Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 9

அத்தியாயம் 9

அந்த பேருந்தை நோக்கி நடக்கையில், அசோக் வைஷ்ணவியைப் பார்க்கும் பொழுதே அவளது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது. அவளது கோபத்தையும் முறைப்பையும் ரசித்துக் கொண்டே வந்து வைஷ்ணவியின் அருகில் அமர்ந்தான் அசோக்.

“என்னாச்சு? எத்தனை மணிக்கு போகும் இந்த பஸ்?”

அந்த கேள்விக்கு குரலை செருமிக் கொண்டு பதிலளித்தான் அசோக்.



Advertisement

“காலையில பத்து மணிக்கு”

அவனது பதிலைக் கேட்டதும் கோபம் கொண்டு அவன் புறம் திரும்பியவள் அவனை முறைத்துக் கொண்டேக் கேட்டாள்.

“என்ன விளையாடறீயா? காலையில பதினொரு மணிக்கு ஃபோர்ட் பிளேர் ல இருக்கணும்”

Advertisement

“அதான் ஒரு மணி நேரம் இருக்குல”

Advertisement

அவனது பேச்சு நிச்சயம் அலட்டிக் கொள்ளாதக் குரலில் தான் இருக்கும் என்பதால் வைஷ்ணவி நடப்பது யாவும் இனி கடக்கும் இரவின் கையில் என்று நினைத்தவளாக அமைதியாக இருக்கையில் சாய்ந்தாள்.

சிறிது நேரத்தில் அந்த பேருந்து குண்டுக் குழியுமான ரோட்டில் உருளத் தொடங்கியது. இதுவரை சென்ற பயணத்தின் அசதியில் இருக்க சரியான நேரத்திற்கு போய் விடுவோமா என்ற பதட்டம், அவள் விழிகளை மூடக் கூட அனுமதிக்கவில்லை.

அசோக் ஒன்றும் பேசாதே தனது காதுகளில் ப்ளூடூத் மாட்டிக் கொண்டு பாடலைக் கேட்கத் துவங்க அவன் கழுத்தின் மேலே கைகளைக் கொண்டு போய் கழுத்தை நெருக்கி மிரட்டலாம் என தோன்றியது வைஷ்ணவிக்கு.

Advertisement

‘கொலைகாரா இப்பதான் மலை மேல ஏறி, கீழே வந்து அடிபட்டு இப்ப‌ தூங்கக் கூட முடியாம’

அவள் பெருமூச்சு விட்டாள்.

‘எதாவது சொன்னா இந்த டிராவல்க்கும் உனக்கு தகுதியே இல்லைன்னு சொல்லுவான் இவன் கிட்ட பேசவும் முடியல’

அவள் கோபமாக அமர்ந்திருக்க அசோக் அவளிடம் திரும்பி ப்ளூடூத்தை கழட்டிப் பேசினான்.

“ஏதாவது சொன்னியா?”

“ஆமா சொன்னேன்!” வைஷ்ணவி வார்த்தைகளைத் துப்பினாள்.

“என்ன சொன்ன?” அசோக் மீண்டும் வினவ,

“ம்.. காத்து வரல அதனால கொஞ்சம் ஜன்னலை திறந்து விடு னு சொன்னேன்”

அவள் சொல்ல அசோக் அவள் புறம் இருந்த ஜன்னலை மெதுவாக திறந்து விட்டுட்டு அமைதியாக மீண்டும் பாட்டு கேட்கத் தொடங்கினான்.

அருகில் ஏதாவது இருந்தால் தலையை முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது வைஷ்ணவிக்கு.

‘உனக்கு இந்த சவால் எல்லாம் தேவையா? அவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டனு சொன்னான் கேட்டீயா? போய் ஒவ்வொரு இடமா பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கு.ஆனா போய்ட்டு வர்ற டயர்டட்நெஸ்! பேசாம நான் பாட்டுக்கு கோவால ரெண்டு வாரம் தங்கி இருந்துட்டு நீட்டா சுவிட்சர்லாந்து போய் இருக்கலாம்! இங்க கரடு முரடான சாலையில டொங் டொங்குனு’

அவள் நினைக்க நினைக்கவே குழியில் இறங்கி வண்டி மேலெழும்ப வைஷ்ணவிக்கு தூக்கிவாரிப் போட்டது.

