Skip to content
Post Views: 3,580
நட்சத்திரா, தன் மேல் விழுந்த மழைத் துளிகளை பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி நடந்தாள். ஈரத் தரையில் அவள் விரும்பிய வேகத்துடன் நடக்க முடியவில்லை. கால்கள் வழுக்கி தடுமாற, கைகளும் தடுமாறியது. சட்டென பின்னே திரும்பினாள். அவளின் தோளில் இருந்த கைப் பையை பின்னிருந்து பிடித்திழுத்தான் கதிரவன்.
“என்ன கதிர்? என்ன பண்றீங்க? பேகை விடுங்க” எரிச்சலுடன் பையை வெடுக்கென இழுத்தாள். விடாமல் அதை இழுத்துப் பிடித்தான் அவன்.
Advertisement
“கதிர்…” என்றாள் கோபமாக. உள்ளே திரும்பி அம்மா வருகிறார்களா என பார்த்து விட்டு அவள் முகம் திருப்ப, மிகவும் நெருக்கத்தில் தெரிந்த அவன் முகம் சட்டென விலகியது. விருட்டென்று விலகி அவன் காரை நோக்கி நகர்ந்தான்.
அவளின் கோபத்தின் விளைவு அவனது வேக நடையில் வெளிப்பட்டது. காரில் ஏறியமர்ந்து அவளையே பார்த்திருந்தான்.
Advertisement
Advertisement
“என்ன செய்கிறான் இவன்?” என்று மனத்தில் உதித்த கேள்வியுடன் வீட்டினுள் சென்று மறைந்தாள். மறுகணம் கார் கிளம்பிய சத்தம் கேட்டது.
“நான் போய் கேட்டை மூடிட்டு வர்றேன்ம்மா” என்று சொல்லி, ஓடிச் சென்று வாயிற்கதவை மூடி விட்டு வந்தாள்.
Advertisement
அவளின் படுக்கையறையில் சுவரில் சாய்ந்து, கால்களை மடித்து அதில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் கார்த்திகா. அவளின் கண்கள் இருளை வெறித்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களிலும் இருளே இருந்தது.
ஜானகி சமையல் அறையில் இருந்தார். அம்மாவை ஓர் பார்வை பார்த்து விட்டு தோழியிடம் வந்தாள்.
“கார்த்தி..” மென்மையாக அழைத்து, அவளருகில் அமர்ந்தாள். காற்றுக்கு சரியும் பொம்மையை போல சரிந்து அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அழுது விடாமல் இருப்பதற்காக அடிக்கடி மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
“தூங்கு” மெல்லிய அதட்டலுடன் அவளின் தலைக்கோதிய நட்சத்திராவிற்கு, “என்ன நடந்தது?” என்று கேட்கும் துணிவு வரவில்லை.
“டாக்டர்கிட்ட போகலாமா கார்த்தி? உனக்கு டாக்டர் பார்க்கணுமா?” தயக்கத்துடன் கார்த்திகாவின் முகம் நிமிர்த்தி கேட்டாள். கதிரின் அண்ணன் கபிலன் அத்தனை மோசமானவன் அல்ல என்று நினைத்த நொடியே அப்படியேதும் நிகழ்ந்திருக்கக் கூடாது என்றும் பிரார்த்தித்துக் கொண்டாள்.
“ம்ஹூம், வேணாம்” என்று கார்த்திகா பதில் சொல்லவும்தான், இதயத்தை இடறிய பாரம் இறங்கியது.
தோழியின் பக்கமா? கதிரின் பக்கமா? யார் பக்கம் நிற்கிறோம்? மீண்டும் மீண்டும் அவளை சோதித்தது அவளின் மனசாட்சி எழுப்பிய கேள்வி.
கார்த்திகாவின் கன்னம் வருடி, “உன் மேல கை வச்சிருக்க கூடாது அவர்” என்றாள் மெய்யான கோபத்துடன்.
கார்த்திகாவின் கண்கள் கலங்கி கோடாய் இறங்கியது கண்ணீர்.
“போதை தெளியட்டும். அவருக்கு இருக்கு” பல்லைக் கடித்துக்கொண்டு ஆத்திரத்துடன் சொல்லி, அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
“படு, கார்த்தி.” தோளில் கை வைத்து மடியில் சாய்த்தாள்.
