Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 25

வருடங்கள் உருண்டோடியது.

குழலிக்கு இது ஐந்தாவது மாதம், தாய் வீட்டிற்கு சீராட வந்திருந்தாள்.  அவளைப் பார்த்து செல்வதற்காக அமுதினியும் வந்திருந்தாள்.  கௌதம் கொண்டு வந்து அமுதினியை விட்டுவிட்டு சென்றிருந்தான்.  ஞாயிறு என்பதால் கனியும், பூபதியும் வீட்டிலிருந்தனர்.  நெடு நாள் கழித்து குடும்பமாக சந்தோஷித்து இருந்தனர்.

சாரதாவுக்கு மூன்றரை வருடங்கள் கழித்து மகள் கருவுற்றிருப்பது அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது.  ஏற்கனவே குழலி பேரழகி, இப்பொழுது தாய்மையின் பூரிப்பில் இன்னும் அழகாக இருந்தாள்.

மதிய உணவு வேளை முடிந்து பெண்கள் எல்லாம் அமர்ந்து அரட்டையில் இருந்தனர்.  பூபதி சென்று படுத்துவிட்டார்.



Advertisement

குழலி, “ம்மா… இந்த கனியப் பாருங்க… சும்மா என் புருஷனை வம்பிழுத்து என்னை கிண்டலடிச்சிட்டே இருக்கா” என ராகமாக குறை படித்தாள் அன்னையிடம்.

அமுதினியும் அவளுடன் சேர்ந்துகொண்டு “இரண்டு போடுங்க ம்மா… இந்த கழுதைய.  என் புருஷனையும் கிண்டலடிக்கிறா…” என்றாள் சிரித்துக் கொண்டே.  சாரதாவும் அங்கேதான் இருந்தார்.  களிப்புடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

கனி இருவரின் கணவன் மார்களையும் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.  அவளுக்கு இரண்டு அக்காக்களும் திருமணம் செய்து கொண்டு சென்றதிலிருந்து வீட்டிற்கு வருவதில்லை, தங்குவதில்லை என ஆதங்கம் மனதில்.

Advertisement

இன்று இருவரும் ஒரு சேர அதுவும் கணவன்மார்கள் இல்லாமல் தனியாக வந்திருப்பதை எண்ணி ஆனந்தம்.  அதைதான் கிண்டலாக அவர்களிடம் சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

“எப்படி? உங்க புருஷன்மார்ங்க விட்டாங்க உங்க இரண்டு பேரையும் தனியா, கூடவே வால் பிடிச்சது போல இருந்து கூட்டிட்டே கிளம்பிடுவாங்களே.  எப்படி இந்த அதிசயம் நடந்தது” என கண்களை உருட்டி விழித்து பாவனையாக சொல்லிக் கேலி செய்து கொண்டிருந்தாள்

“ஒருத்தர் பேசறதுக்கே காசு கேட்டா…, இன்னொருத்தர், அதையெல்லாம் மிஞ்சிடுவாரு.  சிரிக்கவே காச எண்ணி வைக்க சொல்லுவாரு இல்ல….க்….கா…” என ராகம் இழுத்தாள்.

“யா…ரு..டி….? யா…ருடி… சிரிக்கறதில்ல..? என் முன்னாடியே என் புருஷன கிண்டல் பேசுவியா” என்று அமுதினி கனியை அடிக்கப் பாய்ந்து எழுந்தாள்.

Advertisement

அமுதினி எழுந்து வருவதற்குள் கனிமொழி அவளிடம் சிக்காமல் இருக்க தாவி ஓடினாள்.  அமுதினியும் அவளை விட்டேனா என அவளை துரத்தினாள்.  அமுதினியின் கைகளில் அகப்படாமல் அங்கேயே சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள் கனிமொழி.

குழலி, “அவளை விடாதடி.  என்ன பேச்சு பேசறா…?  என் சார்பாவும் இரண்டு போடு.  எப்ப வந்தாலும் உம் புருஷன் என்ன இவ்வளவு விறைப்பா இருக்கார்? கஞ்சிய சட்டைக்கு போட…றா…ரா…, இல்ல அவரு….க்கா?  அப்படின்னு கேட்டு கிண்டலடிச்சிட்டே இருக்கா…” என சிரிப்புடன் கூறினாள்.

