Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 08 ( PART 02 )

*** மருத்துவரின் கவனிப்பில் மதனின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டது. அவ்வப்பொழுது, ரத்தம் வழிந்த முகத்துடன், உடல் முழுவதும் காயங்களுடன், சுற்றிலும் நாய்கள் நிற்க வீழ்ந்திருந்த அந்த அந்நியனின் தோற்றமும், அலறலும் மதனுக்கு நினைவில் வர, அந்த காட்சி மனக்கண்ணில் தோன்றும் பொழுதெல்லாம் துள்ளி விழுந்தான்.

 

“எதையோ பார்த்து ரொம்ப பயந்திருப்பான் போல” என்று மருத்துவர் கூற,



Advertisement

 

“இவனுங்களை இங்க வெச்சு சாப்பாடு போடறதே பெரிசு. இதுல வைத்தியம் வேற பார்க்கணுமா” எப்பொழுதுமே இவர்கள் மீது கோபத்தை உமிழும் மனிதனின் குரல். அந்த குரலில் தான் எத்தனை கோபம், ஆதங்கம், வெறுப்பு!

 

Advertisement

‘இந்தளவு இவன் வெறுப்பை உமிழும் அளவு நாம் என்ன செய்தோம்?’ என மதனின் மனம் இடைவிடாத சிந்தனை செய்தது.

Advertisement

 

மனதோடு பயம் இருந்த போதும் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சம் முன்னேறியது. ஓரளவு முன்னேறியதும், மருத்துவர் அவனது பயம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

 

Advertisement

“ஏதோ சத்தம், அலறல், ரத்தம்…” எனக் கோர்வையாகப் பேச முடியாமல் மீண்டும் உடல் விறைக்க, பயத்தில் நடுங்கினான்.

 

“ரிலாக்ஸ்… ஏதாவது கனவா இருக்கலாம். முடிஞ்சவரை அதை நினைக்காம இருக்க பாருங்க” என்றார் பொறுமையாக.

 

மருத்துவர்களிடம் கனிவும் இயல்போ! அவரையே பார்த்தவன், “நாங்க எதுவும் தப்பு செஞ்சுட்டோமா டாக்டர்?” என்றான் கண்களில் வலியோடு.

 

“அதை நீங்க தான் சொல்லணும்” என மருத்துவர் அவனிடமே பந்தை நகர்த்தி விட்டார். எதையும் என்னிடமிருந்து வாங்க முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவருடைய பதில்.

 

அவன் யோசனையில் மூழ்க, “எதையும் யோசிக்காதீங்க. நீங்க சீக்கிரம் குணமாகணும். நல்லா ரெஸ்ட் எடுங்க” என மருத்துவர் கூற,

 

“இன்னொருத்தரை அட்மிட் செஞ்சீங்களே டாக்டர். அவர் எப்படி இருக்காரு?” தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் எதையும் யோசிக்காமல் கேட்டு விட்டான்.

 

யோசனையாகவும், கேள்வியாகவும் அவனை மருத்துவர் பார்க்க, “அது அன்னைக்கு நினைவு வந்தப்ப இங்கே ஒருத்தரைப் பார்த்தேன். நிறைய காயத்தோட…” எனத் தடுமாற்றத்துடன் பதில் தந்தான்.

 

“அவரை வேற அறையில வெச்சு பார்க்கிறோம். கொஞ்சம் தேறிட்டு வராரு. தேவை இல்லாத விசயத்துல நீங்க தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது” பதிலையும் கூறிவிட்டு எச்சரிக்கையும் செய்தார்.

 

தலையை உருட்டியவன், “தேங்க்ஸ் டாக்டர்” என்றான்.

 

அவர் யோசனையாகப் பார்க்க, “இங்க இருக்க எல்லாருக்கும் எங்க மேல கோபம்ன்னு புரியுது. இருந்தும், எங்க உயிரை காப்பாத்த நீங்க எடுத்துக்கிற அக்கறை… அதான் டாக்டர்” என்று பதில் தந்தான்.

 

சற்றே பரிதாபம் எழுந்தது அவனது பேச்சில். ஆனால், அவன் செய்த காரியம்? அதை நினைக்கும் பொழுது அவருக்கே மனதினோரம் அவனைக் கொன்றுவிடும் ஆத்திரம் எழத்தான் செய்தது.

