Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் பேசிடு கண்மணி

காதல் பேசிடு கண்மணி – 1 (1)

மழை பூந்தூறலாய் பொழிந்து கொண்டிருந்த இரவு நேரம். இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த இரவின் ஏகாந்தத்தை ரசித்தபடியே நிமிர்ந்தாள் நட்சத்திரா. அவளின் படுக்கையறை ஜன்னலின் வழியே பார்க்க, சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் மழைத் துளிகள் மண்ணில் விழுவதை காண்பதே கண்களுக்கு கவிதையாக காட்சி தந்தது. 

அந்நேரம் வரை மடிக் கணினியில் வேலைப் பார்த்து சோர்ந்திருந்த கண்களுக்கு குளிர்ச்சியை தந்த மழையை ரசித்தபடி எழுந்து கழுத்தை நீவி விட்டாள். படுக்கைக்குச் செல்ல இரவு உடைக்கு மாறிடலாம் என அவள் நினைக்கையில் மேஜையில் இருந்த அவளின் அலைபேசி ஒலியெழுப்பியது. 



Advertisement

‘இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? யாருக்கு என்ன நேர்ந்ததோ? என்ன அவசரமோ?’ என்ற கேள்விகளும், பதற்றமும் பட்டென தொற்றிக் கொள்ள, எட்டி அலைபேசியை கையில் எடுத்தாள். அதிவேகமாக அழைப்பை ஏற்கப் போனவளின் விரல்கள் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் அப்படியே செயலற்று நின்றது. 

பின்னிரவை நெருங்கும் நேரத்தில் எதற்காக தன்னை அழைக்கிறான்? என்னவாக இருக்கும்? இதற்கு முன்பும் அழைத்திருக்கிறான்தான். ஆனால், இப்பொழுது அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என்று அவளுள் எழும் கேள்விகளை அறிந்தது போல முதல் முறை முழுமையாக அழைத்து, இரண்டாம் முறை பாதியில் நிறுத்திவிட்டு, குறுஞ்செய்தி அனுப்பினான். 

Advertisement

Advertisement

“ஆன்சர், இட்ஸ் அர்ஜெண்ட்” என்று தந்தி மொழியில் வந்திருந்தது அவனது செய்தி. 

இப்போது அவளின் பதற்றத்தின் அளவு கூடிப் போனது. அவனை மட்டுமே யோசித்த தன் புத்தியையும் நொந்து கொண்டாள். 

Advertisement

இந்நேரம் அழைக்கிறான் என்றால், அது அவளிடம் பேச மட்டுமே என்று அவள் எப்படி நினைக்கலாம்? அவன் வீட்டில் தானே அவளின் தோழியும் வசிக்கிறாள்? அவளுக்கு என்னவோ என்று பதறி, அவனை அழைக்கப் போகையில், முந்திக் கொண்டு மீண்டும் அவனே அழைத்தான். 

“ஹலோ..” என்றாள் தடுமாற்றத்துடன். 

“நட்சத்திரா..” குரலில் சிறுபிசுறும் இல்லாமல் கணீரென்று அவள் பெயரை அழைத்தான். 

“சொல்லுங்க. ஏதோ அர்ஜெண்ட்டுன்னு சொன்னீங்களே?”  

“ம்ம், ஐ நோ இட்ஸ் லேட். பட் ஐ ஹவ் நோ சாய்ஸ். நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?” கொஞ்சமும் கெஞ்சல் கலக்காத ஆணையாக வந்தது அழைப்பு. 

“என்னாச்சு?” என்று இவள்தான் பதறினாள். 

“கார்த்திக்கு என்ன?” சரியாக கணித்து அவள் கேட்க, ஓர் நொடி அவனிடம் கனத்த மௌனம். அப்படியெல்லாம் எளிதாக அவனை அசைத்திட முடியாது என அவள் அறிவாள். 

“நீ இப்போ இமீடியட்டா வீட்டுக்கு வர முடியுமா? வீட்ல கார் இருக்கு தானே? இல்ல, நானே வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கட்டுமா?” என்று அவன் கேட்கவும், அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. 

என்ன நினைத்தான் இவன்? இந்நேரத்தில் அவளால் எப்படி தனியாக வெளியே வர இயலும்? வீட்டில் என்ன காரணம் சொல்வாள் அவள்? அனைவரும் உறங்கி விட்டார்கள்தான். ஆனாலும், எந்நேரம் என்றாலும் பெற்றோரிடம் சொல்லாமல் வெளியே சென்று பழக்கம் இல்லையே. 

“நீங்க முதல்ல என்னன்னு சொல்லுங்க” 

“யூ ஆர் வேஸ்டிங் அவர் டைம்” என்றான் கடுமையாக. 