அமுதினி கனியைப் பிடித்து அவள் தோளில் இரண்டு அடி வைத்தாள் வலிக்காமல்.

இதையெல்லாம் முகத்தில் புன்னகையுடன் பார்த்திருந்த சாரதாவுக்கு நெஞ்சு நிறைந்தது.  மகள்கள் இப்படி ஒன்றாக கூடி களித்து இருந்த காலங்களை நினைத்து அவர் ஏங்கிய ஏக்கமெல்லாம் இன்று ஈடேறி கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது.

அவர்களின் சம்பாஷணையை நெடுநேரம் கேட்டிருந்தவர், “கனி கடைக்கு போகனும்னு சொன்ன போகலையா…? என்றார்.

“ஆமாம் ம்மா.., டைமாயிடுச்சு.  கிளம்பனும்” என்றாள் கடிகாரத்தைப் பார்த்து.

அமுதினி, “எதுக்குடி…? எங்க கிளம்பற?” என்றாள்.

கனிமொழி, “காலேஜ் கல்சுரல்ஸ்க்கு டிரஸ் எடுக்கறதுக்காக க்கா…,  பிரண்ட்ஸ் எல்லாரும் ஒரே மாதிரி கட்டலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம்.  இன்னைக்கு லீவ்ன்றதால எல்லாரும் ஒன்னா போய் எடுக்கலாம்னு பிளான் போட்டிருக்கோம்” என்றாள்.

“எங்க எடுக்கப் போறீங்க?”

புதிதாக கட்டப்பட்டிருந்த மாலின் பெயரைச் சொல்லி அங்கேதான் எடுக்கப் போகிறோம் எனக் கூறி கிளம்புவதற்காக உள்ளே சென்றாள்.

சாரதா எழுந்து அவளுக்காக டீ வைக்கச் சென்றார் உள்ளே.  கனிமொழி தோழிகளுக்கு போன் செய்து பேசிவிட்டு ரெடியாகி வெளியே வந்தாள்.

கனிமொழி, அமுதினியைப் பார்த்து, “நான் வர வரைக்கும் இருப்பியாக்கா..?”

“தெரியல…டி, மாமா வந்தாங்கன்னா கிளம்பிடுவேன்”.

“ஹ்ம்ம்…. வரதோ எப்பவோ ஒரு தடவை.  அதுவும் தங்காம கிளம்புவியா” என்றாள் ஏக்கத்துடன்.

“ஹேய்…. அடுத்து தங்கற மாதிரி வரேன்டி.  இதுக்கு போய் பீல் பண்ணுவியா”.

“போக்கா… எப்ப வந்தாலும் இதேதான் சொல்ற.  ஆனால் தங்கதான் மாட்டேன்ற” என சலித்துக் கொண்டாள்.

“அதான் குழலி இருக்கால்ல.  அவள் கிளம்பறதுக்குள்ள ஒரு தடவை வரேன்டி” என அவளை சமாதானப் படுத்தினாள்.  குழலி ஒரு வாரம் தங்கி சீராட வந்திருந்தாள்.  சாரதா மூவருக்கும் டீ எடுத்து வந்து கொடுத்தார்.

கனி அக்காக்களிடமும், சாரதாவிடமும் கூறிக் கொண்டு கடைக்கு புறப்பட்டாள்.

அவள் செல்லும் இடம் தூரம் என்பதால் சாரதா அவளை ஸ்கூட்டி எடுத்து செல்ல வேண்டாம், பஸ்ஸிலேயே சென்று வர சொல்லியிருந்தார்.

கனி, தோழிகளை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து கல்சுரல்சுக்காக எல்லோரும் ஒரே டிசைனில் புடவை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தனர்.  கனி அவர்களுடன் பேசிக்கொண்டு நடந்து வரும்பொழுது அங்கிருந்த காபி ஷாப்பில் ஆதவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.  அவனும் இவளைப் பார்த்து சிரித்தான்.  தோழிகளிடம் அவர்களை  முன்னே செல்லுமாறு கூறிவிட்டு ஆதவனைக் காணச் சென்றாள்.

