2.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:3,523
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 2.2
.
Advertisement
வாழ்க்கை நமக்கு அடுத்த நொடி என்ன வைத்திருக்கிறது என நாம் அறிந்து கொள்ள முடிவதில்லையே. ஓடி ஆடி களித்த கௌதமன் சக்கர நாற்காலியில் முடங்கிப் போவான் என அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான். ஆனால் அதுதான் நடந்தது.
சாதாரண பைக்கைத் திரும்பி கூட பார்க்காத கௌதமன், மருத்துவ சக்கர நாற்காலியில் முடங்கினான். ஸ்போர்ட்ஸ் கார் அல்லது லக்சுரி காரில் மட்டுமே பயணிக்கும் கௌதமன், அவன் சக்கர நாற்காலியை ஏற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்ட வேனில் பயணிக்கிறான். மலை, கடல், வான் என ஓடி, ஆடி, பறந்து வாழ்க்கையை உல்லாசமாகக் கழித்த கௌதமன் சன்னல் வழி வானையும் மண்ணையும் பார்க்கிறான்.
“ஸ்பைன் இஞ்சுரி கழுத்துக்கு கீழச் செயல்பட முடியாது” என்றனர் அவனுக்கு வைத்தியம் செய்த நரம்பியல் மற்றும் எலும்பியல் நிபுணர்கள்.
Advertisement
வாசுதேவன் போராட்டத்தை விடவே இல்லை. “சர்ஜரி உதவலாம்” என்றதும் அதையும் செய்து பார்த்தனர். ஆனால், அதற்கான சிகிச்சை கௌதமனை மிகுந்த வலிக்குள் தள்ளியது. வலியால் கதறிய மகனைக் கண்கொண்டு பெற்றவர்களால் பார்க்க முடியவில்லை.
Advertisement
“இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு… அதுதான்” என்ற மருத்துவர், மருந்து மாத்திரைகள் கொண்டு அவன் வலியை மட்டுப்படுத்தினர்.
“அவன் நடமாட ஒண்ணுமே பண்ண முடியாதா?” என அழுது நின்ற தோழியைச் சமாதானப் படுத்த மருத்துவனால் முடியவில்லை.
இப்படி அசைய முடியாது ஒரே இடத்தில் வலியோடு அமர்ந்திருப்பது கௌதமனை உடைத்துப் போட்டது. கண்களும் வாயும் மட்டுமே அவன் பேச்சு கேட்டது. பல நிறங்களில் பைக்கை வாங்கி வாழ்க்கையைக் கொண்டாடியவன் வாயில், பல நிறங்களில் மருந்தையும் மாத்திரைகளையும் திணித்தனர்.
Advertisement
உடலில் எதிர்ப்புச் சக்தி அவன் இன்ப நாள்கள் போல் போன இடம் தெரியாது மறைந்துவிட, சின்ன சிதோஷண மாற்றம் கூட அவனை மருத்துவமனைக்கு இழுத்து வந்துவிடுகிறது.
நான்கு நாள்களுக்கு முன் சென்னையில் நல்ல சீதோஷ்ணமாம். வானிலை மாற்றம் கௌதமன் முகத்தில் மென்மையைக் கொடுத்ததாம். அரை மணி நேரம் சாளரம் வழி முகத்தை வருடிய மழைச் சாரலை, ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்ற ஜானகியம்மாவின் பாடலை இளையராஜாவின் இசையோடு ரசித்தானாம்.
இவன் இளையராஜா இசையை எல்லாம் எப்பொழுதிலிருந்து ரசிக்க ஆரம்பித்தான் என்பது விக்ரமிற்கு இன்னும் தெரியவில்லை.
ஆசை கொண்டு ஈரக் காற்றை நுரையீரல் வரை இழுத்துச் சுவாசித்தானாம். இதோ… இன்று சுவாசிக்க முடியாது படுத்திருக்கிறான். இதைக் கொடுமை என்பதா? இல்லை இதற்கு வேறு பெயர்கள் உள்ளதா? தெரியவில்லையே.
உதவி இல்லாது நாமே சுவாசிப்பது ஒரு வரம் என்பதை நேரில் பார்க்கிறான் விக்ரம்.
