Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 3

கீதம் 💜 3

டாக்டர் . ரவிக்குமார் MBBS., DCH., சிறந்த குழந்தைகள் நல மருத்துவர் தான் என்றாலும் அனைத்து விதமான நோயாளிகளும் இவரை தேடி வருவர். அனுபவ அறிவு அதிகம் என்றும், கைராசி உள்ளவர் என்றும் அவரின் மருத்துவமனை எந்நேரமும் நிரம்பி வழியும். நகரத்திற்கும் புற நகர் பகுதிக்கும் நடுவே மருத்துவமனையோடு இணைந்த வீட்டினை கட்டி, முப்பது வருடங்களுக்கும் மேலாக அந்த பகுதியில் கோலோச்சி வருகிறார். பணம் இல்லாத ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவம் பார்த்தும், கேம்ப் மூலம் சிறு சிறு பகுதியில் முகாம் நடத்தி, பலரின் துயரத்திற்கு மருந்து அளிக்கும் வள்ளல்.



Advertisement

மூத்தவன் ஆரவ். இளையவளாய் அப்பாவின் செல்ல பெண் ரம்யா. பிளஸ் ஒன் படிக்கும் மாணவி. அவரின் ஒரே ஒரு தர்ம பத்தினி சாவித்திரி. எந்நேரமும் ஓடி கொண்டே இருக்கும் மருத்துவரின் வலி புரிந்த மனைமாட்சி. வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்டு கொண்டே இருக்கும். அனைவரையும் சமமாய் பாவித்து மரியாதையை அளிக்கும் பண்பு உள்ளவர். வீட்டு வேலைகளை முடித்து விட்டு, மருத்துவமனை நிர்வாகம் பார்ப்பதற்கு ஓடி வந்து விடுவார். பணியாளர்களையும் இன்முகத்தோடு வேலை செய்ய வைக்கும் புண்ணியவதி .

Advertisement

“என்ன இன்னைக்கு ரிசெப்சன் ரொம்ப அமைதியா இருக்கு. நந்துமா வரலையா?” என்றபடியே உள்ளே வந்தார் சாவித்திரி.

Advertisement

“குட் மோர்னிங் மேடம். அவங்க இல்லை மேடம். இன்னைல இருந்து லீவுல இருக்காங்க..,”

Advertisement

“ஓஒ. எக்ஸாம்ல மறந்துட்டேன். அவ வந்தா ஜாலியா பொழுது போகும். இல்லைனா இந்த அக்கௌன்ட்ஸ் மட்டும் பார்த்து எனக்கு மண்டை காயும்..,” என்றபடி அன்றைய தினத்தின் கணக்கு வழக்குகளை மேற்பார்வையிட ஆரம்பித்தார். “இன்னிக்கு EB பில் கட்ட லாஸ்ட் தேதில. ரெடி பண்ணியாச்சா..,”

“.ம்ம்ம், நந்துமா நேத்தே செக் ரெடி பண்ணி கொடுத்துட்டு போய்ட்டாங்க. காலையிலேயே போய் கட்டியாச்சு மேடம்..,” என்றாள் கேஷ் கவுண்டரில் நிற்கும் உமா.

“அவ இருக்குறவரை எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் பக்காவா பண்ணி முடிச்சிருவா. இன்னைக்கு OP கேஸ் கம்மியா இருக்கே. நேத்து அத்தனை பேர் வந்து இருக்காங்க. சர்ஜரிய முடிச்சுட்டு வந்து சாப்பிட கூட வீட்டுக்கு வர முடியல. இன்னைக்கு ஆளே இல்லாமல் அமைதியா இருக்கு..,” என சொல்லி கொண்டு இருக்கும் போதே அழுகை சத்தம் கேட்க தொடங்கிவிட்டது.

திடீரென மயக்கம் போட்டு விழுந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை ஆட்டோவில் இருந்து அவசரமாக தூக்கி கொண்டு வந்தனர்.