“ஷ்ஷ்…” என்று வலியில் முகம் சுளித்தாள் கார்த்திகா. அதைக் கண்டதும் நட்சத்திராவின் கண்களில் வலியின் துடிப்பு.
“தோள்ல அடிபட்டிருக்கா கார்த்தி? நான்தான் டாக்டர்கிட்ட போவோமா கேட்டேன்ல? ஏன் வேணாம்னு சொன்ன? நீ எந்திரி இப்பவே ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாம்.” என்று படபடத்தாள்.
“அதுக்கு அவசியமில்லடி. டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்திட்டு போயாச்சு” என்றவளை அவள் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாகப் பார்க்க, “கதிர் கூட்டிட்டு வந்தார்” என்றாள்.
“யாரு? அவங்க மாமா பையனையா?” நட்சத்திரா கேட்க, “அவரேதான்” என்றாள் கார்த்திகா.
“அதானே பார்த்தேன்” என்று முணுமுணுத்தவளின் கோபமெல்லாம் கதிரவனின் மேல் திரும்பியது.
அண்ணிக்காக அல்ல, அண்ணனுக்காக யோசித்திருக்கிறான். அந்த வரையில் அதையாவது செய்தானே என்று மகிழவும் அவளால் முடியவில்லை.
“இல்ல கார்த்தி, உனக்கு லேடி டாக்டர் பார்க்கணும்னா..” திக்கி திணறி நட்சத்திரா பேசிட, கண்களை சுருக்கி அவளைப் புரியாமல் பார்த்த கார்த்திகாவிற்கு, அந்தக் கேள்வியின் உட்பொருள் தாமதமாக விளங்கிட, “அச்சச்சோ. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல.” என்று பதறி பதில் சொன்னாள்.
“அவர், என் விருப்பத்தை மீறி என்னைக்கும் நடந்துக்கிட்டது கிடையாது.” என்றவள், “தப்பா நடந்துக்கிட்டது இல்லைன்னு சொல்ல வந்தேன் நட்சத்திரா. பிளீஸ், புரிஞ்சுக்கோ. அப்படி பார்க்காத” என்றாள் கெஞ்சலாக.
“நான் நார்மலாதான் பார்க்கறேன். ஆனா, நான் அங்க வரும் போது உன்னோட நைட்டி கிழிஞ்சுருந்தது கார்த்தி. அதைப் பார்த்திட்டு நான் கண்டபடி கற்பனை பண்ணல. உன்கிட்ட கேட்கறேன். அவ்ளோதான். என் பயம் நியாயம் தானே?”
“நீ பயப்படுறது நியாயம்தான் நட்சத்திரா. அது சண்டையில கிழிஞ்சுருச்சு நைட்டி. மத்தபடி தப்பா எதுவும் நடக்கல” என்றாள் தெளிவாக. தெளிவுப்படுத்தும் நோக்கில். ஆனால், நட்சத்திராவிற்கு நடந்த அனைத்துமே தவறாகத்தான் பட்டது. அவனது பழக்க வழக்கங்கள் அனைத்துமே தவறானதாகத்தான் தெரிந்தது. அதில் தவறேதும் இல்லையே.
புகை, குடி, மனைவியை கை நீட்டுவது எல்லாம் நல்ல பழக்கங்கள் இல்லையே?
“அவங்க சண்டைக்குள்ள நீ போகாத” கதிரவன் பலமுறை அவளை எச்சரித்தது அவளுக்கு இப்போதும் நினைவில் வந்தது.
“என்ன நடந்தது?” என்று நுனிநாக்கு வரை வந்த கேள்வியை அப்படியே கேட்காமல் விழுங்கினாள்.
“கார்த்தி..” என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்த ஜானகியின் கையில் பெரிய தட்டிருந்தது.
“தோசையும், பாலும் எடுத்துட்டு வந்தேன். சாப்பிட்டு படுங்க” என்றார் இருவரையும் பார்த்து.
