பண்டிகை என்றால் நமக்குக் கொண்டாட்டம். அதுவும் தீபாவளி என்றால்… மேகங்களுக்கும் கொண்டாட்டம் ஆரம்பித்து விடுகிறது. கருமேகங்களின் முட்டலிலும் மோதலிலும் சாரல் ஆரம்பித்திருந்தது.
சாரல் என்ன… மழையே வந்தாலும் அந்தத் திரையரங்கின் முன் கூடியிருக்கும் கூட்டத்தைக் கலைத்திட முடியுமா என்ன? இன்னும் முழுதாக விடியவில்லை என்றாலும் பாலாபிஷேகமும் பட்டாசும் என அவர்களின் தங்கத் தலைவனையும் அவன் திரைப்படத்தையும் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாகக் கபீர் அவன் மனைவி நிஷாவோடு அடித்துப் பிடித்து திரையரங்கினுள் நுழைந்தான். எதிலும் நாசுக்குப் பார்க்கும் நிஷாவிற்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
Advertisement
‘ஒத்த பாப்கானுக்கு வந்து மோசம் போயிட்டேன்’ என்ற வருத்தம் அவளுக்கு. “இன்னைக்கே வந்தாகணுமா?” என மனைவியின் கடுகடுப்பெல்லாம் அவனை எதுவும் செய்யவில்லை.
Advertisement
அவன் தலைவனின் தீபாவளி வெளியீடு… முதல் நாள், முதல் காட்சியைப் பார்ப்பதென்றால் சும்மாவா? சோஃபாவில் சாய்வாக அமர்ந்திருந்தாலும் கபீரின் இதயத் துடிப்பு அவனுக்கு நன்றாகவே கேட்டது.
இதோ இதோ என ஒரு வருடமாகக் காத்திருந்த தருணமும் வந்தது. ‘தலைவா’ எனக் கூட்டம் ஆர்ப்பரிக்க, இவன் முகத்தில் ஏன் என்றே தெரியாத பெருமை. இருள் கவ்வ, திரை ஒளிர்ந்தது.
அவன் ஓடவில்லை என்றாலும் இதயம் தடதடக்க மூச்சு வாங்கியது. குளிர் பிரதேசம் என்றாலும் தலைக் கவசத்திற்குள் இருந்த அவன் முகம் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது.
Advertisement
திரும்பி பின்னால் பார்த்தவன் கண்களில் தீவிரம் என்றாலும் ஒரு பக்க இதழ் மட்டும் வளைந்து, அவன் புன்னகைக்கிறான் என்றது. கைக்குள் அடக்கி இருந்த வேகத்தை அதிகரிக்க, அந்தக் கவாசக்கி நின்சா ஸ்போர்ட்ஸ் பைக் வேகம் எடுத்தது.
ஏன் இவ்வளவு வேகம் எனப் பயத்தில் சற்று பதறத் தான் செய்தது பார்த்திருந்தவனுக்கு. மலை மேல் ஏறிக் கொண்டிருந்த பைக், வளைவில் திரும்பவும் எதிரே வந்த காரில் மோதாதவாறு வண்டியைத் திருப்ப, மலை உச்சியில் இருந்து பைக் பள்ளத்தை நோக்கிப் பறந்தது.
ஐயோ என இவன் இருக்கையின் நுனிக்கு நகரவும் நாயகன் முதுகில் இருந்த பேரசூட் அவனை மேல் தூக்கிச் சென்றது. “தலைவா” எனக் கூட்டம் கரகோஷம் எழுப்பி, தாள்களைப் பறக்கவிடவும், ‘உங்கள் இதய நாயகன்’ எனக் கதாநாயகனின் பெயர் அந்த பெரிய திரையில் வந்து விழுந்தது.