“ஒரு ஹெல்ப் டா மச்சான்” என ஒருவன் வந்து நின்றால், கர்ணனாக மாறிவிடும் கௌதமனை அவன் செய்த ஈகை கூடவா காக்காது? அப்பன் சம்பாத்தியம் என்றாலுமே இவனால் வள்ளலாக மாற முடிந்ததே இல்லை. ஆனால் கௌதமன் அப்படி இல்லையே. அவன் கவச குண்டலத்தைக் கூட கொடுக்க யோசிக்க மாட்டானே.
“ஏன் டா தர்மம் தலை காக்கும்ன்னு சொன்னாங்களே” என இவன் ஒரு நாள் ஆதங்கப்பட, “அது தான் தலைய காத்திடுச்சே” என கௌதமன் விரக்தியாகச் சிரித்தான்.
அனைத்தையும் நினைத்துக் கொண்டே கௌதமனின் விரல்களைப் பிடித்திருந்த விக்கியால் அழுகையைக் கட்டுக்குள் வைக்கவே முடியவில்லை. அதிக நண்பர்கள் அவனுக்கில்லை. பேசுவான் பழகுவான். ஆனால் ஆன்மாவோடு கலந்த நட்பு என்றால் கௌதமன் மட்டுமே.
மற்ற இருவரும் நல்ல தோழர்கள் என்றாலும் கௌதமன் வேறு. தன்னையும் கௌதமனையும் அவனால் வேறாகப் பார்க்க முடியாது. இதோ… தான் அன்பு பாராட்டும் இருவர் மருத்துவ மனையில் இருக்க, விக்கியால் உண்மையிலுமே வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முடிந்து விட்டால்… முடிந்து விட்டது என்று தேற்றிக் கொள்ளலாம். ஆனால் இது வேறு… ஏதாவது செய்துவிட முடியாதா? ஏதேனும் ஓர் அதிசயம் நிகழ்ந்து விடாதா? என்ற தவிப்பு மிகவும் கொடுமையானது. அதுவும் கௌதமன் படுத்து கிடப்பதற்கு காரணகர்த்தாவே தான் தான் எனும் போதும் அவனும் என்ன செய்வான்?
கதவைத் திறந்து கொண்டு நர்ஸ் வரவும் அவரோடே வைஷாலியும் வாசுதேவனும் வந்தனர்.
“எப்படியாவது எழுந்து நடமாட செய்துடுங்க பா” எனத் தெய்வத்திடம் கெஞ்சுவது போல் விக்ரமின் கண்கள் இறைஞ்சின. ஆசை ஆசையாக வளர்த்த மகனை அப்படிப் பார்க்க அவருக்கும் மட்டும் என்ன இரும்பு இதயமா என்ன? கண்ணீர் வந்தது தகப்பனுக்கு.
“பிழைச்சுடுவான் விக்கி” என்றார். ஆனால் இங்கு வரும் முன் கௌதமன், “வாழ்ந்தது போதும். சிகிச்சை வேண்டாம்” என தன் முடிவைத் தெளிவாகக் கூறிவிட்டான். மகனை விட முடியாது, அவன் பேச்சைக் கேட்காது தூக்கி வந்துவிட்டனர்.
மகனின் வற்றிய கன்னத்தை மெல்ல வருடினார் வைஷாலி. ‘அம்மாட்ட வந்துடு கௌதமா’ என உள்ளுக்குள் ஜெபித்துக் கொண்டே இருந்தார். “ஐ லவ் யூ தி மோஸ்ட் கௌதமா…” என்றார்.
அவன் எழுந்து, “நோ வே மாம். ஐ லவ் யூ மோர்” என சண்டையிடவில்லை என்றதும் கண்ணீர் குளம் கட்டியது அன்னைக்கு. ஆனால் மகன் முன் அழுது அவனை அவர் என்றுமே பலவீனப்படுத்த மாட்டார்.
“முழிச்சுடுவான் இல்லங்க?” என்ற மனைவிக்கு, என்னவென்று பதில் கூறுவார் மனிதன்? முழித்து என் மகன் என்ன செய்யப் போகிறானாம்? மனம் ஓ என ஓலம் எழுப்பியது. மகன்… அவரின் ஒற்றை தவப்புதல்வன், சொல்லொண்ணா வேதனையில் நாள்களைக் கடத்துவதற்கு இறப்பே மேல் என நினைக்கவும் முடியவில்லை. நினைக்காது இருக்கவும் முடியவில்லை தகப்பனால்.