கனி, “ஹலோ… சார் எப்படி இருக்கீங்க…?” என்று புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டே அவன் எதிரில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹ்ம்ம்… நல்லாயிருக்கேன்.  நீ எப்படியிருக்க…?” என்றான் புன்னகையுடன்.

கனி மலர்ந்த சிரிப்புடன் “சூப்பராயிருக்கேன் ஸார். என்ன தனியா உட்கார்ந்திருக்கீங்க” என சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனைப் பார்த்து குனிந்து ரகசியம் போல கிசுகிசுப்பாக “கேர்ள் பிரண்ட்காக வெயிட் பண்றீங்களா…?” என்றாள் கண்சிமிட்டி.

ஆதவன், “ஹா… ஹா… கேர்ள் பிரண்டா…?  என் பொண்டாட்டி மட்டும் இதை கேட்கனும்.  அவ்வளவுதான் உன்னோட சேர்த்து என்னையும் தொலைச்சுடுவா…?” என்றான் பயந்த பாவனையில்.

கனி, “பொண்டாட்டியா…!  உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?  எப்போ…?  சொல்லவேயில்ல.  உங்க வைப் இங்க வந்திருக்காங்களா…?” என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள்.

“ஹ்ம்ம்…” என அவளை ரசனையாக பார்த்தவன் “ஏன் என்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரி தெரியலையா…?”  என்றான் புருவமுயர்த்தி புன்னகையுடன்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆதவனுக்கு திருமணம் முடிந்திருந்தது.

“ஹி… ஹி… அப்படியில்ல.  தனியா உட்கார்ந்திருக்கீங்களேன்னு… ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்…” என்று அசடு வழிந்தாள்.

“அப்படியேயிருக்க…!  இன்னும் உனக்கு வாய் குறையவேயில்ல ம்ம்…” என்றான் கனிவாக அவளைப் பார்த்து புன்னகையுடன்.

“ஹ… அதெல்லாம் ஒட்டிட்டே பொறந்தது.  அதை விடுங்க.  எங்க உங்க வைப் காணோம்?”

“ஷாப்பிங் பண்ணிட்டிருக்கா.  என்னால அங்க நிக்க முடியலன்னு, இங்க வந்து உட்கார்ந்துட்டேன்”.

“எஸ்கேப்பு… ம்ம்….” என்றாள் சிரிப்புடன் தலையாட்டி கிண்டலாக.

“ம்ம்… என்ன பண்றது?  சீக்கிரம் எடுத்தா பரவாயில்லை, ஒரு டிரஸ் எடுக்க எத்தனை கடை….? அதான் எடுத்துட்டு கூப்பிடச் சொல்லி, இங்க வந்து உட்கார்ந்துட்டேன்”.

“நீ எங்க இங்க…?  இது உனக்கு பைனல் இயர்தான. படிக்காம ஊர் சுத்திட்டு இருக்கியா…?”

“ஹா… ஹா… அதுக்காக எப்பவும் புக்கும் கையுமாவா இருக்க முடியும்.  பைனல் இயர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்.  அதுக்காக பிரண்ட்ஸ்ங்களோட சேர்ந்து டிரஸ் எடுக்கலாம்னு வந்தேன்.  எடுத்து முடிச்சிட்டு வீட்டுக்கு போகும் போதுதான் உங்களைப் பார்த்தேன். ஓகே ஸார்.  நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

“ஏதாவது சாப்பிடறியா கனி… காபி ஆர்டர் பண்ணவா….?”

“தேங்க்ஸ் ஸார்.  இப்பதான் ஜூஸ் குடிச்சேன்” என மறுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

இவள் அங்கிருந்து கிளம்பி வெளியேறி வரும் வழியில், இவளை முறைத்துக் கொண்டு கைக்கட்டி நின்று கொண்டிருந்தான் அரவிந்தன்.  அச்சோ இவனா…?  இவன் எங்க இங்க?  ஏன் முறைச்சிட்டு நின்னுட்டிருக்கான்..? என யோசனையாகப் பார்த்து நின்றாள் அவனை.