அடுத்த இரண்டரை மணி நேரமும் கபீரின் அருகில் இருந்த அவன் புது மனைவி அவன் கண்களுக்குத் தெரியவே இல்லை. திரைப்படம் முடியவும் பூரித்த முகத்தோடு “செம இல்ல…” என மனைவியின் முகம் பார்த்தவனை முறைத்தவள் வீட்டிற்குச் சென்ற பின்னும் அவனோடு பேசவில்லை.
ஆனால் அதெல்லாம் அவனுக்கு உரைத்ததா என்றால் இல்லை என்பதே சரியான பதில்.
தலை தீபாவளி அன்று அவன் நாயகனை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தபின் அவனுக்கு உலகம் தட்டாமாலையாகச் சுற்ற… புது மனைவியின் பாராமுகம் எல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம் ஆகிப்போனது.
“படம் எப்படி இருந்துது மாப்பிள்ள?” என் காபியை நீட்டிய மாமியாரிடம், “ச்சான்சே இல்ல அத்த. அமேசிங். தேங்கஸ் அத்த… என்னால இன்னுமே டிகெட் கிடைச்சத நம்ப முடியல” எனப் பூரித்தான்.
“புது மாப்பிள்ளைக்குன்னு சொன்னதும் கௌதமனே வந்து கொடுத்துட்டு போனான்” என்றார் மாமியார், கௌதமனை நினைத்து கண்களில் பெருமை மின்ன.
‘என் தங்கச்சி மகன நினைச்சு இவளுக்கு எதுக்கு இவ்வளவு பெருமை? ஒத்த டிக்கெட்டுக்கு அவன் கொடுக்கிற எக்ஸ்பிரஷன பாரு… பரதேசி’ மனைவியையும் மருமகனையும் நினைத்த மாத்திரத்தில் ஜெகநாதன் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்தே வெடித்தன.
“அத்த அத்தன்னு கௌதமனுக்கு அவ்வளவு பாசம் என் மேல.” என ஸ்வேத்தா அடுக்கிக் கொண்டே போனார். கேட்டுக் கொண்டிருந்த கணவன் ஜெகநாதனின் வயிறு காந்தி, அந்த எரிமலையின் சீற்றத்தால் காதுகளில் புகை வந்து கொண்டிருந்தது.
அதை அறியாது மருமகனும் மாமியாரும் எரியும் நெருப்பில் நெய்… இல்லை பெட்ரோலை கணக்கில்லாது ஊற்றிக் கொண்டிருந்தனர்.
“நிறைய புது புது ஃபாரின் லொக்கேஷன்ஸ் அத்த. பாத்து ஆச தீரல. மியூசிக்க அடிச்சுக்க முடியாது. பாட்டும் ஃபைட்டும் ஏ-ஒன்! காஸ்ட்யூம்ஸ் எல்லாம் வேர லெவல்.
ஹீரோவோட வீடு… அதுல வர ஸ்போர்ட்ஸ் பைக் எல்லாம் ஹப்பா… சான்சே இல்ல! முகம் சுளிக்கிற சீன் எதுவும் இல்ல. அந்த பைக் சேஸ் சீனுக்கு மட்டுமே மூணு ஸ்பீட் பைக் காலியாம். அந்த பைக் ரேஸ்… அப்போ வர மியூசிக்… ஹார்ட் பீட்ட ஏத்தி விட்டுடும்.”
“ஓ… பிரொடியூசர் வீட்டு பையன்னா சும்மாவா? ஒவ்வொரு பைக்கும் 80 லச்சத்துக்கு கம்மியா கிடைக்காது அத்த…” எனச் சாதாரணமாகக் கூறியவனிடம்,
“சினிமால வாழ்ந்தவனை விட வாழ்ந்து கெட்டவன் அதிகம். இன்னைக்கு எத்தன பிரொடியூசர்ஸ் வருமானமே இல்லாம இருக்காங்க தெரியுமா? இன்னைக்கும் அண்ணாவோட பிசினஸ் மைன்டோட அவரோட ஒழுக்கமும் விடா முயற்சியும் தான் அவர இவ்வளவு மேல வச்சிருக்கு. பிரொடியூசர்ன்னா ஈசி எல்லாம் இல்ல கபீர்.”