வெளியே சென்ற நர்ஸ் நுரையீரல் மருத்துவரோடு மீண்டும் உள்ளே வந்தாள். அவரோடு அவர்களது மருத்துவரும் வந்தார். செவிலி ரிப்போட்டை காட்டினாள். இவர் மருந்தின் வீரியத்தை மாற்றிக் கொடுக்கச் சொன்னார். செவிலி அவள் வேலையில் மும்முரமானாள்.
‘கௌதமன் ஓக்கே’ என்றபின்னும் உடல் கொதிக்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே காலையில் கண் விழித்தான்.
அன்னைக்கு உள்ளுக்குள் பயம் கவ்விக் கொள்ள, “என்ன அருண்? சரி ஆகிடுவான் தான?” என வைஷாலி தோழனைப் பார்க்க, ‘எதில் இருந்து?’ என்பது போல் பார்த்தார் மருத்துவர்.
‘அவ்வளவு தானா… வாழ்ந்தது போதுமா என் மகனுக்கு…’ என மகனின் முகத்தைப் பார்த்த வைஷாலி மகனின் உள்ளங்கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.
“கௌதமா, அம்மா வேண்டாமா கௌதமா… கண்ண திற கௌதமா. அம்மாவ தனியா விட்டுட்டு போயிடாத கௌதமா” தாய் மனம் அழுது கதறியது.
“போதும் மா நான் படர அவஸ்தை. என்னை போக விடுங்கமா” என மகன் கெஞ்சியதைக் கேட்காது, பிடிவாதமாகக் கொண்டு வந்து பிழைக்க வைத்தாயிற்று. ஆனாலும் மகனின் வலி… போராட்டம் தாள முடியவில்லை பெற்றவளால்.
இரவு முழுவதும் மகனின் கதகதப்பானக் கரத்தை பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்த வைஷாலி கட்டிலில் தலை சாய்த்து உறங்கியிருக்க, “எங்கயாது போய் தொல… போ. என் முகத்துல முழிச்சிடாத” என்ற சத்தம் அவரை உலுக்கி எழுப்பியது.
போதையில் பைக்கில் வித்தை காட்டிய போதெல்லாம் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தவன், நிதானமாக நீந்திய அன்று கடல் அலையால் பாறையில் இடிபட்டு நினைவிழந்தான் என்றால், தான் கூறிய வார்த்தை தான் மகனைச் சாய்த்து விட்டதோ எனத் தன்னையே இன்னும் எத்தனை நாள் நொந்துக் கொள்வாரோ வைஷாலி.
“எங்கயாது போய் தொல… போ.” ஒற்றை வரி… அவர் மொழிந்த ஒற்றை வரி அவரை ஆறு மாதமாகக் குத்திக் கிழிக்கிறதே. கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதே. முடியும் என்றால் நாம் கூட எத்தனை வார்த்தைகளை அள்ளி வாரி நெருப்பில் சுட்டெரித்திருப்போம்? அழத் தெம்பில்லாது மகனைப் பார்த்தே அமர்ந்திருந்தார் அன்னை. இப்படி பார்க்கவாவது மகன் இருக்கிறானே என எண்ணிக் கொண்டார் போலும்.
நாள் ஒன்று ஊர்ந்து முடிந்தது. வெளிச்சம் முகத்தில் பட, கௌதமன் கண் விழித்தான். ஆறு மாதங்களில் பிசியோ தெரபிஸ்டின் கடும் உழைப்பால், கால் விரல்களோடு கை விரல்களை மெல்ல அசைக்க முடிகிறது. கைக்குள் அடங்கி இருந்த அம்மாவின் கையை வருடினான். சட்டென விழித்தார் அன்னை.
வைஷாலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “முழிச்சுட்டியா கௌதமா?” என்றார் புன்னகை முகமாக.