“அங்க என்ன நடந்தது? எதுக்காக நான் வரணும்னு சொல்லாம, சும்மா வா வான்னு சொன்னீங்கன்னா என்னால எப்படி வர முடியும்?” என்று குரலை உயர்த்தினாள். 

“போன்ல சொல்ல முடியாத காரணம்னு உனக்குப் புரியும்னு நினைச்சேன் நட்சத்திரா. சீக்கிரம் கிளம்பி வா” என்று அழைப்பை துண்டித்து விட்டான். அவள் பேரை அவன் அழைத்த விதமும், பேசும் தோரணையும், அதற்கு மேல் அவனிட்ட உத்தரவும், அவனது அழைப்பை உதாசீனப்படுத்தச் சொன்னது அவளது நான் எனும் அகங்காரம் (ஈகோ). ஆனால், அங்கே தோழிக்கு என்னவோ என்ற பதற்றம் அவளை விரைந்து செயலாற்ற வைத்தது. 

அவசரமாக கார் சாவியையும், கைப் பையையும் எடுத்துக் கொண்டு, அறைக் கதவை சத்தமில்லாமல் மூடி விட்டு கூடத்திற்கு வந்தாள். 

அம்மாவின் அறைக் கதவை லேசாக தட்டினாள். பதிலில்லை. 

அவளை அவசரமாக வரச் சொன்னவன், யாரிடமும் சொல்லாமல் வா என்று சொல்லவில்லை தானே? அப்படி அவன் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டாள், அது வேறு விஷயம். 

“ம்மா..” இம்முறை சற்றே பலமாக தட்டினாள். 

தூக்க கலக்கத்துடன் வந்து அறைக் கதவை திறந்து, “என்ன குட்டிம்மா? நீ இன்னும் தூங்கலையா? உனக்கு தூக்கம் வரலையா?” கண்ணை கசக்கிக் கொண்டே கேள்விகளை தொடுத்தார் அவளின் அம்மா ஜானகி. 

“இல்லம்மா..” என்று அவள் சொல்கையில்தான் மகள் வெளியே செல்லத் தயாராக கார் சாவியுடன் நிற்பதையே கவனித்தார் அவர். 

அவளின் வேலை காரணமாக நேரம் காலம் பார்க்காமல் வெளியே செல்வது இயல்பு என அறிந்தவர், “அப்பாவை எழுப்பவாடா? இல்ல, உன் கூட நானே வரவா? ரொம்ப தூரமா?” என்று வரிசையாக கேள்வி கேட்டார். இது போன்று அவ்வப்போது நடப்பது உண்டுதான். ஆனால், அதெல்லாம் திட்டமிட்டு செல்வது. இப்படி திடுதிப்பென்று கிளம்பிச் செல்வதல்ல. 

பயணங்கள். அவளின் தொழிலே அதுதான். சுற்றுலா தளங்களுக்கு பயணங்களை திட்டமிட்டு கொடுக்கும் சிறிய நிறுவனத்தை நடத்துகிறாள். கார்த்திகா, அவளின் உயிர்த் தோழியும் அத்தொழிலில் அவளின் கூட்டாளி. இருவரும் இணைந்துதான் அதை நடத்துகிறார்கள். 

ஆக, அவளுக்கு ஒன்றென்றுதான் இப்பொழுது இரவென்றும் பாராமல் ஓடுகிறாள். 

“எங்கடா? ரயில்வே ஸ்டேஷனா? ஏர்போர்ட்டா?” என்று ஜானகி கேட்க, “கார்த்தி வீட்டுக்கும்மா” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில். சற்றே தலையை திருப்பி வாசலைப் பார்த்து தன் அவசரத்தையும் வெளிக் காண்பித்தாள். 

“கார்த்தியா, உன்னை வரச் சொல்லி கால் பண்ணா? அவளுக்கு என்னாச்சு? அவங்க மாமியார், மாமனார் வீட்ல இல்லல்ல? இரு, நானும் வர்றேன். நீ தனியா போக வேணாம்” என்று படபடத்தார் ஜானகி. 

அங்கே என்ன நிலவரம் என்று தெரியாமல் அம்மாவை அழைத்துச் செல்ல விரும்பவில்லை அவள். 

அவசரம் என்று அவளை அழைத்திருக்கிறான் என்றால் அங்கே ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது என்பது அவன் சொல்லாமலே விளங்கிட, “நீங்க இருங்கம்மா. நான் போய் என்னன்னு பார்த்திட்டு உங்களுக்கு கால் பண்றேன்” என்றாள். 

“இந்நேரம் எப்படிடா தனியா போவ?” என்று சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடி கேட்டவர், சிறிய யோசனைக்குப் பிறகு, “சரி. பத்திரமா போய்ட்டு வா. அங்க போனதும் எனக்கு கால் பண்ணு. உன்னோட லொக்கேஷன் ஆன்ல வை. காரை கவனமா ஒட்டு.” என்றார் அன்பும், அக்கறையும், கவலையுமாக. 