பேருந்து குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் அது தூக்கித் தூக்கிப் போட வைஷ்ணவி தனது கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள். உசுரோட போய் சேருவோமா என்பது போல் அசோக்கைப் பார்க்க அசோக் அவளது கைகளைப் பற்றி அமைதலாக்கினான்.

*பயமா இருக்கா?”

“பயம் எல்லாம் இல்லை அப்படி இப்படி வண்டி உருண்டு விழுந்துருச்சுன்னா நீ மட்டும் தப்பிச்சிரக் கூடாதில்ல”

வைஷ்ணவி சொல்ல அசோக் அவளது கரங்களைப் பற்றி

“செத்தேப் போனாலும் உன்னைத் தனியா விட மாட்டேன் போதுமா?”

காதலோடு சொல்லப்படுகிற வார்த்தைகளாக ஒலித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் இந்த வார்த்தைகள். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் புரிதல் தெளிவுப் பெறவே பெரும்பாடாக இருந்தது. இதில் எங்கிருந்து உள்ளிருக்கும் காதல் உடன் வெளிவந்து விடப் போகிறது?

பேருந்து மாயாபந்தர் வந்ததும் இரவு உணவு உட்கொள்ள அவளை எழுப்பினான் அசோக். வைஷ்ணவி வேண்டாம் என மறுக்கவே அசோக் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பழச்சாறு அருந்த வைத்து கூட்டி வந்தான். மாயாபந்தரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பேருந்து நள்ளிரவு தாண்டி பழுது ஏற்பட்டு நட்டநடுக் காட்டில் நின்றது.

அசோக் படீர் என்ற சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எழும்பியவன் தன் தோள் சாய்ந்து இருந்த வைஷ்ணவியை மெல்ல நகர்த்தி கீழே இறங்கினான். சுற்றியும் இருட்டாக இருக்க பேருந்து ஓட்டுநர் இறங்கி வண்டியின் பழுதைப் பார்க்க அந்த பேருந்து நின்றிருந்தது அந்தமான் டிரங்க் ரோடு.

அந்த பேருந்தில் இருந்த ஒரு சில ஆண்கள் கீழிறங்க ஒரு உள்ளூர் நடுத்தர வயது மனிதர் வாய்விட்டு சலித்துக் கொண்டார்.

“போச்சு! காலையில கடைத் திறக்கணும் னு இவனுக பஸ்ல வந்தது தப்பா போச்சு”

அசோக் பேருந்தில் இருந்த வைஷ்ணவியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவரிடம் பேசினான்.

“நீங்க தமிழா”

“ஆமாம் தம்பி இங்க வந்து செட்டிலாகி பல வருசம் ஆச்சு ஃபோர்ட் பிளேர் ல கடைத் தொழில்னு போகுது”

அவர் பதில் பேச அசோக் நடக்கும் பிரச்சினையை வினவினான்.

“என்ன இந்த பஸ் னு சொன்னீங்க இந்த **எஸ் பஸ்ல என்ன பிரச்சினை?”

“இந்த பிரைவேட் பஸ் எல்லாம் அடிக்கடி ரிப்பெர் ஆகி நிக்கும் தம்பி. ஏரியா அப்படி ஆனா இவனுக நைட்‌ ட்ரிப் போடும் போதே நினைச்சேன். இனி பெர்ரி கிடைச்சு ரங்கட் போய் கஷ்டம் தான் மணி ஒன்னாயிடும்”

அவர் சலித்துக் கொள்ள அசோக் சிறிது அச்சத்துடனே தன் சீனிப் பட்டாசு இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாளா எனப் பார்த்தான். உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அந்தமான் ரோடு சுற்றிலும் மரம் சூழ்ந்த இருள் பயப்படுத்தத் தான் செய்தது. வண்டிக்குள் சலசலப்பு எழ போச்சு என அசோக் தலை மீது‌ வைக்க அவனது சீனிப் பட்டாசு தூக்கம் கலைந்து எழுந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

கீழே வந்தவள் கண்களைத் தேய்த்துக் கொண்டே அசோக்கிடம் கேட்டாள்.