“டாக்டர், பேசிட்டே இருந்தார், திடிர்னு மயங்கி விழுந்துட்டார்.என்னனு பாருங்க..,” என அழுது கொண்டே அவரின் மனைவி சொல்ல,

“சிஸ்டர், வேகமா வாங்க..,” என்றபடி BP செக் செய்ய அது 90 / 80 யை காட்டியது. ” இவருக்கு BP டேப்லெட் எல்லாம் போன வாரம் வந்து தானே செக் பண்ணி வாங்கிட்டு போனார். அப்போ கரெக்டா இருந்தது. திருப்பி எப்படி இப்படியாகும் ?” என்றபடி “ரொம்ப டென்ஷன் ஆகுறமாதிரி ஏதாவது நடந்ததா? வேலை அதிகமா, தண்ணீர் குடிக்காம இருந்தாரா..,” என கேட்டபடி ஊசி செலுத்தி, குளுக்கோஸ் ஏற்ற ஆரம்பித்தனர்.சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தார்.

அவரது அறைக்கு சென்று பார்த்த டாக்டரின் முகம் யோசனைக்குள்ளானது. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பாவனை ஜெகநாதன் முகத்தில் இருந்ததை கண்டு கொண்டார் .உறவுகளுக்கு தெரியாமல் ஏதோ ஒன்று அவர் மனதை அரித்து கொண்டுள்ளதை அறிந்து, செவிலியர் உட்பட அனைவரையும் வெளியேற சொன்னார்.

” சொல்லுங்க சார், எனி ப்ரோப்லேம் ., “

அப்போதும் அவர் எதுவும் கூறாது தயங்குவதை கண்டு, “சார், உங்க மனசை ஏதோ ஒரு விஷயம் டிஸ்டர்ப் பண்ணுதுனு எனக்கு தோணுது. அதை நீங்க என்னன்னு சொன்னால் தான் நான் உங்களுக்கு டிரீட்மென்ட் கொடுக்க முடியும். தயங்காம என்னை உங்க பிரண்டா நினச்சு சொல்லுங்க.., என அமைதியாய் பேச, அவரின் முகம் பார்க்க தயங்கி , தலை குனிந்து கொண்டு மெதுவாய் கூற ஆரம்பித்தார்.

” டாக்டர், நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என் பொண்டாட்டியை சந்தேகப்பட்டு திட்டி திட்டி கொடுமை படுத்திட்டேன். இப்போ யாரோட பேச்சையோ கேட்டு, இவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. மனசை பிசைஞ்சி வலிக்குது. என் மேலயே எனக்கு வெறுப்பா வருது..,” என அவர் சொல்லும் போதே நா தழுதழுக்க ஆரம்பித்தது.

” ரிலாக்ஸ், நடந்தது என்னனு கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க..,” என ஆதரவாய் அவரின் கரம் பற்ற

“ம்ம்ம்., என் மனைவியை உங்களுக்கு நல்லா தெரியுமே, அவ ரொம்ப அமைதியா பொண்ணு, அதிர்ந்து கூட பேச மாட்டாள். அவ என்கிட்ட கோச்சுட்டு இருந்தோ, பேசாம இருந்தோ பழக்கமே இல்லை. ஆனா இப்போ .., அவ கொஞ்சம் மாறிட்டா..,” என மீண்டும் தயக்கமாய் மருத்துவரின் முகம் பார்க்க செய்தார்.

“என்ன பண்றாங்க, கத்தி , சப்தம் போட்டு உங்ககிட்ட கோபமா பேசுறாங்களா..,”

” அப்படியெல்லாம் எதுவும் பண்ணல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அடிக்கடி மயக்கம் வந்து ரொம்ப சோர்வா இருக்கிறாள்னு இங்கே தான் பார்க்க வந்தோம். நீங்களும் டானிக் எல்லாம் எழுதி கொடுத்து கொஞ்சம் ரெஸ்டா இருக்க சொன்னிங்க. அவ கூட யாராச்சும் இருந்து பார்க்க சொன்னிங்க..,”

“ம்ம்., ஆமா ., ஞாபகம் இருக்கு., இப்போ அதனால் எதுவும் பிரச்சினையா ?”

“ஆனால் அவ இந்த ரெண்டு மாசமா, எல்லா செலவுக்கும் பணத்தை என்னையே கொடுக்க வச்சா. அவ கூடவே நான் இருந்து எல்லா வெளி வேலையும் செய்யணும்னு சொல்லுறா. அவளுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லைன்னு புதுசா பேசுறா. எல்லாத்தையும் என்கிட்டே ஷேர் பண்ணிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கிறாள். இதுக்கு முன்னாடி வரை எதை பத்தியும் என்கிட்டே சொல்லவே மாட்டா. அவளா தான் எல்லாம் செய்வா. இப்போ புதுசா இந்த மாறி பண்றது எனக்கும் கஷ்டமா இருக்கு…,”

“என்ன ஜெகன், இதுல என்ன இருக்கு., உடம்பு முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனைவிக்கு கணவனா இதெல்லாம் ஹெல்ப் பண்றது ஒன்னும் தப்புயில்லையே, இதுல நீங்க வருத்தப்பட என்ன இருக்கு? சொல்லுங்க…,” புரியா பாவனை தான் ரவியிடம்.

