Skip to content
Post Views: 1,644
கவிதை 1
எமிரேட்ஸ் விமானத்தில் அமர்ந்து இருந்தேன் நான்…
இப்போது தான் நியூயார்க்கில் இருக்கும், ‘ஜான் எஃப் கென்னடி’ விமான நிலையத்தில் செக்கின் முடித்துக் கொண்டு, விமானத்தில் ஏறி இருந்தேன்…
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எனது பயணம்…
Advertisement
நான் அமெரிக்கா வரும் போது எனக்கு இருபத்தாறு வயது…
பெரிய கம்பெனியில் வேலை கிடைக்க, பல தடைகள், இழப்புகள் என்று எல்லாம் கடந்து வந்து விட்டேன்…
எனக்கு என்று எத்தனையோ கனவுகள்…
Advertisement
அதனை அடைய வேண்டும் என்கின்ற வைராக்கியம் எனக்குள் வேரூன்றி இருந்தது…
Advertisement
அதனால் என்னென்னவோ இழந்தாலும் ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கின்றேன்…
என் இலட்சியத்தை இன்னுமே அடைந்து விடவில்லை…
ஆனால் அதற்கான உழைப்புகளை போட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன்…
Advertisement
இந்தியாவுக்கு செல்லவே கூடாது என்று இருந்த என் வைராக்கியத்தை தகர்த்து இருந்தது அந்த வாட்ஸ் அப் வாய்ஸ் நோட்…
எனது தாய் தேவகி அனுப்பி இருந்தார்…
“என் கிட்ட பேச உனக்கு நேரம் இருக்காதுன்னு தெரியும்… ஆனா சொல்லாம இருக்க முடியல, பிரபஞ்சனுக்கு பொண்ணு பார்த்துட்டாங்க, இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்” என்றார்…
“பிரபஞ்சன்” அந்த பெயர் என்னை ஒரு கணம் ஆட்டி வைத்தது…
அதுவும் கல்யாணமாமே…
‘என் பிரபஞ்சனுக்கு கல்யாணமா?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்…
‘அவன் ஒன்றும் உன் பிரபஞ்சன் இல்லை’ என்று மனசாட்சி எனக்கு காறி துப்பியது…
அதுவும் உண்மை தான்…
இப்போது நான் திருமதி. ஹரிணி பிரபஞ்சன் இல்லை… செல்வி. ஹரிணி ராபர்ட்…
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
என்ன தான் வைராக்கியம் என்னை ஆட்டுவித்தாலும் அவன் மீது இருக்கும் அந்த காதல் கொஞ்சம் கூட குறைய மாட்டேன் என்கின்றதே…
இப்போது கூட, அவனுக்காக இருக்கும் வேலைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கிளம்பி இருக்கின்றேன்…
அவன் திருமணத்தை நிறுத்தவா?
கண்டிப்பாக இல்லை…
அவன் திருமணத்தை நிறுத்தினால் என்னை போல ஒரு ராட்சஷி இருக்க மாட்டாள்…
அவனை ஒரு தடவை பார்த்து விட வேண்டும்…
அவன் இன்னொருத்தி புருஷன் ஆக முதல், ஆசையாக அவனுக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட வேண்டும்… இதெல்லாம் சாத்தியமா? என்று எனக்கு தெரியவில்லை…
அது மட்டும் நடந்து விட்டால் அந்த நினைவுடனேயே என் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து விடுவேன்…
அவன் மீதான காதல் உருகி வழிந்தாலும், அவனுக்கு என்னால் சராசரி மனைவியாக இருக்க முடியவே இல்லையே…
எனது சுயம் இழந்து காதலை தேட முடியவில்லை…
அவனுக்காக எனது ஆசைகளை, லட்சியங்களை விட்டு கொடுக்க முடியவே இல்லையே…
ஏதோ ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற வேண்டும் என்பது பெண்கள் வாங்கிய சாபம் போல…
இந்த நிலைமை ஆண்களுக்கு இல்லையே… அவர்களுக்கு எல்லாமே கிடைக்கும்…
ஆனால் பெண்களுக்கு எல்லாமே கிடைத்து விடுவது இல்லை…
பெண்கள் எல்லாருமே இலட்சியத்தை தூக்கி போட்டு விட்டு, குடும்பம் என்று ஒதுங்கி விடுவார்கள்…
நான் முரணானவள்…
குடும்பத்தை தூக்கி போட்டு விட்டு இலட்சியத்தை சுமந்து கொண்டு இருக்கின்றேன்…
விமானத்தின் ஓரமாக அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டு இருந்தேன்… பனி பொழிந்து கொண்டு இருந்தது…
வெளியே பனி பொழிய, எனக்குள் கண்ணீர் சுரந்தது…
வலிக்கின்றது.