அவள் அவனைப் பார்த்து நின்றதும், அவள் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றி இழுத்தவாறு ஏதும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான்.

“ம்ப்ச்… என்ன பண்றீங்க? கையை விடுங்க.  எங்க கூட்டிட்டு போறீங்க….? பொது இடத்துல எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா…?  யாராவது பார்க்க போறாங்க…” என முனுமுனுத்துக்கொண்டே அவனுக்கு ஈடுகொடுத்து சென்று கொண்டிருந்தாள்.

அவளிடம் ஏதும் மறுமொழி பேசாதவன் கார் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று கார் கதவைத் திறந்து அவளை அமர சொன்னான்.

“எதுக்குன்னே சொல்லாம நீங்க பாட்டுக்கு அழைச்சிட்டு வந்து உட்காருன்னா…? நான் வீட்டுக்குப் போகனும்.  டைம் ஆயிடுச்சி.  அம்மா தேடுவாங்க”.

“உட்காரு.  உங்க வீட்டுல ட்ராப் பண்றேன்”.

“உங்ககூடயா..? வேணாம் வேணாம்” என பதறியவள் “உங்களோட வந்தேன்னு தெரிஞ்சா அம்மா ஏதாவது சொல்வாங்க” என்று தலையசைத்து மறுத்தாள்.

“என்கூட வந்தாதான் உங்கம்மா எதுவும் சொல்வாங்களா?  ஊர்பேர் தெரியாதவன் கிட்ட எல்லாம் பேசிட்டிருந்தா, ஒன்னும் சொல்லமாட்டாங்களா…?” என்றான் பற்களை கடித்து அடிக்குரலில்.

“என்ன பேசறீங்க?  டீசன்டா பேசுங்க.  அவர் என்னோட அப்பா வேலை செய்யற ஆபிஸ்ல வேலைப் பார்க்கிறவர்.  ஒருத்தர பத்தி சரியா தெரியாம, என்ன வேணா பேசுவீங்களா…?” என்றாள் முறைத்துக் கொண்டே.

“உன் சண்டைய போகும் போது போட்டுக்கலாம்.  இப்ப கார்ல ஏறு” என்றான் பிடிவாதமாக நின்று.  தான் ஏறவில்லை என்றால் விடமாட்டான் எனத் தெரிந்து அவன் திறந்து விட்ட முன்பக்க கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள்.

அவள் ஏறியதும் அவனும் வந்து அமர்ந்து காரை எடுத்தான்.

கார் சாலையில் சென்று ட்ராபிக்கில் கலக்கும் வரை, இருவரும் பேசவில்லை.  அவன் அவள் ஆதவனுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போதே அவளைக் கண்டிருந்தான்.  அங்கே ஒரு வேலையாக வந்தவன் வேலை முடிந்து செல்லும் வழியில் கனியைக் கண்டு நின்றிருந்தான்.

இவளுக்கு என்கிட்ட பேசனும்னாதான் கசக்கும், மத்த எல்லார் கிட்டயும் இளிச்சு இளிச்சு பேசுவா… என பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தான் உள்ளுள்.

கனியும் அவன் வார்த்தையில் கோவம் கொண்டு அவனுடன் பேசாமல், கார் கண்ணாடியின் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவள் முகத்தை ஓரக் கண்ணால் பார்த்தவனுக்கு அதற்குமேல் கோவத்தை இழுத்து பிடிக்க முடியாமல் “மொழி” என்றான்.

அவள் அவன் கூப்பிட்டும் திரும்பாமல் உட்கார்ந்திருந்தாள்.

அரவிந்தன், “ம்ப்ச்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.  திரும்பி பாருடி.. என்னை” என்றான் கெஞ்சலாக..

அவனைத் திரும்பி முறைத்தாள்.

