Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 21.1

சந்தியா அமைதியான முகத்துடன் அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் கிடந்த மேஜையின் அருகே நின்று கொண்டிருந்தாள். முகம் தான் அமைதியுடன் இருந்ததே தவிர மனம் சுனாமி வந்த கடலைப் போல் சீற்றத்துடன் அலை மோதிக் கொண்டிருந்தது.

 

சூரியாவின் பேச்சுக்கு எதிர்வினையைத் தனது பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்தவளுக்கு அவர்களின் யோசனையுடன் கூடிய அமைதி குழப்பத்துடன் பயத்தையும் ஒருசேர அளித்தது. குழப்பம் எல்லாம் பெயரளவுக்குத் தான், அவள் இப்போது ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பதற்கான முக்கியக்காரணம் பெற்றோர்கள் மீதான பயமே.

 



Advertisement

இன்னும் காதல் திருமணங்களைக் கை தட்டி வரவேற்குமளவுக்குத் தமிழகத்தின் குடும்பங்கள் பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. அதற்காக அங்கெல்லாம் காதல் திருமணங்களே நடைபெறுவதில்லையா என்று கேட்டால் அதற்கும் சில விதிவிலக்கான காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன தான்.

 

ஆனால் அவை அனைத்தும் பெற்றோரின் முழுமனதுடன் கூடியச் சம்மதத்துடன் நடைபெறவில்லை என்பது தான் நிதர்சனம். தன் மகன் அல்லது மகள் விரும்பிவிட்டார்களே என்ற கட்டாயத்தின் பெயரில், அவர்களின் சந்தோசத்துக்காகத் தான் பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணங்களை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்வர்.

Advertisement

 

Advertisement

ஆனாலும் அவர்கள் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் தாங்கள் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லையோ என்ற ஆதங்கம் அவ்வபோது எழாமல் இருக்காது. தற்போது சந்தியாவின் பெற்றோரின் நிலையும் அதுவே. தாங்கள் கூடவே இருந்து வளர்த்திருந்தால் மகள் காதல் அது இதென்று வழி தவறியிருக்க மாட்டாளோ என்ற எண்ணம் அவர்களின் உள்ளத்தை வருத்திக் கொண்டிருந்தது.

 

என்ன தான் சூரியாவும் அவன் குடும்பமும் புடம் போட்டத் தங்கமே என்றாலும் மகளின் காதலுக்கு மூன்று வயது என்ற செய்தியைக் கேட்டதும் தாங்கள் அவளது நடவடிக்கை எதையும் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற குறை அவர்கள் மனதில் உதித்து விட்டது.

Advertisement

 

அதுவும் அவர்கள் குடும்பங்களில் இன்னும் காதல் திருமணத்தை மலர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வரவில்லை. நாளை சந்தியாவுக்கே திருமணம் என்று உறவினர் வீடுகளில் பத்திரிக்கை வைக்கச் சென்றால் இது காதல் திருமணம் என்று தெரியவரும் போது தங்களைப் பற்றியும் தங்கள் வளர்ப்பைப் பற்றியும் பங்காளிக்குடும்பத்தில் எள்ளி நகையாடுவார்களே என்று ஆயிரம் ஆயிரம் யோசனைகள் எழ கோமதியம்மாளுடன் சேர்ந்து பெரியவர்கள் அனைவருமே சிந்தனையில் ஆழ்ந்து விட்டனர்.

 

சுமித்ரா சந்தியாவின் அருகில் நின்றவள் “சந்து இவங்க யாரும் இப்போதைக்கு நார்மல் ஆக மாட்டாங்க… நீ போய் தூங்கு… எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்று அவளை அறைக்குள் செல்லச் சொல்லவும்

 

சந்தியா தயக்கத்துடன் “சுமிக்கா எனக்கு அம்மாவும் அப்பாவும் இப்பிடி இருக்கிறதைப் பார்த்தா பயமா இருக்கு… ஒரு வேளை நான் சூரியாவை காதலிச்சது தப்போ?” என்று கேட்டுவிட்டு முகத்தில் பயரேகை மின்ன கைகளைப் பிசைந்து கொண்டாள்.

