Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

அத்தியாயம் – 7

பின்னால் திரும்பிப் பார்த்தபடி காருக்குள் ஏறப் போன நவிராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன!

அவ்வளவு தான்.. தன்னைக் காப்பாற்ற வந்த காரணத்தினாலேயே இவன் இப்பொழுது சாகப் போகிறான் என்ற எண்ணத்தில்.. “நோ..” என்று கத்திக் கொண்டு ஷிவ்வை நோக்கி அவள் ஓடி வருவதற்குள், நொடி நேரத்தில் ஷிவ், அந்தக் கொலையாளியின் கையைப் பிடித்துத் திருகி, தூக்கித் தரையில் அடித்திருந்தான்.

ஷிவ்வை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நவிராவோ, அதிர்ச்சியில் அப்படியே நிற்க, அவன் வீசிய வேகத்தில் கீழே விழுந்தவனின் முகம் தரையில் பட்டு அவன் பற்கள் வெளியே தெறித்தன.

அதே நேரத்தில் அந்த இடத்துக்கு காவலர்களும் வந்துவிட்டனர்.



Advertisement

நேராக நவிராவிடம் சென்று அவளைப் பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டவர்கள், அவளிடமே விவரமும் கேட்டனர்.

நடந்ததையெல்லாம் அவள் கூறி முடிப்பதற்குள் அந்தக் கொலையாளியை இரண்டு காவலர்கள் கைது செய்திருக்க, அந்தக் கொலையாளியோ அவர்கள் முன்னிலையிலேயே..

“இந்தியால இருந்து இங்க வந்த உன்னை, எங்க நாட்டுல நாங்க வாழ விடமாட்டோம்.

Advertisement

போ.. உன் நாட்டுக்கே போ.. உன் நாட்டுக்கே போ..” என்று ஆக்ரோஷமாகக் கோஷமிட்டான்.

Advertisement

அதைப் பார்த்த நவிரா அதிர்ந்தாலும், அந்த அமெரிக்க மண்ணில், அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள் மீதும், மற்ற வெளி இனத்தவர் மீதும் காட்டப்படும் வெறுப்பினைப் பற்றி அறிந்திருந்ததால் அப்படி ஒன்று நடுநடுங்கிப் போய்விடவில்லை.

செல்லும் அவனையே அவள் வெறித்திருக்க, அப்பொழுது அந்த இடத்துக்கு விரைவாக ஊடக மக்களும் வந்து விட்டிருந்தனர்.

அப்பொழுது தான் ஷிவ்வுக்கு தான் செய்த முட்டாள்த்தனமே விளங்கியது.

Advertisement

பத்திரிக்கைகளிலோ அல்லது எந்த ஒரு சமூக ஊடகங்களிலோ அவனது முகமோ அல்லது அவனைப் பற்றிய செய்தியோ வெளிவந்துவிடக் கூடாது.

இப்படி இவன் இங்கே இருக்கிறான் என்பது வெளியே கசிந்தால் அது தன் தந்தையின்.. தங்களின், அரசியல் வாழ்க்கைக்குப் பெரிய இன்னலாக வந்து முடியும் என்று எண்ணியவன், உடனடியாக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.

ஆனால் காவலர்கள் அவனிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க, அதைக் கவனித்த நவிராவோ காவலர்களிடம்..

“மிஸ்டர்.ஷிவ், என்னுடைய நண்பர் தான். நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு உங்க ஆபிஸுக்கு வந்து இதை பற்றிப் பேசறோம்.

இப்போ மீடியா பீப்பிள் எல்லாம் இங்க கூடிட்டாங்க. சோ.. ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டேன்ட்..” என்று கூற, அவளது நிலைமையைக் கருத்தில் கொண்ட காவல் அதிகாரியும், பிறகு தானே அவர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்து கொள்வதாகக் கூற, நவிராவோ அவளது காருக்குள் ஏற, ஷிவ்வும் அங்கிருந்து திரும்பினான்.

செல்லும் அவனை, “ஷிவ்!” என்று சற்று சத்தமாகக் கூவி நவிரா அழைக்க, அவளிடம் திரும்பியவன்,

“சொல்லுங்க மேடம்..” என்றிருந்தான்.

