Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 20

அத்தியாயம் 20

காதல்…



Advertisement

இந்த காதல் மனிதனை எத்தனைப் பாடுப்படுத்தி விடுகிறது. கோழை வீரனாவதும், வீரன் கோழையாவதும் இதில் தான் சாத்தியம். அந்த வகையில் வாசுவின் காதலும் ஒன்று.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையிலும் ஒருவரின் மீது உனக்கு ஈர்ப்போ காதலோ வருமா? என்று கேட்டிருந்தால் நிச்சியம் இல்லையென்று மட்டுமே அவன் பதில் வந்திருக்கும். அனைத்தும் அவளைக் காணும் வரை மட்டுமே நீடித்தது….

Advertisement

Advertisement

இரண்டு வருடங்களுக்கு முன்பான அன்றைய தினம் அழகாய் கண்களுக்குள் விழுந்தன…

***

Advertisement

கோமாவிலிருந்து நினைவு தப்பி ஓரிரு நாட்கள் கடந்திருந்தது… முதல்நாள் இதயா அவனைப் பார்த்துவிட்டு சென்றதோடு சரி மீண்டும் அவனைக் காண வரவில்லை… அவனும் விழிப்பதும், மயக்கத்திற்கு செல்வதுமாக இருந்ததால் இதயாவை பற்றி அதிகம் கேட்டுக் கொள்ளவே இல்லை…

அப்படியே இரண்டு வாரம் கடக்க, மெல்ல மெல்ல எழுந்து நடமாட ஆரம்பித்து இருந்தான் வாசுதேவன்… அன்றைய நாள் தான் இதயாவிற்கு அனைத்தும் நினைவு வந்துவிட்டது என்று மீனாட்சி அழைத்து கூறியிருந்தார்.

உடனே சேலம் கிளம்பி விட்டனர் இருவரும். எதற்காக சேலத்தை விட்டுவிட்டு பெங்களூர் வந்தார்களோ அதே காரணத்தை வைத்து இன்று மீண்டும் சேலம் சென்றனர்…

கண்களை மறைக்கும் கொடிய நினைவுகளோடு தான் ஜானகியும், வாசுவும் அந்த வீட்டில் மீண்டும் காலடி எடுத்து வைத்தனர்…

முற்றத்தில் போடப்பட்டிருந்த சோபாவில அமர்ந்திருந்தனர் மீனாட்சியும், சுந்தரமும்…அவர்களின் அருகே சென்றவன் “அத்தை…” என்றழைத்தான்.

ஆடவனின் குரலில் சட்டென நிமிர்ந்து பார்த்தவர் “வா வாசு, வா ஜானகி…” என்று வரவேற்றவரின் குரலில் அத்தனை தவிப்பு.

அவரின் குரலில் தெரிந்த பேதத்தில் அவசரமாக இதயாவை தேடினான்.

அவனது பார்வையை புரிந்து கொண்டவர் போல

“அவ அவளோட ரூம்ல தான் இருக்கா வாசு…” என்றார் மீனாட்சி.

“நான் போயி பார்த்துட்டு  வரேன் அத்தை…” என்றவன் அவளின் அறையை நோக்கி நடந்தான்.

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எங்கோ வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன் அமைதியாக இதயாவின் அருகில் சென்று அமர்ந்தான்…

பார்வையை அவன் புறம் திருப்பாது “ஏன் வாசு? நான் என்ன தப்பு பண்ணேன். எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை…” எனக் கேட்டதும் தான் தாமதம் தோழியை தோளோடு அணைத்து கொண்டான். அவன் தோள் சேரவே காத்திருந்தாள் போல தேம்பி தேம்பி அழுதாள்… அவளது கண்ணீர் அவனது கண்களிலும் கண்ணீரை கொடுத்தது.

இரண்டு நாட்களாக எவரிடமும் பேசவில்லை… அமைதி, அமைதி மட்டுமே. மகளின் அமைதி இவர்களுக்கு பயத்தைக் கொடுக்கவும் ஜானகிக்கு அழைத்து கூறிவிட்டனர். வாசு வந்தால் மட்டுமே இதயாவை இதிலிருந்து வெளிக் கொண்டுவர முடியும் என்று நம்பினர்..அது உண்மை என்பது போல வாசு வந்ததும் அவள் அடக்கி வைத்திருந்த துக்கம் முழுவதும் வெளிவர ஆரம்பித்திருந்தது.