“ஹ்ம்ம்… என்னை மட்டும் மொற.  அவன்கிட்ட மட்டும் அப்படி இளிச்சு இளிச்சு பேசு” என முனுமுனுத்தான்.

அது அவளது காதிலும் விழுந்து அவளது கோவத்தைக் இன்னும் கூட்டியது.  “சும்மா அதையே திரும்ப திரும்ப லூசு மாதிரி பேசக் கூடாது”.

“என்னது லூசா..? யாருடி லூசு…?”

“வேற யாரு?  நீங்கதான்.  எப்பப்பாரு ஏதாவது லூசுத்தனமா பண்ணவேண்டியது…” என முறைத்தாள்.

“என்னடி லூசுத்தனமா பண்ணேன் நான்?”

“ஹ்ம்ம்… பொது இடம்னு கூட பார்க்காம கையை பிடிச்சு இழுத்துட்டு வந்தீங்களே அதைதான் சொல்றேன்.  உங்களுக்கு என் கையை பிடிக்கிறதுக்கு ஒரு சாக்கு” என கடிந்தாள்.

“ஊர்ல இருக்கறவ கையையா பிடிச்சேன்.  உன்னைத்தான்டி பிடிச்சேன். என்னை கட்டிக்கப் போறவ கையை உரிமையா பிடிச்சேன்” என்றான் திமிராக.

“ஓஹ்… செய்றது தப்பு.  இதுல திமிரா வேற பேசுவீங்களா…?  யார் சொன்னா உங்களை கட்டிக்கப் போறதா..? நீங்களே அப்படி நினைச்சிப்பீங்களா…?”

காரை சாலையின் ஓரம் நிறுத்தியவன், “இப்ப என்னடி வேணும்…. உனக்கு? சண்டை போடனுமா…? எப்பப்பாரு பார்க்கறப்ப எல்லாம் முறைக்கறது இல்லை சண்டை போடறது” என முகத்தைத் திருப்பினான்.

ப்பாஹ்…  பேசறதையும் பேசிட்டு என்னமா சீன் போடறான்.

அவன் முகசுணக்கத்தை பார்த்ததும் ஏனோ அவளுக்கு பொறுக்க முடியவில்லை.  ரொம்ப பேசறமோ என அவளுக்கே குறுகுறுக்க ஆரம்பித்தது.  முதன் முறையாக அவனை சமாதானப்படுத்த எண்ணி அவனது கைகளைப் பற்றினாள்.

பிடித்த அவளது கைகளை உதறியவன் திரும்பி அவளை முறைத்தான் பார்வையால்.

அவனைப் பார்த்து சமாதானமாக முறுவலித்தவள், “இப்ப முறைக்கறது உங்க டர்ன்னா…” என்றாள் கண்கள் சிமிட்டி விளையாட்டாக.

அதில் கொஞ்சம் குளிர்ந்தவன் அவளது கையை எட்டி எடுத்தான்.

“அதான கையைப் பிடிக்காம இருக்க முடியாதே” என கேலி செய்தாள்.

“ஆமான்டி.. கையை பிடிக்காம இருக்க முடியாது.  இப்ப என்ன அதுக்கு” என புன்னகையுடன் பாவனையாக கூறியவன் அவள் கைகளில் முத்தமொன்று வைத்து காரைக் கிளப்பினான்.

“நீங்க என்னை வீட்டுக்கு முன்னாடியே இறக்கி விட்டுடுங்க, இல்லைனா அம்மா ஏதாவது சொல்வாங்க.  ப்ளீஸ்…” என்றாள்.

அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ சரி என தலையசைத்து அவளது வீட்டிற்கு முன்னமே இறக்கிவிட்டு சென்றுவிட்டான்.

நாட்கள் அதன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.  குழலிக்கு சீமந்தம் செய்து அவளது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்திருந்தாள்.

ஷ்யாமளா அமுதினியிடம் நேரிடையாக அரவிந்தன் கனியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதைக் கூறி அவளது விருப்பத்தை கேட்டார்.

