Skip to content
Post Views: 14,514
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 21
சுசீலா, மருமகளிடம் கோபமாக ஏதோ சொல்ல வர, தாமோதரன் பின்னே வரவும் வாய் மூடி கொண்டார்.
“நிரஞ்சசா மதியம் டாக்டரை ஒரு முறை பார்த்திட்டு போக சொல்லிட்டாங்க… நான் போய் பில் செட்டில் பண்றேன்…” என்று தந்தை சொல்லவும்,
Advertisement
“சரிங்க ப்பா… நர்மதா en கார்ட் எங்க…” என்று கேட்க.
அவளுக்கு என்ன தெரியும். அவள் தான் கணவன் உடன் இல்லையே…
“எனக்கு தெரியலைங்க…”
Advertisement
“அஸ்வின் கிட்ட இருக்குமா இருக்கும். அப்பா…” என்று மகன் தொடங்கும் போதே,
Advertisement
“டேய் நான் உன் அப்பன்டா… என் மகனுக்கு நான் பார்க்க மாட்டேனா. நீ சும்மா இரு.. நாங்க மதியம் வாரோம்…” என்றவர் தன் மனைவியோடு நகர,
முகுந்தனும் வந்து தம்பியை விசாரித்தான். தந்தையை பின் தொடர்ந்தவன்,
“அப்பா பில் நான் கட்றேன்…”
Advertisement
“எதுக்கு முகுந்தா அப்பா பணம் கொண்டு வந்தேன்…”
“அப்பா பிளீஸ்.. நம்ம குடும்பத்துக்குன்னு நான் ஒன்னுமே பண்ணினது இல்லை. இனியாவது குடும்பத்துக்கு மூத்தவனா எல்லா பொறுப்பையும் பார்க்க நினைக்கிறேன். நிரஞ்சன் யாரு என் தம்பி தான…” என்றவன், தந்தையை தடுத்து தானே பொறுப்பை எடுத்து கொண்டான்.
டாக்டரையும் பார்த்து விட்டு, எடுத்து வைக்க வேண்டியதை அடுக்கியவள். கணவன் முன் வந்து அமர்ந்தாள்.
“என்ன நர்மதா…” நிரஞ்சன் நார்மலாக தான் கேட்டான்.
அவனை பொறுத்த வரை மனைவி சொல்லை கேட்டு இருக்கலாம் என்ற எண்ணம் தான். நர்மதா சகஜமாக இருக்க, சண்டையை மேற்கொண்டு பேச வில்லை நிரஞ்சன். ஆனால், நர்மதா எண்ணம்?
“கொஞ்ச நாளா நான் உங்க கூட ரொம்ப சண்டை போடுறேன்ல்ல… எப்பவுமே உங்களுக்கு விட்டு கொடுத்து, நீங்க சொன்னா சரின்னு போற நான், சில நாளா எதிர்த்து பேசுறேன். உங்களை குறை சொல்றேன். உங்களுக்கு அது பிடிக்கல… நான் இயல்பா இல்லன்னு நினைக்கிறீங்க. அப்படி தான…”
ஒரு பெருமூச்சு விட்ட நிரஞ்சன், “எனக்கு தெரியல நர்மதா. கல்யாணம் ஆன நாள் முதல நீ இப்படி தான். நானும் அப்படியே பழகிட்டேன். சட்டுன்னு என்னால மாற முடியல. உன் நியாயம் எனக்கு புரியல. எட்டு வருசமா நான் பார்க்காத நர்மதாவா நீ இருந்த… எனக்கு அதை ஏத்துக்க முடியல போல, அந்த கோபம் உன் வீட்டு பக்கம் திரும்பிடுச்சு…”
“பொதுவா கல்யாண வாழ்க்கையே அனுசரிச்சு, விட்டு கொடுத்து போறதுல தான் தொடங்கும் நிரஞ்சன். புது இடம், புது மனிதர்கள். ஒரு பொண்ணு பட்டுன்னு விட்டு கொடுத்து போயிடுவா… புருசன் வீட்டுல எத்தன பேர் இருந்தாலும் அனுசரிச்சு போக பழகிப்பா. ஆனா, அந்த வீட்டு ஆட்கள் தான் அந்த ஒரு பொண்ணை அனுசரிச்சு போக யோசிபாங்க…” என்ற நர்மதா,