எந்தக் கேள்விகளும் இல்லாமல், “டின்னருக்கு பண்ண மல்லி சட்னி ஃப்ரிட்ஜ்ல இருக்கு. உனக்கு பிடிக்காதேன்னு பொடி வச்சு எடுத்துட்டு வந்தேன். இந்த ரெண்டு தோசையையும் சாப்பிட்டு, பாலை குடி கார்த்தி” என்று அக்கறையுடன் சொன்னவர், தோசையை பிய்த்து கார்த்திகாவிற்கு அவரே ஊட்டினார்.
தோசையோடு சேர்த்து துக்கத்தையும் மென்றாள் கார்த்திகா. அவளுக்கு அம்மா காவேரியின் நினைவு வந்தது. அவருக்குத் தெரிந்தால், இப்படி அவர் முன் போய் நிற்க நேர்ந்தால், அழுது தீர்த்திருப்பார். மகளை இப்படிப் பார்த்தால், எந்த தாய்க்கும் மனம் பதறத் தானே செய்யும்.
அதில் காவேரி, ஜானகி என்ற வித்தியாசமின்றி அனைவரும் உள்ளடங்கி விடுவார்களே.
“நானே சாப்பிடுறேன் ம்மா. குடுங்க” என்று ஜானகியிடமிருந்து உணவுத் தட்டை வாங்கிக் கொண்டாள் கார்த்திகா. அன்று முழுக்க சரியாக உண்ணாதவளின் பசியை அந்த இரண்டு தோசைகள்தான் போக்கியது. பனங்கற்கண்டு சேர்த்த பாலையும் பருகி நிமிர்கையில் கொஞ்சம் தெளிவாகி இருந்தாள்.
நட்சத்திராவின் கையில் இருந்த காலிப் கோப்பையையும் வாங்கிக் கொண்டு, “நேரமாச்சு பாருங்க. படும்மா கார்த்தி” என்று எழுந்துக் கொண்டார் ஜானகி.
நட்சத்திரா அவரைப் பின் தொடர்ந்தாள்.
“என்னாச்சு குட்டி? நீ இந்நேரம் போய் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அளவுக்கு என்ன சண்டை அவங்களுக்குள்ள? அவளை மாப்ள அடிச்சிட்டாரா?” வருத்தத்துடன் வினவினார் ஜானகி.
“கார்த்தி கன்னம்.. மூஞ்சி வீங்கித் தெரியுது. அப்போ அடிச்சுருக்கார் இல்ல? நானும் அவ வீட்டுக்கு உன் கூட வந்திருக்கணும்” என்றார் கோபமாக.
“காலையில கார்த்தி வீட்டுக்கு சொல்லணும். அவங்கம்மாகிட்ட என்னன்னு இதை சொல்றது? உனக்கு தெரியுமா என்ன பிரச்சனைன்னு? இல்ல, நானே அவகிட்ட கேட்கவா? என்கிட்ட சொல்லுவா தானே?”
“அம்மா..” ஜானகியின் தோளை இருபுறமும் பற்றி அழுத்தமாக அழைத்தாள் நட்சத்திரா.
“இந்நேரம் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தது சரிதான். ஆனா, அவங்க வீட்ல சொல்லாம இருக்கக் கூடாது. இதையெல்லாம் அவங்ககிட்ட சொல்லாம இருக்க சொல்லாத. என்னால மறைக்க முடியாது. இதே என் மகளா இருந்தா நான் சும்மா விடுவேனா?” என்றவரின் குரல் கரகரத்து உணர்வு வேகத்தில் உடைய, “பிளீஸ்ம்மா. முதல்ல அவ என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லட்டும். அப்புறம் என்ன செய்யலாம்னு நீங்களே எங்களுக்கு சொல்லுங்க. நாங்க கேட்கறோம். அதுவரைக்கும் அமைதியா இருங்கம்மா. அவங்கம்மாகிட்டலாம் பேச வேணாம்” என்ற நட்சத்திராவை கடுமையாக முறைத்தார்.
“ப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி போய்ட்டு குடிச்சுட்டு வந்திருக்கார். அதுனால சண்டை போலம்மா.” மேலோட்டமாக சொன்னாள். ஏதோ கடுமையாக சொல்ல வந்த ஜானகி, “சரி. நீயும் போய் படு. காலையில பேசிக்கலாம். அம்மா, இங்க ஹால்லதான் படுத்திருக்கேன். எதுனாலும் என்னை எழுப்பு” என்று கூடத்திலேயே படுக்கை விரித்து படுத்து விட்டார்.