 

“டேக் ரெஸ்ட். இனி சாயந்தரம் உங்களைப் பழைய இடத்தில விட்டுடுவோம்” என்று கூறியவர் மேற்கொண்டு பேச்சை வளர்க்கப் பிரியம் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

 

அந்த நிசப்தமான சூழலில், ‘இவர்கள் அனைவரும் நம் மீது இத்தனை கோபம் கொள்ளுமளவு நாம் என்ன பிழை செய்தோம்?’ என்பதை தம் வாழ்க்கை பயணத்தைப் புரட்டிச் சிந்திக்கத் தொடங்கினான்.

 

‘யாரை துன்படுத்தினோம்?’ என்கிற வெகுநேர தேடலுக்கு விடையாய் கிடைத்தது ஒரு இளம்பெண்ணின் புன்னகை சுமந்த முகம்.

 

அவளைப்பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. ஒல்லியாக, மாநிறமாக இருப்பாள். புன்னகை அவளின் மிகப்பெரிய சொத்து. சிரித்துக் கொண்டே இருப்பாள். இவளுக்குச் சோகமே இல்லையா என்றுகூடத் தோன்றும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.

 

பருவ வயதில் ஒரு சிலருக்குக் காதல் வருமே, கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய தோழிகளும் அதற்கு விதி விலக்கல்ல.

 

என்ன தோழிகள் வெறும் காதலைச் செய்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்களே, தங்கள் காதல் கதைகளை, வீரதீர பிரதாபங்களை, தங்களைக் காதலன் எப்படி நடத்துகிறான் என்பதை, அவனோடு மணிக்கணக்கில் பேசியதை, வெளியில் ஊர் சுற்றச் சென்றதை, அவன் வாங்கித் தந்த பரிசுகளை இப்படி எல்லா கதைகளையும் மற்றவர்களின் முன்பு கடை பரப்புவார்கள்.

 

காலையில் வந்ததிலிருந்து கிடைக்கும் இடைவெளிகளிலெல்லாம் இந்த கதைகள் தான் அந்த வகுப்பறை முழுவதும் உலா வரும்.

 

அந்த கதைகள் உலாவும் போது, சில பெண்களின் மனமும் பாடுபடும். வேறு என்விதமாகப் பாடுபட்டு விடப்போகிறது? நமக்குக் காதல் இல்லையே என்னும் ஏக்கம்? ஏன் நம்மை யாரும் நேசிக்கவில்லை, நாம் அழகாக இல்லையா? என்னும் சுய அலசல், நம்மை யாருக்கும் பிடிக்காதா? என்னும் பரிதவிப்பு. இப்படிக் காதலிக்காத மற்ற பெண்களின் மனதில் சிறு சலனம் தொடங்கும்.

 

அந்த சலனத்தை அந்த வயதில் வெல்லத் தெரியாத பல இளம் பெண்களும், கண்மூடித்தனமான காதலில் விழுவதை என்னவென்று சொல்வது?

 

என்னவோ காதல் செய்யாதவர்கள் உலகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள் என்பது போல எண்ணும் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை யார் காட்டுவது? காலம் காலமாய் பின்பற்றி வந்த சுய ஒழுக்கம் மறந்து, ஈர்ப்புக்கும், காதலுக்கும் வேறுபாடு தெரியாமல், ஒருவனின் உண்மை குணத்தைக் கூட அலசி ஆராயாமல் காதலில் விழுபவர்களை எங்கனம் காப்பது?

 

அந்த பொறுப்பைச் செய்யக்கூடிய ஊடகங்களும், சினிமாக்களும், கதைகளுமே பல நேரங்களில் அந்த பொறுப்பைச் சரிவரச் செய்யாமல், ‘என் விருப்பம், என் கற்பனை, என் சுதந்திரம்’ என்று சமூக பொறுப்பற்றிருந்தால், வியாபார நோக்கத்துடன் செயல்பட்டால்… ஏதும் அறியா இளம் கன்றுகளை அல்லவா நாம் இழப்போம்! அடுத்த தலைமுறை சமுதாயத்தை அல்லவா சிதைப்போம்!

 

அப்படி ஒரு சலனத்தில் சிக்கி, நானும் ஒருவரால் காதலிக்கப்பட வேண்டும் என்னும் நிலையிலிருந்தவள் தான் அந்த இளம்பெண்.