“எனக்கும் அப்படி தான். நானும் முதல்ல விட்டு கொடுத்தேன், அனுசரிச்சு போனேன். ஏதோ ஒரு இடத்துல என் புருசன் எனக்கு விட்டு கொடுத்து போகணும்ன்னு தோணுச்சு. அது நியாயமாகவும் பட, அதை வெளிப்படுத்தவும் செஞ்சேன். அதையும் மீறி வந்த சண்டை என்னை அறியாம வந்தது தான்…”
“நீ முன்னவே சொல்லி இருக்கலாம் நர்மதா. எனக்கு உன்னை புரியவே இல்லை. என்கிட்ட உடைச்சு பேசி இருக்கலாம் தான. இவ்வளவு தூரம் வந்து இருக்காது…” என்று நிரஞ்சனும் தன் பக்கத்தை சொல்ல,
“உண்மை தான். ஆனாலும் நான் சொல்லலை ஏன்?… எங்க அக்கா எப்பவும் சொல்லுவா.. ஓபன் அப் ஆகு நர்மதா. எதையும் மனசுக்குள்ள வைத்காத, என் எண்ணம் இதுதான்னு பேசி பழகு. உன்னை வெளிப்படுத்துன்னு… ஆனா எனக்கு அதுல விருப்பமும் கிடையாது. நம்பிக்கையும் இல்லை…”
“ஏன் நர்மதா?…” என்றான் கணவன்.
“கணவன், மனைவி அப்படின்னா இரு உடல், ஊர் உயிர். ரெண்டு பேரும் இனைந்து ஐக்கியமாக இருப்பாங்க… எப்படி எல்லாம் நிறைய சொல்லுவாங்க. என்னைக்காவது அதை யோசிச்சு இருக்கீங்களா நிரஞ்சன். நான் நிறைய யோசிப்பேன்…”
“நம்மளோடது பெரியவங்க பார்த்து வச்ச கல்யாணம் தான். நிறைய பார்த்து செலக்ட் பண்ணி தான் தேர்வு செஞ்சு இருப்பாங்க. உங்களுக்கும் நிறைய விருப்பம் இருந்தது. அதுக்கு தகுந்த மாதிரி தான் என்னை தேர்ந்தெடுதீங்க. அதே போல தான் எங்க வீட்டுலயும்… ஜாதகம், வேலை, படிப்பு, குடும்பம், சொத்து, கூட பிறந்தவங்க, சம்பளம், குணம், வயசு, கலர்,உயரம் வரைக்கும் கூட பார்த்து தான் கல்யாணம் பேசுனாங்க. உங்க அம்மா ஒரு பெரிய பட்டியல் போட்டு தான் என்னை தேர்வு செய்தாங்க. பெரும்பாலும் கல்யாணம் அப்படி தான். எப்படி பட்ட பொண்ணு, பையன் தான் வேணும்ன்னு சொல்லியே கல்யாணம் பண்றாங்க. அப்படி கல்யாணம் பண்ணி வாழ்க்கைகுள்ள வர ரெண்டு பேருக்குமே அவங்கவங்க எதிர்பார்ப்பு இருக்கும். உங்களுக்கும் இருந்துச்சு, எனக்கும் இருந்துச்சு…” என்றவள்,
“நீங்க என்ன எதிர்பார்த்து என்னை கல்யாணம் பண்ணிகங்களோ அது உடைய எட்டு வருசம் ஆச்சு. எனக்கு ஆறு மாதத்திலேயே உடைஞ்சு போச்சு. ஆரம்பத்துல நீங்க தாங்குறதும், கொஞ்சுறதும் பிடிச்சு உங்க கைல நின்னவ தான் நான்… ஆனா, போக போக நம்ம நினைப்புக்கு அப்பாற்பட்டவர் தான் என் புருசன்ன்னு புரிஞ்சுகிட்டேன். எல்லாருக்கும் அப்படி தான். எவ்வளவு தான் தேடி தேடி ஒரு சின்ன விசயத்துல கூட பொருத்தமான ஒரு வாழ்க்கை துணையை தேர்வு செய்தாலும், என்னைக்காவது ஒரு நாள் கல்யாண வாழ்க்கையில ஒரு ஏமாற்றம் வர தான் செய்யும். எதோ ஒரு இடத்துல தோல்வியை பார்க்க தான் செய்வோம். என்னடா இந்த வாழ்க்கைன்னு ஒரு சலிப்பு வந்துடும். பலர் அதை சரி செஞ்சு முன்னேறி போவாங்க, சிலர் விவாகரத்து பண்ணிட்டு போயிடுவாங்க…”
“நர்மதா…” என்றான் அதிர்ந்து.