நட்சத்திரா அறைக்கு வர, சுருண்டு படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் கார்த்திகா. ஆனால், நட்சத்திரா விழித்தே கிடந்தாள்.
இங்கே அறைக்குள் நுழைந்த கதிரவனுக்கு, தன் படுக்கையில் பாதியை ஆக்கிரமித்து படுத்திருந்த அண்ணனை அப்படியே உலுக்கி எழுப்ப வேண்டும் போலிருந்தது.
அவனும் எத்தனை முறை எடுத்துச் சொல்லியிருப்பான். கபிலன் கேட்டால் தானே?
மீறி கேள்வி கேட்டாலும், “டேய் எந்த காலத்துல இருக்க நீ? சாமியார் மாதிரி பேசாத” என்று அவனை அல்லவா அதட்டுவான்.
ஆனாலும், அண்ணனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டுமோ? அதைச் செய்திருந்தால் நாளை அவர்கள் இருவரும் தலைக் குனிய நேர்ந்திராதே.
“கபிலா..” கோபத்துடன் அண்ணனை எழுப்பினான். அவனிடம் அசைவேயில்லை.
“இருடா, ஒரு குடம் தண்ணி எடுத்துட்டு வந்து உன் தலையில ஊத்துறேன்” என்று அவன் கத்த, “ஏய், தண்ணி ஊத்தின உன்ன கொன்னுடுவேன் கார்த்தி.” என்று புலம்பி புரண்டு படுத்தான் கபிலன்.
“அடப்பாவி, டேய். அண்ணா.. அப்போ ஏற்கனவே அண்ணி இதையெல்லாம் பண்ணிட்டாங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு, அண்ணனிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும், “மானங்கெட்டவனே” என்று திட்டினான்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, உறக்கமும் சோர்வுமாக சோஃபாவிலேயே படுத்து விட்டான்.
சில மணி நேரங்களுக்கு முன்னர் அவன் வீட்டுக்குள் நுழைந்த கணத்தில் அண்ணனின் அறையில் இருந்து வந்த உரத்த சத்தமும், முகத்தில் இரத்தம் வழிய அண்ணன் நின்றிருந்த கோலமும், கலைந்து கிடந்த அறையின் மூலையில் அண்ணி அமர்ந்திருந்த விதமும், என அவன் கண்ணில் விழுந்த காட்சி இப்போதும் அவனைத் தொந்திரவு செய்தது.
அண்ணன் கபிலனின் கல்யாணம்தான் அவனது காதலுக்கும் வித்திட்டது. காதல் என்று யோசிக்கையிலேயே நட்சத்திராவின் முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி நட்சத்திரமாக மின்னியது.
***
மறுநாள் காலை கார்த்திகா, கபிலனை தவிர மற்ற அனைவருக்கும் பதற்றமாகவே விடிந்தது.
“கார்த்தி இன்னும் தூங்குறாளா? அப்போ உனக்கு மட்டும் காஃபி தரவா?” என்று அறையை எட்டிப் பார்த்து கேட்டார் ஜானகி.
“நீங்க உட்காருங்கம்மா. நானே கலந்துக்கறேன்” என்ற நட்சத்திரா, “உங்களுக்கும் காஃபி தரவாம்மா?” என்று கேட்டாள்.
“நான் அப்பா வந்ததும் அவரோட குடிக்கறேன்” என்ற ஜானகியின் பார்வை பின்னால் செல்ல, அவரின் கணவர் பெருமாள் உள்ளே வந்தார்.
“என்ன காலையிலேயே மகளிரணி மாநாடு நடக்குது போல. என்னடா பண்ண நட்சத்திரா? அம்மா உனக்கு கிளாஸ் எடுக்கறா போல?” என்று கேலியாக கேட்டு சிரித்துக் கொண்டே உணவு மேஜையின் மேலிருந்த அவருக்கான துவாலையை எடுத்து முகம் துடைத்தபடி மனைவியின் அருகில் அமர்ந்தார். அவர்களின் வீடிருந்த பகுதியை காலை நடைப்பயிற்சி என இரண்டு முறை சுற்றி ஓடி விட்டு வியர்த்து வடிய வீடு திரும்பியிருந்தார்.