“முழிச்சுட்டேனே மா” என விரக்தியாக வந்த மகனின் வறண்டச் சத்தம் ஒரு அன்னையை என்னவெல்லாம் செய்யுமோ அதை எல்லாம் கச்சிதமாகச் செய்தாலும் அதை எதையுமே முகத்தில் காட்டாது மகனின் கண் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்தார் அன்னை. “சீக்கிரம் சரி ஆகிடும்” என்றார் அவனுக்கும் அவருக்கும் சேர்த்து.
அன்று சீஃப் டாக்டர் வினாயகம் வந்து கௌதமனைப் பார்த்துச் சென்றார். அறைக்கு வெளியே அவருக்காக மூன்று ஜீவன்கள் காத்திருக்க, “ஒரு பிளட் டெஸ்ட் சொல்லி இருக்கேன். (Bronchoscopy) பிராங்க்கோ-ஸ்கோப்பி தேவை இருக்காதுன்னு பல்மொனாலஜிஸ்ட் (pulmonologist) நினைக்கிறார்.
கொடுத்திருக்க மெடிசின் போதும். ஹி இஸ் ஸ்டேபிள் நவ். ஃபீவர் இறங்கிடுச்சு. மூச்சு சீராக மூணு நாலு நாள் ஆகலாம். சரி ஆனதும் வீட்டுக்கு போயிடலாம்” எனக் கூறிப் பெற்றவர்கள் நெஞ்சில் மயில் இறகால் வருடிச் சென்றார்.
நாள்கள் வலியோடு கௌதமனுக்கு சென்றன. மருந்து மாத்திரை ஃபிசியோதெரப்பி என அவனுக்கான அதே ராஜ மருத்துவத்தை வலியோடே ஏற்றுக்கொண்டாலும் மனம் துவண்டு போனது. இன்னும் எவ்வளவு நாள் இந்த வலி?
மதியம் போல் வியர்க்க விருவிருக்க விக்ரம் வந்தான். ‘என்ன?’ என்பது போல் விக்ரமை பார்த்தான் கௌதமன். அவன் முகம் சற்றும் சரியில்லை. ஆனாலும் அதைச் சரி செய்தான் தோழனுக்காக.
“சொல்றேன்… நீ எப்படி இருக்க? இன்னைக்குப் பெட்டரா தெரியற?” என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நெற்றியில் கை வைத்துப் பார்த்தவன், “ப்பா… ஒரு வழியா 104டிகிரிய விட மனசு வந்துதே” என நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
விக்ரம் கரத்தில் இருந்த கட்டு காகிதங்களையும் ஜூஸ் டப்பாவையும் மேசையின் மீது வைக்க, கௌதமனின் பார்வை அதில் விழுந்தது.
“என் ஃப்ரெண்டுக்கு இங்க தான சர்ஜரி நடந்துது. அவனுக்கு கொடுத்த ரத்தத்த ரி-பிலேஸ் பண்ணனுமாம். எந்த குரூப்னாலும் ஓக்கேன்னு சொல்லவும் நானும் கொடுத்துட்டு வந்தேன்” எனக் கையை நீட்டி பிளாஸ்டரைக் காட்டினான்.
“நீயா?”
“ம்ம்ம்.. நானே தான். இப்போ எல்லாம் குடிக்கிறது இல்ல டா. நீ எழுந்து நடமாடுற வரை குடிக்கிறது இல்லன்னு என் ஆயா மேல சத்தியம் பண்ணி இருக்கேன்”
கௌதமன் முகத்தில் புன்னகை அரும்பியது. களைப்பாக இருந்த விக்ரமனின் வாய் ஓயவே இல்லை.
“ஜூஸ் வேணுமா?” எனக் கேட்டு கொண்டே ஜூசை எடுத்தவன் கைப்பட்டு அவன் வைத்த தாள்கள் கட்டு கீழே விழுந்தது.
“என்ன பேப்பர்ஸ்?”
“இதுவா… உயிரோட இருக்கும் போது, போனா போகுதேன்னு பிளட் கொடுத்தா, அந்த நர்ஸ் செத்த பிறகு என்னலாம் கொடுக்கலாம்ன்னு அறுத்து தள்ளிட்டா. ஆர்கன் டொனேஷன் பேப்பர்ஸ் தான்”
“’ஆர்கன்ஸ் கொடுத்தா எத்தனையோ பேர் உயிர்பிழைக்க முடியும். யோசிங்க’ன்னு இத படிக்க கொடுத்தா.”