“நாம பாக்குற நாப்பது வருசம், அம்பது வருசம் சேர்ந்து வாழ்ற தம்பதிகள் எல்லாம் எதோ ஒரு இடத்துல கல்யாண வாழ்க்கையில தோல்வியை பார்த்து இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல், தோத்து போய் இருக்கும். ஆனாலும் அவங்க வாழ்க்கை சேர்ந்தே ஓடும். நம்ம முன்னோர்கள் எல்லாம் அப்படி தான். இப்ப இருக்குற நிறைய பேர் அதை ஒரு கட்டாயமா பாக்குறாங்க. சகிச்சுட்டு வாழ தேவையில்லைன்னு நினைக்கிறாங்க. ஆனா நான் அப்படி பார்க்கல நிரஞ்சன். அதுல ஒரு காதல் இருக்கு…” என்றவள்,
“தள்ளி நின்னு பார்க்கும் போது ஒருத்தரோட வெளி அழகு மட்டும் தான் தெரியும். சேர்ந்து வாழும் போது தான் அவங்க அக அழகு தெரியும். அப்படி தெரிஞ்சவங்க வாழ்க்கை சண்டை, தோல்வி, ஏமாற்றம், பிரச்சனை கண்டாலும் வெற்றிகரமாக கரை சேர்ந்துடுவாங்க…” என்று நர்மதா சொல்ல,
நிரஞ்சனுக்கு ஒன்றும் புரிய வில்லை.
“எனக்கு எதுவும் சரியா புரியல நர்மதா. என்ன சொல்ல வர… விட்டு கொடுத்து, அனுசரிக்க ச்சு போறது தான் வாழ்க்கைன்னு சொல்றையா…”
“ம்கூம், இல்லங்க… அது எப்படி சொல்ல… எங்க அம்மாவுக்கு வயசு பொண்ணா இருக்கும் போது நிறைய முடி இருக்குமாம். இடுப்புக்கு கீழ வரை தொங்குமாம். எங்க அப்பா பொண்ணு பார்க்க போகும் போது முகத்தை விட நீளமான முடியை பார்த்தே சரின்னு சொல்லிட்டாராம். ஆனா, எங்க அம்மாக்கு நான் பொறக்கும் போது முடி எல்லாம் கொட்டி போச்சு. அப்புறம் என்ன செஞ்சும் முடி வளரவே இல்லை. அதுக்கப்புறம் தான் என் தம்பி பிறந்தான்…”
நிரஞ்சனுக்கு மனைவி சொல்ல வருவது ஓரளவுக்கு புரிந்தது.