“என்னாச்சு?”

“ஹெவி டிராவிக் ல ரோட்டை ப்ளாக் பண்ணிட்டாங்களாம்”

அசோக் சொல்ல ஓ என்று சொல்லி தூக்கக் கலக்கத்திலேயே பேருந்தை நோக்கி நடந்தவள் அவனிடம் திரும்பினாள்.

“ஏ இந்த பஸ்ஸே இன்னைக்கு ஒரு நாள் தான் நைட் டிராவல் ஆகுது இதில் எப்படி டிராவிக்”

வைஷ்ணவி தலையை சிலுப்பிக் கொண்டு அவனை முறைக்க அசோக் சிரித்துக் கொண்டேப் பேசினான்.

“பரவாயில்லை வெடுக் வெடுக் னு திருப்பி சிலிர்த்துக்கற தலையில கொஞ்சூண்டு மூளை இருக்கு பாரேன்”

“ஏ அசோக் எரிச்சல் ஏத்தாதே! இப்ப வண்டி எத்தனை மணிக்குத் தான் கிளம்பும்! நாம கரெக்ட் டைமுக்கு ஃபோர்ட் பிளேர் போக முடியுமா?”

அவளது குரல் கோபத்தில் தொடங்கி பதட்டத்தில் முடிந்தது.

“இதோ சக்கரத்துக்கிட்ட ஆராய்ச்சிப் பண்ணிட்டு இருக்கிற டிரைவரைக் கேட்டாத் தான் தெரியும்”

அவன் சொல்ல வைஷ்ணவி தலை மேல் விரல்களை வைத்து அழுத்திக் கொண்டே நடக்கும் சூழலை நிதானிக்க முயன்றாள்.

அந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தின் அடியில் ஒளிவிளக்கில் எதையோ கழட்டிக் கொண்டு இருக்க நடத்துனர் எச்சரிக்கை குரலில் பேசினார்.

“இப்ப இருக்கிற இடம் அந்தமான் டிரங்க் ரோடு. செல்ஃபோன் கேமரா செக் பண்ற செக் போஸ்ட் கொஞ்சம் தள்ளித் தான் இருக்கு பாரஸ்ட் ரிசர்வ் ஏரியா இன்னொரு வண்டி வந்துட்டு இருக்கு அதில நீங்க எல்லாரும் போகலாம். அதுவரைக்கும் இங்க தான் வெய்ட் பண்ணணும். தனியா ரொம்ப தூரம் பேகாதீங்க”

அவர் சொல்லிச் செல்ல அசோக் அந்த பேருந்தின் மேல் ஒரு காலை ஊன்றி சாய்ந்து கையை மடக்கி வைத்து சுற்றிலும் இருந்த மரங்களை அம்புலியின் ஒளியில் கண்டுக் கொண்டு இருந்தான். வைஷ்ணவி அவன் அருகில் வந்தாள்.

“இங்க சிங்கம் புலி எல்லாம் இருக்கா என்ன? இப்படி பயப்படுத்தறாங்க”

வைஷ்ணவி கேட்க,

“ஒண்ணும் கவலைப்படாதே! அப்படியே இருந்தாலும் கோபத்தில நீ தலையை சிலுப்பி என்னைப் பார்ப்ப பாரு அது மாதிரி பாரு! பயத்தில அது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிரும்”

அவன் சொல்ல வைஷ்ணவி கோபத்தில் முறைத்தவள் சுளீர் என்று அடிவயிறு வலிக்க வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

“ஏ என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல இங்க ஹோட்டல் ரூம்ஸ் இருக்கா?”

அவளது கேள்வியில் அசோக் புல்லரிப்பது போல் கைகால்களைத் தேய்க்க வைஷ்ணவி அவனை கேள்வியாக நோக்கினாள். அம்புலியின் ஒளி ஒரளவு முகத்தின் உணர்வுகளை வாசிக்க வகை செய்தது.