அம்மா சொன்னதை போல தன் அலைபேசியில் லொக்கேஷன் பகிரும் பொத்தானை அழுத்தி அம்மாவிற்கு குறுஞ்செய்தியாக அதைப் பகிர்ந்து விட்டு வாசலை நோக்கி நடந்தாள். 

“கவனம். அங்க போனதும் கால் பண்ணி கார்த்திகிட்ட குடு. நான் பேசணும்” என்றார் ஜானகி. சரியென தலையசைத்து காரில் ஏறினாள். சுற்றுச்சுவர் கதவை அவளுக்காக விரிய திறந்து விட்டார் ஜானகி.

அம்மாவுக்கு கையசைத்து விட்டு காரை மெதுவாக நகர்த்தினாள். இரண்டே நிமிடத்தில் பிரதான சாலையை தொட்டிருந்தாள். மீண்டும் அவளின் அலைபேசி அடித்தது. 

‘பொறுமையின் சிகரம் இன்னைக்கு இத்தனை தரம் கால் பண்றார்னா? என்னாகியிருக்கும்? கார்த்தி, ஆர் யூ ஆல்ரைட்?’ என்று மனத்தில் புலம்பி அவன் அழைப்பை ஏற்றாள். 

“என்னோட பேசிட்டே டிரைவ் பண்ணு” என்றான். அவளின் பாதுகாப்புக்காகத்தான் சொல்கிறான் என்பது புரிய, அவளால் மறுக்க முடியவில்லை. அதேநேரம் அவர்கள் இருவரும் பேச என்ன இருக்கிறது? 

உலகத்தின் சுவாரசிய கதைகள் அனைத்தையும் பேசி பேசி தீர்ந்து போனது போல ஓர் அமைதி அவர்களின் உறவுக்குள் வந்திருக்க, எதைக் கொண்டு அந்த வெற்றிடத்தை தற்போது நிரப்புவது?

மெல்ல தொண்டையை செருமினாள். அவளின் எண்ணவோட்டதை புரிந்தது போல, அவனும் அந்தப் பக்கம் எதுவும் பேசவில்லை. 

அவள் காதில் மெலிதாய் அவன் மூச்சு சத்தம் கேட்பது அவளை தொல்லை செய்தது. ஆக, “என்ன பிரச்சினை?” என்று கேட்டாள். 

“இப்போ எங்க இருக்க?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன். அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“கிராசிங் கோயம்பேடு” என்றாள். 

“ம்ம், கேர்ஃபுல்” என்றான். 

அவளுக்கு, “மண்ணாங்கட்டி” என்று கத்த வேண்டும் போலிருந்தது. பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டாள். சரியாக அடுத்த பத்தாம் நிமிடம் அவனது வீடிருக்கும் தெருவில் இருந்தாள். வீட்டுக்கு வெளியே அவன் நின்றிருப்பது வரிவடிமாக தெரிந்தது. சட்டென வேகம் கூட்டி அவனை தொட்டு விடும் தூரத்தில் காரை நிறுத்தி, கீழிறங்கினாள்‌.‌

“வா” என்று அவளின் கைப் பிடித்தான். இப்படியெல்லாம் தொட்டு பேசும் ஆள் இல்லையே இவன். நிலைமை கொஞ்சம் மோசம் தானோ? என்று சிந்தித்துக் கொண்டே அவனோடு ஈடுகொடுத்து உள்ளே ஓடினாள். 

மறுநொடி மூளை சிந்திக்கும் திறனை இழந்தது போல உறைந்து நின்றாள். 

“நட்சத்திரா..” அவன் அழைக்க,

“கார்த்தி” என்று தோழியிடம் ஓடினாள். கன்னா பின்னாவென்று கலைந்து போய் இருந்தாள் கார்த்திகா. அவளின் அடிவயிறில் பயபந்து ஒன்று உற்பத்தியாகி தொண்டைக்கு தாவியது. இரண்டுக்கும் நடுவில் யாரோ நின்று மட்டைப் பந்தாடுவது போலிருக்க, கை, கால்களில் அனிச்சையாக நடுக்கம் பரவியது. 

“கார்த்தி” தலையை மடியில் புதைந்திருந்த தோழியின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தினாள். வலது கன்னம் முழுக்க அழுத்தமாய் பதிந்திருந்தது ஆண் கரத்தின் அச்சு. 

அதைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமும் ஆவேசமும் தலைக்கேறியது. ஆனால், அதையெல்லாம் மீறிய உணர்வில், “அச்சோ..” என்று தோழியின் கன்னம் வருடிக் கொடுத்தவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 

“கார்த்தி, என்னடியாச்சு?” என்ற கேள்வியை தொண்டைக் குழிக்குள் தள்ளினாள். 