“அவ என்னை கல்யாணம் பண்ண நாளில் இருந்து வேலைக்கு போய்கிட்டு இருக்கா. நான் வீட்டுல எந்த வேலையும் செய்ய மாட்டேன். ஒத்தையா தான் வீட்டுல எல்லாம் பார்த்து, குழந்தைகளையும் ரெடி பண்ணி ஸ்கூல் அனுப்பிட்டு, அவதி அவதியா சாப்பிட்டு, ரெண்டு பஸ் மாறி வேலைக்கு போய்ட்டு வருவா. நான் அவளை கூட்டிட்டு போய் கூட விட மாட்டேன். திருப்பி வந்தும் எல்லா வேலையும் செஞ்சுட்டு, நான் வேலைய விட்டு பதினோரு மணிக்கு தான் திரும்புவேன், அப்பவும் என் தேவை எல்லாம் முடிச்சிட்டு பன்னிரண்டு மணிக்கு தூங்கி, திருப்பி நாலு மணிக்கு எந்திருச்சி ஓட ஆரம்பிப்பா. .,” சற்று நிறுத்தி

“எங்க அம்மாவை விட்டு தனியா கூட்டிட்டு வந்த கோபத்துல தான் நான் எதுவும் பண்ணலை. ஆனால் அதுக்கும் அவ ஒன்னும் சொல்ல மாட்டா. அவளோட ATM கார்டு கூட என்கிட்டே தான் இருக்கும். நான் தான் பணம் எடுத்து செலவுக்கு கொடுப்பேன். செலவு எல்லாம் எழுதி வச்சி தான் பணமும் வாங்குவா…,” தலையை கைகளால் தாங்கியபடி ம்ம்., அது.., நான் தான் பைத்தியம் மாதிரி, எங்க அம்மாவோட பேச்சை கேட்டு, அவளை குத்தி கிழிச்சுட்டு இருந்தேன். அவளோட சம்பாத்தியம் எல்லாம் அவ அம்மா வீட்டுக்கு கொடுத்திருவானு சொன்னதை நம்பி இப்படி எல்லாம் செய்தேன். அவளை இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன். என்னால தான் அவளுக்கு உடம்பு முடியாம போயிருச்சு. இதுவரை அவ உடம்பு முடியாம படுத்து நான் பார்த்ததே இல்லை , இப்போ என்னால..,, “என தழுதழுத்த குரலில் சொன்னார்.

” எனக்கும் நான் பண்ண எல்லா தப்பும் தெளிவா புரியுது. அவகிட்ட மன்னிப்பு கேட்கவும் ஈகோ தடுக்குது. முகத்தை பார்க்க கூட முடியல. என்ன பண்ணணும்னு யோசிச்சு யோசிச்சு தலையே வலிக்குது. சாப்பிட கூட முடியல. அவ கையால தண்ணி வாங்கி குடிக்க கூட மனசும் ஒப்பல. செத்து போயிரணும்னு ரொம்ப தோணுது. எனக்கு என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்லுங்க சார். ப்ளீஸ். இல்லைனா பைத்தியம் பிடிச்சி செத்து போயிருவேன் டாக்டர்..,” என்று குற்றவுணர்ச்சி அதிகரிக்க அழவே ஆரம்பித்து விட்டார். ஆண்கள் மனம் மிக ஒடிந்தால் மட்டுமே அவர்களுக்கு கண்ணீர் வரும். இல்லையேல் அனைத்தையும் துடைத்து போட்டு விட்டு , எனக்கென்ன என சென்று கொண்டே இருப்பர்.

“ரிலாக்ஸ் ஆகுங்க ப்ளீஸ், ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க,உங்க தப்பை புரிஞ்சுக்கிட்டிங்க இல்ல, இனி எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க நல்லா தூங்கி எந்திரிங்க. அப்புறம் இதை பத்தி பேசலாம்..,” என பலவாறாக ஆறுதலாய் பேசி விட்டு, ” பேஷண்டோட மனைவி மட்டும் உள்ளே வாங்க. மத்தவங்க வீட்டுக்கு கிளம்புங்க அவருக்கு ஒன்றும் இல்லை ஈவினிங் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்..,” என அறையிலிருந்து வெளியேறி

நந்துவிற்கு அழைப்பு விடுத்தார்..