உயிருடன் இதயத்தை பிடித்து இழுப்பது போல வலிக்கின்றது.
அதற்காக, பிரபஞ்சனின் வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பவில்லை… எட்டு வருடங்கள் கழித்து அவன் வாழ்க்கையில் ஏதோ நல்லது நடக்கின்றது…
நான் கசக்கி போட்ட அவன் வாழ்க்கை என்னும் காகிதத்தில் யாரோ ஒருத்தி மடல் எழுத வந்து இருக்கின்றாள்…
இனியாவது அவன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று மனம் நினைத்தாலும், அவன் நினைவை என்னால் ஒதுக்கி தள்ள முடியவில்லை…
அழுகை…
டிஸ்ஸுவினால் கண்ணீரை துடைத்துக் கொண்டே, என்னை நானே சமாதானப்படுத்த முயல்கின்றேன்…
சிறிது நெரத்தில் விமானமும் புறப்பட்டது…
கிட்டத்தட்ட ஒரு நாள் விமான பயணம்…
டிரான்சிட் துபாயில்…
போகும் போதே எனக்கு பல யோசனைகள்.
அவனை எப்படி சந்திப்பது? கல்யாணத்துக்கு செல்வதா வேண்டாமா? அவனுக்கு மனைவியாக போகின்றவளுக்கு என்னை பார்த்ததுமே உறுத்துமா?
நான் போய் தான் ஆக வேண்டுமா? நான் செல்வது அவன் நிம்மதியை குலைத்து விடுமா? என்று எத்தனையோ கேள்விகள்…
“மேம் எனி ட்ரிங்க்ஸ்” என்கின்ற விமான பணிப்பெண்ணின் குரலில் நிதானத்துக்கு வந்தேன்…
“வன் டயட் கோக்” என்று பதிலை சொல்லி விட்டு, அவர்கள் தந்த பானத்தை வாங்கிக் கொண்டு, மீண்டும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன்…
அருகே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அமர்ந்து இருந்தார்…
சாதாரண முகஸ்துதியுடன் முடித்துக் கொண்டேன்…
பேசும் அளவுக்கு என்னிடம் தெம்பு இல்லை.
மனதளவில் மிகவும் உடைந்து போய் இருக்கின்றேன்…
இந்த மனம் குரங்கு என்பது எந்தளவு உண்மையானது.
நான் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட பொருளை தேடி செல்ல ஆயத்தமாகி விட்டதே…
எந்த தைரியத்தில் புறப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை…
ஆனால் திருமண விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே, கைகளில் ஒரு நடுக்கம்.
மனதில் ஒரு பதட்டம்…
எனக்குள்ளே ஒரு பூகம்பம் உருவாகும் உணர்வு…
கண்களை இறுக மூடிக் கொண்டேன்…
தூங்க முயன்றேன்…
தூக்கம் வர மறுத்தது…
அவன் முகம் தான் மீண்டும் மீண்டும் வந்தது…
பிரபஞ்சன்…
என்னால் மறக்க முடியாத ஒரு ஜீவன்…
என்னை உருகி உருகி காதலித்த ஒருவன்…
நான் உருகி உருகி காதலித்த ஒருவனும் கூட…
என்னை விட்டு இன்னொரு பெண்ணை அவனால் எப்படி மணக்க முடியும்? என்கின்ற கேள்வி எனக்குள் வந்தது…
நான் மட்டும் என்ன அவனுக்கு முன்னுரிமை கொடுத்தேனா? என்கின்ற நிதர்சனம் என் நெற்றிப் பொட்டில் அறைந்தது…
என்னை நானே சமாதானம் செய்து கொள்ள முயன்று தோற்றுப் போய் தூக்கமே வராமல் அவன் நினைவுகளில் தான் உழல தொடங்கி இருந்தேன்.