தன் பேச்சுக்கு மகள், மனைவி இருவருமே எதிர்வினையாற்றாமல் இருக்கவும், கண்ணை நிமிர்த்தி மகளிடம் என்னவென்று கேட்டார். பதிலுக்கு மனைவி தலையை சாய்த்து அவரையே பார்க்கவும், “என்ன ஜானகி? பொண்ணு கூட சண்டையா? உன் ஸ்டூடண்ட்ஸ் போல அவளை மிரட்டாதன்னு சொன்னா நீ கேட்டா தானே?” என்றார் கிண்டலாக.
“நான் காஃபி போடப் போறேன்” என்று நட்சத்திரா மெல்ல நழுவி சமையல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
மனைவியின் பேச்சைக் கேட்டபடியே மகளின் அறையைப் பார்த்த பெருமாளின் முகமும் கவலையை பிரதிபலித்தது.
“வரதராஜனுக்கு கால் பண்ணவா? அவர் பார்த்துப்பார்” என்று கார்த்திகாவின் அப்பாவை குறிப்பிட்டு பெருமாள் கேட்க, “இல்லல்ல வேணாம்.” என்றார் ஜானகி.
“அவங்க வீட்ல சொல்றது பத்தி அவளே முடிவெடுக்கட்டும்”
“அதெப்படி ஜானகி அவ முடிவுன்னு விட முடியும்? அவங்க பொண்ணு, புருஷன் வீட்ல இல்லாம, நம்ம வீட்ல இருக்கறது அவங்களுக்கு தெரிஞ்சா, அதுவும் புருஷன் கூட சண்டை போட்டு, அடிச்சுட்டாருன்னு நைட்டோட நைட்டா நம்ம வீட்டுக்கு வந்தான்னு தெரிஞ்சா. அவங்களை விடு. நம்மளா இருந்தா என்ன பண்ணுவோம்?”
“என்னங்க நீங்க? நான் சொல்ல வேணாம்னு சொல்லல. என்ன பிரச்சினைன்னு தெரியாம அதுப் பத்தி சொல்ல வேணாம்னு சொல்ல வந்தேன். ஆனா, கார்த்தி இங்க இருக்கான்னு கண்டிப்பா சொல்லிடலாம்.” என்றார்.
அந்நேரம் மூவருக்கும் ஆவி பறக்கும் காஃபியுடன் கூடத்திற்கு வந்தாள் நட்சத்திரா.
“என்ன அவசரம்னாலும் இனிமே இப்படி தனியா போகக் கூடாது நட்சத்திரா. நேத்து அம்மா இருந்தாங்க ஓகே. அவகிட்ட சொல்லிட்டு போன சரி. ஆனா, அப்பா வீட்லதானே இருந்தேன்? என்னை எழுப்பி இருக்கணும் நீ” என்றார் கண்டிப்பான குரலில் மகளிடம்.
“இல்ல, நான் தாங்க” என்று ஆரம்பித்த ஜானகி கணவரின் பார்வையில் அதை முடிக்கவில்லை.
“யோசிக்காம பேசாத ஜானகி. நீங்க நைட்டு என்னை எழுப்பல சரி. ஆனா, நட்சத்திராவை தனியா அனுப்பாம நீயாவது அவ கூட போய் இருக்கணும். உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்சினைன்னு நட்ட நடுராத்திரி எங்க பொண்ணு தனியா போய் அவளை கூட்டிட்டு வந்தான்னு கார்த்திகா வீட்ல சொல்லுவியா? என்ன நினைப்பாங்க அவங்க?”
“அப்பா…”
“நீ பேசாதம்மா. சொந்தமா பிசினஸ் பண்ணி பெரிய பெரிய பிராப்ளம்ஸ் நீங்க தனியா ஹாண்டில் பண்ணலாம். அதுல அப்பாவுக்கு பெருமைதான். ஆனா, வீட்டுக்கு வீடு வாசப்படிதான். நாலு பேர் கேள்வி கேட்பாங்கன்னு இல்ல. நாம நாலையும் யோசிச்சுதான் எதையும் செய்யணும் குட்டி” கோபமாக ஆரம்பித்தாலும் நிரம்ப பொறுமையாக மகளுக்கு விளக்கினார்.