“இது வேறையா? படத்த சொல்லிட்டு இருந்தேனே… ஹாலிவுட் மூவி பார்த்த ஃபீல் அத்த. தரமான… அல்ட்டிமேட் படம். ரெண்டர மணி நேரம் போனதே தெரியல.” எனக் கூறி ஒருவழியாக மூச்சு விட்டான்.
“அப்போ வொர்த் வாச்சிங்ன்னு சொல்லுங்க. நானும் வந்திருக்கலாம்.” என்ற மாமியாரிடம்,
“ஆமா அத்த, பணத்த வாரி இரைச்சு எடுத்திருக்கார் வாசுதேவன் சித்தப்பா. இன்னும் நாலு தரம் பார்த்தா தான் எனக்குத் திருப்தி ஆகும். டிகெட் இருக்கான்னு கேட்டு நாளைக்கே போகலாம்… என் தலைவன அந்த பைக்ல… ஆஹா… எத்தன தரம் பார்த்தாலும் சலிக்காது” எனச் சிலாகிக்க, மாமனாருக்கு பொறுக்கவில்லை.
“ஏன் வாரி இரைக்க மாட்டான்? எல்லாம் என் வேர்வைல வந்த பணம் தானே? நியாயப்படி அது எல்லாம் எனக்கு வர வேண்டிய சொத்து. என் அப்பா மட்டும் கையக் கால வச்சுட்டு சும்மா இருந்து இருந்தா இந்நேரம் அந்த பணத்த எல்லாம் வட்டிக்கு விட்டு நான் எங்கயோ இருந்திருப்பேன். ஓசில வந்த காசுன்னதும் வாரி இரைக்கிறாரோ துரை?” எனச் சத்தமாக முணுமுணுத்தார் ஜெகநாதன்.
“மாமா அவர் பொண்ணுக்கு கொடுத்த சீதனம் எப்படி உங்களுது ஆகும்? உங்களுக்கு அத விட அதிக பங்கு கொடுத்தார் தான… அத வச்சு எங்கயோ போக வேண்டியது தான… யார் தடுத்தா? அவர் உழைச்சு முன்னேறினா அதுல உங்களுக்கு ஏன் வயத்தெரிச்சல்?” மனைவி சத்தம் போடவும், முறைத்தவர் நகர்ந்தார்.
“வாசு சித்தப்பாவும் மாமாவும் ரொம்ப கிளோஸ்ன்னு நினைச்சேன். ஏன் இவருக்கு இவ்வளவு கோபம்?” எனக் கேட்ட மருமகன் முகத்தில் அவ்வளவு குழப்பம். குழப்பம் இருக்காதா என்ன?
இவர் தான் மச்சானைப் பார்த்தாலே ‘மச்சான் டா’ என்ற பாணியில் சுற்றுவாரே. ஜெகநாதன் பாசத்தை வாசுதேவனே நம்பியிருக்க, ஜெகநாதனின் புது மருமகன் எம்மாத்திரம்?
‘தகப்பன் திட்டம் தெரியாது நிஷா உன்னைக் காதலித்ததால் ஏற்பட்ட ஏமாற்றம், பேராசைக் கொடுத்த பொறாமை, அதனால் விளைந்த வயிற்றேரிச்சல், இப்படிப் பல நோய்களோடு சுற்றித் திரிகிறார் மனுஷன்’ என்பதை எப்படி ஸ்வேதாவால் மருமகனிடம் கூறமுடியும்?
“கிளோஸ் தான். இந்தப் படத்தோட ஃபைனாஸ்ச அவரே பார்த்துகிட்டனால இவருக்கு லாபம் பாக்க முடியலன்ற கோபத்துல பேசிட்டுப் போறார். வேற ஒண்ணும் இல்ல” எனச் சமாளித்தார் ஜெகநாதனின் மனையாள் ஸ்வேதா.