 

இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டுத் தான் இருந்தார் ரேணுகா.

 

“சந்தியா, சுமி ரெண்டு பேரும் போய் தூங்குங்க… நாங்க தூங்குறதுக்கு நேரம் ஆகும்” என்று சொன்னவரைத் தயக்கத்துடன் பார்த்த சந்தியா “மா! நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று ஆரம்பிக்க

 

“உன்னை நான் தூங்குனு சொன்னேன்…ரூமுக்குப் போய்… சுமி நீயும் போ” என்று அழுத்தமாக உரைத்தார்.

 

“இல்லைம்மா… நான்…”

 

“சொன்ன பேச்சைக் கேக்கவே கூடாதுனு எதும் சபதம் போட்டிருக்கியா நீ? ஆல்ரெடி நீ குடுத்த அதிர்ச்சியெல்லாம் போதும்மா… உன்னை மாதிரி பொண்ணைப் பெத்ததும் போதும், அதுக்கு நீ செஞ்ச கைமாறும் போதும்… ரூமுக்குப் போனு சொல்லி ரொம்ப நேரமாச்சு… இந்தப் பேச்சையாவது கேளு..”

 

இதற்கு மேல் அங்கே நின்று பேசுமளவுக்குச் சந்தியாவுக்குத் தைரியமில்லை. சுமித்ராவுடன் அவர்களின் அறைக்குள் சென்றவள் கதவைச் சாத்திவிடவே அதைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி ரேணுகா தன் குடும்பத்தாரிடம் பேச ஆரம்பித்தார்.

 

[the_ad id=”6605″]

 

இவ்வளவுக்குப் பிறகு சந்தியாவின் காதலை மறுப்பது நல்லதல்ல என்று ஆரம்பித்தவர் சூரியாவின் குடும்பத்தினரும் பழகுவதற்கு எளிமையாக இருப்பதால் தாங்கள் அடுத்து என்ன செய்வது என்பதை மட்டும் யோசித்தால் போதும் என்று தீர்மானமாக உரைத்தார் அவர்.

 

“எப்பிடி இருந்தாலும் நம்ம பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணித் தான் வைக்கப்போறோம்… யாரையோ தேடிப்பிடிச்சு பண்ணி வைக்கிற சிரமத்தை நமக்குக் குடுக்காம அவளே அவளுக்குப் பொருத்தமானவனைத் தேடிகிட்டா… இனிமே யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? சூரியாவோட அப்பாவுக்குப் போன் பண்ணி நமக்கும் இவங்களோட கல்யாணத்தில எந்த ஆட்சேபனையும் இல்லைனு சொல்லிடுங்க” என்று தேவராஜிடம் தெரிவித்து விட்டார்.

 

கோமதியம்மாள் மகளிடம் “அவசரப்படாதே ரேணு! நீ இப்போ கோவத்துல முடிவெடுக்கிற… சம்பந்தப்பட்டவ சந்தியா தான்.. அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுக் கல்யாணப்பேச்சை ஆரம்பிக்கலாம்” என்று அறிவுறுத்த

 

ரேணுகா ஆவேசத்துடன் “இனிமே அவ கிட்ட கேக்குறதுக்கு என்ன இருக்கும்மா? சூரியாவே சொன்னானே மூனு வருச காதல்னு… மூனு வருசமா காதலிச்சவ கல்யாணம் மட்டும் வேண்டானா சொல்லப் போறா? அவ கிட்ட கேக்கிறதுக்கு எதுவும் இல்லை… ஏங்க நீங்க நாராயணன் அண்ணனுக்குப் போன் பண்ணி நமக்குச் சம்மதம்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட ரேவதியும் சதாசிவமும் வேறு வழியின்றி ரேணுகாவின் பேச்சுக்குத் தலையாட்டி வைத்தனர்.

