடம் சொல்வாளா என்ற தடுமாற்றமும் தயக்கமும் வேறு இருந்தது.
குக்கர் விசில் எழுப்பிய சத்தத்தில் தெளிந்தவள் அவனிடம் இருந்து விலகி நின்றாள். வேலை பார்க்க என அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றவளுக்கு சமையலில் கவனம் பதிக்க முடியவில்லை.
ஹாலில் ஷ்யாமளாவின் குரல் கேட்ட பிறகுதான் அச்சோ அத்தை கிளம்பிட்டாங்க போல என பரபரக்க வேலையை கவனித்தாள்.
அவனும் அன்னையின் குரல் கேட்டதில் வெளியில் சென்றிருந்தான். அத்தை எப்ப வந்தாங்கன்னு தெரியலையே? பார்த்திருப்பாங்களோ? என யோசித்தவளும் மூக்கைச் சுருக்கி வெட்கத்தில் ரசனையாக தலையில் தட்டிக் கொண்டாள்.
என்னைக்கும் இல்லாம இவங்க இன்னைக்கு கிட்சனுக்கு ஏன் வந்தாங்க? என்ன விஷயம்னு சொல்லாமயே போயிட்டாங்க என நினைத்தவள் “காபி குடிச்சிட்டியா கௌதம்?” என்ற ஷ்யாமளாவின் கேள்வியைக் கேட்ட பிறகுதான் விடை தெரிந்தது.
ஓஹ்… இதுக்கு தான் வந்தாங்களா என தன் நெற்றியில் தட்டிக் கொண்டவள் ஷ்யாமளா கௌதம் இருவருக்கும் காபி கலந்து எடுத்துச் சென்றாள்.
கௌதம் எழுந்து வெகு நேரம் ஆகியும் அமுதினி காபி கொண்டு வராததால் அவளைத் தேடி கீழே கிட்சனுக்கு வந்திருந்தான். எழுந்ததும் மனைவியைத் தேடியவன், அவள் எப்போதும் போல் எழுந்து சென்றுவிட்டதைப் பார்த்தான்.
அவனது காலை வேலையை முடித்து பேப்பருடன் அமர்ந்திருந்தவனுக்கு இன்னும் அமுதினி காபி கொண்டு வர வில்லை என்றதனால் கீழே வந்திருந்தான். அதுமட்டுமில்லை எழுந்ததிலிருந்து மனைவியைக் காணும் உந்துதலும் இருந்ததால் கிட்சனுக்கே தேடி வந்து நின்றான்.
அவன் வந்ததைக்கூட உணராமல் அவள் சமைப்பதில் பிஸியாக இருந்ததால், அவனும் அவளை பின்பக்கமிருந்து ரசிக்க வசதியாக இருந்ததுபோல.
கிட்சனில் இருந்து வந்தும் இன்னும் நினைவு எல்லாம் அங்கேயேதான் இருந்தது அவனுக்கு. அவளை தழுவிக்கொண்டு நின்றதில் மனைவியின் மீதிருந்த வாசம் இவன் மேல் ஒட்டிக்கொண்டது போன்ற பிரமை மனதுக்குள்.
ஹாலில் அமர்ந்து ஷ்யாமளாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கௌதமின் பார்வையெல்லாம் காபியுடன் வரும் மனைவியின் மீதே படிந்திருந்தது.
ஷ்யாமளாவைப் பார்த்த அமுதினி “குட்மார்னிங் த்தை” என்றாள் மலர்ச்சியுடன்.
ஷ்யாமளாவும் சிரித்துக் கொண்டே “குட்மார்னிங் டா. நேத்து ரொம்ப வேலையா? டையர்டுல தூங்கிட்ட போல? சாப்பிடக் கூட இல்லை. உன்ன கூப்பிடலாம்னு வந்து பார்த்தேன். நீ தூங்கிட்டிருந்த. டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு வந்துட்டேன்” என்றார்.
“நீங்க ரூமுக்கு வந்தீங்களா..? எனக்கு தெரியாது த்தை, நான் நல்லா தூங்கிட்டேன். எழுப்பியிருக்கலாமில்ல?”
“நீயே அசந்து தூங்கற. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு, ரூமுக்கு வெளிய இருந்தே பார்த்துட்டு வந்துட்டேன்”.
“அது” என தடுமாறியவள் “கொ..ஞ்சம் தலைவலியா இருந்தது த்தை. அதான் மாத்திரை போட்டு தூங்கிட்டேன்” என்றாள்.
“ஓஹ்… கண்ணெல்லாம்கூட வீங்கின மாதிரி இருக்கேடா. வேணா இன்னைக்கு நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்துக்கோ அனி”.
“இப்ப வலியில்ல த்தை. நல்லாயிருக்கேன்” என சிரித்தவள் மறுபடியும் கிட்சனுக்குள் சென்று விட்டாள்.
அமுதினி பேசும் போது அவளையேதான் பார்த்திருந்தான் கௌதம். தலைவலியா அதுக்கு அழுவாங்களா? என்னமா பொய் சொல்றாள் இவள். இந்த அம்மாவும் நம்பறாங்க இவளை என நினைத்துகொண்டான்.