அமுதினி, “இதுல என் விருப்பத்தோட கனியோட விருப்பமும், அப்பா அம்மாவோட சம்மதமும் தான் முக்கியம் அத்தை.  நீங்க அவங்ககிட்ட பேசுங்க”.

அவளை உற்றுப் பார்த்தவர்,  “நீ எப்படியோ?  நான் உன்னை இந்த வீட்டு மூத்த மருமகளாதான் பார்க்கிறேன்.  உனக்கான மரியாதைய நான் கொடுக்கனும் இல்லையா?  நீ கனியோட அக்கான்றத விட இந்த வீட்டுக்கு மூத்த மருமகள்.  உன் இடத்துல யார் இருந்தாலும் நான் நிச்சயம் இப்படிதான் கேட்டிருப்பேன்” என்றார்.

அவருக்கு  இன்னும் தன் மீதிருக்கும் வருத்தத்தை அறிந்திருந்தவள், “ஸாரி அத்தை.., உங்ககிட்ட சொல்லக்கூடாது மறைக்கனும்னு இல்ல.  அந்த நேர சூழ்நிலை… அதான் உங்ககிட்ட சொல்ல முடியல”.

“ஏன் அனி? உன்னை என்னைக்காவது நான் வேத்துமையா பார்த்திருக்கேனா?  இல்ல தகுதி, அந்தஸ்துன்னு பேதம் காமிச்சிருக்கேனா?  வேலை செய்யற காலத்தில இருந்தே நான் உன்னோட க்ளோஸா தான பழகியிருக்கேன்.  அப்படியிருந்தும் என்கிட்ட சொல்லனும்னு தோணலையா…? என்றார் ஆதங்கமாக.

“அய்யோ அத்தை, தப்பான எண்ணத்துல எதுவும் இல்ல?  எனக்கே ரக்‌ஷி பேசனத நினைச்சி அசிங்கமாயிருந்தது, நான் என்னன்னு உங்ககிட்ட வந்து சொல்லுவேன்” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்து.

அவளைப் பார்க்கவும் அவருக்குப் பாவமாக இருந்தது.  ரக்‌ஷி பேசிய அனைத்தையும் அறிந்திருந்தாரே.  அவருக்கே ரக்‌ஷி பேசியது கோவத்தைக் கொடுத்திருந்தது.  சூழ்நிலையைக் கருதி ரக்‌ஷியிடம் ஏதும் பேசாமல் இருந்தார்.

“அரவிந்தன் கனிய விரும்பறது தெரிஞ்சாலும், அதை அவரே நான் பேசிக்கறேன்.  நீங்க யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டார்.  அவரோட சம்மதம் இல்லாம… நான் எப்படி சொல்ல முடியும் அத்தை?.  அதான் உங்ககிட்ட சொல்ல முடியல.  உங்கள மதிக்காமன்னு இல்ல.  என்னை மன்னிச்சிடுங்க.  ப்ளீஸ்…” என வருந்தி நின்றாள்.

அவள் வருந்துவதை பார்த்து மனமிறங்கியவர், “சரி நடந்ததை விடு.  கனியை அரவிந்தனுக்கு கல்யாணம் பண்றதுல உன் விருப்பம் என்ன?” என்றார்.

“நிச்சயமா எனக்கு சந்தோஷம் தான் த்தை.  என் தங்கச்சின்றதால சொல்லல.  கனி நல்ல பொண்ணு. அரவிந்துக்கு பெஸ்ட் சாய்ஸ்” என்றாள் புன்னகையுடன்.

அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தவர், “சரி நானே உங்க வீட்ல பேசறேன்” என்றார்.

ஒரு நல்ல நாளில் ஷ்யாமளா கௌதம், அமுதினியை அழைத்துக் கொணடு பம்மல் சென்று கனியை அரவிந்தனுக்கு பெண் கேட்டு சம்மந்தம் பேசினார்.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சாரதா தம்பதியினர் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயினர்.

ஷ்யாமளா குடும்பத்தையும், அரவிந்தனைப் பற்றியும் நன்கு அறிந்திருந்ததால் அவர்களுக்கு அதில் எந்த ஆட்சேபணையும் மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.  ஆனால் கனிமொழி மேலே படிக்க வேண்டும் என்று விரும்புவதால் தயங்கி நின்றனர்.