 

அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவன் தான் மதன். மெல்லப் பேசத் தொடங்கி, நேசக்கரம் நீட்டி அந்த இளம்பெண்ணைக் காதலியாக அடைந்தவன், அவளை அவன் விருப்பத்திற்கு வளையும் நாணலாய் மாற்றியிருந்தான்.

 

மதனுக்காக அவள் எந்த எல்லைக்கும் செல்வாள். அதையும் அழகாய் பயன்படுத்திக் கொண்டான். ஆம், அந்த எல்லை படுக்கையறை வரை நீண்டது. இத்தனையும் அந்த பெண் செய்யத் துணிந்ததன் காரணம், ‘மறுத்தால் காதலை வேண்டாம் என்று சொல்லி விடுவேன்’ என்ற மதனின் மறைமுக மிரட்டலால் தான்.

 

இதுபோன்ற சூழலில், இதுபோன்ற பெண்களின் சிந்தனைத் திறன் எங்கே மங்குகிறது என்று தான் புரியவில்லை. ‘காதல், காதல் என்று இத்தனை காலம் உருகியவன், விட்டுச் சென்று விடுவேன் என்று சொல்கிறானே? நம்முடன் படுக்கையையும் பகிர்ந்த பிறகு அதையே சொல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம்?’ என்று கூடவா யோசிக்க மாட்டார்கள்?

 

காதல் கண்ணை மறைக்கிறதா? இது காதலும் தானா? அவர்களுக்கே வெளிச்சம்.

 

தன் ஆசைக்கு, தேவைக்கு எந்த எல்லைக்கும் உடன் வந்த பெண்ணை திருமண தருணத்தில் அழகாய் கழட்டி விட்டுவிட்டான் மதன்.

 

அவனை பொறுத்தவரை, ‘நான் அவளுக்குச் செலவு செய்தேன், அவள் அதற்கு ஈடு செய்தாள். கணக்கு நேராகி விட்டது’ என்னும் அலட்சிய எண்ணம். இவனும் இதேபோல வேறு ஒருவனுக்கு ஈடு செய்த பெண்ணை ஏற்றுக் கொள்வானா என்ன?

 

அந்த பெண்ணின் வாழ்விலும் அது தான் நடந்தது. வேறு ஒருவருடன் நிச்சயம் வரை சென்ற திருமணம், இவளது பழைய காதல் கதைகள் வெளிச்சத்திற்கு வந்ததன் பயனாக நிறுத்தப் பட்டது. சுவரில் அடித்த பந்தாய், மீண்டும் காதலனையே தேடி வந்தது அந்த பெண்.

 

“இன்னொருவனின் காதலி என்று தெரிந்ததும் திருமணம் நின்றுவிட்டது. நான் உங்களுக்கு உண்மையாகத் தானே இருந்தேன். என்னை ஏன் மறுத்தீர்கள்? என் வீட்டிலும் இப்பொழுது என்னை நம்ப மறுக்கிறார்கள், என்னை வார்த்தையால் வதைக்கிறார்கள்” என அழுது தீர்த்தாள்.

 

“பைத்தியம் மாதிரி உளறாதே, எவனையோ திருமணம் செய்யத் துணிந்து விட்டு, இப்பொழுது என்னிடம் வந்து நிற்கிறாய். யாரேனும் பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்? இனி என்னைப் பார்க்க வந்தால் மரியாதை கெட்டுவிடும்” என்று அவமானப்படுத்தினான்.

 

“நீங்களும் கைவிட்டால் வாழ்க்கையே இல்லை” என அழுதாள். அவன் செவி சாய்க்கவே இல்லை.

 

“நீ இன்னொருவனை மணக்கத் தயாராய் இருந்தவள் தானே, இப்பொழுது மட்டுமென்ன? வேறொருவன் கிடைக்காமலா போவான்” என எரிச்சலாகக் கூறினான்.

 

“நீங்கள் மறுத்ததால் தானே, இக்கட்டான சூழலில் வேறு வழியே தெரியாமல், பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு திருமணம் செய்ய ஒப்புக் கொண்டேன்” என மீண்டும் அழுதாள்.