மனைவி அழுததற்கான காரணம் தெரியாமல் மனதுக்குள் எரிச்சல் மூண்டது அவனுக்கு.
அரவிந்தனுக்கு, ரக்ஷி அமுதினியிடம் என்ன சொன்னாள்? என்ன பேசினாள் என தெரியாமல் தலை வெடித்துவிடும் போல இருந்தது. அதுமட்டுமில்லை ரக்ஷியை கண்டித்து வைக்கவும் நினைத்தான்.
அவ்வளவு எடுத்து சொல்லியும் அண்ணிகிட்ட பேசிருக்கா. என்ன பேசுனான்னும் தெரியல. ஏதோ மோசமா பேசியிருக்கா. அதான் அவளப்பத்தி பேச்சு எடுத்ததும் உடனே அண்ணி அழ ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணி வருத்தப்படற அளவுக்கு என்ன பேசுனான்னு கேட்டு அவளை கண்டிச்சு வைக்கனும் என மனதில் முடிவு செய்துகொண்டான்.
அவனுக்கு உள்ளுக்குள் பயம் வந்திருந்தது. அமுதினியிடம் பேசியது போல், அவள் வீட்டில் உள்ளவர்களிடமோ, அல்லது கனிமொழியிடமோ பேசிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம்.
எதுவும் கிறுக்கு தனமா பண்றதுக்கு முன்னாடி நாம அவளை நேர்ல பார்த்து பேசிடறதுதான் பெட்டர் என தீர்மானித்தவன் ரக்ஷி கல்லூரியில் இருந்து மாலை வீட்டுக்கு வரும் நேரத்தை உத்தேசித்து, அவளைக் காண அவளது வீட்டிற்கு புறப்பட்டான்.
ரக்ஷி உண்மையிலேயே நல்ல பெண். படிப்பாளி. புத்திசாலி. அழகியும்கூட. அரவிந்தனின் மீது கொண்ட ஆசை அவளை நிலை பிறழ வைத்திருந்தது.
இதுவரை யாரிடமும் மரியாதையின்றி நடந்து கொண்டதில்லை. வீட்டில் ஒரே பிள்ளை. செல்லம் அதிகம். நினைத்தது, கேட்டது எல்லாம் அவளுக்கு இல்லை என்றில்லாமல் கிடைத்து வந்தது இத்தனை நாட்களாக. அதில் வந்த பிடிவாதம்தான் இது எல்லாம்.
அதுவும் அவளது தாய் தந்தையருக்கு மூன்று வருடம் குழந்தை இல்லாமல், அவர்கள் தவமிருந்து வேண்டி பெற்ற குழந்தை செல்வம் அவள். ஆதலால் ரக்ஷிதான் அவர்களுக்கு எல்லாம்.
அப்படிப்பட்டவளுக்கு இவ்வளவு நாள் இருந்த அரவிந்தனுடனான நெருக்கம் தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளுக்குள். எங்கே கனியால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம்.
அரவிந்தன் கனியிடம் காட்டிய அன்பு, அக்கறை இவற்றையெல்லாம் கண்களால் நேரிலேயே கௌதமின் திருமணத்திலும், ரிசப்ஷனிலும் பார்த்ததால் அவள் மனதில் உண்டான பொறாமை.
அவளது எண்ணங்களுக்கு எல்லாம் வலிமை கூட்டுவதுபோல் அரவிந்தனும் கல்யாண பிசியில் ரக்ஷியை கண்டுகொள்ளாமலே இருந்தது என எல்லாம் சேர்ந்து அவளை வீழ்த்தியிருந்தது.
எல்லோரையும் போல் ரக்ஷியை வரவேற்று, உபசரித்தவனுக்கு அவளுடனான நேரத்தை ஸ்பென்ட் செய்ய இயலவில்லை.
அதற்கு அவனுக்கு நேரமும் இருக்கவில்லை. வீட்டின் ஆண்மகனாக அவன் ஒருத்தன்தான் எல்லா வேலைகளையும் எடுத்து செய்யுமாறு இருந்தது.
எப்போதும் ரக்ஷிக்கு தரும் முக்கியத்துவம் இந்த திருமணத்தில் கிடைக்காமல் போனதில் அவளுக்குள் சற்று ஏமாற்றமும்கூட. அதில் கனியையும் அரவிந்தனையும் சேர்த்து அங்கே இங்கே என பார்த்ததில் இன்னும் காண்டாகியிருந்த்தாள். ஏதோ வேண்டுமென்றே அரவிந்தன் இவளை அவாய்ட் செய்தததுபோல எண்ணி.
கல்யாண அலைச்சலில், வேலையில் அவன் அவளை கவனிக்க முடியாததை அவள் வேறு விதமாக அர்த்தம் எடுத்துகொண்டாள்.
சின்னப் பிள்ளை விளையாட்டு என்பார்களே அது போல எதையும் சரியாக யோசிக்காமல் முரணான எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக்கொண்டவள் எதைக் செய்யக்கூடாதோ அதை செய்திருந்தாள்.