தோழியின் அழுகையில் மீண்டுமொருமுறை அவனை குத்திக் கிழிக்க தோன்றியது வாசுவிற்கு. கண்களை இறுக மூடிக் கொண்டவன் தோழியின் கேசத்தை கைகள் நடுங்க கோதிக் கொடுத்தான்.

அன்றைய நாள் முழுக்க ஒருவித இறுக்கத்தில் செல்ல, அடுத்த நாளே புகழ்பெற்ற மனநல மருத்துவரான டாக்டர் ராம் பிரசாத்திடம், இதயாவை கவுன்சிலிங் அழைத்து சென்றான் வாசு.

அவளுக்கு மட்டுமே கவுன்சிலிங், அறிவுரைகள் எல்லாம். இவன் அதைப் பற்றி யோசிக்க கூட இல்லை.

தன்னைத் தானே செத்துக்கி கொடூர நினைவுகளில் இருந்து வெளியில் வந்திருப்பவனுக்கு கவுன்சிலிங் எதற்கு என்ற எண்ணம் தான்…

அந்த எண்ணம் கூட அவனின் ராட்சசியின் கைகள் அவனில் அழுத்தமாய் தவிப்பாய், மோகமாய் படராதவரை மட்டுமே நிலைக்கும் என்று அவன் அப்பொழுது நினைத்திருக்கவில்லை

இரண்டு, மூன்று வாரங்களில் இதயாவிடம் நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்படியான ஒரு நாளில் தான் “சுதன்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும் வாசு…அவரைப் பார்க்க போலாமா?…”  என்று கேட்டிருந்தாள்.

வாசுவால் மறுக்க முடியவில்லை. ஆரம்பித்திலிருந்தே தோழியின் எண்ணம் அவனுக்கு புரியும் என்பதால் வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை… அவள் கேட்டது போலவே இரண்டாம் நாள் காலையிலேயே சுதனை காண அவர்களது சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று இருந்தனர்…

****

“டேய் வாசு பையா… இங்கேயே இரு. நான் முதல்ல போறேன். கொஞ்சம் நேரம் கழிச்சு நீ வா…” என்றவளிடம் புன்னகையோடு சரியென்று தலையாட்டினான். நிமிடங்கள் கடக்க கைக்கடிகாரத்தை பார்த்தவன் வாகனத்திலிருந்து இறங்கி வெளியில் நடந்தான்.

அவன் பார்வை முழுக்க பக்கவாட்டிலிருந்த சூப்பர் மார்க்கெட்டின் மீது மட்டுமே இருக்க அவனுக்கு எதிரில் ஓடி வந்த பெண்ணின் மீது இல்லை… அக்கணம் அவனுமே எதிர்ப்பாரத வகையில் ஒரு குட்டி மின்னல் அவனை மோத, முதலில் தடுமாறியவன் நன்றாக கால்களை ஊன்றி நின்று கொண்டான். அந்த பெண் யாரென்று பார்ப்பதற்குள் சுதன் அவ்விடம் வந்திருந்தான்.

  “ஹேய் வாசு, நீயும் வந்திருக்கியா…” என்ற சுதனின் ஆர்ப்பாட்டமான பேச்சில் அந்த பெண்ணைப் பார்க்காது எதிரில் நின்றவனை சிரிப்போடு பார்த்தான். சுதனின் குரலில் சட்டென அப்பெண் விலகி நிற்க, அவளை பொருட்படுத்தாமல் சுதனை நோக்கி மெல்ல நடந்தான். அதற்குள் அவனே வேகமாக வந்து வாசுவை அணைத்திருந்தான்.

அந்நொடி நேர அணைப்பு கூட அவர்களின் அருகில் நின்றிருந்தவளுக்கு எரிச்சலை கிளப்பியது போல ” யோவ் தகப்பா? மினி வேன்ல லாரி மோதின மாதிரி நிக்காம தள்ளி நில்லு டா…” எரிச்சலான குரலில் இருவரும் விலகி குரல் வரும் திசையை பார்த்தனர்.

அவர்களின் பார்வையை பொருட்படுத்தாமல்  “வா… ச்சு… உங்களுக்கு எதுவும் மூச்சு முட்டலையே…” என்ற கேள்வியில் பக்கவாட்டில் நின்று இருந்தவளை குனிந்து பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அவனது அந்த புன்னகையை இமைக்காது பார்த்து வைத்தாள். அவளின் பார்வையில் புருவத்தை உயர்த்தி “என்ன…” என்று கேட்டு வைத்தான்.