“உங்க அம்மா, அப்பா பார்த்து இருக்கீங்களா? ரெண்டு பேருக்கும் ஒரு விசயத்திலும் ஒரே கருத்து வராது. எப்பவும் வாதம் நடக்கும். ஆனா மாமா சொல்லுவார், “உங்க அத்தையை அமைதியான பொண்ணுன்னு சொன்னாங்க. அப்படி தான் வேணும்ன்னு தேடி போய் கட்டுனேன். கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது உங்க அத்தை வாய்…” எப்பவும் கேலி போல சொல்லுவார்…”
“நிதர்சனம் இது தான். நாம என்ன எதிர்பார்த்து கல்யாணம் பண்றோமோ, அதே மாதிரியே வாழ்க்கை போகாது. ஏதோ ஒரு கட்டத்துல ஏமாற்றத்தை பார்த்தாலும், அதையும் தாண்டி ஒரு நாப்பது வருச தாம்பத்திய வாழ்க்கை ஓடும். அது ஏன்? நாம நமக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது வெளி தோற்றத்தை பார்த்து தான் சரின்னு சொல்றோம். இவங்க நமக்கு சரியா இருப்பாங்கன்னு நினைக்கிறோம். அப்படி இல்லைன்னாலும் அவங்களோட நமக்கான வாழ்க்கை சந்தோசம் தான்…”
“ஏன்னா, அது தான் தாம்பத்தியம். தள்ளி நின்னு பார்க்கும் போது ஒருத்தரோட குணம் வேற மாதிரி இருக்கும், சேர்ந்து வாழும் போது வேற மாதிரி இருக்கும். நான் என் வாழ்க்கை துணையோடு புற அழகு தாண்டி சேர்ந்து வாழும் போது, அவங்க அக அழகை பார்க்கிறேன். அதனால் அவங்க கிட்ட இருக்குற சின்ன சின்ன குறை எனக்கு பெருசு கிடையாது. நான் என்னோட எதிர்பார்ப்புல தோத்தாலும், வாழ்க்கையில ஜெயிக்க நினைச்சேன்…”
“நிறைய பேர் சொல்லி பார்த்து இருக்கேன் நிரஞ்சன். கல்யாணம் ஆன புதுசுல நிறைய சண்டை வரும். அப்புறம் ரெண்டு பிள்ளை பிறந்தது. வாழ்க்கை மாறி போச்சுன்னு… பெரியவங்க சொல்லுவாங்க குழந்தை பொறந்தா எல்லாம் சரியா போகும்ன்னு… ஆனா, உண்மை என்னன்னா சேர்த்து வாழும் போது நம்ம வாழ்க்கை துணையோடு அகம் தெரியும். அதுல இருக்குற அன்பை உணர்ந்த பின்னாடி, வெளில காட்ற தோற்றம் அவங்களுக்கு குறையாவே தெரியாது. அவங்க எப்படி இருந்தாலும் ரசிக்க தோணும். எங்க அப்பா இப்போ வரைக்கும் எங்க அம்மாவுக்கு சேலை செலக்ட் பண்ணி கொடுப்பார்…”
“நாப்பது வயசுக்கு மேல வழுக்கை தலையோட இருந்தாலும், குழந்தை பிறந்து அழகு போய், உடல் எடை கூடி போனாலும், அவங்களோட அன்பு அப்படியே தான் இருக்கும். அம்பது வயசுலையும் நம்ம வாழ்க்கைத்துணை கூட ரசிச்சு வாழ முடியும்ன்னா, அது அவங்க துணையோட மறு பக்கத்தை உணர்ந்து கொண்டதால தான். நானும் உங்களை உணர்ந்தேன் நிரஞ்சன். வெளில ஆயிரம் குறை சொல்ற அளவுக்கு உங்க நடத்தை இருந்தாலும், உங்க அகத்துல எம் மேல இருந்த அன்பு பொறுத்து போக வச்சது. என்னால உங்களை உணர முடிஞ்சது நிரஞ்சன்…”