ஆத்திரத்தில், ஆவேசத்தில் என்ன செய்கிறோம் என அறியாமல் அமுதினியிடம் போன் செய்து தகாத வார்த்தைகளை பேசியவள், கோவம் தணிய தணிய மூளை வேலை செய்ய ஆரம்பித்ததில், தனது தவறினை நினைத்து கூனிக் குறுகி நின்றாள்.
இந்த மாதிரியான இழிவு சொற்களை நானா பேசியது என தன்னையே அவமானமாக உணர்ந்தாள். ஐயோ இது ஷ்யாமளா அத்தைக்கு தெரிஞ்சாலோ, மாமா இரண்டு பேருக்கும் தெரிஞ்சாலோ என்னை எவ்வளவு கேவலமா நினைப்பாங்க? முதல்ல அப்பா அம்மாக்கு தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம், அவமானம் என தன்னையே கீழாக நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். அதற்கடுத்த நாட்களில் கல்லூரிக்கும் செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டிலேயே முடங்கியிருந்தாள்.
மகள் அறையை விட்டு வெளியில் வராமல் படுத்துக் கொண்டே இருப்பதை பார்த்த கீதா அவளிடம் வந்து “ஏன் ரக்ஷி? உடம்பு சரியில்லையா? ஏன்டா டல்லா இருக்க? டாக்டர் கிட்ட போகலாமா?” என கேட்டதற்கும் மறுத்திருந்தாள்.
“இல்லம்மா. சரியா தூங்கல. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்லை” என்றுவிட்டாள். கீதாவும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டார்.
அரவிந்தன் ரக்ஷியைக் காண அவளது வீட்டுக்கு பின் மாலைப் பொழுதில் வந்தபோது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அப்படிதான் கீதா சொன்னார் அவனிடம். அரவிந்தனைப் பார்த்த கீதா அவனை வரவேற்று உபசரித்தார்.
கீதா, “வா… வா… அரவிந்த்” என வரவேற்றவர் அவனுக்கு குடிக்க கொடுத்து, அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கீதாவுக்கு தெரியும் அரவிந்தனும் ரக்ஷியும் க்ளோஸ் என்று. இருவரும் விவரம் தெரிந்த நாட்களிலிருந்து ஒன்றாக நண்பர்கள் போல பழகுவதை அவரும் அறிவார்.
அவர் மனதிலும் அரவிந்தனே மகளுக்கு மணாளனாக வந்தால் நன்றாகயிருக்கும் என்ற எண்ணமும் ஆசையும் உண்டு.
இந்த காலத்து பிள்ளைகள் தெளிவானவர்கள். அதுமாதிரி எந்த எண்ணமும் நினைப்பும் அவர்கள் மனதில் இல்லாமல் இருக்கப்போய், தாம் ஏதாவது சொல்லி, அது அவர்கள் மனதை தூண்டிவிடுவது போல் ஆகிவிடக் கூடாது என அந்த எண்ணத்தையே விட்டிருந்தார்.
அரவிந்தன் வந்ததும் மகளை தெரிந்து அவளை பார்க்க வந்திருக்கிறான்போல என நினைத்தார். அவன் வந்ததும் மகளை சென்று பார்த்தவர் அவள் அசைவில்லாமல் படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து, உறங்குவதாக நினைத்து அவளை எழுப்பாமல் திரும்பவும் வந்து அவனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
வெகு நேரம் ஆகியும் மகள் எழுந்திருக்காததால் அவளை எழுப்ப கீதா உள்ளே சென்றார். அப்போதும் அவள் அதே நிலையில் படுத்துக் கொண்டிப்பதைப் பார்த்தவருக்கு சந்தேகம் வந்து அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்து தோளைத் தட்டி எழுப்பினார்.
கீதா எழுப்பியும் மகளிடம் எந்த அசைவும் இல்லையென்பதால் இலேசான பயத்துடன் “ரக்ஷி.., ரக்ஷிம்மா… என்னடா…? என்ன செய்யுது? கண்ணை திறந்து பாருங்க” என உலுக்க ஆரம்பித்தார் பதற்றத்துடன்.
கீதாவின் சத்தம் கேட்டு அங்கே வந்த அரவிந்தன் ரக்ஷியை கீதா எழுப்பிக் கொண்டிருப்பதையும், அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தவன், விரைந்து சென்று அவளை பரிசோதித்தான்.
அவளை பரிசோதித்தவனுக்கு சந்தேகம் வந்து, அவளது படுக்கையைச் சுற்றி ஆராய்ந்தவனது கண்களில் அந்த ஸ்லீப்பிங் பில்ஸ் காலியான அட்டை கண்ணில் பட்டது. உடனே அவளது சுவாசத்தை நாடியை பரிசோதித்தவன், கீதாவின் உதவியுடன் அங்கேயே அவளுக்கு முதலுதவி செய்து அவர்களது மருத்துவமனைக்கு தூக்கி வந்து சேர்த்திருந்தான்.
தொடரும்.
error: Content is protected !!