அதை ஷ்யாமளாவிடமும் தெரிவித்தனர்.  அதற்கு ஷ்யாமளாவும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.   “சந்தோஷமா படிக்கட்டும், கல்யாணம் பண்ணிட்டு மேல படிக்கட்டும்” என்று ஒப்புக் கொடுத்தார்.

ஷ்யாமளா அப்படி சொல்லியதும் அங்கிருந்த கனிமொழியைத் திரும்பிப் பார்த்தனர்.  அவளது முகத்தில் இருந்த சந்தோஷமே அவளுக்கும் சம்மதம் என்பதை உணர்த்தியிருந்தது.  ஷ்யாமளாவே கனியை பார்த்து அவளுடைய சம்மதத்தை கேட்டார்.  கனிமொழியும் முகமலர்ச்சியுடன் அவளுக்கு சம்மதம் என தலையசைத்தாள்.

ஷ்யாமளா, “அப்புறம் என்ன…..? கல்யாணப் பொண்ணே சொல்லியாச்சு.  அவளுக்கு செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதும், நாம கல்யாண வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்” என்றார் சிரித்துக் கொண்டே.  கனி அவரது பேச்சைக் கேட்டு வெட்கப்பட்டு… கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.

குழலிக்கு பிரசவம் முடிந்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என பெரியவர்கள் ஒருமனதாக பேசி முடிவெடுத்தனர்.  தீபக்கும் குழலியைப் பார்த்துச் செல்ல அங்கே வந்திருந்ததால், அவனுடனும் கலந்து பேசி, அவனுடைய சம்மதத்துடன் மற்றவற்றை பேசினர்.

நாட்களும் வேகமாக நகர்ந்தது.  கனிமொழி ஃபைனல் இயர் எக்ஸாம் முடித்திருந்தாள்.  ரக்‌ஷியும் இன்ஜினியரிங் முடித்து என்ட்ரன்ஸ்   ரிசல்டுக்காக காத்திருந்தாள்.

அன்று, குழலியை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தனர்.  காலையிலிருந்தே விட்டு விட்டு வலி எடுத்திருந்தது அவளுக்கு.  தலை பிரசவம் என்பதால் காலம் தாழ்த்தாமல் அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தார் சாராதா.  ஷ்யாமளாவின் ஹாஸ்பிட்டலில் தான் அட்மிட் செய்திருந்தனர்.

இங்கு வந்ததும் பிரசவ வலிதான், என அவளை அட்மிட் செய்திருந்தனர்.  குழலியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவுடன் தீபக்குக்கும் அழைத்து விவரம் சொல்லியிருந்தார் சாரதா.

சாரதா, கனிமொழி, தீபக், பூபதி, அமுதினி, குழலியின் மாமியார் வீட்டு மக்கள் என ஒரு கூட்டமே அங்கு கூடியிருந்தது.  உறவினர் ஹாஸ்பிட்டல் என்பதால் அவர்களை யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை, இத்தனை பேர் இருப்பதற்கு.

ஒரு நாள் முழுவதும் வலியில் அன்னையை துடிக்க வைத்து சுகப் பிரசவத்தில் பிறந்திருந்தான் குழலியின் மகன்.  பேரனை முதலில் கையில் வாங்கியதும் சாரதாவுக்கு மனதெல்லாம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

கனிமொழிக்கு அன்னையின் கையில் இருந்த அந்த சிசுவை ஆசையுடன் கண்ணகலாது பார்த்திருந்தாள்.  ரோஜாப் பூவை போன்ற நிறத்தில், கண்கள் மூடி, தலை முழுதும் சுருட்டை முட்யுடன், கைவிரல்களையும் மூடியிருந்த நிசுவைப் பார்க்க திகட்டவில்லை அவளுக்கு.  குழந்தையின் கால்களின் பாதங்களை ஒரு விரலால் மென்மையாக் தொட்டுப் பார்த்தாள்.  அதற்கே பிறந்த குழந்தையின் உடல் சிலிர்த்து அடங்கியது.  அதைப் பார்த்தவளுக்கு இன்னும் உற்சாகம் மனதில்.