எங்கள் திருமணம் நடந்தது என்னவோ எட்டு வருடங்கள் முன்னர் தான்…
ஆனால் அதற்கு முன்னர் நான்கு வருடங்கள் இருவருமே இணைபிரியா காதலர்கள்…
இன்னுமே அந்த பசுமை நினைவு என் மனதின் உள்ளே…
கண்கள் மூடி இருந்தாலும், அந்த நினைவுகள் என் இதழ்களை மெலிதாக விரிய வைத்தன…
அவனுடனான துள்ளலுடன் கூடிய கல்லூரி நாட்களை என்னால் எப்போதுமே மறக்க முடியாது…
‘பிரபஞ்சன்’ இந்த பெயரை கேட்டாலே கல்லூரி பெண்கள் மத்தியில் அப்படி ஒரு மயக்கம் எப்போதும் இருக்கும்…
எல்லோரும் படித்தது என்னவோ கணனி சம்பந்தமான துறையில் தான்…
அவனுக்கும் எனக்கும் ஒரே வயது தான்…
ஒன்றாக தான் கல்வி கற்றுக் கொண்டு இருந்தோம்…
எல்லோரிடமும் நட்பாக பழகுவான்…
பார்த்தாலே ஈர்த்து விடும் தோற்றம்…
ஆளுமைக்கும் வசீகரத்துக்கும் குறைவில்லாதவன் அவன்…
அதில் விழுந்த பல பெண்களில் நானும் ஒருத்தி…
அவன் நட்பு என்பதை கடந்து யாரையும் நெருங்கியது இல்லை…
அவனுடன் நட்பாக ஒரு வருடத்தை நானும் கடத்தி விட்டேன்…
ஆனால் அப்படியே விட்டு விட முடியாது.
நான் இல்லை என்றால் யாரவது ஒரு பெண் அவனை கொத்தி சென்று விடுவாளோ என்று ஒரு பயம் எனக்குள்…
பெண்கள் காதலை சொல்வது வேறு அரிது…
ஆனால் சொல்லாமல் விடவும் மனம் இல்லை…
இந்த கூச்சம், பெண்மை எல்லாம் நகர்த்தி வைத்து விட்டு, அவனிடம் காதலை சொல்ல, கல்லூரி வளாகத்தில் காதலர் தினம் அன்று காத்துக் கொண்டு இருந்த நினைவு இன்னுமே எனக்குள்…
கைகள் குளிர்ந்து விட்டன…
இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது…
எனக்கு ஒரு உயிர் நண்பி இருந்தாள்…
அவள் தான் நர்மதா…
“நிஜமா சொல்ல தானா போற?” என்று கேட்டாள்.
அவள் குரலில் லேசான பொறாமை எட்டிப் பார்த்தது…
பிரபஞ்சன் சம்மதிக்க கூடாது என்கின்ற வேண்டுதலும் அவளுக்குள் இருக்கும் என்று எனக்கு புரிந்தது.
என்னை போல தானே அவளும்…
அவன் மீது அவளுக்கும் மயக்கம் இருக்கும் போல…
அதனை பற்றி நான் பேச விரும்பவில்லை… எங்களுக்கு நடுவிலான நட்பு சீராக செல்ல வேண்டும் என்றால் நான் இதனை எல்லாம் பேசக் கூடாது என்று எனக்கும் புரிந்திருக்க, “ம்ம், கண்டிப்பா சொல்ல தான் போறேன்” என்று மட்டும் சொல்லி விட்டேன்.
அவளிடம் மௌனம் மட்டுமே…
இதயம் வெளியே கேட்டு விடும் அளவுக்கு துடித்துக் கொண்டு வேறு இருந்தது…
விட்டால் கீழே மயங்கி விழுந்து விடுவேன் என்கின்ற நிலை தான்…
அவனையே எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டு இருந்தேன்…
இன்று அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி இருந்தது…
மைதானத்தில் அதனை முடித்து விட்டு வரும் போது தான் இதனை பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு காத்து இருந்தேன்…
இரண்டு மணிக்கே வீடு செல்ல வேண்டிய நான், ஆறு மணி வரை காத்துக் கொண்டு இருந்தேன்…
எனக்கு துணையாக நர்மதாவும் நின்று இருக்க, நண்பர்களுடன் பேசி சிரித்தபடி பிரபஞ்சன் நடந்து வருவது என் கண்ணில் பட்டது…
கால்களில் வேறு நடுக்கம்…
விழுந்து விடுவேன் என்கின்ற உணர்வு தான்…
என்னை திடப்படுத்திக் கொண்டே நின்று இருக்க, அவனோ வியர்வை வழிய கையில் கிரிக்கெட் பேட்டை தூக்கி சுழற்றியவாறு நடந்து வந்தான்…
அவனையே இமைக்காமல் பார்த்து இருந்தேன்…
பார்க்கவே அழுக்கான தோற்றம்…
என் கண்களுக்கு மட்டும் அவன் இப்போது பேரழகனாக தெரிந்தான்.