அக்கணம் “அடிங்க…” என்ற சுதனின் குரலில் பார்வையை அவனில் இருந்து விலகியவள்  சட்டென அங்கிருந்து ஓடிட சுதனும் அவளை துரத்த ஆரம்பித்து இருந்தான்… இருவரையும் புன்னகையோடு பார்த்தவன் இதயாவிடம் திரும்பி

“யார் இவங்க…” எனக் கேட்டு வைத்தான்.

“இவங்க. நவினா.. நம்ம ஈரோடு பிரெஞ்ச்ல தான் புராஜக்ட் டிசைனரா இருக்காங்க. சுதனோட ப்ரெண்ட்..” என்றாள் மெல்லிய புன்னகையோடு.

கதவில் மாட்டிய சுண்டெலியாய் சுத்தனிடம் மாட்டிக் கொண்டிருந்தவளை பார்த்தபடி

“ஓ…” என்றவனுக்கு அந்த சுருண்ட கேசம் எதையோ நினைவுப் படுத்தியது. அதனை மேலும் யோசிக்கவில்லை. யோசிக்கவில்லை என்பதை விட  யோசிக்க தோன்றவில்லை என்பதே உண்மை…

“நமக்கு தான் அவங்களை தெரியல, பட் அவங்களுக்கு நம்பளை தெரிஞ்சு இருக்கு…” என்றாள் இதயா…

“ம்ம், நம்ம பிரேஞ்ச்ல தானே வொர்க் பண்றாங்க. தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு…” என வாசு சொல்லவும் ஆமோதிப்பாக தலையசைத்தவள் இருவரையும் பார்த்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் இவர்களை நோக்கி வந்திருக்க

“அப்பறம் வாசு… எக்ஸாமுக்கு படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா?…” என்றபடி வாசுவின் தோளில் கைப் போட்டப்படி கேட்டான்.

“இன்னும் அதைப் பத்தி யோசிக்கவே இல்லைண்ணா…இப்போதைக்கு ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்கன்னு டாக்டர் சொல்லி இருக்காரு…” என்று

அவர்கள் பேச்சு நீள…

இதயாவின் அருகில் வந்த நவியோ “ரொம்ப அழகா இருக்கீங்க மேம்…” என்றாள் மென் சிரிப்போடு.

“இந்த மேமெல்லாம் வேண்டாமே நவி… அப்ப கூப்பிட்ட போல பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என்றதும் மெல்லிய புன்னகையோடு கண்ணடித்து சிரித்தவள் “ஓகே நிலவே…” என்றாள்.

வாசுவிடம் பேசியபடி முன்னால் சென்றவன் சட்டென திரும்பி

“மேம்… சாஃப்ட்டி போவோமா?…” இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டான்.

“தேன் மிட்டாய்ல ஐஸ்கிரீம் கலந்து சாப்பிட அங்க எதுக்கு… உங்க

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல இருக்கிற பத்து ரூபாய் ஐஸ் கிரீம் டப்பாவும் ஒரு பாக்கெட் தேன் மிட்டாயும் போதாத…” இதழ்களை சுழித்து அழகு காட்டியபடி  இடக்காக கேட்டாள் நவி.

“ரைட்டு…” மெல்ல தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன் “மேம்…” என்றான் கெஞ்சலாக.

“சரி சரி… போனாப் போகுதுன்னு வரேன்…” என்றவளின் பார்வை வாசுவில் படிந்து மீண்டது.

சுதன் கூறியது போலவே நால்வரும் சாஃப்ட்டி வந்திருந்தனர். வெளியிலிருந்த வாகன நெரிசலுக்கும், அதனின் விடாத ஹார்ன் சத்தத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது அந்த ஐஸ்கிரீம் பார்லர்.அவ்விடத்தை முழுவதும் மெல்லிய இசை ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

இசையை ரசித்து கொண்டே அந்த பார்லரில் கடைக் கோட்டிலிருந்த மேசையில் நால்வருக்கும் அமர்ந்து கொண்டனர்…

அடுத்த சில நிமிடங்களில் பிடித்தவைகளை  ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரம் தான் வாசுவும் அவளின் பார்வையை கவனித்தான்.

‘யாரை இப்படி பார்க்குது இந்த பொண்ணு…’ என நினைத்தவன் திரும்பிப் பார்த்தான். அங்கு ஒருவரும் இல்லாமல் போக மீண்டும் பெண்ணைத் திரும்பி பார்த்தான். அவளின் கவனம் தற்பொழுது பனிக்கூழின் மீதிருக்க, புருவங்கள் சுருங்க அவளை பார்த்தவன் சுதனின் பேச்சிற்கு செவி சாய்க்க ஆரம்பித்தான்.