“அம்மா… நான் தூக்கவா….?” என ஆசையாக கேட்டாள் கனிமொழி சாராதாவிடம்.

“கழுத்தை கெட்டியா பிடிச்சுக்கனும்” என அவளுக்கு சொல்லிக் கொடுத்து, அவளை உட்காரவைத்து அவளது கையை வாகாக நீட்டச் சொல்லி, அவளது கையில் வைத்தார் குழந்தையை.  கைசூடு மாறியதும் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்து, உதட்டைச் பிரித்து, திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டது.

குழந்தை கண்ணைத் திறந்து அவளைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் குஷியானது மனதில்.  “ம்மா… என்னைக் கண்ணைத் திறந்து பார்த்தான்” என அன்னையிடம் சொல்லி குதூகலித்தாள்.  சாரதாவும் தீபக்கும் இதையெல்லாம் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.

தீபக்கிற்கு மகனை விட்டு நகர மனதில்லை.  கண்கள் கசிய தன் மகவையே கண்கொட்டாது பார்த்திருந்தான்.  சாரதா அவனிடம் “தூக்கறீங்களா…?” எனக் கேட்டதற்கு கூட, குழந்தையைத் தூக்க பயந்து வேண்டாம் தலையசைத்து என  பக்கத்திலேயே இருந்தான்.

மற்ற எல்லோரும் குழந்தையை தூர இருந்தே பார்த்து ரசித்தனர்.  அதற்குள் அமுதினி வந்து குழந்தையை வாங்கிச் சென்றாள் அவளிடமிருந்து.  “க்கா.. என்னைதான் பர்ஸ்ட் கண்ணை திறந்துப் பார்த்தான்” என அமுதினியிடமும் சொல்லி பூரித்தாள் கனிமொழி.

குழலியை அறைக்கு கொண்டு வந்ததும் அவளையும் குழந்தையையும் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு சென்றனர்.  சாரதா மட்டும் குழலியுடன் இருந்தார்.

அமுதினியும் அங்கேயே இருப்பதால் அவருக்கு மிகுந்த ஒத்தாசையாக இருந்தது.  குழலியை அறைக்கு கொண்டு வந்ததும் கௌதம் வந்து குழந்தையின் நலனை பரிசோதித்து, குழலியையும் பார்த்துவிட்டு சென்றான்.

அவ்வப்போது, ஷ்யாமளா, அமுதினி, அரவிந்தன், கௌதம் என எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்து கொண்டேயிருந்தனர்.   சுகப் பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே அவளை வீட்டுக்கு அனுப்பியிருந்தார் ஷ்யாமளா.

அமுதினியும் ஒரு வாரம் விடுமுறை எடுத்து குழலியுடனே அவர்களது வீட்டிற்கு வந்து கவனித்துக் கொண்டாள்.  குழலியின் மாமியார் வீட்டு வழமைப் படி குழந்தை பிறந்த பதினாறாம் நாள்  தீட்டு கழித்து அன்றே குழந்தைக்கு பெயரிட்டு மகிழ்ந்தனர்.  மூன்று மாதம் முடிந்ததும் குழலியை தீபக் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

சாரதா ஐந்து மாதம் கழித்து அழைத்துச் செல்லலாம் என எவ்வளவோ எடுத்துக் கூறியும் மகனையும், மனைவியையும் இதற்கு மேல் பிரிந்திருக்க இயலாது என நாள் பார்த்து குடும்பத்தினருடன் வந்து அழைத்துச் சென்றிருந்தான்.  குழலிக்கு இன்னும் கொஞ்சம் நாள் தாய் வீட்டில் இருந்து சீராடிச் செல்ல ஆசை.  கணவன் இத்தனை நாள் பொறுத்திருந்ததே பெரிது என அவளுக்குத் தெரியும் என்பதால் மறுப்பு சொல்லாமல் கணவனுடன் சென்றிருந்தாள்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!