“நூத்தம்பது கோடியும் வாசுதேவன் சித்தப்பாவே போட்டாரா? சொந்தப் பணம் போட்டு பிரொடியூஸ் பண்ற அவ்வளவு பெரிய ஆட்களா அவங்க? அதுதான் கௌதமன, நிஷா கல்யாணம் பண்ணிக்கலன்னு மாமாக்கு வருத்தமோ?” எனக் கேட்டவன் தொனியில் என்ன? ஆதங்கமா? இல்லை வலியா?
“அவ்வளவு பெரிய ஆட்களா அவங்க?” என்ற கேள்விக்குப் பதில் “ஆம்” என்றே சினிமா வட்டாரம் கூறும். இன்று நெற்றா வந்தது எஸ்.வி. பிரொடஷன்ஸ்? இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்தரம் வாங்கும் முன்னமே கௌதமனின் கொள்ளு தாத்தா சுத்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.வி. பிரொடஷன்ஸ், அன்றிலிருந்தே தனக்கென ஒரு பெயரை சினிமா துறையில் பதித்திருக்கிறது.
“வடபழனியில இருக்க இவங்க எஸ்.வி. ஃபில்மிங் ஸ்டுடியோக்கு கூட்டிட்டு போறேன் ஒருநாள். நேர்லயே பாருங்க அவங்க பெரிய ஆளா இல்லையான்னு. ஷூட்டிங் ஸ்பேஸ் மட்டும் இல்ல, ரெகாட்டிங், டப்பிங், பிரொடஷ்சன், போஸ்ட் பிரொடஷ்சன் ஃபெசிலிட்டியோட சேத்து உள்ளயே பிரெவ்யூ தியட்டரும் இருக்கு.” என பெருமை பட்டவர்,
“1940கள்ல ஆரம்பிச்சது இது. அன்னைல இருந்து அவங்க முந்நூறுக்கும் மேல படம் பண்ணி இருக்காங்க. உங்களுக்குத் தான் தெரியுமே… சவுத் இண்டியன் மட்டும் இல்ல ஹிந்தில கூட நிறைய படம் பண்ணி இருக்காங்கன்னா சும்மாவா? அவங்க துறையில அவங்க பெரிய ஆட்களே தான்” என்றார்.
“அப்போ மாமா ஏதோ அவர் பணத்த அவங்க ஆட்டைய போட்ட ரேஞ்சுக்கு பேசிட்டு போனது?”
“யானைக்கும் அடி சருக்கும் தான. அப்படித் தான் அதுவும். வாசுதேவன் அண்ணாவோட அப்பா தான் வேலவன். அண்ணா பிறந்த சில வருஷத்துலயே அவங்க அப்பா இறந்துட்டார். சோ… அண்ணா வளந்தது பூராவே சுந்தரம் தாத்தா கைபிடிச்சு, அவரோட ஸ்டுடியோவுல தான்.
தாத்தாவோட திடமும் கனவும் ரொம்ப பெருசு. நெட்ல, எஸ்.வி. பிரொடக்ஷன்னு தேடிப் பாருங்களேன் இருக்கும். அவங்க ஆரம்பிச்சதும் அப்படி ஒன்னும் ஓஹோன்னு போகல. முதல் மூணு படம் படு தோல்வி. மூணு படமும் ஓடல… அடுத்து யார் அவங்கள நம்பி பணம் போடுவாங்க?
குடும்ப சொத்தை வித்து தான் நாலாவதா சொந்த படம் பண்ணினார். அதுக்கு அப்பறம் அவர் நல்ல நேரம் ஆரபிச்சிதுன்னு சொல்லணுமோ இல்ல அவரோட அயரா உழைப்பு, பலன் கொடுத்துன்னு சொல்லணுமோ… எதுவோ ஒண்ணு அப்பறம் வந்த பல படங்கள் நல்லா ஓடிச்சு.