நொடிகள் நிமிடங்கள் கடக்க… பாவையின் கூர்விழி பார்வையில் இவன் கவனம் மெல்ல மெல்ல சிதற, எதிரில் அமர்ந்திருந்தவளை கண்களை சுருக்கி  பார்த்தான். தற்பொழுது அவள் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை  அவனையே இமைக்காது பார்த்து வைத்தாள்.

பாவையின் விடாத பார்வையில் அவளை நேரடியாக முறைத்தான் வாசு. அப்பொழுதும் அவளிடம் மாற்றமில்லை. மங்கையின் பார்வையில் இவன் தான் பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டியதாக போயிற்று.

அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும், பாவையின் பார்வை முழுக்க முழுக்க இவனை மட்டுமே வட்டமிட்டு கொண்டிருந்தது. அவளது பார்வையில் முதலில்  கடுப்பு, எரிச்சல், கோபம் என்றனைத்தையும் கடந்து மெல்லிய குறுகுறுப்பு அவனுள் எட்டிப் பார்த்தது.

அவன் கவனித்த வரையில் ஒரு பெண்ணின் பார்வை அவனில் ரசனையாக படிவது இதுதான் முதல்முறை. அவனையும் மீறி அவளது பார்வை இவனை ஏதோ செய்தது…மெல்லிய வெட்கம் கூட வந்தது வாசுவிற்கு… பின்னங்கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே குனிந்து கொண்டான்.

ஒரு ஆணின் பார்வையில் தான் பெண் என்பவள் பெண்ணாக உணரப் படுவாளா என்ன? இதோ அவளது பார்வையில் அவன் ஆணாக உணர்ந்த தருணம் இது….

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்

ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்..

தொலைக்காட்சியில் பாடிக் கொண்டிருந்த பாடல் இவனுக்கே எழுதியது போல் தோன்றியது… அக்கணம் “வாசு…நம்ம பில் பே பண்ணிட்டு வருவோமா?..” நவியின் கேள்வியில் தன்னிலைக்கு வந்தவன்

“ஹான்.. என்ன?…” என்பதை போல் பெண்ணை பார்த்தான். அவளோ சுதனையும், இதயாவையும் கண்களால் காட்டி “பில் பே பண்ண போவோமா?…” எனக் கேட்க, சரியென்று தலையாட்டியவன் எழுந்து அவளோடு நடந்தான்.

“கொஞ்சமா வளர்ந்து இருக்கலாம்…” முனகி கொண்டே அவனிடம் திரும்பி

“உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?…” எனக் கேட்டவளை புரியாமல் பார்த்தான் வாசு… அவனது பார்வையில் மனம் சுணங்கி விட்டது அவளுக்கு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  ரிசப்ஷனை நோக்கி நடக்க, புரியாத பார்வையோடு அவளையே பின் தொடர்ந்தான் வாசு.

ரிசப்ஷனில் பனிகூழிற்கான பணத்தை கொடுத்துவிட்டு ஆடவனைப் பார்த்தாள். அவனது புரியாத பார்வை இவளுக்கு மெல்லிய புன்னகையை கொடுத்தது.

அதே புன்னகையோடு, மேசையில் கைவைத்து அதில் தாடையை பதித்து பக்கவாட்டில் திரும்பி வாசுவைப் பார்த்தாள்.

இவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் பார்வை அவனை  ஏதோ செய்தது. பின்னங்கேசத்தை

அழுத்திக் கோதிக் கொண்டே புருவத்தை உயர்த்தி ‘என்ன…’ என கேள்வியாக பார்த்தான்.

அவளோ தனது பார்வையை துளியும் மாற்றிக் கொள்ளாமல் “கல்யாணம் பண்ணிக்கலாமா தேவ்…”  மெல்லிய குரலில் கேட்டாள்.

அக்கணம் உறைந்து நின்றான் ஆடவன். உண்மையாகவே இதனை அவன் எதிர்பார்க்கவே இல்லை… கண்களை அகல விரித்து

“ஹான்..என்ன?…” எனக் கேட்டான்.