“..”
“டேய் கௌதமா… உடம்புல பெரிய ஆர்கன் எதுன்னு கரெக்டா சொல்லு பாப்போம்”
“ஸ்கின்”
“அட பாவி… நீயும் என்னை மாதிரி லங்சுன்னு சொல்லுவேன்னு பார்த்தேன். எப்படி டா சரியா சொன்ன?”
“ஸ்கின் ஒன்னும் சும்மா இல்லியே…. அதுல வாட்டர், ஃபேட், பிரோட்டீன், மினரல்ஸ் எல்லாம் இருக்கு. உடம்ப வெளி உலகத்துட்ட இருந்து பாதுக்காக்குது. பாரு என்னை… இந்த தோல் இல்லாம இருந்திருந்தா என் உடம்பு எரிஞ்சு போயிருக்கும். பேசிகலா நம்ம உடம்போட ஃபர்ஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ் நம்ம தோல் தான் டா.”
“என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே அறிவாளிங்க டா” என சிலாகித்தவன், “ம்ம்ம்… சொன்னா அவளும்! தோல் தான் பெரிய ஆர்கனாம். எவனுக்கு தெரியும்! அப்பறம், என்ன என்ன ஆர்கன் கொடுக்கலாம் தெரியுமான்னு ஆரம்பிச்சவ, ஹார்ட், கிட்னி, லிவர், லங்க்ஸ், பாங்கிரியாஸ், இன்டஸ்டைன், தைமஸ்ன்னு அடுக்கிகிட்டே போறா.
“அந்த நர்ஸ்ச வந்து என்னை பாக்க சொல்லு” என்றான் கௌதமன்.
“உனக்கு எல்லாம் நல்லா தான டா இருக்கு. உனக்கு என்ன வேணும்?”
அவனிடம் ஒன்றும் கூறாது இவன் பார்க்க, “டேய்… நீ டொனேட் பண்ண சைன் பண்ண போறியா?” என்றான் கேள்வியாக.
“செத்தபிறகு மண்ணுக்குள்ள போக போற உடம்புக்கு எதுக்கு டா அடுத்தவன காப்பாத்த முடியற ஆர்கன்ஸ்?”
“சோ…?”
“என்ன சோ… நானே ஆசைப் பட்டா கூட உயிரோட இருக்கும் போது ஆர்கன்ஸ் ஹார்வஸ்ட் பண்ண மாட்டாங்க. அது இல்லீகல். சோ, நான் இறந்த பிறகு என்ன வேணுமோ எடுத்துக்கட்டும்”
“அது நடக்கும் போது பாப்போம்” என விக்ரம் அதைக் கடந்தாலும், கௌதமன் அடுத்து வந்த நாள்களை யோசனையில் கழித்தான். அன்று அவனைக் காண வந்த மருத்துவரிடம் தனிமையில் தன் முடிவைத் தீர்மானமாகக் கூறினான்.
வெளியே சென்ற மருத்துவர், “என் ரூமுக்கு வாங்க, தனியா பேசணும். பேஷியண்ட் முன்ன வேண்டாம்” என கிளம்பினார்.
மகன் சரி ஆகிவிட்டான். சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிடலாம். இன்னும் என்னவாம்? பயம் கவ்வியது தாயை. “எனக்குப் பயமா இருக்கு. நீங்கப் போங்க, நான் கௌதமன் கூடவே இருக்கேன்” என்ற அவர் பயம் வீண் போகவில்லை.
“உங்க மகன் (sarco capsule) சார்க்கோ கேப்சியூல் பத்தி விசாரிச்சார்” என்றார் மருத்துவர்.
“அப்படினா?” வாசுதேவன் விழித்தார்.
“ஒரு மனுஷ அளவு பெட்டியில… எப்படி சொல்ல? வலி இல்லாம தற்கொல பண்ணிக்கிற மெஷின். ஒரு பட்டன அழுத்தினா ஆக்சிஜனுக்கு பதிலா நைட்ரொஜன் வந்து பீஸ்ஃபுல் சாவ கொடுக்கிறது தான் சார்க்கோ கேப்சியூல். ஸ்விட்சர்லாந்தில இருக்கு. அதுமாதிரி இண்டியால லீகலா சுயிசைட் பண்ண என்ன வழின்னு கேட்டார்.”