அந்த மனுஷன் திறமையை மதிக்கிறவர். அவர் வளர வளர, பலர் அவரால வாழ்ந்தாங்க. நூறு நாள் தாண்டியும் அசாள்டா அவங்க படங்கள் ஓடிச்சு. அப்போ தான் அவருக்கு மன்னர் காலத்துப் படம் எடுக்க ஆசை வந்துது.”
“நிஷா எங்க? டிஃபன் எடுத்து வைக்காம என்ன பேச்சு?” என ஜெகநாதன் வந்து அமரவும் மாமியார், மருமகன் பேச்சு தடைப்பட்டது.
“அப்பறம் சொல்றேன்” என மருமகனிடம் சின்ன குரலில் வாய் அசைத்தார் மாமியார்.
“அப்பறம் எதுக்கு? நானே சொல்றேன். நான் உழைச்சு சம்பாரிச்சத என் தங்கையோட சேத்து எங்கப்பன் அப்படியே அள்ளி வாரி ஓட்டாண்டியா நின்ன வாசுதேவனுக்கு இனாமா கொடுத்தார்.
கேட்டதுக்கு… நன்றி கடன்னு சொன்னார்! நேத்து வரைக்கும் என் கம்பனி தான் அவன் படத்துக்குப் பணம் போட்டு அவன வளத்து விட்டுச்சு. இன்னைக்கு ஏத்திவிட்ட ஏணிய தள்ளி விட்டு போயிட்டான் வாசுதேவேன்! போதுமா? சாப்பிடுங்க” என வள்ளென விழுந்தார் மனிதர்.
காரணம் இல்லாது இனாமாக ஏன் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாராம் பல்லவன்?
அந்தக் காலகட்டத்தில் மன்னர் காலத்துப் படங்கள், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு பெரியவரின் கவனத்தையும் ஈர்த்தது. வெறும் குடும்ப படம் மட்டுமே எடுத்த அவருக்கு, ஆசை இடம் மாறியது.
நடனத்தை மையமாகக் கொண்டு மிக மிகப் பிரமாண்டமான யுத்தக் காட்சிகளோடு மன்னர் காலத்துப் படத்தை எடுக்க ஆசை அவருள் எழும்ப, அதை அடக்காது எப்படியேனும் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியது.
அப்படியான படம் எடுக்க எவ்வளவு ஆகும் என்ற கணக்கு எடுத்தவருக்கு நன்கு புரிந்தது, படம் ஒரு வருடம் முழுவதுமே ஹவுஸ் புல்லாக ஓடினாலும் அவர் போட்ட பணத்தை எடுக்க இயலாது என.
ஆசையை ஒதுக்கி வைத்தவர் குடும்ப படங்களில் கவனம் செலுத்தினாலும் மனதின் ஓர் ஓரத்தில் அவரின் ஆசை அவரை தின்று கொண்டே இருந்தது. அப்போது புது முகமாக அறிமுகம் ஆனார் பதின்ம வயது காயத்திரி.
நடனத்தில் அவளை மிஞ்ச ஒரு நடிகை இல்லை என்றது மட்டுமா இவரைக் கவர்ந்தது? அத்தனை அழகும் நளினமும் அவளை ராணியாகவே இவர் கண்களுக்குக் காட்டியது. பெரியவருக்குள் புதைந்திருந்த கனவைத் தூசி தட்டி எழுப்பினாள் காயத்திரி.
அன்றைய நாளில் கனவு கண்ணனாக திகழ்ந்த நடிகரும், ‘நல்ல படம் இருந்தா சொல்லுங்க சார்’ எனப் பேச்சு வாக்கில் இவரிடம் சொல்லிச் செல்ல, அந்தத் தருணத்தை விட மனிதனுக்கு மனமில்லை. படம் தயாராக ஆரம்பித்தது.