என் கண்களுக்கு மட்டும் அல்ல, நர்மதாவுக்கும் அப்படி தான் தெரிந்து இருப்பான் போலும்…
அவளும் எனக்கு போட்டியாக இமைக்காமல் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
என் வயிற்றில் இருந்து கொஞ்சமாக புகை வேறு வந்தது…
இப்படியான விஷயங்களால் தானே, நான் அடித்து பிடித்துக் கொண்டு இன்று காதல் மடலுடன் வந்து நின்று இருக்கின்றேன்… ஒருவன் அழகாக அம்சமாக இருந்தால் போதுமே, இந்த பெண்கள் வெறிக்க வெறிக்க பார்க்க தொடங்கி விடுவார்கள்… அந்த பெண்களில் நானும் ஒருத்தி தான். பிரபஞ்சன் போன்ற ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லை போலும்…
விட்டால் அவனை பற்றி வர்ணித்துக் கொண்டே இருப்பேன்… சரி என் கதைக்கு வருகின்றேன்…
அவன் என் காதலை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை…
அழுவேனா? இல்லை கெஞ்சுவேனா? இல்லை கண்டு கொள்ளாமல் சென்று விடுவேனா? என்று எதுவும் தெரியவில்லை…
ஆம் சொல்லி விட வேண்டும் என்கின்ற வேண்டுதல் மட்டுமே எனக்குள் இக்கணம் இருந்தது…
அவனும் கிரிக்கெட் பேட்டை சுழற்றிக் கொண்டு என்னை யோசனையாக பார்த்தான்…
அவன் புருவம் சுருங்கி விரிந்தது.
அவனுடன் நடந்து வந்த எனது வகுப்பை சேர்ந்தவர்களும் எம்மிருவரை தான் யோசனையாக பார்த்தார்கள்…
நர்மதாவோ, “எல்லாரும் பார்க்கிறானுகள் ஹரிணி” என்றாள்.
“அதுக்கு இப்போ என்ன தான் பண்ண முடியும்” என்றேன்…
இப்படி எல்லாம் பேசுகின்றேனா? என்று எனக்கே அதிர்ச்சி…
இந்த காதல் எந்த பெரிய தைரியத்தை எனக்கு அள்ளி கொடுத்து இருக்கின்றது…
நர்மதாவும், “அப்போ நான் தள்ளி போய் நிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே தள்ளி சென்று நின்று இருக்க, நான் தைரியத்தை கஷ்டப்பட்டு இழுத்து பிடித்துக் கொண்டே, “பிரபஞ்சன்” என்றேன்…
அவனும், “என்ன இந்த நேரத்துல தனியா ரெண்டு பேரும் நிக்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே, எட்டி நர்மதாவையும் பார்த்து விட்டு, இப்போது என்னைப் பார்த்தான்…
அவன் விழிகளை சந்திக்க தானே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டு இருக்கின்றேன்…
அந்த மயக்கும் விழிகளில் என்ன தான் இருக்கின்றதோ…
அந்த விழிகளை பார்த்தாலே பேச்சு வர மறுக்கின்றது…
அப்படியே அவனை இமைக்காமலே பார்த்தேன்…
“ஹரிணி” என்று அவன் அழைத்து தான் நிதானத்துக்கு வந்திருக்க, “கொஞ்சம் தனியா பேசலாமா?” என்று கேட்டேன்…
அவனோ, தனது கிரிக்கெட் பேட்டை தூக்கி அங்கே நின்ற தனது நண்பனிடம் எறிந்தவன், “போங்கடா வந்திடுறேன்” என்று சொல்ல, அதில் இருந்த ஒருவனோ, “வலெண்டைன்ஸ் டே அன்னைக்கு மீட் பண்ண கூப்பிட்டு இருக்க, எனி ஸ்பெஷல் ஹரிணி?” என்று என்னை கிண்டல் செய்ய, அவன் நண்பர்களும் சிரித்துக் கொள்ள, நான் சட்டென சங்கடமாக தலையை தாழ்த்திக் கொண்டேன்…
ஏற்கனவே இதயம் வெடித்து விடும் நிலையில் இருக்கும் என்னை கிண்டல் வேறு செய்து மயக்கம் வர வைத்து விடுவார்கள் போல இந்த வானரங்கள்…
பிரபஞ்சனோ, “சும்மா சும்மா கிண்டல் பண்ணாம கிளம்புங்க டா” என்று அவர்களை அடக்கி அனுப்பி இருந்தான்…
எனக்கு பிரபஞ்சனிடம் பிடித்ததே அது தானே…
நமது உணர்வுகளுக்கு அவனிடம் இருக்கும் மதிப்பு அளப்பெரியது…
தோற்றத்தில் மட்டும் அல்ல, குணத்திலும் என்னை அப்படியே ஈர்த்து அவனுக்குள் என்னை மொத்தமாக அடக்கிக் கொண்டவன் ஆயிற்றே…
அவன் நண்பர்கள் சற்று நகர்ந்து சென்றதுமே, மெதுவாக ஏறிட்டு அவன் விழிகளை பார்த்தேன்.