‘அச்சோ…’ மனம் பதற “ஹான் அது…நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க_ன்னு சொன்னேன்?…” என்றாள் இமைகள் படபடக்க…

எப்படியாவது காதலை கூறிவிட வேண்டும் என்று நினைத்தாள் தான் ஆனால் அதனை இப்பொழுதே கூறுவாள் என்று அவள் துளியும் நினைக்கவில்லை…

பாவையின் பேச்சிற்கு பதில் கூறும் முன்பே  “வாசு… போலாம்…” என்ற இதயாவின் குரல் கேட்டது.

சட்டென இதயாவை திரும்பி பார்த்தான். அவளோ விறுவிறுவென அவ்விடத்திலிருந்து வெளியேறி இருக்க, ஹரியை கேள்வியாக பார்த்தான். அவனோ, இவனது கேள்விக்கு பதில் கூறும் விதமாக “லவ் யூ’ ன்னு சொன்னேன்…” என்றான் சாதரணமாக.

அதற்கு பதில் சொல்லாமல் திகைத்து பார்த்துவிட்டு செல்லும் இதயாவை பார்த்தவன் “நான் கால் பண்றேன் அண்ணா…” என்றவன் முன்னால் நடந்தான்.

பின் என்ன நினைத்தானோ பின்னால் திரும்பி நவியை பார்த்தவன் ‘போயிட்டு வரேன்…’ என்பதை போல தலையசைக்க..

அந்த உரிமையான சிறு தலையசைப்பு அவளுள் அத்தனை மாயம் செய்தது… ஆடவனை இமைக்காது பார்த்தவளின் சீரம் தானாகவே சரியென்பதை போல அசைத்தது. அவனின் பிம்பம் ஒற்றை புள்ளியாக மறையும் வரை பார்த்திருந்தவள் பழைய துள்ளலோடு  சுதனை நோக்கி நடந்தாள்.

“தேறிட்ட மச்சி…” சுதனின் எதிரில் அமர்ந்தபடி கூறினாள்.

அவனோ அதற்கு பதில் கூறாமல் அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி

“கொஞ்சமும் சரியில்லையே…” என்றான் கண்களை சுருக்கி

“த்தப்பில்லையே…” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டாள்.

“தப்பில்லை தான். ஆனா அவன் ரொம்ப நல்ல பையன். அதான் யோசனையா இருக்கு…” என்றதும் முதலில் புரியாமல் விழித்தவள் அவன் கூறியது புரிந்ததும் பல்லைக் கடித்துக்கொண்டு  “உங்களை…” கழுத்தை நெரிப்பது போல கைகளை கொண்டு சென்றவள் ” சத்தியமா ஹேட் யூ…” என்று சிணுங்கியப்படி அமர்ந்தாள்.

“ஹாஹா… தேங்க் யூ…” என்றான் சிரிப்போடு.

அதே சமயம் இங்கு தங்களது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தனர் இதயாவும், வாசுவும்.

உணர்வுகளை மொத்தமாய் அடக்கியப்படி அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன் “உனக்கும் அவரை பிடிக்கும் தானே…அப்பறம் எதுக்காக அவரோட புரோபோசலுக்கு நோ சொல்லிட்டு வந்த…” என  முடிக்கும் முன்பே

“பிடிக்கும் தான். அதுக்காக அவரோட லைஃப்பை ஸ்பாயில் பண்ண சொல்றயா வாசு. அது என்னால முடியாது…” பட்டென பதில் வந்தது.

“இதுல ஸ்பாயில் பண்ற அளவுக்கு என்ன இருக்கு இதயா…”புரியாமல் கேட்டான். இருவருக்குமே காதல் இருக்கும் பட்சத்தில் அவனது காதலை ஏற்க தயக்கம் என்ன? என்ற கேள்வி தான் அவனுள்.

” ப்ச்.. புரிஞ்சுக்க வாசு, அவரோட என்னால நார்மல் லைஃப்பை லீட் பண்ண முடியாது…” தீர்க்கமான குரலில் கூறினாள்.

அவளது மறுப்பு இவனுக்கு துளியும் புரியவில்லை  “அதான்… ஏன்…” அழுத்தமாக வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.

“ஏன்னு தெரியாத வாசு…” எனக் கத்தியவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அவளைத் திரும்பி பார்த்தான். அந்த பார்வையில் அழாதே என்ற செய்தி இருந்தது.

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள்  “நான், பிசிக்கல் லைஃப்க்கு  செட்டாக மாட்டேன் வாசு. எனக்கு அதெல்லாம்  நினைச்சா உடம்பெல்லாம் கூசுது…” என்றாள் முகத்தை சுருக்கி.