படம் முடியும் வேளை அத்தனை வருடங்களாகச் சேர்த்து வைத்த சொத்து எல்லாம் கரைந்து போயிருந்தது. சுந்தரத்திற்கு அது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் வட்டிக்குக் கடன் வாங்கி படத்தை வெளியிட்டார்.
படம் வெளிவந்தது. நினைத்ததை விட அதிக வருவாயை ஈட்டி தந்தது. ஒன்றரை வருடம் படம் தோய்வில்லாது ஓடியதால் கடன்களை அடைத்தாலும் போட்ட பணத்தை முழுவதுமாக எடுக்கவில்லை சுந்தரம்.
பெயரும் புகழும் கதவைத் தட்டினாலும், மிஞ்சியது அது மட்டுமே. முதுமையின் காரணமாக அவரால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன்னை மட்டுமே நம்பி நிற்கும் தன் பேரனுக்கு எதையும் விட்டுச் செல்லவில்லையே என வாடிய வேளையில், அவரை தாங்க என வந்து நின்றார் பல்லவன்.
சுந்தரத்தால் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்திருந்த பலரில் பல்லவனும் ஒருவர். பல்லவனின் இரு மக்களில் ஒருவரான வைஷாலியை வாசுதேவனுக்கு மணமுடிக்க கேட்டு நின்றார் பல்லவன். உயர்ந்து பனையாக நின்ற வேளை அவரை மொய்த்த கூட்டம் எல்லாம் பறந்திருக்க, மகளோடு ஒரு லோடு சொத்தையும் கொடுத்தார் பல்லவன்.
அன்றுவரை அவர்கள் படங்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்சியர் என்பதால் அவர்களின் நிலையைத் துல்லியமாக அறிந்திருந்தவர் வாசுதேவனிடம் கேட்டதெல்லாம் ‘தாத்தன் ஆரம்பித்ததை விட்டுவிடாதே’ என்பதே.
வைஷாலியின் தமையன் ஜெகநாதனுக்கு அப்பா இப்படித் தங்களின் சொத்தில் பாதியை அள்ளி வாரி தங்கைக்கு சீதனமாக கோடுத்தது சுத்தமாக பிடிக்கவில்லை. வைஷாலி ஆனந்தமாகச் சுற்றித் திருந்த வேளை, அப்பாவின் வலது கையாக நின்று உழைத்தது ஜெகநாதன்.
தொழிலோடு சேர்த்து சொத்தின் பெரும் பங்கு தனக்கு வரும் என அவர் நினைத்திருக்க, நடந்ததோ வேறு. ஆனாலும் அப்பாவைக் கேள்வி கேட்க அது ஒன்றும் பரம்பரை சொத்தில்லையே.
அதுமட்டுமா? அப்பாவின் முகம் பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்குத் தைரியம் இல்லை என்பதால் ஏமாற்றத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டார் ஜெகநாதன்.
சிறு பட்ஜெட் படங்கள் மூலம் தங்களின் சுந்தர-வேலவன் பிரொடஷன்சை காத்தார் வாசுதேவன். தாத்தாவைப் போல் ஆழம் தெரிந்த பின்னரே காலை விட்டாலும் தாத்தாவைப் போல் ஆழக் கால் விடவில்லை வாசுதேவன்.
முப்பது வருட உழைப்பில் பல தோல்விப் படங்களையும் பல மாபெரும் வெற்றிப் படங்களையும் பார்த்துவிட்டார் வாசுதேவன். கொழுத்த பணக்காரர்களின் வரிசையில் வரமாட்டார் என்றாலும் பல நூறு கோடிகளுக்குச் சொந்தக்காரர் என்ற வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்.