“மெனி தேங்க்ஸ் ஷிவ்.. நீ.. நீங்க மட்டும் இல்லைனா, நான் இந்நேரம் உயிரோடவே இருந்திருக்க முடியாது..” என்று தடதடக்கும் குரலோடு அவள் கூற, காருக்குள் அமர்ந்திருந்தவளின் முகத்தை நோக்கி குனிந்திருந்த ஷிவ்வுக்கோ நெஞ்சம் படபடத்தது.

ஆர்வமாய் விரிந்திருக்கும் அவளது கண்ணிமைகளையும், அதிர்ச்சியில் தடுமாறும் அவளது செவ்விதழ்களையும் பார்த்வனது நெஞ்சம் படபடத்துத் திண்டாடியது!

மெல்லச் சிரித்தபடியே அவன் பின்னே திரும்பி நடக்க, செல்லும் அவனையே பார்த்திருந்தாள் நவிரா.

ஆனால் அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஊடங்களில் வெளியாகி அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

நவிராவைக் காப்பாற்றிய ஷிவ்வின் புகைப்படம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கிடைக்காதவாறு நவிரா பார்த்துக் கொண்டாள்.

ஆனாலும் ஷிவ்வின் பெயர் செய்தியில் வந்ததே அவன் தந்தைக்குப் போதுமானதாய் இருந்தது.

அதுவும் தமிழ் ஊடகங்களில் கூட, நவிராவின் புகைப்படத்துடன், ஷிவ்வைக் குறிப்பிட்டு,

“பாப் பாடகி நவிராவைக் காப்பாற்றிய இந்திய இளைஞர் ஷிவ்! நவிராவின் ரகசியக் காதலனா?” என்றெல்லாம் செய்திகள் வர, அவன் தந்தை வெற்றிச் செல்வனோ ஆத்திரத்துடன் அவனுக்கு போனில் அழைத்தார்.

“என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? எங்க வாழ்க்கையை நீயே அழிச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்று அவர் கத்த, மறுமுனையில் இருந்த ஷிவ்வோ..

“அது என் வாழ்க்கையும் தான்.” என்று உறுமியதில் சட்டென நின்றது வெற்றிச் செல்வனின் பேச்சு.

அவரது பேச்சு நிற்கவும் சிவந்த கண்களை இறுக்க மூடித் திறந்த ஷிவ்வோ..

“தனித்தனியா பார்க்கக் கூடாதுன்னு பலமுறை உங்களை எச்சரிச்சாச்சு! என்னை, என்கிட்டே இருந்து பிரிக்க நினைச்சா, அப்படிப் பிரிக்க நினைக்கறது யாருன்னு கூடப் பார்க்க மாட்டேன்.. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.” என்ற அவனது குரலில் மொத்தமாக சரணாகதி அடைந்துவிட்ட வெற்றிச் செல்வனோ..

“சரி.. இனி இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோ..” என்று அப்பொழுதும் ஏதோ அவனை மன்னிப்பதைப் போலக் கூறவும் ஷிவ் சிரித்தான்.

“ஹ்ம்ம்.. இங்க நீங்க மன்னிக்கக் கூடிய அளவுக்கு நான் தப்பு எதுவும் செய்யவும் இல்ல.. உங்க மன்னிப்பைக் கேட்கவும் இல்ல.

அந்த சூழ்நிலைல என்னால என்ன செய்ய முடியுமோ அதைத் தான் நான் செஞ்சேன்.

அது எனக்குத் தப்பா தோணல.

அதனால என்னோட அரசியல் எதிர்காலத்துக்கும் எந்த பாதிப்பும் வராது.” என்றவன், அந்த “என்னுடைய” என்பதில் அதிக அழுத்தம் கொடுக்க, வெற்றிச் செல்வனின் முகம் கடுத்தது.

“வேற எதுவும் பேசறதுக்கு இல்லல்ல? வச்சுடறேன்.” என்று கடுப்புடன் கூறிவிட்டு அவன் போனை வைத்துவிட, அந்த நேரம் பார்த்து அவன் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது!