“ஹலோ மேடம்.., Dr . ரவி பேசுறேன், நீங்க பார்த்த கேஸ் ஒன்னு வந்துருக்கு, நாளைக்கு வந்து அவங்க டீடெயில்ஸ் கொஞ்சம் பார்த்து சொன்னிங்கன்னா, அடுத்து நான் என்ன பண்ண முடியும்னு யோசிக்க முடியும்?”

“சார், ஏன் இப்படி கலாட்டா பண்றீங்க, நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா, சாரி சார..,” என்றாள் பயந்தபடி.

“நந்து தப்பு பண்றதா, அது நடக்குமா, தப்பை சரி தான் பண்ணி இருக்க, போன வாரம் வந்த ஜெகநாதன் பேஷண்ட் மனைவிகிட்ட இதுக்கு முன்னாடி ஏதாவது பேசி இருந்தியா, அத பத்தி சொல்லுமா ..,”

“” சார் , அவங்க மிஸர்ஸ் ரெண்டு மாசம் முன்னாடி ரொம்ப தலைவலிக்குதுனு சொல்லி வந்து இருந்தாங்க. தூக்கம் வரல, அடிக்கடி மயக்கம் வர்ற மாதிரி இருக்குனு சொன்னாங்க, அவங்கட்ட பேசி பார்த்தப்ப அவங்க புருஷன் ஒரு அப்பாவி, இவங்க மேல ரொம்ப பாசம் வச்சி இருக்கார், ஆனால் அவங்க அம்மா பேச்சை கேட்டு, இப்ப எல்லாம் ரொம்ப கோபப்படுறாரு. என்னால் தாங்கவே முடியல..,, அவங்க எவ்ளோ பொறுமையா சொன்னாலும் கேக்கவே மாட்டேன்னு இருக்காருனு புலம்பிட்டு இருந்தாங்க. அதான் ஒரு ஷாக் டிரீட்மென்ட் சொன்னேன்.

தனக்கு அறிவு கம்மி, எதுவும் பண்ண தெரியல, நீங்க கூடவே வாங்கனு சொல்லி எல்லா இடத்துக்கும் அவரை கூட்டிட்டு போக சொன்னேன். அவங்க பண்ற எல்லா வேலையும் கூடவே இருந்து பார்க்க வச்சேன். ரொம்ப நல்லவர், அதட்டி , உருட்டி , சப்தம் போட்டு சொல்ல முடியாதுனு தான் உணர்வு பூர்வமா உணர வச்சேன். சிலருக்கு சொன்னா புரியாது, நேர்ல உணர்ந்தா தான் புரிஞ்சுக்குவாங்கனு சொன்னேன். ஏன் அதுல ஏதும் தப்பா நடந்துருச்சா சார், என்னாச்சு..,” என பதறியபடி கேட்டாள்.

“அப்படி எல்லாம் எதுவும் ஆகல, மனுஷன் தப்பை உணர்ந்து பீல் பண்ணார். உன் டிரீட்மென்ட் சக்ஸஸ் தான். கவலை படாதே, நாளைக்கு மதியம் அவரை வர சொல்றேன், நீயே பேசி, அவருக்கு புரிய வை. சாரிம்மா, லீவு நாள் கூட உன்னை டிஸ்டர்ப் பண்றேன்..,” அவளின் படிப்பை கெடுத்து விட கூடாதே என்ற எண்ணத்தில் அவர் கேட்க.

” சார், அப்படியெல்லாம் சொல்லாதீங்க, நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு நல்லதுக்கு தான் இருக்கும். நான் இப்பவே வரவா.,”

” இப்ப நீ பிரீயா இருந்தா வாம்மா, நான் அவரை வெயிட் பண்ண சொல்லுறேன் என்றபடி அழைப்பை துண்டித்தவர் ரொம்ப புத்திசாலி , படிக்கும் போதே இவ்ளோ சமாளிக்கிறா, சீக்கிரம் பெரிய ஆள் ஆகிடுவா..,” என எண்ணி கொண்டு ஜெகநாதனிடம் இந்த விவரத்தையும் கூறினார்.

💜💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!