நடிகர்களை விழுங்கி ஏப்பம் விடும் கட்டிளம் காளையாக மகன் கௌதமனும், அவர் மேல் உயிரையே வைத்திருக்கும் மனைவி வைஷாலியும் வாசுதேவன் வாழ்வை நிறைவாக்கியிருக்க, அதுவே ஜெகநாதனின் வயிற்றெரிச்சலை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது.
சென்னையின் மையத்தில் மிகப் பெரிய மால், மூன்று அடுக்குகளோடு செயல்படும் திருமண மண்டபம், ஏக்கர் பரப்பில் பங்களா என அசையா சொத்துகளாக வாசுதேவன் வாங்கி போட்டிருப்பது, ஜெகநாதனின் தங்கையின் பெயரில் என்றாலுமே அவருக்கு உள்ளுக்குள் புகைச்சல் தான்.
இத்தனை புகைச்சலிலும் மனிதன் பற்றி எரியாது இருப்பதற்கும் கௌதமனே காரணம்.
அடிமட்டத்தில் இருந்து உழைத்து, பணத்தைப் பார்ப்பது என்பது வேறு… பிறக்கும் போதே பணத்தில் பிறப்பது என்பது வேறு தானே? அப்படியான செல்வச் செழிப்பில் பிறந்தவன் தான் கௌதமன்.
அப்பாவின் சம்பாதியத்திற்குத் தான் மட்டுமே ஒற்றை வாரிசு என்ற கர்வம் கௌதமனுக்குள் ஊறிப் போயிருப்பதை அவனிடம் இரண்டு நிமிடங்கள் கழித்தாலே கண்டு கொள்ளலாம்.
செல்லும் இடங்களில் கௌதமன் இருந்தால் நண்பர் பட்டாளத்திற்குக் குஷி தான். அன்றும் அவர்களது படம் திரையை நிறைத்திருக்க, இவர்கள் கூட்டம் செய்யாத அட்டூழியமே இல்லை.
“படம் செம்ம டா மச்சான். போட்ட காச விட நாலு மடங்கு பார்த்துடுவார் டா அங்கிள். செலிபிரேட் பண்ணியே ஆகணும் மச்சான்” என்றான் ஒருவன்.
“ஆமா டா… கடைசி எக்சாமும் முடிஞ்சாச்சு. இனி மேல் எப்போ இப்படி ஒன்னா சுத்த சேன்ஸ் கிடைக்குமோ தெரியல” என்றான் மற்றவன், ஏதோ இதன்பின் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள் போல.
“ஆமா டா… செலிபிரேட் பண்ணியே ஆகணும். இப்போவே பாண்டி போகலாம் டா” எனக் கத்தி கும்மாளமிட்டது அந்த நண்பர்கள் கூட்டம்.
“கடைசியா ஒரு தரம் போலாம். வர்றியா?” என கௌதமன் தாக்ஷாயினியை பார்க்க, “எந்த யோசனையும் இன்றி, “ம்ம்ம்” என்றாள் அவனின் இன்றைய பெண்தோழி. ‘கடைசியா’ என்றால்… இந்த ஊர் சுற்றலின் முடிவில் இருவரும் அவரவர் வழியே சென்று விடுவார்கள் என்பதே அர்த்தம்.
நிற்க முடியாது போகும் வரை பாட்டும் நடனமும் எனக் கேளிக்கை விடுதி களை கட்டியது. எப்பொழுதும் போல், “ஆன் மீ கைஸ்” என அப்பா ஈட்டும் பணத்தைக் கணக்கே இல்லாது அந்த பப்பில் கொட்டினான் மகன்.
பார்ட்டி… பாண்டிச்சேரி எனச் சுற்றியவனுக்கு இரு தினங்கள் கழித்தே வீட்டின் நினைப்பு வந்தது போலும். இரவு தள்ளாடிக் கொண்டே வீடு வந்த மகனைப் பார்த்த அன்னைக்கு அத்தனை கோபம். என்ன பேசிட முடியும் தன்னையே மறந்து நிற்பவனிடம்? “போய் படு” என்றுவிட்டார்.