ஏதாவது கொரியராக இருக்கும் எண்ணி அவன் வெளியே செல்ல, அங்கு வாசலில் நின்றிருந்த நபரைப் பார்த்து ஷிவ்வுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன!

அதிர்ச்சி தான்.. ஆனால் ஆனந்த அதிர்ச்சி.

ஏனென்றால் முகத்தில் மாஸ்க்குடன் வாசலில் நின்றிருந்தது நவிரா!

முகத்தில் மாஸ்க், கண்களில் பெரிய கூலர் என்று அவள் இருந்தாலும், ஷிவ்வின் விழிகளோ நொடியில் அவளை அடையாளம் கண்டுகொண்டன.

அவன் கண்கள் விரிந்ததை வைத்தே, அவன் தன்னை அடையாளம் கண்டுகொண்டான் என்று புரிந்துகொண்ட நவிராவோ, கண்களில் இருந்த கூலரைக் கழற்றியபடி..

“பரவால்லயே.. உடனே அடையாளம் கண்டுபிடிச்சுட்டீங்க?

என்னை நினைவு படுத்த, நான் கொஞ்சம் சிரமப்படணும்னு நினைச்சேன்..” என்று அவள் சிறு புன்னகையுடன் கூற, ம்ம்ஹும்.. அதெல்லாம் எங்கே அவன் காதுகளில் விழுந்தது?!

பார்த்த விழி பார்த்தபடி அவன் அப்படியே நிற்க, நவிராவோ..

“ஹெலோ.. நான் உள்ள வரலாமா?” என்றாள் அவன் முன்பாகச் சொடக்கிட்டு.

அதில் சட்டெனத் தெளிந்தவனோ..

“எஸ்.. ப்ளீஸ் கம் இன்..” என்றபடி நகர்ந்து வழிவிட, உள்ளே வந்து ஹால் சோஃபாவில் அமர்ந்தாள் நவிரா.

அமர்ந்தவள் மேலே அண்ணார்ந்து அந்த வீட்டை விழிகளால் அளவிட்டாள். அவளது அளவிடல் அவனுக்கும் புரிந்தது தான். இங்கே இது போல உணவகங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி படிக்கும் மாணவர்களாகத் தான் இருப்பார்கள்.

அவர்கள் இப்படி ஒற்றைப் படுக்கையறைத் தனி வீட்டில் இருப்பது அரிதிலும் அரிது.

ஏனென்றால் பணம் சேமிக்கத் தானே அவர்கள் வேலை செய்வது? அப்படி இருக்க இந்த ஊரின் படி வீட்டு வாடகை கொடுத்து தனித்தனியாகத் தங்குவதைக் காட்டிலும், நான்கைந்து பேர் சேர்ந்து ஒரே வீட்டில் தங்குவது தான் இயல்பு. வருமானத்துக்கும் வசதி!

ஆனால் இவனோ, இப்படி ஒற்றைப் படுக்கையறை வீட்டில்.. அதுவும், இது போன்ற வளமை மிகுந்த ஊரின் நடுவே வசிப்பது அவளுக்குச் சற்று ஆச்சர்யாத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அவன் சரியாகவே கணித்தாலும் அவளிடம் இப்போதைக்கு அதைப் பற்றி விளக்க விரும்பவில்லை அவன்.

முதலில் அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்வோம் என்று எண்ணிய ஷிவ், அவளிடம் நேரடியாகவே..

“என்ன மேடம்.. நீங்களே நேரா இங்க வந்திருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க, மென்மையாக சிரித்த நவிரா,

“முதல்ல உங்ககிட்ட சாரி கேட்கணும்.. இப்படி அன் அனவுன்ஸ்ட்டா (unannounced) வந்ததுக்கு.

நான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்ல வந்தேன் ஷிவ்.

அந்த நேரத்துல நீங்க எதைப் பத்தியும் யோசிக்கல.. இப்படி ஒரு சிட்டுவேஷன்ல எல்லாரும் முதல்ல அவங்கவங்களைத் தற்காத்துக்கத் தான் நினைப்பாங்க.

அது தான் முக்கியமும் கூட, ஆனா நீங்க அப்படி இல்லாம என்னைக் காப்பாத்த வந்தீங்க.. அதுக்காக ரொம்ப தேங்க்ஸ் ஷிவ்.” என்றாள் உண்மையாகவே விழிகளில் நன்றி உணர்வோடு.