“ப்ச்… என்ன பேசற இதயா மா… அதெல்லாம் காதல்ல…” அடுத்து அவன் பேசும்  முன்பே “உன்னால பிஷிக்கல் லைஃப்க்குள்ள போக முடியுமா வாசு?…” என பட்டென கேட்டாள். தன்னை  புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறானே என்ற கோபத்தில் அவளையும் அறியாமல் அந்த வார்த்தை அவளிடமிருந்து வெளிவந்திருந்தது.

மங்கையின் கேள்வியில் ஒரு நொடி திகைத்தான்.இதனை பற்றி துளியும் யோசித்தது அப்படியிருக்க என்ன  பதில் கூறுவான் அவனும். கண்களை இறுக மூடித் திறந்தவன்   “முடியும்…” என்றான்.

அவனை ஆழ்ந்துப் பார்த்தவள் “நீ ஒருத்தரை உண்மையா லவ் பண்ணும் போது இந்த வார்த்தை உன்கிட்ட இருந்து வராது வாசு…” என்றவள் சாலையில் கவனத்தை செலுத்தினாள்.

அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் மெளனம் மட்டுமே ஆட்சி செய்தது… அதனை கலைக்க இருவருமே முயற்சிக்கவில்லை…

****

அப்பொழுது மட்டுமல்ல அன்றைய நாளைக்கு பிறகு இருவருமே இதனைப் பற்றி பேசவில்லை. ஆனால் வாசுவிற்கு தான் இதயாவை பார்க்கும் போதெல்லாம்  ‘நீ ஒருத்தரை உண்மையா லவ் பண்ணும் போது இந்த வார்த்தை உன்கிட்ட இருந்து வராது வாசு…’ என்ற வார்த்தைகள் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் ‘நான் யாரை லவ் பண்ண போறேன்…’ என்ற  பதிலை தொடர்ந்து “என்னை யாரு லவ் பண்ணுவா?…” என்ற கேள்வியும் அவனே  கேட்டுக் கொள்வது உண்டு.

அந்த கேள்வியின் பதிலைப் போல “கல்யாணம் பண்ணிக்கலாமா தேவ்?…” என்ற மங்கையின் பேச்சும்,  அவளது பார்வையும், அன்றைய பாடலும் மனக்கண்ணில் மின்னி மறையும்.

அதே நேரம் ‘உன்னால பிஷிக்கல் லைஃப்க்குள்ள போக முடியுமா வாசு?’ என்ற இதயாவின் கேள்வி, அவனை அவனுள் முடங்க செய்யும்…

இது ஒவ்வொரு நாளும் தொடரவே அதிலிருந்து தப்பிக்க, புத்தகத்தையும் ஓவியத்தையும் கையிலெடுத்தான். புத்தகத்தை கையிலெடுக்கும் போது கூட அந்த ராட்சசியின் நினைவுகள் அவனைத் தாக்கியது இல்லை… ஆனால் இந்த ஓவியத்தை வரையும் பொழுதெல்லாம் அந்த ராட்சசியின் நினைவுகள் தான் அவனுக்கு. மற்ற அனைத்தும் பின்னுக்கு சென்று மங்கையின் பார்வையும், அந்த பாடலின் வரிகளும் மட்டுமே அவனை ஆட்சி செய்யும்.

அதன் விளைவு அந்த பாடல் வரிகள் அவனது அலைபேசியிலும், அவளது விழிகள் அவனது ஓவியத்திலும் இடம் பெற்றது.

ஒரு நாள், ஒரு மணி நேரம் பார்த்த பெண் இந்தளவிற்கு மனதில் பதிந்து விட்டாளா? எனக் கேட்டால் அவனிடம் பதிலில்லை… ஆனால் அவனுக்கு இப்படி இருப்பது  பிடித்திருந்தது. அந்த பிடித்தம் தான்  ஒருமுறைக்கு இருமுறை அவளை நேரில் சென்று பார்க்க தூண்டியது… அந்த பிடித்தம் தான் அவளிடம் மட்டுமே உரிமையாக நடந்து கொள்ள வைத்தது. அந்த பிடித்தம் தான் அவளை சீண்ட வைத்தது. அந்த பிடித்தம் தான் இன்று வரை அவளது காதலை ஏற்க முடியாமல்தவிர்க்கவும் வைத்தது.

ஒருவேளை இதயாவின் வார்த்தைகள் தான் உன்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறதோ… மனதின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்பே ஜில்லென்ற காற்று அவனை பலமாக தீண்டி நினைவிற்கு கொண்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!