அடுத்த நாள் “மா பிளீஸ் பேசுமா… என் செல்லமில்ல” எனத் தன்னையே சுற்றி வந்த மகனிடம் தாய் முகம் திருப்பினார். மனம் ஆறவே இல்லை. சில மாதங்களில் இருபத்தி ஒரு வயதைப் பூர்த்தி செய்ய இருக்கும் கௌதமனை கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை அன்னைக்கு.
அம்மாவின் செல்ல மகன் அவன். அம்மாவின் கோபம் அவனைப் பாதித்தது. அதனால் அடுத்த நாள் வெளியே செல்லாது அவரை சுற்றிச் சுற்றியே அன்னையைச் சமாதானம் செய்தான்.
“இனி மேல் குடிக்கக் கூடாது. பொறுப்பா இருக்கணும் சரியா?” என்றதற்கு “எஸ் மா… ஆஸ் யூ விஷ் மா” எனக் கொஞ்சியே அவரை மலை இறக்கினான். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பது போல் இரு தினங்களில் பெட்டியோடு கிளம்பிய மகனை ஆயாசத்தோடு பார்த்தார் தாய்.
“எங்க கிளம்பிட்ட?” என வாசுதேவன் கேட்க, “நம்ம படத்தோட சக்சஸ்ச செலிபிரேட் பண்ணனும். கூடவே விக்கியோட பர்த் டே டிரீட் இருக்கு. எல்லாம் சேத்து ஃப்ரெண்சோட ஒன் வீக் டிரிப் பா” என்றான் உற்சாகமாக.
மனைவியை அவர் பார்க்க, அந்தப் பார்வையில் ‘எப்படிக் கெடுத்து வச்சிருக்க பாரு’ என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஒற்றை மகன், தவமாக தவமிருந்து தங்களின் வரண்ட வாழ்வில் சுனையாகப் பெற்றெடுத்த மகன், கௌதமன்.
அவன் மேல் அவர் வைத்திருந்த கண்டிப்பில்லாத அன்பே அவனை இப்படி மாற்றி விட்டதா என வைஷாலி எண்ணாத நாளில்லை.
வாசுதேவன் மகனைக் கண்டிக்க ஆரம்பித்த நாள்களில், நடுவே சென்றிருக்கவே கூடாது என காலம் தாழ்த்தி யோசித்தார் வைஷாலி.
“வீட்டுல அடங்கி, பிசினஸ்ச கத்துகிற வழிய பாரு கௌதமா” என்ற அன்னையிடம் எப்பொழுதும் போல், “இது தான் மா லாஸ்ட்… அப்பறம் அப்பா கூடவே இருந்து பிசினஸ்ச பார்த்துக்கிறேன்” எனக் கன்னம் பற்றிக் கொஞ்சினான்.
“இது எல்லாம் தேறாது. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்… உன்ன வளக்க விட்டேன் பார்த்தியா…” என வாசுதேவன் மனைவியை கசப்பான பார்வை பார்த்து கையை கழுவிச் சென்றுவிட்டார்.
இத்தனை வருட திருமண வாழ்வில் வாசுதேவன் இப்படியான அத்திருப்தியை முகத்தில் காட்டியதே இல்லை என்றதும் வைஷாலியால் தாள முடியவில்லை.
“அம்மா போறேன் மா” என மகன் பரபரக்க, “எங்கயாது போய் தொல… போ. என் முகத்துல முழிச்சிடாத” என எரிந்து விழுந்தார் வைஷாலி.
இப்பொழுது அம்மாவின் கோபத்தை தணிக்க முடியாது என்பதால், “அம்மான்னா அம்மா தான்” என அன்னை அணைத்து, கன்னத்தில் முத்தம் பதித்து, “லவ் யூ மாம். பைய்” என விடைபெற்று சென்றான் மகன்.