 

கோமதியம்மாள் தான் தேவராஜிடம் “நீங்களாச்சும் அவசரப்படாம சந்தியா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சூரியா வீட்டுல பேசுங்க” என்று தண்மையாக உரைக்க

 

தேவராஜும் “அத்தை சொல்லுறது கரெக்ட் தான் ரேணு… நம்ம சந்தியா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு இந்த விஷயத்தை நாராயணன் சார் கிட்டச் சொல்லுவோம்” என்று முத்தாய்ப்பாய் கூறிவிட்டார்.

 

ரேணுகா வேறுவழியின்றி கணவரின் பேச்சுக்குச் செவிசாய்த்தவர் “சரிங்க! ஆனா இதுல உங்க மகள் எதுவும் ஏறுக்கு மாறா பண்ணி வச்சானா நான் பொறுமையை இழந்துடுவேன்… அதை அவ கிட்டச் சொல்லிவைங்க” என்று எச்சரிக்கும் தொனியில் கூறிவிட்டு அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார்.

 

ரேவதி தங்கையின் கோபத்தைக் கண்டு வருந்தியவராய் சதாசிவத்திடம் மனத்தாங்கலுடன் “இருந்தாலும் ரேணுவுக்கு இவ்ளோ கோவம் ஆகாதுங்க.. சந்து பாவங்க… சின்னப்பொண்ணு, ஏதோ சின்னப்பிள்ளைத்தனமா காதலிச்சிட்டானு அவளை இப்பிடி திட்டிருக்கக் கூடாது… படிச்சிட்டிருக்கப் பிள்ளைக்கு இப்போ கல்யாணம் அவசியமாங்க? அதுவும் இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ண வேண்டிய தேவையில்லையே!” என்று புலம்பித் தீர்த்துவிட்டார்.

 

கோமதியம்மாள் என்ற பெரியமனுசியோ எல்லாம் அந்த ஈசனின் செயல் என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடுத்து நடக்கவிருப்பதாவது யாருக்கும் மனவருத்தத்தைத் தராத நிகழ்வாக இருக்க வேண்டும் என்று வேண்டியபடி இரவைக் கழித்தார்.

 

ரேணுகாவின் அதட்டல் காரணமாக தங்களின் அறைக்குள் சென்ற சந்தியா தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட சுமித்ரா தங்கைக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.

 

“எல்லாம் சரியாயிடும் சந்து… நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே”

 

“எப்பிடி சரியாகும் சுமிக்கா? சூரியா பண்ணி வச்சக் காரியத்துக்கு அம்மா ரெண்டு விதமா முடிவெடுப்பாங்க.. ஒன்னு என்னோட படிப்பை மூட்டை கட்டச் சொல்லிட்டு மேலகரத்துக்கே கூட்டிட்டுப் போயிடுவாங்க.. இல்லைனா அவனுக்கே என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.. இதுல என்ன நடந்தாலும் அது என்னோட படிப்புக்குச் சமாதி கட்டுற மாதிரி தான்”

 

இவ்வாறு இரவு முழுவதும் பயமும், குழப்பமுமாய் அவள் தவித்து போய் எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் கண் அயரத் தொடங்கினாள். சுமித்ரா அவளுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழியாக அவளைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தவளும் சந்தியாவுடன் சேர்ந்து நித்ராலோகத்துக்குள் நுழைந்தவளாய் உறங்கி போனாள்.

 

அதே நேரம் சூரியாவின் வீட்டில் ஹேமா மூன்றாம் உலகப்போரையே வார்த்தைகளால் நடத்திக் கொண்டிருந்தார். அவரை அமைதிப்படுத்த நாராயணன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் புஸ்வாணமாகி விட்டது. வழக்கம் போல அவர் அந்தஸ்து பேதத்தைக் காரணமாகக் காட்டியிருந்தால் ஆரியாவே அவனது கேலிப்பேச்சால் அன்னையின் வாயை மூடவைத்திருப்பான்.