அதில் தானுமே மென்மையாகப் புன்னகை புரிந்த ஷிவ்வோ..

“பரவால்ல விடுங்க மேம்.. சக உயிருக்கு உதவி செய்யறது அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்ல..

என்னுடைய அம்மா, அப்பாக்கு இப்படி ஒரு ஆபத்துன்னா நான் பார்த்துட்டு சும்மா இருந்திருப்பேனா?” என்று அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளோ..

“நான் உங்களுக்கு அப்படிப்பட்ட சொந்தம் எதுவும் இல்லையே?” என்றாள் கேள்வியாக.

‘நான் உன் ரத்த சொந்தமாக இல்லாத பொழுது, உன் பாதுகாப்பையும் மீறி என்னைக் காப்பாற்றியது ஏன்?’ என்று அவள் கேட்கிறாள் என்று புரிந்தது.

என்ன சொல்வான் அவன்?

அவளை பார்த்த நொடி முதல் அவன் கொண்ட பித்துற்ற பேருநிலையைச் சொல்வானா?

அல்லது அவளுக்காகவே தன் நிலை மறந்து, பணியாளாகி அவள் பாதம் தழுவிட நினைத்தத்தைச் சொல்லுவானா?

இல்ல.. தான் உயிராய் நேசிக்கும் அந்த ஒற்றை உயிரை மறந்து, இவளுக்காக தன்னுயிரை தரத் துணிந்ததைச் சொல்லுவானா?

பதிலில்லை அவனிடம்!

அவஸ்தையான மௌனத்துடன் அவன் அப்படியே நின்றிருக்க, மெல்லத் தன் இருக்கையிலிருந்து மேலெழுந்த நவிராவோ..

“ரோட்ல போகும் போது, அடிபட்டவங்களுக்கு உதவி செஞ்சு காப்பாத்தற மாதிரியான விஷயமில்லை இது.” என்று கூற, ஷிவ்வோ வேண்டுமென்றே..

“உங்க கார்ட்ஸ் இருந்திருந்தா, அவங்களும் இதையே தான செய்திருப்பாங்க?” என்று குதர்க்கமாகக் கேட்க, மார்போடு கைகளைக் கட்டிக் கொண்டே அவனைப் பார்த்தவள்..

“என்னோட கார்ட்ஸுக்கு அது தான் தொழில். அதுக்காகத் தான் நான் அவங்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கும் வச்சிருக்கேன். தவிர, அவங்க கிட்ட துப்பாக்கியும் இருக்கும்.

ஆனா.. இது வேற..

இது வேறன்னு எனக்கும் புரியுது.” என்று நெருங்கி அவன் முகம் பார்த்து அவள் கூற விலுக்கென நிமிர்ந்தான் அவன்.

அந்தப் பார்வையில் தனது விழிகளைத் தாழ்த்திக் கொண்ட பெண்ணவளோ..

“அடுத்த வாரம் ஸ்கார்லெட் விஸ்பர்ல என்னோட புது கான்செர்ட் ஆரம்பமாகுது. ஒரு வாரம் நான் அதுல தான் இருப்பேன்.

அந்த கான்செர்ட்ல நீங்களும் கலந்துக்கணும்னு ஆசைப்படறேன்..” என்று அவள் கூறி முடிக்கும் பொழுது வானத்தில் பறப்பது போல இருந்தது ஷிவ்வுக்கு. ஒரு கணம் அவன் தன்னை மறந்து நின்றிருக்க, அப்பொழுது மீண்டும் அவனது செல்போன் ஒலித்தது.

“எக்ஸ்கியூஸ் மீ..” கேட்டுவிட்டு அவன் போனை எடுக்க, அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்ததும் அவனது புருவங்கள் சுருங்கின.

உடனே அந்த அறையின் மறுகோடிக்கு சென்று அந்த அழைப்பை எடுத்தவன் முகமோ பதட்டத்தைக் காட்டியது.

தப்பு செய்து மாட்டிக் கொண்டவன் போல அவனது உடல் மொழி இருக்க, அதைப் புரியாத குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நவிரா.