“நட்ட நடு காடு ரோட்டில தள்ளி மேடுல வண்டி ரிப்பேர் ஆகி இருக்கு. இன்னொரு வண்டி இங்க வரவே மூணு மணி நேரமாகும். இங்க ஹோட்டல் ரூம் எங்க னு கேட்கிற பாரு உன் அறிவை நினைச்சு எனக்கு புல்லரிச்சு போயிருச்சு. உன்னைச் சொல்லித் தப்பில்ல நீ இந்த மாதிரி பேசாம இருந்தாத் தான் ஆச்சரியம்”

அசோக் அவளைக் கேலிப் பேசவும் வைஷ்ணவி கத்தினாள்.

“ஏ எருமைமாடு”

அசோக் அவளது அழைப்பில் திரும்பி பின்னே யாராவது இருக்கிறீர்களா எனப் பார்க்க வைஷ்ணவி மேலும் கத்தினாள்.

“வயிறு வலிக்குது. ரொம்ப நேரமா யூரின் அடக்கி வைச்சுக்க முடியல”

அவளது முகவாட்டத்தைக் கண்டவன் சுற்றி முற்றிப் பார்த்து விட்டுப் பேசினான்.

“அறிவில்லையா வைஷூ! யூரினை அடக்கி வைச்சேனா யூரினரி இன்வெக்சன், கிட்னி பிராப்ளம் வரைக்கும் வரும்”

அசோக் சொல்லி விட்டு பேருந்துக்குள் சென்றவன் சிறிது நேரத்தில் கைகளில் ஒரு கைப்பை போன்ற ஒன்றை எடுத்து வந்தான்.

வா என அவளது கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றவன் சிறு புதர் தாண்டி உள்ளே சென்று அந்த கைப்பையை விரிக்க அது டென்ட் போல ஒரு உடனடி கழிப்பறை ஆக சுற்றிலும் மழைக்காகிதம் சுவராக எழும்ப உள்ளே செல்ல ஜிப் வசதியுடன் ஒரு கதவு போன்ற நெகிழித் தாள் இருந்தது.

வைஷ்ணவி அதைக் கண்டதும் நிம்மதி அடைந்தாலும் இன்னும் பேருந்தும் மனிதர்களும் கண்ணுக்குத் தெரிய உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள். அசோக் அவளது தயக்கத்தைக் கண்டுக் கேட்டான்.

“என்ன?”

“இன்னும் பஸ் ஆட்கள் எல்லாம் தெரியறாங்க”

அசோக் பெருமூச்சு விட்டு இன்னும் சற்றுத் தள்ளி சென்று டென்ட் ஐ மீண்டும் அமைத்தான்.

திறந்தவெளி கழிப்பறை என்பதாலேயே சிறுநீரை அடக்கி வந்திருந்த வைஷ்ணவி அவன் கொண்டு வந்த டென்ட் ஐக் கண்டதும் மிகுந்த மகிழ்வாக அதனுள் சென்று இயற்கை உபாதையைக் கழிக்க அசோக்கின் சிரிப்பு சத்தம் கேட்டது.

“ஏன் வைஷூ! ஆளுங்க தெரியறாங்க பஸ் தெரியுதுனு வெட்கப்பட்டு வந்தியே என் கூட தனியா டென்ட் எடுத்துட்டு இவ்வளோ தூரம் உள்ளே வந்திருக்க இப்ப அவங்க எல்லாம் உன்னை என்ன நினைப்பாங்க னு நெனைச்சேன் சிரிச்சேன்” அசோக் சொல்ல வைஷ்ணவி ஏ எனக் கத்த அசோக் அவளை அமர்த்தினான்.

“ஏ கத்தாதே இது காடு”

அசோக் சொல்லி அவள் வெளிவந்தப் பின் அவளிடம் தன் கைப்பேசியில் ஒளிவிளக்கை இயக்கி அவளது கைகளில் கொடுத்தான். அதன் பின் தன்னுடைய டென்ட்ஐ அலைபேசி விளக்கொளியில் மடிக்க வைஷ்ணவி ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினாள். அசோக் சட்டென்று அவளது இடையோடு அணைத்து தன் புறம் திரும்ப வைஷ்ணவி நடக்கும் விபரீதம் புரிந்து வாய் திறந்து கத்த முயல தனது மறுகையால் அவளது வாயை மூடினான். வைஷ்ணவி திமிறி அவனது கைகளைக் கடிக்க அசோக் அவளது காதில் சீறினான் அசோக்.