“அது எப்படி சொல்ல… ராத்திரியில எல்லாரும் தூங்கிட்டு இருக்கும் போது குழந்தை அழுதா, அதோட தாய் பட்டுன்னு முழிச்சுடுவா.. எவ்வளவு ஆழ்ந்து உறங்கினலும், குழந்தை சத்தம் லேசா கேட்டா கூட முழிப்பு வரும். அது எப்படி அவங்க உணர்வோடு கலந்து போனா மாதிரி தான் நிரஞ்சன் நீங்க எனக்கு… என்னால உங்களை உணர முடியும். நான் என்னைக்கோ உங்களோட புறம் துறந்து அகம் பார்த்து வாழ தொடங்கிட்டேன். உங்களுக்கு கத்தரிக்காய் சேராது. அதனால் அதை சேர்க்க மாட்டோம். எனக்கு தெரியும். அது வெளியில பாக்குறது. ஆனா, உங்க முகம் யோசனையா இருந்தா கூட என்னால அர்த்தம் சொல்ல முடியும்”
“கடைசி வரை விளக்கம் கொடுத்தது சரி கட்டி போக வேண்டாம்ன்னு நினைச்சேன். என்னோடு வாழும் போது என்னை நீங்க உணருவீங்கன்னு நினைச்சேன். நீங்க ஜாகிங் போயிட்டு வரும் போது உங்க காலடி சத்தம் கேட்டே நான் காபி போட கிட்சன் போயிருவேன். திரும்பி பார்க்காம கூட என்னால அது நீங்க தான்னு உணர முடியும். உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது எல்லாம் எனக்கு தெரியும். அதையும் விட உங்க யோசனையை, சிந்தனையை, நீங்க நினைக்கிறதை கூட என்னால புரிஞ்சுக்க முடியும். அப்படி நம்ம துணை யோடு இசைந்து வாழும் போது ஓபன் அப் ஆக வேண்டிய அவசியமே இல்லை. தெளிவு, விளக்கம், வாதம் எல்லாம் தேவையே கிடையாது…” நர்மதா பேச பேச,
நிரஞ்சன் தெளிவாக புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.
“பத்து பிள்ளைக விளையாடும் போது நான் திரும்பியே பார்க்காமவே, சான்வி அழுகையை என்னால கண்டு பிடிக்க முடியும். அந்த அழுகை சத்தம் எம் பிள்ளையோடதான்னு நான் உணருற மாதிரி, எம் புருசனையும் உணர முடியும். அவரோட வலி, வேதனையை கூட நான் உணருவேன். உங்க பொண்டாட்டி கிட்ட மறைக்க உங்களுக்கு ஒன்னு கூட கிடையாது நிரஞ்சன். நீங்க தான் உங்க பொண்டாட்டியை உணராமல் இருக்கீங்க, அவளோடு அகம் சார்ந்து வாழமா இருக்கீங்க…”
“எங்க வீட்டுல உங்களோட இந்த வேலை, வீடு, வசதி, பணம் எல்லாம் பார்த்து தான் கட்டி கொடுத்தாங்க. இன்னைக்கு அந்த பணம் கிடையாது. வீடும் நம்ம வீடு கிடையாது. நமக்குன்னு தனி சொத்தும் கிடையாது. ஆனாலும், இந்த வாழ்க்கை உங்களோட தான் நிரஞ்சன். என்ன எதிர்பார்த்து கட்டி கொடுத்தாங்களோ, அது இல்லைன்னாலும் நர்மதா, நிரஞ்சன் பொண்டாட்டி தான்…”
“நீங்க சிரிச்சா நான் சிரிப்பேன். நீங்க அழுதா நான் அழுவேன். உங்க வெற்றி என்னோட வெற்றி. உங்க தோல்வி, எனக்கான தோல்வி. ஒரு நாளும் உங்களோட வலியில எனக்கு இதம் கிடைக்காது. நீங்க இல்லனா நானும் இல்லன்னு சொல்ல மாட்டேன். உங்களோட எல்லையோட எனக்கான சந்தோசம் முடிஞ்சு போகும். அதை தாண்டி என் கடமை போகும். எனக்கான வாழ்க்கை போகாது. நீங்க உயரும் போது தான், நான் தலை நிமிருவேன். உங்களோட நிம்மதி தான், எனக்கான அமைதி. இதுல தனித்தனின்னு எதுவுமே இல்லை. உங்களோடு வாழ்ந்து இருக்கேன். வெளில இருக்குற நிரஞ்சன் தாண்டி உள்ள இருக்குற நிரஞ்சன் எனக்கு மட்டும் தான் தெரியும். அதான் நிக்கிறேன். கடைசி வரை நிப்பேன்…” என்றவள், நிரஞ்சனை தனியே விட்டு தன் பிள்ளைகள் உடன் அக்கா வீடு வந்து விட்டாள்.