அவனும் என்னை யோசனையாக பார்த்துக் கொண்டே, “என்னடி?” என்று கேட்டான்…
நானும் தயங்கிக் கொண்டே, எனது பையில் இருந்த காதல் மடலை எடுத்தேன்…
அவன் அதனை கையால் தொடக் கூட இல்லை…
முகப்பை பார்த்ததுமே புரிந்து இருக்க வேண்டும்…
அங்கே எங்களை பார்த்துக் கொண்டே ஏதேதோ பேசியபடி நின்ற நண்பர்களை பார்த்து விட்டு, என்னை பார்த்தவனோ, “சரி உள்ள வை” என்றான்…
அதிர்ந்து விட்டேன்…
எனக்கு செருப்பால் அடித்த உணர்வு…
மறைமுகமாக நிராகரித்து விட்டானே…
கண்களில் நீர் கோர்த்தன…
“பிரபஞ்சன்” என்றேன் தவிப்பாக…
இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்து விட்டு என்னை பார்த்தவனோ, ” நீ சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு, நான் அப்புறம் பேசுறேன்” என்றான்…
அவனையே பார்த்து இருந்தேன்…
சட்டென கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டு விழுந்தன…
என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டானா?
தாங்கிக் கொள்ள முடியவில்லை…
அழக் கூடாது என்று நினைத்தாலும் இந்த கண்ணீர் விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, கண்களை விட்டு ஓடி வந்து விடுகின்றதே…
இந்த கண் மடல்களுக்கு வேறு இந்த கண்ணீரை பிடித்து வைக்க தெரியவில்லை என்று எல்லாம் யோசித்தேன்…
கோபம், இயலாமை என்று என்னென்னவோ உணர்வுகளில் அழுகை தான் வந்தது…
அவனோ, “சீக்கிரம் போடி” என்று ஒரு அதட்டலாக சொல்லி விட்டு, விறு விறுவென செல்ல, நான் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டேன்…
இந்த நர்மதா வேறு நிம்மதி பெருமூச்சு விடுவாளே, அவள் முன்னால் தான் இப்படி அவமானப்பட வேண்டுமா? என்று என்னென்னவோ யோசனைகள்…
“என்னடி விட்டுட்டு போற?” என்று கேட்டுக் கொண்டே நர்மதா என்னை நோக்கி ஓடி வந்தாள்.
நான் அவளை பார்க்காமலே நடந்தேன்…
“என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே என் கூட நடந்தாள்.
பதில் சொல்லாமல் நடந்தேன்…
நச்சரிக்க தொடங்கி விட்டாள.
செயலிலேயே அவளுக்கு தெரிந்து இருக்கும், ஆனால் அவன் நிராகரித்ததை என் வாயால் கேட்டு சந்தோஷப்பட வேண்டும் என்று இந்த கடன்காரி நினைத்து இருப்பாள் போலும்…
அவளை பக்கவாட்டாக அழுகையுடன் பார்த்த நான், “வேணாமாம்… போதுமா?” என்று கேட்டுக் கொண்டே நடக்க, அவளோ, “ஏன் வேணாமாம்? நீ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதே” என்று போலி ஆறுதல்களை சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
அவள் மனதுக்குள் குளு குளுவென்று இருந்து இருக்கும் என்று எனக்கும் தெரியும்…
‘உனக்கு சந்தோஷம் தானே’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, விறு விறுவென நடக்க ஆரம்பித்து விட்டேன்…
error: Content is protected !!