நட்சத்திரா அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
“உன்னை வரச் சொல்லி கார்த்திகா கால் பண்ணாளா?” பெருமாள் கேட்க, “கதிர்.. கதிரவன். கார்த்தி மச்சினர் கால் பண்ணார் ப்பா” என்றாள்.
பெருமாளின் கண்கள் கூர்மையுடன் மனைவி, மகள் மேல் படிந்தது.
“கதிரவன் வீட்ல இருக்கப் போய் உனக்கு கால் பண்ணார். இல்லனா, கார்த்தி நிலைமை?” பெருமாள் கோபத்துடன் கேட்க, “அப்பா..” என்று தூக்கக் கலக்கத்துடன் வந்து நின்றாள் கார்த்திகா.
“நான் உங்களுக்கு இல்லன்னா, அப்பாவுக்கு கால் பண்ணி இருப்பேன் ப்பா. ஆனா, அப்படியொன்னும் பெரிய பிரச்சினைலாம் இல்ல. சின்ன ஆர்கியூமெண்ட், நாங்களே பேசி தீர்த்திருப்போம். நாங்க சண்டை போட்டுட்டு இருந்ததைப் பார்த்து அவர் தம்பி இவளுக்கு கால் பண்ணிட்டார். நீங்க கவலைப்படுற அளவுக்கு…” என்று சொல்லிக் கொண்டிருந்த தோழியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நட்சத்திரா.
நேற்று அவள் இருந்த நிலையென்ன? பேசியது என்ன? குடிகாரனை போல விடிந்ததும் எப்படி மாற்றிப் பேசுகிறாள்? எப்போதும் போல என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவளை முறைத்தாள்.
“அம்மாப்பாவுக்கு நானே கொஞ்ச நேரத்துல போன் பண்ணுவேன் ப்பா.”
“ஓகேம்மா. இருந்தாலும் நானும் ஒரு வார்த்தை உங்கப்பாகிட்ட பேசிடுறேன்” என்றார் பெருமாள்.
“அப்பா..” என்று கார்த்திகா திக்கிட,
“இங்க இருக்கன்னுதான் சொல்லப் போறார். என்னப் பிரச்சினைன்னு நீயே சொல்லிடு கார்த்தி” என்றார் ஜானகி. கார்த்திகாவின் கண்ணில் இருந்த கலக்கம் விலகி புன்னகைக்க முயன்றாள்.
அவளின் அப்பாவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் இதய நோய் என்று கண்டறிந்திருந்தார்கள். அவருக்கு அதிர்ச்சியளிக்க வேண்டாம் என்ற அவளின் பயம் தாமதமாகவே நட்சத்திராவிற்கு புரிந்தது.
“சாரி” என்று உதடசைத்து முணுமுணுத்து தோழியை நெருங்கினாள்.
“கார்த்தி அப்பாவுக்கு காலையில கால் பண்ணி ஷாக் கொடுக்க வேணாங்க. பிள்ளைங்க பிஸினஸ் பார்க்கற அளவுக்கு வளர்ந்திட்டாங்க. அவங்களே..”
“என்ன அவங்களே? அவங்களே அடி வாங்கிட்டு வருவாங்க. அதை என்னை கையை கட்டிட்டு பார்த்திட்டு இருக்கச் சொல்றியா?” என்று பெருமாள் அடிகுரலில் சீறினார்.
“கார்த்திகா சந்தோஷமா வாழாத வீட்ல நம்ம நட்சத்திராவை எப்படி குடுக்க முடியும்?” என்று அவர் தீர்க்கமாகக் கேட்க, அறைக்குள் நுழைந்த தோழிகள் இருவரும் ஒருவரையொருவர் சங்கடமாக பார்த்துக் கொண்டார்கள்.
நட்சத்திராவின் கைப் பிடித்தாள் கார்த்திகா.
error: Content is protected !!