கீழ் உதட்டைக் கடித்து தன்னை அமைதிப்படுத்த விழைந்த வாசுதேவனால் அவர் இரத்தத்தின் சுவையை உணர முடிந்ததா எனத் தெரியவில்லை. அவர் கடிப்பதை நிறுத்தவே இல்லை.
“கௌதமன் இப்போ ஸ்டேபிள். ரெண்டு நாள்ல வீட்டுக்கு கூட்டி போயிடலாம்.” என கூறிய அதே மருத்துவர், “எங்களால் ஆன எல்லா முயற்சியும் செய்துட்டோம். இன்னும் செய்யறதுக்கு ஒண்ணும் இல்ல. இதுக்கு மேல உடல் நிலை முன்னேற வழியே இல்ல. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு பாகமா செயல் இழக்கும். இப்போ இருக்க வலியோட இன்னும் வலிய தான் உங்க மகன் பார்க்க வேண்டி வரும்” எனக் கூற, ஒரு தகப்பனாக ஒன்றும் செய்துவிட முடியவில்லையே என நொறுங்கிப் போய் அமர்ந்திருந்தார் வாசுதேவன்.
“லீகலா கோர்ட் மூலமா அவர் உயிர எடுக்க கேட்கிறார். காப்பாத்த முடியற ஆர்கன்ஸ டொனேட் பண்றதா சொல்றார்” என்ற மருத்துவருக்கும் அதை உரைக்க அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆறு மாதமாக இவனுக்கு இவர் தானே மருத்துவம் பார்க்கிறார்.
பார்த்தாயிற்று… வெளியூரில் மட்டும் அல்லாது வெளி நாட்டில் இருந்தும் பல மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்தாயிற்று. பணம் என்ற ஒன்று இருந்ததால், அதை வாரி இறைத்தாயிற்று.
வந்தவர்கள் எல்லாம் போதும் போதும் எனும் அளவிற்கு மகனின் தலையை… கழுத்தை… முதுகை என அவனைப் படாத பாடு படுத்தியாயிற்று. ஒருவராலும் மகனை நிற்க வைக்க முடியவில்லை.
அமர்ந்தே இருந்தாலும் வலி இல்லாது இருந்தாலாவது பரவாயில்லை. மகனோ தினம் ஒரு வலியில் துடிக்கிறான். இது… மருத்துவர் கூறிய இது… எதிர்பார்த்த முடிவென்றாலும் சகிக்க முடியவில்லை தகப்பனால்.
வழிய ஆரம்பித்த கண்ணீரைத் தகப்பனுக்கு நிறுத்த வழி தெரியவில்லை. “எங்க உயிரே அவன் தான் டாக்டர். அவன் இல்லாத உலகம்… ப்ச்! என்னால முடிஞ்சா அவன் வலிய எல்லாம் நானே வாங்கிப்பேன்.”
தழுதழுக்கும் தொண்டையைக் கனைத்த பின்னும் பேச முடியவில்லை. அவர் மகனை… அவரின் உயிர் மூச்சை முடித்துவிட எப்படி அவரால் கூறமுடியும்? தொண்டை அடைக்க மீண்டும் முட்டிக் கொண்டு வந்தது துக்கப் பந்து. தொண்டையை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டார் தகப்பன்.
“அவனுக்கு ஒரு அமைதியான வலி இல்லாத உறக்கத்த கொடுக்க முடியும்ன்னா… கொடுத்திடலாம்” என்றவர் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டாலும், உடல் குலுங்குவது நிற்கவே இல்லை.
யோசனையோடே பிடரியை நன்கு அழுத்தி தேய்த்து, “ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என வெளியே சென்ற மருத்துவர் பத்து நிமிடங்களில் வந்தார்.
நடுங்கும் உடலும், சிவந்த கண்களுமாக சூனியத்தை வெறித்து அமர்ந்திருந்தார் வாசுதேவன். ஏதோ அதிசயம் என்கிறார்களே… அதில் ஏதாவது ஒன்றாவது தன் மகனுக்கு நடந்து விடாதா?