“ஏ சீனிப் பட்டாசு! எதுக்கு திமிர்ற? உன்னை காப்பாத்திக்கறேன் னு என்னை அசிங்கப்படுத்தாதே! அமைதியா இரு! அங்கத் திரும்பி பாரு”

அசோக் கைக் காட்டிய திசையில் காட்டுப் பன்றியின் ஊசி ஊசியான‌ தலை மயிர் தெரிய அதன் வாயின் இருபுறமும் மேல் நின்ற பற்கள் இருட்டில் படுப்பயங்கரமாகத் தெரிந்தது. வைஷ்ணவி விக்கித்து போய் நிற்க அவளது கண்கள் மேலும் ஒரு அதிர்ச்சிக் காட்சியில் நிலைக்குத்தி நின்றது. அசோக் இவள் யாரைப் பார்த்து அதிரிச்சியாகிறாள் எனத் திரும்பிப் பார்க்க அங்கே ஜார்வா பழங்குடியின ஆண்கள் இருவர் கையில் வில் அம்புடன் நின்றிருந்தனர்.

ஐம்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியின மக்களின் தூய்மையான வாழ்வியலின் எல்லையை நவீன மனிதனின் சுயநலக் கோரம் வெகுவாக சுருக்கியிருந்தது.

இந்திய உச்ச நீதி மன்றம் 2014 ம் ஜார்வா பழங்குடியின மக்களின் வாழ்விடத்தின் நடுவில் இருக்கும் இந்த டிரங்க் சாலையை உபயோகிக்கக் கூடாது என தீர்ப்பிட்டும் இந்த சாலை உபயோகத்தில் தான் இருந்தது.

முக்கியமாக சவாரி வண்டிகளில் மிருகங்களைப் பார்வையிடுவது போல் இந்த மனிதர்களைப் பார்வையிடச் செல்வது நாகரீகம் யாரிடம் இருக்கிறது என்பதைக் கேள்விக் குறியாக்கும் விடயம்.

அசோக் தன் கண் முன் தற்போதைய ஆப்ரிக்க பழங்குடியினர் போல் காட்சியளித்த இரு ஆண்களைக் காண அவர்கள் வில்லை கையில் எடுத்துக் கொண்டனர்.

வைஷ்ணவிக்கு உயிரின் மேலிருந்த ஆசையை விட்டுப் போகும் அளவுக்குத் திகிலான காட்சியாக இருந்தது அது.

‘கொஞ்சம் ரோசப்படாமல் இருந்து இருந்தால் உயிரோடவாவது இருந்திருக்கலாம். வந்தே ஆவேன் என அடம் பிடித்து இப்படி காட்டுப் பன்றியின் கையிலோ காட்டுவாசிகள் வில்லிலோ உயிர்ப் போக வேண்டும் என்று எழுதியிருக்கிறதா ஆண்டவா’

அவள் பயத்தில் மிடறு விழுங்க இரு வில் சீறிப் பாய்ந்த ஒலி மட்டும் கேட்க சில நொடிகளில் காட்டுப் பன்றியின் ஓலம் அந்த இடத்தை நிரப்பியது.

அந்த இரு ஆண்கள் அவர்கள் இருந்த புதர் தாண்டி நடக்கையில் அசோக்கைக் கண்டு தங்கள் மொழியில் ஏதோ பேசி கடந்து சென்றனர்.

வைஷ்ணவி நீண்ட பெருமூச்சு விட அவளது உடல் அவனது உடலில் உரசியதும் அசோக் சட்டென்று விலகி அவளை நேராக நிறுத்தினான். வைஷ்ணவியின் கண்கள் காட்டுப்பன்றி நின்ற இடத்தில் இருக்க அங்கே ஆதிவாசிகள் அந்த பன்றியை எடுத்து சுமந்து காடுகளுக்குள் சென்றனர்.

“ஏ வைஷூ!”

அசோக் அவளைத் தட்ட வைஷ்ணவி கண்களில் நீருடன் பேசினாள்.