“இல்லை.. இல்லை..” என்ற மறுப்பும், கூடவே அவனது வேகமான தமிழ் உச்சரிப்பும் அந்தப் பேச்சுவார்த்தையை இவளுக்கு முழுமையாக விளங்க வைக்கா விட்டாலும், அவன் ஏதோ பிரச்சனையில் இருப்பதை போல் காட்டியது.

என்னவென்று இவள் பார்த்திருக்க, போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டவன் கண்களை இறுக்க மூடித் திறந்தபடி இவளை பார்த்தான்.

நவிராவின் முகத்தில் கவலையைக் காணவும், முயன்று சற்று புன்னகைத்தவன், அவளருகே வந்து ஒரு பெருமுச்சுடன்,

“சாரி மேடம்.. நீங்க கேட்டு நான் மறுக்கறது, ரொம்ப தப்பு தான்.. ஆனா.. என்னால இந்த கான்செர்ட்டுக்கு வர முடியாது. தப்பா நினைச்சுக்காதீங்க..” என்று அவளது முகம் பார்த்துக் கூற, நவிராவின் முகமோ சட்டென சோர்ந்துவிட்டது.

“இ.. இட்ஸ் ஓகே.. பரவால்ல..

அ.. அப்போ.. நான் கிளம்பறேன்..” என்று அவன் கண் பார்க்காதே விடைபெற்று அவள் கிளம்ப, இவன் இதயத்துக்குள் தான் பாரம் ஏறியது.

சோர்வுடன் சோபாவில் பொத்தென்று அமர்ந்தவனோ, கண்களை மூடித் தலையைக் கோதிக் கொண்டான்.

பத்து வினாடி.. முழுதாகப் பத்து விநாடி அப்படியே அமர்ந்திருந்தவன், பட்டென எழுந்துவிட்டான்.

தனது லேப்டாப்புடன் வந்து அமர்ந்தவனோ.. சகார்லெட் விஸ்பர் என்று கூகிளில் இட.. அது அந்த மிகப் பிரம்மாண்டமான க்ரூஸ் கப்பலைக் காட்டியது!

அது அவளது கப்பல் தான். மிகச் சமீபமாகத் தான் அந்தக் கப்பலை நவிரா வாங்கியிருக்க, அந்த செய்தி அமெரிக்காவில் வைரலானது.

அந்தக் கப்பல் தனது முதல் பயணத்த்தை அடுத்த வாரம் தான் துவங்கவிருக்கிறது.

அதில் தான் நவிராவும் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறாள்.

அதில் தான் தன்னுடன் ஷிவ்வை வரவேண்டுமென்று அவள் கேட்க, ஷிவ்வோ வேறொரு காரணத்திற்காக அதை மறுத்தும் விட்டான்.

ஆனால் அவளது சோர்ந்த முகம் இவனை என்னவோ செய்தது.

யாருக்காக யார்? என்று யோசித்து முதல் முடிவை எடுத்திருந்தான் அவன்.

ஆனால் இப்பொழுதோ.. அவளுக்காகத் தான் இனி எல்லாமே என்று முடிவெடுத்துவிட்டான்.

அந்த வலைத்தளத்துக்குச் சென்று ஆன்லைனிலேயே டிக்கட்டை வாங்கியும் விட்டான்.

சரியாக ஒரு வாரம் கழித்து..

அந்த க்ரூஸில் நவிராவின் அறைக்குள் இருந்த பால்கனி வழியாக கடலைப் பார்த்தபடி காபி அருந்திக் கொண்டிருந்தான் ஷிவ்.

அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கடலையும், அவனையும் ஒருங்கே பார்த்திருந்த நவிராவோ..

“எனக்குத் தெரியும் ஷிவ், நீங்க வருவீங்கன்னு..” என்று கூற, அவளை நோக்கித் திரும்பியவன்..

“எப்படி?” என்று கேட்க, காபி கப்பை நோக்கிக் குனிந்திருந்தவள், கண்களை மட்டும் அவனை நோக்கி உயர்த்தியபடி..

“நான் உங்க கண்ணுல பார்த்தேன்..” என்றிருந்தாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!