வாசுதேவன் கரம் பற்றி அமர்ந்திருந்த விக்ரமை பார்த்தார் மருத்துவர்.
“இவனும் என் மகன் தான். சொல்லுங்க டாக்டர்” என்றார் வாசுதேவன்.
மருத்துவர் வாய் திறக்கும் முன், “ஏன் கௌதமனுக்கு ஸ்பைன் டிரான்ஸ்பிளான்ட் கன்சிடர் பண்ண கூடாது?” என விக்ரம் கேட்டான்.
“அதுக்கு முதல்ல இவர் டிஷ்யூ, பிளட் குரூப், இவர் பாடி ஃபிரேம்… இப்படி பலதும் மேச் ஆகர டோனர் கிடைக்கணும்!”
“கிடைச்சா, கௌதமன காப்பாத்திடலாம் தான?”
“கை, கால், ஹார்ட் மாதிரி எல்லாம் இது ஈசி இல்ல! முதுகு தண்டோட முழு நீளத்துக்கும் டெலிகேட் நெர்வ்ஸ்ச ரிகனக்ட் பண்றது சாத்தியம் இல்ல. அப்படியே அத நாம செய்தாலும் உடம்பு அத ரிஜெக்ட் பண்ண வாய்ப்புகள் அதிகம்.
ஸ்பனல் கார்ட் ஹீலிங் டைம் ரொம்ப அதிகம். ஹீலிங் பிராசஸ் ரொம்ப ரொம்ப வலி மிகுந்தது. இப்போ உங்க ஃப்ரெண்ட் படற கஷ்டம் எல்லாம் ஒன்னுமே இல்லன்னு தோன்ற அளவுக்கு இருக்கும் வலி! எல்லாம் முடிஞ்ச பின்னலையும் என்ன வேணும்னாலும் நடக்கலாம்… அதாவது அவர் நிலம இப்படியே கட்டில்ல இருக்கதா கூட முடியலாம்”
“அப்போ அவ்வளவு தானா?”
“கடைசியா ஒரே ஒரு முயற்சி பண்ணலாம். டாக்டர் அகத்தாகிளீஸ், இன்னைய நிலைல நியூரோ அண்ட் ஆர்த்தோபீடிக் ஸ்பைன் சர்ஜரில கடவுள். முதுகு தண்டு… மூளை… இதுல எல்லாம் அடிபட்டு, பிழைக்க முடியவே முடியாதுன்னு இருந்த சில பேஷியன்ட்ச எழுந்து நடக்க வச்சிருக்கார். இப்போ டிரான்ஸ்பிளான்ட் பத்தின ரிசர்ச் பண்ணிட்டு இருக்கார். நெதர்லான்ட்ல பெரிய ரிசர்ச் லேப் வச்சிருக்கார். இப்போ எல்லாம் அவர் அதுலயே மூழ்கிட்டனால, தனியா பேஷியன்ச பார்க்கிறது இல்ல.
டெல்லில மிக பெரிய ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ் மூணு நாளா நடந்திட்டு இருக்கு. இன்னைக்கு ஈவினிங்கோட முடியுது. பல நாட்டுல இருக்க பெரிய பெரிய சர்ஜன்ஸ் எல்லாம் வந்திருக்காங்க. நைட் அவங்களுக்கு எல்லாம் பெரிய பார்டி இருக்கு… முடிஞ்சதும், நாளைக்கு அவங்க அவங்க ஊர பார்த்து கிளம்பிடுவாங்க.
நம்ம இத நமக்கு சாதகமா யூஸ் பண்ணலாம். ஒரு தரம் மிஸ்டர் கௌதமன டாக்டர் அகத்தாகிளீசும் அவரோட டீமும் பார்த்தாங்கனா ஏதாவது வழி இருந்தா சொல்லுவாங்க. வரவைக்க முடியுமா?” என்றார்.
“அவங்க மட்டும் போதுமா?” என்ற வாசுதேவனைத் திருப்தியுடன் பார்த்தார் அந்த மருத்துமனையின் சீஃப் சர்ஜன் வினாயகம்.