“அந்த பன்னி பாவம்ல” வைஷ்ணவி கேட்க

“பாவம் தான் மதியம் நீ சாப்பிட்ட சிக்கன் நண்டு எல்லாம் பாவம் தான். கொஞ்ச நேரத்தில நம்மள கொன்று இருக்கும் அது பாவமா பாவம்”

என்று பதில் பேசிக் கொண்டே அசோக் அவளது கரங்களைப் பிடித்து புதர்கள் தாண்டி பேருந்து இருந்த திசை நோக்கி நடக்க வைஷ்ணவி வாய் விட்டுத் திட்டினாள்.

“சரியான கொலைக்காரக் கொடூரன் நீ”

அவள் பேச

“உன்னை எல்லாம் அந்த பன்னிக்கு டின்னரா போனு தள்ளி விட்ருக்கணும் பாவம் பார்த்துக் காப்பாத்தி கூட்டிட்டு வந்தா இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ”

அசோக் வைஷ்ணவி பேசிக் கொண்டு வர மாற்றுப் பேருந்து வந்திருந்தது. மணி அதிகாலை நான்கு ஆகியிருந்தது. பின் வண்டி கிளம்பி ரங்கட் நோக்கி பயணமானது. ஜார்வா பாதுகாக்கப்பட்ட எல்லை சோதனை சாவடியில் நடத்துனர் மீண்டும் பேசினார். திகிலிப்பூர் வருகையில் கடல் மார்க்கமாக வந்ததால் இது புது அனுபவமாக இருந்தது வைஷ்ணவிக்கு.

“இந்த பகுதியில் நீங்க ஆதிவாசிகளை பார்க்கலாம் ஆனா அவங்க கிட்ட பேசவோ ஏதாவது கொடுக்கவும் முயற்சிக்கக் கூடாது உங்க உயிர் வரைக்கும் ஆபத்து வரலாம் அமைதியா அவங்க இருக்கிற இடங்களை பார்க்கும்போது பாத்துக்கோங்க புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது”

அவர்கள் எச்சரிக்கப் பட வைஷ்ணவி திரும்பி அசோக்கை பார்த்தாள். அவர்கள் சொன்னது போலவே சில நிமிட பயணத்தில் ஜார்வா பழங்குடியின பெண்கள் குழந்தைகள் சாலையோரம் தென்பட்டனர். வைஷ்ணவி ஆர்வமாக அவர்களைப் பார்க்கையில் மெலிதான குற்ற உணர்வு வந்துப் போனது நம்மை போன்ற மனிதர்களை அரிதானவர்கள் என்ற பெயரில் வனவிலங்கு பூங்காவில் காணும் மிருகங்களைப் போல் வேடிக்கைப் பார்ப்பது அம்மனிதர்கள் மீது செலுத்தும் வன்முறை தானே. வேறுப்பட்டு நிற்பதே சரிசமமாக உணரத் தடுக்கும் கருதுகோளா என்ன? நாகரீக மனிதன் என்ற பெயர் கைக்கொட்டிச் சிரித்தது.

அந்த பாதுகாக்கப்பட்ட எல்லையைக் கடந்ததும் வழியில் நிம்புதேரா தாண்டி சாலையோரக் கடையில் வண்டி நிற்க சூடான பஜ்ஜி டீ வாங்கி வந்தான் அசோக். இருள் மெல்ல விலகியிருக்க வைஷ்ணவி கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு பெருமூச்செறிந்தாள். நிச்சயம் பதினொரு மணிக்கு ஃபோர்ட் ப்ளேர் செல்ல வாய்ப்பு இல்லை அவள் கோபத்தோடு திரும்ப வாங்கி வந்த பஜ்ஜி டீயை ரசித்து உண்டுக் கொண்டு இருந்தான் அசோக்.

கவிதை

கொட்டி விடும் உணர்வுகளை

எல்லாம் உயிர் நீர் தாங்கும் நிலமாக

வெகுவாகவேத் தாங்கிக் கொள்ளும்

காதல்!

அன்புக்கு வறண்டு நிற்கையில்

இதயத்தில் துளையிட்டேனும்

எடுத்துக் கொடுக்கும் காதல்!

எல்லாருக்குமே இங்கே நிச்சயம்

ஒரு சுமைத் தாங்கி காதல்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!