அப்போதுதான் அவளை உணர்ந்தது போல தாவி அவளை அணைத்துக் கொண்டாள் கார்த்திகா. மெல்ல விசும்பினாள். 

“வீட்டுக்கு போகலாம்” என்று கரகரத்த குரலில் முணுமுணுத்தாள். 

நட்சத்திரா மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள். முதல் முறையாக அவள் முன் தலை குனிந்தான் அவன். 

சில கணங்களில் கேள்விகள் அர்த்தமற்று போகிறது. 

கார்த்திகாவின் முகமே என்ன நிகழ்ந்திருக்கும் என்று சொல்லிட, அதற்கு மேல் கேள்விகள் கேட்பது புத்திசாலித்தனம் இல்லையே. 

“கார்த்தி, எழுந்திரு. ட்ரெஸ் மாத்து, வீட்டுக்கு போகலாம்” என்றாள் நிதானமாக. அவளின் கலைந்திருந்த மனத்தில் பதியும் விதமாக. 

சடாரென கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து தோழியின் முகம் நோக்கினாள் கார்த்திகா. 

“நம்ம வீட்டுக்கு போகலாம். அங்க அம்மா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவள் அளித்த உத்திரவாதத்திற்கு மேலும் விசும்பினாள் கார்த்திகா. 

“பிளீஸ், எழுந்திரு கார்த்தி” என்று தான் எழுந்து, அவளின் கைப் பிடித்து தூக்கினாள். சட்டென உதவி செய்ய அவர்களை நோக்கி வந்தவன், மறுகணம் அதிர்ந்து அறையை விட்டு வெளியேறியிருந்தான். 

கார்த்திகாவின் இரவு உடை ஒரு பக்கமாக கிழிந்து தொங்கியது. பட்டென பிடித்து அதை நேராக்கினாள் நட்சத்திரா. அவளை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று ஓய்வறைக்குள் விட்டு, “லாக் பண்ணாத, நான் இங்கேயே நிக்கறேன்” என்றாள். 

கார்த்திகா தன்னை திருத்துவதற்குள் அவளுக்கான உடையை அங்கே தேடி எடுத்து, “கார்த்தி இந்தா, இந்த சுடியை போட்டுட்டு வா” என்று கதவை லேசாக திறந்து நீட்டினாள். அதை வாங்கிய கரத்தில் காயத்தை கண்டதும் மேலும் இறுகினாள் நட்சத்திரா. 

“நீயே சேஞ்ச் பண்ணிடுவியா கார்த்தி? நான் ஹெல்ப் பண்ணவா?”

“ப்ச், வேணாம்” மெலிதான குரலில் பதில் வந்தது. 

அவள் உடை மாற்ற எடுத்துக் கொண்ட நேரத்தில் அலைப்புறுதலுடன் அறையை தன் கால்களால் அளந்தாள். 

அறைக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க, வேகமாக சென்று கதவை திறக்க, அவன்தான் நின்று கொண்டிருந்தான். 

“எங்க உங்க அண்ணன்?” சொடக்கிய அவள் குரலுக்கும், கேள்விக்கும், “என் ரூம்ல இருக்கான்” என்று நிதானமாகவே பதில் சொன்னான். 

அவள் தன் விழிகளை சுழற்றி அவனது அறையை பார்த்து நடக்க, அவள் முன்னே தடுப்பாய் நீண்டது அவன் கரம். 

“சீரியஸ்லி?” என்றாள் அதிர்ச்சியுடன். 

“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்றீங்களா?” 

அவளின் கோபம் அவனை கொஞ்சமும் பாதித்தது போல தெரியவில்லை. 

“அண்ணா, அண்ணிக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியாம..”

அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “கடவுளே” என்று தலையில் அடித்தாள். 

“கார்த்தியை.. அதாவது உங்க அண்ணியை பார்த்தீங்க தானே? அவளை உங்க அண்ணா என்ன பண்ணி வச்சுருக்காருன்னு உங்க கண்ணால பார்த்தீங்க தானே? அப்புறமும் எப்படி உங்களால உங்க அண்ணாக்கு சப்போர்ட் பண்ண முடியுது. நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் நினைச்சே..”

“அண்ணாக்கு கன்னத்துல நாலு தையல் போட்டிருக்கு. எப்படின்னு நினைச்ச நீ?” என்று புருவம் உயர்த்தினான். சட்டென திகைத்து அதை வெளிக்காட்டாமல், “அப்புறம் நீங்க குடுக்குற அடியை அசையாம கையை கட்டி நின்னு வாங்கிட்டே இருப்பாங்களா?” என்று முறைப்புடன் கேட்டாள். 

அவனது தாடை இறுகியது. அவனது கோபத்தை கண்டு கவலையுறும் நிலையில் அவளில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!