“உடம்பு முடியாத மனுஷனை விட்டுட்டு வரலாமா…” விஜயா ஒரு பக்கம் கத்த,
பால மராத்தான் மகளை தான் பார்த்தார்.
“நர்மதா…” என்று தொடங்கும் போது,
“அவரே வருவார் அப்பா…” என்று சொல்லிய கால் மணி நேரத்தில் நிரஞ்சன் வந்து விட்டான், மனைவி, பிள்ளைகளை தேடி…
எல்லோருக்கும் பரபரப்பு. உடல் நிலை முடியாத மருமகன் தனியே வந்ததை கண்டு.
விஜயா மகளை முறைத்து கொண்டே, மருமகனை உபசரித்தார்.
நர்மதா அறை வாயிலில் வந்து நின்றாள்.
“என்ன மாப்பிள்ளை படியேறியா வந்தீங்க… ஒரு போன் பண்ண வேண்டிய தான…”
பிருந்தா உடனே தண்ணியை லேசாக சூடு செய்து கொண்டு வந்தாள்.
“மாமா…” என்றவன், எழுந்து அவரை நோக்கி கை கூப்பி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டான்.
பதறி போனார் பால மராத்தான்.
“என்னைய்யா நீங்க… காலுல ஏன் விழுந்தீங்க..” என்று தூக்க,
நிரஞ்சன் கண் லேசாக கலங்கி இருந்தது. ஒரு சமாளிப்பு சிரிப்பில் நிரஞ்சன் அடக்க… கணவனை பார்க்கும் போது திரண்ட கண்ணீரை மூச்சு விட்டு அடக்கி கொண்டாள்.
“மாமா… உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். அன்னைக்கு நடந்தது தப்பு. அது என்னையும் அறியாமல், எனக்கே தெரியல…”
“விடுங்க தம்பி, நாங்க அதை மறந்தே பல நாள் ஆச்சு. எம் பிள்ளையை கட்டி எங்க வீட்டுக்கு நீங்க மருமகனா வந்தா, என் மகன் மாதிரி தான். கோபம் எல்லாம் மனசுல நிக்காது. எம் பிள்ளை நல்லா இருந்தா போதும்…” பெருந்தன்மையான மனிதர் பால மராத்தான்.
“மாமா, நான் உண்மையா சொல்றேன். பணம், காச வச்சு சொல்லலை. நிச்சயம் உங்க மகளை சந்தோசமா வச்சுப்பேன். நீங்க சங்கட படுர மாதிரி இனி எதுவும் நடக்காது. நான் உணர்ந்து தான் சொல்றேன் மாமா…”
“வேண்டாம் தம்பி. நீங்க விளக்கம் கொடுக்கவே வேண்டாம். உங்க குடும்பம்ன்னு தேடி வந்தீங்க பாருங்க. அது போதும்…” என்றவர்,
“நர்மதா.. பாப்பா போ, போய் ரூம்ல ஏசிய போடு, மாப்பிள்ளை கொஞ்ச நேரம் படுக்கட்டும்…”
“விஜயா என்ன பாக்குற. மாப்பிள்ளைக்கு பத்திய சாப்பாடு ரெடி பண்ணி…”
“பிருந்தா பிள்ளைகளை பாரு. தம்பிய தொந்தரவு பண்ண போறாங்க. நீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க தம்பி. நர்மதா வா வந்து கூட்டிட்டு போ…” என்று எல்லோரையும் விரட்டினார்.
மருமகன் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டதே பெரிய விசயம் தான் அவருக்கு…
நர்மதா, கணவன் அருகே வர… அவள் கையை அழுத்தமாக பற்றி கொண்டு எழுந்தவன்,
“நானும் உன் அகத்தை புரிந்து கொண்டு, இசைந்து வாழவும் தொடங்கிட்டேன் நர்மதா…” என்றவன்,
“என்ன பாக்குற.. உன் கால்லையும் விழனுமா.. எனக்கு ஒன்னுமில்லை. ஆனா, என் பொண்டாட்டிக்கு நான் நிமிர்ந்து நின்னா தான் அவளும் நிமிர்ந்து நிற்க முடியும்…” என்று சிரித்தான்.
error: Content is protected !!