 

ஆனால் ஹேமாவின் கவலை இம்முறை நியாயமானதே என்பதால் நாராயணன் மற்றும் ஆரியாவின் வாதங்கள் அவர் முன் எடுபடவில்லை. சூரியா என்பவனோ அவரது ஆவேசம் மிகுந்த பேச்சுக்களை ஏதோ சினிமா பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவரை அமைதிப்படுத்தவோ அல்லது வழக்கம் போல அவருக்குப் பதிலடி கொடுக்கவோ அவனும் முயலவில்லை.

 

[the_ad id=”6605″]

 

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலாக ஹேமாவின் வாதங்கள் தொடர ஒரு கட்டத்தில் அனைவருக்குமே சலிப்பு தோன்றிவிட சூரியா சோபாவை விட்டு எழுந்தவன் “இனாஃப் மாம்! நான் உங்க கிட்ட சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக்கவானு பெர்மிசன் ஒன்னும் கேட்டு நிக்கலை… நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேனு ஜஸ்ட் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுனேன்.. உங்களுக்கு அவளைப் பிடிச்சாலும் பிடிக்காமப் போனாலும் இந்த கல்யாணம் நடக்கும்” என்று அவனது பிடியில் உறுதியாக இருந்தான்.

 

ஹேமா தான் மூச்சு பிடிக்க பேசிய அனைத்தும் இவனுக்குப் புரியவே இல்லையா என்ற அங்கலாய்ப்புடன் “சூரியா அவளை எனக்குப் பிடிக்காதுனோ, அவங்க நம்மளை விட ஸ்டேட்டஸ்ல கம்மினோ நான் இந்தக் கல்யாணத்தை வேண்டானு சொல்லலை… அந்தப் பொண்ணு சந்தியா அவளோட புரஃபசன் தான் முக்கியம்னு உன் கிட்டவே தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் ஏன் நீ அவளைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறடா?” என்று கேட்க

 

சூரியா தெளிவாக “ஐ லவ் ஹெர் அ லாட் மாம்.. தட்ஸ் ஒய்” என்று சொல்லி தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“பட் ஷீ டஸிண்ட் லவ் யூ… உனக்குப் புரியுதாடா? அவ நினைப்பு முழுக்க அவளோட ஸ்டடீஸ் அண்ட் புரஃபசன் மேல இருக்கிறப்போ அவளால உன்னை முழுமனசோட காதலிக்க முடியாது… சூரியா, தன்னோட கரியர் தான் முக்கியம்னு நினைக்கிற பொண்ணுக்கு குடும்பம், புருசன், குழந்தைங்கலாம் வெறும் சுமையா மட்டும் தான் தெரியுவாங்கடா…

 

நீ என்னை மதிக்கலைனாலும் உனக்குச் சரி எது, தப்பு எதுனு புரியவைக்கிற கடமை எனக்கு இருக்கு… ஒரு தாயா என்னோட மத்தக் கடமை எதையுமே நான் சரியாச் செய்யலை… ஆனா இது உன்னோட வாழ்க்கை.. இப்போவும் நான் அசட்டையா இருக்க முடியாது… உன் லைஃப் பார்ட்னரா நீ தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டேனா அதோட தண்டனையை நீ வாழ்க்கை முழுக்க அனுபவிக்கணும்… நீ நல்லா இருக்கணும்கிற எண்ணத்துல மட்டும் தான் நான் இந்தக் கல்யாணம் வேண்டானு சொல்லுறேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து அகன்று அவரது அறைக்குள் சென்றுவிட்டார்.

 

நாராயணன் இரு மகன்களையும் உறங்கச் செல்லுமாறு சொல்லிவிட்டு மனைவியைச் சமாதானப்படுத்த விரைந்தார்.

 

ஆரியா தந்தை சொன்னபடி அவனது அறைக்குள் சென்றுவிட, சூரியா நாளைக்கு நாள் எப்போது விடியும் என்ற ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தான்.

 

*******************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!