 

“நடிக்காதே, வேண்டாம் என்று ஒதுக்கியதும் வேறொருவனைத் தேடிச் சென்றவள் தானே நீ” என்று மனசாட்சியின்றி கத்தினான்.

 

“உங்களை விட்டு விலகிப் போகா விட்டால், நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டினீர்களே, வேறு வழி தெரியாமல் தானே போனேன்” என மீண்டும் அழுதாள்.

 

மேலும் நீண்ட வாக்குவாதத்தில், கோபத்திலும், ஆத்திரத்தில் வாயிற்கு வந்ததைப் பேசி அவளை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான்.

 

அதுதான் அவளை அவன் பார்த்த கடைசி நாள். இந்த உலகமும்! ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றிருக்க, உற்றார், ஊரார் வாயில் தினம் தினம் அரைபட்டு, வீட்டினில் இருப்பவர்களால் அற்பமாகப் பார்க்கப்பட்டு வேறு வழியின்றி காதலனிடமே தஞ்சம் புக வந்தவள், அவனும் அவமானப்படுத்தி நிராகரித்து விடவே, வாழ வழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்டாள்.

 

செய்தி தெரிந்து மதனின் மனம் வருத்தம் அடைந்தது தான். ஆனால், இன்று வரையிலும் அவனுக்குக் குற்றவுணர்வு வந்ததில்லை.

 

‘என் காதலை மறுத்த போதா இறந்தாள்? எவனோ நிச்சயம் வரை சென்று ஏமாற்றி விட்டதால் தானே இறந்தாள்? அதில் என் பிழை என்ன?’ என்பதே அவனது ஏமாற்று நியாயம்.

 

அன்று புரியாத தவறு இன்று பூதாகரமாக மிரட்டியது. என்னால் ஒரு பெண் வாழ வழி தெரியாமல் இருந்திருக்கிறாள். காதல் என்ற பெயரில் அவளை ஏமாற்றி இருக்கிறேன். அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறேன். அவள் உயிர் துறக்கக் காரணமாக இருந்திருக்கிறேன்.

 

இதையெல்லாம் விட, அதை தவறு என்று கூட இன்றுவரை நான் உணரவில்லை. மனசாட்சியே இல்லாமல் நான் செய்த காரணத்தால் தான் இன்று இவர்கள் என்னிடம் மனசாட்சியின்றி நடந்து கொள்கின்றனரோ?

 

எனக்கு ஒரு தங்கை இருந்தால், அவள் மரணம் என்னைப் பாதிக்காமல் போய்விடுமா? அவள் இறப்புக்குக் காரணமானவனைக் கூறு போட்டிருக்க மாட்டேனா?

 

இவர்களுக்கும் அந்த ஆத்திரம் தானோ? என்ன நான் சுயநலப் பேயாய் இருப்பதால், என் குடும்பத்தில் நடந்திருந்தால் மட்டுமே பொங்கி எழும் எண்ணம் வரும். ஆனால், இவர்களின் நல்லெண்ணம் தான்… ஏதோ ஒரு பெண், எங்கோ நடந்த தவறு… அனைத்திற்காகவும் கோபம் கொள்ள முடிகிறதோ?

 

ஒருவேளை அதுதான் காரணம் என்றால், இவர்களின் கோபத்திலும், வெறுப்பிலும் தவறே இல்லை தான்.

 

நான் அறிந்து செய்த தவறு அது ஒன்று தான். ஒருவேளை இங்குச் சிறைப் பட்டிருக்கும் மற்றவர்களிடமும் பேசினால், அவர்களது தவறும் புரியக் கூடும். அவர்களின் பிழையும் பெண்களிடமே வந்தால், நாங்கள் இங்கு எதற்காக அடைபட்டிருக்கிறோம் என்பதும் புரியக்கூடும்.

 

எண்ணங்களின் பயணம் மதனுக்கு பெருமூச்சை வரவழைத்தது. இத்தனை நாட்கள் இருந்த தைரியம் குறைந்தது. இந்த மருத்துவ அறையிலிருந்து செல்லும் நேரத்திற்காகக் காத்திருந்தான், வெளியில் சென்று மற்ற தோழர்களிடம் பேசி, அவர்களின் குற்றங்களைக் கண்டறிந்து… தான் கண்டுபிடித்த விஷயம் சரியா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!